ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)

<< முந்தைய பகுதி

ரவு ஏழரை மணிக்கு மேல் சிருங்கேரியைச் சென்றடைந்தோம். இதற்கு முன்பு 2004ம் வருடமும் இங்கு வந்திருக்கிறேன். இது மூன்றாவது முறை.

சிருங்கேரிக் கோயில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக்கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டுமானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளைப் பெற்றுக் கொள்ளலாம். விசேஷ நாட்களில் மட்டும் அதிக கூட்டத்தால் ஒருவேளை அறை கிடைக்காமல் போகக் கூடும்.

அன்றிரவு சிருங்கேரி சங்கராசாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் அவர்களையும், அவர் செய்த விஸ்தாரமான அழகான பூஜையையும் தரிசித்தோம்.  பின்னியெடுக்கும் குளிரில், எல்லா ஜன்னல்களும் திறந்திருக்கும் அந்த விசாலமான மண்டபத்தில் அங்கவஸ்திரம் மட்டுமே அணிந்திருந்த பண்டிதர்கள் குரல் நடுக்கமின்றி வேத மந்திரங்களை உரத்த கோஷத்தில் முழங்கினர். பாவாடை சட்டையுடன் ஒரு பத்து வயதுக் குழந்தை தான் சிரமப் பட்டுத் தூக்கிக் கொண்டு வந்திருந்த வீணையில் அழகாக இரண்டு கீர்த்தனங்கள் வாசித்தது. வெள்ளிக் கிழமை என்பதால் விசேஷமாக ஸ்ரீசக்ர பூஜையும் நடந்தது. அற்புதமான தெய்வீக அனுபவம்.

சிருங்ககிரி எனப்படும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம் புராண முனிவரான ரிஷ்ய சிருங்கர் வசித்த இடம் என்று கருதப் படுகிறது. பெண் வாசனையே அறியாது தந்தை விபாண்டக ரிஷியின் கண்டிப்பில் நைஷ்டிக பிரம்மசாரியாக வாழ்கிறான் முனிகுமாரன் ரிஷ்ய சிருங்கன். அவனை ரோமபாத மன்னர் அனுப்பிய நாட்டியப் பெண்கள் மயக்கி காட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருகிறார்கள். பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மழையற்று வறண்டு கிடந்த நாட்டில் முனிகுமாரன் காலடி வைத்ததும் வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டத் தொடங்குகிறது. அதனால் தான் சிருங்கேரியிலும் வருடம் முக்கால்வாசி நாட்களும் மழை கொட்டுகிறது போலும். இது மார்கழி மாதம் என்பதால் முதல் முறையாக மழை இல்லாமல் இந்த ஊரைப் பார்க்க முடிந்தது.

இந்தப் புராணக் கதையைப் பின்னணியாக வைத்து வைசாலி என்று ஒரு அருமையான மலையாளப் படம் வந்திருக்கிறது. அதில் ஓடத்தில் முனிகுமாரனும் நாட்டியப் பெண்களும் அமர்ந்து செல்லும் காட்சி உண்டு.  ‘இந்து புஷ்பம் சூடி நிற்கும் ராத்ரி’ என்ற இனிமையான பின்னணிப் பாடலின் காட்சி. கோயிலுக்கருகிலேயே பிரவகித்து ஓடும் துங்கபத்ரா நதியைப் பார்க்கும் போது இந்த நதியின் வழியாகத் தான் ஓடத்தில் போயிருப்பார்களோ என்றும் ஒரு கற்பனை உதித்தது.

sringeri_sharadaஆதி சங்கரர் இங்கு அன்னை சாரதையை பிரதிஷ்டை செய்தது குறித்தும் அழகான ஒரு ஐதிகம் உள்ளது. நாடெங்கும் திக்விஜயம் செய்து தத்துவ அறிஞர்களை வாதில் வென்று வருகிறார் சங்கரர். கிருஹஸ்தராக கர்ம மார்க்கத்தைப் பின்பற்றி வந்த மண்டன மிஸ்ரர் சங்கரரிடம் வாதில் தோற்று ஞான மார்க்கியாக, சங்கரரின் சீடராக ஆகி விடுகிறார்.  மண்டனரின் மனைவி சரஸ்வதி தேவியே அவதரித்தது போல நிகரற்ற கல்வியறிவு கொண்டவளான உபய பாரதி. அவளிடமும் சங்கரர் வாதம் புரிந்து வென்று விட, அவள் சாயா ரூபமாக தன் சலங்கை ஒலி தர சங்கரரைப் பின் தொடர்ந்து வருகிறாள். பல தேசங்களையும் சுற்றி இந்தப் பகுதிக்கு வந்தவுடன் சங்கரரின் மனம் இதன் இயற்கை அழகிலும்  அமைதியிலும் புனிதத்திலும் தோய்ந்து ததும்பி நிறைகிறது. நீ இங்கேயே உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று அன்னை சரஸ்வதியை வேண்டிக் கொள்கிறார். சலங்கை ஒலி நின்று விடுகிறது. சாரதை அங்கு நிரந்தரமாகக் குடி கொள்கிறாள். அவரது சீடர்களின் பரம்பரையினர் மூலம் மடம்  உருவெடுத்து அங்கே சங்கர வேதாந்தமும் சக்தி வழிபாடும் செழித்து  வளர்கின்றன.

14ம் நூற்றாண்டு முதல் சிருங்கேரியின் வரலாறு விஜயநகர சாம்ராஜ்யத்துடன் தொடர்பு கொள்கிறது. இந்த மடத்தின் பன்னிரண்டாவது சங்கராச்சாரியார்  வித்யாரண்யர் மாபெரும் ஞானியாகவும் அறிஞராகவும் ராஜரிஷியாகவும் வாழ்ந்தவர். அவரது அருளாசியுடன் தான் ஹரிஹரர், புக்கர் சகோதரர்கள் தங்கள் தலைநகரையும் அரசையும் ஸ்தாபிக்கின்றனர். அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு  தென்னகத்தை இஸ்லாமிய ஆக்கிரமிப்பிலிருந்து காத்து, இந்து தர்மத்தையும் பண்பாட்டையும் கலைகளையும் வளர்க்கப் போகும் சாம்ராஜ்யத்திற்கான விதை, இந்த வனாந்தரத்தில் வாழும் ஒரு சன்னியாசியின் திருவுள்ளத்தில் உதித்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. வித்யாரண்யர் மீதான குருபக்தியின் சின்னமாக புக்கராயர் சிருங்கேரியில் வித்யா சங்கரர் ஆலயத்தை நிர்மாணிக்கிறார். அப்போதைய குருவாகத் திகழ்ந்த வித்யா சங்கர தீர்த்தரின் சமாதி மீது சிவலிங்க பிரதிஷ்டை செய்த கருவறையின் மீது இக்கோயில் கட்டப் பட்டிருக்கிறது.

IMG_5276

வித்யா சங்கரர் கோயிலின் அமைப்பு திராவிட ஹொய்சள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது. இதன் நீள்வட்ட வடிவமும், சிகர விமானத்தின் அமைப்பும் தனித்துவம் மிக்கவை. சுற்றுச் சுவர்களில் சிவன், விஷ்ணு, தேவி மற்றும் பல தெய்வ மூர்த்தங்களின் அழகிய திருவுருவங்கள் உள்ளன. கோயிலுக்குள் மகாமண்டபத்தில் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் பன்னிரண்டு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய ராசியைக் குறிக்கும் தூண் மீது சூரிய ஒளி நேரடியாக விழுமாறு நேர்த்தியாக இத்தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அருகிலேயே உள்ள சாரதாம்பாள் கோயில் கடந்த இருநூறு ஆண்டுகளில் தமிழக ஸ்தபதிகளின் கைவண்ணத்தில் முழுமையான திராவிட பாணி கோயிலாக அழகாக கட்டப் பட்டுள்ளது. கருவறையில் பொன்னொளி வீசும் அன்னை சாரதையின் திவ்ய தரிசனம். கோயில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகள் கைபிடித்து அரிசியில் எழுதவைத்து  சாஸ்திரோக்தமாக வித்யாரம்பம்  செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னிதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். சாரதா பீடம் இந்தப் பகுதியில் பல சிறப்பான கல்வி, மருத்துவ, சமுதாய மேம்பாட்டு சேவைகளையும்  செய்து வருகிறது என்பதை கோயிலில் உள்ள விளம்பரப் பலகைகள் தெரிவிக்கின்றன.

துங்கபத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு  நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரையருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். மூன்று அடி வரை பெரிய மீன்கள். நதி நீரின் தன்மையாலும், மீன்பிடித்தல் தடை செய்யப் பட்டுள்ளதாலும் பருத்துக் கொழுத்து செழித்து வளர்ந்துள்ளன இந்த மீன்கள். இந்தப் படித்துறையில் மீன்கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம். நடுப்பகலிலும் சில்லிட்டுக் கிடந்த  நதியில் ஆசைதீர மூழ்கிக் குளித்தேன்.

IMG_5310

இந்தப் பகுதியில் உள்ள எல்லா முக்கிய கோயில்களிலும் மதியமும் இரவிலும் அன்னதானம் உண்டு. சாப்பாட்டு நேரத்தில் வரும் பயணிகள் எல்லாருமே கோயில்களில் தான் சாப்பிடுகிறார்கள். உணவகங்கள் மற்ற நேரத்தில் வருபவர்களுக்காக மட்டுமே. தர்மஸ்தலா அன்னதானத்திற்குப் பெயர் போனது. அது தவிர கோகர்ணா, கொல்லூர், உடுப்பி, மங்களூர், சிருங்கேரி, ஹொரநாடு கோயில்களிலும் பெரிய பெரிய அன்னதானக் கூடங்கள் உண்டு. சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய் கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவு தான். இதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள தள்ளு வண்டியில் தட்டுகள் மளமளவென வந்திறங்க, சரசரவென்று பரிமாறுகிறார்கள். இந்த அன்னதான சேவைகள் பல ஆண்டுகளாக சீராக அந்தந்த கோயில் நிர்வாகங்களால் தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு நடந்து கொண்டு வருகின்றன.

மதியத்திற்கு மேல் சிருங்கேரியை விட்டுக் கிளம்பினோம். அன்றிரவு அடுத்து சிக்மகளூருக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் தங்குவதாகத் திட்டம். ஆனால் பாதி வழியிலேயே சிக்மகளூரில் திடீர் மத வன்முறை வெடித்து, பந்த் அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் 144 தடையுத்தரவு போடப் பட்டிருப்பதாகவும் தெரிந்தது. கலவர நேரத்தில் அந்தப் பகுதிக்குள் செல்வது உசிதமல்ல என்று கருதி, சிக்மகளூருக்குள் நுழையாமல்  கிராமச் சாலைகள் வழியாக பேலூருக்கு வண்டியை விட்டோம்.

கலவரத்திற்குக் காரணம்: ஒரு தர்காவுக்கு அருகில் பன்றி வெட்டப் பட்டுக் கிடந்தது. வேண்டுமென்றே சமூக விரோத விஷமிகள் யாரோ செய்த செயல் இது. தங்கள் மத உணர்வு பாதிக்கப் பட்டதாக அறிவித்து முஸ்லிம்கள் உடனடியாக கலவரத்திலும் வன்முறையிலும் இறங்கினர். காவல் துறையினரால் கட்டுப் படுத்த முடியாமல் போக தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டது என்று பிறகு செய்திகளில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

மாலை ஐந்து மணிக்கு பேலூர் கோயிலை வந்தடைந்தோம். 2004ம் வருடமும் அதற்கு முன்பும் இங்கு வந்திருக்கிறேன். இது மூன்றாவது முறை.

10 முதல் 14ம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தையும் தமிழகத்தின் பல பகுதிகளையும் அரசாட்சி செய்து பற்பல கவின்மிகு கலைக்கோயில்களைக் கட்டியவர்கள் ஹொய்சள ராஜ வம்சத்தினர். பேலூர், ஹளேபீடு, சோமநாதபுரம் ஆகிய மூன்று இடங்களை ஹொய்சள சிற்பக் கலையின் உச்சங்கள் என்று சொல்லலாம்.

இந்திரனின் ஆபரணப் பெட்டியைத் திறந்து வைத்தது போல இருந்தது என்று மதுரை மாநகரை இளங்கோவடிகள் வர்ணிக்கிறார். இந்த ஒற்றைக் கோயிலுக்கே அந்த வர்ணனை பொருந்தும். ஒவ்வொரு அங்குலத்திலும் மகோன்னத சிற்பிகளின் உளிகளும் கரங்களும் இதயங்களும் உயிர்களும் கலந்து எழுந்திருக்கும் அற்புதக் கலைப் பெட்டகம் இது. பல வரலாற்றாசிரியர்களும்  கலை ஆய்வாளர்களும் இந்தக் கோயிலைப் பற்றி   மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

Chennakeshava_Temple_at_Belur

மன்னர் விஷ்ணுவர்த்தனரின் காலத்தில் தொடங்கி அடுத்த மூன்று தலைமுறைகள் சேர்ந்து 160 வருடங்களில் அணு அணுவாக செதுக்கி இந்தக் கோயிலை அழகு படுத்தியிருக்கிறார்கள். இப்போது காண்பது போன்ற தட்டையான மேற்பகுதியுடன் அல்லாமல், கருவறைக்கு மேலாக ஏக கூட விமானம் என்ற ஒற்றைக் கூம்பு வடிவ சிகர விமானத்துடன் தான் இக்கோயில் முதலில் இருந்தது. இஸ்லாமியப் படையெடுப்புகளின் போது ஊர் மக்களே சிகர விமானத்தைத் தகர்த்து விட்டு முழுக் கோயிலையும் மண்ணால் மூடி மேடாக்கி வைத்திருந்து, கோயிலின் முக்கியமான கட்டுமானத்தை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். தற்போது வெளிப்புறத்தில் காணும் ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், தாயார் சன்னிதிகள் ஆகியவை பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் எழுப்பப் பட்டவை. “வரத வேலாபுர சென்ன ப்ரசன்ன” என்று இந்தக் கோயில் இறைவனை புரந்தரதாசர் பாடியிருக்கிறார். கருவறையில் சங்கு சக்கரம் கதை தரித்து நெடிதுயர்ந்து நிற்கிறார் சென்னகேசவப் பெருமாள். தினசரி பூஜைகளும் திருவிழாக்களும் முறையாக நடக்கின்றன.

பல முனைகள் கொண்ட நட்சத்திர வடிவ அடித்தளத்தின் மீது நான்கு தோரண வாயில்களும், பல அடுக்குகளும் மடிப்புகளும் கொண்ட சுற்றுச் சுவருமாக அமைந்தது கோயிலின் வெளிப்புறம். ஏழு மிருகங்களின் கலவையாக உள்ள மகரம் என்ற மிருக வடிவலான மகரதோரணம் நுழைவாயில்களின் இருபுறமும் நிற்கிறது. முன்புற நுழைவாயிலில் கருடனுக்கு மேலாக உக்ர நரசிம்மர் திருவுருவும், மற்ற இரண்டு நுழைவாயில்களை வராக மூர்த்தியும், லக்ஷ்மி நாராயணரும் மிக நுட்பமான சிற்பத் தொகுதிகளாக அலங்கரிக்கின்றனர். சுற்றுச் சுவரின் மேலடுக்கில் மதனிகைகள் எனப்படும் புகழ்பெற்ற நாட்டியப் பெண்களின் 38 சிற்பங்கள் உள்ளன. கண்ணாடியில் முகம் பார்க்கும் தர்ப்பண சுந்தரிகள், வேட்டைக்காக வில்லுடன் நிற்கும் கானக அழகிகள், இசைக்கருவிகளை மீட்டும் வாதினிகள், அபிநயம் பிடிக்கும் நர்த்தகிகள் என மூச்சடைத்து, பித்துக் கொள்ள வைக்கும் சிற்பங்கள். இதே போல உள் மண்டபத்துத்  தூண்களில் நாற்புறமும்  நான்கு மதனிகைகளும், சாமுத்ரிகா லட்சணப் படியான பெண்ணழகின் அளவுகோல் என்று சொல்லத் தக்க மோகினி சிற்பமும் உள்ளன. சென்ற முறைகள் வந்த போது மணிக்கணக்கில்  இவைகளை மீண்டும் மீண்டும் பார்த்தும் தீரவில்லை. இப்போதும் அப்படியே.

IMG_5332

சுற்றுச் சுவர் முழுவதும் தொடர்ச்சியாக கீழடுக்கில் யானைகள், அதன் மேலடுக்கில் சிங்கங்கள். இந்த நீண்ட வரிசையில் ஒரு யானை போல மற்றொன்று கிடையாது. ஒரு சிங்கம் போல வேறொன்று கிடையாது. ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அதற்கு மேல் காதல், இசை, நடன, போர்க் காட்சிகளின் வரிசைகள்.  ராமாயண, மகாபாரத, புராணக் காட்சிகளின் வரிசைகள். அதற்கு மேல் வரிசையில் அற்புதமான தெய்வ உருவங்கள்.  உமா மகேசுவரர், லட்சுமி நாராயணர், வாணியுடன் பிரம்ம தேவன், கஜசம்ஹார மூர்த்தி, இரணியன் குடல் கிழிக்கும் நரசிம்மர், பூமி தேவியைத் தாங்கும் வராகர், குன்றைக் குடையாய்ப் பிடிக்கும் கண்ணன், மகிஷாசுர மர்த்தினி, கயிலை மலையைத் தூக்கும் ராவணன்…. அது போக, கலை நயம் மிக்க பன்னிரண்டு தனித் தனி கோஷ்டங்களில் கேசவன், நாராயணன், மாதவன் என்று விஷ்ணுவின் பன்னிரண்டு தோற்றங்கள். பார்த்துத் தீர முடியாத கடவுட் கடல்!

தென்னிந்தியாவின் வேறு எந்தக் கோயில்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பு – பெரும்பாலான சிற்பங்களின் கீழ் தனித்தனியாக அவற்றைப் படைத்த கலைஞர்களே தங்களது கையெழுத்திட்டிருப்பது. 40 சிற்பங்களுக்கு மேல் படைத்தவர் மல்லிதம்ம(ன்). தாஸோஜ, சவண, மல்லியண்ண, நாகோஜ, சிக்கஹம்ப என்று பல சிற்பிகளின் பெயர்களும், அவர்களின் ஊர் விவரங்களும் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் குருவாக விளங்கிய மகா சிற்பி ஜக்கணாசாரியாரின் பெயரும் கோயிலில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் பல இடங்களில் குறிக்கப் பட்டுள்ளது.

மாலை நேரமாகி விட்டதால் அதிகம் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.  அன்றிரவே பெங்களூர் திரும்ப வேண்டியிருந்ததால் அருகில் உள்ள ஹளேபீடு கிராமத்திற்கும் செல்ல இயலவில்லை. என் கனவுகளில் என்றென்றும் ஊடாடிக் கொண்டிருப்பவை இக்கோயில்ளின் சிற்பங்களும். கட்டாயம் மீண்டும் சில முறைகளாவது இங்கு வந்து கொண்டிருப்பேன்.

புகைப்படங்கள்:
https://picasaweb.google.com/100629301604501469762/SringeriBelurDec2013Trip

இந்த ஆறு நாள் சாலைப் பயணம் (Road trip)  தந்த ஒட்டுமொத்த அனுபவம் அலாதியானது. 1700 கிலோமீட்டர்கள் கர்நாடகத்திற்குள்ளேயே தான் பயணம் செய்திருக்கிறோம். ஆனால் இதற்குள்ளாகவே தட்டையான தக்காணப் பீடபூமியின் சமவெளிகள், மலைப்பாறைகள், நதி தீரங்கள், கடற்கரைகள், மேற்குமலைத் தொடர் பள்ளத் தாக்குகள் (Western Ghats)  என பல்வேறு வகை நிலக்காட்சிகளின் வழி அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டேயிருந்தோம். ஒவ்வொரு நாளும் புதியதாக, புதியவற்றைத் தேடிச் சென்று கொண்டிருந்தோம்.

கலி உறங்கி விழுகிறது
துவாபரம் சோம்பல் முறிக்கிறது
த்ரேதா எழுந்து நிற்கிறது
க்ருதயுகம் நடந்து செல்கிறது.
ஆகவே சென்றுகொண்டிரு. சென்றுகொண்டேயிரு.
சரைவேதி, சரைவேதி.

– ஐதரேய பிராம்மணம், ரிக்வேதம்.

(முற்றும்)

4 Replies to “ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)”

  1. தங்களுடன் கூடவே பயணம் சென்றதைப்போல் உணர்ந்தேன். இப் பதிவையும் பயண வழிகாட்டியாக கொண்டு நானும் பயணம் தொடர ஓர் ஆசை. மிகவும் அருமையான எழுத்தோவியம்.

  2. நல்ல பயணக்கட்டுரை.

    பேலுர் கோவில் சிற்பங்கள் மிக நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் கொண்டவை. இந்தக் கோவில் மட்டும் எப்படி அழிவிலிருந்து தப்பியது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் தகவல் அதனை தெளிவாக்கிவிட்டது.

    அதிக நேரம் அந்தச் சிற்பங்களை பார்த்து ரசிக்க முடியவில்லை. கொஞ்சம் வருத்தம்தான். இன்னொரு சந்தர்ப்பத்தில் தனியாக செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

    இல்லாள் ரசனை இல்லாள் எனில் என் செய்வேன் யான் பராபரமே! 😉

  3. ஏழாம் வகுப்பு படித்தபோது பள்ளியில் 16 எம் எம் ப்ரொஜெக்டரில் பேலூர் மற்றும் ஹலெபேடு பற்றி ஒரு திரைப்படம் காட்டினார்கள். இரண்டு இடங்களுக்கும் போகவேண்டும் என்ற கனவு 2000 மே மாதத்தில் நிறைவேறியது.11வயதில் உண்டான ஆசை 39வது வயதில் நிறைவேறியது.இரண்டு கலைக்களஞ்சியங்களை காணக் கண்கோடி வேண்டும் என்றால் மிகையல்ல. சிக்மகளூர் வழியாக ஸ்ருங்கேரி சென்றேன். வயிறு வளர்க்க வேலைக்கு செல்ல வேண்டி யுள்ளது இல்லையென்றால் சிருங்கேரியில் ஆனந்தமாய் இருந்து விடலாம் என்று நினைத்தது உண்டு. ஜடாயுவின் கட்டுரை இன்னுமொரு முறை பேலூர், ஹலெபேடு , ஸ்ருங்கேரி செல்லத்தூண்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *