சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
தொடர்ச்சி..
மனிதகுல முன்னேற்றத்துக்கான நமது திட்டமும் அதன் நிறைவேற்றமும்:
தற்காலிகமான சமூகச் சீர்திருத்தத்தைப் பிரசாரம் பண்ணுகிறவன் அல்ல நான். அல்லது சிறு சிறு குறைகளை நீக்கவும் நான் முயன்று கொண்டிருக்கவில்லை. “முன்னே செல், மனித குல முன்னேற்றத்துக்கான திட்டத்தை நமது மூதாதையர்கள் மிக உத்தமமான முறையிலே வகுத்து வைத்துள்ளார்கள். நடைமுறையில் அதனை நிறைவேற்றுவதற்காக வேலைசெய்து அதனைப் பூரணமாக்கு” என்று மட்டும் நான் கூறுகிறேன். “ மனிதன் ஏகப் பொருளாவான்; அவனோடு தெய்வீக இயல்பு கூடப் பிறந்ததாகும் என்ற வேதாந்தக் கருத்துகளை நீங்கள் நன்றாக அனுபவித்து உணர்ந்து வேலை செய்யுங்கள்” என்று மட்டும் கூறுகிறேன்.
நமது பண்டைய சட்ட நிர்மாணகர்கள், ஜாதிகளை உடைப்பவர்களாகவும் இருந்தனர். ஆயினும் நமது தற்காலச் சீர்திருத்தக்காரர்களைப் போல இருக்கவில்லை. ஜாதியை உடைப்பது என்றால் ஒரு நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றாக உட்கார்ந்து மாட்டிறைச்சியும் மதுபானமும் பருக வேண்டும்; எல்லா முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் எந்த இடத்திலாவது தான் தேர்ந்தெடுக்கும் யாரையாவது திருமணம் செய்து கொண்டு நாடு முழுவதையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. ஒரு நாட்டின் நல்வளம், அந்த நாட்டு விதவைகளுக்கு எத்தனை கணவன்மார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படவேண்டும் என்றும் அவர்கள் நம்பவில்லை. மேற்கூறிய செயல் முறைகளால் வளமுற்ற நாட்டை இனிமேல்தான் நான் காண வேண்டும்.
ஹிந்து இனத்தின் லட்சிய நிலை பிராம்மணத்துவம் ஆகும்:
நமது முன்னோர்களின் லட்சிய மனிதன் பிராம்மணன். பிராம்மணனின் இந்த லட்சியம் நமது எல்லா நூல்களிலும் எடுப்பாகக் காணப்படுகிறது. ஐரோப்பாவில் ஒரு சாராரின் மதகுருக்களாகக் ‘கார்டினல்’கள் விளங்குகிறார்கள். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, ஆயிரக்கணக்கான பவுன்களைச் செலவிட்டுத் தமது மூதாதையர்களின் சிறப்புத் தன்மை நிலையை நிரூபிக்க முயலுகிறார்கள். யாரோ ஒரு பயங்கரக் கொடுங்கோலன், அவன் மலை மீது வாழ்ந்தான். அந்தப் பக்கமாகப் போகும் ஜனங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்து, சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்கள் மீது தாவிப் பாய்ந்து கொள்ளையிடுவான். தாம் அப்படிப்பட்ட பயங்கரக் கொடுங்கோலனின் வம்சம் என்று நிரூபணமாகும் வரை, இப்படிப்பட்டவர்களே தமது முன்னோர் என்று ஆராய்ந்து பார்க்காத வரை, அந்த மதத் தலைவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். ஒரு மனிதனுக்குப் பெருந்தன்மை வழங்குகிற முன்னோர்களின் தொழில் இது. மகாப் பிரபுக்களான அந்த மதத் தலைவர்கள் இப்படிப்பட்டவர்கள் தமது முன்னோர் என்று ஆராய்ந்து பார்க்காத வரை திருப்தியடைய மாட்டார்கள்.
மறுபக்கம் பாரதத்தில் மிக உயர்ந்த ராஜகுமாரன் புராதனமான ரிஷியைத் தனது வம்ச முதல்வராக ஆய்ந்து காண விழைவான். அந்த முனிவர் ஒரு சிறு கோவணத் துணியுடுத்து, காட்டில் வசித்து, கிழங்கு வகைகளைப் புசித்து, வேதங்களை ஆராய்ந்து வருவார். பாரதத்தின் ராஜகுமாரன் தனது மூதாதையரைத் தேடி அங்கேதான் போகிறான். உனது மூதாதையர் ரிஷி எனக் கண்டுபிடிக்க முடிந்தால் நீ உயர்ந்த வகுப்பினன்; இல்லையேல் இல்லை.
ஆதலால் உயர்பிறப்பைப் பற்றிய தமது லட்சியம் மற்றவர்களுடையதைவிட முற்றிலும் மாறுபட்டதாகும். ஆன்மிகப் பண்பாடும், பற்றின்மையும் வாய்ந்த பிராம்மணனே நமது லட்சியம். பிராம்மண லட்சியம் என நான் கூறும்போது எனது கருத்து என்ன? லௌகீக குணங்களின் நிறைவையே லட்சியப் பிராம்மணத்துவமாக நான் கருதுகிறேன். ஹிந்து இனத்தின் லட்சியம் இதுதான்.
“பிராம்மணன் சட்டத்துக்கு உட்படுபவனல்லன்; அவனுக்குச் சட்டமில்லை. அவன் மன்னனால் ஆளப்படுவதில்லை. அவனது உடலை வருத்தக்கூடாது” என்று பிரகடனம் செய்யப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை. சுயநல லாப நோக்கமுள்ளவர்களும், பேதையான முட்டாள்களும் அதற்குத் தருகிற விளக்கத்தின் மூலம் அதனைப் புரிந்து கொள்ளக்கூடாது. உண்மையான, மூலமான வேதாந்த நோக்கும்படித் தரப்படும் விளக்கத்தினாலேயே அதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஆட்சி நிர்வாகம் தேவையற்று உதிர்ந்து போகும் நிலை:
எல்லாவிதமான சுயநலன்களையும் கொன்றவன். அன்பின் வலிமையையும் ஞானத்தையும் எய்துவதற்காகவும் அவற்றைப் பிரசாரம் செய்வதற்காகவும் வாழ்ந்து வேலை செய்கிறவன் பிராம்மணன் ஆவான். ஒரு நாடு அப்படிப்பட்ட பிராம்மணர்களால் நிறைந்து உணர்ச்சியும், ஒழுக்க நேர்மையும், நற்பண்பும் வாய்ந்த ஆண், பெண், குழந்தைகளால் நிறைந்து விளங்குமாயின், அந்த நாடு சட்டத்துக்கு அப்பாற்பட்டது. சட்டங்களுக்கு அந்நாட்டில் அவசியமில்லை எனச் சொல்லுவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அம்மக்களை நிர்வகிக்கப் போலீஸோ ராணுவமோ எதற்காக? அவர்களை யார், ஏன், ஆள வேண்டும்? ஓர் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அவர்கள் ஏன் வாழ வேண்டும்? அவர்கள் நல்லவர்கள். பெருந்தன்மை படைத்தவர்கள்; அவர்கள் இறைவனின் மக்கள். அவர்களே நமது லட்சியப் பிராம்மணர்கள். சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதி இருந்ததாகவும், அந்த ஜாதியே பிராம்மண ஜாதி என்றும் நாம் படித்திருக்கிறோம்.
சத்திய யுகத்தில் ஜாதியே இல்லை – எல்லோரும் பிராம்மணர்கள்:
“ந விசேஷோ அஸ்திவர்ணானாம் ஸர்வம் பிரம்மமிதம் ஜகத்
பிரம்மணா பூர்வஸ்ருஷ்டம் ஹி கர்மபிர்வர்ணதாம் கதம்”
(– மஹாபாரதம்- சாந்தி பர்வம்)
’உலகம் முழுவதும் ஆரம்பத்தில் பிராம்மணர்களால் நிறைந்திருந்தது. அவர்களது தன்மை குலையவே, பற்பல ஜாதிகளாகப் பிரிந்தார்கள். காலச்சக்கரம் சுற்றித் திரும்பினால் அவர்கள் அனைவரும் மீண்டும் பிராம்மண நிலைக்கே திரும்பி விடுவார்கள்’ என்றும் நாம் மஹாபாரதத்தில் படித்திருக்கிறோம். இந்தக் காலச் சக்கரம் இப்பொழுது திரும்பி வருகிறது.
இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ஆதலால் ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் ஏற்கனவே மேல் நிலையிலிருப்பவர்களைத் தாழ்த்துவது அல்ல; அன்றி அளவின்றி உண்டு, குடிப்பதன் மூலம் மூளை தடுமாறி ஓடுவதல்ல. வரம்பு மீறிப் போகங்களை அனுபவிப்பதற்காக முன்னோர் வகுத்த எல்லையைத் தாண்டிச் செல்லுவதுமல்ல. நமது வேதாந்த சமயத்தின் கட்டளைகளை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றுவதன் மூலம்தான் அது ஏற்படும். நாம் ஆன்மிக சக்தி எய்துவதன் மூலம், லட்சியப் பிராம்மணனாக நாம் ஆவதன் மூலம், அந்தப் பிரச்சினை தீர்ந்து போகும்.
லட்சியப் பிராம்மணன் என ஒவ்வொருவரும் மீண்டும் ஆக வேண்டும்:
நீங்கள் ஆரியராயினும் ஆரியரல்லாதவராயினும், ரிஷிகளாயினும், பிராம்மணராயினும், அல்லது மிகத் தாழ்ந்த ஜாதியினராயினும் சரி, உங்களது மூதாதையர்களால், உங்கள் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட கடமை ஒன்று உள்ளது. உங்களனைவருக்கும் இடப்பட்ட கட்டளை பொதுவானது. நீங்கள் இந்த லட்சியத்தை நோக்கி, நிற்காமல் முன்னேற வேண்டும். மிக உய்ர்ந்த மனிதன் முதல், தாழ்ந்த பறையர்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்து, லட்சியப் பிராம்மணர் ஆகுதல் வேண்டும். இந்த வேதாந்தக் கருத்து இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுக்கும் பொருத்தமானதாகும். நமது ஜாதிப் பாகுபாட்டின் லட்சியம் இத்தகையதாகும். மனித குலம் முழுவதையும் மெல்ல மெதுவாக உயர்த்தி, எதையும் எதிர்க்காத, அமைதியான, உறுதியான, வழிபாட்டுத் தன்மையுள்ள தூய தியான வடிவான ஆன்மிக மனிதனாக ஆகும் லட்சிய நிலைக்கு ஏற்றி வைக்க வேண்டும். அந்த லட்சியத்திலேயே தெய்வமுள்ளது.
ஐரோப்பியச் சீர்திருத்தவாதிகளின் கோஷ்டி:
இக்காலத்தில் நம்மிடையே சில சீர்திருத்தக்காரர்கள் இருக்கிறார்கள். நமது சமயத்தை அவர்கள் சீர்திருத்த விரும்புகிறார்கள். அதாவது ஹிந்து தேசத்தை மறுமலர்ச்சியடையச் செய்ய, நமது சமயத்தைத் தலைகீழாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடையே சிந்திக்கக் கூடியவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் பெரும்பாலானவர் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிரார்கள். என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மிகவும் முட்டாள்தனமாக நடக்கிறார்கள். இந்த ரகச் சீர்திருத்தக்காரர்கள் நமது சமயத்தில் அந்நிய நாட்டுக் கருத்துக்களை நுழைக்க வெகு உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் ‘உருவ வழிபாடு’ என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். ஹிந்து சமயம் நேர்மையானதல்ல. ஏனெனில் அது உருவ வழிபாடு நடத்துகிறது என்று துணிந்து பேசுகிரார்கள். “உருவ வழிபாடு” என்று அழைக்கப்படுவது எத்தகையது? அது நல்லதா, கெட்டதா என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒருபோதும் முனைவதில்லை. பிறரிடமிருந்து கருத்துகளைக் கடன்வாங்கி, ”ஹிந்து சமயம் நேர்மையானதல்ல” என்று கூச்சலிட்டுத் தாக்க அவர்களுக்குப் போதுமான துணிச்சல் இருக்கிறது.
உருவ வழிபாடு தவறு என்பது புளித்துப் போன பேச்சாகி விட்டது. ஒவ்வொரு மனிதனும் சற்றும் நிதானித்துப் பார்க்காமல் அதனை உடனே ஒப்புக் கொண்டே வருகிறான். ஒரு சமயம் நானும் அவ்வாறு நினைத்திருந்தேன். அந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக, எல்லாவற்றையும் விக்கிரகங்கள் மூலம் அனுபவித்து உணர்ந்த ஒருவருடைய திருவடியின் கீழ் அமர்ந்து உபதேசத்தைப் பெற வேண்டியவனானேன். நான் குறிப்பிடுவது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றியே.
உருவ வழிபாட்டால் அத்தகைய ராமகிருஷ்ண பரமஹம்சர்கள் உண்டாக்கப்பட்டார்கள் என்றால் உங்களுக்கு எது வேண்டும்? சீர்திருத்தவாதியின் கொள்கைகளா அல்லது ஏராளமான விக்கிரகங்களா? எனக்குப் பதிலளிக்க வேண்டும். உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எந்த வழிமுறை மூலமாவது அத்தகைய சீரிய இயல்பினரை உண்டாக்குங்கள்.
இருந்தாலும் உருவ வழிபாடு கண்டிக்கப்படுகிறது! ஏன்? எவருக்கும் தெரியாது. ஏனென்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் யூத வம்சத்தில் தோன்றிய ஒருவர் அதனைக் கண்டிக்க நேர்ந்தது என்பதற்காகவா? அதாவது, அந்த மனிதர் தமது சொந்த உருவத்தைத் தவிர மற்றெல்லா உருவங்களையும் கண்டித்தார். ஏதாவது ஓர் அழகான வடிவத்தில் குறிப்பான விக்கிரகத்தில் கடவுள் இருப்பதாகப் பாவித்தால் அது மஹா மோசம்; பாபம் என அந்த யூதர் சொன்னார். ஆனால் அவர் உருவம் ஒரு இருதயவடிவத்தில் குறிக்கப்பட்டு, இரு பக்கங்களிலும் இரு தேவ தூதர்கள் உட்கார்ந்து, அதன் மீது மேகம் ஊசலாடிக் கொண்டிருந்தால், அது மேலானதாக, புனிதமானதாக ஆகிறது. கடவுள் புறாவின் உருவில் வந்தால் அது புனிதமானதாக ஆகிறது; ஆனால் அவர் பசுவின் உருவத்தில் வந்தால், அது காட்டுமிராண்டியின் மூடநம்பிக்கையாகிறது. அதைக் கண்டிக்க வேண்டும்! – உலக நடப்பு இப்படித்தான் இருக்கிறது.
முற்காலத்தில் வாழ்ந்த உண்மைச் சீர்திருத்தக்காரர்களின் தெய்வீகக் குழாம்:
பாரதத்தில் சீர்திருத்தக்காரர்களுக்குப் பற்றாக்குறை எப்பொழுதாவது இருந்ததா? நீங்கள் பாரதத்தின் வரலாற்றைப் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒருவர் பின் ஒருவராகத் தோன்றிய- முதல்தரமான நட்சத்திரங்களின் குழாமெனத் தோன்றிய இந்த ஆசாரியர்கள் யார்?
தாழ்ந்த வகுப்பாரிடம் ராமானுஜர் இரக்கம் காட்டவில்லையா? பறையரைக் கூடத் தமது ஜாதியில் சேர்த்துக் கொள்ள அவர் தமது வாழ்நாள் முழுவதும் முயன்று வரவில்லையா? தமது சொந்த அரவணைப்பில் முஸ்லீம்களையும் கூடச் சேர்த்துக் கொள்ள அவர் முயலவில்லையா? ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் கூட்டிச் சேர்த்து. புதிய ஒரு நிலைமையைச் சிருஷ்டிக்க நானக் முயலவில்லையா? அவர்களைனைவரும் முயன்றார்கள். அவர்களது வேலை இன்றளவும் நடந்து வருகிறது. வித்தியாசம் இவ்வளவுதான். இன்றைய சீர்திருத்தக்காரர்களைப் போல் அவர்கள் வீண் ஆடம்பர ஆரவாரம் செய்து பெருமை பேசவில்லை. இக்காலச் சீர்திருத்தக்காரர்களைப் போல அவர்கள் பிறரைச் சபிக்கவில்லை. அவர்களது உதடுகளினின்றும் சதா ஆசி மொழிகளே ஒலித்தன.
வரம்பில்லாத இரக்கமும் பொறுமையும் வாய்ந்த சீர்திருத்தக்காரர்கள்:
ஓர் உண்மையை நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். உலகத்திலுள்ள மகத்தான ஆசாரியர்கள் அனைவரும், “நாங்கள் வந்தது அழிப்பதற்காக அல்ல, குறையை நிறைவாக்கவே வந்தோம்” என்று பிரகடனம் செய்தார்கள். பல சமயங்களில் இதனை எவரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய பொறுமை பல சந்தர்ப்பங்களில் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு மிகவும் பிடித்தமான கருத்துகளுடன் அவர்கள் சிறிதும் தகுதி இல்லாத முறையில் சமரசமாகப் போக விரும்புகிறார்கள் என்று கருதப்பட்டது. இன்றுங்கூட பெரிய மகான்களும் அவதார புருஷர்களும் கோழைத்தனமாக நடந்து கொள்வதாகச் சிலர் குறைகூறுவதை நீங்கள் கேட்கலாம். எது சரியென்று படுகிறதோ அதை அவர்கள் வெளிப்படையாக எடுத்துச் சொல்லத் துணியவில்லை என்று குறைகூறப்படுகிறதைக் கேட்கிறோம்.
இந்த மகான்களுடைய இதயங்களிலே கனியும் அன்பின் அளப்பரிய சக்தி இந்த வெறியர்களுக்குப் புரியாது. இந்த மகான்கள்தான் உண்மையில் மக்களுடைய தந்தை போன்றவர்கள். இவர்கள்தான் பிரத்தியட்ச தெய்வங்கள். இவர்களுடைய உள்ளமெல்லாம் எல்லையற்ற பரிவினாலும் பொறுமையினாலும் நிறைந்தது. இவர்கள் என்றும் சகித்துக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் சித்தமாக இருப்பவர்கள். மனித சமுதாயம் எப்படி வளர்ச்சி பெற வேண்டும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். பொறுமையோடும் நிதானத்தோடும் ஆனால் நிச்சயமாகவும் இவர்கள் தங்கள் பரிகாரங்களைப் பிரயோகிப்பார்கள். மக்களைப் பழித்தும் பயமுறுத்தியும் இவர்கள் எதையும் திணிக்க விரும்புவதில்லை. படிப்படியாக இவர்கள் மக்களை அன்போடும் அவர் மனம் நோகாமலும் உயர் நிலைக்கு அழைத்துச் செல்கிறவர்கள்.
உபநிடதங்களை இயற்றியவர்களும் அத்தகையவர்களே. அவர்கள், தெய்வத்தைப் பற்றிய பழையகாலக் கருத்துகள் அந்தக் காலத்தில் இருந்த முற்போக்கான நீதிநெறிக் கருத்துக்களுக்கு ஒத்ததாக இல்லையென்பதை முற்றிலும் உணர்ந்திருந்தார்கள். அந்தக் காலத்தில் நாத்திகர்கள் நடத்தி வந்த பிரசாரத்தில் பெருமளவு உண்மையிருந்தது என்று மட்டுமல்ல, தங்கக்கட்டி போன்ற மகத்தான உண்மை உள்ளது என்றும் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் மணிகளைக் கோத்து வைத்திருக்கிற நூலை அறுக்க நினைக்கிறவர்களும் ஆகாயத்திலே புதிய சமூகத்தைக் கட்டிப்படைக்க விரும்புகிறவர்களும் படுதோல்வியடைவார்கள் என்றும் அறிந்திருந்தார்கள்.
நாம் ஒருபோதும் புதிதாகப் படைப்பதில்லை; இருப்பவற்றை இடம்மாற்றி வைக்கிறோம். புதிதாக நமக்கு எதுவும் கிடைக்காது. பொருள்களின் அமைப்பு நிலையைத்தான் மாற்ற முடியும். விதை பொறுமையாக, மெதுவாக மரமாக வளர்கிறது. உண்மைக்காக நமது சக்திகளைச் செலவிட வேண்டும். புதிய உண்மைகளை உற்பத்தி செய்ய முயலக்கூடாது.
நம் முனிவர்கள், கடவுளைப் பற்றிய பழைய காலக் கருத்துக்கள், நவீன காலத்துக்குப் பொருந்தாதவை என்று கண்டபோது, அவற்றை வெறுமனே கண்டிக்காமல், அவற்றுள் உறைந்திருந்த உண்மைப் பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க முற்பட்டனர். அதன் முடிவுதான் வேதாந்தத் தத்துவமாகும். பழைய தெய்வங்களிலிருந்து உலகை ஆளுகின்றவனாக ஒரே ஒரு கடவுள்தான் உண்டு என்ற நம்பிக்கையிலிருந்து மேன்மேலும் உயர்ந்த கருத்துக்களைக் குணங்குறியற்ற பரம்பொருள் தத்துவத்தில் கண்டார்கள். பிரபஞ்சம் முழுவதிலும் ஒருமையே பரவியுள்ளதைக் கண்டார்கள்.
(தொடரும்..)
Excellent Article! Please continue your good work! Tears are rolling down from my eyes!
I take refugee at the Lotus Feet of Swamy Sri Vivekananda!
இதனை வெளியிட்ட ஆசிரியர் குழுவா ‘சாதி கலப்பு’ உரைகளையும் வெளியிட்டது? நம்ப முடியவில்லை. இந்த பக்கத்தில் 2 மறுமொழிகள் ஆனால் சாதி கலப்பிற்கு 75 மறுமொழிகள்.
ஆசிரியர் குழு யோசனை செய்ய வேண்டுகிறேன். சாதி வெறியர்களுக்கு தீனி போடும் பக்கங்களை தவிர்த்து பக்தியினால் சாதிகளை இணைக்கும் இது போன்ற பக்கங்களை தொடர்ந்து வெளியிடுங்கள்.
உங்கள் குழுவில் உள்ள சாதி வெறி கொண்ட ஈ வே ரா தாசர்களை புறக்கணித்து கழக ஆதிக்கம் இல்லாது தூய்மையான இந்துக்களை ஊக்குவியுங்கள்.
“பிரபஞ்சம் முழுவதிலும் ஒருமையே பரவியுள்ளதைக் கண்டார்கள்.”
“நாம் ஒருபோதும் புதிதாகப் படைப்பதில்லை; இருப்பவற்றை இடம்மாற்றி வைக்கிறோம்.”
ஆங்கிலத்தில் ” old wine in new bottle ” என்பர்.
மிகச்சரி. உங்கள் பணி மேலும் தொடரட்டும்.
//இதனை வெளியிட்ட ஆசிரியர் குழுவா ‘சாதி கலப்பு’ உரைகளையும் வெளியிட்டது? நம்ப முடியவில்லை. //
இந்தக் கட்டுரை விவேகானந்தர் பேசியது. இதைப் பேசிய விவேகானந்தரே கலப்புத் திருமணம் செய்யுங்கள் என்றும் பேசி இருக்கிறார்.
நம்ப முடியவில்லை என்பது வேறு. நம்ப விரும்பவில்லை என்பது வேறு.
.
எல்லோரையும் பிராமணத் தன்மை கொண்டோராக உயர்த்துவதற்கு, இன்றைய ஜாதிகளிடையே கலப்பு மணம் நிகழ்த்துவது எப்படித் தடையாகும்?
திரு நந்தா அவர்களின் மறுமொழி (அவரின்) மறுபரிசீலனைக்கு உரியது.
ஸ்வாமி விவேகனந்தர் எல்லோரையும் பிராமணராக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது போலவே ஹிந்துக்களிடையே கலப்பு மணம் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இவை ஒன்று மற்றதை அடையும் வழியேயன்றி, இவற்றில் சிந்தனை ஆழம் இருக்கிறதேயன்றி, இக்கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்லன.
இன்று இந்திய அரசும் தமிழக அரசும் யாரையெல்லாம் ‘பிராமணர்கள்’ என்று சொல்லி சலுகைப் பிரிவுகளிலிருந்து தள்ளி வைத்திருக்கிறதோ அவர்கள்தாம் பிராமணர்கள் என்கிற கருத்தில் சுவாமிஜி இவற்றையெல்லாம் எழுதவில்லை; பேசவில்லை.
தான் யாரை பிராமணராகக் கருதுகிறார் என்பதை சுவாமிஜி வரையறுத்திருக்கும் விதத்தை மேற்கண்டுள்ள கட்டுரை தெளிவாக்கியிருக்கிறது. அத்தகைய பிராமணர் உருவாவதை, உருவாக்கப்படுவதை, எந்தக் கலப்புத் திருமணமும் தடுக்காது.
களிமிகு கணபதி அவர்களும் நந்தாவுக்கு அளித்துள்ள தனது பதில் மூலம், சுவாமிஜி ஏதோ முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.உண்மை அதுவல்ல.
// களிமிகு கணபதி on April 27, 2012 at 7:12 am
இதைப் பேசிய விவேகானந்தரே கலப்புத் திருமணம் செய்யுங்கள் என்றும் பேசி இருக்கிறார். //
இல்லை, அவர் பேசவில்லை.
//பெருந்துறையான் on April 28, 2012 at 1:58 am
எல்லோரையும் பிராமணத் தன்மை கொண்டோராக உயர்த்துவதற்கு, இன்றைய ஜாதிகளிடையே கலப்பு மணம் நிகழ்த்துவது எப்படித் தடையாகும்?… இன்று இந்திய அரசும் தமிழக அரசும் யாரையெல்லாம் ‘பிராமணர்கள்’ என்று சொல்லி சலுகைப் பிரிவுகளிலிருந்து தள்ளி வைத்திருக்கிறதோ அவர்கள்தாம் பிராமணர்கள் என்கிற கருத்தில் சுவாமிஜி இவற்றையெல்லாம் எழுதவில்லை; பேசவில்லை …//
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் எல்லோரையும் உயர்த்துவதற்கு கலப்பு மனம் தடை என்று நான் சொல்லவில்லையே, கலப்பு மனம் உபயோகப்படாது என்று தான் என் கருத்து.