எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ தமிழில் இதுவரை வந்த வரலாற்று நாவல்களில் மிக முக்கியமானது. ஒரு காலகட்டம் வரையில் தமிழில் வந்த வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் சாகசக் கதைகளே. சுஜாதாவின் ‘இரத்தம் ஒரே நிறம்’ முக்கியமான மாறுதல் தோற்றத்தை அளித்தாலும், அடிப்படையில் அதுவும் ஒரு சிக்கலான சாகசக் கதையேதான். பிரபஞ்சனின் ’மானுடம் வெல்லும்’ அடுத்த மிக முக்கிய முன்னகர்வு. ஆனால் ஜெயமோகனின் நாவல் அடுத்த தாவலை நிகழ்த்தியுள்ளது. இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு கதைக்களத்தில் அது இயங்குகிறது. மானுட அறம் குறித்த உணர்வை வாசகனின் அகத்தில் பெரும் கேள்வியாக எழுப்புவது ஜெயமோகனின் அனைத்து நாவல்களின் மைய அம்சம். மானுடம் சந்திக்கும் பேரழிவுகளினூடாக அக்கேள்விகள் எழுப்பப்படும். இங்கும் அதை உக்கிரமாக நிகழ்த்தியிருக்கிறார் ஜெயமோகன். இந்த படைப்பின் கலை உத்திகளையோ அல்லது அறம் சார்ந்த மையத்தையோ கேள்விக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாக்குவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.
‘வெள்ளையானை’ ஒட்டுமொத்தமாக ஒரு வரலாற்றுணர்வைஅளிக்கிறது. அந்த வரலாற்றுணர்வின் அடிப்படைகளை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்:
அ) தமிழ்நாட்டில் 1870களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் மிகப் பெரிய அளவில் தலித்துகள் மடிந்தனர். அதனை ஒட்டுமொத்த சாதி இந்து சமுதாயமும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் இணைந்து வேடிக்கை பார்த்தனர்.
ஆ) குறைந்தபட்ச மானுட நீதியுடன் அதை அணுகியவர்கள் தனிப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும், ஜனநாயகம் துளிர்விடத் தொடங்கியிருந்த ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் அமெரிக்க வர்த்தகர்களுமே. ஆனால் தலித்தல்லாத இந்துத் தரப்பு முழுக்க முழுக்க பஞ்சத்தின்போது சிறிதும் மனிதத்தன்மையில்லாமல் பிரிட்டிஷ் சுரண்டல் வர்க்கத்துடன் இணைந்து கொண்டது.
இ) இந்த பஞ்சமும் அதனைச் சார்ந்த ’மேல்சாதி’ இந்துக்களின் மனிதத்தன்மையற்ற தன்மையுமே தலித் தலைவரான காத்தவராயனை (அயோத்திதாசரை) பௌத்தத்தின் பக்கம் ஈர்த்தது.
ஈ) கிறிஸ்தவத்தின் தூய சாராம்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலே உள்ளது. ஏசுவே ஓர் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பர். அவரை மீட்டெடுக்கும் கிறிஸ்தவக் குரல்கள் தலித் விடுதலையின் உறுதுணையாக இருந்தன. அதே சமயம் இந்துக் கடவுளரோ ஆதிக்க சக்திகளின் குறியீடுகளாகவே விளங்கி வருகின்றனர்.
இந்த வரலாற்றுத் தோற்றத்தை நாவல் உணர்ச்சிகரமாக நமக்குள் எழுப்புகிறது. இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது..
கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளரான கே.எம்.சரீப் ஆகியோர் இந்த நாவல் குறித்த பரப்புரையில் இணைகிறார்கள். தாது வருட பஞ்ச காலத்தின் தலித்துகளல்லாத இந்துக்களை அற உணர்வற்றவர்களாக இந்த நாவல் காட்டுவது இந்தக் கூட்டணிக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் நாவல் உருவாக்கும் மேற்கூறிய வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.
உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்.
‘வெள்ளையானை’ நாவலில் ஆண்ட்ரூ என்கிற ஒரு பாத்திரம் வருகிறது. பஞ்சத்தின் இறுதி காலகட்டத்தில் – நவம்பர் 1879 – இந்தியாவுக்கு மதப் பிரசாரத்துக்கு வந்தவர் ஆண்ட்ரூ. இவர் ஸ்காட்டிஷ் சுயாதீன சபை எனும் மதப்பிரசார நிறுவனத்தைச் சேர்ந்தவர். அதற்கு ஓர் ஆண்டு முன்னதாக பஞ்சத்தின் உச்சத்தில் இந்த சபை மிஷினரி அனுப்பிய அறிக்கையில், ’இந்தப் பஞ்சம் விக்கிர ஆராதனை செய்யும் பாவத்துக்காக ஆண்டவர் கொடுத்த தண்டனை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. .[1]
தமிழ்நாட்டில் பஞ்சத்தின் வேர்களும் தலித் சமுதாயமும்
மறக்கப்பட்ட முதல் கலகம்:
தமிழ்நாட்டின் பஞ்சத்தின் விதைகள் 1870களுக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே தூவப்பட்டுவிட்டன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அப்போது ஆட்சி செய்தது என்றாலும், அது உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரத் தரகராகவே தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் விவசாய நிலங்களிலிருந்து மிக அதிக அளவில் வருமானத்தை வரிவசூல் மூலம் உறிஞ்ச பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களுக்குத் துணையாக உள்ளூர் அதிகாரிகளும் செயல்பட்டு வந்தனர்.
நில உடைமையாளர்களிடமிருந்து எந்த அளவு உறிஞ்ச முடியுமோ அந்த அளவு செல்வத்தை உறிஞ்சி எடுப்பது பிரிட்டிஷ் எந்திரத்தின் நோக்கமாக இருந்தது. இந்தச் செயல்பாடு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் தொழில்-சமுதாய குழுக்களிடையே நிலவிய உறவுகளையும் பாதித்தது. இந்த உறவுகள் சுரண்டலற்ற சமத்துவ உறவுகள் அல்ல. சமத்துவம் சுரண்டல் இரண்டுக்குமேயான சாத்தியங்களைக் கொண்டவை. ஆனால் பிரிட்டிஷ சுரண்டல் அந்த உறவுகளின் எதிர்மறைத் தன்மைகளையே பெரிதாகப் பரிணமிக்க வைத்தது.
பிரிட்டிஷ் இங்கு அமல்படுத்திய விவசாயக் கூலிக்கான சட்டங்கள் அன்றைய பிரிட்டிஷ் நிலவுடைமையாளர்-விவசாயக் கூலிகளின் நிலையை இந்தியாவுக்குப் பிரதியெடுத்தன. 1759இல் அதிகபட்சக் கூலி பாரம்பரிய கூலியைக் காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.. இந்த நிர்ணயிக்கப்பட்ட கூலிக்கு அதிகமாகக் கேட்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 1802 இல் தஞ்சாவூர் கலெக்டர் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் தானியங்கள் உடை ஆகியவையும் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டுமென ஆணையிட்டார்.[2]
இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இது அன்றைய நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாகவும் (பெரும்பாலும் தலித்துகளான) தொழிலாளர்களுக்கு எதிராகவும் பிரிட்டிஷ் உருவாக்கியது என்கிறார்கள். இந்தச் சட்டங்கள் தலித் சமுதாயங்களுக்கு எதிரானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் இவை சுதேசிய நிலவுடைமையாளர்களுக்கும் எதிரானவையாகவே இருந்தன. தமிழகத்தின் முதல் கலகத்தின் ஆவணங்கள் அதைத்தான் காட்டுகின்றன. நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். ஒவ்வொரு பத்து கலம் நெல்லுக்கும் இரண்டு மரக்காலுக்கு அதிகமான நெல்லை அவர்கள் இப்போது கேட்டனர். அதாவது கிழக்கிந்திய கம்பனியின் வரவுக்கு முன்னால், அவர்களுக்குத் தரப்பட்ட பாரம்பரிய கூலியையே கேட்டார்கள். அப்படி கிடைக்கவில்லையென்றால் தாங்கள் அறுவடை செய்வதில்லை என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பறையருக்கான பாரம்பரிய வேலைக் கூலியான ‘கலவசம்’ 10-12 சதவிகித விளைச்சலை எடுத்துவிடுவதாகவும் குறை கூறுகிறது பிரிட்டிஷ் கலெக்டரின் அறிக்கை.[3] ஆனால் இதை சுதேசிய நிலவுடைமையாளர்கள் குறையாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
1790களில் இந்த பிரச்சினை சோழமண்டலத்துக்கும் பரவியது. பிரிட்டிஷாரின் அதிக வரிவிதிப்பால் விவசாயத்தை கைவிட்டுவிடும் விவசாய மிராசுதார்களைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவிட்டது. ஆனால் வரி வசூலை குறைக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தது. அதேபோல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் நிலவுடைமையாளர்களிடமிருந்து பிரிந்துசெல்லும் பறையர் பள்ளர் மக்களின் சொத்துகளை நிலவுடைமையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனும் பிரகடனத்தை பிரிட்டிஷ் கம்பெனி மாயாவரம், கும்பகோணம் பகுதிகளில் 1798 இல் அறிவித்தது. பறையர் பள்ளர் மக்களுக்கு உதவி செய்வோருக்கு மிகக் கடுமையான தண்டனை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் வகையில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.[4]
சென்னையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த வேலைநிறுத்தமே மிராசுதார்களால் தூண்டிவிடப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கருதியது. சாதி அமைப்பின் காரணமாக மெட்ராஸ் பிரதேசமெங்கும் இருக்கும் பறையர் சாதியினர் அனைவரும் இப்படி வேலைநிறுத்ததில் ஈடுபடலாம் எனும் அச்சமும் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. பிற பறையர் சமுதாய மக்களுக்கு கலகச் செய்தியை கொண்டுசெல்லும் சில பறையர் சமுதாயத் தலைவர்கள் குறித்த செய்தியும் பிளேஸுக்கு கிடைத்தது. திருவள்ளூரில் ஒரு கோவில் அதிகாரியால் ஒரு குமஸ்தாவுக்கு எழுதப்பட்ட கடிதம் பறையர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் கம்பெனி எடுத்த நடவடிக்கைகளைக் கூறுகிறது. அங்கு வசிப்பவர்கள் பறையர்களுக்கு உதவக்கூடாதென்று கம்பெனி முரசறிந்து அறிவித்ததையும் பறையர்கள் ஒன்றாக இணைந்துவிடக் கூடாதென்பதில் அதிகாரிகள் கவனமாக இருப்பதாகவும் அது கூறுகிறது.[5]
பிளேஸின் ஆவணங்கள் ஒரு முழுமையான பிரிட்டிஷ் எதிர்ப்பலை வீசியதைக் காட்டுகின்றன. பொன்னேரி பகுதிக்கான பாளையக்காரர், பிளேஸால் தண்டிக்கப்பட்டார். அவரது சம்பளம் தண்டனையாக எடுத்துகொள்ளப்பட்டது. ஆனாலும் அவர் பிளேஸை வந்து சந்திக்க மறுத்துவிட்டார். சென்னை ‘கறுப்பு நகரத்தில்’ பல பாளையக்காரர்கள் கூடி கலந்தாலோசித்ததாகவும் தெரிகிறது.
பிளேசால் கைப்பற்றப்பட்ட மற்றொரு கடிதத்தில் சென்னை நகரிலிருந்த பறையர் சமுதாயத் தலைவர்கள் சென்னைக்கு நாற்பது கல் தொலைவிலிருந்த கருங்குழியில் வாழும் பறையர்களை சென்னைக்கு வந்து கலந்தாலோசனை செய்யச் சொன்னதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை எழுதியதாகச் சொல்லப்பட்ட பறையர் சமுதாயத் தலைவர்கள் இருவர் இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மூன்றாவது நபரோ அது தான் எழுதியதல்ல என சொல்லிவிட்டார். இந்தக் கடிதம் குறித்து சென்னையில் வாழும் பறையர் சமுதாயத் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், ‘இது எங்களை மாட்டவைக்க மேல்சாதியினரின் சதி’ என்று மறுத்தனர்.. இந்த மறுப்புரையை பிளேஸ் ஆவணப்படுத்தியிருக்கிறார். பெரியதம்பி என்கிற பறையர் சமுதாயத் தலைவரின் மறுப்புரை அது:
“பிரிட்டிஷ் அரசாங்கத்தாரின் பூட்ஸ்களைச் சுத்தம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவோமா? பிரிட்டிஷார் எங்கள் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் மாட்டி எங்களைத் தீவாந்திரம் அனுப்பிவிட மாட்டார்களா? கருங்குழியில் உள்ள பறையர்களைக் கண்டித்து அவர்கள் எவ்விதக் கலகத்திலும் ஈடுபடக்கூடாதென்று நானே சென்று சொல்கிறேன்.”[6]
கலெக்டர் பிளேஸில் தொடங்கி இந்தக் கலகத்தை அண்மையில் ஆவணப்படுத்தும் யூஜீன் இர்ஷிக் (Eugene F. Irschick) வரை இது பறையர்களைப் பயன்படுத்தி நிலவுடைமைச் சாதிகள் செய்த கலகம் என்றே கூறுகின்றனர். ஆனால் இந்த முதல் கலகத்தை மீண்டும் வாசிக்கும்போது சில முக்கிய விஷயங்கள் தெரிகின்றன:
- ஒரு குறிப்பிட்ட விவசாய நிலத்துடன் இணைந்திருந்தாலும் பறையர்களுக்கு விவசாயக் கூலி உரிமை இருந்தது. அந்தப் பாரம்பரியக் கூலி உரிமை மகசூலில் பத்து சதவிகிதம் வரை இருந்தது. அதே காலகட்டத்தில் உலகின் வேறெந்தப் பகுதியின் –பிரிட்டிஷ் உட்பட்ட – விவசாயக் கூலிகளின் கூலியைவிட இது உயர்ந்தது. அரசாங்க வரிவசூல் நியதிகளை இந்தப் பாரம்பரியமுறை கண்டுகொள்ளவில்லை என்பதை கலெக்டரின் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
- பறையர்கள் வேலை நிறுத்தம் செய்தது மிகத் தெளிவாக தங்கள் கூலி உயர்வை முன்வைத்தே.. பிரிட்டிஷார் கூறுவது போல எஜமான விசுவாசத்தை முன்வைத்து அல்ல.
- பறையர்களுக்கும் இதர பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. தீவாந்திர சிட்சை எனப்படும் இந்தத் தண்டனை – சுமத்ரா தீவில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலை ஒன்றில் அடிமைகளாக வாழ்க்கை முழுவதும் அடிமையாக மடிவது.
இந்தக் கொடூரமான தண்டனைக்கு ஆளான தலித் சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் குறித்த நினைவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.
விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் உபரியை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பிரிட்டிஷார் முனைந்தனர். எனவே பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த பறையர் சமுதாயத்தினர் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். 1777 இல் பிரிட்டிஷார் செய்த மற்றொரு விஷயமும் பின்னாள்களில் பஞ்சத்தின்போது தலித்துகளின் இன்னல்களுக்கான முக்கியக் காரணியாகியிருந்தது.
தங்கள் வெடிமருந்து கிடங்கிக்கு எடுத்துகொண்ட நிலத்துக்கான நஷ்டஈடாக, மெட்ராஸில் தலித்துகள் வாழும் ’பறையர் சேரி’ என அழைக்கப்பட்ட பகுதியில் இருந்து நிலத்தை அபகரித்து வழங்கினர். இதற்கு எதிராகப் பறையர் சமுதாயத் தலைவர்கள் குரல் எழுப்பினர். இது தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் இடம், கணக்கற்ற ஆண்டுகளாகத் தங்களுக்கு பாத்யதைப்பட்டது என்றார்கள். ஆனால் பிரிட்டிஷார் அதை மறுத்துவிட்டனர். இந்த நிலத்தில் தலித்துகளுக்கு எந்த பாத்யதையும் கிடையாது, அவர்கள் அங்கு வாடகைக்கு இருப்பவர்களாகத்தான் கருதப்பட முடியும், இந்த இடத்தில் இப்போது இருக்கும் குடிசைகளே அவர்களுக்குப் போதுமானது, அவர்கள் மேலதிக குடிசைகளையும் அங்கே கட்டக் கூடாது என்றனர்..[7]
பிரிட்டிஷ் சமுதாயத்தில் இருந்த நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளின் அடிமைநிலையை ஒத்த இடத்துக்கு தென்னிந்திய தலித் சமுதாயம் தள்ளப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான். பறையர் எனும் வார்த்தை மிக மோசமான இழிவான பெயர் கொண்டதாக மாற்றப்பட்டதும் இதே காலகட்டத்திலாகவே இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்தின் இயற்கை பரிணாமம் தேக்கநிலைக்கு உள்ளாக்கப்பட்டு, இந்திய சமூக அமைப்பின் உள்-உறவுகள் பிரிட்டிஷ் சமுதாயத்தின் படிநிலைகளைப் பிரதியெடுக்க வைக்கப்பட்டது. 1840 இல் வெளியான விவிலிய இலக்கியக் கலைக்களஞ்சியம் இதைத் தெளிவுப்படுத்துகிறது:
ஆதியாகமத்தில் (3.19) ஆதி சாபத்தின் ஒரு பகுதியாக நீ உன் முகத்தின் வியர்வையால் உன் உணவை உற்பத்தி செய்வாய் எனும் ஆணை அளிக்கப்பட்டது. எனவே உடல் உழைப்பு என்பது ஒரு கடுங்கனமான பாரம் எனும் பார்வை இருக்கிறது… இந்த மனப்பதிவுகள்… பெரிய அளவில் மனிதனுக்குத் தீமையை இழைத்துவிட்டன. எனவே நம் கிறிஸ்தவ தேசங்களிலும் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பறையர் சாதியாக பரம்பரை பரம்பரையாக நீரிறைக்கும் மரம் செய்ய வேண்டியவர்களாக நடத்தப்படும் நிலை இருக்கிறது. அது இறை விருப்பமெனவும், இந்த மக்கள் உயர்ந்த சிந்தனைகளை சிந்திக்க இயலாதவர்களென்றும், இவர்கள் மேலெழுந்தால் சமுதாயத்தைக் களங்கப்படுத்திவிடுவார்களென்றும், எனவே இவர்களை வெறுப்புடனும் சுமைகளாலும் கட்டுப்படுத்தி வைப்பது சமுதாயத்தின் பாதுகாப்புக்கு அவசியமென்றும் கருதப்படுகிறது.[8]
இந்த வரிகளை எழுதியவர் அறிந்திடாத விஷயமென்னவென்றால் உண்மையில் பறையர் சமுதாய மக்களைப் போல ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் மக்கள் நடத்தப்படவில்லை. மாறாக 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் சமுதாய மக்களின் சுதந்திரமற்ற நிலை இங்குள்ள தலித் சமுதாயங்கள் மீது திணிக்கப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த சமுதாய எதிர்ப்பும் இருந்தது. ஏனெனில் தலித் சமுதாயத்தின் வீழ்ச்சி என்பது தென்னிந்திய விவசாய அமைப்பின் பெரும் வீழ்ச்சியின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. அந்த அமைப்பின் ஜனநாயகத்தன்மை கொண்ட சாத்தியங்கள் அழியவும், அந்த அமைப்பின் தேக்கநிலையால் அதில் இயல்பாக இருந்த சுரண்டலும் படிநிலைத்தன்மையும் தீண்டாமையும் அதிகரிக்கவுமான வழியை அது உருவாக்கியது.
இவற்றில் வெளிப்படும் ஒரு முக்கிய உண்மை என்னவென்றால் பிரிட்டிஷ் சுரண்டலுக்கு முன்னால் நிலவிய ’நிலவுடைமை சமுதாய’ அமைப்பு நமக்கு கற்பிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக ஜனநாயக சாத்தியங்களைக் கொண்ட அமைப்பாக விளங்கியுள்ளது. அதுவும் ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டலும் கொண்ட அமைப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பிரிட்டிஷ் சுரண்டலுக்கு எதிராக அந்த அமைப்பு ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக முறை எதிர்ப்பை காட்டியிருக்கிறது. அந்த எதிர்ப்பு மிகத் திறமையுடனும் இரக்கமின்றியும் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள்கூட இன்று இல்லை. பெரியதம்பி என்கிற பறையர் தலைவரின் வார்த்தைகள் மட்டுமே அதற்கான ஒரு சிறிய திறப்பை அளிக்கின்றன.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷார் இந்தியாவில் ஏற்படுத்திய சுரண்டல் முறை ஈடு இணையற்றது. 1757 பிளாசி போர் முதல் 1815 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2.5 முதல் 5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய செல்வம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்பட்டதாக கணக்கிடப்படுகிறது.[9]
19 ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலங்களில் தொடங்கி இன்றுவரைக்கும் உருவாக்கப்பட்டுவரும் ’ஒடுக்கப்பட்ட தலித்துகள்-சுரண்டும் பிரிட்டிஷார்கள்-அவர்களுடன் கூட்டு சேர்ந்து ரத்தம் உறிஞ்சும் மேல்சாதியினர்- மனசாட்சியுடனும் ‘அருட்பணி’ (மதமாற்றம்) செய்து விடுதலைக் குரல் எழுப்பும் மிஷினரிகள்’ எனும் சித்திரத்துக்கு வேறுபட்டது இது. தங்கள் உரிமைகளுக்காக முதல் கலகக் குரல் எழுப்பிய தலித்துகள் – அவர்களுடன் இணைந்த மிராசுதார்கள் பாளையக்காரர்கள் – இவர்களுக்கு எதிராக இவர்களை சட்ட ஒழுங்குக்கு எதிரானவர்கள் என ஈவிரக்கமின்றி அடக்கி முடிந்தவரை செல்வத்தை சுரண்டி எடுக்கும் பிரிட்டிஷ் அரசு இயந்திரம் – அந்தப் பொருளாதார உபரியின்மீது அமர்ந்தபடி கறுப்புத் தோல் விக்கிரக வழிபாட்டாளர்களுக்கு காருண்யத்தின் உபரித்துளிகளை அவ்வப்போது அளித்த ஐரோப்பிய மிஷினரிகள் – இந்தச் சித்திரமே வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பக்கங்களிலிருந்து எழுகிறது.
சித்ரவதைகளுக்கு எதிரான முதல் குரல்
19 ஆம் நூற்றாண்டிலும் விவசாயிகளுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்ந்தன. இதனை எதிர்த்து முதல் ஜனநாயகக் குரலை எழுப்பியவர் காசலு லட்சுமிநரசு செட்டி. பிரிட்டிஷாருடன் இணைந்து இந்திய ரத்தத்தை உறிஞ்சிய மேல்சாதி எனும் மனச்சித்திரத்துக்குப் பொருத்தமானவர் நரசு செட்டி. ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுக்கு ஏற்றவிதமான இடத்தில் இருந்தாலும் அவரது செயல்பாடுகள் அதற்கு நேர் எதிராக இருந்தன. தனது தொழில் வர்த்தகத்தை அவர் கவனிக்கவில்லை. மாறாக சிறு விவசாயிகளையும் விவசாயக் கூலிகளையும் பிரிட்டிஷ் சித்ரவதை மூலம் சுரண்டுவதைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். கிழக்கிந்திய கம்பெனிக்கு மேலே பிரிட்டனில் மக்கள் சபை அமைப்பு இருப்பதை அவர் அறிந்தார். தொடர்ந்து பிரிட்டனின் மக்களவைக்கு கடிதங்கள் எழுதி இந்தியாவின் விவசாய சூழலையும் இங்கு கிழக்கிந்திய கம்பெனி மூலம் செய்யப்படும் சுரண்டல்களையும் சித்ரவதைகளையும் விவரித்தார். மிஷினரிகளின் மதமாற்ற சூழ்ச்சிகள், பிரிட்டிஷாரின் சித்ரவதை சுரண்டல்கள் ஆகிய இரண்டையும் ஒருசேர எதிர்க்க சென்னையில் ஓர் ஆங்கில இதழையும் ஆரம்பித்தார். அதன் பெயர் கிரஸெண்ட் (‘Crescent’). இதன் விளைவாக பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான டான்பி செய்முர் (Danby Seymour) என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு அது மெட்ராஸில் வரி வசூல் செய்ய விவசாயிகளிடம் செய்யப்படும் சித்ரவதைகளை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது.[10]
இறுதியாக இந்த கமிஷன் ரிப்போர்ட் வந்த போது அது பிரிட்டிஷ் ஆதரவுத்தன்மை கொண்டிருந்தது என்றாலும், மெட்ராஸ் பகுதியில் சித்ரவதை என்பது பெரிய அளவில் நடக்கிறது என்பது பிரிட்டனின் மனசாட்சியை ஓரளவாவது சீண்டியிருந்தது. அதீதமான வரிவசூல் நிர்ப்பந்தம், கம்பெனி ஆட்சியில் காவல்துறைக்குக் கொடுக்கப்பட்ட கட்டற்ற அதிகாரம் ஆகியவை குறித்து கமிஷன் மௌனிப்பதை நிகோலஸ் டிர்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.[11]
பொதுவாக கமிஷனின் போக்கு இந்தியர்கள் மீது பழியை போடுவதாக இருந்தது. ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் சித்ரவதைக்கும் தொடர்பில்லை என்பது போலக் காட்டும் போக்குக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆதாரங்களை அடுக்கினார் ஜியார்ஜ் தாமஸ் கேப்பல் (George Thomas Keppel) என்கிற உறுப்பினர்.[12] பல கலெக்டர்கள், பிரிட்டிஷ் வர்த்தகர்கள் சித்ரவதை இல்லாவிட்டால் தாசில்தார்களால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வேண்டிய வரி வசூலிக்க முடியாது என சித்ரவதையை நியாயப்படுத்தியிருந்தனர். இங்கு வட ஆர்க்காடு கலெக்டரான பவுர்டில்லான் (J.D.Bourdillon) செய்துள்ள அவதானிப்பு முக்கியமானதாகும். பிரிட்டிஷாரின் நிலம் சார்ந்த வரி வசூல் முறை சொத்தின் மதிப்பை கடுமையாகக் கீழிறக்கிவிட்டது, இது பொதுவாகவே மக்களின் சுயமரியாதையையும் நடத்தையையும் பாதித்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். அப்படி ஒரு சூழலில் இத்தகைய கொடூரமான அவமானப்படுத்தும் சித்ரவதைகளுக்கு அவர்கள் தங்களை ஆளாக்க அனுமதித்திருக்க மாட்டார்கள். [13]
இந்த செயல்பாடுகளுக்கான விளைவுகளை நரசு செட்டி அனுபவிக்க வேண்டியதாயிற்று. அரசாங்கம் அவரது பத்திரிகையை முடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அவரது வர்த்தகமும் தகர்ந்தது. 1863 இல் அவர் இறந்தார். அத்துடன் அவர் நடத்திய பத்திரிகையும் மூடப்பட்டது. இன்றைய அரசியல் பார்வையில் லட்சுமிநரசு செட்டி ஒரு இந்துத்துவராகவே அறியப்படுவார். அவர் மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்காக அன்றைய தாசில்தார்கள்-பிரிட்டிஷ் அதிகாரிகள் என்கிற அசுர பலம் பொருந்திய கூட்டணிக்கு எதிராக தனி மனிதராக குரல் கொடுக்கும் ஆன்மபலம் அவருக்கு இருந்தது. அதை அவரது இந்து மதம் அளித்தது. அக்குரல் ஒரு நிறுவனக் குரலாக மாறியிருந்தால் தாதுவருட பஞ்சம் சென்னை மாகாணத்தில் பெரிய அளவில் தடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அப்படி ஒரு நிறுவனம் மக்கள் உரிமைக்காக இந்தியாவில் உருவாகியிருக்க வேண்டுமென்றால் அதற்கு நிதி அவசியம். இந்தியாவில் தொடர்ந்து கலகக் குரல்கள் ஜனநாயக சக்தியுடன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நோக்கி உயர்ந்த அதே காலகட்டத்தில் இந்தியா மிகப் பெரிய வளச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில்தான் பிரிட்டனின் அளப்பரிய உபரியின் மீது மிஷினரி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இன்று அவை அளிக்கும் சித்திரங்கள் மூலமாகவே நாம் பஞ்சத்தையும், அந்த மிஷினரி அமைப்புகளின் வாரிசுகள் அளிக்கும் கருத்தியல் மூலமாகவே நம் வரலாற்றுணர்வையும் பெறும் சாபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட சுதேச நிவாரணங்கள்
அதீத சுரண்டல், உணவு தானியங்கள் பிரிட்டிஷாரின் போர்களுக்காக ஏற்றுமதி செய்யப்படுதல், இந்திய சமுதாயத்தில் குறிப்பாக பாரம்பரிய விவசாய அமைப்பு பரிணமிக்காமல் அடைந்த தேக்கநிலை இத்தனைக்கும் மேலாக கட்டற்ற சந்தை பொருளாதாரத்தின் கண்ணுக்குத் தெரியாத கரத்தின் மீது பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்ட திடீர் பக்தி – இவை அனைத்துமே பஞ்சத்துக்கான அடித்தளத்தை உருவாக்கியிருந்தன. இது போதாதென்று 1876-77 இல் பிரிட்டனில் விவசாய உற்பத்தி மோசமாக இருந்தது. எனவே பிரிட்டிஷ் உணவுதானிய சந்தையின் ஸ்திரத்தன்மைக்காக 3.2 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. 1876 இல் பஞ்சத்தின் முதல் அதிர்வுகள் சென்னையை எட்டத் தொடங்கியதுமே பாரம்பரிய அன்னதானங்கள் சென்னையில் செய்யப்பட்டன. தொடக்க பஞ்ச நிவாரண பணிகளில் ஒரு நாளைக்கு 10,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இதைப் பாராட்டியது. கூடவே உடல்நிலை நன்றாக இல்லாத உழைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே இந்த நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டுமென்று எச்சரித்தது. விரைவில் இந்த பஞ்ச நிவாரண சேவைகளை பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி ஏற்றெடுத்தார். இச்சமயம் அது நாளைக்கு 22,000 என உயர்ந்திருந்தது. [14]
ஆனால் விரைவில் பாரம்பரிய பஞ்ச நிவாரண இயக்கங்கள் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. அன்று இந்திய வைஸ்ராயாக இருந்த லார்ட் லைட்டன் சந்தை பொருளாதார ஆதரவாளர். வலதுசாரி கிறிஸ்தவர். அவர் ஏற்கெனவே தனது ‘சிக்கன நடவடிக்கைகளின்’ ஒரு பகுதியாக பாசனவசதிகளை செப்பனிடுவதை நிறுத்தி வைத்திருந்தார். இதனால் பெரிய அளவில் நீர் சேகரிப்பு என்பது இல்லாமல் போயிற்று.[15] பஞ்சம் பரவ ஆரம்பித்தபோது சர் ரிச்சர்ட் டெம்பிள் என்பவரை பஞ்சத்தை மேற்பார்வை செய்ய தனது சிறப்பு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பினார். வைசிராய் லைட்டன் பிரபு டெம்பிளுக்கு பஞ்ச நிவாரண செயல்பாடுகளை இறுக்கிப் பிடிக்குமாறு அறிவுறுத்தினார். ’செலவைக் குறித்துக் கவலைப்படாமல் உயிரைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் முடியாத காரியம்.’ என்றார் ரிச்சர்ட் டெம்பிள். பஞ்ச நிவாரணம் பெறுவோரில் ஐந்து லட்சம் பேருக்கு நிவாரணம் நிறுத்தப்பட்டது டெம்பிளின் முதல் வெற்றி. ’உடல்வலிமை சர்வ நிச்சயமாக இல்லை; இனி உழைக்கவே முடியாது’ எனச் சான்றிதழ் பெறும்வரை நிவாரண உணவு கிடைக்காது. எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உணவு கொடுத்து உயிர் வாழ வைக்க முடியும் என்பதற்கான பரிசோதனையில் ஈடுபட்டார் டெம்பிள். 1877 இல் லைட்டன் பஞ்சம் குறித்து இங்கிலாந்தில் இப்படி சொன்னார்: இந்திய சமுதாயம் மண்ணிலிருந்து விளைச்சலை உற்பத்தி செய்வதை விட மக்கள்தொகையை அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.[16]
சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது. தொடர்ந்து பஞ்சநிவாரணத்துக்காக உடல் உழைப்புக்கு உணவு என்கிற ரீதியில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முகாம்கள் வேண்டுமென்றே குடியிருப்புகளிலிருந்து தொலைவுகளில் அமைக்கப்பட்டன. உடல் உழைப்பு முடிந்தவர்கள் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டவர்களிடமிருந்து கடும் உழைப்பு உறிஞ்சப்பட்டது. உணவோ மிகவும் சத்து குறைந்ததாக இருந்தது.
நாஜி வதை முகாம்களில் சிறை செய்யப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவைக் காட்டிலும் இங்கு அளிக்கப்பட்ட உணவு தரமும் சத்தும் குறைந்ததாக இருந்தது. பொருளாதார ஆரோக்கியம் பஞ்சத்தில் இறப்பவர்களின் ஆரோக்கியத்தைவிட முக்கியமானது என்றார் ரிச்சர்ட் டெம்பிள். எல்லாமே பொருளாதார சமன்பாடுகளுக்கு பிறகுதான் வரவேண்டும், மனித உயிர்களை மிகக் குறைவான அளவு செலவில் பாதுகாப்பது என்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்றார் அவர்.[17]
மீண்டும் ஒரு எதிர்ப்புக் குரல்:
பஞ்சத்தின் கோரத்தை துணிகரமாக கொண்டுவந்ததிலும் ஆவணப்படுத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தது ’மெட்ராஸ் மெயில்’ பத்திரிகை. 1875 இல் ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த செய்தித்தாள் தொடர்ந்து தலையங்கங்கள் கட்டுரைகள் மூலமாக அரசின் கையாலாகத்தனம், நிவாரணப்பணியில் பாரபட்சம், பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து கணக்கிடுவது என இவை அனைத்தையும் வெளிக் கொண்டுவந்தபடியே இருந்தது. வைஸ்ராய் லைட்டன் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,50,000 என கூறிய போது இந்த பத்திரிகை அவர்களின் எண்ணிக்கை அறுபது இலட்சம் என கணக்கிட்டு கூறியது.[18] (அடுத்த நூற்றாண்டில் ஹிட்லரின் வதைமுகாம்களில் இறந்த யூதர்களின் எண்ணிக்கை!) இந்த நாளேட்டின் ஆசிரியராக இருந்த வில்லியம் டிக்பி இதில் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால் அவருக்கு வெள்ளையர் என்கிற ஒரு பாதுகாப்பு கவசம் இருந்தது. கூடிக் கூடிப் போனால் அவரை இங்கிலாந்துக்கு மீண்டும் அனுப்பிவிட முடியும். ஆனால் பத்திரிகை நடத்திய இந்தியர்களுக்கோ இது மிகப் பெரிய ஆபத்து. இருந்த போதிலும் அவர்கள் மெட்ராஸ் மெயில் மூலம் தொடர்ந்து அரசாங்கத்தை தாக்கி வந்தார்கள்.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பலவித தொழில் சார்ந்த மக்களுக்கு வெவ்வேறு விதமான நிவாரணங்கள் தேவைப்பட்டன. இவர்களுக்கான குரல்களை இந்திய பிரதிநிதிகளே ஒலித்தனர். பிரிட்டிஷ் அரசினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நெசவாளர்கள். சேஷையா சாஸ்திரி திருச்சி பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்காக அரசிடம் மன்றாடுகிறார். ஒரு முழுமையான திட்டத்தை முன்வைக்கிறார்
“அவர்களில் பலர் தங்கள் கைத்தறிகளை அடகு வைத்துவிட்டனர். அறுவடைக் காலம் வந்தால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் இவர்களுக்கோ அறுவடை செய்ய தெரியாது. தெரியாத தொழிலில் இவர்களை எவரும் பணியமர்த்தவும் மாட்டார்கள். இன்றைக்கு முழுமையான பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டு வறுமையில் இவர்கள் உழல்கிறார்கள். அவர்களின் கைத்தறிகள் மீண்டும் இயங்குவதைத் தவிர அவர்களுக்கு அளிக்கப்படும் பஞ்சநிவாரனம் வேறென்ன இருக்க முடியும்? … இந்த ஏழை நெசவாளர்களுக்கு வாழ ஒரே வழி பஞ்ச நிவாரண நிதியிலிருந்து இவர்களுக்கு பஞ்சு வாங்கி கொடுத்து மீண்டும் கைத்தறிகளுக்கு உயிர் ஊட்டலாம். (திருச்சியில்) நெசவாளர்கள் எல்லா சாதிகளிலுமாக 18000 பேர் இருக்கிறார்கள் 4500 குடும்பங்களில் 50 கிராமங்களில் உள்ளன. இவர்களில் 1500 குடும்பங்கள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன. 3000 குடும்பங்கள் வறுமையின் விளிம்புக்கு வந்துவிட்டன. இவர்களுக்குப் பஞ்சு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு இருபது ருபாய்க்கு வாங்கிக் கொடுத்தால் சில வாரங்களுக்காவது கைத்தறிகள் ஓடும்”.[19]
ஆனால் இதிலுள்ள கொடூரமான முரண்நகை என்னவென்றால் 1879 இல் இந்திய நெசவுத் தொழிலை நசிக்க வைக்கும்படி, லங்காஷயர் நெசவாலைகளுக்கு சாதகமான வர்த்தக நிலைபாடுகளை உருவாக்கி, அதனைக் கடுமையாகக் கடைப்பிடித்து, இந்திய நெசவுத் தொழில் அழிவின் பிதாமகராகச் செயல்படப் போகிறார் வைஸ்ராய் லைட்டன். அவருடைய அரசிடம்தான் சேஷையா சாஸ்திரி திருச்சி நெசவாளிகளின் பஞ்ச நிவாரணத்துக்காக ஒரு தொழில் மீட்டெடுப்புத் திட்டத்தை முன்வைத்து மன்றாடிக் கொண்டிருந்திருக்கிறார்.[20]
துரதிர்ஷ்டவசமாக ஒடுக்கப்பட்டோருக்காக எழுந்த இத்தகைய இந்திய குரல்கள் ஆங்காங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவே தவிர மிஷினரிகளின் பஞ்ச விவரணம் போல நிறுவனத்தன்மையுடன் ஆவணப்படுத்தப்படவில்லை. காரணம் எளிமையானதுதான். இந்த குரல்கள் காலனிய பொருளாதாரத்துக்கும் ஆட்சி அதிகாரத்துக்கும் எதிரானவை. இருண்ட மூடநம்பிக்கையும் கொடுமையும் நிறைந்த இந்தியாவுக்கு ஒளியூட்டும் கிறிஸ்தவ ஐரோப்பிய ஆட்சி எனும் மேற்கத்திய பொதுமனச் சித்திரத்துக்கு எதிரானவை. எனவே இவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன என்பதைவிட தீவிரமாக ஆவணப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டன எனலாம். இன்று நம் அறவுணர்வைச் சீண்ட உருவாக்கப்படும் புனைவுகளுக்கான நாடகீய உச்சங்களைத் தர இந்த இந்தியக் குரல்களைவிட மிஷினரி விவரணங்களே வல்லவையாக இருக்கின்றன.
இறுதியில் பிரிட்டிஷ் அரசு இயந்திரத்துக்கு பஞ்சத்தால் மக்கள்தொகை குறைந்தது நல்லது என்பதுதான அணுகுமுறையாக இருந்தது. இந்த மால்தூஸிய பார்வை 1881 இல் பஞ்சம் குறித்து உருவாக்கப்பட்ட கமிஷன் கூட இந்த மரணங்களைத் தடுப்பதில் எவ்வித லாபமும் இல்லை என்ற தொனியிலேயே தனது அறிக்கையை சமர்ப்பித்தது:
பஞ்சத்தில் இறந்த எண்பது சதவிகித மக்கள் ஆக வறுமையில் வாடும் 20 சதவிகித மக்கள் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் ஒழுங்கான கட்டுப்பாடில்லாமல் இன்னும் அதிகமாக அதிகரித்து இன்னும் அதிக மக்கள் வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றிருப்பார்கள்.[21]
(தொடர்கிறது..)
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேஸா… ! எங்கள் கண்ணீரால் காப்போம். கிறிஸ்த்தவமும், இஸ்லாமும் இது வரை அளித்தது பஞ்சமும்,பேரழிவுகளும் தான். நாகரீக உலகத்திற்கு இவர்களின் கொடை. கம்யூனிஸ்ட்களும், மிஷனரிகளும் பொய் வரலாற்றையும், போலி ஆவணங்களையும், வெறுப்பையுமே உலகிற்கு விட்டு சென்றுள்ளனர். இந்துத்துவம் மானுட மாண்பையும், அன்பையும் கருணையையும் அளிக்கிறது.
அருமையான வரலாற்று ஆய்வு.
Peasants and monks in British India என்ற புத்தகத்தைப் பற்றி முன்பு அ.நீயும் நானும் பேசியிருக்கிறோம். விவசாயிகள், அலைந்து திரியும் துறவிகள் என்ற இரு கூட்டத்தாரையும் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் ஆட்சியின் அடித்தளத்தை அசைக்கும் சக்தியுள்ளவர்கள் என்றூ நினைத்து கடுமையான அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கினார்கள். அந்தப் புத்தகம் பெரும்பாலும் வட இந்தியா சார்ந்த தரவுகள் கொண்டது.
தமிழகத்திலும் பிரிட்டிஷ் அரசின் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான முதல் கலகக் குரல்களை விவசாயிகள் தான் தீவிரமாக எழுப்பியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒருபுறம் சுதேசி நிவாரண முயற்சிகளை தடுத்து பஞ்ச சாவுகளை அதிகரித்து, மறுபுறம் தலித் சமுதாய மக்களிடம் அவர்களது நண்பன் போலவும் பாதுகாவலன் போலவும் காட்டிக் கொண்டு, மிகத் தந்திரமாகவும் குயுக்தியுடனும் பிரிட்டிஷ் காலனிய அரசு செயல்பட்டிருக்கிறது.
கடும் உழைப்பைச் செலுத்தி இந்த ஆவணங்களைத் தேடி, விடுபட்டிருக்கும் கண்ணிகளைக் கோர்த்து அளித்திருக்கிறார் அ.நீ. தமிழக சமூக வரலாற்று ஆய்வுலகம் இதற்காக அவருக்குக் கடமைப் பட்டுள்ளது.
வெள்ளையானையின் இருட்டுப் பக்கங்களைப் படிக்க படிக்க மனம் பதறுகிறது. இவ்வளவு கொடூரமான வெள்ளைக்காரனை மனசாட்சியுள்ளவனாக காண்பிப்பதின் உள்நோக்கம் இந்துக்கள் அனைவரும் கெட்டவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கு மட்டுமே என்பதைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதை வேண்டுமென்றே ஜெயமோகன் செய்திருப்பார் என நம்ப மனம் மறுக்கிறது. இவ்வளவு ஆதாரங்களைத் தேடியெடுத்து அதை ஆவனப்படுத்திய அரவிந்தன் நீலகண்டனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, எங்களுக்கு சிந்திக்கும் மூளை இல்லை என்பதுதான் அது 🙂 அதாவது ஹிந்து மதத்தில் இருக்கும் அடுக்குகளை பயன்படுத்திதான் இஸ்லாமும் கிருத்துவமும் வளர்ந்தது, வளர்ந்துகொண்டிருக்கிறது என்று சிந்திக்கும் அளவுக்கு எங்களுக்கு மூளை வளர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்த ஜாதீய அடுக்கு முறையை பயன்படுத்தி அதிகம் வெற்றி கண்டவர்கள் ஆங்கிலேயர்கள் என்று சிந்திக்கும் அளவுக்கு எங்களுக்கு மூளை இல்லாமல் போய்விட்டது. கடைசிவரை ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி என்ற மிகப்பெரிய ஓட்டைதான் இந்தியாவின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு மூளை இல்லாமல் போய்விட்டது. ஆனால், அதை அடைக்க நாங்கள் முன் வரவே மாட்டோம் என்ற மனநிலைக்கு செல்லும் அளவுக்கு எங்களுக்கு மூளை இருக்கிறது. ஆனால் அந்த ஜாதியையும், அதன் மூலம் இளைஞர்களிடையே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பவனை “தாழ்வு மனப்பான்மையுடையவன் காழ்புணர்ச்சிக்காரன்” என்று சொல்லும் அளவுக்கு எங்களுக்கு மூளை வளர்ந்துள்ளது.
//இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர்.//
திரு. அரவிந்தன் அவர்கள் குறிப்பிடும் லயோனல் பிளேஸ் செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த Colonel Lionel Blaze தானோ? (1795 – 1799) அவர் காலத்தில்தான் மதுராந்தகம் ஏரி உடைந்தது. அவருக்கு ராம, லட்சுமணரின் காட்சியும் கிடைத்ததாக வரலாறு கூறுகிறது. அவர் தாயாருக்கு தனிச் சன்னதி கட்டியதாகவும் அந்த வரலாறு தெரிவிக்கிறது.
…. An inscription is still found in the temple revealing that the Thaayaar shrine was built by Colonel Lionel Blaze of East India Company, the then district collector of Chengalpattu…..
பாருங்க… கடவுள் கூட அவங்களுக்குதான் காட்சி கொடுத்திருக்காங்க. என்னத்தச் சொல்ல…
ரிச்சர்ட் டெம்பிள் ”சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார்” என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. இது பிழையான தகவலாகும். மைக் டேவிஸ் முதலான பல வரலாற்றாசிரியர்கள் ஒரு பகடியாக எழுதப்பட்ட விஷயத்தை உண்மையான சட்டம் போல மேற்கோளாக்கி விட்டுப்போக, இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக தொடர்ந்து தவறாக மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. வில்லியம் டிக்பியின் “The Famine Campaign in Southern India (Madras and Bombay, Volume 2” இந்த “சட்டத்தின்” பின்னணியைத் தெளிவாக்குகின்றது (பக்கம் 55). In many ways the feeling of annoyance and vexation which had been engenedered found expression and amongst other instances may be quoted the following “skit”, in which the practice og the Government of India of publishing draft bills in the Government Gazette was satirised.
இதன்கீழ் Anti charitable Contribution Act 1877 என்பது Anti-Humanitarian Act 1877 என்பதன் கீழ் வருகிறது. இந்த ”சட்டத்தின்” இறுதியில் அது எழுதப்பட்ட இடமாக குறிப்பிடப்படுவது “Inhumanville”!
ஆனால் இந்த பகடி வெற்றிடத்தில் எழவில்லை. தனிப்பட்ட சேவை அமைப்புகள் பஞ்ச காலத்தில் செய்யும் சேவைகளை அன்றைய காலனி அரசு ஆதரவளிக்கவில்லை என்பதே இந்த பகடியின் பின்னணி. மட்டுமன்றி, தனியார் உதவிகளைப்பெறுபவர்களுக்கு அரசு உதவி தரக்கூடாது என்று போடப்பட்ட உத்தரவு தனியார் உதவி முனைப்புகளை முடக்கியது. அது பெரும் அழிவு விளைவுகளை ஏற்படுத்தியது.
ஆனால், Anti-charitable Act என்று உண்மையில் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. அது ஒரு பகடி எழுத்து. அரவிந்தனும், தமிழ் ஹிந்துவும் இந்தத் திருத்தத்தை வெளியிடுமாறு வேண்டுகிறேன்.
ஒரு விவாதத்தில் எழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன்கே அவர்களிடம் நான் இந்த ஆக்ட் குறித்து மேற்கோள் காட்டிப்பேச, அவர் அப்படி எந்த சட்டமும் இருந்ததில்லை என்று மறுத்தார். வில்லியம் டிக்பி எழுதியதைச் சுட்டிக்காட்டி என்னைத் திருத்தினார். அதைத்தொடர்ந்து நானும் மேற்சொன்ன டிக்பியின் புத்தகத்தில் படித்துத் தெளிந்து கொண்டேன். (புத்தகம் கூகுள் புக்ஸில் ஆன்லைனில் கிடைக்கிறது)
பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
but still we are calling them as british,english men and so on.why should nt we identify them as cathlics!!