தேவையா நீ பணிப் பெண்ணே? – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

இந்த தருணத்தை பயன் படுத்தி இந்தியா இன்னும் ஒரு சுய பரிசோதனையும் சீர்திருத்ததையும் செய்ய வேண்டும். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் எச்சமாக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகளும், சிறப்பு அந்தஸ்துகளும் அளிக்கப் படுகின்றன. அவற்றில் பல சலுகைகளும் ஜபர்தஸ்துகளும் இன்று தேவையில்லாத ஆடம்பர வெற்று கேலிக் கூத்துக்கள் மட்டுமே. கலெக்டருக்குப் பின்னால் டர்பன் வைத்துக் கொண்டு போகும் டபேதார்கள், அதிகார வர்க்க ப்ரோட்டோக்கால்கள், பந்தாக்கள், கோர்ட்டுகளில் செய்யப் படும் செயற்கையான மரியாதைகள் சடங்குகள், கார்களின் மேல் பந்தாவுக்காக மட்டுமே சுழல விடப் படும் விளக்குகள் என்று அனைத்து விதமான தேவையற்ற அதிகார வர்க்க ஆடம்பரமான படோபடமான சடங்குகள் அனைத்தையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிமைச் சின்னங்களையும் இந்தியா ஒட்டு மொத்தமாக ஒழிக்க இந்த சம்பவம் மூலமாக முயல வேண்டும். அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியாவின் அரசு அதிகாரிகள் தங்களுக்குக் கீழாக வேலை பார்ப்பவர்களையும் அரசு வாகனங்களையும் தங்கள் சொந்த வசதிகளுக்காக சுயநலன்களுக்காக வீட்டு வேலைகளுக்காக பயன் படுத்திக் கொள்ளும் முறைகேடான வழக்கங்களும் சலுகைகளும் முற்றில்மாக தடை செய்யப் பட வேண்டும்.

இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் முக்கியமாக ஐ ஏ எஸ், ஐ பீ எஸ் அதிகாரிகள் துவங்கி சாதாரண போலீஸ் எஸ் ஐ வரையிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏராளமான கடைநிலைப் பணியாளர்களை எடுபிடி வேலைகளுக்காக வைத்துக் கொள்கிறார்கள். இன்ஸ்பெக்ட்டர் வீடுகளில் ஆர்டர்லி, என்பவர் எடுபிடி வேலைக்கு இருப்பார். இப்பொழுது அந்த ஆர்டர்லி என்ற பதவியை நீக்கியிருந்தாலும் கூட சாதாரண உடையில் சில காவலர்கள் அவர்கள் வீடுகளில் எடுபிடி வேலை செய்வதற்காக இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியாவில் எந்தவொரு அதிகார வர்க்க அதிகாரியும் தான் நினைத்தால் தன் அலுவலக கடை நிலை ஊழியர்களை தன் வீட்டு வேலைகளுக்காக சொந்த வேலைகளுக்காக பயன் படுத்திக் கொள்ள முடியும். பல கடைநிலை ஊழியர்கள் இன்றும் தங்கள் அதிகாரிகளின் மனைவிகளின் வேலைக்காரர்களாக இயங்கி வருகிறார்கள். இந்த அவல நிலை ஒழிய வேண்டும். அப்படி அதிகாரிகளின் சொந்த வேலைகளைச் செய்வதன் மூலமாக மட்டுமே தங்களுக்குத் தேவையான வேலைகளை நடத்திக் கொள்கிறார்கள். இப்படியாகப் பட்ட பரமசிவன் கழுத்துப் பாம்புகளை எந்தவொரு அலுவலகத்திலும் சாதரணமாக எவரும் காணலாம். இது ஊழலுக்கும் வழி வகுக்கிறது. சாதாரண கடை நிலை ஊழியர்கள் இந்த வகையில் பல கோடி சொத்துக்களைச் சேர்த்து விடுகிறார்கள். கருணாநிதியின் சக்கர நாற்காலியைத் தள்ளும் காவலர்களுக்கு பல கோடி மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய நிலங்கள் ஒதுக்கப் பட்டன. இந்திரா காந்தியின் ஸ்டெனோவாக இருந்த தவானும், சோனியாவின் உதவியாளரான ஜார்ஜும் இன்றும் சர்வ வல்லமை படைத்தவர்களாக இந்தியாவில் அதிகாரத்துடன் வலம் வர முடிகிறது. அதிகாரி வீட்டுப் பூனைக் குட்டிகளுக்குக் கூட அதிகாரம் கை கூடி விடுகிறது.

Indian Community Jackson Heightsஇப்படி பிரதம மந்திரி துவங்கி கிராம முன்சீஃபு, தலையாரி வரையிலும் வீடுகளில் வீட்டு வேலை செய்ய எடுபிடிகள் வைத்துப் பழகி விட்டார்கள். அமெரிக்காவில் வீட்டு வேலைகளுக்கு ஆள் வைக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்துக்கு குறைந்த பட்சம் 15 டாலர்களாவது மெக்சிக்கன் பணியாட்கள் கேட்ப்பார்கள். வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வது, நானி வைத்துக் கொள்வது, டிரைவர் வைத்துக் கொள்வது எல்லாம் மிகவும் செலவு பிடிக்கும் விஷயங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேறு வழியில்லாமல் குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு டே கேரிலோ அல்லது வீட்டுக்கு வரும் நானிகளையோ வருடத்துக்கு 200000க்கு மேல் சம்பாதிக்கும் இருவருமே வேலைக்குப் போகும் தம்பதிகள் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் வீட்டு வேலைகளைத் தாங்களே செய்து கொண்டு தாங்களே கார் ஓட்டிக் கொண்டு தாங்களே பிள்ளைகளை வகுப்புகளுக்கு விட்டுக் கூட்டிக் கொண்டு வந்து எல்லோருமே அவரவர் வேலையை அவரவர் செய்து கொள்ள வேண்டும். காஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் கூட நாம் தான் போய் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் ஐ ஏ எஸ் அதிகாரிகள் இதை எங்கும் செய்ய விரும்புவதில்லை. இமெயிலுக்கு தானே டைப் அடித்து பதில் அனுப்புவது கூட கவுரவக் குறைச்சலாக நினைத்துக் கொண்டு இமெயிலைப் படித்து விட்டு அதற்கான பதிலை ஸ்டெனோ டைப்பிஸ்டிடம் படித்து அவர்களை விட்டுத்தான் அடித்து அனுப்பச் சொல்கிறாகிறார்கள். இன்றும் இமெயில் படிக்கத் தெரியாத, தெரிந்தாலும் அதற்குத் தானே கையால் அடித்து பதில் அனுப்பும் அதிகாரிகள் வெகு அரிதாகவே காண முடியும். அதே பந்தாவை அயல்நாடுகளிலும் காண்பிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தப் பெண்மணி மட்டும் அல்ல இதற்கு முன்பாக இதே தூதரக அலுவலகத்தைச் சேர்ந்த நீனா என்பவர் மீதும் இதே மாதிரியான குற்றசாட்டுகள் எழுந்து அவர் மீது வழக்குகள் போடப் பட்டன. இந்த குற்றசாட்டுகள் இந்திய தூதரக அதிகாரிகள் பலர் மீதும் எழுப்பப் படுகின்றன. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவே நியூயார்க் நகர போலீசார் இந்த கடுமையான நடவடிக்கையை ஒரு அதிர்ச்சி வைத்தியமாக எடுத்திருக்கக் கூடும் என்றும் எண்ணுகிறேன். முன்பு நியூயார்க் நகரில் நான் ஒரு அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தின் 28வது மாடியில் குடியிருந்தேன். அதே அடுக்ககத்தில்தான் இந்திய துதரக அதிகாரிகள் அனைவரும் குடியிருந்தார்கள். அவர்களில் பலருக்கும் டி டைப் அப்பார்ட்மெண்ட் 3 பெட்ரும்களுடன் கூடிய , மன்ஹாட்டனின் ஸ்கை லைனைக் காணக் கூடிய ஜன்னல்களுடன் கூடிய மிகப் பெரிய வீடுகள் வாடகைக்கு அளித்திருந்தார்கள். அங்கு பதவிக்கு வரும் சில இந்திய அதிகாரிகளும் தங்கள் பதவிக் காலம் முடிந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது தங்கள் மனைவியையோ, கணவனையோ, பிள்ளைகளையோ அங்கேயே விசா இல்லாமல் உரிய குடியுரிமையில்லாமல் விட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள். அவர்கள் பல காலம் உரிய விசா இல்லாமல் இல்லீகலாகவே இருந்து ஏதோ வேலை செய்து பிழைத்துக் கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து வரும் ஒரு துஷ்பிரயோகம். மேலும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப் படும் பணியாளர்கள் அங்கேயே சட்ட விரோதமாகத் தங்கியும் விடுகிறார்கள் அவர்களை மீண்டும் அனுப்பி வைக்க இந்த அதிகாரிகள் முனைவது கிடையாது. மேலும் இப்படி அமெரிக்காவுக்குள் ஆட்களைக் கொண்டு வர இவர்கள் ஏதேனும் இந்தியாவில் உள்ளவர்களிடமிருந்து பணம் பெறுகிறார்களா என்பதையும் இந்திய அரசாங்கம் விசாரித்து அறிய வேண்டும்.

இப்படி வேலைக்கு வைத்துக் கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களை அழைத்து வரும் உரிமை இவரைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அதை இவர் மட்டும் அல்ல எவருமே முறையாகப் பயன் படுத்திக் கொள்வதில்லை. ஆனால் இவரை மட்டும் குறி வைத்துப் பிடித்ததில் இதற்கும் மேலாக நமக்கு வெளியே தெரிவதற்கும் மேலாக வேறு ஏதோ உள் அரசியல் உள்ளது. அது நமக்கு என்றாவது ஏதாவது விக்கி லீக் போன்றவை மூலமாக வெளியானால் மட்டுமே தெரிய வரும். இவர் ஏதோ ஒரு க்ராஸ் ஃபையரில் மாட்டிக் கொண்டிருக்கிறார். வெளியுறவு வேலையில் உள்ள பெரும் ரிஸ்க் இது. இவர் ஒரு வேளை ஏதேனும் உளவு நடவடிக்கை அல்லது வேறு ஏதாவது முயற்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம் நமக்குத் தெரியாது. இந்த சிக்கலை இந்திய அரசாங்கம்தான் தீர்க்க வேண்டும் ஒரு சில சமயங்களில் கை கழுவி விட்டு விடுவதும் உண்டு. மாட்டிக் கொண்டவர் அவ்வளவுதான்.

பிரிட்டிஷ் கால எச்சமாக நாம் அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவைக்கேற்ற சொகுசு வாழ்க்கைகளை அளிக்கிறோம். அமெரிக்கா வரும் பொழுது ஏன் தூதரக அதிகாரிகள் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள முடியாது? அந்த அளவுக்காக அவர்களுக்கு தூதரகப் பணிகள் வெட்டி முறிக்கின்றது. அப்படியே அவர்களுக்கு வேலைக்கு ஆட்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தாதிகளை அமர்த்திக் கொள்ளலாமே அதற்கான கட்டணங்களை அதிகாரிகளுக்கு இந்திய அரசு அலவன்ஸாக அளிக்கலாமே? ஏன் இந்தியாவில் இருந்து ஆட்களைக் கொணர அனுமதிக்க வேண்டும். இந்த சம்பவத்தை பயன் படுத்திக் கொண்டு இந்திய அரசாங்கம் இந்த சலுகையை சீர்த்திருத்த வேண்டும். வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். மேலும் தூதரக அதிகாரிகளுக்கு அந்த நாட்டுச் சட்டங்கள் குறித்துத் தெளிவான பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கான ச்லுகைகளாக வெளிநாட்டுப் பதவிகளை அளிப்பதை அறவே இந்தியா நிறுத்த வேண்டும். இந்தியா, தன் நாட்டு ஊழல் அதிகாரிகளை வெளி நாட்டுக்கு அனுப்பினால் அந்த நாடுகளில் இந்திய அதிகாரிகளுக்கு எந்தவிதமான மதிப்பு இருக்கும்?

Indian-IT-workers-in-USஐ டி வேலைக்கு வருபவர்கள் கடும் உழைப்புக்கும் நடுவிலும் சமையல் செய்து பாத்திரம் கழுவி கார் ஓட்டி கார் கழுவி கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வாழ்ந்து கொள்வதில்லையா என்ன? இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம்? இங்கு அலுவலகங்களில் ப்யூன் என்ற பணியே கிடையாது. பெரும்பாலும் அவரவர் வேலையை அவரவர் செய்து கொள்ள வேண்டியதுதான். காப்பி வேண்டுமானால் நாமே காப்பி போட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில வெகு உயர் அதிகாரிகளுக்கு செகரட்டரிகள் செய்து தருவார்கள். பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களே கூட பொது ரெயில்களில்தான் ஆபீஸுக்குப் போகிறார்கள். ஸ்வீடன் நாட்டுப் பிரதமர் ஓலோஃப் பால்மே சினிமா தியேட்டரில் படம் பார்த்து விட்டு நடந்து வீட்டுக்குப் போகும் பொழுது சுட்டுக் கொல்லப் பட்டார். கோவா முதல்வர் பரிக்கர் தனது சூட்கேசை தான் மட்டுமே சுமக்கிறார் ப்யூனை எடுக்க அனுமதிப்பதில்லை. காந்தி அவரவர் கக்கூசைக் கூட அவரவரே கழுவிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார் ஆனால் அவரைப் பேரைச் சொல்லி நடக்கும் அரசாங்கத்தில் அதிகாரிகள் என்று தஙகள் வேலையை செய்ய ஒரு பட்டாளத்தையே வைத்துக் கொள்கிறார்கள்.

ஆக இந்த துரதிருஷ்டமான சம்பவம் மூலமாக இந்தியா கடுமையான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தன் சுயமரியாதையை நிறுவிக் கொள்ள வேண்டிய அனைத்து கடமைகளையும் இந்திய அரசும் மக்களும் ஆற்ற வேண்டும். முதல் வேலையாக ஒரு இத்தாலிய கிரிமினல் பெண்மணியின் பிடியில் இருந்து இந்தியா வெளி வர வேண்டும். சட்டத்தை மதிக்கும் நிலை வர வேண்டும். நீதித் துறை சீரமைக்கப் பட வேண்டும். நேர்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல் திறனும் சிந்தனைத் தெளிவும் தீர்க்க தரிசனமும் கூடிய தலமை இந்தியாவுக்கு அமைய வேண்டும். அது அமைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊழலில்லாத நேர்மையான துணிவான பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வாய்த்து விட்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது தானாகவே மரியாதை பிறக்கும். இந்தியாவின் மீது நல்லெண்ணமும் உயர் அபிப்ராயமும் ஏற்படும். இந்தியர்களும் மதிக்கப் படுவார்கள். அப்படி ஒரு உறுதியான தலைமை இந்தியாவுக்கு இப்பொழுது வாராது வந்த மாமணி போல மோடி என்னும் ஒரு மாபெரும் எழுச்சி மிகுந்த தலைவரின் மூலமாகக் கிட்டியுள்ளது. அவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவு, ஊழல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதன் மூலமாகவும் மட்டுமே இவை போன்ற அவமரியாதைகளுக்கு இந்தியா ஒரு நிரந்தரமான முற்றுப் புள்ளியை வைக்க முடியும். உறுதியான உலக அரங்கில் மரியாதை அளிக்கப் படும் நாடாக இந்தியாவை உருவாக்கும் கடமை அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது. அந்த தேசீய பொறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒரு தருணமாக இந்த தேவயானியின் கைது அமையட்டும். தீமையிலும் ஒரு நன்மை விளையட்டும். வலிமை வாய்ந்த பாரதம் உருவாகட்டும். நாளைய இந்தியா நிமிர்ந்த நன்னடையுடனும் நேர்கொண்ட பார்வையுடனும் திகழட்டும். மாபெரும் சபைகளில் அதற்கு மாலைகள் விழட்டும். மோடியின் தலமையில் புதிய இந்தியா உருவாகட்டும்.

(முற்றும்)

11 Replies to “தேவையா நீ பணிப் பெண்ணே? – 2”

  1. சோனியா அம்மையாருக்கு வழங்கிய மருத்தவ பரிசோதனை ரகசியமாக உள்ளது இதுபோல் எந்த விவகாரமும் பிசுபிதிதுவிடும்

  2. முதன்முதலில் இந்த செய்தியை அறிந்தபொழுது ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு இந்த அவமானமும் துன்பமும் அமெரிக்க அகம்பாவத்தால் ஏற்பட்டுவிட்டதே என வருந்தினேன். இக்கட்டுரை அகம்பாவமும் மேட்டிமையும் இப்பெண்தூதருக்கே உள்ளனெ , அமெரிக்க அரசாங்கம் அவர்கள் சட்டப்படி நடந்துகொண்டுள்ளது என நினைக்கும்படியாக இக்கட்டுரை பல உண்மைகளைத் தருகின்றது.

  3. திரு திருமலை அவர்கள் தனது கட்டுரைகளில் தொடர்ந்து நமது மனப்புழுக்கங்களை அழகாக வெளிப்படுத்தி வருகிறார். இன்றைய காங்கிரஸ்காரர்கள் மகாத்மா வழி வந்தவர்கள் அல்ல. இவர்கள் மெக்காலேக்கு பிறந்தவர்களும் அல்ல. ஆனால் மெக்காலேயின் செருப்பு துடைப்பவர்கள். இந்த நாய்கள் திருந்தாது. நீங்கள் புலம்புவது வீண்.

  4. 1.This incident could not have happenned if Indian Government spends money for double checking through local US advocates.

    2. The reactions of Indian Government in most cases of indian citizens in foreign soil are pathetic. Compare with Us reaction for US boy’s singapore incident.

    3. There is another angle that US used the maid to armtwist India. Now Indian government can plan similar way.!

    4. To avoid legal tangles, Indian Govt should give employment direct to Maids/assistants as a government servants. (more employment!)

  5. வணக்கம்,

    இந்த கைது விவகாரத்தில் கண்டிப்பாக இந்தியாவை அச்சுறுத்தும் பாணி உள்ளது. ஆனால் அந்த அச்சுறுத்தல் எதற்காக என்பது தெரியவில்லை.

    இரண்டாவது இந்தியர்கள் சுயமரியாதை அற்றவர்களாக, தம் பெருமை மறந்தவர்களாக , பணத்தாசை பிடித்தவர்களாகிவிட்டனர்.

    திருந்த வேண்டியது நாம் தான். நாம் மாறினால் உலகம் நமக்கு ஏற்றாற்போல் மாறும்.

    நாம் அனைவரும் மீண்டும் சுவாமி விவேகானந்தரைப் படிப்பது நல்லது.

  6. உண்மையில் இந்தியாவின் மாபெரும் எழுச்சி சரியாக நிகழ வேண்டிய தருணம் இது.
    மக்கள் தங்கள் வாக்குகளை அதற்காக பயன்படுத்தினால் நல்லது.
    வாழ்க பாரதம்!

  7. இந்தியாவிலிருந்து ஒரு முக்கியப் பொறுப்புக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்தப் பெண்மணி அமெரிக்கச் சட்டத்திற்கு மாறாக ஏன் இந்தியச் சட்டதிட்டங்களுக்கும் முரணாகவே நடந்துள்ளார் . அமெரிக்க அரசாங்கம் நடந்து கொண்டது தவறா என்பது ஒரு புறமிருக்க இந்தியத் தூதர் நடந்து கொண்டது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
    நேர்மையான அரசு இங்கு இருந்தால்தானே சரியான நபரைத் தேர்வு செய்வார்கள்?
    ஈஸ்வரன்,பழனி.

  8. இந்த தேவயாணி மும்பை ஆதர்ஷ் குடியிருப்பில் முறை கேடான முறையில் வீடு வாங்கி உள்ளார் என்று தினமணி நேற்று செய்தி வெளியிட்டுள்ளது . இந்த பெண்மணியின் தந்தை முறைகேடான்ன பின்புலத்தில் தன் மகளுக்கு இந்திய வெளிநாட்டு சேவைக்கான பதவியில் சலுகை பெற்றதாக இன்று டைம்ஸ் ஆப் இந்தியா வில் செய்தி! இந்த லசசனத்தில் மாயாவதியும் , கனிமொழியும் இந்த தேவயாணி எஸ் சி அதனால் அரசு கண்டுகொள்ளவில்லை என்று புலம்பல்! சிங்கபூரில் இருந்து 52 பேர் நாடு கடத்தப்பட்டவர்கள் பற்றியோ தினம் தினம் கடத்தப்
    பட்டுவரும் தமிழக மீனவர்கள் என்ன எல்லாம் உயர் சாதியினரா?

  9. கலெக்டருக்குப் பின்னால் டர்பன் வைத்துக் கொண்டு போகும் டபேதார்கள்…. shorthand , typist posting for all Govt office must be stop….. what these ffice doing.,…why don’t they type themself using laptops…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *