வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்

காதலிக்க மறுத்ததால் அமில வீச்சுக்கு உள்ளான சகோதரி வினோதினி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பாவியான அந்த சகோதரியின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

காரைக்காலை சேர்ந்த இளம் மென்பொறியாளரான வினோதினி மீது இவரின் கல்லூரி சீனியர் சுரேஷ் என்பவர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மீது அடர் அமிலத்தை ஊற்றி இருக்கிறார். இதனால் அப்பெண்ணின் பார்வை பாதிப்படைந்து அதற்குரிய சிகிச்சை பெற்று வந்தார். உடலில் அமில வீச்சு மிக ஆழமாக சென்றதால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களால் மிகவும் கவனக்குறைவாக கையாளப்பட்ட வினோதினி அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை திருப்தி அளிக்காமல் தனியார் மருத்துவ மனையில் சேர்த்து மருத்துவம் பார்க்க தள்ளப்பட்டார்.

அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் முதலில் வினோதினிக்கு மயக்க மருந்து கொடுக்காமல் தீக்காயங்கள் தொடர்பான சிகிச்சையை மேற் கொண்டிருக்கிறார்கள் . வலியின் வேதனை தாங்க முடியாத அந்த பெண் அது தொடர்பாக மருத்துவர்களிடம் முறையிட்ட போது உங்களுக்கு வசதிப்பட வில்லையெனில் தனியார் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என வற்புறுத்தப்பட்டார். இதை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு மிக அதிக பணம் தேவைப்பட்டதால் பொது மக்களின் உதவி நாடப்பட்டது அங்கும் இது வரை 20 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது . ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவ மனையிலும் சிகிச்சை திருப்திகரமாக இல்லை என அவரின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவிக்கிறார்கள். ஆனால் தனியார் மருத்துவ மனை அதன் பெயர் கூட வெளியில் தெரியாத அளவிற்கு விபரமாக செய்தியாளர்களையும், செய்தி தாள்களையும் கவனித்திருக்கிறது.

vinodini-acid-attack-victim

இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியவில்லை . இந்த மரணம் சமூகத்தை நோக்கி ,அதன் அறத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறது. அதற்கு பதில் கண்டுபிடிப்பதை தவிர்ப்பதற்காக வேறு சமாதானங்களை மனம் நாடுகிறது. வினோதினிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்து 20 நாட்களுக்கு மேலாகிறது. நேற்று வரை ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் பொது மக்களும் விஸ்வரூபத்தின் நிழலில் இருந்து வெளிவரவே இல்லை. பொது மனசாட்சியின் அடுக்குகளில் அடியில் ஒளிந்திருந்த இந்த நிகழ்வு, அல்லது பார்க்க மறந்த இந்த நிகழ்வு இனி ஒரு வார்த்திற்காவது இது நீடிக்கும் . அல்லது அடுத்த நடிகையின் நாய் பிரசவிக்கும் வரையோ, தங்களின் திரைக்கதாநாயகனின் புதுப்படமோ, டோனி அடிக்கும் சென்சூரியோ வரும் வரை இது நீடிக்கும் . அதற்குள் சமூகத்தின் மனசாட்சிக்குள் ஏதேனும் மாற்றம் வந்தால் உண்டு இல்லாவிட்டால் இது இன்னொமொரு சம்பவமாக மட்டுமே இருக்கும். கும்பகோணம் தீவிபத்து எப்படி மறந்து போனதோ, ஸ்ரீரங்கம் தீவிபத்து போலவோ, சரிகா ஷா மரணம், நாவரசு கொலை போன்ற இதுவும் இன்னொரு சம்பவம் மட்டுமாகவே நீடிக்கும்.

ஊடகங்கள், மருத்துவர்கள், பொது மக்கள், குறிப்பாக ஆண்கள் ,அறிவு ஜீவிகள், அரசியல் கட்சிகள் , காவல் துறை அதிகாரிகள் , அரசு அதிகாரிகள் ,ஆசிரியர்கள் இவர்களின் அறத்தை பற்றியும், இது தொடர்பாக சமூகம் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் பற்றியும் ஆழமான மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம். அது மட்டுமின்றி கலை இலக்கிய வடிவங்கள் ,கலைஞர்கள் இவர்களின் அற மதீப்பிடும் மறு பரிசீலனைக்கு உட்பட வேண்டிய நேரமிது. ஒரு சமூகத்தின் மன நிலையில் ஏதேனும் மாற்றம் வர வேண்டுமானால் யாராவது ஒருவர் கோரமாக சாக வேண்டும் அல்லது பெரும் விபத்து நடக்க வேண்டும் என்பது என்ன விதமான அடிப்படை?. விபத்துகளில் இருந்தோ, தனிப்பட்ட குற்றங்களில் இருந்தே தொடர்ச்சியாக பாடம் கற்றுக்கொள்ள மறுத்து வருகிற பழங்குடி சமூகமாக தேங்கிப்போய் விட்டது போல் இருக்கிறது.

சமூகம் பெண்கள் பற்றியும், காதல், பாலியல் பற்றி கொண்டிருக்க கூடிய மதிப்பீடுகள் தீவிரமாக மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது . பெண்கள் வெறும் போகப் பொருளாகவும் , ஒரு அடிமைப் பண்டமாகவும், அந்தஸ்தின் பாரத்தை பெண்ணின் மீது ஏற்றி வைத்தும் பார்க்கும் பார்வை மாற வேண்டும். சம கால ஆண்களின் பாலியல் சிந்தனை வறட்சி கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கிறது. நம் தினசரிகளையோ, குமுதம் விகடன் உள்ளிட்ட வெகுஜன பத்திரிக்கைகளையோ , சமகால திரைப்படங்களையோ பார்க்கும் வேறு ஒரு கால கட்ட மனிதன் ”இந்த மனிதர்கள் எல்லாம் மிகுந்த பாலியல் வறட்சி கொண்டும், பெண்கள் மீதும் பாலுறவு மீதும் தீராத ஆசையோடு இருப்பவர்கள் என்ற நிச்சயமான முடிவுக்கு வந்து விடுவான்.

அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக்கொண்டு பெண்களை, பெண்மையை ஒரு விற்பனைக்குரிய பொருளாக மாற்றி வெற்றிகரமாக அதை பெண்களையும் நம்ப செய்துள்ளனர். இளம் பெண்களும், பேரிளம் பெண்களும் தங்களை ஒரு விற்பனை பண்டம் போலவே செயற்கையாக அலங்கரித்துக்கொண்டும், மிக செயற்கையான நடை, உடை , நளினங்களாலும் தங்களை காட்சிப்படுத்தி முன்னகர்கிறார்கள். இந்த சமூகத்தின் ஆகப்பெரிய நோயாக பாலியல் தேவை தான் எழுந்து நிற்பதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அடுத்து காதல் பற்றிய பிதற்றல்களும், அதன் புனிதத்தன்மை ,இயல்பு பற்றிய கோட்பாடுகள் அதை ஒரு பாலைவன மதம் அளவுக்கு தீவிரமான அடிப்படைவாத சித்தாந்தங்களை முன்னிறுத்துகிறது .இதில் பெரும் பங்கு தமிழ் திரையுலகிற்கு தான் அவர்களின் திரைப்பட வர்த்தகத்திற்காக காதல் என்ற கச்சாப் பொருளை மிக அதிகமாக ஊதி பெரிதாக்கி வியாபாரம் செய்து விட்டார்கள். அதன் பின் விளைவுகளாகவே இதை பார்க்கிறேன். காதல், பெண்கள் , பாலியல் உறவுகள் பற்றிய பூடகத் தனமான சித்தரிப்புகளும் ,கோட்பாடுகளும் சமூகத்தின் இரு பாலருக்கிடையே மிகப்பெரிய இடைவெளியை தோற்றுவித்து விட்டன. அதன் விளைவாக ஏற்பட்ட சமூக பிரச்சினைகள் ஏராளம். அடிப்படை சிந்தனை என்ற கூறே அறவே அற்றுப்போன ஒரு சமூகமாக இப்போதைய தமிழ் சமூகம் ஒரு மந்தைகளைப்போல இருக்கிறது.

அறம் என்பதை என் ஆசான் ஜெயமோகன் இப்படி வரையறுக்கிறார் “அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.”

goverment_hospital_in_india

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டுள்ள மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள் , சமூகம் இவர்களுக்கு இந்த அளவு கோலை பொறுத்தி பார்த்தால் யாரும் அதன் தரத்தில் இல்லை. அப்படி யெனில் இந்த சமூகத்தின் அறம் என்பது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவே கொள்ள வேண்டும், அரசிடம் போதுமான அளவு சம்பளம் பெறும் ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை கீழ்த்தரமாக நடத்த தூண்டுவது எது? ஏன்? இது பற்றிய குற்ற உணர்வே அன்றி மீண்டும் மீண்டும் இது போன்ற செயல்களில் அவர்களை ஈடுபட தூண்டுவது எது? முறையான, தரமான சிகிச்சையை நீங்கள் தனியார் மருத்துவமனையில் கோரி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு அவர் யார்? பின் ஏன் அவர் அரசு பணத்தை சம்பளமாக பெற வேண்டும்.? ஏழை மக்களிடம் தனியாக லஞ்சமும் பெற்றுக்கொண்டு ஒழுங்காக அரசுப்பணியும் பார்க்காமல், விதிகளுக்கு புறம்பாக தனியாகவும் கிளினிக் வைத்து சம்பாரித்து அவர் என்ன செய்ய போகிறார்.? இப்படி சொல்வதற்கு அவருக்கு வெக்கமாக இல்லை? தான் படித்த படிப்பிற்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை இது போன்ற மனிதர்கள் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் கீழிறக்குகிறார்கள். முறையாக தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சையை அளிக்க தனியார் மருத்துவ மனையும் முனைப்பு காட்ட வில்லை. அவர்களும் பணம் பிடுங்குவதில் தான் குறியாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் மிக கேவலமான மருத்துவ அறத்தையே அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த இழி நிலையை, நோயை படம் பிடித்து காட்ட வேண்டிய ஊடகங்களும் மருத்துவரிடமும், மருத்துவ மனைகளிடமும் பணம் பெற்று கொண்டு இது போன்ற செய்திகளை பூடகமாக சொல்லி சோரம் போகிறார்கள்.

மேலும் ஊடகங்களில் தேவையற்ற கேளிக்கை செய்திகளுக்கும்,துணுக்கு தோரணங்களுக்கும் ,ஆபாச கிசு கிசு பாணி செய்திகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் 10 ல் 1 பங்காவது அறிவார்ந்த சிந்தனைகளுக்கு ஒதுக்கலாம் . மக்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் வெறும் குற்ற தண்டனைச் சட்டத்தை மட்டும் தீவிரமாக்கினால் அனைத்தும் சரியாகி விடும் என்பது ஒரு விதமான மாய வாதக்கற்பனை. நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளை காலம் தாழ்த்தாமல் விசாரித்து உரிய தண்டனை வழங்குவதும் மிக முக்கியமான ஒரு செய்தியாக சமூகத்தில் பதிய உதவும். காவல் துறை அதிகாரிகள் குற்றவாளியிடமே பணத்தை பெற்றுக்கொண்டு குறைவான தண்டனை வரும் வகையில் குற்ற அறிக்கையை தாக்கல் செய்வது, வழக்கை திசை திருப்புவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடாமல் இருத்தலும் அவசியம்.
காட்சி ஊடகங்களில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் கலாச்சார பயங்கரவாதம் என்பதைப் போன்ற மோசமானது எதுவுமே இல்லை என்று தான் சொல்லலாம். காதல், கற்பு, கற்பழிப்பு, பாலியல் சீண்டல்கள், கேலி இவைகளைப்பற்றிய தமிழ் சினிமா கதாசிரியர்களின் புரிதல்கள் கற்கால மனிதரின் சிந்தனைகளுக்கும் கீழானதாக இருப்பதை உணரலாம். இவர்களின் மோசமான புரிதல்களை சந்தைப் படுத்தி, அரை வேக்காடுத்தனத்தை, பச்சை அயோக்கியத்த னத்தை வீரிய விஷ விதையாக்கி சமூகத்தில் நட்டு விட்டார்கள். அதன் பாதிப்பை அனைவரும் சேர்ந்து அறுவடை செய்ய தயாராகிறோம். பள்ளி , கல்லூரிகளில் உள்ள நம் பாடத்திடடங்களும், கல்வியாளர்களும் நம் சமூகத்திற்கு ஆண், பெண் உறவைப்பற்றியும், பெண்களைப்பற்றியும், கலாச்சார மதிப்பீடுகளைப்பற்றியும் மேம்பட்ட கருத்துருவாக்கங்களை அளிக்கலாம். ஆனால் நம் கல்விக்கூடங்கள் நாகரீக மனிதனை உருவாக்குவதற்கு பதிலாக நவ நாகரீக இயந்திரத்தை தயாரித்து துப்புகிறது. இவை எல்லாம் அடிப்படையில் இருந்து சீர் செய்யப்பட வேண்டும்.

அறம் என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்துக் கொள்வதற்காக உருவாக்கிக்கொண்டுள்ள நெறிகளும் நம்பிக்கைகளும்தான். சில அறங்கள் மானுடகுலம் ஒட்டுமொத்தமாக உருவாக்கிக் கொண்டிருப்பவை. மனிதர்கள் மனிதர்களை தின்னக்கூடாது என்பதுதான் அப்படி உருவான முதல் மானுட அறமாக இருக்கவேண்டும். அதில் இருந்து தொடங்கி பல்வேறு அடிப்படை அறங்கள் உலகமெங்கும் நாகரீகத்தின் அடையாளங்களாக உள்ளன. மானுடநீதி என்பது அந்த அறங்களின் அடிப்படையில் அமைந்ததே.

அந்த அறங்களை மானுட சமூகம் மேலும் மேலும் விரிவாக்கிக்கொண்டே செல்கிறது. அனுபவங்களின் வழியாக அறத்தை வளர்த்துக்கொள்வதைத்தான் நாம் மானுட நாகரீகத்தின் வளர்ச்சி என்று சொல்கிறோம். நாகரீகம் அறம் நீதியுணர்ச்சி ஆகியவை வேறு வேறல்ல. ஆனால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையை நாம் சரி செய்தால் தான் முன்னகர முடியும்.

மகத்தான மனித உயிர் ஒன்று போன பிறகாவது அது தொடர்பான விமர்சனத்திற்கு இவர்கள் தயாராக வேண்டும். நம் சமூகம் இது போன்ற கீழானவர்களை புறந்தள்ளி ஒதுக்க வேண்டும். சமூகத்தில் ஒருவனின் அந்தஸ்து என்பது பணம், நுகர் பொருட்களின் அடிப்படையில் அல்லாமல் அவனுடைய கலாச்சார மதிப்புகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். உயர்ந்த கலாச்சார மதிப்புகளை கொண்டவர்களையே இந்த சமூகம் முன் மாதிரியாக கொண்டு தங்களுக்கான விழுமியங்களை நிர்ணயித்து கொண்டு முன்னகர வேண்டும் என்று விரும்புகிறேன். மானுட குல வரலாறு என்பதே அறத்தின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பார் ஆசான் ஜெயமோகன். அதை நோக்கி நம் சமூகத்தை வழி நடத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வாருங்கள் ஒரு மகத்தான சமூகத்தை நம் சந்ததிகளுக்கு அளிப்போம்.

ண்டிற்கு 1500 பேர் மீது அமில வீச்சு நடக்கிறது என்கிறது விக்கி. அதில் குறிப்பாக 80 % வரை பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையாக அது இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான்,கம்போடியா, காஸா ஆகிய இடங்களில் அதிகப்படியான தாக்குதல்கள் பதிவாவதாக சொல்லப்படுகிறது. ஆப்கான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய உடை அணிய மறுப்பதாலும், மேற்கத்திய உடைகளை அணிபவர்களும் மீதும், பள்ளி, கல்லூரிகளில் சென்று படிக்கும் பெண்கள் மீதும் திராவகம் ஊற்றச்சொல்லி தாலீபான்கள் பஃத்வா விதித்தனர். அதை தொடர்ந்து உலக அளவில் மிக அதிகமான திராவக வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டது.

kashmir01சமீபத்தில் மலாலா என்ற பெண் மீது மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது. அதையும் இதன் ஒரு பகுதியாக கொள்ளலாம். இந்தியாவில் முதல் அமிலத்தாக்குதல் 1967 ஆம் ஆண்டு பதிவாகி இருக்கிறது. அமிலத்தாக்குதல் பெரும்பாலும் அதிக அடர் தன்மையுடைய, எளிதில் கிடைக்க கூடிய சல்பியூரிக், நைட்ரிக் ,ஹைட்ரோ குளோரிக் வகைகளைக்கொண்டு நடத்தப்படுகிறது. இது மிகவும் குறைந்த விலையிலேயே கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.தபு தப்சும் மற்றும் சோனாலி முகர்ஜி மீதான ஆசிட் வீச்சு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி.லோதா அவர்கள் சென்ற புதனன்று மாநிலங்களில் அமிலங்களின் கிடைக்கும் இருப்பு பற்றி சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்.

இது வரையிலான ஆசிட் வீச்சு என்பது நிலத்தகராறு, நீண்ட பகை , வரதட்சணை விவகாரம் மற்றும் காதல் விவகாரங்களுக்காக இந்தியாவில் பதிவாகின்றன. மதக்காரணங்களுக்காக மற்ற நாடுகளில் இது பயன் படுகிறது. ஆசிட் வயலன்ஸ் ட்ரஸ்ட் இண்டெர் நேஷனல் என்ற உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அமில வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், நம்பிக்கையையும் அளிக்க பெரும் முயற்சியை செலவிட்டு வருகிறது. தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் அமில வீச்சின் குற்ற எண்ணிக்கையை குறைக்க விழிப்புணர்வு ஏர்படுத்தும் மகத்தான பணியை செய்து வருகிறது.

இந்திய அளவில் ஷிரின் ஜிவாலே தலைமையிலான பலாஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இது போன்ற மகத்தான முயற்சிகளை மேற்கொள்கிறது 2010 ஆம் ஆண்டில் இதன் நிறுவனரும் அமிலத்தாக்குதலுக்கு உள்ளாகி பின் மீண்டு வந்து இந்த சேவையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் மருத்துவர் எஸ்.ஆர். விஜய லட்சுமி அவர்கள். இவரும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டு பலருக்கும் நம்பிக்கையும், ஊக்கமும்,ஆக்கமும் கொடுத்துக்கொண்டிருப்பவர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் பணி செய்து கொண்டிருந்தவர் இவர். இந்த முன்னோடிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். இது போன்ற குற்றங்களை களையும் மன நிலையை மக்களிடம் உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உறுதியேற்போம்.

மேலதிக விபரங்களுக்கு :

http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2012/07/christian-woman-acid-attacked-by-muslim-finds-new-life-in-houston.html
http://vladtepesblog.com/?p=17915
http://www.familysecuritymatters.org/publications/id.11535/pub_detail.asp
http://edition.cnn.com/2012/11/03/world/asia/pakistan-acid-attack
http://www.nytimes.com/2009/01/14/world/asia/14kandahar.html?pagewanted=all&_r=0

15 Replies to “வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்”

 1. காலத்தின் கோலத்தை விவரித்துக் காட்டும் இது போன்ற கட்டுரைகள் வருவது மிக அவசியம். “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. ராஜமாணிக்கம் அவர்களுக்கு நன்றி.

  “மேலும் ஊடகங்களில் தேவையற்ற கேளிக்கை செய்திகளுக்கும்,துணுக்கு தோரணங்களுக்கும் ,ஆபாச கிசு கிசு பாணி செய்திகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் 10 ல் 1 பங்காவது அறிவார்ந்த சிந்தனைகளுக்கு ஒதுக்கலாம் ….”

  இதைப் புரிந்துகொள்ள வேறெங்கும் போகவேண்டாம். நமது இணைய தளத்தில் பலவிதமான வகைகளில் வரும் (தேவையற்றதல்ல என்றாலும்) கட்டுரைகளுக்கு வாசகர்களிடமிருந்து வரும் மறுமொழிகளின் எண்ணிக்கைகளைப் பார்த்தாலே இது புரியும்.

 2. திரு.வீர.ராஜமாணிக்கம்,
  கட்டுரையின் தொடக்கத்தில், மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும்,
  அரசு மற்றும் தனியார் இரண்டையும் மொத்தமாக குறை கூறியிருக்கிறீர்கள்.
  நவீன மருத்துவத்தை அதன் ஆழத்தை அறியாமல், சாதக-பாதகங்களுடன்
  வெளிப்படும் ஒவ்வொரு மருத்துவ முறைகளையும், மருந்துகளையும், உணர்ச்சி
  வேகத்தில் அணுகுவதால் எந்த பயனும் ஏற்படாது.

  இந்தியாவில் நவீன மருத்துவத்தை அணுகும் வழியே பெரும்பாலானோர்க்கு
  தெரிவதில்லை. ஒரு நோயாளியோ அல்லது அவரின் நெருங்கிய சொந்த-
  பந்தமோ இக்கட்டான சூழலில் வெளிப்படுத்தும் ஆற்றாமையைத்தான் நான்
  உங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டேன்.

  நவீன மருத்துவம், குறிப்பாக உயிர் போகும் நிலையில் உள்ள ஒரு
  நோயாளிக்கு பல Choicesஐ அளிக்கிறது. பல்வகையான மருத்துவ முறைகள்
  Treatment Options, பலவகை மருந்துகள் Medicines சந்தையில் உள்ளது.
  நோயாளியின் நிலைக்கேற்றபடியும், வயதிற்கேற்றபடியும், வசதிக்கேற்றபடியும்
  இந்த மருத்துவ முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன.

  எனக்கு விநோதியின் மருத்துவ நிலைபற்றி தெரியாது. ஒரு ஊகத்தின்
  அடிப்படையில் எழுதுகிறேன்.

  ஒரு நோயாளிக்கு வயிற்றினுள் ஒரு உறுப்பு பாழடைந்துள்ளது என்று
  வைத்துக்கொள்ளலாம். அவ்வுறுப்பை அகற்றலாம் அல்லது பாதிக்கப்பட்ட
  பகுதியை மட்டும் அகற்றலாம் அல்லது மருந்துகளைக் கொண்டே சீர்செய்ய
  முயற்சிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சாதக-பாதகங்கள்
  இருக்கும். முக்கியமாக செலவும் மாறும். பழங்காலத்தில் இதுபோன்ற வசதி
  வாய்ப்புகளே இருந்ததில்லை. ஏன் சில தசாப்தங்களுக்கு முன்வரைகூட சிவப்பு
  மாத்திரை, வெள்ளை மாத்திரைதான்.

  மேலும் ஒவ்வொரு மருத்துவ முறையிலும் (Treatment Options) Success Percentage
  மாறும். சில முறைகள் இன்னும் முழுமையாக சந்தைபடுத்த பட்டிருக்காது. Trial
  முறையில் இருக்கும். நோயாளி அந்த முறையை தாங்கக்கூடிய நிலையில்
  இருக்கிறாரா என்பதும் கணக்கில் கொள்ளப்படும். வயது முக்கிய பங்கு வகிக்கும்.
  செலவும் ஒரு காரணி என்பதை கூற வேண்டியதில்லை.

  மருத்துவ முறைக்கு Success Percentage இருக்கும்.
  மருத்துவமனைக்கு Success Percentage இருக்கும்.
  மருத்துவர்களுக்கு Success Percentage இருக்கும்.

  மேற்கத்திய நாடுகளில் இந்த Success Percentages வெளிப்படையாக கிடைக்கிறது.
  நோயாளிகள் தேர்வு செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இது போன்ற
  தகவல்கள் பொதுவில் வருவதில்லை. ஆகவேதான், மருத்துவமனைகள் மற்றும்
  மருத்துவர்களைக் குறித்து பெரும்பாலும் தவறான தகவல்கள்
  வெளிவருகின்றன. சரியான தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டால் இந்த
  Misinformation நின்றுவிடும்.

  கடைசியாக, நீங்கள் குறிப்பிட்ட மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவர்களும்
  கீழ்த்தரமாக நடந்திருக்கலாம். நான் அவர்களைப் பற்றி எழுதவில்லை.
  என் நோக்கம் “நவீன மருத்துவம்” பற்பல வழிகளை, முறைகளைக்
  கொண்டுள்ளது. “சர்வரோக நிவாரணி”, “எல்லா வலிக்கும் ஒரே மருந்து” என்ற
  நிலையிலிருந்து வெகு தூரம் நாம் கடந்து வந்துவிட்டோம். மருத்துவர்கள்,
  மருத்துவ மனைகள் போன்றவை அடிப்படை விதிகளின் படி செயல்பட
  வேண்டும் என்பது எக்காலத்திலும் தொடர வேண்டிய ஒரு சமூக நிகழ்வு. நான்
  அதைக்கூறவில்லை.

  என்னைப் பொருத்தவரை, நோயாளிகளும், பொது ஜனங்களும் நவீன
  மருத்துவத்தைக் குறித்த அடிப்படை புரிதலை அடைய வேண்டும் என்பதுதான்.
  அப்போதுதான் ஒரு மருத்துவ முறையை அனுசரிக்கையில் அதனால்
  நிவாரணம் அடைய வாய்ப்பு இருக்கும் என்பதோடு உயிருக்கும் ஆபத்து
  நேரிடலாம் என்ற எதார்த்தத்தையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 3. இன்னார் தான் செய்தது இந்த குற்றம் என்று தெளிவாக தெரியும் நிலையில் இந்த வழக்கில் அந்த மனிதருக்கு சரியான தண்டனை கொடுக்கப்படுமா ?
  நமது நீதித்துறை யாருக்கும் அவரவர் வாழ்நாளுக்குள் நியாயம் செய்யாத காரணம் பெருங்காரணம் அல்லவா?

  ஏன் பக்கத்துக்கு மாநிலத்தில் சூரியநெல்லியில் ஒரு அப்பாவிப்பெண் பள்ளிச் சிறுமியாக இருந்த போது கடத்தப்பட்டு 40 நாட்கள் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை.
  பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்கு அது. இன்றைக்கேலாம் 17 வருடங்கள் ஆகிறது !

  இங்கே குறிப்பிட்ட நாவரசு விஷயமே எடுத்துக்கொள்வோம். வழக்கம் போல் எந்த உடான்ஸ் ஊடகமும் செய்தியை பாலோ -அப் செய்யவில்லை.

  எத்தனை பேர் நினைவில் வைத்திருப்போம்? அந்த அப்பாவி மாணவரின் பெற்றோருக்கோ வாழ்நாளெல்லாம் வேதனை.
  இந்த சகோதரியின் பெற்றோரும் இதே நிலையில் இருக்க நேரிடலாம்.
  ஏன் நம் நீதித்துறை இப்படி இருக்கிறது?

  கட்டுரை ஆசிரியர் குறிப்பிடும் சினிமா விஷயம் முழுக்க சரியே. இங்கே தமிழனுக்கு சினிமா வெறும் ஊறுகாயல்ல. உணவே தான். குடல் வேகாமல் என்ன செய்யும்?

  இன்று பாருங்கள் -வாலண்டைன் நாள் அன்று நடக்கும் கூத்தை. .காதலி அல்லது காதலன் இல்லாவிட்டால் நண்பர்கள் முன் மானம் போய் விடும் என்பது போல் ஒரு தோற்றம். இது அவசியமா என்று கேட்பவர் பிற்போக்கு மற்றும் பழமை வாதி.

  சாய்

 4. மருத்துவம் பார்க்கும் அனைத்து மருத்துவர்களுமே அதற்குண்டான தகுதிகளோடு இருக்கிறார்களா? எத்தனை பேர் ஜாதியின் அடிப்படையிலும் ,, பணம் கொடுத்ததும் டாக்டர்களாகிறார்கள் ?? பணம் கொடுத்து சீட்டு வாங்கியவனிடம் எப்படி தொழில் பக்தியை எதிர்பார்க்க முடியும்?? எல்லாம் வோட்டு அரசியல்,, இதற்கு பலி வினோதினிகளின் உயிர்கள்!

 5. ஒரு இஸ்லாமிய அமைப்பினர் ‘சகோதரி வினோதினிக்கு கண்ணீர் அஞ்சலி’ செலுத்தி சுவரொட்டி ஒட்டியுள்ளார்கள்.ஒரே கல்லில் இர‌ண்டு அல்ல, பல மாங்காய்களை வீழ்த்துகிறார்கள்.

  போஸ்டரை மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு “பரவாயில்லையே , ஒரு இந்துப்பெண் கொலைக்கு இஸ்லாமியர் போஸ்ட‌ர் ஒட்டியுள்ளாரகளே. இது மத நல்லிணக்கம்” என்று தோன்றும். பொடி எழுத்தில் உள்ளதைப்படித்தால் இஸ்லாமிய தண்டனைச் சட்டமே சிறந்தது என்ற கருத்தை விதைக்கிறார்கள்.
  ‘கண்ணுக்குக் கண், காலுக்குக்கால்’ என்று இறைவனே கூறியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

  ‘பெற்றோருக்கு உங்கள் மேல் அக்கறையுண்டு, காதல் வேண்டாம்” என்று அறிவுரை இந்து இளைஞர்களுக்கு!காதல் திருமணங்கள் மூலம் மதமாற்றம்(லவ் ஜிஹாத்) நட‌ந்து வருவதை கவனமாக சமக்காளத்திற்கு அடியில் தள்ளி விடுகிறார்கள்.

  ஏதோ இங்கே மட்டும்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்ப‌துபோல ஒரு பாவலா காட்டுகிறார்கள். அவர்கள் சொல்லும்படி ஆடை வழிமுறைகளைக்
  கைக் கொள்ளாத இஸ்லாமியப் பெண்களுக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள
  கொடுமைகளைக் கண்டும் கண்ணை மூடிக்கொள்கிறார்கள்.

  வினோதினி விஷயத்தில் அதீத சினத்தால் அந்தக் குற்றத்தைச் செய்துவிட்டான் குற்றவாளி. அவன் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அனுதாபம் தெரிவிப்பதுபோல அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பவர்களை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

 6. ராஜமாணிக்கம்,
  அறம் பற்றிய உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன். பாலாஜி நவீன மருத்துவத்தின் நுண் சிக்கல்களை புரிந்து கொண்டு முடிவேடுப்பதேன்பது அவ்வளு எளிதல்ல. அதிலும் பணத்தக் குறியாகக் கொண்டு மருத்துவமனைகள் ஒரு கும்பலாக செயல்படும் பொது இது மிகக் கடினம். இது போன்ற இணையங்கள் உதவலாம்

  http://www.hersfoundation.com/

 7. “நவீன மருத்துவம், குறிப்பாக உயிர் போகும் நிலையில் உள்ள ஒரு
  நோயாளிக்கு பல Choicesஐ அளிக்கிறது. பல்வகையான மருத்துவ முறைகள்
  Treatment Options, பலவகை மருந்துகள் Medicines சந்தையில் உள்ளது.
  நோயாளியின் நிலைக்கேற்றபடியும், வயதிற்கேற்றபடியும், வசதிக்கேற்றபடியும்
  இந்த மருத்துவ முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன.”

  உயிர் போகும் நிலையில் உள்ள ஒரு நோயாளிக்கு பல வகைத் தீர்வுகள் தேவையா? உயிரைக் காக்க தேவையான, அதிக ஆபத்தில்லாத ஒரு வழிமுறை எதுவோ, அதை மருத்துவர்களே பரிந்துரைத்திருக்கலாம். நவீன மருத்துவர்களில் பெரும்பாலானோருக்கு எப்படி ஒரு உடல்ரீதியான பிரச்னையை அணுகுவது என்ற பக்குவமே தெரியவில்லை. உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு பின்பக்க தோளின் மேல் Heat Boils இருந்தது. அலோபதி மருத்துவரை சந்தித்தேன். Heat Boils ஐ காண்பிக்க சொன்னார். பார்த்து விட்டு “இது எப்படி வருகிறது என்று சொல்லுங்கள்” என்றேன். “இதை கொஞ்சம் விரிவாக Analyse பண்ணனும்” என்றார். “எப்படி சார் வருகிறது? ஏன் வருகிறது?” என்ற என் கேள்விக்கு அவர் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்தால், அவர் பல வழிகளில் எந்த வழி சிறந்தது என்று முடிவு செய்து இறுதியில் எனக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பார் போல! “Blood Test பண்ணிடுங்க சார்! நான் எழுதி தரேன். ஆப்போசிட்ல நம்ம ஸ்கேன் சென்டர் இருக்கு. அங்கயே டெஸ்ட் எடுத்துகோங்க. ரிப்போர்ட் வந்த உடனே என்னை வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு கன்சல்டஷன் பீசாக 250 ருபாய் வாங்கிக் கொண்டார். Heat Boils வருவதன் காரணம் heat தான் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாத ஒருவர் எப்படி மருத்துவரானார் என்ற சந்தேகத்திலேயே ஒரு சித்த மருத்துவரிடம் சென்றேன். அந்த மருத்துவர் பரிசோதித்து விட்டு என்னை காபி டீ, அதிகம் குடிப்பீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றதும், உடனே அதை நிறுத்த சொல்லி 15 நாட்களுக்கு மருந்துகளை எழுதிக் கொடுத்து கன்சல்டஷன் பீசாக 50 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டார். 15 நாட்களுக்கும் முன்னதாகவே என் heat boils அனைத்தும் மறைந்து வலியே இல்லாமல் குணமாகியது.

  “மருத்துவ முறைக்கு Success Percentage இருக்கும்.
  மருத்துவமனைக்கு Success Percentage இருக்கும்.
  மருத்துவர்களுக்கு Success Percentage இருக்கும்.”//
  படிப்பறிவில்லாத பாமர மக்கள் நவீன மருத்துவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும், நோய்களின் காரணங்களையும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் என்றைக்கு மருத்துவரின் செயல் திறனை எடைபோட்டு அட்மிட்டாவது?

  “என்னைப் பொருத்தவரை, நோயாளிகளும், பொது ஜனங்களும் நவீன
  மருத்துவத்தைக் குறித்த அடிப்படை புரிதலை அடைய வேண்டும் என்பதுதான்.”

  இதுவே என் ஆசையும். ஆனால் நடப்பது எப்போது?

 8. //R Balaji on February 14, 2013 at 10:33 am
  திரு.வீர.ராஜமாணிக்கம்,
  கட்டுரையின் தொடக்கத்தில், மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும்,
  அரசு மற்றும் தனியார் இரண்டையும் மொத்தமாக குறை கூறியிருக்கிறீர்கள்.
  நவீன மருத்துவத்தை அதன் ஆழத்தை அறியாமல்,….
  ….என்னைப் பொருத்தவரை, நோயாளிகளும், பொது ஜனங்களும் நவீன
  மருத்துவத்தைக் குறித்த அடிப்படை புரிதலை அடைய வேண்டும் என்பதுதான். //

  Very unfortunate such comments like this are coming from educated people. It is not people who need to understand, it is Doctors who need to understand. More than 50% of diseases have ’cause of the disease’ as ‘unknown’ in Allopathic references. So it is doctors duty to do right thing, not victims.

 9. ராஜா சார்,

  இந்த சம்பவம் ஒரு தனி மனிதனுடைய உக்ரமாக மட்டும் பார்க்க முடியவில்லை நாம் ஆசை பட்டவர் நமக்கு கிடைக்க வில்லை என்பதற்காக நான் அவரை அழிப்பேன் என்பது என்ன மாதிரியான ஒரு மன நிலை என்பது புரியவில்லை மனித உணர்வுகளுக்கும் உயிர்களுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்புகளை பற்றி நம் சமுகத்தில் தற்போது உள்ள பெரியவர்கள் நீதிபோதனை செய்ய தவறிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது ….அது சரி அவர்களை குறை சொல்ல கூடாது பெரியவர்கள் அனைவரும் நித்தியானந்தாவின் பட்டமளிப்பு விழாவில் பிஸியாக இருப்பார்கள்…

  மருத்துவர்கள்தான் இந்த சமுகத்தின் சீர் கேடு என்பது போல் உள்ளது இந்த கட்டுரை , கேடுகெட்ட அரசியல்வாதிகள் கேடுகெட்ட அதிகாரிகள்,கேடுகெட்ட தீவிரவாதிகள்,ரௌடிகள்,குடிகாரர்கள் எமாற்றுகரங்கள்…இவ்வளவையும் தெரிந்து இவர்களை மட்டும்மே தேர்ந்தெடுக்கும் கேடுகெட்ட மக்கள் இருக்கும் ஒரு சமுகத்தில் டாக்டர்கள் மட்டும் என்ன புண்ணிய சீலர்களாகவா இருப்பார்கள் ……சாதரனமாக ஒரு மருத்துவ கல்லுரி ஆரம்பிக்க 50 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது அதை திரும்ப எடுப்பதற்காக மருத்துவ மாணவர்களிடம் இருந்து கறக்க வேண்டியருகிறது சுமார் ஒரு கோடி ருபாய் செலவு செய்து படித்துவிட்டு சமுக சேவை செய்ய வா என்றால் எப்பிடி வருவான் …ஒட்டுமொத்தமாக மாற்றம் வந்தால்தான் சீரழிவுகள் மாறும் மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை…

  நமஸ்காரம்
  அனந்த சைதன்யன்

 10. //Anantha Saithanyan on February 24, 2013 at 1:20 pm

  … மனித உணர்வுகளுக்கும் உயிர்களுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்புகளை பற்றி நம் சமுகத்தில் தற்போது உள்ள பெரியவர்கள் நீதிபோதனை செய்ய தவறிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது… //அருமை. பெரியவர்கள் மீது எத்துணை மரியாதை வைத்திருக்கிறீர்கள் என்பது உங்கள் வார்த்தைகளிலேயே தெரிகிறது. பெரியவர்கள் நீதி போதனை செய்துவிட்டால் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள்.

 11. ////அறம் என்பதை என் ஆசான் ஜெயமோகன் இப்படி வரையறுக்கிறார் “அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.”////

  அப்படியானால், இஸ்லாமிய மத/ இனக் குழுவினர் தமது நெறி (?) முறைகளை (??) “அறம்” என்று சொல்லும் ஆபத்து இருக்கிறது என்பதை பதிவர் புரிந்து கொள்ளவில்லையா?

  சனாதன மார்க்கத்தைப் பழிப்பதை அறிவாக, அதிலும் பகுத்தறிவாக(?) உயர்த்திய ஈன நிலை பார்த்த பின் தமிழ் நாடு தரம் தழ்ந்தது கண்கூடாயிற்று. அப்படியான வீணர்கள் அரியணை ஏறியது அழிவு.

  50 வருட சினிமாவில் என்ன சாதித்தார்கள்? ஆண் பெண் காதலை/ காமத்தை புனிதப் படுத்டுவதிலேயே விதம் விதமாக படம் எடுத்தார்கள். மன வக்கிரம் கொண்ட, சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து வந்த நடிகர்களும், இயக்குனர்களும் (?) தங்களின் அடி மன ஆசைக் கெல்லாம் படம் எடுக்கிறார்கள். தமது தாழ் சிந்தனையை சமூகப் புதுமையாக்கியதன் ஒரு விளைவே அமில வீச்சு. உணருவார்களா தமிழ் நாட்டு சினிமா பக்தர்கள்?

  மொழி தாழும் போது மனம் தாழும். இன்று தமிழ் “கத்ரிக்கா பொறியளை கேற்று சாப்பிடுங்கல்”, “மலை பெய்து வெல்லம் கரை புறண்டது”, “கிலி பரக்குது”, “பென் பில்லை கணறுக்குல் விலுந்திற்று”… என்று ற, ர, ல, ள, ன், ண் என எந்த வேறுபாடும் தெரியாது செய்தி கூட வாசிக்கிறார்கள். இவர்களா தமிழர்கள்?

  (Edited and published)

 12. அன்புள்ள ரமணா,

  ஒவ்வொரு நூற்றாண்டிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் திராவிட இயக்கங்களை போன்ற தற்குறிகள் தோன்றி இயன்றவரை மக்களுக்கு தீங்கு செய்கின்றன. மொழி தாழும் போது மனம் தாழும் என்பது சரியன்று. மொழி என்பது பிறருடன் தொடர்புக்கான ஒரு கருவியே ஆகும். உலகில் பல மொழிகள் அழிந்துவிட்டன என்பது வரலாறு. அந்த மொழிகளை பேசி வாழ்ந்த இனங்கள் வேற்றிடம் பெயர்ந்தும், வேற்று மொழிகளை பேசியும் வாழ்ந்துவருகிறார்கள். யூத மொழி தாழ்ந்து இருந்தபோது தான், யூதரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிக பெரிய கண்டுபிடிப்பான சார்பியல் கொள்கையை வகுத்தார். மொழி தாழ்ந்ததால் அவருடைய உயர்வு எவ்விதத்திலும் தடைப்படவில்லை.

  அறம் என்பதனை வரையறை செய்வது கடினம். ஜெயமோகன் அவர்களின் வரையறையை நானும் ஒப்பவில்லை.இஸ்லாமிய கிறித்தவ மதங்கள் என்று அல்ல வேறு எந்த மதம் ஆயினும், பெண்ணடிமை, ஆணுக்கு பெண் மட்டம், பிற மதங்களை அழித்துவிடவேண்டும் என்ற வெறி , பிற மதத்தினரை தன்னுடைய மதத்துக்கு கட்டாயமாக மதம் மாற்றி கொண்டுவரவேண்டும் என்ற செயல்பாடு ஆகியவை இருந்தால், அங்கு அறம் என்று எதுவும் இல்லை என்று பொருள்.

 13. திரு பொன்னுசாமி அவர்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.

  அறம் பற்றிய புரிதல் பெரும்பாலும் சாமான்ய ஹிந்துக்களுக்கு நிறையவே உள்ளது. மற்றவரின் தனி மனித சுதந்திரத்தை மதிக்க தெரிந்ததனால் அவன் தன் கருத்தை மற்றவர் மேல் திணிப்பதில்லை.

  ” தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற பழந்தமிழ் வரி பாரத பண்பாட்டில் தோய்ந்தது.

  அவனவன் உய்வு அவனவன் கையில் என்று நம்புவதால் மத விஷயத்தில் ஒரு படிக்காத ஹிந்து கூட பக்குவம் காட்ட முடிகிறது.

  திருக்குறளின் அறத்துப்பால் உரையுடன் படித்தல் யாருக்குமே ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் .

  எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவது அறம் என்கிறார் ஒரு இடத்தில்.
  iஇந்த வரியை அறியாத பாமரர்கள் எனப்படுவோர் கூட இந்த கருத்தில் ஊறியிருக்கிறார்கள் .

  வள்ளுவர் அரசர்களுக்கான அறம் பற்றி எவ்வளவு பேசுகிறார்.?

  நீதி பரிபாலனம் சரிவர இல்லாததால் , ஏன் தங்கள் மேல் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கவும் செய்யும்
  ” தலைவர்கள்” நிறைந்த அரசாங்கத்தில் விநோதிநிகளுக்கு என்ன நியாயம் கிடைத்து விடும்?

  இந்த கட்டுரையின் ஆசிரியர் சினிமாக்களின் மற்றும் ஊடகங்களின் தாக்கம் பற்றி கருத்து சொல்வதுடன் உடன்படுகிறேன்.
  ஆனால் ஆண்கள் என்று பொதுவாக சொல்வதை தவிர்த்திருக்க வேண்டும். இதை தான் உடான்ஸ் ஊடகங்கள் திசம்பரில் இருந்தே திசை திருப்ப சொல்லி வருகின்றன.

  தன் வசதியை மீறி மகளைப்படிக்க வைத்த வினோதினியின் தந்தை ஆண். டில்லி பெண்ணின் தந்தை , சகோதரர்கள், மற்றும் அவருக்காக அடிப்பட்ட நண்பர் [ அவர் இருக்கும் வரை இந்த பயங்கரத்தை மறக்க முடியுமா?] எல்லாரும் ஆண்களே.

  கள்ளக்காதல் காரணமாக பெற்ற பிள்ளைகளை கொல்லும் பெண்களைப் பற்றிய கதைகள் விரும்பிப்படிக்க படுகின்றனவே. சீரியல்களில் எவ்வளவு கள்ளக்காதல்.

  ஏன் இந்த உலோகத் தலை நாயகனின் சமீபத்து படத்தில் கதாநாயகி கணவன் இல்லா இன்னொருவன் மேல் ஆசைபடுவதாக காட்டியிருக்கிறார்.கள்ளக்காதல் ஓகே என்ற மறைமுக பிரச்சாரம் .அன்று மன்மத லீலை படத்தில் நடித்தார் .அந்த கேவலத்தையும் ரசித்தார்கள். இன்று இப்படி. ஏன் சில வருடங்களுக்கு முன் நான் அவன் இல்லை படத்தையும் நன்றாக ஓட வைத்தார்களே.

  பொதுவில் சமூகம் மிக கீழ் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது என்றால் பொருத்தமாக இருக்கும்.

  சாய்

 14. பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் , மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை அச்சுறுத்தல் மூலம் தடுக்க நினைக்கும் மதத்தீவிரவாதிகள் ஒழிக்கப்படவேண்டியவர்கள். அவர்களுக்கு துணை போகும் அமைப்புக்களாக விளங்கும் மதங்களும் ஒழிந்தால் தான் மனித இனத்தில் அமைதி நிலவும்.

 15. அன்புள்ள பொன்னுச் சாமி,
  மொழி தாழ்ந்தால் மனம் தாழ்ந்ததுக்கு சமானம் என்றதின் பொருள் அம்மொழி பேசுபவர் எண்ணிக்கை தாழ்ந்த என்ற அர்த்தத்தில் அல்ல, அதன் இலக்கணம், உச்சரிப்பு என்பவற்றைக் குறிப்பிட்டேன். சம்ஸ்க்ருதமும், அதை பேசியவர்களும் அருகியதற்கு காரணம் அதன் உச்சரிப்பும் அதன் பிரயோகமும் சரியாக பின் பற்றப் படாமையே ஆகும்.
  உங்களின் மேலான கருத்தை மீண்டும் எதிர் நோக்கி..

  ரமணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *