தொடர்ச்சி..
பாத்ஷா ஜெய்னுலாபுத்தீன் (1420 -1470) காஷ்மீரத்தை ஆட்சி செய்த முகலாய ராஜாக்களுள் சகிப்புத்தன்மையுடன் இருந்த ஒரு ராஜா. அவர் ஆட்சியிலே நாம் வ்யாசத்தின் முன்பகுதியில் பார்த்த சங்கராசார்ய மந்திர் (ஜ்யேஷ்டேச்வர ஸ்வாமி மந்திர்) மற்றும் சாரதா பீடம் போன்ற ஸ்தலங்களை புனருத்தாரணம் செய்ததாகச் சரித்ரக் குறிப்புகள் உள்ளன. இந்த ராஜாவின் காலத்திற்குப் பின் இருந்த முஸல்மானிய ஸூஃபி மஹான்களில் ஒருவர் ஷேக் ஹம்ஸா என்ற ‘மக்தூம் சாஹேப்’.
பீர் மக்தூம் சாஹேப் அவர்கள் இரு அன்பர்களுக்கு வழிகாட்டியவர். ஜெனாப் மீர் ஹாஜி முஹம்மது க்வாஸா என்ற அன்பருக்கு அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பிறந்து சிசுவாகவே இறந்தன. ஆதலால் ஆறாவதாகப் பிறந்த ஆண் குழந்தையை பீர் ஷேக் ஹம்ஸாவிடம் எடுத்துச்சென்று அவரது சீடனாக ஏற்குமாறு விக்ஞாபிக்கிறார். முதலில் சீடனாக ஏற்க அவர் மறுப்பினும் தன் அரவணைப்பில் குழந்தையை வளர்க்க சம்மதித்த்தால் அவர் அரவணைப்பில் வளர்ந்த அக்குழந்தை பின்னாளில் பீர் மீர் நஸூக் காத்ரி என்ற ஒரு ஸூஃபி மஹானாக ஆகிறார். அவரது வம்சத்தில் வந்தவர் ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி அவர்களின் தகப்பனாரான ஜெனாப் மீர் குலாம் ரஸூல் நஸ்கி. காஷ்மீரத்தின் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமீபத்தில் ஜம்மு காஷ்மீரத்தில் கொண்டாடப்பட்டது.
பீர்பீர் ஷேக் ஹம்ஸா அவர்களிடம் ஈடுபாடு கொண்ட ஸ்ரீ தத்தாத்ரேய கணேஷ் கௌல் என்ற காஷ்மீர பண்டிதர் இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறார். அவரது வம்சத்தில் வந்தவர் ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி அவர்களின் தாயாரான ஆய்ஷா பானு அம்மையார். இந்த தம்பதிகளுக்குப் பிறந்த எட்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகளில் ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி அவர்கள் ஆறாவது ஆண் குழந்தை. ஸ்ரீ நகரில் ஹரிபர்வதம் அருகே பீருணி சத்ரி தர்வாஸா என்ற இடத்தில் இருந்த “சந்த்ரபீடம்” என்ற இவர்களது வீட்டிலிருந்து தர்ம சிந்தனை உள்ள இவரது தாயார் தனதில்லத்திற்கு வரும் அன்பர் அனைவருக்கும் சமயமெல்லாம் பாராது எப்போது வந்தாலும் அன்னமிட்டவர். தனது இளமையை ஹரிபர்வதக்குன்றின் அடிவாரத்தில் கழித்த ஸ்ரீ நஸ்கி அவர்கள் ஜம்முவிற்கு புலம் பெயர்ந்து அங்கு கட்டிய தன்வீட்டிற்கு வைத்த பெயர் ‘ஹரி பர்வத்’. மிகுந்த உணர்வு பூர்வமாக ஸ்ரீ நஸ்கி அவர்கள் குறிப்பிடுகிறார் –
எனக்கு ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அதைப் பற்றி வெகு காலம் முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் என் பாதங்கள் சாரதா பீடத்தை நோக்கி நடை போடும். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்.
~~~~~~~~
சாரதா பீடத்திற்கு ஸ்ரீ நஸ்கி அவர்கள் மிகுந்த முனைப்பு எடுத்து ப்ரயாணிக்கிறார். ஏன் இவ்வளவு முனைப்பு தேவைப்படுகிறது என்பதனைப் புரிந்து கொள்ளுமுன் இந்த இடம் எங்குள்ளது என்பதை நாம் உத்தேசமாக பூகோள ரீதியாகத் தெரிந்து கொண்டால் அவரது முனைப்பு புரியும்.
ஜம்மு கஷ்மீர் மாகாணத்தில் ஜம்மு, கஷ்மீர் மற்றும் லத்தாக் என்று மூன்று ப்ராந்தியங்கள். 1947ல் தேசப்பிரிவினையில் ஹிந்துஸ்தானம் இம்மாகணத்தின் கிட்டத்தட்ட 50 சதமானப் பகுதிகளை (Skardu valley, part of kashmir areas, Gigit, Baltistan & Aksaichin) தன் வசமிருந்து இழந்தது. இம்மாகாணத்தில் காஷ்மீரம், குரேஸ் (Gurez), ஸ்கர்டு, லத்தாக் போன்று பல பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. 1947ல் ஹிந்துஸ்தானப்பிரிவினைக்குப்பின் ஸ்கர்டு பள்ளத்தாக்கு பாக்கிஸ்தான் வசத்தில் உள்ளது. மற்ற பள்ளத்தாக்குப் பகுதிகள் இன்று ஹிந்துஸ்தான வசம்.
இவற்றில் குரேஸ் பள்ளத்தாக்கின் எல்லைக்கப்பால் சாரதா பீடம் உள்ளது. இன்று பாக்கிஸ்தானத்தின் ஆளுமையில் அங்குள்ள நீலம் ஜில்லாவின் சார்தீ தெஹ்சிலில் (Tehsil) உள்ளது இந்த ஸ்தலம். க்ருஷ்ணகங்கா, மதுமதி, சர்கன் ஓடை (ஸரஸ்வதி) என்ற மூன்று நதிகள் சங்கமமாகும் முக்கூடல் இந்த ஸ்தலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எல்லைக்கப்பால் ஹிந்துப்பெயரில் நிலைத்திருக்கும் சில இடங்களில் இதுவும் ஒன்று.எல்லைக்கப்பால் உள்ள பள்ளத்தாக்குப்பகுதியும் (குரேஸ் பள்ளத்தாக்கின் நீட்சி) நீலம் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது.
க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் இடதுகரை பெரும்பாலும் பாக்கிஸ்தான ஆளுமையில். வலக்கரையில் ஆங்காங்கு ஹிந்துஸ்தான க்ராமங்கள். ஹிந்துஸ்தானத்தின் ஆளுமையில் இருக்கும் காஷ்மீரத்தின் பாண்டிபோரா ஜில்லாவில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கின் கடைசீ க்ராமமான தாராபல் என்ற க்ராமத்திலிருந்து சாரதா பீடம் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இங்கிருந்து சாரதா பீடத்திற்குச் செல்ல சாலை மார்க்கம் இல்லை. ஹிந்துஸ்தானத்திலிருந்து பாக்கிஸ்தானம் போவதற்கு சாலை மார்க்கமாக இருவழிகள் மட்டும். அம்ரித்சர் ( அமிர்தசரஸ்) (Amritsar) – லாஹோர் (லாகூர்) (Lahore) மார்க்கம் ஒன்று. ஊரி (Uri) – முஸஃப்பராபாத் (Muzaffarabad) மார்க்கம் மற்றொன்று.
உலர் ஏரி (Wular Jheel (Lake)) குரேஸ் பள்ளத்தாக்கில் உள்ளது. காஷ்மீரத்தின் மிகப்பெரிய நன்னீர் ஏரி இது. டல் ஏரி இதை விட சிறியது. ஆனால் உலர் ஏரி முழுதும் வெங்காயத்தாமரை போன்ற களைக்கொடிகளால் நிறைந்துள்ளது. ஐக்ய நாடுகள் சபையின் ஒரு திட்டம் மூலம் ஏரியை சுத்தம் செய்யும் பணி நடக்க உள்ளதாக சொல்கிறார்கள்.
இப்போது வரைபடம் மூலம் சாரதா பீடம் இருக்கும் இடத்தை குத்து மதிப்பாகப் பார்ப்போம்.
சம்பூர்ண காஷ்மீரம் மற்றும் ஹிந்துஸ்தானத்தின் ஆளுமையில் இன்றிருக்கும் காஷ்மீரம் என இரு வரைபடங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
வரைபடம் 1: சம்பூர்ண காஷ்மீரம்
வரைபடம் 2: ஹிந்துஸ்தானத்தின் ஆளுகையிலுள்ள காஷ்மீரம்
ஸ்ரீ நகரை கேந்த்ர ஸ்தானமாக வைத்து இரண்டாம் வரை படத்தை (ஹிந்துஸ்தான ஆளுமையில் இருக்கும் காஷ்மீரம்) பார்க்கவும். ஸ்ரீ நகரத்தின் வடக்கில் மூன்று நகரங்கள். நேர் வடக்கில் ஜில்லா பாண்டிபோரா (Bandipora) . வடமேற்கில் ஜில்லா குப்வாடா (Kupwara). வடகிழக்கில் கர்கில் (கார்கில்) (Kargil) பள்ளத்தாக்கு. பாண்டிபோராவிற்கு அப்பால் எல்லைக்கு மிக அருகாமையில் சாரதா பீடம். க்ருஷ்ணகங்கா நதிக்கரையில்.
க்ருஷ்ண என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு ஒரு அர்த்தம் கருமை.
கண்ணா கருமை நிறக் கண்ணா என்று தமிழ்ப்பாட்டு உண்டல்லவா.
கருமையுடன் மிகவும் தொடர்பு உள்ள மற்றொரு நிறம் நீலம்.
நீல வண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா என்றும் தமிழ்ப்பாட்டு உண்டல்லவா.
இது போன்று சொற்களில் உள்ள ஒற்றுமைகளை ஒட்டியே எல்லைக்கப்பால் க்ருஷ்ண கங்கா நதிக்கரையில் உள்ள ஜில்லா நீலம் ஜில்லா எனவும் பள்ளத்தாக்கு நீலம் பள்ளத்தாக்கு எனவும் அழைக்கப்படுகிறது போலும்.
ஹிந்துஸ்தான ஆளுமையில் உள்ள காஷ்மீரத்தில் பாண்டிபோரா ஜில்லாவில் க்ருஷ்ண கங்கா நதிக்கரையில் கிஷண்கங்கா புனல் மின்சாரத் திட்டம் (330 மெகாவாட்) மும்முரமான கட்டுமானத்தில் உள்ளது. 1960 ம் வருஷத்திய சிந்து நதிகள் நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் வருகிறது. பாக்கிஸ்தான ஆக்ஷேபங்கள் இருந்தது. ஆனால் கட்டுமானப் பணி தொடர்கிறது.
சம்பூர்ண காஷ்மீர வரைபடத்தில் ஸ்ரீ நகருக்கு சற்றே வடமேற்கில் ஜில்லா பாராமுல்லாவையும் அதற்கு நேர் மேற்கில் ஜில்லா முஸஃப்பராபாதையும் (இன்று பாக்கிஸ்தானத்தில்) பார்க்கலாம். ஸ்ரீ நஸ்கி அவர்கள் முதலில் முஸஃப்பராபாத் சென்று அங்கிருந்து கிட்டத்தட்ட 140 கிலோமீட்டருக்கு மேலாக கிழக்கு முகமாக ப்ரயாணம் செய்து சாரதா பீடத்துக்குச் சென்றிருக்கிறார். உலகில் மிகவும் அபாயகரமான பகுதிகளாகக் கருதப்படுவது இரு பகை நாடுகளின் எல்லைப்புறப்பகுதிகள். எல்லைக்கப்பாலிருந்து ஊடுருவலைத் தவிர்க்க ஹிந்துஸ்தானப் பகுதியிலிருந்து அவ்வப்போது குண்டுவீச்சுகள் இருக்கும். அதேபோலவே அப்பாலிருந்தும்.
முதன்முறையாக 2000-ல் தன் மனைவியின் உறவினர் (மைத்துனி) வீட்டுத் திருமணத்திற்காக ஸ்ரீ நஸ்கி முஸஃப்பராபாத் சென்றிருக்கிறார். அச்சமயம் குண்டுவீச்சு அபாயம் இருந்ததால் நண்பர்கள் சாரதா பீடம் செல்ல வேண்டாம் என ஸ்ரீ நஸ்கி அவர்களின் விருப்பத்திற்கு தடையிட்டுள்ளனர்.
இரண்டாம் முறையாக 2005-ம் வருஷத்தில் மீண்டும் முஸஃப்பராபாத் சென்றுள்ளார். அக்டோபர் மாதம் ஊரி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் மிகப்பெரும் பூகம்பம் ஏற்பட்டு அதனால் பெரும் உயிர்ச்சேதம் விளைந்தது. ஸ்ரீ நஸ்கி அவர்களின் மைத்துனி அங்கே பள்ளித் தலைமை ஆசிரியையாக பணி புரிந்துள்ளார். தன் பள்ளியில் பல மாணாக்கர்களின் உயிரை அவர் காப்பாற்றியும் அப்பெண்மணி தன்னுயிரைக் காக்க இயலாது பூகம்பத்தில் இறந்து போனார். துக்கம் விசாரிக்கச்சென்ற அச்சூழ்நிலையில் அவரால் வேறு எங்கும் செல்ல இயலவில்லை. ஆனால் மனம் நிறைய சாரதா பீடம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது அங்கு செல்ல உகந்த நேரம் இல்லையே.
~~~~~~~~
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூற் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
– சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
शारदा शारदाम्भोज वदना वदनाम्बुजे ।
सर्वदा सर्वदाऽस्माकम् सन्निधिम् सन्निधिम् क्रियात् ॥
சாரதா சாரதாம்போஜ வதனா வதானாம்புஜே
ஸர்வதா ஸர்வதாsஸ்மாகம் ஸன்னிதிம் ஸன்னிதிம் க்ரியாத்
ச்லோக சாரம் :- சரத்காலத்தைப் போல் அள்ளிக் கொடுப்பவளும் (சரத்கால வயல்கள் அறுவடைக்குத் தயாரான கதிர்களால் நிறைந்திருப்பதால்) சந்த்ரனுக்கு நிகரான முகப்பொலிவு உடையவளும் எப்பொழுதும் வேண்டியதைக் கொடுப்பவளும் எனக்கு மங்கள கரமான ஞானம் அருளட்டும்.
மூன்றாம் முறையாக 2007-ம் வருஷம் ஸ்ரீ நஸ்கி சாஹேப் அவர்கள் தன் இறந்த மைத்துனியின் மகள் திருமணத்திற்காக முஸஃப்பராபாத் செல்ல நேர்ந்தது. இரண்டு முறை விடுபட்ட பயணத்திட்டம் இம்முறை கைகூட சூழ்நிலை சாதகமாக இருந்தது. திருமணம் முடிந்து ஜூலை மூன்றாம் தேதி சாரதா பீடம் செல்லத் தீர்மானமானது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இவ்விடங்களில் அப்போது அமலில் இருந்ததால் குண்டுமழை ப்ரச்சினை அப்போதைக்கு இல்லை.ஆக திட்டமிட்ட படி பயணிக்கிறார்.
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் சென்ற பின் ஸ்ரீ நகரிலிருந்து அவர் சென்ற பாதை நான் பயணித்த பாதையே. வழியில் உள்ள பண்பாட்டுச்சுவடுகளும் எல்லைப்புற கெடுபிடிகளும் முன்னமே பார்த்தோம். ஸ்ரீ நகரிலிருந்து முதலில் ஊரி செல்ல வேண்டும். பின்னர் அமன்சேதுவைத் தாண்டி ஊரி-முஸஃப்பராபாத் சாலை மார்க்கத்தில் முஸஃப்பராபாத் செல்கிறார்.
மேலலே ஸ்ரீ நஸ்கி சாஹேப் அவர்கள் கூற்றுப்படி அவர் பயணம் சென்றதன் சாரம் :-
முஸஃப்பராபாதிலிருந்து க்ருஷ்ணகங்கா நதியின் இடக்கறையோராமாக சாரதா பீடம் நோக்கிப்பயணம். 2005 பூகம்பத்திற்குப் பிறகு நிலச்சரிவுகளால் சாலைகள் மிகவும் குறுகிப் போய் விட்டதால் மரம்மத்துப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மிகுந்த இரைச்சலுடன் நுரை பொங்க குதித்துச் செல்கிறது நதி. காடுகளும் மலைகளும் கீழே குதித்து ஓடும் நதியையும் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். பயணத்தின் இடையிலே மதிய உணவிற்காக நீலம் ஜில்லாவின் தலைநகரமான ஆதிமுகம் என்ற ஊரில் தங்கி உணவெடுத்துக்கொண்டேன். ஆதிமுகத்திலிருந்து சாரதா செல்லும் சாலையின் அழகு ப்ரமிக்க வைக்கிறது. வழியெல்லாம் நதி தன் அழகைக் கூட்டிக்கொண்டே போகிறது. ஆற்றுப்படுகையில் ஹிந்துஸ்தான எல்லைக்குள் காமா என்ற நகரைக் காணலாம். எல்லைக்கு அப்பாலிருந்து இது கூப்பிடு தூரம். ஹிந்துஸ்தான எல்லையில் உள்ள கோழிக்குஞ்சுகளை இங்கிருந்த படி எண்ணிவிடலாம்.
ஆனால் சாரதாவை நெருங்கும் போதோ காற்றிலேயே எல்லை வித்யாசம் தெரிகிறது. க்ருஷ்ண கங்கா அலறிப் பாய்வதில்லை. அமைதியாக ஓடுகிறது. வேகம் இருந்தாலும் அதிலும் ஒரு சாந்தம் இருக்கிறது. நதி அகண்டு கொண்டே போகிறது. காடுகள் அடர்த்தி கூடி வருகிறது. காற்று குளுமையாக இருக்கிறது. கொஞ்சமாக “சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று உணரத் தொடங்குகிறோம். சுற்றுப்புறத்தில் எல்லாமே ஒளிமயமாக இருக்கிறது. சாந்தி, சாந்தி, சாந்தி, பஞ்ச பூதங்களும் மௌனமான தவத்தில் ஆழ்ந்து விட்டன போல் அப்படி ஒரு அமைதி. அது ஒரு சாந்நித்யம். அந்த ஆனந்த மயமான பூமியின் தனிமை உங்களை வரவேற்கிறது.
சாரதா க்ராம மண்ணைத்தொட்ட போது மாலை நேரமான படியால் அங்கிருந்த ஒரே ஓய்வில்லத்திற்குச் சென்றேன்.
க்ருஷ்ணகங்கா, ஸரஸ்வதி மற்றும் மதுமதி நதிகளின் முக்கூடலின் அருகே சாரதா பீட ஸ்தலமிருப்பதாக முன்னர் பார்த்தோமல்லவா. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சாரதா பீட ஸ்தலம். மாலையாதலால் ஸ்தலத்தை இருளில் பார்க்காது இரவில் ஓய்வெடுத்து மறுநாள் காலையில் சாரதா பீடம் செல்லத் திட்டமிடுகிறார்.
மேற்கொண்டு ஸ்ரீ நஸ்கி சாஹேப் அவர்களின் வார்த்தைகளில் :-
ஓய்வில்லத்தில் படுத்தேன் ஆனால் தூக்கம் வரவில்லை. தூக்கக் கலக்கமும் இல்லை. அலுப்பும் தெரியவில்லை. தூங்க விரும்பவில்லை. முடிந்த மட்டும் விழித்திருக்க விரும்பினேன். தூக்கம் என்னை உதறி விட்டது. எனக்குள்ளேயே ஏதோ ஒரு சக்தி என்னை இயக்கியதாக உணர்ந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த சக்தியே முடிவு செய்தது. அது சாதாரண இரவல்ல; ஒரு மகத்தான அனுபவத்தின் நடுவில் இருக்கிறேன் என்பது புரிந்தது. மண்ணெண்ணெய் விளக்கையும் அணைத்து விட்டேன். அறையில் வேறு விளக்கும் இல்லை. மை இருட்டு. ஆனாலும் அந்த இருட்டில் என்னைச் சுற்றியிருந்த எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.
அறைக்கு வெளியே புல்வெளிக்கு வர நினைத்தேன். வேலைக்காரன் வெளியே செல்ல வேண்டாம் என்று தடுத்தான். காட்டு விலங்குகள் உலவும் பகுதி அது என்று எச்சரித்து என் அறைக் கதவுகளைச் சாத்தினான். அவனது எச்சரிக்கையை நான் பொருட்படுத்தவில்லை. அறையினுள்ளே அடைந்து கிடக்க முடியவில்லை. மூன்று கதவுகளையும் திறந்து கொண்டு புல்வெளியைத் தாண்டி ஆற்றங்கரைக்கு நடந்தேன். புல்வெளியும் ஓய்வு இல்லமும் ஆற்றின் இயற்கையோடு இயற்கையாகத் தெரிந்தன.
ஆற்றங்கரை மேட்டில் இருந்த மரபெஞ்சில் அமர்ந்து க்ருஷ்ண கங்காவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். விண்டுரைக்க முடியாத அசாதரணமான அனுபவம் அது. இருட்டும் இல்லாத, வெளிச்சமும் இல்லாத சூழலில் க்ருஷ்ண கங்கா நதி வளைந்து நெளிந்து, விழுந்து, எழுந்து, மங்கி, ஒளிர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைவில் உள்ள மலைகளும் ஏதோ ஒரு விதத்தில் ஒளி சிந்திக்கொண்டிருந்தன. அந்த வெளிச்சம் எப்படிப்பட்டது என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஓவியத்திலும் வரைந்து காட்ட முடியாது. நினைவு மயக்கம் இல்லை. தெளிவாகவே இருந்தேன். ஒவ்வொரு காட்சியையும் பார்க்க முடிந்தது, உணர முடிந்தது. தடுக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து பார்த்தனவற்றை விவரிக்கும் சக்தி எனக்கு இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். அதாவது அந்த க்ஷணங்களில் நான் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மூதாதையர்களுடன் சேந்திருப்பது போல் உணர்ந்தேன். வாழ்க்கையை அறிவுத் தேடலுக்கு அர்ப்பணித்தவர்கள் அல்லவா அந்த முன்னோர்கள். எத்தனை நூற்றாண்டுகளுக்கு நின்று நிலைக்கக்கூடியது அவர்கள் செய்த ஞானத்தவம்! இப்படியே நீண்ட நெடுங்காலப் பாரம்பர்யத்துடன் பொழுதைக் கழித்தேன் என்பதே உண்மை.
என்ன ஒரு அனுபவத்தில் இரவு கழிந்திருக்க வேண்டும். பின்னும் காலமானால் தன் கடமையிலிருந்து பின்வாங்காதே,
“கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்
மது விருந்தொழுகின மாமலரெல்லாம்”
என காலையும் மலர்ந்தது. தொடர், மீண்டும் ஸ்ரீ நஸ்கி சாஹேபின் வார்த்தைகளில்
க்ருஷ்ணகங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ்ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. டல் (தால்) ஏரியின் மீது அஸ்தமன சூரியனின் கிரணங்கள் விழும் காட்சி பற்றிய பெரிஷியக் கவிஞர் இக்பாலின் கவிதை நினைவுக்கு வந்தது. பரம்பொருளே அப்போது காட்சி தந்ததாக உணர்ந்தேன் என்றார் இக்பால். என் அனுபவமும் அப்படியே.
இந்த நினைவுகளுடன் சாரதா பீடத்திற்குப் புறப்பட்டேன். பத்து நிமிடக் கார்ப்பயணம். பத்து நிமிட நடை. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை.
சிதைந்திருக்கும் இன்றைய நிலையிலும் கூட கோவிலின் தோற்றத்தில் எஞ்சியிருக்கும் பொலிவு. கோவில் பற்றிய தகவலை யாரோ உர்தூ மொழியில் எழுதிவைத்திருந்தனர். அதன் மொழிபெயர்ப்பு
புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் அல் பெரூனி அவர்கள் ‘கிதாப்- உல்-ஹிந்த்’ என்ற புத்தகத்தில் சாரதா பற்றி இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஸ்ரீ நகரிலிருந்து தென்மேற்கில் இருக்கிறது சாரதா. ஹிந்துஸ்தானியர்கள் இதை மிகவும் புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். பைசாகி மாதம் தொடங்கும் போது ஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். கரடு முரடான பாதை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நான் (அல் பெரூனி) அங்கே செல்லவில்லை.
~~~~~~~
சாரதா பீடம் பற்றி ஸ்ரீ நஸ்கி அவர்கள் பதிந்த படிக்கு சில குறிப்புகள்:-
கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில் இங்கே மத்திய ஆசியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் இருந்ததாதவும் புத்தமதத் தத்துவங்களுடன் வரலாறு, பூகோளம், பொறியியல், தத்துவம், தர்க்க சாஸ்த்ரம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. காஷ்மீர பாஷை சாரதா என்ற வரிவடிவத்தில் எழுதப்பட்டது. (இன்று உர்தூ லிபியில் எழுதப்படுகிறது). காஷ்மீர பாஷையின் வரிவடிவமான ‘சாரதா’ இப்பல்கலையில் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அங்குள்ள கட்டிடத்தின் மத்தியில் கருவறை உள்ளதாகத் தெரிவிக்கிறார். நூறடி உயரமுள்ள விதானம். சுவர்களில் சிற்பங்கள் இருக்கின்றன (இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் தேட இயலாது). மேற்கு வாயிலில் இருந்து கோவிலுக்குச் செல்ல 63 படிகள். கோயிலினுள் தடாகம் இருந்ததாகவும் பின்னர் அது மூடப்பட்டதாகவும் தெரிகிறது. சரும நோய் உள்ளவர்கள் அதில் குளித்தால் நோய் குணமாகும் என்று ஐதிஹ்யம் இருந்தது. நதிகளின் முக்கூடல் கோவிலிலிருந்து சற்றே தொலைவில்.
இருபத்து நாலு அடி நீளமும் அகலமும் மற்றும் முப்பது அடி உயரமும் உள்ள படிக்கு இன்றைக்கு சிதைந்த நிலையில் ஆலயம். கோவிலின் அருகே பெரும்பாலான மக்களுக்கு சாரதாவின் உண்மையான சரித்திரப்பின்னணி தெரியவில்லை. கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது. பராமரிப்பு இல்லாததே காரணம். பின்னிட்டும் இன்றுள்ள நிலை கூட பாக்கிஸ்தான சர்க்கார் இவ்விடத்தை பாதுகாத்த படியால் தான் இந்தளவிற்காவது உள்ளது என்பதையும் ஸ்ரீ நஸ்கி தெரிவிக்கிறார். நன்று. 2005-ல் ஊரி பகுதியில் பூகம்பம் நிகழ்ந்தும் கூட இவ்வாலயத்தைச் சார்ந்த பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்பதையும் தெரிவிக்கிறார்.
மற்றபடி தன் அனுபவத்தை அவர் வார்த்தைகளால் முடிப்பது :-
சில மணி நேரம் அந்தக் கோயிலிலேயே தங்கி எல்லாவற்றையும் கவனித்தேன். வெளியாருக்கு எதையாவது எழுதித் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அங்கு போகவில்லை. அதனால் காமிராவும் எடுத்துச் செல்லவில்லை. அங்கே போகவேண்டுமென்று உள் மனம் சொன்னது. அதனால் போனேன். ஆனால் என் மொபைல் காமிராவில் வசதி இருந்தது. அங்குமிங்குமாகச் சிலவற்றை புகைப்படம் பிடித்துக்கொண்டு ஜம்முவுக்குத் திரும்பினேன். அங்கே போய்த்தான் புகைப்படங்களின் தரத்தைப் பார்த்துத் திகைத்தேன்.
கடந்த அறுபது வருடங்களில் ஹிந்துஸ்தானத்திலிருந்து அந்தப் பகுதியில் உள்ள சாரதாவுக்குச் சென்று வந்த ஒரே கஷ்மீரி நான் தான் என நினைக்கிறேன். என் கனவில் காதில் விழுந்த வாசகம். “இந்தத் தோப்பே உன்னுடையது. வாதாம் மரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையும் ஒளிர்கிறது. அங்கே வைரங்கள், மரகதங்கள், வைடூரியங்கள், ரத்தினங்கள் இருக்கின்றன. அத்தோடு கல்வியும், அறிவும் ஞானமும் இருக்கின்றன.
தேடலைப்பற்றி பல பக்கங்களில் பேசும் வ்யாசம் தேடும் இடத்தைக் கண்ட அனுபவத்தைப்பற்றி ஏன் மிக விஸ்தாரமாகப் பேசவில்லை என்ற வினா எழலாம். ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக்குறைவானதே. மேலும் ஸ்ரீ நஸ்கி அவர்களது ஆழமான தாகம் இறையருளால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. முஸஃப்பராபாத் ஆகட்டும் அல்லது பாண்டிபோரா ஆகட்டும். ஒரு விதத்தில் நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்.
ஆனால் எது மாற்றுக்குறைவு எது மாற்றதிகம் என்று வித்யாசமில்லாது ஸ்புடம் போட்ட தங்கமாக ஒளிரும் ஒரே விஷயம் இந்தத் தேடல்களுக்கு அடித்தளமான காலம் வகுக்கவியலா மற்றும் மதங்களையும் கடந்த பாரதத்தின் தேசப்பண்பாடு. பாரதத்தின் தென் கோடியைச் சார்ந்த வழிபாட்டால் வைதிக ஸனாதனி ஹிந்துவான எனது தேடல்களை பாரதத்தின் வடகோடியில் இருக்கும் வழிபாட்டால் முஸல்மானான ஸ்ரீ நஸ்கி அவர்களது தேடல்களில் ஏதேனும் சில புள்ளிகளில் இணைய வைக்கும் சக்தி இந்த தேசப்பண்பாடு என்பது எனக்குப் புரிகிறது.
रत्नाकरादौतपदां हिमालयकिरीटिनीम् ।
ब्रम्हराजर्षि रत्नाड्यां वन्दे भारतमातरम् ॥
ரத்னாகராதௌதபதாம் ஹிமாலயகிரீடினீம்
ப்ரம்ஹராஜர்ஷி ரத்னாட்யாம் வந்தே பாரதமாதரம்
– பாரத பக்தி ஸ்தோத்ரம், 26
ச்லோகசாரம் :- எவளுடைய பாதங்களை ரத்னங்களை தன்னகத்தே கொண்ட சமுத்ரம் கழுவுகிறதோ எவள் இமயமலையை தனது முகுடமாக அணிந்தவளோ அந்த முகுடம் ப்ரம்மரிஷி மற்றும் ராஜரிஷிகளால் போற்றப்பட்ட சமயஒழுகுமுறை என்ற ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டதோ அந்த பாரதமாதாவை வணங்குகிறேன்.
எட்டாக்கனியாக தேச எல்லைக்கப்பால் சாரதா பீடம் எனும் சர்வக்ஞபீடம் விளங்கினாலும் பாரத்தின் தென் கோடியில் நம் ஊனக்கண்ணாலேனும் தன்னைக்காணும் பாக்யத்தை நல்கும் வாக்தேவியான சாரதையை த்யானித்து நிறைவு செய்கிறேன்.
विद्यामुद्राक्षमालाऽमृतकलशकरा कोटिसूर्यप्रकाशा
जाया पद्मोद्भवस्य प्रणतजनतते: सर्वमिष्टं दिशन्ती ।
इन्द्रोपेन्द्रादिवन्द्या त्रिभुवनजननी वाक्सवित्री शरण्या
सेयं श्रीशारदाम्बा सकलसुखकरी मङ्गलानि प्रदद्यात् ॥
– श्री शारदा पञ्चरत्नस्तुति: – श्री भारती तीर्थ महास्वामिन :
வித்3யாமுத்3ராக்ஷமாலா s ம்ருதகலசகரா கோடிஸூர்யப்ரகாசா
ஜாயா பத்3மோத்3ப4வஸ்ய ப்ரணதஜனததே: ஸர்வமிஷ்டம் திசந்தி
இந்த்3ரோபேந்த்3ராதி3வந்த்3யா த்ரிபு4வனஜனனீ வாக்ஸவித்ரீ சரண்யா
ஸேயம் ஸ்ரீசாரதா3ம்பா3 ஸகலஸுக2கரீ மங்க3லானி ப்ரத3த்3யாத்
ச்லோகசாரம் :- வித்யையையும் சின்முத்ரையையும் (ஜப) மாலையையும் அம்ருத கலசத்தையும் தன் கையில் கொண்டவளும் கோடி சூர்யர்களைப்போல் ப்ரகாசிப்பவளும் வேண்டுமடியார்க்கு வேண்டியதை நல்குபவளும் இந்த்ர உபேந்த்ராதி தேவர்களால் வணங்கப்பெறுபவளும் மூவுலகிற்கு அன்னையாய் விளங்குபவளும் வாக்கிற்குத் தேவதையாயும் அண்டியவர்க்குப் புகலிடமாயும் ப்ரம்மனுடனுறை தேவியாயும் விளங்குபவள் எவளோ அந்த தேவி சாரதை மகிழ்ச்சியையும் வளத்தையும் நல்கட்டும்.
~~~~~~
ஆஃப்கனிஸ்தானில் தாலிபன் ஆட்சியின் போது ப்ரேம் நகர் என்ற இடத்தில் இருந்த ஹிந்துக்கள் (ஸனாதனி மற்றும் சீக்கிய) இடம் பெயர்ந்து ஹிந்துஸ்தானத்திற்கு வரநேர்ந்தது. இப்போது அங்கு சற்றே நிலைமையில் முன்னேற்றம் இருப்பதால் இடம் பெயர்ந்த பஷ்டூன் ஹிந்துக்கள் அங்கே திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் அங்குள்ள முஸல்மான் சஹோதரர்கள் பலரும் அதை வரவேற்றதாயும் திண்ணை இணைய தளத்தில் ஒரு வ்யாசத்தில் வாசிக்க நேர்ந்ததது. எனக்குப் பழக்கமான சில பஷ்டூன் ஹிந்துக்களும் இந்தச் செய்தியை ஊர்ஜிதம் செய்தார்கள். அந்த வ்யாசத்திற்கு நான் மறுமொழி எழுதிய போது ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்கள் நான் காஷ்மீரம் பற்றி எழுத வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்கள். உள்ளபடி காஷ்மீரம் என்ற விஷயம் பற்றி எழுத வேண்டிய விஷயங்கள் பல. ஆன்மீகம் சார்ந்து என்னால் எழுத முடிந்த விஷயங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்வது தற்சமயம் உசிதம் என்று சொல்லியிருந்தேன். ஆர்வமூட்டிய அவருக்கு என் நன்றி.
சாரதாபீடம் என்ற ஸ்தலத்தை ஆதரமாக வைத்து அதை தரிசிக்க விழைந்த ஸ்ரீ நஸ்கி அவர்களுக்கும் எதேச்சையாக அந்த பாதையில் பயணித்த எனக்கும் பயணத்தடங்கள் பொதுவானவை (ஹிந்துஸ்தான எல்லைக்குள்). காஷ்மீரம் பற்றி நான் பகிர்ந்து கொண்டவை பெரும்பாலும் பயணத்தடத்தில் நான் கண்டு உணர்ந்த பண்பாட்டுச்சுவடுகளை தெரிவிக்கும் இடங்கள் மற்றும் பண்பாட்டுச்சுவடுகளை பகிரும் நிகழ்வுகள், மனிதர்கள், விஷயங்கள். அன்ய விஷயங்களையும் ஆங்காங்கு சொல்லியிருக்கலாம். ப்ரதான விஷயம் பண்பாடு சார்ந்தது. பின்னும் பண்பாடு சார்ந்தும் பல விஷயங்கள் சொல்ல விடுபட்டிருக்கலாம்.
பாத்ரபத (நம் மாதக் கணக்குப்படி சற்றேறக்குறைய புரட்டாசி) சுக்லபக்ஷ அஷ்டமி சாரதாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது. அச்சமயங்களில் இக்கோவிலில் தீர்த்த ச்ராத்தம் (முன்னோர்களுக்கு நதிக்கரையில் திதி கொடுத்தல்) மற்றும் ஹோமங்கள் செய்யப்படும். இன்றைக்கு பாண்டிபோரா ஜில்லாவில் உள்ள கலூஸா (Khaloosa) என்ற இடத்தில் உள்ள தேவி சாரதா கோவில் அருகில் இன்றும் இவை நடத்தப்பெறுகின்றன. ஜம்முவில் இடம் பெயர்ந்த காஷ்மீர ஹிந்துக்கள் அங்கே பன் தலாப் (Bantalab)என்ற இடத்தில் தேவி சாரதைக்கு ஆலயம் எழுப்பியுள்ளார்கள். அங்கே தங்கள் பாரம்பரிய வழிபாடுகளை நடத்திக்கொள்கிறார்கள்.
ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி அவர்கள் மிருக வைத்தியத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் ஷேர்-ஏ-கஷ்மீர் பல்கலைக்கழகத்தில் மூத்த விக்ஞானியாகப் பணியாற்றியுள்ளார். ICCR (Indian Council for Cultural Relations) என்ற ஸ்தாபனத்தின் ஜம்மு கஷ்மீர் ப்ராந்திய இயக்குனராக இவர் பணியாற்றி வருகிறார். கஷ்மீரி, உர்தூ, பார்ஸி மற்றும் ஆங்க்லத்தில் வ்யாசங்கள் மற்றும் கவிதைகள் எழுதி வருகிறார். 2008 ஏப்ரல் மாதத்தில் சாரதா பீடம் சென்று வந்ததன் நினைவாக கேந்த்ரீய ஜம்மு பல்கலைக்கழகத்தில் புகைப்படக்கண்காட்சி ஒன்று நடத்தியுள்ளார்.
காஷ்மீர ஹிந்துக்கள் தற்போது ஹிந்துஸ்தானம் – பாக்கிஸ்தானம் இடையே இருக்கும் இரண்டு சாலை மார்க்கங்கள் தவிர ஹிந்துஸ்தான எல்லைப்பகுதியிலிருந்து (தாராபல்) 8 கிமீ தொலைவிலுள்ள சாரதாபீடத்திற்கு சென்று வர ஏதுவாக மூன்றாவது சாலை மார்க்கம் திறக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று ஒரு சொல்லாடல் உண்டு. நாம் இங்கு பார்த்த சங்கராசார்ய மந்திர் கோயிலுக்கும் மற்றும் காஷ்மீரத்திலுள்ள மற்றைய ஹிந்து ஸ்தலங்களுக்கும் பூஜ்ய ஸ்ரீ காஞ்சி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் தமது முதிய வயதில் யாத்ரை மேற்கொண்டுள்ளார். மற்ற சமயத்தலைவர்களும் இவ்வாறு காஷ்மீர யாத்ரை செய்ய வேண்டும் என ப்ரார்த்திக்கிறேன். சுற்றுலா செல்வதில் விருப்பமுள்ள அன்பர்களும் இயன்ற போது காஷ்மீரத்துக்கும் பயணத்திட்டம் போட்டு குழுவாக சென்று வருதல் நன்று.
(முற்றும்)
பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார்,
நாங்கள் சாரதா கோயிலுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் , தங்களது இந்த கட்டுரையை படித்ததன் மூலம் பெரிய பாக்ய சாலி ஆனோம். எவ்வளவோ புனிதமான உணர்வுகள் இதை படிக்கும் போது எம் மனதில் எழுகின்றன.அதற்கு காரணமாய் அமைந்த பரம்பொருளுக்கும், அதன் கருவியாய் அமைந்த தங்களுக்கும், வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளும், பாராட்டுக்களும். காஷ்மீர யாத்திரை செல்ல அனைவரும் முன்வருவோம்.
காஷ்மீரம் செல்லவும், அன்னை சாரதா கோவிலை தரிசிக்கவும் ஆவலை ஏறபடுத்தியுள்ள பதிவு. ஆழ் மனதின் அனுபவ வெளிப்பாடாகவே தங்களின் எழுத்துக்கள் அமைந்துள்ளன. இறைவனின் ஆசிகள் தங்களுக்கு என்றும் உரித்தாகுக.
நன்றி ஸ்ரீமதி அத்விகா.
காஷ்மீரமும் ஹிந்துஸ்தானியரின் பயணத்திட்டத்தில் இடம் பெர வேண்டியது மிக அவசியம்.
ஸ்ரீமான் நஸ்கி போன்ற முஸல்மாணியப் பெருந்தகைகளின் பண்பாட்டினைப் போற்றிக் கொண்டாடும் செயல்பாடுகள் கலாசார தேசியவாதத்தில் பற்று உள்ள அன்பர்களுக்கு உத்சாஹமளிக்க வல்லது.
ஓ !! அருமையான பதிவு. காஷ்மீருக்கு சென்று சர்வஞ்ய பீடவாசினி அன்னை சாரதா தேவியை உடனே தரிசிக்கவேண்டுமென்ற ஆவலை உண்டாக்கி உள்ளது. குங்குமப்பூவும் சம்ஸ்கிருதமும் காஷ்மீரில் அல்லாது வேறு எங்கு கிடைக்கும்? என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. கும்பகர்ணனைப்போல் உறங்கும் ஹிந்து சமுதாயத்தை எழுப்ப ஒலிக்கும் முரசாகவும் உள்ளது.