பாஜகவில் பிதாமகர்கள்

பா ஜ கவின் தூண்களில் இருவர் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷி அவர்களும். கட்சியின் வளர்சிக்கும் கட்சியின் இன்றைய நிலைக்கும் ஆறு ஆண்டு கால பா ஜ க அரசாங்கத்தின் வெற்றிக்கும் இவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது. போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய தலைவர்கள். 80 வயதைத் தாண்டி விட்ட இந்தத் தலைவர்கள் தாங்களாகவே கட்சியின் ஆலோசகர்களாக ஒதுங்கி ஓய்வெடுத்திருந்தால் அவர்கள் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் பெருகியிருக்கும். காலம் மாறி வருவதையும் துடிப்பும் ஆற்றலும் ஓரளவு குறைந்த வயதும் கூடிய தலைவர்களை இன்றைய பாரதம் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. வாக்களர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். எதிர்காலம் குறித்த கனவுகளையும் அதை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களையும் எதிர் நோக்கிக் காத்திருப்பவர்கள். அவர்களது ஆதர்சங்களை எதிர்பாப்புகளை ஈடு செய்ய அபரிதமான ஆற்றல் உடைய தலைவர்களே இன்றைய தேவை. அத்தகைய தலைவர்களுக்கும் பா ஜ க கட்சியில் பஞ்சமில்லை. நரேந்திர மோடி, சவுகான், வசுந்தரா, மனோகர் பரிக்கர், ரமன் சிங், அருண் ஜேட்லி என்று ஏராளமான அத்தகைய தலைவர்கள் இன்று அடுத்துப் பொறுப்பேற்கக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கான ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மோடியின் மீதான நம்பிக்கை வாக்கு வங்கியாக உருமாறி நாடு ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் வயது முதிர்ந்த இந்தத் தலைவர்கள் சுறுசுறுப்பும் ஆற்றலும் உடைய தங்களை விட இளம் தலைவர்களை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தாங்களாகவே வழி விட்டு ஒதுங்கி நிற்பதே கட்சியின், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

BJP_seniors.png

ஆனால் இது நாள் வரை மதிப்பையும் மரியாதையையும் பிரமிப்பையும் ஈட்டிய அந்த முது பெரும் தலைவர்கள் எல்லோரும் சாதாரண திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் போல தேர்தலில் போட்டியிடப் பிடிவாதம் பிடிப்பதும் இந்த சீட்டுதான் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிப்பதும் அவர்கள் மீது பெரும் மரியாதைக் குறைவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. இவர்கள் ஆர் எஸ் எஸ் என்னும் தொண்டு இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு அளிக்கப் பட்டவர்கள். சாதாரண காங்கிரஸ், தி மு க, அரசியல்வாதிகள் கிடையாது என்று சொல்லிக் கொள்பவர்கள். ஆனால் அந்த நற்பெயரையெல்லாம் அவர்களது பிடிவாதக் குணங்களினால் இப்பொழுது குலைத்து வருகிறார்கள். தாங்கள் பாடு பட்டுத் தோற்று வித்த நிறுவனத்தின் அஸ்திவாரத்துக்கே ஊறு விளைவிக்கத்து விடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழியை உடைத்து விடுவார்களோ என்ற பதைபதைப்பை உருவாக்குகிறார்கள். நாலாறு மாதமாய் ஒரு குயவனைத் தேடிக் கொண்டு வந்த அந்தத் தோண்டியை போட்டு உடைத்து விடுவார்களோ என்ற கவலையை உருவாக்குகிறார்கள். வயதாவதின் காரணமாக இந்தச் சிறு பிள்ளை விளையாட்டை விளையாடுகிறார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செனலிட்டி என்ற முதுமையின் காரணமான பிடிவாதம் அவர்களை பீடித்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தார் மட்டுமே அவர்களுக்கு உரிய அறிவுரைகளைக் கூறி அவர்களது பிடிவாதத்தைக் குறைத்து நாட்டுக்கும் கட்சிக்கும் நல்ல வழி காட்ட முடியும்.

ஜஸ்வந்த் சிங்கின் கதை வேறு. அவரை அத்வானி, ஜோஷிகளுடன் ஒப்பிட முடியாது. அவர் ஆர் எஸ் எஸ் மூலமாக வந்தவரும் கிடையாது. காந்தாகாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப் பட்ட பொழுதும் கார்கில் போர் சமயங்களின் பொழுதும் அவரது நடவடிக்கைகள் பி ஜே பி க்கு பெருத்த அவமானங்களை ஏற்படுத்தின. அவர் அடித்தள தொண்டர் பலம் உடைய மக்களுடன் பழகும் தலைவரும் கிடையாது. மேல்மட்டத்தில் இருந்து திணிக்கப் பட்ட ஒரு தலைவர். அவருக்கு இத்தனை நாட்களாக உரிய மரியாதையும் ப்தவிகளும் கொடுக்கப் பட்டதே அதிக பட்சம். ராஜ்நாத் சிங் துணிந்து ஜஸ்வந்த் சிங்கிற்கான இடத்தைக் காட்டியிருக்கிறார். இன்று அவரது பிடிவாதத்திற்கு பணிந்து சீட் கொடுத்தால் நாளைக்கு வெளியுறவு, நிதி போன்ற முக்கியமான துறைகளுக்காக சண்டை போடுவார். எந்தவிதமான அடித்தட்டு பலமும், கட்சிக்கான உழைப்பும் இல்லாமல் முக்கிய பதவிகளைக் கோருவார். அது மோடியின் சுதந்திரத்திற்கு பெரிதும் இடையூறாக அமையும். ராஜஸ்தானில் சென்ற தேர்தலில் பா ஜ க தோல்வி அடைந்ததற்கு இவர்கள் உருவாக்கிய உட்கட்சி பூசலும் ஒரு காரணம். இவர் அமெரிக்கா வந்த பொழுது சி என் என் இண்டர்வியூக்களில் பார்த்திருக்கிறேன். பாக்கிஸ்தானின் நாவன்மையும் பேச்சாற்றலும் மிக்க வெளியுறவுத் துறை மந்திரிகள் அதிகாரிகள் முன்னால் இவரால் ஒரு வாதத்தைக் கூடத் திறமையாக எடுத்து வைக்க முடிந்ததில்லை. அனைத்தையும் கருத்தில் கொண்டு இவரை ஒதுக்கி வைக்க எடுக்கப் பட்ட முடிவு சரியானதொரு முடிவாகும்.

இதில் யஷ்வந்த் சின்கா அவர்கள் மட்டுமே புத்திசாலித்தனமாக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார். ஓய்வு பெற்ற தலைவர்களின் பங்களிப்பை போற்றும் விதத்தில் அவர்களுக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அதிக பொறுப்பு இல்லாத சுகமான கவர்னர் பதவிகளை அளிக்கலாம். அத்வானிக்கு அடுத்த ஜனாதிபதி பதவியை அளிக்கலாம். நாட்டுக்குப் பிடித்த கேடு இந்த ஜனாதிபதி, கவர்னர் பதவிகளாக இருந்தாலும் இவர்களுக்காக அவை இருந்து விட்டுப் போகலாம். அத்வானி, ஜோஷி ஆகியோரிடமும் கட்சியினர் அனைவரும் கலந்து பேசி அவர்களைத் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் இருந்து விலக வைக்க வேண்டும் அல்லது துணிந்து அவர்களையும் போட்டியில் இருந்து நீக்கும் கடுமையான முடிவை கட்சித் தலைமை எடுக்க வேண்டும். இல்லாது போனால் தேர்தலுக்குப் பிறகு அதற்கான கடுமையான விலையை கொடுக்க வேண்டி வரும். தேர்தலுக்குப் பின்னால் அவர்களைக் கையாள்வதை விட முன்பாகவே கஷ்டமான தர்ம்சங்கடமான வேதனையான அந்த முடிவை எடுப்பதே நாட்டுக்கும் கட்சிக்கும் நன்மை பயக்கும். அத்வானி ஜெயித்து என்ன செய்யப் போகிறார்? 86 வயதில் எந்தத் துறையின் மந்திரியாக செயல் படப் போகிறார்? தான் வ்ளர்த்த மோடியின் தலைமையை ஏற்றுக் கொள்ளப் போகிறாரா? என்ன விதமான நப்பாசையில் பிடிவாதம் பிடித்து போட்டியிடுகிறார்? ஒரு வேளை மைனாரிட்டி அரசு அமைந்தால் மோடிக்குப் பதிலாக தன்னை பிரதமராக்கி விடுவார்கள் என்ற ஒரே கனவில் தானே? அத்வானியும், ஜோஷியும் மூப்பின் காரணமான பிடிவாதங்களினால் மாபெரும் தவறைச் செய்கிறார்கள். அவர்களின் தவறு விபரீதமான தருணத்தை எட்டும் முன்னால் கட்சி அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதே நல்லது.

செய்வார்களா? செய்வார்களா?

(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

8 Replies to “பாஜகவில் பிதாமகர்கள்”

 1. நல்ல அலசல். சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிய வேண்டும். புரிந்தால் நல்லது.

 2. நயமான கட்டுரை,நல்லவிதத்தில் அளிகப்பட்டிருகிறது. புரிந்துகொண்டால் avarkallukum naattukkumநல்லது. நடக்குமா?

 3. உண்மைந்தான். அதுவும் ஜஸ்வந்த் சிங் செய்தது முற்றிலும் தவறு. அவரை பார்த்து, பீகாரில் ஒருவர் உடன் கிளம்பி உள்ளார். தயை தாட்சண்யம் பார்க்காது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கா விட்டால், பா.ஜா.க. ஆட்சியைபிடித்த பின், பெரும் சங்கடங்கள் வரும்.

 4. மிகச் சரியான கருத்து.அதே போல் இந்த சூழ்நிலையில்,குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல சுஷ்மா சுவராஜ் போன்றவர்களும்,இந்த தலைவர்களுக்கு வக்காலத்து வாங்குவது மாதிரி ,மோதியின் எழுச்சியை தாங்கி கொள்ள மனம் இல்லாமல் தங்களின் மோதி மீதான பொறாமை உணர்ச்சியை மறைவாக வெளிப்படுத்திகட்சிக்கு கேடு பண்ணுகிறார்கள்.

 5. ஜஸ்வந்த் சிங்க் போன்றவர்கள் நினைத்தால் கட்சியை விட்டு வெளியேறுவது, நினைத்தால் வருவது என்று பா ஜ க வை ஒரு சத்திரம் போல் நினைக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இவ்வளவு காலம் மரியாதை கொடுத்ததே தவறு.

  பல்லாண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்க இவர்கள் கட்சிக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் ‘ நோகாமல் நோன்பு நோற்க வேண்டும்’ என்று நினைப்பது அசிங்கம்.

  ராஜஸ்தானில் சென்ற முறை வசுந்தரா ராஜேவின் ஆட்சியைக் கவிழ்க்க உறுதுணையாக இருந்தவர்தான் இந்த மகானுபாவர் .
  இவர்களெல்லாம் பா ஜ க வெற்றி பெற்ற பின் தலை வலி கொடுப்பர்.

  ஒரு முறை ஒரு பேட்டியில் ‘ஹிந்துத்துவம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு மிகவும் கேலியாக ‘ ஹிந்துத்துவமா? அப்படி என்றால் ?’என்று பதில் கூறியதைப் பார்த்து ‘இவர்களெல்லாம்
  பா ஜ கவில் இருந்தால் உருப்பட்ட மாதிரிதான்’ என்று நினத்தேன்.

 6. மிகவும் அடக்கி வாசிக்கப்பட்ட கருத்துக்கள்.

  எந்த ஒரு பொருளுக்கும் ஷெல்ஃப் லைஃப் என்று ஒன்று உண்டு. பெருந்தலைவர்கள் பலர் உட்பட நாளைக்கு நரேந்த்ரபாய் வரை அனைவருக்கும் இது பொருந்தும். பரமபூஜனீய டாக்டர்ஜி, குருஜி முதல் இன்றைய சர் சங்க சாலக் வரை அனைத்து பெரியோர்கள் மீதும் சங்கத்தினருக்கு பெரும் மதிப்பு உண்டு. ஆனால் சங்கப்பணி என்பது எந்த நபரையும் சாராது புனித கங்கை நதி போன்று வற்றாது முன்னகரும் விஷயம்.

  *பத் கா அந்திம் லக்ஷ்ய நஹீ ஹை* – பதவி கடைசீ லக்ஷ்யம் இல்லை — என்ற பழைய பாடலை அனைத்து கட்சியினரும் நினைவு கூர்தல் நன்று.

  பாஜக 250 க்கு மேற்பட்டு ஜெயித்து விட்டால் மோடி ஆட்சி மலர்ந்து விடும். அப்படி ஆகாது அதைக் குலைக்க விட்டேற்றியாக எத்தையாவது உளறிக்கொட்டினால் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்று நினைக்கும் அழுகுனிகள் சோனியா ராகுல் காந்திகளை விட கொடியவர்கள்.

  உள்ளுக்குள் இருந்து கட்சியை கரையானாக அரிக்கும் இந்த சக்திகள் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களுக்கு புதிதும் இல்லை. குஜராத்தில் இது போன்ற சக்திகள் ஆடாத ஆட்டமா? ஒவ்வொரு தேர்தலிலும் இது போன்ற சக்திகள் ஆட்டம் போட்டும் கூட அந்த வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தானே நரேந்த்ரபாய் முன்னேறினார்.

  ஸ்ரீ லால்க்ருஷ்ண அத்வானி என்ற பெருந்தகைக்கு கட்சியை கட்டமைத்த பெருமை என்றென்றும் உண்டு. இவருடைய அவ்வப்போதைய இடக்கரடக்கல்களையாவது புரிந்து கொள்ள முடியும். பதவி சுகம் மட்டிலும் அனுபவித்த ஜஸ்வந்த் சிங்க் போன்றோரின் புலம்பல்கள் புறந்தள்ளிப்போக வேண்டிய விஷயம். 24 X 7 மீடியாவினுடைய வெறும் வாய்க்கு மெல்லும் அவலாகக் கிடைத்தவர்கள் ஜஸ்வந்த் இத்யாதிகள்.

  சுஷ்மா ஸ்வராஜ் – வினாச காலே விபரீத புத்தி. உமாபாரதி, கல்யாண் சிங்க் போன்றோரின் முன் பின் செயல்பாடுகளைப் பார்த்து சுஷ்மாஜி அடக்கி வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

 7. அருமையான கட்டுரை. இவர்களின் புகழை இவர்களாகவே கெடுத்துகொள்வது வருத்தமளிக்கின்றது.

 8. இந்தக் கட்டுரையில் இருந்து நான் சிறிது வேறுபடுகிறேன். முதியவர்கள், கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்தவர்களை மடிக்க வேண்டும். உதாசீனப் படுத்தக் கூடாது. ஆனால் அத்வானி, ஜஸ்வந்த் விவகாரம் வேறு. அத்வானி தனக்கு அளிக்கப்பட எதிர்க் கட்சித் தலைவர் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு சும்மா இருந்து விட்டார். அன்னா ஹசாரே செய்த போராட்டங்களை அத்வானி செய்திருக்க வேண்டும். அதுபோல ஜஸ்வந்த் போன தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் வென்றதும் நைசாக டார்ஜலிங் தொகுதி எம்பி ஆக போய்விட்டார். அப்போது தைரியமாக பார்மேரில் போட்டி இட்டிருக்க வேண்டும். டார்ஜிலிங் தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. இப்போது ராஜஸ்தானில் வெற்றி வாய்ப்பு என்றதும் பார்மர் தொகுதி கேட்கிறார். ஆகவே இருவருக்கும் வயது காரணமாக பிரச்சினை இல்லை. செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காகச் செய்யாததால்தான் இந்த நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *