அரசியல் களம் சற்றே சூடு குறையும்போதெல்லாம் இடைத்தேர்தல் வந்து உற்சாகப்படுத்தி விடுகிறது. இப்போது புதுக்கோட்டை இடைத்தேர்தல் காலம். கோடைக்காலம் முடிந்தும் பிரசார சூடு பறக்கிறது புதுக்கோட்டையில். தமிழக அமைச்சரவையே அங்கு இடம் பெயர்ந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் பறக்கின்றன. பழைய சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மக்களின் நெடுநாள் குறைகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் வாழ்க!
புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முத்துக்குமரன் கடந்த மே 1 ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, அத்தொகுதிக்கு ஜூன் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோது அக்கட்சிக்கு அளிக்கப்பட தொகுதி புதுக்கோட்டை. அங்கு முத்துக்குமரன் வென்றார். எனவே, மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதிமுகவே அங்கு போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்; தனது கட்சி வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அவர் அறிவித்தார்.
இதை எதிர்பார்க்காத கம்யூனிஸ்ட் கட்சி, பிற்பாடு பலத்த விவாதத்துக்குப் பிறகு, இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அறிவித்தது. ‘சங்கடங்களைத் தவிர்க்கவே தேர்தல் களத்தில் இருந்து விலகியதாக’ அக்கட்சியின் மாநிலச் செயலாளர் த.பாண்டியன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சென்ற சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் பலத்த அடி வாங்கியிருந்த திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. திமுகவும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது. எனினும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை’ என்று குறிப்பிடும் ‘49 – ஓ’ பிரிவைப் பயன்படுத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று திமுக அறிவித்தது.
இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினரின் அத்துமீறலை எதிர்பார்த்தே இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக திமுக விளக்கம் அளித்தது. அப்படியானால், திமுக ஆளும்கட்சியாக இருந்தபோது இடைத்தேர்தல்களில் அத்துமீறலில் ஈடுபட்டதை அதன் தலைவர் கருணாநிதி ஒப்புக் கொள்கிறாரா? திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் தானே அகில இந்தியாவுக்கும் ஒரு புதிய தேர்தல் பிரசார முறையை தென் மண்டல செயலாளர் மு.க.அழகிரி அறிமுகப்படுத்தினார்? வீட்டுக்கு வீடு பணப் பட்டுவாடாவைத் துவக்கி வைத்த திமுக, இன்று புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிக்கக் கூறும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது. ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல் என்று சொன்னாளாம்!
இவ்விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. தோல்வி உறுதி என்பது தெரிந்தாலும், போர்க்களத்தை விட்டு அவர் ஓடிவிடவில்லை. தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் களம் இறக்கப்பட்டிருக்கிறார். புதுக்கோட்டை தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களை நம்பி இவர் களம் காண்கிறார்.
தேர்தல் களத்தில் 20 வேட்பாளர்கள் இருந்தாலும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களே பிரதானமானவர்கள். முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. இக்கட்சிகள் தங்கள் வாக்குவங்கியை அறியும் உத்தேசம் கூட இல்லாமல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தேமுதிக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. திமுகவும் கூட தேமுதிக வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப, விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், தங்களை இடைத்தேர்தலில் ஆதரிக்குமாறு திமுக தலைவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார். சட்டசபையில் ஒன்றிணைந்து செயல்பட இரு கட்சிகளுக்கும் இடையிலான பாலமாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
எனினும், இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதியாகிவிட்டதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர்களும் அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகளும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவதும், ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் கிடைக்கும் நன்மைகளை மக்கள் உத்தேசிப்பதும், கார்த்திக் தொண்டைமானுக்கு அனுகூலங்கள்.
ஓராண்டுகால அதிமுக ஆட்சியில் சில துறைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக தேமுதிக பிரசாரம் செய்துவருகிறது. எனினும் இந்த அதிருப்தி அதிமுகவை வெல்லப் போதுமானதல்ல. இந்தத் தேர்தலின் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக பிளவுபடக்கூடும்.
கேப்டனின் ராஜதந்திரம்
புதுக்கோட்டை இடைதேர்தலில் வெல்வது துர்லபம் என்பது விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்காது. ஆனாலும் அவர் தேர்தலில் போராடக் காரணம், தொடர்ந்து களத்தில் இருப்பவர்களையே மக்கள் மன்றம் நினைவில் வைத்திருக்கும் என்பதை அவர் அறிந்திருப்பதால் தான். இவ்விஷயத்தில் மூத்த தலைவர் கருணாநிதி சறுக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
புதுக்கோட்டை தொகுதி தங்கள் கையை விட்டுப் போன கோபத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தனைகளை ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். தவிர ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள அனைவரது வாக்குகளையும் கவர முடியும் என்பதும் அவரது இலக்காக உள்ளது. அவரது பிரசாரமும் அதை ஒட்டியே உள்ளது. போகும் இடமெல்லாம், மின்வெட்டு பிரச்னை குறித்து அவர் பேசுகிறார். அதற்கு மக்களிடம் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது.
பாஜக, திமுக, கட்சியில் உள்ள நடுநிலை வாக்காளர்கள் தேமுதிக வாக்காளரை ஆதரிப்பார்கள் என்பதும் விஜயகாந்தின் கணக்கு. அதற்காகவே, ‘தற்போதைய மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும்’ என்று அவர் பேசுவதாகத் தெரிகிறது. அவரது ராஜ தந்திரம் வெல்லுமா என்பதை தேர்தல் நாளில் பதிவாகும் வாக்கு சதவிகிதத்தைக் கொண்டே மதிப்பிட முடியும்.
இத்தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்தாலும், அதிமுகவுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை உறுதியுடன் கைப்பற்றிவிடும் என்று தோன்றுகிறது. இத்தனை நாட்களாக இந்த அடையாளம் திமுக வசம் இருந்தது. தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கியதன் மூலமாக விஜயகாந்த்தின் பாதையை ஒழுங்குபடுத்தி உதவி இருக்கிறது திமுக.
பொதுவாகவே தமிழக வாக்காளர்கள் மிகவும் விவரமானவர்களாக உள்ளனர். இடைத்தேர்தலில் ஆளும்கட்சியைத் தேர்வு செய்வதே நல்லது என்பது பரவலான கருத்தாக உள்ளது. இதற்கு பல காரணிகளும் உள்ளன. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிக்கு செய்யும் வளர்ச்சிப்பணிகளை விட ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் செய்யும் பணிகள் அதிகம் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர். தவிர, தேர்தலுக்கு முன்னதாகவே, அரசு இயந்திரம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் நலப்பணிகளை விரைந்து முடித்து மக்களிடம் நற்பெயர் பெற்றுத் தந்துவிடுகிறது. இவை அல்லாமல், திமுக புகார் கூறுவதுபோல பணப்பட்டுவாடாவும் சத்தமின்றி நடக்கிறது.
இத்தனைக்குப் பிறகு இடைத்தேர்தலை பல கோடி செலவில் நடத்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் எம்எல்ஏ இறந்துவிட்டால், அதே கட்சியின் உறுப்பினரை கட்சியே தேர்வு செய்து காலியிடத்துக்கு நியமித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற கருத்து சமீபகாலமாக பலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், நமது அரசியல் சாசனமும் தேர்தல் முறைகளும் இந்த யோசனையை நிராகரிக்கின்றன.
இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சி மீதான அதிருப்தியை அறிய உதவும் அளவுகோல்கள். எனவே, அவை அத்தியாவசியமானவை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே தான், எப்பாடுபட்டும் இடைத்தேர்தலில் வெல்வதை ஆளும் கட்சிகள் கௌரவப் பிரச்னையாகக் கருதுகின்றன. எப்படியோ, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள மக்களுக்கு சில பிரச்னைகளேனும் தீர வாய்ப்பு ஏற்படுகிறதே என்று திருப்தி அடைய வேண்டியது தான்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடக்கும் மூன்றாவது இடைத்தேர்தல் இது. முதலில் திருச்சியிலும், அடுத்து சங்கரன்கோவிலிலும் நடந்த தேர்தல்கள் அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை பறை சாற்றியுள்ளன.
இப்போது புதுக்கோட்டையில் நடக்கும் இடைத்தேர்தலிலும் மாறுபட்ட தீர்ப்பு கிடைக்கப் போவதில்லை. ஆனால், சென்ற தேர்தல்களை விட இம்முறை வாக்கு வித்தியாசம் குறையக் கூடும்.
புதுக்கோட்டை சட்டசபை தொகுதியில் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட காலஞ்சென்ற முத்துக்குமரன் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார். இந்தமுறை திமுக புறமுதுகிட்டு ஓடிவிட்டதால், திமுக பெற்ற வாக்குகளில் ஒரு பகுதி விஜயகாந்தின் வேட்பாளருக்கு போய்ச்சேரும். காலஞ்சென்ற காங்கிரசு கம்பெனிக்கு அங்கு ஒரு ஓட்டும் இல்லை. பிணத்துக்கு யார் ஒட்டு போடுவார்கள். கம்யூனிஸ்ட் எம் எல் ஏ இறந்துவிட்டதால் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் கூட , ஆளுங்கட்சிக்கே வாக்கு அளிப்பார்கள். ஏனெனில், இன்னும் நாலு வருடம் பதவியில் இருக்கப்போகும் ஒரு ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டுபோட்டு, விஜயகாந்த் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வதால் , தொகுதி மக்களுக்கு ஒரு புண்ணியமும் இல்லை. எனவே, விஜயகாந்த் கட்சி வேட்பாளருக்கு டெபாசிட் திரும்ப கிடைத்தாலே அது ஒரு அதிர்ஷ்டம் தான். எனவே, ஆளுங்கட்சியான எம் ஜி ஆர் கட்சி வேட்பாளர் தொண்டைமான் சுமார் 50000 ஓட்டு வித்தியாசத்தில் வெல்வார்.
Tamil hindu, please clarify whether is this a political web site or only for hinduism?
எனக்குப் பிடிக்காத வலைத் தடங்கள் நிறையவே இருக்கின்றன. அவை என் கட்டுப் பாட்டில் இல்லை. எனவே அவற்றின் செய்ல்களைக் கேள்வி கேட்கும் உரிமை எனக்கில்லை. அவை என் ஆதரவைக் கேட்குமானல், மறுக்கும் உரிமை எனக்கு உண்டு. அவை பற்றி என் அபிப்ராயங்களைச் சொல்லும் தேவையும் நிர்ப்ந்தமும் எனக்கு ஏற்பட்டால் சொல்வேன். இல்லையெனில் அமைதியாக என் வழியில் போய்விடுவேன்.
அதில்லாமல், தனக்கு எல்லாரையும் எல்லா இடங்களிலும் மற்றவர்கள் செய்லபாடுகளைக் கேள்வி கேட்கும் கண்டனம் செய்யும் உரிமை இருப்பதாக நினைப்பது அராஜக மனம் செய்யும் வேலை.
என்/உங்கள் இஷடத்துக்கும் கட்டுப் பட்டு இல்லை, சமூகமும் உலகமும்.
மறந்து விட்டேன். இந்த அராஜக மனத்துக்கு பெயர்கள் உண்டு ஆங்கிலத்தில் fascist mind என்பார்கள். தமிழில், இதற்கு பகுத்தறிவு, என்பார்கள். இந்தப் பகுத்தறிவு கொண்டு செய்படுகிறவர்களை க்ழகக் க்ண்மணிகள் என்பார்கள். அவர்களை “உடன்பிறப்பே” என்று விளிப்பது வழ்க்கம்.
இனியும் விரிந்த விளக்கம் வேண்டுமெனில், இதற்கு இனி வரும் எதிர்வினைகளைத் தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
@ Sarav
Though TamilHindu.com is primarily to portray the greatness of Sanatana Dharma, it is equally important that the people are to be made aware of the political scene. We must not forget that the money that has been swindled by corrupt politicians probably will outcast the total swindling of what the Mughals and British did together. Hence it is important to know the political aspect of it as well. Else, we may hear preachings from the same politicians who kept us divided based on caste, color and language.
// Sarav on June 11, 2012 at 9:40 am
Tamil hindu, please clarify whether is this a political web site or only for hinduism? //
ஏன், இந்துமத இணையதளம் அரசியல் குறித்து எழுதக் கூடாதா? இங்கு என்ன லிபியாவில் உள்ள அரசியலையா பேசுகிறார்கள்? தமிழ் ஹிந்துக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்ட அரசியல் தானே இது?
சைட்பாரில் வகைகள் என்பதன் கீழ் பார்த்தால், அரசியல் (300) என்று உள்ளது. ஏற்கனவே 300 அரசியல் பதிவுகள் வெளியிட்டுள்ள ஒரு இணையதளத்தில் வந்து இப்படிக் கூமுட்டைத் தனமாக கேள்விகேட்பது குறித்து நீங்கள் தான் விளக்கம் தர வேண்டும்.
தமிழில் வரு்ம் சில அசட்டுத்தனமான அச்சுபிச்சு ஆன்மீக -சோதிட இதழ்கள் போல உள்ள இணையதலம் அல்ல தமிழ்ஹிந்து. இங்கு தீவிரமான ஆன்மீகமும் உண்டு, தீவிரமான அரசியலும் உண்டு. அது மட்டுமல்ல – சினிமா, இலக்கியம், வரலாறு,சாதி குறித்த பிரசினைகள் எல்லாமே இந்துப் பார்வையுடன், இந்து பிரக்ஞையுடன் எழுதப் பட்டு அலசப் படுகிறது. ஒரு உண்மையான இந்துமத தளம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்.
///////இத்தனைக்குப் பிறகு இடைத்தேர்தலை பல கோடி செலவில் நடத்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சியின் எம்எல்ஏ இறந்துவிட்டால், அதே கட்சியின் உறுப்பினரை கட்சியே தேர்வு செய்து காலியிடத்துக்கு நியமித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்ற கருத்து சமீபகாலமாக பலரால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், நமது அரசியல் சாசனமும் தேர்தல் முறைகளும் இந்த யோசனையை நிராகரிக்கின்றன.//////
இந்த கருத்து பேராபத்தில் கொண்டு சேர்க்கும்… இது நடந்து விட்டால் ஒவ்வொரு மாதமும் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிவரும். அரசியல் கொலைகள் ஊக்கம் பெறுவதுடன் (முக) போன்றவர்கள் இறப்பின் (முகஸ்) போன்றவர்கள் அந்த இடத்தை நிரப்புவார்கள் அல்லது பேரன் பேத்திகள் அதிகாரத்தில் அமர்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் அதிகாரத்தில் அமர யாரை வேண்டுமானாலும் கொல்ல துணிவார்கள்.
கவ கார்த்திகேயன்.
இடைத்தேர்தலை ஒழித்துவிட்டால் , அரசியல் கொலைகள் அதிகரிக்கும். பெரிய அரசியல் குடும்பங்களில் கூட , ஒருவரை ஒருவர் அவுரங்கசீப் போல , அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டு இடைத்தேர்தல் நடத்தாமல் பதவியை பிடிக்க முயற்சிப்பார்கள். திரு கே வீ கார்த்திகேயன் அவர்களின் கருத்து மிக சரியானது. வரவேற்கிறேன்.
தமிழகத்தின் மற்ற தொகுதிகளிலிருந்து புதுக்கோட்டை சற்று மாறுபட்டது. காரணம் புதுக்கோட்டை சுதந்திரத்துக்கு முன்பு வரை சுதேச சமஸ்தானமாக இருந்து வந்தது. இங்கு அரச குடும்பத்தின் பால் மக்களுக்கு அசாத்திய மரியாதை உண்டு. இதன் காரணமாகவே 1967 இல் புதுக்கோட்டை இளைய ராஜா விஜய ரகுநாத தொண்டைமானை பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இங்கு சட்டமன்றத்துக்குக் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்து, மாபெரும் வெற்றியைப் பெற்றார். அதற்கு முன்பு தி.மு.க.வின் தியாகராஜ காடுவெட்டியார் அங்கு எம்.எல்.ஏவாக இருந்தார் . அவரும் மக்களின் தொண்டர். மிக எளிமையானவர். யார் கூப்பிட்டாலும் ஓடிவரக்கூடியவர், அவரும் அரச குடும்பத்தின் உறவினர்தான். விஜய ரகுநாத தொண்டைமான் கிராமங்களுக்குச் சென்றபோது அங்கு பாரம்பரிய முறையில் அரசர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகளை மக்கள் கொடுத்தார்கள். அந்த ராஜ விசுவாசம் இப்போதும் கார்த்திக் தொண்டைமானுக்குக் கை கொடுக்கும். காங்கிரசின் பலமும் இங்கு கணிசமாக உண்டு, எனினும் இந்த இடைத் தேர்தல் அரசியல் ரீதியாக நமது அரசியம் அமைப்புச் சட்டத்தின் நடத்த வேண்டிய ஒன்ரஐதான். இதில் தேவை, தேவையில்லை என்பதெல்லாம் கிடையாது. ஆளும் கட்சிக்குக் கிடைத்த நபர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் வெற்றிக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். புதுக்கோட்டையில் அரச குடும்பத்தார் எந்த கட்சியில் நின்றாலும் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. “தொண்டைமான்” எனும் பெயர் நிச்சயம் வெற்றியை ஈட்டித் தரும்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 73.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 2011- மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 78.88- சதவீதம் வாக்குகள் பதிவாயின. திமுகவுக்கு அந்த தொகுதியில் சுமார் 25% வாக்குகள் உண்டு. திமுகவின் தலைவர் மற்றும் மாவட்ட திமுக தீர்மானம் ஆகியவற்றை ஏற்று ஐந்து சதவீத வாக்குகளே குறைவாக பதிவாகி உள்ளன. எனவே, திமுக தலைமையின் தேர்தல் புறக்கணிப்பை திமுகவினர் சட்டை செய்யவில்லை என்பது தெளிவாகிவிட்டது. திமுகவின் கட்டளையை அதன் ஆதரவாளர்கள் உதறித்தள்ளிவிட்டு , தேமுதிகவுக்கு களப்பணியும், ஓட்டுப் பணியும் ஆற்றினர் என்பதே உண்மை. காங்கிரசும் தேர்தலை புறக்கணித்ததாக சொல்லிக்கொண்டது. ஆளில்லாத கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக சொன்னதை யாரும் லட்சியம் செய்யவில்லை.ஏனெனில் காங்கிரசு என்ற ஆவியை யாரும் கண்டு பயப்படுவதில்லை.
திமுக என்ற அரசியல் கட்சி எடுத்த முடிவுக்கு அவர்கள் கட்சிக்காரர்களே முடிவு எழுதிவிட்டனர். இந்த இடைதேர்தலில் , புதுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தெரிவித்த தகவல் படி, எம் ஜி ஆர் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் தொண்டைமான் அவர்கள் சுமார் 105000- ஓட்டுக்களும் , தேமுதிக வேட்பாளர் சுமார் 40 முதல் 45 ஆயிரம் வரை ஓட்டுக்கள் பெறுவார். எனவே, எம் ஜி ஆர் கட்சி வேட்பாளரின் வோட்டு வித்தியாசம் சுமார் 60000- க்கு மேல் போய்விடும் .திமுக எடுத்த தவறான முடிவினால், விஜயகாந்த் கட்சி விரைவில் இரண்டாவது இடத்தை பிடித்து, திமுக மறைந்து போகும்.
Trend எப்படி இருக்கு என்று சொல்லமுடியலாம். குத்து மதிப்பாக எவ்வலவு சதவிகித வோட்டு வித்யாசம் இருக்கு என்று சொல்ல முடியலாம். எல்லாம் யூகம், உத்தேசம் தான். ஆனால் தொண்டைமானுக்கு 10,5000 வோட் என்று எண்ணியது எப்படி? ஜோஸ்யம் சொல்றவன் கூட இபபடி எண்ணிக்கை வரை வரமாட்டானே.
மதிப்பிற்குரிய வெங்கட் சாமிநாதன்,
சுமார் சுமார் என்று ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் முன்பு குறிக்கப்பட்டுள்ளது தங்கள் கவனத்தில் தவறி இருக்கலாம் . ஒரு லட்சம் என்றாலும் சுமார், ஒரு லட்சத்து ஐயாயிரம் என்றாலும் சுமார் தான். 105243- என்றால் தான் துல்லியம்.
புதுக்கோட்டை சட்டபேரவை இடைத்தேர்தலில் எம் ஜி ஆர் கட்சி வேட்பாளர் திரு கார்த்திக் தொண்டைமான் 71448- வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 101948-. சுயேச்சைகள் ஏராளமானவர்கள் களத்தில் நின்று சுமார் சுமார் 11000- வாக்குக்களை பிரித்து விட்டனர். இல்லையெனில், அந்த வாக்குகளும் விஜயகாந்த் கட்சிக்கு விழுந்து, அதிமுகவின் வெற்றி வித்தியாசம் சுமார் 60000- என்ற கணக்கில் முடிந்திருக்கும்.
டெபாசிட்டை திரும்ப வாங்கிவிட்ட விஜயகாந்துக்கு இது மிக பெரிய வெற்றி தான். மேலும், எதிர்காலத்தில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் விஜயகாந்த் கட்சியில் சேரும் வாய்ப்பும், திமுகவை விட பெரிய கட்சியாக விஜயகாந்த் கட்சி வளரும் நாளும் வெகு தொலைவில் இல்லை.