34. निर्गुणो निष्क्रियो नित्यो निर्विकल्पो निरंजनः |
निर्विकारो निराकारो नित्यमुक्तोsस्मि निर्मलः ||
நிர்குணோ நிஷ்க்ரியோ நித்யோ நிர்விகல்போ நிரஞ்சனஹ |
நிர்விகாரோ நிராகாரோ நித்யமுக்தோஸ்மி நிர்மலஹ ||
நிர்க்குணன் நிரஞ்சனன் நித்தன் நிராகாரன்
நிர்விகாரன் சுத்தன் நிட்கிரியன் – நிர்விகற்பன்
நித்த முக்தன் முன் நிகழ்த்திடப்பட்டவை
அத்தனையும் நான் என்று அறி
(குணங்களற்றவன், பற்றற்றவன், என்றும் உள்ளோன், உருவமற்றவன், மாறுபாடு இல்லாதவன், பரிசுத்தமானவன், செயலற்றவன், செய்யவேண்டும் எனும் சிந்தனை இல்லாதவன், எப்போதும் விடுபட்டவன் இப்படியாகச் சொல்லப்பட்டவை அனைத்தும் என்னைப் பற்றியே என்று அறிந்து கொள்.)
முன்பு “அது அல்ல” என்ற பொருள்படும் “நேதி” பற்றி சொல்லப்பட்டது. இங்கும் அதே போன்ற எதிர்மறையான சொற்றொடர்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. சொல்வதை நேரடியாகச் சொல்ல முடியாதா என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம். முதலில் அதைப் பார்ப்போம்.
நமது தினசரி வாழ்வில் நாம் காண்பதெல்லாம் மெய்யானது என்றும், அந்த உணர்வை நம் எண்ணங்களாலும், செய்கைகளாலும் நாம் மேலும் வலுப்படுத்திக் கொண்டேபோய் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் நமது கனவில் வரும் அனுபவங்கள் எப்படி விழித்தபின் மாயமாய் கரைந்து போகின்றன என்பது நமக்கு நன்றாகவே தெரிந்தும், அந்த நிகழ்வுகள் நமக்கு ஏதேனும் படிப்பினையைத் தெரிவிக்கிறதா என்று நம்மில் பலர் சிறிதும் யோசனை கூட செய்வதில்லை. இது இப்படி என்றால், நம் ஆழ்ந்த உறக்கத்தில் வழக்கமாக “நான்” என்ற உணர்வுடன் இருக்கும் நம்மையே நாம் இழந்து, அத்துடன் நாம் சாதாரணமாகக் காணும் உலகத்தையும் இழந்து போனாலும், மீண்டும் நனவு நிலை திரும்பும்போது நமது முந்தைய கனவு-உறக்க நிலை அனுபவங்கள் எதையுமே ஒரு பொருட்டாகக் கூட எண்ணாது, அது அப்படித்தான் இருக்கும் என்ற மனநிலையில், சாதாரணமாக உலக வழக்கில் ஈடுபடுகிறோம்.
இந்த நமது உலகப் பார்வையும் கயிற்றை பாம்பாகப் பார்ப்பது போலத்தான். அப்படி இருக்கும்போது அவனிடம் முதலில் “அது பாம்பு அல்ல” என்றுதானே ஆரம்பிக்க முடியும்? இல்லாவிட்டால் அவன் பார்ப்பதை பாம்பாகத்தான் பார்த்துக்கொண்டே இருப்பான். அதிலிருந்து அவன் கவனத்தைத் திருப்ப “அது பாம்பு அல்ல” என்றுதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதே போல ஆன்மீகத்திலும் “நீ பார்க்கும் ஒன்று அதுவல்ல” என்ற எதிர்மறையாகவே ஆரம்பிக்கிறது. உலகில் நாம் எதை எடுத்துக்கொண்டாலும் அதனைச் சில குணங்களோடுதான் பார்க்கிறோம். அதுதான் நாம் வழக்கமாகச் செல்லும் வழி. அதனாலேயே நல்லது-கெட்டது, நண்பன்-எதிரி, பாவம்-புண்ணியம், மேலானது-கீழானது என்ற இருமைகள் புகுந்துவிடுகின்றன. இந்த பாகுபாடுகள் இல்லாமல் ஒன்று இருக்க முடியும் என்பதை நம்மால் அறிவுபூர்வமாகக் கூட உணரமுடிவதில்லை. அப்படியே இருந்தாலும் அது கிடைப்பதோ, அல்லது அதைக் காணுவதோ மிகவும் அரிது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதால் தான் நாமே இருக்கிறோம் என்பதை சீடனுக்கு உணர்த்துவது குருவின் கடமையாகிறது. அதனால் அனைவர்க்குமே நன்கு தெரிந்தவைகளில் ஆரம்பித்து அவர் சீடனுக்கு “அவை-அவை அல்ல” என்று உபதேசம் செய்கிறார். அதனாலேயே எதிர்மறை விளக்கங்கள் காணப்படுகின்றன.
ஒருவனை வாழ்த்தும்போது நல்ல குணங்களான “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்” என வாழ்த்துவோம். ஆனால் குணங்கள் புத்தியைச் சார்ந்தவை. அத்தகைய குணங்கள் ஒருவனின் சாதாரண வாழ்வுக்கு உதவி அவனை மேலும் நன்கு சிந்திக்க வைக்கும். ஆனாலும் ஒரு முற்றிய ஆன்மீக நிலையில் அவன் “அந்தக் குணங்கள்” யாருக்கு என்றும் சிந்திக்க வேண்டிவரும். அப்போது புத்தியைச் சார்ந்த குணங்கள் எதுவும் இல்லாத ஆன்மாவாகிய “நான்” என்பதை அறிந்து கொள்வதால் “நான் நிர்க்குணன்” என்ற நிலை தெரியவரும். ஒருவன் கர்மங்களைச் செய்யும்போது அதன் விளைவுகளிலும் மனம் ஈடுபடுவதால், அவை மனத்தைச் சார்ந்தவை. நான் மனமல்ல என்பதால், அந்தப் பற்றுக்களினால் வரும் அழுக்கு ஏதும் இல்லாத நிரஞ்சனன்.
காலத்தை எவ்வளவு நீட்டினாலும், குறுக்கினாலும் நான் எப்போதும் உள்ளவன் என்பதால் நான் நித்தன். உருவம் என்று ஒன்று இருந்தால் அது இருக்கும் இடம் என்றும், இல்லாத இடம் என்றும் சொல்லவேண்டி வரும். ஆனால் எனக்கோ எங்கு இருந்தாலும் நான் என்ற உணர்வு இருப்பதால் நான் நிராகாரன் (உருவமற்றவன்). உடல் என்ற உருவத்திற்குத்தான் இளமை, முதுமை போன்ற நிலைகள் ஏற்படுவதால் உடல் விதவிதமான மாறுபாடுகளை அடைகின்றன. நான் என்ற உணர்விற்கு இந்த மாறுபாடுகள் ஏதும் இல்லாததால் நான் நிர்விகாரன் (மாறுபாடு இல்லாதவன்).
உருவம் என்று ஏதும் இல்லாத உணர்வாகிய நான் என்பதால் உருவத்தை ஒட்டும் தூசுகள் ஏதும் இல்லாத பரிசுத்தன். ஏதும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாததால், நான் சங்கல்பம், விகல்பம் அற்றவன். அப்படியே ஏதேனும் செய்தால் “நான் செய்கிறேன்” என்ற சிந்தனை இல்லாததால் நான் நிட்கிரியன். பந்தம் என்ற ஒன்று இல்லாததால் அதிலிருந்தும் விடுதலை என்றும் இல்லாது போகிறது. எனக்கு பந்தம் ஏதும் இல்லாததால் நான் நித்த முக்தன். இப்படியாகச் சொல்லப்பட்ட அனைத்தும் நானே என்பதை தீர உன்னுள் விசாரித்து “நான்தான் அது” என்று அறிவாயாக.
35. अहमाकाशवत्सर्व बहिरन्तर्गतोsच्युतः |
सदा सर्वसमः सिद्धो निःसङ्गो निर्मलोsचलः ||
அஹமாகாஷவத்சர்வ பஹிரந்தர்கதோச்யுதஹ |
சதா சர்வசமஹ சித்தோ நிஹிசங்கோ நிர்மலோச்சலஹ ||
ஆகாயம் போல அகிலத்தின் உள் வெளியான்
சாகாதான் சர்வசமன் சித்தன் – தேகாதி
யாவற்றும் பற்று அற்றான் என்றும் அமலன் சலியான்
ஆவன் நான் என்றே அறி
(ஆகாயத்தைப் போல அனைத்துப் பொருட்களிலும் உள்ளும் புறமும் வியாபித்துள்ளவன், மரணமில்லாதவன், கீழோ மேலோ எங்கும் சமமாயிருப்பவன், எப்போதும் உள்ள சித்தன், தூல-நுண்ணிய-காரண தேகங்கள் முதலிய அனைவற்றிலும் இருந்தாலும் அவைகள் எதனிலும் பற்றில்லாதவன், சலனமற்றவன் இப்படியாக நான் இருப்பவன் என்று நன்கு அறிவாயாக.)
முன்பு எதிர்மறையான சொற்றொடர்களை வைத்துக்கொண்டு ஆன்மாவைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இங்கு “ஆகாயம் போல” என்று நேர்மறையாகத் தொடங்கிவைத்து ஆன்மாவின் சொரூப லக்ஷணம் துல்லியமாக விளக்கப்படுகிறது. இங்கும் எதிர்மறைகள் தவிர்க்கப்படவில்லை என்பதையும் காணலாம். ஆகாயம் என்பதை sky என்று குறுகிய அளவில் கொள்ளாது, space என்று விரிந்த அளவில் பொருள் கொண்டால் நன்கு விளங்கும்.
முன்பே நாம் பார்த்ததுபோல ஒரு காலியாக உள்ள குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்வோம். ஆனால் அந்தக் குடத்திற்குள் ஆகாயம் இருப்பதை அக்குடத்தை உடைத்தாலோ, அல்லது அதை அங்கிருந்து நீக்கினாலோ தானே நமக்கு விளங்குகிறது. அது மட்டும் அல்லாது அந்தக் குடம் ஜடமாக ஓர் இடத்தை முன்பு அடைத்துக்கொண்டு இருந்தாலும், குடத்தை அகற்றியதும் அந்த இடம் கூட ஆகாயத்துடன் ஒன்றாகிவிடுகிறது அல்லவா? அதனால் ஆகாயத்தை எந்தப் பொருளின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளது என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். அதாவது இருப்பது ஆகாயம் ஒன்றுதான், மற்றதெல்லாம் வந்து போவது என்றுதான் ஆகிறது. அந்த ஆகாயம் ஓரிடத்தில் தொடங்கி மற்றோர் இடத்தில் முடிகிறது என்று சொல்ல முடியாது என்பதால் அதற்குப் பிறப்பும் இல்லை, அதனால் அதற்கு மரணமும் இல்லை என்று ஆகிறது.
எங்கும் என்று சொன்ன பின்பு, அதற்கு கீழ் என்றோ மேல் என்றோ ஒரு வருணனை எப்படி இருக்க முடியும்? திடமாக இல்லாது வாயுவாக நுண்ணியதாக காற்று போல ஒரு பொருள் இருந்தால், அது கூட இவ்வளவு உயரம் வரைதான் இருக்க முடியும் அதற்கு மேல் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் அந்தக் காற்றே இருக்கும் பரந்த வெளியோ எங்கும் வியாபித்து இருப்பதால் அதற்கு கீழ்-மேல் என்று ஒன்றும் இல்லாது இருப்பதுதானே இலக்கணம்? அப்படி வேற்றுமைகள் ஏதும் இல்லாததால் எங்கும் சரி சமமாக இருப்பவன் என்று விவரிக்கப்படுகிறது.
இல்லாத ஒன்றை உருவாக்கும் போது, அதனைச் செய்வதற்கு என்று சில வரைமுறைகள் இருக்கும். அந்த வரைமுறைகளே பலரும் பாடுபட்டு சில பல தோல்விகளைச் சந்தித்தபின் கண்டறிந்ததாக இருக்கும். அது தவிர அதைத் தற்போது செய்வதற்கும் ஓர் ஈடுபாடுடன் கூடிய மனம் ஒன்றும் வேண்டும். அதனையே சித்தம் என்பார்கள். அந்தச் சித்தம் வருவதற்கோ, வளர்வதற்கோ முன்னாலேயே ஒருவனது இருப்பு என்பது ஒரு முன்னோடியாதலால், அந்த இருப்பையே என்றுமுள்ள சித்தன் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. “சித்தர்கள்” என்று நாம் பொதுவாக அறிந்ததையும் இதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. சித்தர்கள் காட்டும் சித்து எல்லாமே மனம் என்ற கருவியைக்கொண்டே செய்யப்படுவது.
அதையே ரமணர் ஒரு பாட்டில்
“சித்தத்தின் சார்பு இன்றி சித்தியாச் சித்திகளில் சித்தம் தோய்வார்,
எங்கண் சித்தக் கலக்கம் தீர் முக்தி சுகம் தோய்வார் மொழி”
என்று சொல்வார். அதாவது சித்தம் என்ற ஒன்று தீர்ந்தால் தான் முக்தி என்னும்போது, அதை எப்படி சித்தத்தைக் கொண்டு செய்யப்படும் சித்திகள் மூலம் அடையமுடியும் என்று கேட்கிறார். ஆதலால் என்றுமுள்ள சித்தன் எனப்படுவது அந்த முக்தி நிலையைக் குறித்துச் சொல்லப்படுவது என்றும், அதாவது நம்மைப் பொருத்தவரை நமது எந்த நிலையிலும் நம்மை நாம் என்று உணர்கின்ற என்றும் உள்ள இருப்பு என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.
நமது அன்றாட நனவு-கனவு-உறக்க அனுபவங்களில் வந்து போகும் தூல-நுண்ணிய-காரண உடல்களுக்கு ஏற்றாற்போல் விதவிதமான மலங்கள் இருக்கின்றன. தூல உடலுக்கு வியர்வை, சிறுநீர் போன்ற நமது கழிவுகளான மலங்கள் உள்ளன. அவை அவ்வப்போது அகன்றால் தான் நமது தூல உடலே இவ்வுலகில் தங்க முடியும். அவை போன்றே கனவில் நாம் நுண்ணிய உடலை அடைவதன் காரணமே நமது ஆசை, பொறாமை, பழி வாங்கும் மனம், துயரம் போன்ற மலங்கள் தான். அவை எதுவும் இல்லாது போனால், எந்தக் கனவும் இல்லாது ஒருவன் அமைதியாகத் தூங்கியிருப்பான். நமது ஆழ்ந்த உறக்கத்தில் வரும் காரண உடலின் மலமோ தான் இருக்கிறோம் என்றுகூட தன்னைப் பற்றியே அறிய இயலாத தன்மையான அவித்தை எனப்படும் அறியாமைதான். இப்படி தேகங்கள் பல வந்து போனாலும், இவை எதையுமே பற்றிக்கொள்ளாது, அதனால் இவை எதனாலுமே பாதிக்கப்படாது, நிர்மலமாய் இருப்பவன் என்று ஆத்மா வர்ணிக்கப்படுகிறது.
தூல வடிவில் ஜடப்பொருளாக இருந்தால் இப்போது ஓரிடம், மறுபடி வேறிடம் என்று அசைவுகள் இருக்கும். ஜடமாக இல்லாது எங்கும் பரவியுள்ளதால் ஓர் இடைவெளியும் இல்லை, அது அசைவதற்கு இடம் என்றும் ஏதுமில்லை. அதனால் சலனம் ஏதுமில்லை. நுண்ணிய வடிவில் மனம் போல இருந்தாலோ ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்றோ அல்லது செய்ய முடியவில்லை என்றோ, அது அப்படி இருக்க வேண்டும் என்றோ அல்லது கூடாது என்றோ, விதவிதமான வகைகளில் சலித்துக்கொண்டு இருக்கும். அப்படி இல்லாததனால் அது நிச்சலத் தன்மை கொண்டுள்ளது.
இப்படி எல்லாத் தன்மைகளும் கொண்ட ஒன்றே ஆத்மா ஆகும், அதுவே நான் என்பது என்றும் அறிந்துகொள்வாயாக என்று கூறப்பட்டுள்ளது.
36. नित्यशुद्धविमुक्तैकमखण्डानन्
सत्यं ज्ञानमनन्तं यत्परं ब्रह्माहमेव तत् ||
நித்யஷுத்தவிமுக்தைகமகண்டானந்
சத்யம் ஞானமனந்தம் யத்பரம் ப்ரஹ்மாஹமேவ தத் ||
எது நித்தம் சுத்தம் எது முக்தம் ஏகம்
எது அகண்ட இன்பு இரண்டல்லது – எது சத்து
சித்து அனந்தம் ஆகும் திகழ் அப்பரப் பிரம
வத்து யானேயா மதி
(எந்தப் பொருள் என்றும் உள்ளதாயும், எப்போதும் பரிசுத்தமாய் இருப்பதாயும், எந்தப் பந்தமும் இல்லாததாயும், இரண்டற்ற ஒன்றேயாக இருப்பதாயும், இடையறாத இன்ப வடிவானதாயும், உள்ள பொருள் உண்மையாயும் அறிவுமயமாயும், முடிவில்லாது விளங்குகிறதோ அந்தப் பரப்பிரம்மமே நான் என்பதை உணர்வாயாக.)
தொடர்ந்து மூன்றாவதாக உள்ள செய்யுளிலும், ஆன்மாவின் லக்ஷணங்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. வருவது போவது என்றில்லாமல் என்றும் இயல்பாய் உள்ளதால் அது நித்தன் எனப்படுகிறது. எந்த விதமான மலங்களும் அதற்கு இல்லாமையால் அது பரிசுத்தன் எனப்படுகிறது. அது ஒன்று இருப்பதால்தான் உடல் போன்ற மற்றவைகள் இருக்க முடியும் என்பதாலும், எதனையும் பற்றுவதற்கு அதற்கு ஏதும் இல்லாததாலும் அது எந்தப் பந்தமும் இல்லாது இருப்பது எனச் சொல்லப்படுகிறது.
அதனால் மற்றவைகள் தோன்றினாலும் அவை எதனாலும் பாதிக்கப்படாது, ஆனாலும் அவை அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ஏகனாய் இருக்கிறது. வேறு ஒன்று வேண்டும் என்றால்தான் எதிர்பார்க்கப்படுவது வருமோ, வராதோ என்ற சந்தேகங்கள் இருக்கும். வந்தால் இன்பமும், வராவிட்டால் துன்பமும் அடைவது இயல்பான தொடர் நிகழ்வுகள். தன்னைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றால் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை, அதனால் வரக்கூடிய அந்த மாறுபாடான நிகழ்வுகளுக்கும் இடமில்லை. தான் மட்டும் இருப்பதால் தன்னிலே இன்புற்று தனியனாய் இருக்கும் அதற்கு வேண்டுவது ஏதும் இல்லையாதலால் அது எப்போதும் இன்ப வடிவாகவே இருக்கிறது.
உள்ள பொருளான அது ஒன்றே இருப்பதால் அதைத் தவிர வேறு இருக்கிறது என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால், அது ஒன்றே உண்மையாக இருப்பதாகும். இருப்பது என்று மட்டும் இல்லாது, தான் இருப்பதை உணர்ந்துகொண்டும் இருப்பதால் அது ஒன்றே சுத்த அறிவு. அதனாலேயே உலகில் உள்ள மற்ற அனைத்திற்கும், அவைகள் இருக்கின்றனவா இல்லையா என்று சொல்வதற்கு சாட்சியும், நிரூபணமும் தேவை என்னும்போது, எவருக்கும் தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எப்போதும் வருவதில்லை. அதனாலேயே எவரிடமும் அதைக் கேட்பதும் இல்லை. அவரவர் புத்தியின் மூலம் வரும் தன்னைப் பற்றிய அந்த சிற்றறிவு கூட அந்தப் பேரறிவு இருப்பதால் வரும் அறிவே என்பதை உணர்ந்தே தெரிந்துகொள்ள முடியும். சிற்றறிவு என்பது கண்ணாடியில் பிரதிபலிக்கும் நம் மறு உருவம் அல்லது நம் நிழல் போலாகும். நாம் அவைகளைப் பிடிக்கலாம்; ஆனால் மறு உருவமோ, நிழலோ நம்மைப் பிடிப்பது எப்படி? அதுபோல பேரறிவைப் பற்றி சிற்றறிவு எப்படி அறிய முடியும்? நம் அறிவால் அதனை அறியும் முயற்சியை விட்டுவிட்டு, அதுவாக இருப்பதால் மட்டுமே அந்தப் பேரறிவை உணர்ந்துகொள்ள முடியும்.
இருக்கிறோம் என்ற உணர்வுக்கு ஒரு தொடக்கம் இல்லாததால் அதற்கு ஒரு முடிவும் கிடையாது. அந்த உணர்வு கூட முடிவு என்றில்லாத அந்தப் பேரறிவின் இயல்பினால் ஒருவனுக்கு வருவதே.
இப்படியாக மேலே சொல்லப்பட்ட அனைத்து இயல்புகளும் ஆன்மாவினுடையதாக உணர்ந்துகொள். அதுவே “நான்” என்ற உணர்வாக நம்மிடம் விளங்குகிறது.
(தொடரும்)
இந்த தொடரை இந்த பகுதியை படிக்கும்போது கண்களில் என்னை அறியாமல் நீர் வந்தது. மெய் சிலிர்த்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, எந்தநூலை அல்லது நூலின் ஒரு பகுதியை படிக்கும்போது , உன் கண்களில் தானே கண்ணீர் வருகிறதோ, மற்றும் மெய் சிலிர்க்கிறதோ, அது சத்திய வாக்கு, தேவ வாக்கு என உணர்வாயாக என்று கூறினார். இந்த ஆன்ம போதம் தொடர் தேவ வாக்கு என நான் இப்போது உணர்ந்தேன். இதனை வழங்கிய திரு இராமன் அவர்களுக்கும், வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் நம் நன்றிகள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.