[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தரின் வாழ்கைக் குறிப்புகள்  பற்றிய “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடர்  14 பாகங்களில் முன் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சுவாமி சித்பவானந்தரின் சிந்தனைகளை  தொகுத்து அளிக்கிறார்  அத்தொடரின் ஆசிரியர் வ.சோமு அவர்கள்

காமகோடி பீடம்

ஒரறிவு படைத்த உயிர்கள் இப்பிரபஞ்சத்தைப்பற்றி இன்னும் அறிந்து கொள்ள  வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு,  ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில்  இருப்பவன்  மனிதன்  ஆகின்றான்.  இனி  மனிதனிலும்  மிக்கதோர்  உயிர்  வகையை  இப்பூவுலகில்  யாரும்  பார்த்ததில்லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய  அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான ஒரு நிலை உண்டு.  அது தெய்வீக நிலை எனப்படும். மனம் மனிதனிடத்து ஓயாது அலையும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.  ஆகையால்  தான்  மனிதன்  அநேக  காமங்களுக்கு  ஆளாகிறான்.  அக்காமங்களைத்  தெய்வீகக்  காமமாக  மனிதன் மாற்றியமைக்கத் தெரிந்து கொண்டால் காமத்தின் வேகம் குறைகிறது. காமம் முற்றிலும் அகன்றவிடத்து  மனிதன்  தெய்வ  சொரூபமாகிவிடுகிறான்.  மனிதநிலையில்  இருக்கும்  நாம்  இந்த  மேலாம்  நிலையை அடைய முயற்சி எடுத்துக்கொண்டு அந்நிலையை யடைகிறபொழுது நம்முடைய காமத்துக்கும் ஒரு  முடிவு உண்டாகிறது. மனித இனத்தில் ஓர் உத்தமர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியயண்ணி ஏழை  நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப்  போதும் பராபரமே என்று இறைவனிடம் பரிந்து விண்ணப்பிக்கிறார்.  கண்ணா! மனம் அலையும் தன்மையது : திடமுடையது ; அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று  இயலாதது என்று நினைக்கிறேன் என்கிறான் மஹாரதனாகிய அர்ஜூனன்.

I10-03-evolution2

சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வர ஆசை பயன்பட்டது. மானுட நிலையில்  ஆசை இருவிதப்படுகிறது. மனிதனைப் பந்தத்தில் தள்ளவும், பாரமார்த்திக நெறிக்கு எடுத்துச்செல்லவும் ஆசை  மனிதனுக்குப் பயன்படுகிறது. இந்த ஆசைக்கு இருப்பிடம் மனது ஆகும். இந்த மனது என்பது யாது? அதன்  இயல்பு என்ன? மானுட நிலையில் அதை உயர்ந்ததோர் காரியத்துக்குப் பயன்படுத்துவது எப்படி, என்பனவற்றை ஆராய்வோம்.

கோடிக்கணக்கான  காமங்களுக்கு  இருப்பிடமாய்  இருப்பது  இந்த  மனது.  எண்ணரிய  பிறவிகளில்  இந்த  மனது  விரிவடைந்து  வந்ததாலேயே  சிற்றுயிர்  பேருயிராகப்  பரிணமித்து  உள்ளது.  மனது  விரிவடைதற்கு  ஆசையே  காரணமாகும்.  ஆகையால்  கோடானு  கோடி  காமங்களின்  வாயிலாகவே  சிற்றுயிர்  மானுட  நிலைக்குப்  பரிணமித்திருக்கிறது.  மானுட  நிலையில்  தூய  காமங்கள்  கொள்வதால் மானுடர் தலைசிறந்த உயிர்களாகின்றனர். காமங்களில் எல்லாம் பெரிய காமம் ஈசனைப்பற்றியதாகும்.  அதற்கு  மேலானதொரு  காமம்  இல்லையாதலால்  காமங்கள்  ஈசனிடத்து  முடிவு  அடைகின்றன. அணையில் கதவுகளை மூடிவிட்டால் நதியில் தண்ணீர் குறையவும், கதவுகளைத் திறந்தால்  நதியில் நீர்ப்பெருக்கெடுக்கவும் செய்கிறது. ஆனால் கோடானு கோடி நதிகள் நீரைக்கொண்டு வந்து கொட்டினாலும்,  அதன்  அகண்ட  மேற்பரப்பிலிருந்து  எவ்வளவு  நீர்  ஆவியாகப்  போனாலும்  அல்லது  மழையாகப்  பொழிந்தாலும்  கடலில்  கூடுதலோ  குறைதலோ  உண்டாவது  இல்லை.  கடல்  அகண்டதாய்,  விரிந்ததாய், பூரணமாய் ஆகியுள்ளதே இந்தச் சிறப்புக்குக் காரணமாகும்.

அங்ஙன ம் ஆசைகள் ஈசுவரப் பிரேமை கொண்டவை அலைக்கழிக்க மாட்டா.  சிறிய  ஆசைகளால்  இனி  அவனுக்கு  ஆகவேண்டியது  ஒன்றுமில்லை.  ஐசுவரியம்  என்பதில் எல்லா காசுபணமும், தங்கமும் அடங்கிவிடுவது போன்று பெரிய ஆசையாகிய ஈசுவர பக்தியில் மற்ற  யாவும் அடங்கிவிடுகின்றன. ஆகையாலன்றோ உலகப் பொருள்களின் பேரில் வைத்துள்ள நம் காமங்களை  மாற்று  என்று ஆண்டாள்  பிரார்த்திக்கின்றாள்.  அவளது ஆசையைப்  பாருங்கள்! ஸ்ரீரங்கநாதனையே  தன்  கணவனாகப் பெறவேண்டுமாம். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைத் தன் கணவனாகப் பாவித்தாள் ஸ்ரீமதி மீரா!  இறைவனைத்  தன்  நண்பனாகப்  பாவிக்கிறார்கள்  சுந்தரரும்  அர்ஜூனனும்,  ஹனுமான்  ஸ்ரீராமச்சந்திர  மூர்த்தியை தன் யஜமானனாகப் பாவிக்கிறான். யசோதை ஸ்ரீகிருஷ்ணனைத் தன் குழந்தையாய்ப் பாவிக்கிறாள.  இத்தகைய காமங்களை விட இனி, உயர்ந்ததோர் ஆசை உலகில் இருக்கமுடியுமா? இந்த ஆசை ஜீவனைப்  பந்தப்படுத்தாது ; மேன்மைப் படுத்துகிறது. ஆகையால் தான் கோடானுகோடி எண்ணங்களையும் ஆசைப்படுதலையும்  தன் இயல்பாக உடைய மனதை அதன் போக்கிலேயே விட்டு ஈசுவரன் பால் திருப்புவதற்கு  உபாயமாக  நான்குவித  பாவனைகளை  ஏற்படுத்தியுள்ளார்கள்.  இவையாவும்  காமகோடி  பீடமாகிய  மனதில்  நடைபெறும் நாடகங்களேயாம். கோடானுகோடி விதத்தில் வடிவெடுக்கும் காமங்கள் பண்பட்ட மனதில் தெய்வீகக்  காமமாக வடிவெடுக்கிறது.

இவற்றையயல்லாம் இனி ஆசை எனலாகாது. இன்பத்தை நாடி மிருக இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் எண்ணத்துடன் கொள்ளப்பட்டதன்று இவை. ஆகையால் ஆசை, பற்று  என்னும்  சொற்கள்  குறிக்கும்  பொருளைத்  தாண்டி  அன்பு,  பக்தி,  பிரேமை  என்னும்  நிலைக்கு  இவை  வந்து  விட்டன. சாதனத்தின் மூலம் நாம் மனதைப் பண்படுத்த வேண்டும்.

அகங்காரம் எப்படி எப்படியோ வடிவெடுத்து வருகிறது. அதை அழித்தல் எளிதன்று. அதைப் பலமற்றதாகச் செய்ய ஒரு வழி உண்டு. நான் பணக்காரன், வல்லமை வாய்ந்தவன், பெரிய  அதிகாரி  என்கிற  அகங்காரங்களை  நான்  கடவுள்  பக்தன்,  தாஸன்,  தொண்டன்  என்பதாக  மாற்றி  விட்டால்  அதனால்  குற்றமில்லாமல்  போய் விடுகிறது  என்று  ஸ்ரீராமகிருஷ்ணர்  பகர்ந்தருளியுள்ளார்.  எண்ணற்ற  பிறவிகளில் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த மனதானது மனித நிலைக்கு வந்தான பிறகு அதன் வேகம் பன்மடங்கு  அதிகமாகிறது. ஆகையால்தான் மற்ற ஜீவராசிகளைவிட மானுட நிலையில் முன்னேற்றம் அதிகம் காண்கிறோம்.  அவன் கண்டுள்ள மொழிகள் எத்தனை! கலைஞானங்கள் எத்தனை! வாழ்க்கை வசதிகள் எத்தனை! வாகனங்கள எத்தனை! இயற்கையை அவன் துருவி ஆராய்ந்திருப்பது எத்தனை! அதற்கப்பாலுள்ள பரம்பொருளின்  காட்சி  கண்டு  ஆனந்தித்திருப்பது  எத்தனை!  இவையாவற்றையும்  பற்றி  அவன்  குறித்து  வைத்துள்ள  சாஸ்திரங்கள்  எத்தனை!  இவையயல்லாம்  அவன்  எண்ணிய  கோடானுகோடி  எண்ணங்களின்  விளைவே.

thoughtsஎண்ணங்களுக்கு  அந்நியமாக  மனது  இல்லை.  நூல்கள்  இயைந்து  ஆடை  ஆவது போன்று எண்ணங்கள் சேர்ந்து மனது ஆகிறது. மனதினுடைய வேலை எண்ணுதல். எண்ணுதலைக்  குறைத்துவிட்டால் மனதும் சுருங்கிப்போய் விடுகிறது. அழகிய மலர் ஒன்று மொட்டாக இருந்து, இதழ்கள் விரித்து,  இனிய தென்றலில் நர்த்தனமாடி, பின்பு அந்திப்பொழுதில் ஒவ்வொரு இதழாக உதிர்ந்து மறைகிறது. அங்ஙனம்,  சுருங்கியிருந்த மனது படிப்படியாகப் பரிணமித்து மானுட நிலையில் அழகிய மலர் போன்று விரிந்துள்ளது.அதன்  அழகு மேலாம் பண்பாக, உயர்ந்த வாழ்க்கை முறையாக, உன்னத நாகரிகமாக மிளிர்கிறது. அந்திப்பொழுதில் அழகிய மலர் தன் சொரூபத்தை அழித்து காயினில் ஒடுக்கிவிட்டது போன்று இனி பரிணாமத்தின்  உச்சிநிலையில்  மானுட  மனதும்  சுருங்கிப்  பரபோதத்தில்  கலந்தாக  வேண்டும்.  இதுவே  துறவு,  தியாகம்  எனப்படுகிறது. சிறியதை விட்டுவிட்டுப் பெரியதினிடத்துக்குப் போதலே தியாகம் எனப்படுகிறது. கோடிக்கணக்கான  காமங்கள்  கொண்ட  மனதில்  இப்போது  காமங்கள்  எல்லாம்  கோடியடைந்துவிட்டன  ; அதாவது முடிவடைந்து  விட்டன எனலாம்.

மனிதன் கொள்ளுகிற எண்ணங்களுக்கேற்ப மேலானவன் அல்லது கீழானவன்  ஆகிறான். கீழான எண்ணங்கள் மனிதனைக் கீழ்மையில் ஆழ்த்துகின்றன. மேலான எண்ணங்கள் மனிதனை  மேலானவன்  ஆக்குகின்றன.  ஆகையால்  நமது  நன்மை  தீமைகளை  நிர்ணயிக்கின்றவர்  நாமே.  நமக்கு  நண்பனாகவோ,  நமக்கு  எதிரியாகவோ  அமைவது  நம்  மனதே.  ஆகையால்  எதை  எண்ணுவது,  எதை  விலக்குவது  என்பதில்  நாம்  கருத்துடன்  இருக்க  வேண்டும்.  சத்குணத்தோடு  கூடிய  மனது  விபீட­ணன்.  ரஜோகுணத்தோடு  கூடிய  மனது  ராவணன்,  தமோகுணத்தோடு  கூடிய  மனது  கும்பகர்ணன்.  ராவணன்  விபீ­டணன் வார்த்தைக்குச் செவிசாய்க்கமாமல் உட்படுத்திக் கொண்டான். மனதின் ஒரு பகுதி நமக்கு நலத்தைச்  சொல்கிறது. மற்ற பகுதி நம் எண்ணத்துக்கு உடன்பாடாக நிற்கிறது. நலத்தின் பால் சார்ந்த ராவணன் அழிந்தான்.  இதுவே என்றைக்கும் மனதைப்பற்றிய தத்துவம்.

குடிசை,  வீடு, அரண்மனை,  கோவில் ஆகிய  சொற்கள்  குடியிருக்கும்  இடத்தைக்  குறிக்கின்றன.  ஆனால்  ஒரு  வித்தியாசம்  இருக்கிறது.  ஏழை  ஒருவன்  தங்கியிருப்பது  குடிசை.  பணக்காரன்  குடியிருப்பது வீடு. அரசன் வீற்றிருப்பது அரண்மனை. இறைவன் எழுந்தருளியுள்ள இடம் கோவில். உள்ளே வாசம்  செய்யும் பொருளின் உயர்வுக்கேற்ப அந்த இடத்திற்கு மகிமையும், சிறப்பும் அதிகரிக்கின்றன. சாதாரண எண்ணங்களை உடைய ஜீவன்கள் விலங்கு நிலையிலிருக்கின்றன. உண்டு களித்திருத்தலில் மட்டும் அவைகள்  இன்பமடைகின்றன. அதற்குமேல் அவைகள் செயலாற்றமாட்டா. அதற்கு அடுத்த நிலையில் இன்னும் நுண்ணிய  இன்பங்களை  அனுபவிக்கவும்  துன்பங்களைத்  தவிர்க்கவும்  உபாயங்களைத்  தேடவும் ஜீவன்கள் முயற்சி  செய்கின்றன. இந்நிலையில் வெற்றி பெறுகின்ற அளவு ஜீவன்கள் மேல்நிலைக்கு வருகின்றன. செயலை அனுசரித்து  அந்தக்  கரணத்தை  நான்காகப் பிரித்துள்ளார்கள்.  மனம்,  புத்தி,  சித்தம், அகங்காரம்  என்பன அப்பிரிவுகளாகும்.  இன்பத்தைப்பற்றிய  உண்மைநிலை  அறியாது  அந்தக்கரணம்  தன்  போக்கில்  போகின்றது.  மனிதனைப்  பல  வழிகளில் அது அலைக்கழிக்கின்றது. அதற்கடுத்த நிலையில் அதன் பொல்லாதபோக்கை மாற்றியமைக்கிற முயற்சி  வருகிறது.  யமன்  வரும்  வேளையில்  ஏது  துணை  பழிகார  மனமே  என்று  அதைக்  கண்டிக்க ஆரம்பிக்கிறான்.  இறப்பும்  பிறப்பும்  எனக்கு  எவ்வண்ணம்  வந்ததென்று  எண்ணி  யான்பார்க்கில்  மறப்பும்  நினைப்புமாய்  நின்ற  வஞ்சமாயா  மனத்தால் வளர்ந்தது  என்று  தெளிவடைகிறான்.  இந்த  நிலையில் அம்மனிதன்  ஜிக்ஞாசு, முமுக்ஷூ  என்று  அழைக்கப்படுகிறான்.  அம்முயற்சியில்  வெற்றியடைந்தவன்  தன்  வாழ்க்கைப்  பயனை  அடைந்தவன்  ஆகிறான். பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே ஆகிவிடுகின்றான். ஞானி என்றும்,  ஸ்திதப்ரக்ஞன்  என்றும்,  யோகி  என்றும்,  ஆழ்வார்  என்றும்,  நாயனார்  என்றும்  அவன்  பெயர்  பெறுகின்றான்.  எல்லாரும்  மனிதரே  ஆயினும்  உள்ளே  உள்ள  மனதின்  மாண்புக்கு  ஏற்பப்  பெயர்கள்  மாறியமைகின்றன.  பெற்றிருக்கிற பெயர் உள்ளே உள்ள மாண்பை விளக்குகிறது. அத்தகைய உயர்ந்த மனதே காமகோடிபீடம் ஆகிறது.

ஸ்ரீ  ராமகிருஷ்ணர்  தியானம்  பண்ணும்  பொழுது  சூலம்  ஏந்திய  திவ்விய  புருஷர்  ஒருவர் தம் சரீரத்திலிருந்தே வெளிப்பட்டு வந்து இப்படி தியானம் செய் என்று காட்டித்தருவார். ஒரு நாள் அவரது  சரீரத்திலிருந்து கரிய, கொடிய உருவம் ஒன்று அத்திவ்விய புருஷரால் இழுத்துக்கொண்டு வரப்பட்டது. வெளியே  வந்ததும் அவர் அக்கொடிய மனிதனைக் காலால் உதைத்துத் தள்ளி தம் சூலத்தால் கொன்றுவிட்டார். இங்ஙனம் ஸ்ரீ  இராமகிருஷ்ணருக்குக் காட்சி கிடைத்தது. அதன் பிறகுதான் பாபி என்றோ, பந்தப்பட்ட ஜீவன் என்றோ ஒரு கணமும்  ஞாபகத்துக்கு வந்ததில்லை என்று இராமகிருஷ்ணர் பகர்ந்தருளியுள்ளார். பண்பட்ட மனமே நமக்கு சத்குருவாக  அமைகிறது.  பண்படாத  மனதே  நமது  ஹித  சத்துருவாகிக்  கொடுமை  செய்கிறது.  அதைக்  கொன்று  வீழ்த்த  வேண்டியவரும் நாமே.

ramakrishna

கடவுள் அருள் உனக்கு இருக்கலாம். குரு அருள் உனக்கு இருக்கலாம். ஆனால்  உன்  மனதின்  அருள்  உனக்கு  இல்லாவிட்டால்  நீ  சாதனத்தில்  ஒரு  முன்னேற்றமும்  அடையமுடியாது  என்று  பரமஹம்ஸர் பகர்ந்துள்ளார்.

மஹா மாயையின் அதிஷ்டான பீடமாக இருப்பது மனது. மனதுக்கு அன்னியமாக  வாழ்வோ, பிரபஞ்சமோ இல்லை. நல்லது கெட்டது, இன்ப துன்பம், மேலானது கீழானது ஆகிய அனைத்திற்கும்  அதில் இடமுண்டு. சாதனம்  செய்து  ஈசுவரப்  பிராப்தி  அடைவதற்கும், மீண்டும்  மீண்டும்  பவ  சாகரத்தில்  உழல்வதற்கும் அதில்  இடமுண்டு. பாக்கியவான்களாகிய  யாரோ  சிலர்  ஈசுவர நாட்டம்  கொண்டு  உய்வு  அடைகின்றனர். எல்லா சாதனங்களும் மனதைக் கொண்டுதான் செய்யவேண்டியிருக்கிறது. கீழான எண்ணங்களால்  அதை  நிரப்பாமல்  கோடி  உயர்ந்த  எண்ணங்களால்  அதை  நிரப்ப  வேண்டும்.  மிக  மிகப்  பெரியதாக, எல்லாம் அடங்கப்பெற்றதாக அதை ஆக்கிவிட வேண்டும். ஜீவகோடி என்பது உயிர்த்தொகை. உயிர்  அனைத்தும் என்று பொருள்படுகிறது. அங்ஙனம் காமகோடி என்பது ஆசைகள் அனைத்தும், எல்லா ஆசைகளும்  அடங்கப்பெற்றது, மிகப் பெரிய ஆசை என்று பொருள்படுகிறது. பின்பு மிகப்பெரிய ஆசையும் ஆசைப்பட்ட பொருளும்  ஒன்றாகிவிடுகிறது. கோடிக்கரைக்கு நிலத்தின் முடிவு என்றுபொருள். காமகோடி என்பது காமங்கள் முடிவடைந்த  இடம்.  இங்ஙனம்  நல்ல  எண்ணம்  கோடிகொள்.  அதை  மிகப்பெரிதாக்கு.  அத்துடன்  இரண்டறக்  கலந்துவிடு.  இதற்கெல்லாம்  பீடமாய்  இருப்பது  உன்  மனதே  என்கிற  கருத்து  களையயல்லாம்  காமகோடி  பீடம்  மக்களுக்கு  ஞாபகப்படுத்ததுகிறது. பந்தப்படுத்தும் ஆசைக்குழியாய் இருக்கும் மனதை வீடுபேறு அளிக்கும் காமகோடி பீடமாய்  ஆக்க  வேண்டியது  நம்  கடமையாகும்.  உண்மையான  காமகோடி  பீடம்  நம்  மனதே.  அதை  நற்காமங்களால்  தூயதாக்கி ஆங்கு இறைவனை எழுந்தருளப்பண்ணும்போது ஈசுவர சான்னித்தியம் நிறைந்த பீடமாய், கோவிலாய்  அது ஆகிவிடுகிறது. அங்ஙனம் நம் மனதை ஆக்க வேண்டுவது நம் கடமையாகும்.

                                                                                                                                                                                                                                             தொடரும்

6 Replies to “[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்”

  1. ‘காமகோடி’ எனும் பதத்திற்கு அற்புதமான விளக்கம். நம் பெரியோர்களின் வாக்குகளில் மனத்தைக் கடிந்தும் மனத்துக்கு அறிவுரை கூறியும் நன்றி யுரைத்தும் பாடிய அருட்பாடல்களின் கருத்து மனம் உயிருக்கு நெருக்கமாயும் மஹாமாயையின் அதிஷ்டானமாயும் இருப்பதால்தான் என்பதைத் திரு சோமு நன்கு விளக்கியிருக்கின்றார். இந்தமஹாமாயியாகிய சத்தியே உயிரைப் போகத்தில் ஆழ்த்திப் பிறப்பிறப்பில் உழலச் செய்யும் திரோதானகரி. இவளே சிவத்தியாகிய அருட்சத்தியாய் ஆன்மாவை உய்விக்கும் சத்தியுமாகின்றாள்.

  2. காஞ்சி காமகோடி பீடத்தைத் தான் சொல்றீங்களோனு படிச்சா… 🙂

  3. தமிழ்ஹிந்துவின் பணிக்கு நன்றி . விளக்கங்களை மேலும் எளிமையாக்குங்கள். பெரும்பான்மை மக்களை சென்றடைவதே எழுத்தின் நோக்கமாகக் கொள்ளுங்கள்.

  4. // காஞ்சி காமகோடி பீடத்தைத் தான் சொல்றீங்களோனு படிச்சா… //

    எங்கள் நிலைமையும் இதுதான்… படித்த பிறகு முழுதும் தத்துவ செய்திகளாக.. ஒரே ஏமாற்றமாக இருந்தது..

  5. விளக்கம் இன்னும் எளிமையாக இருந்தால் சில சில இடங்களில் மிகமிக நன்றாக இருக்கும் .

    நன்றி .

  6. Nice. Jaisri Chidbavaananda ki jai. Karuththu sari. Konjam katturaiyin neelaththai surukithaan irukanum. Anyway fine article. Continue. Try to read Chidbavaananda only chella pillai RbvsManian books. Watch his YouTube. Try to arrange one pankuni muulam his lecture at saratha college thirunelveli Salem or Karur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *