இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

20.1 இராமாயண பாராயண மகிமை

இலங்கையின் நந்தவனத்தில், உலகிலேயே முதன் முறையாக இராமாயணப் பாராயணத்தை தொடங்கி நடத்தியவர் அனுமன் என்றால், அந்தப் பாராயணத்தை ஒரு தனி ஆளாக முதன் முதலாக முழுதும் கேட்டவர் சீதாப் பிராட்டியார். வெகு நாட்கள் பின்னர் இந்தப் பாராயணம் வால்மீகிக்கு நாரதராலும், இராமரின் தவப் புதல்வர்களான லவ-குசர்கள் மூலம் இராமர் முன்பாகவும் நடக்கும். அப்படியாக கதாபாத்திரங்கள் மட்டும் அல்லாது கதாசிரியரும் கேட்டோ, சொல்லியோ அனுபவித்த பாராயணம் இது என்பதால், இன்றும் எங்கெங்கு இராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கங்கே அவர்களும் இருந்து அனுபவிக்கும் தனிப்பெருமை வாய்ந்தது இந்தக் காவியம்.

பஞ்சவடியில் சீதையைக் காணாது இராமர் தவித்த தவிப்பும், அவளைத் தேடி அலைந்த அலைப்பும், பின் வானரர் தலைவனான சுக்ரீவனிடம் நட்புறவு கொண்டதும், வாலி வதத்திற்குப்பின் சுக்ரீவன் அரியணை ஏறியதும், எல்லாத் திக்குகளுக்கும் சுக்ரீவன் வானரர் படைகளை அனுப்பியதும், அந்த வானரர்களில் ஒருவனான அனுமனாகிய தான் கடலைத்தாண்டி வந்து சீதையைக் கண்டுபிடித்து அங்கு அமர்ந்திருப்பதையும் அனுமன் சொல்லிக்கொண்டே வர, சீதை அனைத்தையும் கவனமாகக் கேட்டாள்.

இந்த விவரங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த அனுமனின் குரலும், அதில் இழையோடிய பக்தி ரசமும் சீதைக்கு அனுமனின் மேல் நம்பிக்கையை வளரச் செய்தது. உடனே அவள் அனுமனிடம் இராம-லக்ஷ்மணர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாள். ராவணனால் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் சீதையின் பிரிவைத் தாங்க முடியாது இராமர் தவிப்பதாக அனுமன் சொன்னான். இப்போது சுக்ரீவனின் உதவியோடு அவர் இருப்பதாகவும், அதனால்தான் தானே அங்கு வந்திருப்பதாகவும் சொல்லிவிட்டு, சீதையின் நம்பிக்கைக்கு உரமேற்றுவதுபோல் இராமர் தன்னிடம் கொடுத்தனுப்பிய கணையாழியை எடுத்து அவளிடம் அனுமன் கொடுத்தான். அந்த மோதிரத்தைப் பார்த்த சீதை கண் கலங்கி இராமரையே நேரில் பார்த்ததுபோல் பரவசமடைந்தாள். இராமர் தன்னைத் தேடுவதில் தன்னருகே வந்துகொண்டிருப்பதில் மகிழ்ந்த அவள், அனுமனிடம் இன்னும் எவ்வளவு காலத்திற்குள் இராமர் படையெடுத்து வந்து ராவணனின் சிறையிலிருந்து தன்னை மீட்க முடியும் என்று கேட்டாள்.

அனுமனும் அங்கிருந்து தப்பிப்போக தனக்கு உடனே தோன்றிய வழி ஒன்றைச் சொன்னான். தன் மீது சீதை ஏறி உட்கார்ந்துவிட்டால், தான் கடலை ஒரே தாவாகத் தாவி இராமரிடம் அவளைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதாக அனுமன் கூறினான். அந்தத் திடீர் யோசனைக்குச் சீதை ஒத்துக்கொள்ளவில்லை. தப்பிப் போகும்போது அனுமன் ஆகாயத்தில் வேகமாகப் பறக்க வேண்டியிருக்கும். அப்படி வேகமாகப் போவது தனக்கு ஒத்துக்கொள்ளாது என்றும், தவிர ஒரு வேளை தவறிப்போய் தான் கடலில் விழுந்து விட்டால், சுறா அல்லது திமிங்கில மீன்களுக்கு இரையாகிவிடுவேன் என்ற பயமும் தனக்கு இருப்பதாக சீதை கூறினாள். அசோக வனத்தில் தன்னைக் காணவில்லை என்று தெரிந்ததும், அரக்கர்கள் தேடிக்கொண்டு அவர்களைத் துரத்தி வர, தான் அனுமனின் தோள்களின் மேல் அப்போது உட்கார்ந்திருந்தால் அனுமனால் சண்டையும் போடமுடியாது போய்விடும் என்றும் சீதை தயங்குவதாகச் சொன்னாள். தவிர்க்கமுடியாததால் ராவணன் தன்னைத் தூக்கி வரும்போது மேலே பட்டதைத் தவிர, தான் இராமரைத் தவிர வேறு எவராலும் தொடப்படுவதைத் தாங்கமுடியாது என்றும் ஒரு காரணத்தை முக்கியமாகச் சொன்னாள்.

ப⁴ர்துர்ப⁴க்திம்ʼ புரஸ்க்ருʼத்ய ராமாத³ன்யஸ்ய வானர |
ந ஸ்ப்ருʼஸா²மி ஸ²ரீரம்ʼ து பும்ʼஸோ வானரபுங்க³வ || 5.37.60||

வானரபுங்க³வ O chief of vanaras, வானரர்களின் தலைவனே!
வானர vanara, வானரர்
ப⁴ர்து: husband(அ)s, கணவனின்
ப⁴க்திம் devotion, பக்தியை
புரஸ்க்ருʼத்ய after cherishing, அனுபவித்த பின்
ராமாத் from Rama, இராமரிடம் இருந்து
அன்யஸ்ய other, மற்ற
பும்ʼஸ: man(அ)s, மனிதர்களின்
ஸ²ரீரம்ʼ து even body, உடலைக் கூட
ந ஸ்ப்ருʼஸா²மி I do not touch, நான் தொடமாட்டேன்.

வானரர் தலைவனே! இராமரை நான் கணவனாக வரித்து அவரிடம் பக்தியை அனுபவித்த பின், வேறெவருடைய உடலின் ஸ்பரிசம் கூட என்மேல் படக்கூடாது.

வேறு மனிதர்களைத் தொட நேர்ந்ததாலேயே தன்னுடைய கற்புக்கு பங்கமோ, கணவன் மீதுள்ள அன்புக்குப் பழுதோ வந்துவிடும் என்று அறிவு மிக்க சீதை சொல்வதாக இருப்பது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. இதை அக்காலத்தைய பழக்க வழக்கம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் இங்கு தொடவேண்டி இருப்பதோ, தீவிர பிரம்மசாரியான அனுமனை! இதற்கும் நாம் சீதைக்கு அனுமனைப் பற்றிய விவரங்கள் முழுதும் தெரியாது என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஆனாலும் பின்பு நடக்கப் போவதைப் பார்க்கும்போது, சீதையிடம் ஒரு பெரிய மாற்றம் தெரியவரும். அப்போது சீதை ஒரு தெய்வீக அன்னையாக வந்து ஆண், பெண், மற்றும் திருநங்கைகளைக் கூட எந்தவொரு வித்தியாசமும் பார்க்காது வாஞ்சையோடு கட்டி அணைத்து ஆரத் தழுவுவாள்.

20.2 பெரியோரைத் துணைக் கொள்

இராமர்தான் இலங்கைக்குப் படையெடுத்து வந்து ராவணனுக்குப் பாடமும் கற்பித்து, சீதையையும் மீட்கவேண்டும் என்பது உறுதியானது. அறிமுகம் செய்து வைப்பதற்காகவும், சீதையை உற்சாகப்படுத்துவதற்காகவும் இராமர் அனுமனிடம் கணையாழியைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அதேபோல அனுமன் அவளைக் கண்டதற்குச் சாட்சியாகத் தான் போட்டிருந்த நகை ஒன்றைக் கழற்றி சீதையும் அவனிடம் கொடுத்தாள். மேலும் அவனிடம் கிஷ்கிந்தா சென்றடைந்ததும் இராம-லக்ஷ்மணர்களையும், சுக்ரீவன், அவனது அமைச்சர்கள், மற்றும் இதர வானரர்கள் அனைவரையும் தான் மிகவும் விசாரித்ததாகவும் சொல்லச் சொன்னாள். முக்கியமாக அங்குள்ள பெரியவர்கள், முதியவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னாள்.

குஸ²லம்ʼ ஹனுமன்ப்³ரூயா: ஸஹிதௌ ராமலக்ஷ்மணௌ || 5.39.7||
ஸுக்³ரீவம்ʼ ச ஸஹாமாத்யம்ʼ வ்ருʼத்³தா⁴ன் ஸர்வாம்ʼஸ்²ச வானரான் | ….. 5.39.8||

ஹனுமன் O Hanuman, ஓ அனுமனே!
ஸஹிதௌ both, இருவரையும்
ராமலக்ஷ்மணௌ Rama and Lakshmana, ராம-லக்ஷ்மணர்
குஸ²லம் welfare, நலம்
ப்³ரூயா: you may enquire, விசாரித்ததாகச் சொல்
ஸஹாமாத்யம் along with his ministers, அவரது அமைச்சர்களுடன்
ஸுக்³ரீவம்ʼ ச and Sugriva, சுக்ரீவனும்
வ்ருʼத்³தா⁴ன் elders, முதியோர்கள்
ஸர்வான் all, எல்லோரும்
வானரான் vanaras, வானரர்கள்.

ஓ அனுமனே! ராம-லக்ஷ்மணர் இருவரையும், அவரது அமைச்சர்களுடன் சுக்ரீவனையும், முதியோர்கள் மற்றும் எல்லா வானரர்களையும் நலம் விசாரித்ததாகச் சொல்.

முதியவர்களுக்கு வயதும் ஆகி, அதனால் தளர்ந்து போய் அவர்களது பயனும் குறைந்து வரும்போது அவர்களை உதாசீனப்படுத்துவது என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. எந்தக் கூட்டத்திலும் வயதானவர்களை ஒரேயடியாக ஒதுக்காவிட்டாலும், அளவுக்கு அதிகமாக இளைஞர்களைப் புகழ்வதும், அவர்களை மட்டுமே தீவிரமாகக் கவனிப்பதுமாக இருந்து முதியவர்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது என்பதும் இன்றைய யதார்த்த நிலைதான். அப்படிப்பட்ட நிலையை எதிர்பார்த்தோ, அல்லது அன்றும் அதே நிலை இருந்ததாலோ வால்மீகி வயதானவர்களை ஊக்கப்படுத்துவது மாதிரி சீதையின் மூலம் உலகுக்குச் சொல்ல வருவது என்னவென்றால்: ‘வயதானோரும் ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்து அவர்களின் பயனை உலகுக்குக் காட்டியவர்கள்தான், அதை மறந்துவிடாமல் அவர்களுக்கும் மரியாதை கொடுங்கள்’ என்பதுதான். சீதையைப் போல இக்காலத்து இளைஞர்கள் இருந்து தங்கள் பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்றால், எதற்கு ஊருக்கு ஊர், மூலைக்கு மூலை முதியோர் இல்லங்கள் முளைக்கவேண்டும்?

முதுபெரும் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் தன்னைப் பற்றிப் புகழும்போது சொன்னது, இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது: ” என்னைப் பற்றிப் பெரிதாகச் சொன்னீர்கள், சரி. நான் கண்டுபிடித்தது எல்லாம் எனக்கும் முன்னோர்கள் உருவாக்கிய பாதையில் சென்றதனால்தானே? அவர்கள் தோள்கள் மேல் நான் ஏறிப் பார்க்க முடிந்ததால் இன்னும் கொஞ்சம் தொலைதூரம் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு என் நன்றி” என்றாராம். அதுதான் முதியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நாம் செலுத்தக் கூடிய மரியாதை. ஆம், நாம் எல்லோருமே அத்தகையவர்களை ஏணியாகக்கொண்டு ஏறி வந்தவர்கள்தான்? ஏணியாய் அவர்கள் இருந்தாலும் நாம் அவர்களைவிட்டு அந்த ஏணி போலத் தனியானவர்கள் அல்ல; அவர்களின் ஒரு பகுதியே.

நம் கலாச்சாரப்படியும், நாம் வணங்க வேண்டியது ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற வரிசைப்படிதானே? இதில் உலகத்தையே உருவாக்கியதாகக் கருதப்படும் தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை என்பதால், முன்னவர் மூவரும் நமக்குக் கண்கண்ட தெய்வங்கள் ஆகின்றனர். அதில் நமது மாதாவும், பிதாவும்தான் நம்மை உலகுக்கே கொண்டுவந்தவர்கள். அதன் பின்னரே உலகை நமக்கு அறிமுகம் செய்துவைத்து, மேலும் புரியவைப்பவராக நமது குரு சொல்லப்படுகிறார். இறுதியில்தான் உலகை உருவாக்கும் தெய்வத்தையே வைத்துள்ளனர். ஆக நமது மாதா-பிதாவில் ஆரம்பித்து முன்னோர்களையும், அதேபோன்ற முதியோர்களையும் மதிக்காமல் இருப்பது என்ன நியாயம்? வேறு எதற்குமே பயன்படாமல் போயிருந்தாலும், நம்மை உலகுக்குக் கொண்டு வந்திருப்பதன் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நாம் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். முன்பே இராமர் சொன்ன மாதிரி, அந்தக் கடனை நாம் என்றும் திருப்பிக் கொடுக்கவே முடியாது. அதையும் செய்யாது, அவர்களை மேலும் உதாசீனப்படுத்தினால் வரும் பாவங்களைக் களைவது என்பது எப்படி முடியும்?

20.3 பாம்பின் கால் பாம்பறியும்

சீதையின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது என்ற ஒன்றே அனுமனுக்கு முக்கியமாகக் கொடுக்கப்பட்ட பொறுப்பு. அவனும் அந்த வேலையை கவனமாக முடித்துவிட்டு, இராமர் கூடிய விரைவில் இலங்கைக்கு வந்து சீதையை மீட்டு அழைத்துப் போவார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அவளிடமும் வெற்றிகரமாக தெரிவித்துவிட்டான். உடனே திரும்பிப் போய் கடலின் அக்கரையில் கவலையோடு காத்திருக்கும் தன் தலைவனான அங்கதனிடம் இந்த விவரங்களை சொல்லப் போகவேண்டும் என்று தோன்றினாலும், கொடுஞ்செயல்களைச் செய்துகொண்டிருக்கும் அரக்கர்களுக்கு உரைக்கிற மாதிரி இனி அவர்கள் எதிர்நோக்க இருக்கும் தங்கள் தரப்பின் வலிமையைக் காட்டிவிட்டுத் திரும்பவேண்டும் என்று அனுமனுக்கு மனதில் பட்டது.

அப்படியே அரக்கர்களது வலிமையையும் சோதிப்பதுபோல் இருக்கட்டும் என்று, அசோக வனத்திற்குள் இருந்த மரங்களின் கிளைகளை தாறுமாறாக ஒடித்தும், சில மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து மண்ணோடு மண்ணாய் சாய்த்தும், அரக்கிகள் தங்கியிருந்த ஓய்வு விடுதிகளை இடித்துத் தள்ளியும், இன்னும் என்னென்னவெல்லாம் அவர்களின் கோபத்தைக் கிளறுமோ அப்படியான அட்டூழியங்கள் எல்லாவற்றையும் அனுமன் செய்தான். அதனால் எழுந்த பேரோசை அங்கு தூங்கிக்கொண்டிருந்த அரக்கிகளை தூக்கிவாரிப்போட்டு எழுப்பி உட்கார வைத்தது. தூக்க மயக்கத்தில் கண்களைத் திறந்த அவர்களுக்கு சுற்றிலும் நடந்திருந்த அழிவுச் செயல்களையெல்லாம் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது என்று மட்டும் தெளிந்த அவர்கள் பயத்துடனேயே, தூரத்தே சம்ஹாரம் செய்வதுபோல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் அனுமனையும் பார்த்துவிட்டு, தூங்காமல் உட்கார்ந்திருந்த சீதையை அந்த வானரம் யார், என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேட்டார்கள்.

அந்த வானரத்தைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிட்டால் சீதை அவர்களிடம் எதற்கும் பயப்பட வேண்டாம் என்று சுமுகமாகவும், அவளை ஒன்றும் செய்யாமல் யார் அட்டூழியம் செய்தார்களோ அவர்களை மட்டும்தான் தண்டிப்போம் என்றும் அரக்கிகள் கேட்டுப் பார்த்தார்கள். அரக்கிகளின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அனுமனைக் காட்டிக்கொடுக்க சீதை அறிவற்றவள் அல்ல என்பதாலும், அவர்களின் எண்ண ஓட்டங்களைத் திசை திருப்புவதற்காகவும் இப்படிச் சொன்னாள். மாரீசன் மான் உருவில் வந்ததுபோல் அரக்கர்கள்தான் வெவ்வேறு உருவம் எடுத்து வருவதில் வல்லவர்கள் ஆயிற்றே, அதனால் தோட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் வானரமும் வேறு எந்த அரக்கனோ என்று அவர்களையே கேட்டாள். அதனால் பாம்பின் காலைப் பாம்பே நன்கு அறிந்திருக்கவேண்டும் என்பதால், அரக்கர்களைப் பற்றி அவர்களுக்குத்தான் நன்கு தெரிந்திருக்கவேண்டும் என்றும் குத்தலாகச் சொன்னாள்.

.. அஹிரேவ ஹ்யஹே: பாதா³ன்விஜானாதி ந ஸம்ʼஸ²ய: || 5.42.9||

அஹே: of a serpent, பாம்பின்
பாதா³ன் feet, கால்களை
அஹிரேவ a serpent alone, பாம்பு மட்டுமே
விஜானாதி can identify, அறியும்
ஸம்ʼஸ²ய: doubt, சந்தேகம்
ந no, இல்லை

பாம்பின் கால்களை பாம்பே அறியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஒரு பாம்பு சென்ற வழியை இன்னொரு பாம்பே அறியும் என்பதில் சந்தேகம் எப்படி இருக்கும்? அசோக வனத்தில் அட்டகாசம் செய்திருக்கும் அனுமனைக் காப்பாற்றும் எண்ணத்தோடு, இங்கு சீதை அவளுக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறாள். நாம் ஏற்கனவே லக்ஷ்மணனை சீதை எப்படி தன் வார்த்தைகளால் துடிதுடிக்க வைத்தாள் என்று பார்த்தோம். சற்று முன்பு அரக்கிகள் சீதையைத் திட்டியதற்குப் பழி தீர்க்க அவளுக்கு வாய்ப்பு கொடுத்தது போல் இருந்ததால், சீதையும் அதை நழுவவிடாது தன் வார்த்தைகளால் அவர்களை வறுத்தெடுத்தாள்.

20.4 தூக்கி வினை செய்

அசோக வனம் வானரன் ஒருவனால் பாழ்பட்டுப் போயிருப்பதை அரக்கிகள் ராவணனுக்கு பயந்துகொண்டே அறிவித்தனர். வந்திருப்பவன் அனுமன் எனத் தெரிந்துகொண்டு அவனை உடனே கைது செய்து இழுத்துக்கொண்டு வர, ராவணன் சில வீரர்களை அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று தங்கள் ஆயுதங்களை உபயோகித்து அவனைப் பிடிக்க முயற்சி செய்தபோது அனுமனாலேயே கொல்லப்பட்டார்கள். அதைக் கேட்ட ராவணன் கோபம் கொண்டு, தன் அமைச்சர் ப்ரஹஸ்தாவின் மகனான ஜம்புமாலியை அனுப்ப, அவனும் மற்றவர்களைப் போலவே அனுமன் கையில் உயிரிழந்தான். அப்போதுதான் ராவணனுக்கு வந்திருக்கும் அனுமன் சாமான்யப்பட்டவன் அல்ல என்று தோன்றியது. அதனால் தன்னிடம் உள்ள தளபதிகளில் திறமை வாய்ந்த ஐந்து பேர்களை அனுப்பி வைக்கும்போது, ராவணன் அனுமனின் வலிமையை குறைத்து எடைபோட வேண்டாம் என்றும், சண்டையில் அவரவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர்களை எச்சரித்து அனுப்பினான்.

… நாவமான்யோ ப⁴வத்³பி⁴: ….. || 5.46.9||
…. ஆத்மா ரக்ஷ்ய: ப்ரயத்னேன யுத்³த⁴ஸித்³தி⁴ர்ஹி சஞ்சலா…. || 5.46.15||

ப⁴வத்³பி⁴: by you also, உன்னாலும்
நாவமான்ய: should not be insulted, தவறாக நினைக்காதே.

ப்ரயத்னேன making effort, முயற்சி செய்தல்
ஆத்மா your own self, நீயாகவே
ரக்ஷ்ய: should be protected, காப்பாற்றப்பட வேண்டும்
யுத்³த⁴ஸித்³தி⁴: victory in war, போரில் வெற்றி
சஞ்சலா ஹி is unstable / uncertain, நிச்சயமற்றது.

(அனுமனது வலிமையை) தவறாக எடை போடாதே….
போரில் வெற்றி நிச்சயமற்றதால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.

ஒரு சண்டையில் உயிர்ச் சேதம் அடையும்போது, அந்தப் படைத் தலைவனுக்கு எதிரியின் பலத்தை சரியாக மதிப்பிடவில்லை என்று தெரிகிறது. ஒரு தலைவன் சண்டையில் வெல்வதற்காகத்தான் போராடுகிறானே தவிர, அனாவசியமாக வீரர்களை இழக்க விரும்புவதில்லை. இங்கு ராவணன் சிலரை இழந்தபின்தான் அந்த அறிவுரையைக் கொடுத்தாலும், அது அன்றும், இன்றும், என்றும் போர்க்களத்தில் முதலில் இருந்து இறுதி வரை கடைப்பிடிக்க வேண்டிய மிக அவசியமான அறிவுரையே.
(தொடரும்)

4 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20”

  1. இனிய பதிவு. ராமாயணம் ஒரு அற்புத காவியம். திரு ராமன் அவர்கள் அதன் சிறப்பினை எடுத்துக்கூறும் விதமும் படிக்க அருமை. நன்றிகள் ஏராளம். இந்த புனித பணி தொடரட்டும். மேலும் மேலும் பெருகட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  2. எப்படியும் எழுதிவிட்டு போகட்டும். ஆனால் அஃதென்ன இராமன் மனித குல விளக்கு என்ற தலைப்பு?

    இராமன் திருமாலில் அவதாரங்களுள் ஒன்று. எனவே தெய்வம். மனிதகுலத்தில் அவதாரமெடுத்தாரென்றால் மனிதனா?

    வேறேதாவது தலைப்பை வைத்திருக்கலாம்.

  3. இராமாயணம் எத்தனை முறை படித்தாலும் எந்த மொழியில் எத்தனை கவிகள் மூலம் கேட்டாலும் தெவிட்டாது, இறையன்பு உள்ள மாந்தர்க்கு. இறையன்பை உருவாக்க, பேணி வளர்க்க, வேறேது காவியம்? வாழ்க ஸ்ரீ ராமன். வளர்க அவர் தொண்டு!

  4. அப்பா தமிழ் ,

    மனிதனாக மட்டுமல்ல , திருமால் மீன், ஆமை, பன்றி, மனிதன் பாதி மிருகம் பாதி என்று சொல்லப்படும் நரசிம்மம், என்று பல வடிவம் பெற்றுள்ளார். அதற்கெல்லாம் ஒரு கணக்கு எடுத்து மாளாது. இறைவன் நினைத்தால் , எந்த நேரமும் எந்த வடிவமும் எடுப்பார் என்பதே உண்மை. அவர் நினைத்தால் அவ்வண்ணமே ஆகும். மனிதனும் இறைவனின் ஒரு அம்சமே. மனிதன் இல்லை என்றால் இறைவனுக்கு என்ன வேலை தம்பி.? கலியுகத்தில் தெய்வம் நேரில் வராது என்பதால் தான் மனித உருவில் தெய்வம் வந்தது. மனிதனை கேவலமாக நினைத்தால் , மனிதன் வணங்கும் தெய்வம் எப்படி உயர்வாக முடியும் ? மனித இனம் மட்டுமல்ல , அனைத்துமே பரம்பொருளின் பல்வேறு வடிவங்களே என்பதை உணர்வோம் . மனித இனத்தை இழிவாகவும், மற்றவற்றை உயர்வாகவும் எண்ணக்கூடாது. எல்லாம் சமமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *