எழுமின் விழிமின் – 33

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

***

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

கஷ்டங்களைத் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும்:

…… ஒரு தடவை நான் காசியில் இருந்தபோது அவ்வூரின் ஒரு பகுதியின் வழியே போய்க் கொண்டிருந்தேன்.  அங்கே ஒரு பக்கத்தில் பெரியதொரு குளமும் மறுபுறத்தில் உயரமான சுவரும் காணப்பட்டது. இடைவழியில் தரையில் ஏராளமான குரங்குகள் இருந்தன.  காசியிலுள்ள பருத்த உடலுள்ள மந்திகள் அவை. சில சமயம் அவை வெறியுடனிருக்கும்.

Vivekananda and Monkies

அந்தத் தெருவழியே கடந்த செல்ல என்னை அநுமதிக்கக் கூடாது என்று அவற்றின் மனதில் பட்டு விட்டது போலும்.  ஆகவே நான் அவ்வழியாகப் போன போது அவை கூச்சலிட்டு, கீச்சிட்டுக் கத்திக் கொண்டே என் கால்களைப் பிடித்துக் கொண்டன.

அவை நெருங்கிவர ஆரம்பித்ததும் நான் ஓடத் துவங்கினேன்.  நான் எனது வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க அவையும் வேகமாக ஓடி நெருங்கி வந்து கடிக்க ஆரம்பித்தன.  தப்புவது அசாத்தியம் என்றே தோன்றிற்று.

அந்தக் கணத்திலேயே அறிமுகமில்லாத யாரோ ஒரு புதிய மனிதர் ஒருவரைச் சந்தித்தேன்.  அவர் “அந்த மிருகங்களை எதிர்த்து நில்” என்று என்னிடம் உரக்கக் கூவினார்.

நான் திரும்பிப் பார்த்து அந்தக் குரங்குகளை எதிர்த்து நின்றேன்.  அவை பின்வாங்கிவிட்டு இறுதியாக ஓடியே விட்டன.

வாழ்க்கை முழுவதற்கும் அது ஒரு படிப்பினை.  கஷ்டங்களைக் கண்டு நாம் எதிர்த்து நிற்கும்போது, குரங்குகளைப் போல அவை பின்வாங்கி ஓடுகின்றன.

***

இரண்டு விதமான தைரியங்கள்:

தைரியங்களில் இரண்டு வகை உண்டு.  ஒன்று  பீரங்கி முனை வாயில் அஞ்சாது எதிர்த்து நிற்பது.  மற்றொன்று ஆத்மீக உறுதிப்பாடு, துணிவு.

பாரதத்தின் மீது படையெடுத்து வந்த ஒரு சக்கரவர்த்திக்கு அவனது ஆசிரியர், நாட்டிலுள்ள சில ரிஷிகளைச் சந்தித்து வருமாறு கூறியிருந்தார்.  நெடுநேரம் தேடிய பிறகு, மிக வயது முதிர்ந்த ஒரு மனிதர் ஒரு பாறையின் மீது உட்கார்ந்திருப்பதைச் சக்கரவர்த்தி கண்டார்.

Sadhu

சிறிது நேரம் சக்கரவர்த்தி அவருடன் உரையாடிய பின்னர் அம்மனிதரது ஞானத்தைக் கண்டு அவரிடம் பெருமதிப்புக் கொண்டார்.  தம்முடன் தம் நாட்டுக்கு வந்து விடுமாறு அந்த ரிஷியை அழைத்தார்.  “நான் வர மாட்டேன்.  எனது இந்தக் காட்டிலே நான் முழுத் திருப்தியுடன் தான் இருக்கிறேன்” என்று அந்த ரிஷி பதிலளித்துவிட்டார்.

அதற்கு மன்னன் “உங்களுக்கு நான் பணம், பதவி, செல்வம் எல்லாம் தருகிறேன்.  நான் உலகின் சக்கரவர்த்தி” என்றான்.  “வேண்டாம்; எனக்கு அவற்றைப்பற்றி அக்கறையில்லை” என்று ரிஷி பதிலளித்தார்.

அதற்குச் சக்கரவர்த்தி ” நீர் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்” என்றான்.  ரிஷி சிரித்தார்.

“சக்கரவர்த்தியே, நீ சொன்ன வார்த்தைகளில் எல்லாம் அதிக முட்டாள்தனமான சொல்லை இப்பொழுது தான் கூறினாய்.  உன்னால் என்னைக் கொல்ல முடியாது.  என்னைச் சூரியன் உலர்த்த மாட்டான்;  நெருப்பு எரிக்காது; வாள் வெட்டாது; ஏனெனில் நான் பிறப்பு அற்றவன்;  எப்பொழுதும் வாழுகிறவன், சர்வ சக்தி வாய்ந்தவன்! எங்கும் நிறைந்த ஆத்மா நான்” என்று மறுமொழி கூறினார்.

இது தான் ஆத்மீக ரீதியான தைரியம் ஆகும்.  மற்றது சிங்கம் அல்லது புலியின் தைரியம்….

***

துணிவும் தாராள மனப்பான்மையும் பூண்டிரு:

தென்கடல் தீவுகளில் ஏற்பட்ட ஒரு புயலில் ஒருமுறை சில கப்பல்கள் சிக்கிக்கொண்ட கதையைப் படித்தேன், ‘இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்’ பத்திரிகையில் அந்தப் படம் வெளியாகியிருந்தது.

Ships sinking

ஆங்கில நாட்டைச் சார்ந்த ஒரு கப்பல் மட்டும் புயலைச் சமாளித்து விட்டது.  மற்றவையெல்லாம் உடைந்துவிட்டன.  மூழ்கப் போகிற மனிதர்கள் தமது கப்பலின் மெல் தட்டில் நின்று கொண்டு புயலுக்கு மத்தியில் கப்பலை நடத்திச் செல்லுகிற மக்களுக்கு உற்சாகமூட்டி வந்த காட்சியை அப்படம் காட்டிற்று.

அதுபோல நீங்களும் துணிவும் தாராள மனப்பான்மையும் கொள்ளுங்கள்.  நீங்கள் இருக்கிற இடத்துக்குப் பிறரைக் கீழே இழுக்காதீர்கள்…

***

விருப்பத்துடன் சகித்துக் கொள்ளுங்கள்:

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம்.  உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான்.  கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை.

ஏன்? உலகில் தீமை எதுவும் இல்லை என்பதனால் அல்ல.  அந்தச் சுமையை அம்மனிதன் சுய விருப்பத்துடன், தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பதால், அவன் யாரையும் கண்டிப்பதோ, குற்றம் சாட்டுவதோ இல்லை.  யார் பிறரைக் காப்பாற்ற வருகிறானோ – காப்பாற்றப்படுகிற மனிதனல்ல,  காக்கிறவன் –  அவன் தன் பாதை வழியே பெருமகிழ்வோடு போக வேண்டும்.

எதையும் நாடிச் செல்லாதே.  எதையும் தவிர்க்காதே, வருவதை ஏற்றுக்கொள்.  எதனாலும் பாதிக்கப்படாமலிருப்பது ஒரு பெரும் சுதந்திரமாகும்.  வெறுமனே சகித்துக் கொண்டிராதே.  பற்றற்றிரு.

இன்பம் வரும்…. நல்லது தான்; யார் தடுக்கிறார்கள்? துன்பம் வரும்; அதனையும் வரவேற்போம்.  எருதின் கதையை நினைவிற் கொள்ளுங்கள்.

Indian Gaur

ஓர் எருதினுடைய கொம்பின் மீது ஒரு கொசுவானது நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தது.  சிறிது நேரம் கழித்து அந்தக் கொசுவுக்கு மனசாட்சி உறுத்தவே அது “ஐயா எருதாரே! நான் நெடு நேரமாக இங்கே உட்கார்ந்திருக்கிறேன்.  ஒருக்கால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும், வருந்துகிறேன்.  போய் விடுகிறேன்” என்று கூறிற்று.

ஆனால் அந்த எருது “ஓ, அப்படியொன்றும் இல்லை.  உங்கள் குடும்ப சகிதமாகவே வந்து என் கொம்பின்மேல் தங்கிப் போங்களேன்.  நீங்கள் என்னை என்ன செய்துவிட முடியும்?” என்று பதிலளித்தது.

துன்பம் வரும்போது அதனிடம் நாமும் ஏன் அவ்வாறு கூறக் கூடாது?….

***

தவறுகளும் தோல்விகளும் தேவதைகளுக்குத் தான் ஏற்படாது:

சிந்தனை தான் நம்மைத் தூண்டி வேலைசெய்ய வைக்கிற உந்து சக்தி.  மனத்தை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு.  அவற்றைப் பற்றி நாள்தோறும்.  கேட்டுக்கொண்டிரு. மாதாமாதம் அவற்றைப் பற்றிச் சிந்தனை செய்.

தோல்விகளை லட்சியம் பண்ணாதே.  அவை மிக சகஜமானவை, தோல்விகள் வாழ்க்கையை அழகு பண்ணுகின்றன.  அவையின்றி வாழ்வு எப்படியிருக்கும்?  போராட்டங்கள் இல்லையென்றால் வாழ்க்கையே வாழத் தகுதியற்றதாக ஆகிவிடும்.

வாழ்க்கையாகிற கவிதை எங்கேயிருக்கும்?  போராட்டங்களை, தவறுதல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே.  பசு பொய் சொன்னதாக நான் கேள்விப்பட்டதில்லை.  ஆனால் அது பசு தானே, மனிதனல்லவே! ஆதலால் இந்த தோல்விகளைப்பற்றி, சறுக்கி வழுக்கி வீழ்வது பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாதே.

ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் லட்சியத்தைப் பிடித்துக்கொள்.  ஆயிரம் தடவை தோற்றுப் போனாலும் மீண்டும் ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்…..

Devasura

பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை.  இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு.  இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது.

நமது தவறுகளுக்கு இங்கே இடமுண்டு.  முன்னேறிச் சென்று கொண்டே இரு.  சரியில்லாத ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தால் திரும்பப் பார்த்துக் கொண்டே இராதே.  அதே தவறுகளை இதற்கு முன்னர் நீ செய்திராவிட்டால், நீ  இன்றுள்ள நிலையில் இருப்பாய் என்று நம்புகிறாயா?  ஆகவே உனது தவறுகளக்கு நன்றி செலுத்து!

தேவதைகளுக்குத் தான் தவறு என்றால் என்னவென்று தெரியாது.  அதிர்ஷ்டங்கள் வாழ்க! இன்பங்கள் வாழ்க! உனது பங்குக்கு எது வந்தாலும் கவலைப்படாதே.  லட்சியத்தில் விடாப்பிடியாக இரு.  முன்னேறிச்செல்.  சிறுதவறுகளையும், அற்ப விஷயங்களையும் நினைத்துத் திரும்பிப் பாராதே.

இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும்.  அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்.

***

உங்களது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள்:

இமாலயப் பகுதிகளில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.  எனக்கு முன்னே மிக நீண்ட பாதை கிடந்தது.  ஏழைத் துறவிகளான எங்களைச் சுமந்து செல்ல எவரையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  ஆகவே கால்நடையாகவே முழுவதும் செல்ல நேரிட்டது.

எங்களுடன் கூடக் கிழவர் ஒருவர் இருந்தார்.  நூற்றுக் கணக்கான மைல்களுக்கு வழி முழுவதும் ஒரே ஏற்ற இறக்கமாக உள்ளது.  தமக்கு முன்னே உள்ள நீள் வழியைக் கண்டதும் அந்தக் கிழவரான துறவி, “ஓ! ஐயனே! இவ்வளவு தூரத்தை எப்படிக் கடந்து செல்வது? இனிமேல் என்னால் நடக்கவே முடியாது.  எனது மார்பு வெடித்தே விடும்” என்றார்.

“உங்கள் காலுக்குக் கீழே பாருங்கள்”  என்று கூறினேன்.  அவரும் பார்த்தார்.  “உங்களுடைய கால்களின் கீழே இருக்கிற பாதை நீங்களே கடந்து வந்த பாதையாகும்.  உங்கள் முன்னே நீங்கள் காணுகின்ற பாதையும் இதைப் போன்றதே தான்.  அதுவும் விரைவில் உங்களது காலின் கீழ் வந்துவிடும்” என்றேன்.

Yatra

மிகப் பெரிய உயர்ந்த விஷயங்களெல்லாம் உங்கள் காலின் கீழ் உள்ளன.  ஏனெனில் நீங்கள் தெய்வீக நட்சத்திரங்கள்.  இவையெல்லாம் உங்கள் காலின் கீழ் கிடக்கின்றன.  நீங்கள் விரும்பினால் கைப்பிடி நிறைய நட்சத்திரங்களை எடுத்து விழுங்கிவிட முடியும்.  உங்களது உண்மை இயல்பு அப்படிப்பட்டதாகும்.

வலிவுடனிருங்கள்.  எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டுவிட்டு அப்பாற் செல்லுங்கள். விடுதலை பெறுங்கள்.

***

ஆரவாரமில்லாத உறுதியான வேலை:

….. பெரிய பதவியில் அமர்ந்திருக்கிற ஒவ்வொருவனும் பெரியவனாக இருப்பான்.  மேடையின் மீது பிரமாதமான வெளிச்சமுள்ள விளக்குகள் ஒளி வீசுகையில் கோழையும் கூடத் துணிவுள்ளவனாக ஆகி விடுவான்.  உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது!  யாருக்குத் தான் நெஞ்சு துடிக்காது?  தனது முழு சக்தியையும் காட்டி வேலை செய்கிற வரையில் யாருடைய நாடி தான் படபடவென வேகமாகத் துடிக்காது?

ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் சிறு புழு தான் உண்மையில் மிக உயர்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது.  அது மௌனமாகத் தன் கடமையைச் செய்கிறது.  உறுதியாகக் கணத்துக்குக் கணம் மணிக்கு மணி அது தன் வேலையைச் செய்துகொண்டே போகிறது.

Ram and Squirrel

……ஒரு அணில் இருந்ததாம்.  அது மணலில் புரண்டுவிட்டு முன்னும் பின்னும் ஓடிப் பாலத்தின் மேல் சென்று தன் மீதுள்ள மணலை உதறிற்றாம்.  இவ்வாறாகச் சிறு அளவில் ராமருடைய அணியில் மணலைப் போட்டு அந்த அணில் வேலை செய்ததாம்.

குரங்குகள் சிரித்தன.  ஏனெனில் அவை முழு மலைகளையும், முழுக் காடுகளையும் பெரிய மணல் மூட்டைகளையும் அணைக்காகச் சுமந்து வந்தன.  ஆதலால் மணலில் புரண்டுவிட்டுத் தன் உடலைச் சிலிர்த்து உதறிய அச்சிறு அணிலைக் கண்டு அவை சிரித்தன.

ராமர் அது கண்டு “இந்தச் சிறு அணில் வாழ்க; தனது முழுச் சக்தியுடன் தன்னுடைய வேலையை அது செய்து வருகிறது.  ஆகவே உங்களிடையே மிகப் பெரியவரைப் போல, அந்த அளவுக்கு இதுவும் உயர்ந்ததாகும்” என்று கூறினார்.

பின்னர் அந்த அணிலின் முதுகை மெதுவாக வருடினார்.  ராமரது விரல்பட்ட இடத்தில் கோடு உண்டாகி இன்றும் அணிலின் முதுகில் நீளமாக அது காணப்படுகிறது….

(தொடரும்)

 அடுத்த பகுதி >>

 

One Reply to “எழுமின் விழிமின் – 33”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *