அடிபணிதல்

மூலம் : அயான் ஹிர்ஸி அலி
தமிழில் : அ. ரூபன்

Ayan hirsi ali அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த Submission என்ற திரைப்படத்தின் முதலாம் பாகத்துக் கதை இது. டச்சுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மொகமது பையூரி (Mohammed Bouyeri) என்னும் இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச் சென்ற எச்சரிக்கைக் குறிப்பினை அடுத்து ஹிர்ஸி அலி நெதர்லாந்தை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.

பாகம் ஒன்று

இனி ஹிர்ஸி அலி :

இந்தத் திரைப்படத்தின் பிரதியை முதன் முதலாக தியோடர் வான்-கோவிடம் நான் எடுத்துச் சென்ற போது, அவர் இதனை ஒரு திரைப்படமாக உருவாக்கலாம் என்று யோசனை சொன்னார். அதன்படி எடுக்கப்பட்ட “அடிபணிதல் (Submission)” திரைப்படம், 2004 ஆகஸ்டில் டச்சுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நவம்பர் 2004-இல் தியோடர் ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் கொல்லப்பட்டார்.

“அடிபணிதலின்” மையக்கருத்து, ஒரு தனி மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு பற்றிய ஒன்று. எவர் மனதையும் புண்படுத்தவோ அல்லது கோபம் கொள்ளச் செய்வதற்காகவோ இந்தத் திரைப்படத்தை நான் எழுதவில்லை. ஒரு முஸ்லிம் பெண்ணானவள், குரானில் கூறப்பட்டுள்ள வாசகங்களைப் பின்பற்றி, எதனைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எவ்வாறு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து அடிபணிகிறாள் என்பதனைக் காட்டுவதற்காக மட்டுமே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

இதன் இன்னொரு முக்கிய நோக்கம், கடவுளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பில், கடவுளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடிபணிவது மட்டுமே முக்கியம் என்பதிலிருந்து விலகி, கடவுளுக்கும் நமக்குமான உறவானது பேச்சுவார்த்தையை (dialogue) நோக்கி நகர வேண்டும் என்பதாகும். இதனைச் சொல்வதற்கு எனக்கு நன்கு தெரிந்த முஸ்லிம்களின் பிரார்த்தனை முறையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கும் மேலாக முஸ்லிம்கள் இறைவனை நோக்கி ஐந்து முறை தொழவேண்டும் எனபது அவர்களின் கடமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது ஒரு காரணம்.

ஏற்கனவே சொன்னபடி, இஸ்லாமியப் பெண்கள் தாங்கக் வாழும் கடுமையான வாழ்க்கைச் சூழலிலும், குரானில் அளிக்கப்பட்ட இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ்ந்து வருகையில், இறைவனிடமிருந்து தங்களின் இன்னல்களுக்கான பதில்களை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

அவர்கள் கேட்பது இதுதான்,

“எல்லாம் அறிந்த இறைவனே, நான் உனக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து, அடிபணிந்து நிற்கிறேன். இருந்தாலும் என் வாழ்க்கை நரகமாக இருக்கிறதே! அது ஏன்?”

ஆனால், அவர்களின் இறைவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

*

இந்தப் பகுதி பாகம் ஒன்று என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் நான் அடுத்த பாகங்களை எழுதுவதற்கு எண்ணிக் கொண்டிருக்கிறேன். இது யாரையும் வெறுப்பேற்றி சினம் கொள்ளச் செய்வதற்காக எழுதப்பட்டதல்ல என்பதனை மீண்டும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இதனைப் படிக்கும் சிந்திக்கும் திறனுள்ளவர்களும், முக்கியமாக சிந்திக்கும் திறனுள்ள, அல்லா குறித்து ஊசலாடும் மனமுள்ள நம்பிக்கையாளர்களும் இதில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படைக் கருத்தின் நியாயங்களை எதிர் கொள்ள வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். அல்லாவே நம்மைப் படைத்து இந்த உலகின் சவால்களை எதிர்கொள்ள வைக்கிறார். எனவே நமது சந்தேகங்களும், ஆண், பெண் என இருபாலரும் தினம் தினம் சந்திக்கும் சவால்களும் அல்லாவின் நேரடியான கட்டளைகளால் உருவானவை.

இனிவரும் “அடிபணிதல்” பாகம் இரண்டில், அல்லாவின் கட்டளைகளை அப்படியே நம்பி, அதனைத் தங்களின் இகவாழ்வில் கடைபிடிக்க முடியாமல் தவிக்கும் நான்கு இஸ்லாமிய ஆண்களைப் பற்றியது. இந்தப் பாகம் ஒன்றில் நான்கு இஸ்லாமியப் பெண்கள் எவ்வாறு தங்கள் பிரார்த்தனை மற்றும் கேள்விகள் மூலம் இறைவனை எதிர் கொள்கிறார்கள் என்பது போல.

பாகம் மூன்றில் அல்லா பதிலளிப்பார்.

அறிமுகம் :

ஆமினா, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை எந்தக் கேள்வியும் கேட்காமல் பின்பற்றி, அதன்படி வாழும் ஒரு நம்பிக்கையாள முஸ்லிம் பெண்மணி. ஆனால் அவளைச் சுற்றிலும் அல்லாவின் பெயரால் தினமும் துன்புறுத்தப்படும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். நாள் தவறாமல் அவர்களின் கணவன்மார்கள் மற்றும் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, குடும்ப உறவுகளாலேயே கற்பழிக்கப்பட்டு (incest), அடியும் உதையும் வாங்கி வாழ்ந்து வருகிறவர்கள் அவர்கள்.

மேற்கூறிய கொடுமைகள் அனைத்தும் அல்லா அளித்த குரானால் நியாயப்படுத்தப்பட்டவை. ஆமினா அவர்களைக் குறித்து மிகவும் கவலைப்படுவதுடன், தன்னையும் அவர்களில் ஒருத்தியாக நினைத்துக் கொள்கிறாள். எனவே அவள் தினமும் அல்லாவை நோக்கி, இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி மிகக் கடுமையாகப் பிரார்த்தனை செய்கிறாள். ஆனால், அல்லாவிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தடையில்லாமல் தினமும் நடக்கின்றன.

ஒருநாள் ஆமினா எவரும் எதிர்பாராத ஒரு செயலைச் செய்கிறாள். தொடர்ந்து, ஒருநாள் கூட இடைவிடாமல் அவள் செய்துவந்த தொழுகையைச் செய்யாமல் நிறுத்துகிறாள். பிரார்த்தனைக்கு முன் கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய குரானின் முதல் அத்தியாயத்தின் துவக்கத்தை மட்டும் படித்துவிட்டு உடனே அல்லாவிடம் பேசத் துவங்குகிறாள். அல்லா குரானில் சொன்னதை மட்டுமே கேட்டு நடந்த ஆமினா, முதன் முதலாக அல்லாவை நோக்கிக் கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறாள்.

இது நடக்குமிடம் :

இஸ்லாமிஸ்தான். (இது ஒரு கற்பனையான நாடு. அங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள். அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் நடைமுறையிலிருக்கிறது).

நடிப்பவர்கள் :

ஆமினா – பிரதான பாத்திரம் (அல்லாவிடம் பேசுபவள்)

ஆயிஷா – நூறு பிரம்படிகள் வாங்கிய வலி தாளாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருக்கிறவள்.

சஃபியா – அவளது கணவனால் நாள் தவறாமல் வன்புணர்ச்சி செய்யப்படுபவள்.

ஜைனப் – அவளது கணவனால் கடுமையாக அடிக்கப்பட்டு உடலெங்கும் காயங்களுடன் இருக்கிறாள். அவள், அவனுக்கு அடிபணிவதில்லை என்று நினைப்பதால்.

ஃபாத்திமா – முகத்திரை அணிந்திருக்கிறாள். அவளது குடும்பத்திற்குள்ளேயே தகாத உறவிற்கு ஆளாக்கப்பட்டவள்.

மேற்கூறிய ஐந்து பெண்களும் அவரவர்களுக்குரிய இடங்களில் இருக்கிறார்கள். அவர்களின் நடுவே ஆமினா தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள். பின்னர் அங்கிருந்து எழுந்து முன்னோக்கி நடந்து அங்கிருக்கும் பிரார்த்தனைப் பாயை எடுத்து விரிக்கிறாள்.

பிரார்த்தனைப் பாய் மெக்கா இருக்கும் திசை நோக்கி இருக்கிறது. ஆமினா அதன் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு மெக்கா இருக்கும் திசையை நோக்குகிறாள். பின்னர் தன் கைகளை உயர்த்தித் தன் உள்ளங்கைகள் தெரிவது போல வைத்துக் கொண்டு “அல்லாஹு அக்பர்” என உரக்கச் சத்தமிடுகிறாள். பின்னர் கைகளை மார்பின் குறுக்கே, இடது கையை வலது கையின் மீது இருக்கும்படி வைக்கிறாள். பின்னர் தனது பார்வையை பிரார்த்தனைப் பாயின் அடுத்த முனையில் செலுத்திக் கொண்டு நிற்கிறாள். அந்த நிலையின் நின்று கொண்டே ஆமினா “சுரா பாத்திஹா” (குரானின் ஆரம்பம்) படித்து முடிக்கப்படும்வரை இருந்து கொண்டிருக்கிறாள்.

“ஆஆஆமிமிமின்ன்ன்” என்ற வார்த்தை அவள் காதில் விழுந்ததும், தலையை உயர்த்தித் தனக்கு முன்னாலிருக்கும் காமிராவைப் பார்க்கிறாள்.

1. ஆயிஷா (நூறு பிரம்படிகள் வாங்க வேண்டுமென்று தண்டனையிடப்பட்டவள்)

ஆமினா கீழ்க்கண்டவாறு பேசத் துவங்குகிறாள். அது ஆயிஷா எனப்படும் பெண்மணியின் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்த நேரத்தில் காமிரா மெதுவாக ஆமினாவிடமிருந்து, ஆயிஷாவை நோக்கி நகர்கிறது.

ஆயிஷா தரையில் சுருண்டு படுத்திருக்கிறாள். பிரம்படிகளால் பட்ட காயங்கள் அவள் உடலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அவளது உடலின் மீது குரானின் பாடம் 24, வசனம்24 (Al Nur or The Light) எழுதப்பட்டிருக்கிறது.

ஆமினாவின் பேச்சு,

“ஓ அல்லா, என்னுடைய ஆன்மா உடைக்கப்பட்டு, பிரம்பினால் அடிக்கப்பட்ட காயங்களுடன் இதோ இங்கு வீழ்ந்து கிடக்கிறேன். என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்த நீதிபதியின் குரல் எனது தலைக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறது. எனக்களிக்கப்பட்ட தண்டனையானது உனது வார்த்தையில்,

submission

‘தகாத உறவு கொண்ட ஆணும், பெண்ணும்
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டால்
அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும்;
இறைவனால் அளிக்கப்பட்ட இந்த வாசகங்களையும்
இறைவனயும், இறுதி நாள் நீதியையும் நீங்கள் நம்பினால்
இந்த தண்டனையை மாற்றாதீர்கள்;
அவர்களுக்கு எந்தவிதமான இரக்கத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்;
நம்பிக்கையாளர்கள் கூட்டம் இவர்களுக்கு அளிக்கப்படும்
இந்த தண்டனையை பார்த்து ரசிக்கட்டும்’

(மேற்கண்ட குரானின் வசனம் அரபி மொழியில் ஆயிஷாவின் உடல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது).

ஆமினா தொடர்கிறாள்,

(மிக நீண்ட வசனங்கள். கட்டுரையின் சுவாரஸ்யம் கருதி அதன் சாராம்சத்தை மட்டும் இங்கு தந்திருக்கிறேன் – அ.ரூபன்)

ஆயிஷா, ரஹ்மான் என்பவனைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள். இருவரும் ரகசியமாகச் சந்தித்து சந்தோஷித்திருந்த காரணத்தால் அவள் கர்ப்பிணியாகிறாள். இவர்களின் உறவு குறித்து அக்கம்பக்கமிருப்பவர்கள் பேசத் துவங்குகிறார்கள். இருந்தாலும் இரக்கமுள்ளவனும், எல்லாம் வல்ல இறைவனான அல்லா அவர்களின் காதலை அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றுவார் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.

இப்படியிருக்க ஒருநாள், அந்த ஊரின் நீதிபதி, அவர்கள் இருவரையும் மறுநாள் தன்னை வந்து சந்திக்கும்படி உத்தரவிடுகிறார். ரஹ்மானின் தந்தை அவனை யாரும் அறியாமல் வேறொரு நாட்டிற்குத் தப்பிச் செல்ல உதவுகிறார். ஆயிஷாவை தைரியமாக இருக்கச் சொல்லி, அதற்கும் மேலாக அல்லாவை நம்பும்படி செய்தியனுப்பிவிட்டுக் காணாமல் போகிறான் ரஹ்மான். நீதிபதி, இஸ்லாமியச் சட்டப்படி ஆமினாவிற்கு நூறு பிரம்படிகள் கொடுக்கும்படி தண்டனையிட்டு, அது நிறைவேற்றப்படுகிறது.

“ஓ அல்லா! எனது புனிதமான காதலை தகாத உறவாக குறைத்து மதிப்பிட்ட உன் மீது எனக்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும்?

இதோ உன்னுடைய பெயரால் பிரம்பால் அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு இங்கே தரையில் கிடக்கிறேன்.

என்னுடைய புனிதமான இந்தக் காதலைக் கொன்ற இந்தத் தீர்ப்பு நீ அளித்த புனிதமான புத்தகத்திலிருந்தல்லவா வந்தது?

உன் மீதான நம்பிக்கையும், அர்ப்பணிப்புள்ள அடிபணிதலும் என்னுடைய சுய அழிப்பாகத்தான் இப்போது எனக்குத் தெரிகிறது.”

2. சோஃபியா (அவளது கணவனால் தினமும் வன்புணர்ச்சி செய்யப்படுபவள்)

காமிரா மெதுவாக ஆமினாவிடமிருந்து சோஃபியாவை நோக்கித் திரும்புகிறது. ஒரு அழகான பெண்ணின் முதுகுப்புறம் தெரிகிறது. உடலை மறைக்கும், முன்புறம் இறக்கி வெட்டப்பட்ட ஒரு வெண்மையான அங்கியை அவள் அணிந்திருக்கிறாள்.

அவளது முதுகிலும், தொடையிலும் குரானின் பாடம் 2, வசனம் 222 (Al-Baqara or The Cow) எழுதப்பட்டிருக்கிறது.

சோஃபியாவிற்குப் பதினாறு வயதாகும் போது அவளது தந்தை அஜீஸ் என்பவனுக்கு அவளை மணமுடித்து வைக்கிறார். அஜீஸ் உதட்டினில் தழும்புகளுடன், பெரிய மூக்குடனும், கம்பளிப் பூச்சி போன்ற புருவங்களுடனும் அவலட்சணமாக இருக்கிறான். சோஃபியா அவனை மனதார வெறுக்கிறாள். அஜீஸ் அவளை நெருங்குகையில் அவனது உடலிருந்து எழும் நாற்றமும் அவளைப் பாடாய்ப்படுத்துகிறது.

ஆமினா சோஃபியாவின் துயரங்களைச் சொல்கிறாள்,

“ஓ அல்லா! உன்னுடைய கட்டளையின்படி நான் அவனுடைய உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிகிறேன். அதன்படியே அவன் என்னை எடுத்துக் கொள்ளவும் அனுமதித்தேன். ஆனால் அருவருப்புடன் நான் அவனைத் தள்ளிவிடும் ஒவ்வொரு முறையும் அவன் உன்னையே மேற்கோள் காட்டுகிறான்,

‘பெண்ணின் மாதவிடாய் குறித்து அவர்கள் என்னைக் கேட்டார்கள்; பெண்கள் வலியிலும், அசுத்தமாயும் இருக்கும் அந்தக் காலத்தில் விலகியிருந்து அவர்கள் சுத்தமாகும் அவர்களை அணுகாமல் காத்திருப்பாயாக;அவர்கள் தங்களைச் சுத்தம் செய்தபின், அவர்களை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், இறைவன் உத்தரவிட்டபடி அணுகலாம்; கடவுள் தன்னை ஒவ்வொரு செயலுக்கும் அணுகும் ஒருவனை எப்போதும் விரும்புகிறார்” என்று.

எனவே, நான் எனது மாதவிடாய் குறித்து அவனுக்குப் பொய் சொல்வேன். இருப்பினும் காலம் வருகையில் அவன் என் உடைகளைக் களைய உத்தரவிடுவான். அப்போது நான் அடிபணிவேன். அவனுக்கல்ல; உனக்கு!

ஆனால் வர, வர எனது கணவனின் தொல்லைகள் என்னால் தாங்க முடியாதவையாக ஆகிக் கொண்டு வருகின்றன.

எனவே, ஓ அல்லா! எனக்கு அவனுடன் இத்துயரங்களைத் தாங்கி வாழும் வலிமையை எனக்குக் கொடு!

இல்லாவிட்டால் உன் மீதான என் நம்பிக்கை தகர்ந்து போய்விடும்!

3. ஜைனப் – தினமும் கணவனால் அடித்து துன்புறுத்தப்படுபவள்.

காமிரா மெதுவாக ஆமினாவிடமிருந்து ஜைனப்பை நோக்கி நகர்கிறது. ஜைனப்பின் முகம் அடிபட்ட காயங்களுடன் வீங்கிக் காணப்படுகிறது. அவளுடைய உடைகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. வெளித் தெரியும் அவளின் உடலின் பாகங்களின் மீது – கைகள், தோள்கள், வயிறு போன்ற பகுதிகளின் மீது குரானின் பாடம் 4, வசனம் 34 (Al-Nisa or The Women) எழுதப்பட்டிருக்கிறது.

ஆமினா பேசத்துவங்குகிறாள்,

“ஓ அல்லா! மிக உயர்வானவனே! நீ சொன்னாய், ‘ஆண்களே பெண்களின் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பவர்கள். ஏனென்றால் நீ அவர்களுக்கு இன்னுமொரு வலிமையைக் கொடுப்பட்டிருக்கிறது’ என. ஆம்; வாரத்தில் ஒருமுறையேனும் நான் என் கணவனின் வலிமையை எனது முகத்தில் உனர்கிறேன்.

ஒ அல்லா! எனது கணவனுடன் நான் வாழும் வாழ்க்கை எனக்குத் தாங்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் நான் உனக்கு அடிபணிந்து இருக்கிறேன். என் கணவனும் எனக்குத் தேவையானவற்றைத் தருவதால் நான் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறேன். அவன் வீட்டில் இல்லாத சமயத்திலும் நான் உனது கட்டளைகளின்படி என்னைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் என் கணவன் என் மீது சந்தேகம் கொள்கிறான்; என் நடத்தை குறித்து அஞ்சுகிறான்; நான் அவனுக்கு நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறான். ஒரு படைத்தலைவன் சிப்பாய்களிடம் சத்தமிடுவது போல என்னிடம் சத்தமிடுகிறான்.


என்னை எச்சரித்துப் பின்னர் அடித்துத் துவைக்கிறான்.

ஒ அல்லா! உயர்வான இடத்தில் இருப்பவனே! உனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது எனக்கு அடுத்த உலகில் நல்லதொரு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் என்கிறாய். ஆனால் இந்த உலகில் என் கணவனின் பாதுகாப்பிற்காகவும், பராமரிப்பிற்காகவும் நான் கொடுக்கும் விலை மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

இப்படி இருக்கையில், இன்னும் எத்தனை நாளுக்குத்தான் நான் உனது கட்டளைகளை மதித்து நடக்கப் போகிறேனோ என எனக்கு வரும் எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை.

4. பாத்துமா – முகத்திரை அணிந்தவள். அவளது குடும்பத்திற்குள்ளேயே தகாத உறவிற்கு ஆளாக்கப்பட்டவள்.

ஆமினா, பாத்துமா என்னும் பெண் படும் அல்லல்களைக் குறித்துப் பேச ஆரம்பிக்கிறாள். காமிரா மெதுவாக ஆமினாவிடமிருந்து பாத்துமாவை நோக்கித் திரும்புகிறது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஹிஜாப்பால் மூடிய ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். அவள் அதன் முன் பக்கத்திலிருக்கும் ஜன்னல் போன்ற பகுதியிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் தரையில் உட்கார்ந்திருக்க அவளது ஹிஜாப்பின் மேல் வெள்ளை எழுத்தில் குரானின் பாடம் 24, வசனம் 31 (Al-Nur or The Light) எழுதப்பட்டிருக்கிறது.

(மீண்டும் நீளமான வசனங்களைத் தவிர்த்து அதன் சாராம்சம் மட்டும் இங்கே)

பாத்துமா இறைவனின் கட்டளைப்படி தனது உடல் முழுவதையும் மூடி, அடக்க ஒடுக்கமாக வீட்டினுள்ளேயே அடைந்து வாழும் ஒரு பெண். இருப்பினும் அவளுக்கு பிற மதத்துப் பெண்களைப் போல சுதந்திரமாக உடையணிந்து உலகப் பயணம் செய்ய ஆசைப்படுகிறாள். ஆனால் அல்லாவின் கட்டளை அவளை வீட்டிற்குள்ளேயே இருக்கச் சொல்கிறது. அவ்வாறு பெண்கள் செல்வது பாவம் என வலியுறுத்துகிறது குரான்.

ஆமினா சொல்கிறாள்,

“ஒ அல்லா! எல்லாம் அறிந்தவனே! இரக்கம் நிறைந்தவனே!
….
….
நானும் அவ்வப்போது பாவம் செய்திருவேன்.

காற்று என் தலை முடிகளுக்குள் செல்லுவது போல, சூரிய ஒளி எனது தோள்களைத் தொட்டுத் தழுவுவது போல, எங்காவது ஒரு கடற்கரையில் நிற்பது போல அடிக்கடி நான் கற்பனை செய்து கொள்கிறேன். ஆனால் அது உனக்குப் பிடிக்காதே என்று அஞ்சுகிறேன்.

உலகமெல்லாம் பயணம் செய்து, அங்குள்ள பிற மக்களையும், இடங்களையும் கண்டு வருவது போல நான் கனாக் காண்கிறேன். ஆனால் பெண்கள் அடக்கம் காக்க வேண்டும்; வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றல்லவா கட்டளையிட்டிருக்கிறாய்?

உன் கட்டளை என்னை சுதந்திரமாக எங்கும் செல்வதைத் தடுக்கிறதே! எனவே நான் என் குடும்பத்தினருடன் மட்டும் வீட்டில் இருந்து கொண்டிருந்தேன்.

இப்படி இருக்கையில் எனது தந்தையின் சகோதரனான ஹக்கீம் எங்கள் வீட்டில் தங்கியதிலிருந்து எல்லாம் மாறிவிட்டது.

நான் வீட்டில் தனியாக இருக்கையில் ஹக்கீம் எனது அறைக்கு வருவார். என்னை வற்புறுத்தி என்னைப் பல தகாத காரியங்கள் செய்யச் சொல்வார். என்னிடம் தொடக்க்கூடாத இடங்களையெல்லாம் தொடுவார்.

அவர் இப்படி என்னைச் செய்வதால் நான் வீட்டிற்குள்ளும் ஹிஜாபை அணிந்து வர ஆரம்பித்தேன். இருப்பினும் அவர் என்னை விடவில்லை.

இரண்டு முறை என்னுடைய ஹிஜாபை உருவி, எனது உள்ளுடைகளைக் கிழித்து என்னைக் கற்பழித்துவிட்டார்.

இதனை எனது அம்மாவிடம் சொன்ன போது அவள் அதனை எனது அப்பாவிடம் சொன்னாள். ஆனால் எனது அப்பா அவரது சகோதரனின் மரியாதையைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டார்.

என்னுடைய சித்தப்பா என்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது உள்ளத்தில் தாங்க முடியாத வலி உண்டாகிறது. கூண்டிலடைக்கப்பட்டு பலியிடத் தயாராகவிருக்கும் ஒரு விலங்கு போல என்னை நான் உணர்கிறேன். எனக்குள் அவமானமும், குற்றவுணர்ச்சியும் நிறைகிறது. என்னுடைய குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தாலும் நான் தனியளாக உணர்கிறேன்.

ஓ அல்லா! இப்போது நான் கர்ப்பிணி. எனது கர்ப்பம் தெரிந்ததும் எனது சித்தப்பா ஓடிவிட்டார். எனது பெருகி வரும் வயிற்றை இப்போதைக்கு இந்த ஹிஜாப் கொண்டு மூடி வைத்திருக்கிறேன். ஆனால் என்றோ ஒரு நாள் உண்மை வெளிவரப்போகிறது. அப்போது பலரும் என்னை அவமானப்படுத்துவார்கள். எனது கன்னித்தன்மையை இழந்ததற்காக என்னுடைய அப்பா என்னைக் கொல்லவும் தயங்க மாட்டார்.

இதையெல்லாம் கண்டு நான் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன். ஆனால், ஓ அல்லா! உனக்குத்தான் தற்கொலை செய்வது பிடிக்காதே என்று தயங்கி நிற்கிறேன்.

ஓ அல்லா! உயிரை உண்டாக்கி உயிரை நீக்குபவனே!

என்னுடைய வாழ்நாளில் உன்னுடைய கட்டளைகளை மதித்து நடப்பதைத் தவிர வேறெதுவும் செய்ததில்லை. இந்த இக்கட்டிலிருந்து நீ என்னைக் காப்பாற்றுவாய் என்று நம்பி உன்னைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.

எனவே, நான் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உனக்கு அடிபணிந்து கொண்டிருப்பேனோ தெரியவில்லையே!”

(இப்படியாக அந்தப் பெண்கள் தங்களின் துயரங்களைச் சொல்லி முடிக்கிறார்கள். திரைப்படம் முடிவுறுகிறது).

******

ஹிர்ஸி அலி இத்திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை இன்னும் வெளியிடவில்லை. என்றாவது ஒரு நாள் அது வெளிவரலாம். அல்லது வெளி வராமலேயே போகலாம்.

7 Replies to “அடிபணிதல்”

 1. இந்த கட்டுரை தொடரில் வரும் பல விஷயங்கள் மனதை தொடுவதாக உள்ளன. இந்த அளவுக்கு பெண்களை கொடுமைப்படுத்தும் இந்த தீவிரவாத மதம் , உலகம் முழுவதும் , அந்த மதத்தினை பின்பற்றுபவர்களாலேயே அழிந்து போகும். இது சத்தியம். பெண்களை கொடுமைப்படுத்துவது தான் ஒரு மதத்தின் செயல்பாடு என்றால், அந்த மதம் ஒன்று திருத்தப்பட வேண்டும் அல்லது தானே ஒழிந்து போகும். இவர்கள் மனித இனத்துக்கே எதிரானவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மூட நம்பிக்கையின் உச்சக்கட்டமே பெண்ணடிமை தான்.

 2. நம்மாளுங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சாலும் கண்டுக்காம விட்ருவாங்க. அலகு குத்துறான், பூணூல் போடறான், காவடி எடுக்கறான், தீமிதிக்கறான் இதெல்லாம் மூட நம்பிக்கை; முட்டாள்தனம்னு பேசுவாங்க. வாய் கிழிய மேடைல நம்ம ஆன்மீகத்த கிழி கிழின்னு கிழிக்கிற யாரும் இதையெல்லாம் ஒரு மனிதாபிமானத்துக்கு கூட பேச்சுல தொட்டுப் போனது இல்ல. என்ன கொடுமை சரவணன் இது?

 3. seems it is a classic art movie. The author has observed the movie with clear understanding and presented in nice manner. Kudos to him.

 4. திரைப்படம்தான் என்றாலும் நமக்குத்தெரியாத ஒரு மதத்தின் நடைமுறைகளை வெளிப்படுத்துவதால் எனது கருத்துக்களை எழுதுகிறேன். உலகில் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் மதமான இந்துமதத்தில் நாம் பிறந்துவிட்டதால், இந்த நடைமுறைகளைக்கேட்டவுடன் நமது இரத்தம் கொதிக்கிறது. உலகம் முழுவதுமே முஸ்லிம் வாக்குவங்கி ஆசையால் இதை யாரும் தட்டிக்கேட்கப்போவதில்லை. முஸ்லிம்களின் வன்முறை எண்ணம் மதத்தின் வழியே போதிக்கப்படுகிறது என்பதால் முஸ்லிம் அடிப்படைவாதத்தைக் கற்றுத்தரும், மதராசாக்களை தடைசெய்ய வேண்டும், இது நடக்குமா? வன்முறையில் பிறந்து, வன்முறையால் வளர்ந்துவரும் முஸ்லிம்கள் வன்முறையாலேயே அழியப்போவது உறுதி. எதற்காகவோ மதம்மாறிய இந்திய முஸ்லிம்கள், இந்த வீச்சை உணர்வார்கள? உணர்ந்து தாய் மதம் திரும்புவார்கள?

 5. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களில் அதிகம் பெண்களாம். சர்வே கூறுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மை ஆகி விடுவார்களாம். அவர்களெல்லாம் இந்த படத்தை பார்க்கவில்லையோ…. அவர்களுக்கு இலவசமாக நீங்கள் போட்டுக் காட்டலாமே….. 🙁

 6. //டச்சுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மொகமது பையூரி (Mohammed Bouyeri) என்னும் இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். //

  //அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களில் அதிகம் பெண்களாம். சர்வே கூறுகிறது.//

  மேற்கூறிய 2 விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது நண்பர்களே!

 7. கூட்டமாக முட்டாள் தனமாக பலர் தவறான காரியங்களை செய்கிறார்கள். அதெல்லாம் சரியாகி விடுமா ?வன்முறைகள் நிகழும்போது பஸ், ரயில் ஆகியவற்றை கூட்டமாக கொளுத்துகிறார்கள். அதெல்லாம் சரி என்று சொல்ல முடியுமா ? ஆபிரகாமிய மதங்கள் எல்லாமே அடிமைத்தனத்தை வளர்ப்பவை தான். சுய சிந்தனைக்கு அங்கு வேலை கிடையாது. பெண்ணடிமைத்தனத்துக்கு வால் பிடிக்கும் கசடுகள். இந்த பூமியில் இருந்து இந்த கசடுகளை கடவுள் விரைவில் அகற்றுவார். இந்து மதத்தில் புரட்சி/ சீர்திருத்தக் குரல் கொடுக்க முடியும். ஆனால் ஆபிரகாமிய மதங்களில் மாற்றுக்கருத்து/ சீர்திருத்தம் விரும்புவோர் உடனே படுகொலை செய்யப்படுவார்கள். ஆபிரகாமிய மதங்களில் பெண்கள் சேருகிறார்கள் அமெரிக்காவில் என்று சொல்லி புளகாங்கிதப்படுவதில் என்ன இருக்கிறது ? டாஸ்மாக் கடை வாசலில் கூட கூட்டம் அதிகம் காணப்படுகிறது என்பதால் அது புனித இடம் ஆகிவிடாது. பெண்ணின் முகமூடி, அகற்றப்படவேண்டும், பெண்ணுக்கு அனைத்து துறையிலும் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெற்றோர் சொத்தில் பெண்ணுக்கு , ஒரு மகனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ , அதே பங்கு வழங்கப்பட வேண்டும். வழிபாட்டு தளங்களில் இருந்து ஒரு நூற்றாண்டுக்கு ஆண்களை அப்புறப்படுத்தி , முழுப்பொறுப்பும் பெண்களிடம் வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்தால் ,ஆணுக்கு சமமான அனைத்து உரிமையும் பெண்களுக்கு வழங்கப் பட்டால் தான், உலகம் சிறப்பு பெறும். இது செய்யப்படாதவரை ஆணாதிக்க ஆபிரகாமிய மதங்கள் தானே மறைந்து ஒழியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *