நேற்றைய கட்டுரை சில தீவிர எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியை விமர்சிக்கலாமா? ஏன் தேவையில்லாமல் அவரை விமர்சிக்க வேண்டும்? இதே கேள்வி மகாத்மா காந்தியோ ஜவஹர்லால் நேருவோ விமர்சிக்கப்பட்ட போது இந்தத் தரப்பில் இருந்து எழவில்லை. காந்திக்காகவும் நேருவுக்காகவும் ‘எப்படி விமர்சிக்கலாம்?’ என கிளர்ந்தெழுந்தவர்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியை எப்படி விமர்சிக்கலாம் என கேட்கவில்லை.
ஆலய பிரவேசத்தின் போது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி எடுத்த நிலைபாடு, கிலாபத் இயக்கத்தில் மகாத்மா காந்தி எடுத்த நிலைபாடு, கிழக்கு வங்க அகதிகள், காஷ்மீர், திபெத் விஷயங்களில் ஜவஹர்லால் நேரு எடுத்த நிலைபாடு – இவையெல்லாம் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குவது நமக்கு நல்லது. நமக்கு என்றால் ஹிந்து சமுதாயத்துக்கு; நமக்கு என்றால் ஹிந்துஸ்தானத்துக்கு நல்லது. இதற்கு பொருள் அவர்களை அவதூறு செய்வதல்ல. நேருவின் ஹிந்து வெறுப்பு மனநிலை, சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தலித்-புறக்கணிப்பு மனநிலை, காந்திஜியின் இஸ்லாமிய தாஜா மனநிலை ஆகியவற்றின் தொடர்ச்சிகள் இன்றைக்கும் நம்முடன் பயணித்து வருகின்றன. நம்மை பலவீனப்படுத்தி வருகின்றன. இவற்றை நேர்மையாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டியது நம் கடமை.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் எளிமை, வெளிப்பட வாழ்ந்த தூய வாழ்க்கை ஆகியவை பொதுவாழ்க்கையில் -அது அரசியலோ ஆன்மிகமோ- இருக்கும் ஒவ்வொருவர் முன்பும் வைக்கப்படும் ஒரு ஆதர்சம். அவர் குளிர்பதனப்படுத்தப்பட்ட அறைகளில் வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து தங்க கீரிடம் ஜொலிக்க ரத்தினாகாரங்களுடன் அமர்ந்து அத்வைத பேருரைகளை ஆற்றியிருக்க முடியும். ஆனால் அவர் மாட்டுத் தொழுவங்களிலும் கிணற்றடிகளும் குளக்கரைகளிலும் இருந்துதான் அதை செய்தார். ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி நம் பாரம்பரியத்தின் மகத்தான ஒரு அத்தியாயம். ஆனால் அந்த அத்யாயத்தில் அவரது தலித்-ஆலய பிரவேச முடிவு நமக்கு இழிவும் வேதனையும் தரும் பக்கங்கள். தலித் மக்கள் ஆலய பிரவேசத்தை எதிர்த்து பிரச்சார அணியை அவர் ஆசிர்வதித்து கேரளத்துக்கு அனுப்பியதாகட்டும், பிறப்படிப்படையிலான சாதி அமைப்பை ஆதரித்தது ஆகட்டும், சூத்திரருக்கு காயத்ரி மந்திர அதிகாரம் இல்லை என கூறியதாகட்டும், பெண்களின் பால்யவிவாகத்தை ஆதரித்ததாகட்டும் – அவை அனைத்துமே முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டியவை. ஒரு பெருமை மிக்க ஹிந்துவாக, அவரது எளிமையை, தூய்மையை, அப்பழுக்கற்ற ஒழுக்க வாழ்க்கையை சிலாகிக்கும் பின்பற்றத் துடிக்கும் உரிமையும் கடப்பாடும் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உள்ளதோ, அதே போல அவரது தலித்-புறக்கணிப்பு மனப்பான்மையை முழுமையாக நிராகரிக்க வேண்டிய தேவை கடமை ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உண்டு.
மகாத்மா காந்தியின் பாரத பாரம்பரிய மீட்டுருவாக்கத்தில் நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ள முடியும். அவரது சுதேசி சிந்தனையின் ஆழமும் வீச்சும் அபரிமிதமானது. பாரத மண் சார்ந்த தொழில்நுட்பத்தை மீட்டெடுத்து முன்னெடுப்பது எனும் பகீரத பிரயத்தனத்துக்கு மகாத்மாவின் தரிசனம் இன்றியமையாதது. அதனை நாம் பெருமையுடன் நம் காந்திய பாரம்பரியமாக ஏற்கும் அதே நேரத்தில் மிகப் பெரிய மானுட அழிவுகளை ஏற்படுத்திய அவரது கிலாபத் இயக்க ஆதரவு – இஸ்லாமிய தாஜா போக்கு ஆகியவற்றை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
கிழக்கு வங்க அகதிகளின் நிலையிலிருந்து பார்த்தால் நேரு நிச்சயமாக மிகப் பெரிய மானுடவிரோதியாகத்தான் தெரிவார். பாகிஸ்தானிலும் கிழக்கு வங்கத்திலும் சிறுக சிறுக அழிக்கப்படும் இந்து பௌத்த மக்களின் நிலைக்கு நேரு சர்வ நிச்சய காரணம். இது ஒரு வரலாற்று உண்மை. நம் கண் முன் நிகழும் ஒரு மானுட பேரழிவின் வேர்களில் நேரு ஒரு காரணியாக இருக்கிறார். இதை மறுக்க முடியாது. இந்து அகதிகளின் விஷயத்தில் நேரு ஒரு நாசி மனநிலைதான் கொண்டிருந்தார். ஆனால் அதே நேரு -சோஷலிச நேரு, சோவியத் பிரியரான நேரு- தன் சோஷலிச கனவால் வேளாண் உற்பத்தி வெகுவாக குறைந்த போது பஞ்சத்தால் மக்கள் இறப்பார்கள் என தெரிந்த போது தனது தனிப்பட்ட மானத்தைக் குறித்து கவலைப்படாமல் அமெரிக்காவில் உணவுக்காக கையேந்தினார். அந்த மனித மாண்பை சிலாகிப்பதால் அவரது அகதிகள் நிலைபாட்டின் மனிதத்தன்மையற்ற செயல்பாடு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது ஆகி விடாது. இன்றைக்கு காந்தி மகாத்மாவாகிவிட்டார். அவர் தவறே செய்திருக்க முடியாது. நேரு காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர். எனவே அவரும் தவறு செய்திருக்கவே முடியாது. எனவே படேலும் ராஜேந்திர பிரசாத்தும்தான் தவறுகள் செய்திருக்க வேண்டும். படேலுக்கு சர்வதேச சூழ்நிலை தெரியாது. ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்குமான பிரச்சனை நேருவின் அசைவ உணவோ அல்லது அவரது சிவப்பு நிறமோவாகத்தான் இருக்க வேண்டும். சந்திரசேகரேந்திர சரஸ்வதியோவெனில் அத்வைத தெய்வத்தின் குரல். அவரது கருத்துகளை புரிந்து கொள்ள நம்மால் இயலாது. அதற்கு நாம் பக்குவப்பட வேண்டும்.
இவையெல்லாம் இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைப்பது. அவ்வளவுதான். உண்மையை யதார்த்தத்தை சந்திக்கத் திராணியில்லாமல் நாம் உருவாக்கிக் கொள்ளும் சால்ஜாப்புகள்.
இன்னொன்றும் சொல்லப்படுகிறது. அது வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கைமுறையை அனுசரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. எல்லார் மீதும் இந்த சமுதாய சமத்துவத்தை திணிப்பது ஆபிரகாமியம் என்று. ஆனால் இதை சொல்பவர்கள் இதே நிலைபாட்டை தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதற்கும் வந்தேமாதரம் பாடுவதற்கும் தேசிய கொடியை மரியாதை செய்வதற்கும் வழங்குவார்களா? போலி மதச்சார்பின்மையாளர்கள் விரும்புவோர் வந்தேமாதரம் பாடலாம் என்று சொன்ன போதும் தேச பிரிவினையின் முன்னோட்டமாக வந்தேமாதரத்தை சிதைத்த போதும் என்ன மனநிலையில் செயல்பட்டார்களோ அதே மனநிலையில்தான் இன்று சாதியத்தை ஆதரிப்போர் செயல்படுகின்றனர்.
சுவாமி தயானந்த சரஸ்வதியும் சட்டம்பி சுவாமிகளும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். போலி மதச்சார்பின்மை, சாதியம் – பாபா சாகேப் அம்பேத்கரே இந்த இரண்டு தீமைகளையும் மிகத் தெளிவாக ஹிந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் இணையான வியாதிகள் என்கிறார். பாபா சாகேபின் வார்த்தைகளின் ஆற்றலை அப்படியே தர வேண்டுமென்பதால் அவை மொழி பெயர்க்காமல் ஆங்கில மூலத்தில் அப்படியே அளிக்கப்படுகின்றன:
This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hitler. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it.
கீழே நீங்கள் பார்ப்பது ஓராண்டுக்கு முன் ஒரு வார இதழில் வெளியான விளம்பரம்; மற்றொன்று 1881 இல் ஆரிய சமாஜ தலைவர் தயானந்த சரஸ்வதி அனைத்து இந்துக்களும் வேதம் கற்கும் உரிமை வேண்டும் என்று தன் கைப்பட எழுதிய கடிதம். இவை mutually exclusive நிலைபாடுகள். இதில் நாம் எதை நம் ஹிந்து சமுதாயத்தின் ஆரோக்கியத்துக்கும் அடிப்படை நீதிக்குமாக தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது நம் முன் நிற்கும் கேள்வி. இந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக எடுத்து கொள்ளுங்கள். இது ஒரு வளரும் நாட்டின் மதம். இம்மதத்தின் சமய, தத்துவ வளங்கள் பெரும்பாலும் பாரம்பரிய மடங்களுடன் உள்ளன. அவை இத்தகைய சாதியம் சார்ந்த கல்வி மற்றும் சமூக அமைப்புகளுக்கு முதன்மையாக சென்றால், சமுதாய சமரசத்தை, சமூக நீதியை கோரும் இந்து அமைப்புகளுக்கு அந்த அளவுக்கு அந்த வளங்கள் மறுக்கப்படும். இதன் விளைவாக அவை ஒதுக்கப்பட்ட நிலையில் இயங்கி சில காலத்தில் மறைந்துவிடும். ராமகிருஷ்ண மடத்தை தவிர இதர இந்து அமைப்புகள் எதிர்நோக்கும் நிலை இதுவேதான்.
வேதாந்தத்தை பாரதத்தின் இன்றைய சூழலுக்கும் மானுடத்தின் நாளைய சவால்களுக்கும் தீர்வாக முன்னெடுத்தவர்கள் ஸ்ரீ நாராயணகுருவும், விவேகானந்தரும், ஸ்ரீ அரவிந்தரும், வீர சாவர்க்கரும், பாபா சாகேப் அம்பேத்கரும் மற்றொரு தளத்தில் காந்தியும் கூட. இந்த சமூக ஆன்ம-நேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வேதாந்தத்துக்கு நம் பாரம்பரிய மடங்கள் -அவர்கள் த்வைதிகளோ அத்வைதிகளோ விசிஷ்டாத்வைதிகளோ, சிவாத்வைதிகளோ – தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். சமாதியானவர்களின் அற்புதங்கள் குறித்த போலி கதைகள் புனைவுகள் இவற்றில் புளகாங்கிதங்கள் நமக்கு தேவை இல்லை. இத்தகைய அற்புதங்கள் குறித்த போலி புனைவுகளை வியாபாரம் செய்வதில் ஆபிரகாமிய மார்க்கங்களின் மதமாற்ற வியாபாரிகள் நம்மை விட திறமை வாய்ந்தவர்கள். சிறப்பாக செய்வார்கள். மக்களை ஏமாற்றி மதம் பரப்புவார்கள். ஹிந்து தர்மாச்சாரியர்களின் கடமை ஞானத்தையும் பக்தியையும் சேவையையும் சாதியத்தை வேரறுக்கும் ஆன்மநேய சமத்துவத்தையும் சமரசமின்றி மக்களிடம் கொண்டு செல்வதே. அதுவே நம் ஒவ்வொரு அமைப்பினுடையவும் கடமை.
தீண்டாமையின் ஏழு பரிமாணங்களை வீர சாவர்க்கர் கூறியுள்ளார். இந்த ஏழுமே இந்து சமுதாயத்தின் மிகப் பெரிய பாவங்கள் – இந்து சமுதாயத்தை பலவீனப்படுத்தி அழிப்பவை என்கிறார். அவை:
[1] உடல் சார்ந்த தீண்டாமை: வெளிப்படையாக தெரியும் ‘என்னை தொடாதே’ என்கிற தீண்டாமை. இன்று இதை வெளியில் பேச செயல்படுத்த முடியாது. ஆனால் இந்த மனநிலை உள்ளே இருக்கிறது. இந்த தீண்டாமை வெளிப்படுவதில்லை என்பதால் தீண்டாமையே இல்லை என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறோம். [2] உணவு சார்ந்த தீண்டாமை: இன்றைக்கும் இது கடைபிடிக்கப் படுகிறது. பெரிய மத நிறுவனங்களில் இரட்டை பந்திகள் என தொடங்கி தேநீர் சாலைகளில் இரட்டை டம்ளர்கள் வரை இந்த தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. உள்ளம் சார்ந்த தீண்டாமையின் வெளிப்பாடு இது. [3] மண உறவு தீண்டாமை: அக-மண முறை என்கிற பெயரில் கடைபிடிக்கப் படும் தீண்டாமை இது. இது குறித்து இன்று விரிவாக சர்ச்சைகள் நிகழ்கின்றன. [4] தொழில் தீண்டாமை: சில தொழில்களை சிலர்தான் செய்ய வேண்டும் சிலர் செய்யக் கூடாது எனும் தீண்டாமை. அனைத்து இந்துக்களும் அர்ச்சகராவதும் அனைத்து இந்துக்களும் சுகாதார தொழிலாளராவதும் நடைபெற விடாமல் தடுக்கும் மனநிலை கலாச்சாரம் பாரம்பரியம் காலம் காலமாக தொடரும் நியதி என்பவற்றின் பெயரில் பழி போட்டு நீடிக்கிறது.
[5] வைதீக தீண்டாமை: வேத சடங்குகள் செய்வதில் பிறப்பு பாலினம் அடிப்படையில் காட்டப்படும் தடைகள். இவையும் இன்றும் நீடிக்கின்றன. [6] சுத்தி தீண்டாமை: நம் தாய் மதத்திலிருந்து வரலாற்று காரணங்களுக்காக மதம் மாறி சென்றவர்களை மீண்டும் தாய் மதம் கொண்டு வருவதில் நாம் காட்டும் சிரத்தையின்மை. [7] கடல்தாண்டுதலின் தீண்டாமை: கடல்தாண்டி நாம் செல்வதற்கு எதிராக செயல்படுத்தப்பட்ட தீண்டாமை. இன்று இது ஒழிந்துவிட்டது.
இந்து சமுதாயம் வாழ வேண்டுமென்றால் பாரதம் பாரின் குருவாக வேண்டுமென்றால் நாம் இந்த ஏழு தீண்டாமைகளையும் வேரும் வேரடி மண்ணுமற களைய வேண்டும். அதன் எச்சம் கூட இந்த தேசத்தில் ஒரு நினைவாக கூட இருக்கக் கூடாது.
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீர் அனைவிரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதியொன்றனையே சார்ந்தோராவீர்
ஆம் ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க.
மீண்டும் ஒரு நாள் காலைத் தேநீருடன் சந்திக்கலாம். அதுவரை விடை பெறுகிறேன்.
[பின்குறிப்பு: இக்கட்டுரையில் இடம் பெறுபவை இக்கட்டுரையாசிரியரின் சொந்த பார்வைகள். இதுவே தமிழ்ஹிந்து.காம் இணையதளத்தின் அதிகாரபூர்வ பார்வையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிலைபாடோ அல்ல. எனவே மாற்றுத் தரப்பு கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. – ஆசிரியர் குழு.]
//இதே கேள்வி மகாத்மா காந்தியோ ஜவஹர்லால் நேருவோ விமர்சிக்கப்பட்ட போது எழவில்லை//
என் எழவில்லை. ஏன் என்றால் இது எல்லாம் ஏற்கேனவ பெரும் விவாதம் நடந்து முடிந்த செயல்கள். எனக்கு இது ஒரு RECAP மாதிரியான விசயம். நேற்ரைய கட்டுரையின் பின்னூட்டம் கேள்வி எல்லாம் — கட்டுரை சார்ந்த விசயமாக இல்லாமல் ஏன் ஒரு உள்குத்து மாதிரி ஒரு இடை சொருகல் என்ற கேள்விதான்.
நிற்க – ஹிந்துகள் இங்கு விவாதிப்பதே நமக்கு கிடைத்துள்ள ஒரு பெரிய சுதந்திரம் — மர்ற மதங்கள் போல் இல்லாமல். மலர்மன்னன் சொன்னது போல , மதம் மாறி இருப்பவர்கள் முதலில் தங்கள் சுதந்திரத்தை இழந்து தனக்கு தான தண்டனை கொடுத்து கொண்டவர்கள்.
//மீண்டும் ஒரு நாள் காலைத் தேநீருடன் சந்திக்கலாம். அதுவரை விடை பெறுகிறேன். //
என்னுடைய கருத்தில் நான் ஒரு பயத்தையும் குருப்பிட்டு இருந்தேன். இதை படிக்கும் போது அது உண்மை ஆகிவிட்டதோ என்று ஒரு சந்தேகம் வருகின்றது
எழுவகை தீண்டாமையையும் ஒழிப்போம். தெளிவான பார்வைகளை வழங்கிய அநீ- அவர்களுக்கு நன்றி. சாதி அமைப்பு இந்துக்களுக்கு வலுவூட்டும் ஒரு விஷயம் என்று பலரும் தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்துக்களுக்கு எவரும் தலைவர் கிடையாது, ஏனெனில் சுயமாக சிந்தித்து தனக்கு தேவையான விஷயங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இந்துவுக்கு மட்டுமே உண்டு.
we should follow the article……….
//சுவாமி தயானந்த சரஸ்வதியும் சட்டம்பி சுவாமிகளும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். //
இந்து சமுதாயத்தைன் அத்தனை பேரும் உணர்ந்து செயலாற்ற வேண்டிய அற்புத வரிகள்!
ஏழு வகை தீண்டாமையை ஒழிப்பது என்பதற்கு தெளிவான கோட்பாடுகள் இல்லை. எங்கிருந்து தொடங்குவது என்ற தயக்கம் தொக்கிநிற்கிறது..அரசு நடத்தும் சமபந்திபோஜனம் (என்றோ ஒரு நாள் மட்டும்) விளம்பரம். மனசாட்சிபடி நடந்தால் தீண்டாமை ஒழிக்கப்படும்
https://www.jeyamohan.in/?p=26158
என் தாத்தாவும் தந்தையாரும் பரமாச்சார்யாரிடம் மிகுந்த பக்தியும் மரியாதைடும் கொண்டவர்கள். காஞ்சியில் மட்டுமில்லாது, ஆந்திர கர்நாடக மகாராஷ்டிராவில் அவரை முகாம்களில் நாங்கள் பலமுறை தரிசித்ததுண்டு.
நீங்கள் கேட்கும் இக்கேள்விகளை நான் என் தந்தையாரிடம் கேட்டதுண்டு. மனீஷா பஞ்சகத்தை இயற்றியவர் வழி வந்த அத்வைதிக்கு ஏது ஜாதி, ஏது மடி ஆசாரம் என்று.
அப்பா சொன்னார், “காஞ்சி மடத்தொர்புடைய தேதியூர் சுப்ரமணிய சாஸ்த்ரிகள், தன்னுடைய ப்ரம்ஹ ஸுத்ர பாஷ்யத்தில், “அதாதோ ப்ரம்ஹ ஜிஞாஸா” என்ற முதல் ஸுத்ரத்துக்கு 76 பக்கங்களில் விளக்கம் எழுதினார், ஆனால் என்ன பயன், ஆலய பிரவேசத்தை வன்மையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
“மடம் என்பது bastion of bramhin orthodoxy. It will only perpetrate the status quo. மடாதிபதி மாற நினைத்தாலும் சுற்றியுள்ள வைதீக மடி சஞ்சிகள் விடமாட்டார்கள். அப்படி மடத்தலைவர் மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகத்துக்குரியதே.
“ஆகையால் சமூஹ இயக்கங்களும், மடம் சாரா குரு மார்களும் ஊடகங்களும் மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்ப்படுத்தும் வரையில் ஜாதி சார்ந்த ஏற்றத் தாழ்வுகள் மறையாது.”
இது சப்பைக்கட்டு போல் தோன்றினாலும் சிறிதளவாவது உண்மை என்றே படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் வந்து 63 ஆண்டுகளாகியும் தீண்டாமை ஒழிந்த பாடில்லை. ஜாதி அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது.
தொடரட்டும் உங்கள் கேள்விகளும் விமரிசனங்களும் !
படிக்க மனநிறைவை தருகின்றது.
அ.நீ-யின் கனவுகள் உண்மையாக வேண்டும்.
நாம் இந்த 6 தீண்டாமையை ஒழிக்க உறுதி எடுப்போம்.
அதற்காக இறைவனை வேண்டுவோம்.
It is the duty of every Hindu person to follow everything to safe guard his religion and take it still higher level to next and subsequent generations. For this, I wholly accept the view points offered in this article. Essays like this will bring change of mindset to Hindu hard liners. We have to embrace and bring them also along with us. Request for more such articles.
1.அனைத்து ஹிந்துக்களும் கட்டாயம் வேதம் கற்க வேண்டும் அல்லது பிராம்மணர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். யார் வேண்டுமானாலும் கறக்கலாம் என்றால் யாருமே கற்க மாட்டார்கள்.
2. ஸ்ரீ சைலத்தில் இருந்து வடக்கே உள்ள கோவில்களில் எல்லாரும் தொட்டு பூஜை செய்யலாம் என்று இருக்க, இங்கே மட்டுமே குருக்கள் ( கவனிக்க எல்லா பிராமணர்கள் இல்லை. சங்கராச்சரியரே ராமேஸ்வரம், திருவானைக்காவல் தவிர மற்ற கருவறையில் நுழைய முடியாது. ) இந்த குருக்கள் முறைதான் அன்னியப் படையெடுப்பில் கோவில் விக்ராஹங்களைத் தூகிக் கொண்டு ஓட உதவியாய் இருந்தது. இன்று பைசா வருமானம் இல்லாத கோவிலிலும் பூஜை நடக்கிறது. இன்று பல குருக்கள் பையன்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். எல்லா பெண்களுக்கும் ஐ டி மாப்பிள்ளை தான் வேண்டும். மணியாட்டி வேண்டாம். அரவிந்தன். ஒன்று கட்டாய ராணுவ சேவை மாதிரி எல்லா ஹிந்துப் பையன்களும் ரெண்டு வருடம் கட்டாய குருக்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது இப்போ இருப்பது போல் இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் யாரும் செய்ய மாட்டார்கள். ஒன்று எல்லாரும் செய்ய வேண்டும் அல்லது குருக்கள் மட்டும் செய்ய வேண்டும். இப்போ பல கோவில்கள் பூட்டியே கிடக்கிறது. அங்கே துவங்குங்கள். எனக்கு தெரிந்து விழுப்புரம் பழைய பஸ்ஸ்டாண்ட் வாலீஸ்வர, காவேரிபாக்கம் வரதராஜர் கோவிலில் குருக்கள் அல்லாதவர் பூஜை நடக்கிறது.
https://www.jeyamohan.in/?p=26158
ஜெயமோகனின் கட்டுரை அபாரம்.
ரமேஷ் ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்லியுள்ளது சரியே. எல்லோரும் பால் ஊற்ற சொன்ன ராஜாவின் கதை நமக்கு தெரியும். எல்லோரும் படிக்கவேண்டும் அல்லது ஏதாவது ஒரு குழு மட்டுமாவது கட்டாயம் படிக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தல் அவசியம்.
ரமேஸ் ஸ்ரீ நிவாசன் எல்லா ஹிந்துக்களுக்கும் வேதம் கற்க உரிமை வேண்டும் என்பது தான் வேண்டுகோள். எல்லோரும் வேதம் கற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் ஹிந்துமதமென்று அதற்கு பெயர் பொருந்தாது.வேண்டுவோர் வேண்டுமளவு வேதவேதாந்தங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும்.அதேமாதிரி வேதமோத, வேதம் ஓதுவிக்க, பூஜைகள், சடங்குகள் வேள்விகள் செய்யக்கற்றுக்கொள்ள செய்ய அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தவேண்டும் ஏற்படவேண்டும் என்பதே இங்கே வேண்டுகோள்.
சுவாமியைத்தொட்டு அனைவரும் பூஜை முறை இங்கும் இருந்தது. திரு நாவுக்கரசராகிய அப்பர் பிரான், சம்பந்தர் பெருமான் பாடல்கள் அதை தெளிவாகச்சொல்லுகின்றன. பெண்டிரும் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்யலாம் என்றால் காமாக்ஷி அம்பிகை பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஏகாம்பர நாதரே சாட்சி.
ஹிந்து சமயத்தின் அடிப்படை எல்லாரும் இன்புற்றிருக்க நினைபதே. சர்வே ஜனாசுகினோ பவந்து.
இரண்டு தரப்புகள் இருப்பதாகவும் அந்த இரண்டு தரப்பையும் விஞ்சிய ஒளிமிகுந்த உண்மையான ஒரு பார்வையை கொண்டவர்போல அரவிந்தன் நீலகண்டன் எழுதி இருக்கிறார். அவர் குறை சொல்லுகிற தரப்புகளில் இருந்து வரும் வருத்தத்தை எதிர்ப்பைப் பற்றி அரவிந்தன் கட்டுரைகளில் படிக்கலாம். ஆனால், அரவிந்தன் நீலகண்டனின் கருத்துக்கள் மொண்ணைத்தனமான அபத்தமான தப்புக்கள் நிறைந்தன என்பதைச் சொல்லும் விமர்சனக் கட்டுரைகளுக்கு இந்தத் தளத்தில் இடம் இருக்குமா ?
ஏனெனில், கேள்விக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுவது நல்லது என்று அவர் சொல்கிறார். ஆனால், அவருடைய கருத்துக்களை மற்றவர்கள் விமர்சித்தால் அந்த விமர்சனங்களுக்கும் இந்தத் தளத்தில் இடம் இருக்க வேண்டும்.
அப்பர் சம்பந்தர் காலத்தில் வெறும் கருவறை கட்டிடம் மட்டுமே இருந்தது. சிதம்பரம் மட்டும் பொற்கோவில். சுந்தரர் காலத்தில்தான் கொஞ்சம் பெரிய கட்டிடம். சிவப் பிராமணர்கள் பற்றி நந்திவர்மன் காலத்துக்குப் பிறகு – 8 ஆம் நூற்றாண்டில்தான் வருகிறது. சோழர்கள் காலத்தில் பெரிய கட்டிடம், நிறைய உத்சவ மூர்த்திகள், ஏரளாமான நகை எல்லாம் சேர்ந்தது. நகை போட்ட சாமியை எல்லோரும் தொடுவது நின்றது. இதனால் கோவில் பணிக்கு என்று தனி பிராமணர்கள், வந்தார்கள். சோழர்கள் காலம் வரை மற்ற பிராமணர்கள் வீட்டில் அக்னிஹோத்ரம் செய்து வந்தார்கள். கோவில் பணிக்கு வந்தால் அக்னி காரியம் செய்ய முடியாது. ஆகவே மற்ற பிராமிணர்கள் கோவில் குருக்களை ஒடுக்கி விட்டார்கள். இன்று வரை குருக்களுக்கு மற்ற பிராமணர்கள் பெண் கொடுப்பதோ எடுப்பதோ கிடையாது. அவர்களை கீழ் நிலையில்தான் வைத்து இருக்கிறார்கள். ஆனால் குருக்கள்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வருமானமே இல்லாவிட்டாலும் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கோவில்கள் மதியம் மூடப்படுவதன் காரணமே வேறு. குருக்கள் மீதும் தீண்டாமை இருக்கிறது. ஆனால் எல்லாக் காலத்திலும் அப்பர், சேக்கிழார், போன்ற பிராம்மணர் அல்லாத மகான்கள் இருந்திருக்கிறார்கள்.
ரமேஸ் ஸ்ரீ நிவாசன் அப்பர் காலத்தில் கோயில் சிறிதாக இருந்தது ஆகவே அவர் நுழைந்தார் என்கிறீர்களே? கோவில் பெரிதானாலும் இன்னும் திருப்பருபதத்தில்(ஸ்ரீ சைலத்தை அப்பரடிகள் அப்படித்தான் அழைக்கிறார்) நேரடியாக வழிபாடு செய்யமுடிகிறதே.உங்கள் வாதம் சிவாச்சாரியார்கள் அங்கே பூஜை செய்வதில்லை என்பீர்கள். இல்லை அவர்கள் வீரசைவசிவாச்சாரியார்கள்.
ஹிந்து சமூகத்தின் மொத்த நலனுக்கும் குறிப்பாக சமயத்தில் வழிபாட்டில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாத மக்களின் முன்னேற்றத்திற்கு சிந்திக்கவேண்டும் என்று ஸ்ரீ நிவாசன் அவர்களைவேண்டுகிறேன்.
குருக்கள் என்று வழங்கப்படும் சிவாச்சாரியார்கள் பலர் வறுமையில் இருப்பதாகசொல்வது உண்மையே. கோயில்களை காப்பாற்றிய காப்பாற்றும் பங்கு அவர்களுக்கு இருந்தது இருக்கிறது என்பது உண்மையே.அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகை செய்யப்படவேண்டும்.
மதிப்பிருகுரியா சிவஸ்ரீ, அப்பர் காலத்தில் கோவில்களில் இப்படி தங்கமும், வைரமும் இல்லை. எனவே எல்லோரும் தொட்டு வழிபட்டனர். பின்னர் ஆண்டவன் மேல் தங்கம் அணிவிக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் வந்தன. அப்பர் சலமும், சாந்தும், தூபமும், மலரும் தந்து வழிபட்டார். பின்னர் செல்வம் வந்தபிறகு, கோவில்களில் கட்டுப்பாடு வந்தது. இன்று வாடா நாட்டில் யார் வேண்டுமானாலும் தொட்டு வழிபடலாம். ஆனால் பூஜா காலங்களில் சுவாமி மீது அணிகலன் அணிவித்தவுடன் ( ஸ்ரீ சைலம் உட்பட) அர்ச்சகர் தான் வழிபாடு செய்கிறார். என்ன வித்யாசம் என்றால் வடக்கே காலையும் மாலையும் அரை மணி நேரம் மட்டும்தான் அலங்காரம். பின்னர் கலைத்துவிட்டு எல்லாரையும் அனுமதிக்கிறார்கள். இங்கே எப்போதும் அலங்காரம். ஆறு காலமும் அபிஷேகம் நடந்தாலும் அலங்காரம் தான் அதிகம்.
ஆக அனைவரும் கருவறைக்குள் நுழைய முடியாதது எதோ வைதீகத்தின் தவறு போல பேச வேண்டாம். அம்முறை ஆகமம் இருக்கும் தென் தேசத்தில்தான் இருக்கிறது.
பெரியோர்கள் செய்யும் சிறு தவறுகள் கூட சமுதாயத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்துக்கள் தங்கள் குறைகளை ஏற்றுக்கொண்டு நிவர்தி செய்வதே சமுதாயத்திற்கு நல்லது. சென்ற கட்டுரையில் ஜெயேந்திர சுவாமிகளின் தலித் மக்களை பற்றிய கண்ணோட்டத்தை விளக்குவதற்காகவே காஞ்சி பெரிய சுவாமிகளைப் பற்றி ஆசிரியர் பேசியுள்ளார். பெரிய சுவாமிகளைப் பற்றிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிர்த்ததின் விளைவே இந்த கட்டுரை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் தைரியம் , தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் ஹிந்து சமுதாயத்திடம் குறையாகவே உள்ளது. காந்திஜியின் தவறுகளை சுட்டிகாட்டுவதால் அவரின் வாரிசுகள்? அதே தவறான பாதையில் நம்மை கொண்டு செல்வதிலிருந்து விழிப்புணர்வை ஊட்டும். ஆனால் காஞ்சி பெரியவரை பற்றிய விமர்சனம் தேவையில்லாதது. ஏனெனில் அவரின் வாரிசுகள்! அவர் செய்த தவறை செய்யாமல் மிகப் பெரிய நல்ல காரியத்தை சிறிய அளவிலேனும் செய்கிறார். எனவே பெரிய சுவாமிகளைப் பற்றிய அதிகப் படியான விமர்சனம் எந்த பயனையும் தராது. இந்த கட்டுரை தேவையில்லாதது. இதற்க்கு பொறுப்பு அ நீ ஐயா அவர்கள் அல்ல. சென்ற கட்டுரையில் பெரியவரின் தவறுகளை சுட்டியதை ஒத்துக் கொள்ள தைரியம் இல்லாதமல் விமர்சித்தவர்களே காரணம். இதே போன்ற நிலமை நீடிப்பது ஹிந்து சமூகத்திற்கு நல்லதல்ல. முன்னோர்கள் மகான்களாக இருக்கலாம், தீண்டாமைக்கு ஆதரவாளர்களெனில் அவர்கள் தவறிழைத்தவர்களே. இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புரிந்து கொள்வோம் தீண்டாமைப் பேயை துரத்தியடிப்போம்.
சமகால அரசியலை , நிகழ்வுகளை தொடமாட்டேன் என்றுதான் நிறைய பேர்கள் இருக்கின்ரார்கள். அதை தொட்டால் கல்லடி நிறைய வரும் என்று. இங்கு கூட ஜெயமோகனை ஒருவர் சிலாகித்த்தது எழுதி இருன்தார். அவரும் சமகாலத்தை விமர்சனம் பன்ண மாட்டேன் என்று எங்கு எங்கோ போயி பக்கம் பக்கமாக விமர்சனம் பன்னிக்கோடுதான் உள்ளார். நீலகண்டன் இதில் இருந்து போயிவிடுவார் என்று ஒருநாள் முன்னதாகவே நான் என் கருத்தை பதிவு பன்னி இருந்தேன் . சமகால நிகழ்வுகளை விமர்சனம் பண்ணும்போது ஒரு அசாத்திய துணிவு வேண்டும் அதைபோல அந்த மாதிரி கட்டுரைகளுக்கு பின்னோட்டம் வேண்டாம், எதிர் விமர்சனம் சுருக்கமாக தனி கட்டுரையாக எழுதி அனுப்பவும் என்று தமிழ்ஹிந்துவும் சொல்லிவிட வேண்டும்.
பிரம்ம சூத்ரம் படித்தாதான் மோக்ஷம் அத படிக்க பிராமணனாக பிறந்திருக்கணும் என்று எழுதி வைத்ததை எல்லாம் நம்பும் வரை இவர்கள் சாதியத்தை விட மாட்டார்கள்.
ஒருவர் எனக்கு வேதம் சொல்லி கொடுக்க தெரியும் படிக்க தான் ஆள் சேக்க முடியலேன்னார். வீடு மெயின் ரோட்ல இருக்கே “இங்கு வேதம் கற்றுத்தரப்படும்” என்று ஒரு போர்டு வெக்கலாமே என்றேன். அதற்கு அவர் அப்படி வெச்சா யார் யாரோ வந்து கத்துக்கறேன் என்று கேப்பாங்களே என்றார். மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் “நாய்கள் ஜாக்கிரதை” என்று போர்டு மாட்ட வேண்டிய வீடு இது என்று.
சாரங்கர்
“மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் “நாய்கள் ஜாக்கிரதை” என்று போர்டு மாட்ட வேண்டிய வீடு இது என்று.
அருமை சாரங்க் அருமையாக சொன்னீர்கள்.
“மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் “நாய்கள் ஜாக்கிரதை” என்று போர்டு மாட்ட வேண்டிய வீடு இது என்று. “- சூப்பர் சாரங்கரே. சரியான கருத்து.
This article by Prof Vaidyanathan is revealing and throw a different perspective on caste. Caste DISCRIMINATION is evil but caste itself is bad??? There seem to be a lot of benefits in having castes.
https://rvaidya.wordpress.com/2007/08/18/caste-as-social-capital/
Another great article on caste by the Jayasree Saranathan. Please read Gandhi’s views on caste in the follow up letter by Mr.M.S.Radhakrishnan.
https://jayasreesaranathan.blogspot.in/2012/02/caste-is-not-curse.html
This for Mr Sarang’s friend!
“Rig Veda mentions that the greatest service to God is to spread the spirit of Vedas with honesty, straight-forwardness, without deceit of any kind, for all to enjoy true and spiritual happiness.
Please see the emphasis ” for ALL to enjoy”
It is a well-known fact that the problem of casteism has been perpetrated mainly by the non-brahmin forward caste Hindus in the past and also in the present times. Brahmins constituting only about 2 to 3 % of the Tamizh population could not have dominated over the other castes and oppressed them. The main problem that we have to tackle is oppression of dalits. They are not dying to do pooja in the temple. Give them good opportunity to earn their livelihood first. Do not oppress them. Then if they want they can learn what they want to learn and pursue any profession that they want. Writing articles in the magazines is not going to change the society. It is only spirituality that will bring peace among the masses. It is unfair and unreasonable to say that Sri Chandrasekharendra Saraswathi played a role in the issue of casteism. The movement of anti-brahminism came up only when brahmins started abandoning their simple but truly spiritual, self-restrained and frugal life (with bare minimum requirements for keeping the body) and taking up lucrative employment with the British. As a natural consequence of amassing wealth, the brahmins lost their spirituality. If the brahmins had continued to stay with their spiritual model life they would have set an example for others to follow and the society would not have oppressed the weaker sections. Whether casteism remains or is abandoned by the Hindu society, no one should be oppressed on the basis of their caste. Thus, emphasis should be on compassion which is the essence of spiritualism. It is what was taught by the Buddha who was indeed a real Hindu saint, now misunderstood as a different religion due its adoption by foreign people.
கல்வி கலைகள் குறைந்தபட்ச சமய அனுஷ்டானங்கள் அனைவருக்கும் தேவை.அர்ச்சகர், கோவில் பணியாளர்கள்,ஆசிரியர்கள் பிறவியிலேயே தீவிர சமய நாட்டம் கொண்டவர், ஆகியோருக்குதான் கூடுதல் சமய அனுஷ்டானங்கள் தேவை.
ஞானபுமி என்ற சமய பத்திரிகைக்கு -பேட்டி எடுத்தவர் -திரு.மணியன் – ஸ்ரீஜெயேந்திரர் ” புணூல் அணிந்தவருக்குதான் காயத்திரி ஜபம் செய்ய தகுதி உண்டு எனப் பேட்டி அளித்ததை கண்டித்து திருச்சி மாவட்டம் திருப்பராய்த்றை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்து பத்திரிகையான தர்மசக்கரத்தில் ” இளைய சங்கராச்சரியார் கருத்து தவறானது. பழமையின் தவறுகளை நியாயப்படுத்தி புதுப்பிக்கப் பார்கிறார் என்று கண்டித்து கட்டுரை எழுதினார்கள்.சங்கராச்சாரியார்கள் யாரும் உசத்தி அல்ல.அவர்களும் இந்து மனிதர்கள்தாம். முறையான சமய பயிற்சி இல்லாததே இன்றுள்ள பல பிரச்சனைகளுக்கு அடிப்படையானக் காரணம். ஒரு கிறிஸ்தவ இசுலாமிய குழந்தையால் சர்ச் அல்லது மசுதியில் 1 மணி நேரம் உட்கார்ந்து இருக்க முடியும். இந்து கோவில்களில் இந்து குழந்தைகளை 5 நிமிடம் பேசாமல் இருக்கச் சொல்லுங்களேன் ? நடப்பதைப் பாருங்கள். இன்றைய பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கோவில் தோறும்,வீடுதோறும் அந்தர்யோகம் நடத்தி மக்களுக்கு எட்டும் தூரத்தில் சமய அனுஷ்டானத்தைக் கொண்டு வர வேண்டும்.ஆன்மிக தாகம் உள்ளவன் தனது தேவை ஆர்வத்துக்கு தக்க எடுத்துக் கொள்ளட்டும். வருணத்தால் யார் என்ன வருணம் என்று யாரால் முடிவு செய்ய முடியும்.
பிறாமணர் அல்லாத ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷண மடம் பின் விவேகானந்தரை வழிகாட்டியாக கொண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மடங்கள் -ஸ்ரீராமகிருஷண தபொவனம் திருப்பராய்த்துறை – அனைத்திலும் பார்பனர் அல்லாத துறவிகள் நிறைய பேர்கள் உள்ளனர். வர்ணத்தின் இருப்பு எந்த குடும்பத்தில் என்பதை யாரும் நிர்ணயம் செய்ய இயலாது. வெளிச்சம் ஸ்ரீவிவேகானந்தரி வடிவில் உள்ளது.வெளிச்சத்தை விளக்கை விடுதோறும் கொண்டுச் செல்ல அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவின் வீட்டிறகும் விவேகானந்தரின் ஞானதீபம் சென்றடைய வேண்டும். அதற்க முன்உரிமை அளிப்போம். எனது உறவினர் மகன் ” ஒரு வைதீகமான பிறாமணப் பெண்ணைகாதலித்தான்.அப்பெண்ணுக்கும் சம்மதமே.பையனின் தாயாருக்கு பிறாமணப் பெண்ணை திருமணம் செய்வதா என்று ஆட்சேபணம். மாமா உறவுஆகிய எனக்கு தகவல் கிடைத்தது.பெண்ணைச் சந்தித்து விபரம் பேசினேன். பெண் தெளிவாக உறுதியாக இருந்தார் .உன் தகப்பனார் மற்றும்குடும்பத்தினர் ” உன்னை திருமணம் செய்து கொடுத்து விட்டு தலை முழுகிவிடுவார்களா? இலை்லை உறவு முறையாக மாப்பிள்ளை வீட்டோடு உறவு வைத்து வாழ்வார்களா என்று கேட்டேன். உறவுவைத்து வாழ்வார்கள்என உறுதி அளித்ததன் அடிப்படையில் பெண்ணின் தந்தையை சந்தித்து பேசினேன். பெண்ணுக்கு அசைவ உணவு ஆகாது.சமைக்கவோ சாப்பிடவேண்டிய சுழ்நிலை எற்படக் 4டாது என்று மட்டும் கூறினார்.திருமணம் நடந்தது. இன்று உறவு மறைகள் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றது. மணமகனும் மகமகளும் கணினி பொறியாளர்கள்.உயர்வருவாய்பிரிவினர். காலம் மாறிக் கொண்டேயிருக்கின்றது. சங்கராச்சரியார்கள் பின்னுக்கு போய்விடுவார்கள்.
அட தூ… பராமாச்சாரியாரை குறை சொன்ன உனது கட்டுரையை படித்ததற்கு வருந்துகிறேன்..