பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள் என்று ஒரு சிறிய பதிவை 2006ம் ஆண்டு டிசம்பரில் எழுதியிருந்தேன். அரவிந்தன் நீலகண்டன் அதைப் பாராட்டினார். அதற்கு முன்பு 3 வருடங்களாக அ.நீ எழுத்துக்களைப் படித்து வந்தாலும், அப்போது தான் நேரடியான பழக்கம் ஏற்பட்டிருந்தது. விரைவில் சந்தித்தோம்.
அந்த முதல் சந்திப்பில் ஒரு அழகிய போஸ்டரை எனக்காக அ.நீ வடிவமைத்து எடுத்து வந்திருந்தார். எனது படிப்பறையை அணி செய்யும் அந்தப் போஸ்டரை பாரதி பிறந்த நாள் அன்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்.
இரைகின்ற கடல் நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்..
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது.
அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்.
எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழலுகிறது…
எனவே, இவ் வையகம் உயிருடையது.
வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம்.
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம்.
– மகாகவி பாரதி, வசன கவிதை – காற்று.
அண்மைக் காலங்களில் உருவாகியுள்ள ஒரு அறிவியல் கோட்பாடு இந்த பூமி ஒரு உயிரினம் அல்லது அதி உயிர் (Super organism) என்பதாகும்.
ஜேம்ஸ் லவ்லாக் எனும் உயிர் இயற்பியலாளரும், லின் மர்குலிஸ் எனும் நுண்ணுயிராளரும் இணைந்து பல ஆண்டுகள் பல துறைகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த கோட்பாட்டினை உருவாக்கியுள்ளனர்.
இந்த பூமியின் காற்று மண்டலம், பல்வேறு தனிமங்களின் சுழற்சி ஆகிய புவியியல் நிகழ்வுகளும் இப்பூமியின் உயிரினங்களும் ஒன்றோடொன்று தெருங்கிய தொடர்பு கொண்டவை. அவை இணைந்து பரிணமித்தன. இன்றும் பரிணமிக்கின்றன.
மனிதனும் பிற பிராணிகளும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் பூமி எனும் ஒரே அதி-உயிரின் பாகங்களே ஆகும். எனவே சுற்றுச் சூழலையும் உயிரினங்களையும் பெரும் உயிரின் பிரிக்க இயலாத முழுமை அமைப்பாக காண வேண்டும். இந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் வடிவமைக்கப் பட வேண்டும்.
பூமியின் இந்த உயிர்த்தன்மையை பழமையான கிரேக்கர்களின் பூமித்தாய் தெய்வமான Gaia எனும் பெயரால் அழைக்கிறார் ஜேம்ஸ் லவ்லாக். சுருக்கமாக கூறினால் “இவ்வையம் உயிருடையது”.
good
பாரதியை பற்றி காங்கிரஸ் மறந்தது ஆச்சரியம் இல்லை . தேசிய உணர்வை பற்றி வாய் கிழிய பேசும் பா ஜ. கட்சினர் மறந்தது என் என்று புரியவில்லை பாரதியை பற்றிய சிந்தனையுள்ள பல கட்டுரைகள் ஹிந்து தமிழ் பத்ரிகையில் வந்துள்ளது