விவேகானந்தர் 150-வது பிறந்த ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, திருப்பூர் அறம் அறக்கட்டளை, 150 ஏழை தலித் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வு பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. தில்லியின் புகழ்பெற்ற சங்கல்ப் ஐ.ஏ.எஸ்.ஃபோரம் அமைப்புடன், அதன் தமிழக வழியொற்றியான சுவாமி விவேகானந்தா ஐ.ஏ.எஸ் அகாடமி உடன் இணைந்து இந்த பயிற்சி வழங்கப் பட இருக்கிறது.
இந்தப் பயிற்சியின் துவக்க விழா டிசம்பர்-6 (வியாழன்) காலை 10.30 மணிக்கு திருப்பூர் பார்க் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. போதிசத்வ அம்பேத்கர் பரி நிர்வாணம் அடைந்த இந்த மகத்தான டிசம்பர் 6 ஆம் நாளான இன்று இந்த செயலை துவக்குவதில் திருப்பூர் அறம் அறக்கட்டளை பெருமை கொள்கிறது. அறிவையும், ஞானத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் அணையா விளக்காக கொடுப்பது சுவாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் இருவரது நினைவையும் போற்றுவதாக இருக்கும் என்று அறம் அறக்கட்டளை கருதுகிறது.
பாரதத் தாயின் சேவைக்கு இளைஞர்களே வருக! ஆதரவு தருக! அனைவரும் நம் சகோதரர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் படி பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அன்பையும், பிராத்தனைகளையும், ஆசிகளையும் கோரி நிற்கிறது திருப்பூர் அறம் அறக்கட்டளை .
“அறத்தின் வடிவமாக நாம் ஸ்ரீராமனை வழி பட்டு வருகிறோம். அறத்தின் வடிவமே ஸ்ரீராமன் என அறுதியிட்டு கூறுகிறார் ஆதிகவி வான்மீகி. அந்த மலர்ந்து வந்த அற பாரம்பரியத்தின் வடிவமாகவே நான் சுவாமி விவேகானந்தரையும், பாபா சாகேப் டாக்டர். பீம்ராவ் அம்பேத்கரையும் காண்கிறேன். அம்பேத்கர் பரி நிர்வாணம் அடைந்த பிறகும் இன்று வரை நாள் தோறும் பலருக்கும் புதிய திறப்புகளை அவருடைய சிந்தனையும், வாழ்க்கை முறையும் கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
போதிசத்வரின் முதிர்ந்த ஞானத்தை தன் வழியாக ஏற்றுக்கொண்ட அம்மகானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாகவும் அறம் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாணவர்கள் அரசு ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் நாளே எங்கள் வாழ்வின் மிகச்சிறப்பான நாளாக இருக்கும் என்பதை நாங்கள் உளப்பூர்வமாக உணர்கிறோம்”
என்று கூறுகிறார்கள் இதன் அமைப்பாளர்களும், தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களுமான திரு வீர.ராஜமாணிக்கமும், திரு.சேக்கிழானும்.
இந்த நிகழ்ச்சியும் பயிற்சித் திட்டமும் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்.
திருப்பூரில் 150 தலித் மாணவர்களுக்கு இந்திய குடிமைப்பணியியல் பணித்தேர்வு எழுதுவதற்காக பயிற்சியளிக்கும் அறம் அறக்கட்டளையின் முயற்சி பாராட்டிற்குறியது. திறமை வாய்ந்த அனுபவமிகுந்த ஆசிரியர்களால் இது போன்ற பயிற்சிகள் நடத்தப்படுமேயானால் அவற்றால் மிகுந்தப்பயன் விளையும் என்பது அடியேனின் அனுபவம். தலித் மாணவர்களுக்கும் இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் அரசே தனித்தனியாக இது போன்ற மையங்களை பயிற்சிகளை நடத்துகின்றன. ஆனால் அவற்றின் தரமும் பயனும் மிகக்குறைவே. அவற்றிற்கு மாறாக சிறந்த பயிற்சியை இந்த மையம் வழங்கவேண்டும்.
அன்புடன்
சிவஸ்ரீ.