காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்

மீண்டும் மத்திய அரசு சாதாரண சிலிண்டருக்குரிய விலையை 11.80 பைசா உயர்த்தி இருக்கிறது. வெளிச்சந்தையில் எல்.பி.ஜி யின் சர்வதேச விலை குறைந்து கொண்டு வருகிறது. அரசு விலையை ஏற்றுகிறது. ஏனென்றால் எரிவாயு முகவர்களுக்கு கொடுக்கும் கமிஷனை ஏற்றித் தருவதற்காக என்று சொல்லப்படுகிறது. எரிவாயு முகவர்களையும் சமாதானப்படுத்த இளித்தவாய் மக்கள் தான் கிடைத்தார்களா? முதலில் சந்தை விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலை 784 என்றார்கள். அப்புறம் 127 ரூபாய் விலை ஏற்றி 912 ரூபாய் ஆகி இப்போது மேலும் 11.80 ரூபாய் ஏற்றி இப்போது 924 ரூபாய் ஆகியிருக்கிறது. 6 சிலிண்டர்களுக்கு மேல் வழங்கப்படும் அனைத்து சிலிண்டர்களின் விலையும் 127 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் இந்த விலை உயர்வைக் கடுமையாக கண்டித்தாலும் யார் தடுத்தாலும் நான் விலையை உயர்த்தி மக்களுக்கு எவ்வளவு பொருளாதார சுமை ஏற்ற முடியுமோ அவ்வளவு பொருளாதாரத் சுமையை ஏற்றுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது, மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் அரசு. 2008-ம் ஆண்டு முதல் இப்போது வரை சாதாரண சிலிண்டர்க்கு 72.00 ரூபாயும், மானியம் இல்லாத என்று சொல்லப்படும் சிலிண்டருக்கு 514.00 ரூபாய் வரையும் ஏற்றி சாதனை புரிந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசாங்கம்..

சில நாள்களுக்கு முன் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக 2 சிலிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய தகவல் அறிவிப்பை வெளியிட்டது. இனிமேல் ஒரு குடும்பம், ஒரு வீட்டுக்கு, ஒரு முகவரிக்கு ஒரு சிலிண்டரைத்தான் வைத்திருக்க முடியும். இரண்டு கனெக்ஷன் இருந்தால் உடனே அரசாங்கத்திடம் சரண்டர் செய்ய வேண்டும்; தவறினால் சிறை மற்றும் பெரும் அபராதம், செக்ஷன் 7 அத்யாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள். இந்தப் புது முறையில் “KYC – Know Your Customer” என்னும் அடிப்படையில் உங்களின் இரண்டு ப்ரூஃப்களை நீங்கள் அக்டோபர் 30, 2012-க்குள் உங்கள் காஸ் டீலரிடம் சமர்பிக்கத் தவறினால் உங்களுக்கு காஸ் கனெக்ஷன் கிடைக்காது. அதாவது ஃபோட்டோ ஐடியும், அட்ரஸ் ப்ரூஃபும் கண்டிப்பாக ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் கர்னாடகா மாநில மக்கள் ரேஷன் கார்டை கண்டிப்பாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும். இதற்கு 30 அக்டோபர், 2012 கடைசித் தேதியாகும் மற்றும் மேல் தவணை எதுவும் கொடுக்கபடமாட்டாது என பெட்ரோலிய அமைச்சு தெரிவித்து உள்ளது.

14.09.2012 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 31.03.2013 வரை சுமார் 6 மாதங்களுக்கு உங்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்தான் கிடைக்கும். அதற்குமேல் உங்களுக்கு வீட்டு உபயோகத்திற்கு, உங்கள் குடும்பத்தின் உணவுத்தேவைக்குத் தேவைப்பட்டால், நீங்கள் குறைந்தபட்சமாக 813 ரூபாயோ 973 ரூபாயோ கொடுத்து நல்ல சந்தையிலும், 1200 ரூபாய் கொடுத்து கள்ளச் சந்தையிலோ வாங்கி உபயோகியுங்கள் என்கிறது மத்திய அரசு. நீங்கள் இதுவரை எவ்வளவு உபயோகித்திருந்தாலும் பரவாயில்லை. இனி நீங்கள் சுற்றுச்சூழலை மிக அதிகமாகப் பாதிக்கும் மண்ணெண்ணையையோ அல்லது வன வளத்தை உடனே அழிக்கும் வகையில் பச்சை மரங்களை வெட்டிக் காய வைத்த விறகுகளையோ உபயோகித்து, சுற்றுப்புறச் சூழலை முடிந்த அளவு நாசம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் உடல் நலனையும் பற்றி எந்தக் கவலையும் படாமல் அசுத்தமாக்குங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது. அது போக இனிமேல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்திற்கும் வேறுபடும். அதாவது இந்த மாத விலை அடுத்த சிலிண்டருக்கு இருக்கும் என உறுதி கிடையாது. இதன் மூலம் நீங்கள் எந்தப் பொருளாதாரத் திட்டமிடலும் இல்லாமல் உங்கள் குடும்பத்தை ஓட்ட மத்திய அரசு திட்டம்போட்டு சதி செய்கிறது. இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா? காங்கிரஸின் சதி இதில் என்ன?

சென்ற சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு திடீரென்று 3 மிக முக்கியமான கொள்கை முடிவுகளைச் செயல்படுத்தியது. மக்களை உடனே பொருளாதார இருள் புதைகுழிக்குள் தள்ளும் அபாயகரமான மக்கள் நல விரோத முடிவுகளை உடனே அமல்படுத்தியது. சாமானிய மக்களின் பொருளாதாரச் சுமையை வெகுவாக அதிகரித்ததோடு நிலக்கரி ஊழல், ஏர்போர்ட் நில அனுமதி ஊழல், அணுமின் நிலைய ஊழல், தோரிய ஏற்றுமதி ஊழல் ஆகியவற்றை திசைதிருப்பவும், மக்களின் கவனத்தைப் பாராளுமன்ற முடக்கம், பெருகும் காங்கிரஸ் பற்றிய எதிர்ப்புணர்வு, கட்டுக்குள் வராத மின்சாரத் தட்டுப்பாடு, கேவலமான ஆட்சி அதிகார நிர்வாக முறை, செயல் தன்மையை முற்றிலும் இழந்த மத்திய அரசு, சொக்கத்தங்கம் சோனியாவின் அந்நிய, அயல்நாட்டு கள்ளத் (பணத்) தொடர்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதற்குமுன் அதிலிருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அடுத்த ஊழலுக்கு அடிபோட மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் வஞ்சகமான முயற்சி தான். சில்லறை சிதம்பரத்தால் மன்னிக்கவும் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய முதலீடு சிதம்பரத்தாலும், 12% டீசல் விலையேற்றம் மற்றும் 150% சிலிண்டர் விலையேற்றம் மற்றும், சிலிண்டருக்கான புதிய கட்டுப்பாடுகள் பெட்ரோலிய அமைச்சகத்தாலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

காங்கிரஸின் சதி அணுகுமுறை

பஞ்சதந்திரக் கதைகள் காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு மிகப் பழமையான உத்தி ”பெரிய கோட்டை சிறிதாக்க அதன் அருகில் அதை விட பெரிய கோட்டை வரைதல்” என்ற நடைமுறை. அதை செயல்படுத்துவதற்காக தேர்ந்த நாடகத் தயாரிப்போடு மமதா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி மற்றும் கருணாவை வைத்து பயிற்றுவிக்கப்பட்ட ஓர் ஆதரவு வாபஸ் நாடகமும், சில்லறை சிதம்பரம், மன்மோகன் சிங், அலுவாலியா, ஜெய்பால் ரெட்டியை வைத்து ஒரு சீர்திருத்த நாடகச் சதியையும் ஒருங்கே அரங்கேற்றி மக்களை ஒரேயடியாக முட்டாளாக்கி இருக்கிறார். புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய அமெரிக்காவிற்குப் பறந்திருக்கும் அந்நிய ஆபத்து, சோனியா. அவரின் அபிலாஷைகளுக்கு வசனம் எழுதும் அந்நியக் கரங்கள் சொல்லும் பொய்யை வரி மாறாமல் சொல்லி சபாஷ் பெறுகிறார் நம் மன்மோகன் சிங். மக்களும் மீடியாவும் இப்போது காங்கிரஸ் திருடித் தின்ற 51 லட்சம் கோடியைப் பற்றிப் பேசவில்லை. நாடாளுமன்றம் முடங்கியதை மக்கள் மறந்தே போனார்கள். பொதுச் சொத்துகளை அந்நியக் “கை”களோடு சேர்ந்து கொண்டு இந்தியக் கோடாரிக் காம்புகள் தேசத்தின் அரிதான இயற்கை வளங்களை சூறையாடி, திருடித் தின்பதை மறந்து விட்டார்கள். பாமர ஏழை, எளிய மக்களின் உழைப்பை வருமானத்தைச் சுரண்டி அந்நிய முதலாளிகளுக்கும் அயல் நாட்டிற்கும் கறுப்பு பணமாய்க் கொள்ளையடிக்கும் இருட்டுக் கொள்ளையர்களான சோனியாவின் காங்கிரஸைக் கேள்விகேட்க மறந்து திகைத்துப் போய் கையறு நிலையில் மக்கள் உள்ளார்கள். பரபரப்புச் செய்தி இரைகளின் பின்னால் வேட்டை நாய்கள் போல் துரத்தும் ஊடக அறமற்ற அர்னாப் கோஸ்வாமிகள், சர்தேசாய்கள், வாங்கிய கூலிக்கு மக்களை எளிதாக மடைமாற்றி மாய்மாலங்கள் புரிகிறார்கள். நயவஞ்சகமான பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்.

 

அந்நியக் “கை”களின் அரசியல் அபிலாஷைகள்

வரலாற்றின் நீண்ட, நெடிய பக்கங்கள் தோறும் பாரதம் அந்நிய சக்திகளால் தொடர்ந்து சுரண்டப்பட்டு வந்திருப்பது தெரியும். சுமேரியர்கள், பாபிலோனியர்கள், யவனர்கள், எகிப்தியர்கள் பாரதத்தின் வளங்கள் பலவற்றை எடுத்துச் சென்று தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொண்டனர். முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நம் வளங்களை எல்லாம் சூறையாடிக் கொள்ளையடித்தே வாழ்க்கையைக் கழித்தார்கள். கொள்ளையடித்துப் பழக்கப்பட்ட வெள்ளையர்கள், அமெரிக்கர்கள் சுதந்திரத்திற்குப் பின்னால் தேச வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக இழிபிறவிகளான சிலரை பணத்திற்காக பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்கொடுக்கவும், கொள்ளையிட்டு பங்கு வைக்கவும் தயாரான காங்கிரஸ் மற்றும் பிற தேச அபிமானம் கொண்ட கம்யூனிஸ்ட்களையும், அந்நிய அனாச்சாரங்களில் ஊறிய பாலைவன மதங்களின் பிரதிநிதிகளையும் பழக்கி இந்த தேசத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பது மட்டுமே ஆட்சி என நினைத்துக் கொண்டு அரசாட்சி செய்யும் களவாணிக் கூட்டத்தை அயல் சக்திகள் திட்டமிட்டு விதைத்து நம் தேசிய வளங்களை அறுவடை செய்து கொழுத்துக்கொண்டிருக்கின்றன. அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் நம் தேசத்தை கொள்ளையடிப்பதும், கன்னம் வைத்துத் திருடுவதும் மட்டுமே முதன்மையாய் செய்து கொண்டு இருக்கும் மன்மோகன் சிங்கின் ஆட்சியே இதற்கெல்லாம் உதாரணம். அந்நியக் “கை”களின் அரசியல் லாபத்திற்காக மட்டுமே இங்கு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன் தேச பெட்ரோலிய வளங்களை என்ரானும், வேதாந்தா, ஆர்சிலர் மிட்டல், கெய்ர்ன் இந்தியாவும், வால்மார்ட்டும், எஸ்ஸார் ஆயிலும், செவ்ரானும்தான் கொள்ளையடிக்க வேண்டும். அதில் பங்காளிகளாக உள்ளூர் திருடர்கள் அம்பானி, டாடா போன்றவர்கள் இருக்கட்டும்; ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து அவர்கள் நிம்மதியாகவோ, நன்றாகவோ இருந்து விடக் கூடவே கூடாது என்ற ஒரே கொள்ளைக் கொள்கையோடு இயங்கும் அரசை, அது சொல்லும் பெட்ரோலிய, எரிவாயுப் பொய்களை கவனமாக பார்க்கலாம். ஆட்சியே போனாலும் பரவாயில்லை 51% அந்நிய முதலீட்டை அனுமதித்தே தீருவோம். ஏழைகளுக்கு எதற்கு 6 சிலிண்டர் போன்ற திருட்டுப் புரட்டுகளைக் கொஞ்சம் அலசலாம் வாருங்கள்.

 

L P G சிலிண்டர்

சிலிண்டர் என அழைக்கப்படும் liquefied petroleum gas உருளைகள் கடந்த 40 வருடங்களாக நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வதாரத்தோடு மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டு விட்டது. நம் நாட்டில் இன்றைய 2012-இல் 14 கோடிக் குடும்பங்கள் நேரடியாக சிலிண்டரை வாங்கி உபயோகிக்கிறார்கள். இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட புரேப்பன் (C3H8) அல்லது பியுட்டேன் (C4H10) அல்லது பென்சோ சைக்ளோ பெண்டேன் (C9H10); புரியும்படியாக இண்டேன் அழுத்தத்துடன் 14.2 கிலோ அளவுகளில் உருளையில் அடைத்து சிலிண்டராக அனைத்து இல்லங்களிலும் சமையல் வேலைகளுக்கான மிக முக்கிய எரிபொருளாக சில பத்தாண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. 1910-இல் வால்டர் சினெல்லிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1912-இல் இருந்து பொது பயன்பாட்டிலும், ராணுவப் பயன்பாட்டிலும், தொழிற்கூட பயன்பாட்டிலும், போக்குவரத்திலும் உள்ள அழுத்தப்பட்ட திரவ வடிவ எரிவாயுக்கள், மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் வகிக்கிறது. 1954-இல் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த சிலிண்டர் பின்னர் இந்திய இல்லங்களின் முக்கிய அங்கமாக மாறியது. அரசாங்கமும் புதிய புதிய திட்டங்களைத் தீட்டி 1981-லிருந்து நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் இயற்கை எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதைத் தொடர்ச்சியாக ஊக்குவித்து அதிகரித்து வந்திருக்கிறது.1981-இல் 20 லட்சத்துக்குள் இருந்த எரிவாயு உபயோகம் 2015-இல் 22 கோடிக் குடும்பங்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

 

சிலிண்டர் விலை

கருணைமிகு மத்திய நிதியமைச்சர், மக்கள் உணவு உண்பதற்காக சிலிண்டர் உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் உணவு உண்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். மத்திய அரசும், எரிபொருள் அமைச்சகமும் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் அற்பத்தனமான, அபாண்டமான பொய்களை மக்களுக்கு எதிராகவே விளம்பரப்படுத்துகிறார்கள். 25,000 கோடி ரூபாய்கள் சிலிண்டர் விநியோகத்தால் மக்களுக்கு மானியம் அளிப்பதால் இழப்பு ஏற்படுவதாக வடிகட்டிய பொய்யை திரும்பத் திரும்ப கூறுகிறது. அப்பாவி மக்களும் கேஸ் விலை 42 ரூபாய்க்கு விற்கிறது. 14 கிலோவிற்கு ரூ.688 ஆகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அவை அனைத்துமே மாயை தான். முதலில் பெட்ரோலியப் பொருள்களின் விலைக்கும் அழுத்தப்பட்ட திரவ எரிவாயுவின் விலைக்கும் பெரும்பாலும் சம்பந்தமில்லை என்பதுதான் உண்மை. சர்வதேச எண்ணெய் விலைக்கும் இயற்கை எரிவாயு விலைக்கும் மிகப் பெரிய வித்யாசம் இருக்கிறது. LPG சிலிண்டரின் உருவாக்கத்தில் 28 சதவிகிதத்திற்கும் கீழ்தான் பெட்ரோலிய ரீஃபைனரியிலிருந்தும், 58.2 சதம் இயற்கை எரிவாயுப் படுகையில் இருந்தும் எடுக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் இந்தியக் கடல் மற்றும் ஆற்றுப்படுகையில் கிடைக்கிறது. உதாரணமாக கிருஷ்ணா-கோதாவரி பேசினிலும், தப்தி பேசினிலும், பன்னா-முக்தா ஆயில் ஃபில்டிலிருந்தும் சர்வ தேச சந்தையிலும், நம் நட்பு நாடுகளில் இருந்தும், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அயல்நாட்டு இயற்கை எரிவாயுத் துரப்பணங்கள் மூலமும் நமக்கு எரிவாயு கிடைக்கிறது அதன் விலைக்கும் சர்வதேச ஆயில் சந்தை விலைக்கும் உள்ள தொடர்பு என்பதே மிகவும் குறைவு. சர்வதேச ஆயில் சந்தையை மனதில் கொண்டால்கூட பெட்ரோல் ரூ.44-க்கும், டீசல் ரூ.32-க்கும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். எரிவாயு 30 ரூபாய்க்குத் தான் விற்கப்பட வேண்டும். 14 கிலோவிற்கு 420 தான் வரிகள் உட்பட செலவு ஆகும். பின்னர் ஏன் 873 ரூபாய்கள் கொடுத்து நாம் சிலிண்டர் வாங்கினாலும் அரசுக்கு 8000 கோடி ரூபாய் நஷ்டம் வரும் என்று பொய் சொல்கிறார்கள்? பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வில் சொல்லப்பட்ட அதே பொய்கள் வேறு கலரில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. நவரத்னா கம்பெனிகளில் மிக அதிகம் லாபம் ஈட்டுவது எண்ணெய் நிறுவனங்களே. Fortune 500 லிஸ்டில் இடம்பிடித்திருப்பதும் எண்ணெய் நிறுவனங்களே. எந்த எண்ணெய் நிறுவனங்கள் 25,000 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு இழக்கிறதோ அந்த எண்ணெய் நிறுவனம் தான். இது இல்லாமல் பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலம் சென்ற ஆண்டு அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் 4,50,000 கோடிக்கு மேல். எப்படி நஷ்டம் வந்துள்ளது என்று அரசு விளக்கினால் பரவாயில்லை. கீழே சில சுட்டிகள்..

இந்துஸ்தான் பெட்ரோல் கார்ப்பரேஷன்  சென்ற ஆண்டு லாபம் 9991 கோடி.
இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் முதல் காலாண்டு லாபம் 3755 கோடி.
பாரத் பெட்ரோலியம் இவர்களுக்கும் 1742 கோடிகள் லாபம் கிடைத்திருக்கிறது.

வேறு யாருக்கு நஷ்டம் வந்து விட்டது என சில்வண்டு சிதம்பரம் நீலிக்கண்ணிர் வடிக்கிறார்?

 

மக்கள் தலைவர்களின் சிலிண்டர் பயன்பாடு

நம்மைப் போலவே இரண்டு கை, இரண்டு கால்களும், முகம், உடலுறுப்புகளும், குடும்பம் முதலிய சமூகப் பொறுப்புகளும் பெற்றுள்ள- முக்கியமாக நம்மைப்போலவே ஒரேயொரு வயிறும் பெற்றுள்ள, ஆனால் எம்.பி எனும் ஒரு தகுதியால் இந்த மனிதர்கள் பயன்படுத்தும் சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். மன்மோகன் சிங்கும் மாண்புமிகு சிதம்பரமும் சொல்கிறார்கள்- ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் போதும் என்று. 70,000 கோடி மக்கள் பணத்தைச் சுரண்டி, திருடித் தின்று விட்டு கம்பி எண்ணும் கல்மாடி ஆண்டுக்கு 756 சிலிண்டர்கள் சராசரியாகவும், தகதகாய சூரியன் ஆ.ராசா 1,76,000 கோடியை சோனியாவுக்காக கன்னம் வைத்துக் கொள்ளையடித்து திகார் சிறையில் களி தின்று கொண்டிருக்கும் போது அவரின் குடும்பம் உபயோகித்த சிலிண்டர்களின் எண்ணிக்கை. ஆண்டு சராசரி 1068. துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி சராசரியாக 2052 சிலிண்டர்கள்; வெளியுறவுத் துறை இணையமைச்சர் பிரணீத் கவுர் 1932 சிலிண்டர்கள்; உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா 1000 சிலிண்டர் வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிறார்.1100 சிலிண்டரோடு அமைதி அடைந்து விட்டார் பிரம்மச்சாரிணி மாயாவதி அம்மையார். ஏம்ப்பா மனசாட்சின்னா கிலோ என்ன விலைன்னு கேக்கும் சிதம்பரம் ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்ட்ரே அதிகம்ன்னு சொல்லும்போது 2052 சிலிண்டரை வாங்கி அமீத் அன்சாரி என்னப்பா பண்றார்? மக்கள் பணத்தை திருடித் தின்றுவிட்டு கம்பி எண்ணிக் களி தின்கிற அரசு விருந்தாளிகளுக்கு எதற்கப்பா 750 சிலிண்டர் எக்ஸ்ட்ரா குடுக்குறீங்க? 1926 சிலிண்டரை அதிகமாக வாங்கும் அம்மணி பிரணித் கவுர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறரா, இல்லை நாடு முழுவதும் ஹோட்டல் கீட்டல் வச்சு வேறு வியாபாரம் ஏதாவது செய்கிறாரா? 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் அப்படி என்ன மக்கள் சேவை செய்து கிழித்தார்கள்? இதெல்லாம் ஒன்றுமே இல்லை இல்லையா திருவாளர்.சிதம்பரம் அவர்களே. நடுத்தர மக்களுக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும் 6 சிலிண்டர்தான் என்ற உங்களின் அரிய கண்டுபிடிப்புக்கான காரணத்தை அறிய மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

 

இந்திய இயற்கை எரிவாயு வளம்

இந்தியாவில் உள்ள ஹைட்ரோகார்பன் வளம், 2010 கணக்கெடுப்பின்படி 1.074 ட்ரில்லியன் க்யூபிக் மீட்டர்  இயற்கை எரிவாயு வளம் நம் நாட்டில் உள்ளது. இவை பெரும்பாலும் அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், மும்பை, குஜராத் போன்ற இடங்களில் கிடைக்கும் proven oil reserves என்ற வகையில் வரும். பெரும்பாலும், நதி நீர்ப்படுகைகளிலும், கடலுக்கு அடியிலும், சில பெரும் பிளவுகளுக்கு அடியிலும் உறைந்த நிலையில் உள்ள எரிவாயு ஒரு இயற்கையான படிமானம் ஆகும். அவை இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. அவை முதலிலேயே எடுக்கப்பட்டு அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் திருட்டு நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே படையல் போட்டாகி விட்டது. நம் நாட்டிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு வளங்களே நமக்கு மிக அதிக அளவு விலைக்கு விற்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இப்படி நம் வளத்தைக் குறைந்த விலைக்குத் திருடி மிக அதிக விலைக்கு நமக்கே விற்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கே 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி அளிக்கிறோம். இந்தத் திருட்டை முறையாகச் செய்யவே ஓர் அமைச்சகம் இருக்கிறது. அதுதான் பெட்ரோலிய அமைச்சகம். 2005-2008 வரையிலான காலகட்டத்தை மேற்கோள் காட்டி CAG-இன் வினோத் ராய் மத்திய அரசை கிருஷ்ணா-கோதாவரி D6 பேசினில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் பற்றிக் குறிப்பிட்டு செய்தி அனுப்புகிறார்.  வழக்கம் போல நம் மன்மோகன் சிங் அசமஞ்சத்தனமாய் ஆபத்தும் அபத்தமுமான 123 ஒப்பந்தத்தில் பெருமையோடு கையெழுத்திட்டு விட்டு அமர்ந்திருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் திருடிய தொகை 1,50,000 கோடி இருக்கும் என்கிறது 2008-இல் CAG. இதெற்கெல்லாம் முன்னாலேயே 1994-98 காலகட்டத்தில் என்ரானுடன் சேர்ந்து மும்பை கடலோரப் பகுதிகளில் இயற்கை எரிவாயு துரப்பணத்தில் ஈடுபடுவதாகc சொல்லி 25 ஆண்டு காண்ட்ராக்டில் ஏகப்பட்ட பணத்தை அம்பானியின் திருட்டு கம்பெனியும், அமெரிக்கக் கொள்ளைக் கூட்டாளி என்ரானும் திருடி விட்டார்கள்; அதுதான் அனைவருக்கும் தெரிந்த பன்னா-முக்தா எரிவாயு ஊழல். 95-லேயே CAG-ஆல் சுட்டிக்காட்டப்பட்டு சதிஸ் சர்மாவை CBI விசாரித்த ஊழல்.

 

எப்படி அநீதி?

நாட்டின் சுயசார்பான ஆற்றல் பாதுகாப்புக் கொள்கை மற்றும் வரைவுக்கும் முற்றிலும் எதிரானதாக இருக்கிறது, சிலிண்டர் கட்டுப்பாட்டு முறை. எந்த அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் போதும் என்று முடிவெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உலகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்குமான ஹைட்ரோ கார்பன் தேவை மற்றும் ஆற்றல் தேவைகளை பற்றி 2010-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலக ஹைட்ரோ கார்பன் மாநாட்டில் (World LPG & Hydro Carbon Forum, Madrid) சராசரியான ஒரு உலகக் குடிமகனுக்கு 927 கிலோ அளவிலான ஆற்றல் தேவைப்பாடு (பெட்ரோல்,டீசல்,எரிவாயு) இருக்கும் என்று நிர்ணயித்து இருக்கிறது. அதில் இந்திய சராசரி ஆற்றல் தேவைப்பாடே 245 கிலோ என்று இருக்கும் போது மாதத்திற்கு 7 கிலோ போதும் என்று எப்படி அறிவிக்கிறார்கள்? குடும்ப அமைப்பு என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத சோனியா, சிதம்பரம் போன்றவர்களை முடிவு செய்யச்சொன்னால் இப்படிப்பட்ட நடைமுறைக்கு ஒவ்வாத பெருவாரியான மக்களின்மீது பொருளாதாரப் பெருஞ்சுமையைத் திணிக்கும் அராஜகப் போக்கே நிலவும். மேலும் எரிவாயு உற்பத்தி என்பது பெரும்பாலும் உள்நாட்டில் கிடைக்கும் அபரிமிதமான ஹைட்ரோ கார்பன் வளத்தைக் கொண்டேதான் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி பேசினில் எடுக்கும் 100 கிலோ எரிவாயுவிற்கு அரசுக்கு 1.25 பைசா செலுத்துகிறார்கள். துரப்பணம் செய்வதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் ஒரு கிலோவிற்கு 4.00 ரூபாய்கள் வரை செலவாகிறது. 8 ரூபாய் வரை போக்குவரத்திற்கும் 2.00 ரூபாய்கள் நிர்வாகச் செலவினங்களுக்கும் 100% லாபம் சேர்த்து 28.25 ரூபாய்க்கு 1 கிலோ எரிவாயுவைத் தரமுடியும். ஆனால் 42 ரூபாய்க்கு எரிவாயுவை விற்க அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை அனுமதிக்கிறது. சரி 50% மார்கெட் பங்கை வைத்திருக்கும் ஆயில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன? அவர்களும் ஏன் இந்த அபரிமிதமான லாபத்தின் பின்னால் ஓட வேண்டும்?

மக்கள் நலனை விட அநியாய லாபம் முக்கியமா? அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறீர்கள்? முன்னறிவிப்பு இன்றி எந்தப் பொருளின் விலையும் ஒரே அடியாக 150% விலையேற்றம் செய்யப்பட்டதாக வியாபார வரலாற்றில் எந்தச் சான்றும் இது வரை இருந்ததில்லை. ஒரு சராசரியான நகர்புற நடுத்தரக் குடும்பம் ஆண்டுக்கு 20 முதல் 22 வரையிலான சிலிண்டரை உபயோகப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. பொருளாதாரப் படிநிலை உயர உயர இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமப்புறங்களில் சராசரியாக 16 முதல் 18 சிலிண்டர்கள் ஆண்டுக்கு செலவிடப்படுவதாக மத்திய அரசின் எரிசக்தித் துறை தெரிவிக்கிறது. இந்த ரேஷன் முறை சிலிண்டர் விநியோகத்தாலும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கப்படும் சிலிண்டராலும் ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 6500 முதல் 7000 ரூபாய்கள் அதிகரிக்கிறது. டீசல் விலையேற்றத்தால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20,000 ரூபாய்கள் வரை தங்களுடைய பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறது. இதனால் வேலைக்கான சம்பளம் அதிகரித்து பொருள்களின் உற்பத்திச் செலவீனமும் அதிகரித்து, மக்களின் வாங்கும் திறனில் பெரிய தேக்கம் ஏற்படத் துவங்கும். மட்டமான, பாரபட்சமான, முட்டாள்த்தனமான பொருளாதாரக் கொள்கை முடிவுகள் இந்தியா போன்ற பெரும் மனித வள ஆற்றல் கொண்டுள்ள நாட்டில் அதன் பொருளாதாரத்தில் தேக்க வீக்கத்தை ஏற்படுத்தும். உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கும்; சந்தை தன் போட்டி போடும் திறனை இழக்கும். அதிகப்படியான பொருளாதார வாட்டத்தை இது உடனே ஏற்படுத்தும். ஏற்கெனவே தொழில்துறை 0.1% மட்டுமே வளர்ந்து மிக அபாயமான சூழலில் உள்ள இந்த நேரத்தில் நடுத்தர வர்க்கத்தையும், தொழில் துறையினரையும் உடனடியாக ஒருங்கே பாதிக்கும் இந்த விலையேற்றம் அராஜகமானதும், இயற்கை நியதிகளுக்கு முரணானதும் ஆகும்.

சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்தாத சிலிண்டர் உபயோகத்தைக் குறைப்பதன் மூலம் அரசு மறைமுகமாக மற்ற ஆற்றல் வள மூலகங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது என்று சொல்ல வேண்டும். மாற்று எரிபொருள், தூய ஆற்றல் மூலகங்களில் நம் ஆராய்ச்சிகள் மிகவும் கீழான நிலையிலேயே இருப்பதால் மற்ற ஆற்றல் மூலகங்களான மின்சாரத்தையும் பெட்ரோலிய உபபொருள்களையுமே உபயோகிக்க அரசு தள்ளுகிறது. அது எண்ணெய் வள நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் மட்டுமே சாதகமாக இருக்குமே அன்றி நம் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் சாதகமாக இருக்காது. இதனால் சூழலில் ஏற்படும் அதிகப்படியான கார்பன் ஃபுட் பிரிண்டிற்கு  அரசின் பதில் என்ன? என்பது அரசுக்கே தெரியாது. ஏற்கெனவே நாம் மிக மோசமான மின் தட்டுப்பாட்டிலும் ஆற்றல் மேலாண்மையிலும் வெகுவாகப் பின்தங்கி நம் நிலைக்குக் கீழாக செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். இது போன்ற சுமைகள் பொருளாதாரத்திலும் ஆற்றல் மேலாண்மையிலும் புதிய கீழ் மட்டங்களை அடைவதற்கு அல்லாமல் வேறு எதற்கும் உதவாது. பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் சரக்குப் போக்குவரத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தொடர்ச்சியான நஷ்டத்தை சமாளிக்க வேண்டி இருக்கும். பல சிறு, குறுந்தொழில் அதிபர்கள் இதனால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் கடன் சுமைக்குள்ளும் பொருளாதார இருள் குகையிலும் தள்ளப்பட்டு தத்தளிக்கப் போகிறார்கள். அதிகச் சூழல் மாசை ஏற்படுத்தும் கெரசின் பொன்னாலோ, பாரம்பரிய மரம், சுள்ளிகள் போன்ற மாற்று ஆற்றல் மூலகங்களை மக்கள் தேடி ஓடத்துவங்கினால் நம் சூழல் மாசை நம்மால் கட்டுக்குள் வைக்கவே முடியாது. ஆற்றல் மூலங்களாக கிராமப்புரங்களில் மரங்கள், மரப்பட்டைகள், விறகுகள் உபயோகிக்கப்படத் துவங்குவமேயானால் ஏற்கெனெவே அழிவின் விளிம்பில் இருக்கும் காடுகளும், மர வளமும் மிக எளிதாகவும், வேகமாகவும் சுரண்டப்படும். இதனால் மழைப்பொழிவு குறையும்; பருவ மழைகள் தவறும்; விவசாயம் பாதிக்கப்படும்; தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்; சுற்றுப்புற வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும்.

சோனியா காந்தியின் கொள்ளைகளும் ஊழல்களும் மறைக்கப்படுவதற்காக நம் சந்ததிகளின் நலனையும் 120 கோடி மக்களின் நலனையும் ஒருங்கே பணயம் வைக்கிறது முட்டாள்த்தனமும் குரூரமும் நிரம்பிய மத்திய மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு. மத்திய அரசின் நியாயம் என்னவென்றால் சிலிண்டர்களுக்கான போக்குவரத்து செலவே ஆண்டிற்கு 35,000 கோடிக்கு மேல் செலவாகிறதாம். அறிவுள்ள எந்த அரசும் இதை எளிதாக நிவர்த்திக்க, நாடு முழுவதும் நிலையான எரிவாயுத் தடத்தால் (Gas Pipeline Grid) இணைத்திருக்கலாமே? கெயில் இந்தியா அதற்குத் தானே இருக்கிறது. ஈரானிய அரசு பைப்லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்தால் இன்னும் குறைந்த விலைக்கு எரிவாயுவை மக்களுக்குக் கொடுக்கலாம் எனச் சொல்லி பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும் அமெரிக்க நல்னுக்காக நம் நாட்டு மக்களின் நலனை காவு கொடுத்த சோனியா, மன்மோகன், சிதமபரத்திற்கு என்ன தண்டணை தருவது?

எரிவாயுவை வீட்டு உபயோகத்திற்கும், ஹோட்டல், எரிவாயு தகனம் போன்ற வணிகப் பயன்பாட்டிற்கும், மின் உற்பத்தி, பாய்லர் போன்ற தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும், வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கும் பயன்படுகிறது. இதன் அனைத்து உபயோகங்களுமே மக்களை நேரடியாகச் சென்று சேர்பவை. அனைத்தும் மக்களை உடனடியாகக் கொல்லும் சயனைட் தடவப்பட்ட முடிவுகள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. Clean alternative fuels-ஐ நோக்கி உலக நாடுகள் முன்னேறிக்கொண்டிருக்கையில், மரம், விறகு, சுள்ளி என்று கற்காலத்தை நோக்கி நம்மைப் பயணிக்க தூண்டுகிறது, செயல்படாது முடங்கிய சோனியாவின் அரசு.

 

மேலும் சில சந்தேகங்கள்

பற்றாக்குறையான ஆற்றல் தேவைப்பாடு உள்ள ஒரு நாட்டிலிருந்து 37.559% மொத்த உற்பத்தி (2009-ஆம் ஆண்டு நிலவரம்) அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவைதான் என்ன? 1999-இல் 0.052% ஆக இருந்த பெட்ரோலிய/எரிவாயு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 750% அதிகரித்து 37.559% உயர்த்த வேண்டிய தேவைதான் என்ன? இங்கு தான் ஆரம்பிக்கின்றன கெய்ரின் இந்தியா, எஸ்ஸார் ஆயில், ஷெல் மற்றும் ரிலையன்ஸின் கள்ள ஆட்டம். கெய்ர்ன், ஷெல் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் நம்முடன் trade treaty-இல் உள்ள அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பின்பு அதன் துணை நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து லாபம் பார்க்கின்றன. ஏற்றுமதிக்குக் கிடைக்கும் duty, draw back மற்றும் வரிச் சலுகைகள் ஒருவகை லாபம், இறக்குமதியில் இரட்டிப்பு லாபம் என்ற இரட்டைக் குதிரையில் ஓடுகின்றன தனியார் எண்ணெய் நிறுவனங்கள். 81 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோலை விற்றால் நஷ்டம் வரும் என்று சொல்லி 10000-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் அவுட்லெட்களை மூடி வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் 2 லிட்டர் கச்சா எண்ணெயை 1 டாலருக்கு அதுவும் நஷ்டத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தக் கொள்ளைக்கார நிறுவனங்களிடம்தான் நாட்டின் 85% எண்ணெய் துரப்பண ஒப்பந்தங்கள் உள்ளன. ரிலையன்ஸின் kg basin முறைகேடுகளால் அரசுக்கு சுமாராக 5,00,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று மத்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவிக்கிறார். ஆனால் அதையும் தாண்டி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அரசு 1,05,000 கோடி ரூபாயை வரிவிலக்காக அளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல், கெரசின் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்க முடியாது என கூறிய மத்திய நிதி அமைச்சகம்தான் ரூ.3,74,937 கோடியை (ஆமாம் ஸ்பெக்ட்ரம் ஊழலை விட இருமடங்கை) சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்காக வழங்கி சாதனை படைத்துள்ளார். இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ.34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ.240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்குச் செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

ரூ.88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப்படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும். இதெல்லாம் இழப்பு என்று ஒரு காங்கிரஸ் நிதியமைச்சர் நினைத்தால்தான் ஆச்சரியம். இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயையும், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விலை உயர்வைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இதனைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது சரியான பொருளாதார நடவடிக்கையாக அமையாது என்பதோடு விலைவாசி உயரவே இது வழிவகுக்கும். தேவையில்லாமல் அரசு பெருநிறுவனங்களுக்கு வழங்கும் வரிச்சலுகையைக் குறைத்தாலே சாமானிய மக்களுக்கு நியாயமான விலையிலும் முறையிலும் சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும்.

பெரும் ஊழல்களாலும் அரசின் அலட்சியத்தாலும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த தேசத்தின் ஒவ்வொரு குடும்பத் தலைவரின் மீதும் ஒவ்வொரு குடிமகனின் மீதும் அநியாயமான பொருளாதார சுமையை ஏற்றி விட்டிருக்கும் மத்திய அரசை எரிச்சலோடும் இயலாமையோடும் மனம் வெதும்பிக் கண்டிப்பதையல்லாமல் சாமானிய மனிதன் வேறு என்னதான் செய்ய முடியும்?

கிருஷ்ணா-கோதாவரி ஊழல்- CAG-இன் அறிக்கை

CAG-இன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த நிலக்கரி, 2g ஸ்பெக்ட்ரம், ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் பூதங்களையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள K.G பூதத்தை காங்கிரஸ் கயவர்கள் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணெய் துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசையும், மக்களையும், அவரின் பங்கு முதலீட்டாளர்களயும் ஒருங்கே ஏமாற்றியுள்ளார் என்கிறது CAG. குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும்போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஓர் அம்சம்.

இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered) பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீதப் பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால்தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.

தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், சென்ற ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.


இணைப்புகள்:

 1. Move to strictly enforce single LPG connection order
 2. One-Household-One-LPG-Connection-An-ill-conceived-Thought
 3. CAG Report on Ultra Mega Power Projects in India – Full Text
 4. ராஜபக்ஷே மகா கெட்டிக்காரர்
 5. கயமைத்தனம் – தினமணி தலையங்கம்

 

4 Replies to “காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்”

 1. முதலில் போர்த்துகீசியர்கள், பின்பு முகலாயர்கள், அப்பறோம் வெள்ளையன், இப்போது காங்கிரஸ் காரர்கள். கொள்ளையர்கள் மாறுகிறார்கள். கொள்ளை மாறவில்லை, நாம் கொள்ளை அடிக்கபடுவது நிற்கவில்லை.

 2. http://viruvirupu.com/2012/10/10/31824/

  “நேற்று முதல், வாடிக்கையாளர்கள் புதியதாக வாங்கும் கியாஸ் சிலிண்டர்களுக்கு பாதுகாப்பு டெபாசிட் கட்டணத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இக்கட்டணம் இதுவரை ரூ. 900 ஆக இருந்தது. நேற்றிலிருந்து கட்டணம் ரூ. 1450 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

  வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களில் புதிய கியாஸ் சிலிண்டர்கள் வாங்குபவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.”

 3. காங்கிரசின் மக்கள் விரோத போக்கினால் , உத்தரகாண்ட் மாநிலம் தேரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை பாஜக கைப்பற்றி உள்ளது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2014 – ஆம் ஆண்டில் நடந்தாலும் சரி, சற்று முன்கூட்டியே நடந்தாலும் சரி காங்கிரசுக்கு இதே கதி தான் நாடு முழுவதும் ஏற்படும். தேரி மக்களவை தொகுதியில் 2009 -பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பகுகுணா சுமார் 54 ,000 – க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். ஆனால் தற்போது பாஜக வேட்பாளர் சுமார் 22000 – வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் மக்கள் விரோத போக்குக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.

  மேற்கு வங்காள மக்களவை இடைதேர்தலில் , மம்தா கட்சி போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டதால், காங்கிரஸ் வேட்பாளரும் , ஜனாதிபதியுடைய மகனும் ஆகிய அபிஜித் முகர்ஜிக்கு சுமார் 2000 – வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இனி காங்கிரசுக்கு எப்போதும் சரிவு மட்டுமே மிஞ்சும்.பிரணவ குமார் முகர்ஜி அவர்கள் சென்ற 2009 – மக்களவை தேர்தலில் சுமார் 125000 -ஒட்டு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இன்றோ , காங்கிரசின் வித்தியாசம் சுமார் இரண்டாயிரம் தான். காங்கிரசின் சரிவு மேலும் மேலும் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும்.

 4. அரிய தகவல்கள். இதை பாஜக தொண்டர்கள் படித்துக்கொண்டால் போதும், பிரசாரங்களில் காங்கிரஸ் கட்சியின் முகத்திரையைக் கிழிக்க முடியும். நண்பர் ராஜமாணிக்கத்துக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *