நிலமென்னும் நல்லாள்

morning_hindutvaபிரம்ம தேவனின் சிருஷ்டி மீண்டும் தொடர்ந்தது. பூமியில் மனித வர்க்கம் தழைத்தது.

மனுவின் வம்சத்தில் பிறந்த அங்கன் நல்லாட்சி புரிந்தான். ஆனால், அவனது மகன் வேனன் கொடுங்கோலனாக இருந்தான். மக்கள் மீது கடும் வரிகளை விதித்தான். குடிமக்களை வதைத்தான். மனம் நொந்த மக்கள் முனிவர்களிடம் சென்று முறையிட்டார்கள். முனிவர்கள் கூட்டமாகச் சென்று பிரஜைகளைக் காப்பதே மன்னனின் முதல் கடமை என்று அரசனுக்கு அறிவுறுத்தினார்கள். அதைக் கேட்டு நகைத்து கூச்சலிட்டான் வேனன். பொறுமையே உருவான முனிவர்கள் விட்ட கோபப் பெருமூச்சுகள் தாக்க, உடனே கீழே விழுந்து இறந்தான்.

மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இப்போது ஒரு புதிய பிரசினை உருவாயிற்று. பூமியை ஆள்வதற்குப் புதிய அரசன் வேண்டும்.  முனிவர்கள் கூடி யோசித்தனர் – அந்தத் தீய மன்னனிடம் ஏதேனும் நல்லதும் இருக்கலாம் என்று கருதி, அவனது இறந்த உடலைச் சுற்றி அமர்ந்து மந்திர சக்தியால் தீமைகளை வெளியேற்றினர். பின்னர் அவனது புஜங்களைக் கடைந்த போது ஒளி பொருந்திய “ப்ருது” என்ற ராஜகுமாரன் தோன்றினான். உலகெங்கும் மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழும் என்று ஆசியளித்தனர் முனிவர்கள். ப்ருதுவின் ஆட்சியில் பாலும் தேனும் ஓடப் போகிறது என்று சூதர்களும், மாகதர்களும் பாடினர்.

prithu_chases_earth_cowஆனால், பூமி மேடும் பள்ளமுமாக சமச்சீரற்று காய்ந்து கிடந்தது. அதில் எதுவும் விளையவில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மக்கள் ப்ருதுவிடம் சென்று பூமி மலடாகி விட்டது என்று முறையிட்டனர். “என் குடிமக்களை பசியில் வாட விடுகிறாளா பூமி, அவளைத் தண்டிக்கிறேன்” என்று கையில் வில்லுடன் கிளம்பினான் ப்ருது.

பூமி பயமடைந்தாள். தன்னை ஒரு பசுவாக மாற்றிக் கொண்டு பறந்தோடினாள். எங்கு சென்றாலும் ப்ருதுவிடம் இருந்து அவளால் தப்ப முடியவில்லை.  தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?”  ப்ருது மனம் தெளிந்தான். “என் மீதுள்ள ஒரு பகுதியை சமப் படுத்து.  அது பசுமையாகும், உன் மக்களுக்காக வளப்பம் பெறும்” என்று பூமி சொன்னாள். விரைவில் பூமியின் மேனியில் பசுமை படர்ந்தது. செடிகளும் மரங்களும் வளர்ந்தன. மானிடர் மண்ணை உழுதனர். அன்னத்தை விளைவித்தனர். கிராமங்களை உருவாக்கி வாழ்ந்தனர்.

****

கண்டு முனிவரின் கடும் தவத்தைக் கண்டு இந்திரன் நிலைகுலைந்தான். அதைக் கலைக்க ப்ரமலோசா என்னும் தேவ மங்கையை அனுப்பினான். அவளது அழகில் மயங்கிய முனிவர் தவத்தைக் கைவிட்டார். மங்கையுடன் வாழத் தொடங்கினார். திடீரென்று ஆயிரம் ஆண்டுகள் தான் தவம் மறந்தது அவள் சொல்லித் தான் அவருக்கு உறைத்த்து.  என்ன செய்துவிட்டாய் என்ற சாபம் அவர் வாயிலிருந்து வருமுன்னர், நடுநடுங்கிக் கொண்டே அந்தக் கானகத்தில் ஓடினாள் ப்ரமலோசா. அந்த பயத்தில் அவள் வயிற்றில் சுமந்திருந்த கரு அவள் உடலிலிருந்து வியர்வைத் துளிகளாக வெளியேறியது. வானுலகம் நோக்கிப் பறந்து சென்று விட்டாள் ப்ரமலோசா.

கானகத்து மர இலைகளில் விழுந்திருந்த வியர்வைத் துளிகளைக் காற்றுத் தேவன் கையால் எடுத்துச் சென்று நிலவொளியில் கிடத்தினான். சோமனின் தண்கதிர்கள் அந்தக் கருவை உயிர்ப்பித்தன. மாரீஷா என்ற பெண் பிறந்தாள். காட்டு மரங்கள் அவளைத் தங்கள் மகளாகக் கருதி வளர்த்தன.

காட்டிற்கு வெளியே, நாட்டில், மன்னன் ப்ராசீனபர்ஹி முதுமைக் காலத்தில் அரசாட்சியைத் தன் மகன்களிடன் ஒப்புவித்து விட்டு வனம் செல்ல விரும்பினான். ஆனால் ப்ரசேதாக்கள் என்றழைக்கப் பட்ட பத்து மகன்களும் தங்கள் மனம் தவத்திலேயே ஈடுபடுவதாகக் கூறி அரசாட்சியை ஏற்க மறுத்து விட்டனர். ஆழ்கடலுக்குள் சென்று ஆயிரம் ஆண்டுகள் நீள் தவத்தில் மூழ்கினர்.

ஆள்வார் யாரும் இல்லாததாயிற்று பூமி.  நாட்டிற்குள் காடு வந்து மூடியது.  காலம் செல்லச் செல்ல, பூமி முழுவதும் காடுகள் மண்டிச் சூழ்ந்தன. காற்றுக் கூட உள்நுழையாத படி அடர்ந்தன.

PRACETAS_BURNING_TREES_MARISHA_GIVEN_BY_BRAHMAஇதைக் கண்ணுற்ற முனிவர்கள், கடலுக்குச் சென்று,  ப்ரதேசாக்களை நோக்கிக் கூவினார்கள் – இந்த மரங்களை ஏதாவது செய்யுங்கள். இல்லையென்றால், உங்கள் மக்கள் மாண்டு போவார்கள்! தவம் கலைந்து எழுந்த ப்ரசேதாக்கள் கோபம் கொண்டார்கள். அவர்களின் திறந்த வாய்கள் அனலைக் கக்கின. அந்த அனலைச் சுமந்து சென்ற காற்று வழி மறித்த கானகம் முழுவதையும் சுட்டெரித்துக் கொண்டு சென்றது.

சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். ப்ரசேதாக்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக,  மரங்களின் மகளான மாரீஷாவைத்  திருமணம் செய்து கொண்டார்கள்.  மகா வலிமையும் தவறாத நேர்மையும் கொண்ட தட்சன் பிறந்தான். பூமியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, மீண்டும் தவம் புரியச் சென்று விட்டார்கள் ப்ரசேதாக்கள்.  தட்ச பிரஜாபதி ஐம்பது மகள்களைப் பெற்றான். அவர்களிடமிருந்து மேலும் தேவர்களும், அசுரர்களும், பறவைகளும், மிருகங்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும் தோன்றினர்.

பிரம்ம தேவனின் சிருஷ்டி மீண்டும் தொடர்ந்தது.

****

புராணங்களில் உள்ள இந்த இரண்டு சிருஷ்டி தொன்மங்களையும் சமீபத்தில் Stories of Creation என்ற அமர் சித்திரக் கதைப் புத்தகத்தில் அழகான படங்களுடன் படித்தேன்.  இன்று உலகெங்கும் சூழலியளார்கள் எடுத்துரைக்கும் செய்தியை இந்தக் கதைகள் அபாரமான கவித்துவ மேதமையுடன் சொல்வதாகத் தோன்றியது.

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

ஒன்றுமே இல்லாமல் இருக்கிறோம் என்று சோம்பி உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்து, நிலமென்னும் நல்லாள் பூமி தனக்குள்ளே சிரிப்பாள் என்கிறது குறள்.

அந்தச் சிரிப்பின் அர்த்தத்தை அவளே ப்ருதுவுக்குக் காட்டினாள். பூமி என்னும் பசுவை மனுகுலத்தோரான மானிடக் கன்றுகளுக்காக ப்ருது மன்னன் கறந்தான். உணவும், உயிர் வாழ்க்கையும் உலக இன்பங்களும் அந்தப் பசுவின் பாலாக வெளிப்பட்டன. உயிரற்றுக் கிடந்த பூமிக்கு உயிரையும், பயனையும் அளித்தவன் ப்ருது. அதனால் பூமிக்கு “ப்ருத்வி” என்ற பெயர் உண்டாயிற்று.

அந்தப் பசுவைக் கொன்றழிக்க நினைத்தால் நாமும் அழிவோம். அதை நாம் அன்போடு, ஆதரவோடு பாதுகாத்து, அளவோடு கறந்தால், என்றென்றும் வளங்குன்றா வளர்ச்சி நமதாகும்.

பூமி, உன்னிடத்தில் எங்கு தோண்டினாலும்
அது விரைவில் வளரட்டும்.
உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும்
நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக.

என்கிறது பூமி சூக்தம்.

காடழித்து  நாடாக்குதல் என்பது உலகம் முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கும் செயல். எல்லா மனித சமூகங்களும் கலாசார பரிணாம வளர்ச்சியில் தங்கள் வாழ்விடத்தை விஸ்தீகரிக்கவும், அதிகரிக்கும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மேற்கொண்ட ஒரு செயல்.

ராமாயணத்தில், ராமனைப் பின்தொடர்ந்து காட்டுக்கு வந்த அயோத்தி நகர மக்கள் அவனுடனேயே இருந்து விடுகிறோம், அப்போது காடே நாடாகி விடும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

“உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்
புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போம்”

என்கிறார்கள். இரவோடிராக ராமன் வனம் புகுந்து விட, ஏமாற்றத்துடன் மக்கள் ஊர் திரும்புகிறார்கள்.

பேரியற்கையின், கானகத்தின் அரண்களைக் குலைக்காதவனாக ராமன் இருக்கிறான். ஆனால் மகாபாரத அர்ஜுனன் காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி அங்கு நகரை நிர்மாணிப்பதை தனது அரச கடமையாகவே நினைக்கிறான். மேற்கண்ட கதையில் மானுடர்களும் தெய்வங்களும் ரிஷிகளும் இணைந்து காட்டுக்கும் நாட்டுக்குமான ஒரு சமன்வய உறவைத் தேடிக் கண்டடைகிறார்கள்.

இந்திய மனம் எப்போதும் வாழ்க்கையின் உண்மை வழியை, இயற்கையின் வழியையையே தேடிக் கண்டு அடையும் என்கிறார் பெர்னாட் ஷா.

The Indian way of life provides the vision of the natural, real way of life. We (the Westerners) veil ourselves with unnatural masks. On the face of India are the tender expressions which carry the mark of Creator’s hand.

ஆனால், நவீன வாழ்க்கையின், உலக மயமாக்கலின், நுகர்வுக் கலாசாரத்தின், மானுட பேராசையின் அழுத்தங்களுக்கு நாம் ஆட்படும் ஒவ்வொரு முறையும், நம்மை அந்தப் பாதையினின்றும் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொண்டே இருக்கிறோம். நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்.

நிலமென்னும் நல்லாள் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். ஆக்கவும் காக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவள் அவள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

14 Replies to “நிலமென்னும் நல்லாள்”

  1. // பின்னர் அவனது புஜங்களைக் கடைந்த போது ஒளி பொருந்திய “ப்ருது” என்ற ராஜகுமாரன் தோன்றினான். // தொடை என்று நினைவு. என் நினைவு தவறாக இருக்கலாம், இருந்தாலும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

  2. अथ तस्य पुनर्विप्रैरपुत्रस्य महीपते:
    बाहुभ्यां मथ्यमानाभ्यां मिथुनं समपद्यत

    அத2 தஸ்ய புனர்விப்ரை: அபுத்ரஸ்ய மஹீபதே:
    பா3ஹுப்4யாம் மத்2யமானாப்4யாம் மிது2நம் ஸமபத்3யத (ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் -4 ச்லோகம்-1)

    ப்ராம்மணர்கள் பிள்ளையற்று இறந்த வேனனுடைய இருகைகளையும் கடைந்ததில் ஆணும் பெண்ணுமாக இருவர் ஆவிர்பவித்தனர்.

  3. We are fully dependent on the Mother Earth. Let us not spoil ourselves. Wherever possible, let us not make/or atleast minimise the damage. The article looks like spirutual/Purana but it has deeper meaning of saving the earth and in turn ourselves.

  4. இந்த நிலம் பற்ரி ஏதாவது உபயோகமாக இன்று படிப்பது என்ற லட்சியத்தில் gooogle சென்ற எனக்கு கிடைத்ததோ இது:-
    –இலவச நிலம் வாங்கியவர்கள் அனைவருமே ஏழைகளா?வீட்டுவசதி வாரிய மனை, வீடு ஒதுக்கீடு சர்ச்சை முடிந்து இப்போது இலவச நிலப் பிரச்னை பூதாகாரமாகி வருகிறது. தி.மு.க. அறிவித்த மிகக் கவர்ச்சிகரமான திட்டங்​களில் ஒன்று, நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்ற வாக்குறுதி. 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக ஏதோ ஒரு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு இப்படி அறிவித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகுதான் அந்த அளவு நிலம் கைவசம் இல்லை என்ற உண்மையே தெரியவந்தது. ”கையளவு நிலம் இருந்தாலும் கொடுப்​பேன்!” என்ற முதல்வர் கருணாநிதி, ”நிலம் வைத்திருப்பவர்கள் கொடுத்தால், பண்படுத்திக் கொடுப்பேன்!” என்று கீழே இறங்கிச் சொன்​னார்

  5. திரு.ஜடாயு

    அருமையான கட்டுரை. வாழ்த்துகள். ப்ராசீனபர்ஹியின் வழி வந்தவர் தட்சர் என்று படித்திருக்கிறேன். சில இடங்களில் பிரம்மாவின் வலக்கட்டை விரலில் இருந்து வந்தவர் என்றும் படித்திருக்கிறேன். இங்கு ஒரு குழப்பம் எனக்கு இருக்கிறது. தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

  6. மதிப்பிற்குறிய ஸ்ரீமான் மாரியப்பன்

    ஸ்ரீமான் ஜடாயு அவர்களின் வ்யாசங்கள் மட்டிலும் அல்ல; கும்பகோணப்பதிப்பு மஹாபாரதத்தை கசடறக்கற்ற நீங்கள் முன்வைக்கும் கேழ்விகளும் இந்த இதிஹாசத்தை பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கு ஹேதுவாக உள்ளது. வளர்க உங்கள் கருத்துப் பரிமாறல்கள்.

  7. நல்லதொரு பகிர்வு. உண்மையில் நிலமென்னும் நல்லாளைக் கொடியாளாக்கிக் கொண்டு வருகிறோம். யாரும் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்ளும் காலம் வருகையில் மிக தாமதமாக ஆகிவிடும்! 🙁

    //The Indian way of life provides the vision of the natural, real way of life. We (the Westerners) veil ourselves with unnatural masks. On the face of India are the tender expressions which carry the mark of Creator’s hand.//

    பெர்னார்ட்ஷாவின் இந்த மேற்கோளை உங்கள் அநுமதியுடன் பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி. 🙂

  8. இன்றைய நாளிதழில் பாதரசதினால் ஏற்படும் தீமைகளை பற்றி வந்துள்ளது மற்று ஒரு செய்தியில் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதால் ஏற்படும் மாசு பற்றியுள்ளது
    ஏற்படும் நன்மை தீமைகளை கர்ம விதிகளின்படி அனுபவிப்பது தான் தலையெழுத்து

  9. அன்புள்ள ஸ்ரீக்ருஷ்ணகுமார்

    நான் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை இன்னும் கசடறக் கற்கவில்லை. கற்றுக் கொண்டிருக்கிறேன். 250 பக்கமே படித்திருக்கிறேன்.

  10. a certain richness of presentation is possible only , ONLY, if writers draw from the innate richness of world’s great languages. This article by Shri Jatayu is a rare but one more illustration of how when Tamil and Sanskrit are drawn upon , by men of vision, who write on issues of universal significance, can create rich literature.
    At one go I am reading many of his articles, as I have just discovered this website.
    People of many shades of thinking must graciously come forward to empathise, and educate all, so that this world is rid of dveshas of all kinds . As I have personally benefited from his writings i record my sincere gratitude to Shri Jatayu.

  11. அன்புள்ள மாரியப்பன்,

    புராணங்களில் அத்தகைய தர்க்க குழப்பங்கள் நேராத படி ஒரு விளக்கத்தையும் சேர்த்து விட்டிருப்பார்கள்… தேடினால் கிடைத்து விடும் 🙂

    விஷ்ணு புராணத்தில் இந்தக் கதை வரும் பகுதி – இதில் முந்தைய பிறவியில் தட்சன் பிரம்மனிடமிருந்து நேரடியாகத் தோன்றியவன் என்ற குறிப்பு வந்திருக்கிறது..

    // Soma having concluded, the Prachetasas took Marisha, as he had enjoined them, righteously to wife, relinquishing their indignation against the trees: and upon her they begot the eminent patriarch Daksha, who had (in a former life) been born as the son of Brahma 5. This great sage, for the furtherance of creation, and the increase of mankind, created progeny. Obeying the command of Brahma, he made movable and immovable things, bipeds and quadrupeds; //

    விஷ்ணு புராணத்தில் எங்கெல்லாம் தட்சன் வருகிறான் என்பதை இங்கே பார்க்கலாம் – https://ancientvoice.wikidot.com/vp:daksha

    இந்த தளத்தின் மூலம் ராமாயணத்தில், மகாபாரதத்தில், ஒரு குறீப்பிட்ட சொல் (அல்லது பெயர்) எங்கெங்கெல்லாம் வருகிறது என்று தேடலாம்.. புராண ஆய்வுகள் செய்வதற்கு மிகவும் உபயோகமான தளம்.

  12. அன்புள்ள m ravichandran அவர்களுக்கு, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

  13. திரு.ஜடாயு

    பதிலளித்தமைக்கு மிக்க நன்றி.

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *