இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]

முதல் பகுதி..

தொடர்ச்சி…

 

தமிழக அரசு, கெயில் துணையுடன் புரியும் ஊழல்

தமிழக அரசுக்குச் சொந்தமான குத்தாலம், வழுதூர் 1, 2 மின் உற்பத்தி நிறுவனங்கள் gas turbine வகையை சார்ந்தவை.  குத்தாலம், வழுதூர் மின் உற்பத்திக் கேந்திரங்கள் 2010-ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருந்துள்ளன. ஆனாலும் அதற்கு எரிவாயு சப்ளை செய்யும் கெயில் நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு 90 லட்சம் வீதம் 600 நாள்களுக்கும் மேலாக தண்டத்தொகையை அதாவது கெயில் எரிவாயுவை தரத் தயாராக இருந்தும் இவர்கள் பெற்றுக்கொள்ளாததற்காக இந்த தண்டத்தொகையை அரசு செலுத்துகிறது. மிச்சமான எரிவாயுவை கெயில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்கிறது. ரூ.4.40-க்குத் தயாராகும் 1 யூனிட் மின்சாரத்தை மறுத்து விட்டு 14.80 பைசாவிற்கு GMR infra- விடமும் வாசவி பவர் போன்ற தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தைக் கொள்ளை விலைக்கு வாங்கி அதில் ஊழல் செய்து சுருட்ட வேண்டும் என்பதில் இரண்டு கழகங்களும் ஒன்றாக இருக்கின்றன. இப்படிச் செயல்படாமல் இருத்திவைப்பதன் மூலம், அதிக விலைக்கு பிற மாநிலங்களிடமிருந்தோ, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ மின்சாரம் வாங்குவதனால் அவர்களிடமிருந்து கிடைக்கும் கமிஷனுக்காகவே இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் கழகங்கள் ஈடுபடுகின்றன. இல்லையென்றால் 18.07.2010 அன்று பழுதான டர்பைன்களை மே மாதம் 2012 வரை பழுதுநீக்காமல் வைத்திருப்பதன் பின்னணியை அவர்கள்தான் விளக்க வேண்டும்; அதுவும் 4500 மெகாவாட் வரை மின்சாரம் தட்டுப்பாடாக, சென்னை தவிர்த்த தமிழகமே 18 மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கையில்கூட அதைச் சரிசெய்ய மனம் வராத இந்த கயமைத்தனம் நிரம்பிய பாதகர்களை என்ன சொல்வது?

 

கழகத்தினர் ஊழல்செய்யக் கூட்டு சேர்ந்த GMR வாசவி பவர்.

சாமல்பட்டி பவர், பி.பி.ன் பவரிடமிருந்து 17.48 ரூபாய்க்கு ஒரு யூனிட்டை தமிழக அரசு வாங்குகிறது. இவர்கள்தான் இப்பொழுது தங்களுக்கு உண்டான நிலுவையை வழங்கவில்லை என்பதற்காக வேண்டுமென்றே மின்நிறுத்தம் செய்து தமிழகத்தை மேலும் இருளில் ஆழமாக ஆழ்த்தியிருக்கிறார்கள். பி.பி.என்.பவர் நிறுவனத்தீன் மொத்தக் கொள்முதலே- அந்த நிறுவனமே தன் ஷேர் ஹோல்டர்களுக்கு தெரிவிப்பது- 7185 கோடி தான் திட்ட மதிப்பீடு என்கிறது. யூனிட் 2 ரூபாய் என்று விற்பதன் மூலமாக 1293 கோடி ரூபாய் (18%) ஆண்டுக்கு ரிட்டர்ன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள கம்பெனியிடமிருந்து யூனிட் 17.48 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி 1800 மடங்கு லாபத்தை ஒரே ஆண்டில் வழங்கி அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் போட்ட பிச்சை லஞ்சம் 1000 கோடியில் (அனுமானம் மட்டுமே) ஏதோ வாழ்கிறார்கள் கழக அரசியல்வாதிகளும், லஞ்ச அதிகாரிகளும். இதெல்லாம் ஏதோ இன்று நேற்று நடப்பதல்ல, .2000-ஆம் ஆண்டு முதல் நடப்பது. இப்படி அநியாய விலை கொடுப்பதனால் மட்டுமே மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி மின் நுகர்வு விலையையும் ஏற்றுகிறார்கள். இது சம்பந்தமாக தாவாவும் தமிழக அரசுக்கும் பி.பி.என் பவருக்கும் மின்சாரத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று இருக்கிறது .இந்த வழக்கை அநியாயமாக பி.பி.என் நிறுவனம் TANGEDCO மீது தொடுத்தது; அது தீர்ப்பாயத்தால் தள்ளுபடி செய்யப்பட்டாலும் தமிழக அரசு அவர்களுக்குரிய இழப்பீட்டை மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்து தாராளமாக வழங்கியிருக்கிறது. வாழ்க தமிழக அரசின் வள்ளல் தன்மை..

2007-இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகா வாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்கக் குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002-ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007-ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச்–மே மாதங்களில் அவை முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக்கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2011-லும், இரண்டாவது அலகு மார்ச் 2012-லும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சிம்மாத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

 

தீர்வுகள்:

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மாத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். அது மட்டுமல்லாமல் தமிழக மின் உற்பத்தி மூலங்களை சரியாக இயங்கச்செய்வதன் மூலம் மேலும் 1325 மெகாவாட்டை- மொத்த மின் பற்றாக்குறையான 4500 மெகாவாட்டில் 3350 மெகாவட்டை- உடனடியாகப் பெற்று தமிழகத்தை இருண்ட மாநிலம் என்ற கேவலத்திலிருந்து மீட்கலாம் என்றும், முறையாக காற்றாலை மின்சாரத்தை பெறும் வகையில் உரிய grid வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் காற்றாலை மின்சாரத்தின் முழு உற்பத்திதிறனான 6200 மெகாவாட்டைக் கூடுதலாகப் பெறுவதன் மூலம் நம் வருங்கால மின்சாரத் தேவையையும் சமாளிக்கலாம். அதோடு 3.39 ரூபாய்க்கு வாங்கும் காற்றாலை மின்சாரத்திற்கு உரிய காசைக் கொடுப்பதன் மூலம் புதிய முதலீட்டாளர்கள் காற்றாலை மின்சாரம் தயாரிக்க முன்வருவார்கள். அவர்களுக்குரிய மின் பகிர்மானத்தை நடைமுறைப்படுத்த புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தலாம். பழைய காற்றாலை உற்பத்தி மூலங்கள் திறன் குறைந்த, தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய இயந்திரங்களை மாற்றுவதற்கு மானியங்கள் அளித்து ஊக்குவிப்பதன் மூலம் புதிய மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 2000-இல் நிறுவிய 225 கிலோவாட் காற்றாலைகள் 100 எண்ணிக்கையில் உள்ளதை 2 மெகாவாட் ஆக நவீன தொழில்நுட்பத்தில் மாற்றுவதன் மூலமாக 22.5 மெகாவட்டை 225 மெகாவாட்டாக மாற்றுவதன் மூலம் நமக்குக் கிடைக்கும் ஆதாயம் 10 மடங்கு நிச்சயம் அதிகம். முதலில் எல்லாம் 60 அடியில் மட்டுமே நம்மால் wind turbine-களை நிறுவ முடிந்தது இப்போதெல்லாம் 150 அடியில் நிறுவும் அளவிற்கு தொழில் நுட்பம் முன்னேறி இருக்கிறது. ஏனெனில் ஒரு மெகாவாட்டிற்கான செலவு காற்றாலை மின்சாரத்தில் தான் மிகவும் குறைவு. (5 கோடி/மெகாவாட்). சூரிய ஓளியில் 1 மெகாவாட்டிற்கு 14 கோடி செலவாகிறது.

குண்டு பல்புகளுக்கு பதிலாக cfl பல்புகளை பயன்படுத்துவதன் முலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம், அதற்கு பதிலாக தமிழகத்தில் led பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 2000 மெ.வாட் மிச்சப்படுத்தலாம். மின்சாரத்தைப் பொருத்தமட்டில், எவ்வளவு மின்சாரத்தைச் சேமிக்கிறோமோ அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம் என்று அர்த்தம்.

விவசாயத்திற்கு, தொழிற்துறைக்கு பயன்படும் மோட்டர்கள் அதிகப்படியான மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. திறன் குறைந்த மின் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மற்றும் மாற்றுவதன் மூலம் நாம் பெருமளவு மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இவற்றைத் திறன் மேம்பட்ட மோட்டார்களாக (சுமார் 15 சதவீதம் இழப்பு) மாற்றினால் நமக்கு 14,400 MW மின்சாரம் கிடைக்கும். இதற்கு ஆகும் செலவு (ஒரு மோட்டாருக்கு ரூ 4,000 என்று வைத்துக்கொண்டால்) சுமார் 6,400 கோடி. இதே அளவு மின்சாரத்தை நாம் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு (ஒரு விகீக்கு 5 கோடி) சுமார் 72,000 கோடிகள் ஆகும். இந்தச் சிறிய அளவிலான செலவு மூலம் நமக்கு மிச்சமாகும் பணம் 65,600 கோடி ரூபாய்.

இதைத் தவிர தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் திறனை மேம்படுத்தினால் நமக்கு நிறைய மின்சாரம் மிச்சமாகும். ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், சர்வதேசத் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சுமார் 30 சதவிகித மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இந்த இயங்திரங்களைச் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தினால் கூடுதலாகச் செலவழிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

இந்தியாவின் வீடுகளில் உள்ள மின்னணுச் சாதனங்களைப் புனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்த ஆய்வின் முடிவில் நாம் இப்போது பயன்படுத்தும் திறன் குறைந்த சாதனங்களை மாற்றிக் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் திறன்மிக்கச் சாதனங்களைப் பயன்படுத்தினால் சுமார் 1,00,000 MW மின்சாரம் சேமிக்கப்படும் என்று தெரியவந்தது. இதை அரசின் Bureau of energy efficiency என்ற நிறுவனம் சொல்கிறது.

இந்தியாவின் AT&C (Aggregate Technical & Commercial loss) இழப்பு என்பது 32 சதவீதம். அதாவது மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் இடத்திற்குக் கொண்டுசெல்லும் போதும் அதை விநியோகிக்கும் போதும் ஏற்படும் இழப்புகளும் மின்சாரத் திருட்டு ஏற்படுத்தும் இழப்பையும் சேர்த்து இந்த இழப்பு கணக்கிடப்படுகிறது. இதையும் குறைக்க திறன் மிகுந்த மின் சாதனங்களை உபயோகப்படுத்துவதன் மூலம் உற்பத்தி ஆகும் மின்சாரம் முழுவதையும் நம் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்குமே பயன்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அப்புறம் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பழுது நீக்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் மூலம் அவற்றிலிருந்து மிக மிகக் குறைந்த செலவில் முழு அளவிலான மின்சாரத்தைப் பெறலாம் (யூனிட் 60 பைசா அளவில்).

இன்னுமொரு மிக முக்கியமாக சரிசெய்யப்பட வேண்டிய பிரச்சினை அரசியல் வாதிகள் திருடும் மின்சாரம், மற்றும் அதிகாரிகள் துணையுடன் திருடப்படும் மின்சாரத்தை– திருட்டு மின்சாரத்தை முழுவதும் நிறுத்துதல்.

ஊழலில் ஊறித் திளைப்பதற்கு பதில் ஆக்கபூர்வமான நடைமுறைகளை எல்லாம் மேற்கொண்டாலே நம் மாநிலத்தின் மின்பற்றாக்குறையை முழுதும் நீக்கி மிகுமின்சார மாநிலமாக மாற்றலாம். ஒரே விஷயம், ஆட்சிக்கட்டிலில் உள்ளவர்கள் மனம் வைக்க வேண்டியது தான். தமிழகத்தின் சாபக்கேடு அதற்கு இடம் கொடுக்குமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். அது வரை கற்காலம் எப்படி இருந்திருக்கும் என்று அனுபவபூர்வமாக வாழ்ந்தும், வாழ்க்கையை ரசித்துக்கொண்டும் (!!) இருங்கள்.

முற்றும்.

3 Replies to “இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]”

  1. https://www.dinamalar.com/News_Detail.asp?Id=573527 – தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மின் உற்பத்தி திட்டமிட்டே குறைக்கப்பட்டது என ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அது திமுக ஆட்சியில் என குற்றம் சாட்டுகிறார்.ஆக மொத்தம் திராவிட ஆட்சியாளர்களால் தமிழக மக்களுக்கு தான் கேடு.இது அவர்கள் புரிந்து கொண்டால் மிகவும் நல்லது.

  2. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்ட்ரல் பவர் கிரிட் மூலம் தமிழகத்துக்கு மின்சாரம் அளிக்க மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், வேண்டுமென்றே தூங்கிக்கொண்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் மீது , தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சோற்றால் அடித்த திமுக பிண்டங்கள் அமைச்சரவையில் இருந்து சோனியாவுக்கு கால் கழுவி வாழ்கின்றன. திமுகவின் கையாலாகாத்தனமும், காங்கிரசின் ஓரவஞ்சனையும் தான் தமிழகத்தை பேரிருளில் தள்ளி உள்ளன. மக்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு உள்ளனர். இனி காங்கிரசுக்கு எள்ளுதான். டெபாசிட் கூட எங்கும் கிடைக்க விட மாட்டோம்.

  3. எதோ பெரிய சாதனை செய்து விட்டது போல் கொட நாட்டில் போய் உட்கார்ந்து கொண்டு ஊரில் உள்ள ஒரு பத்திரிக்கை விடாமல் நூறு நாள் சாதனை என்று ஒரு மாதம் முழுப் பக்க விளம்பரங்கள்!
    நினைத்தால் .. துக்ளக் பெரிய அறிவாளி என்று எண்ணத் தோன்றுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *