கடந்த மார்ச் 20-ம் தேதி நண்பர் ஒருவருடன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பேச்சு தேர்தல் பக்கம் திரும்பியது. அன்று மாலை தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு உறுதியாகி இருந்தது. அதைப் பற்றித் தான் எங்கள் பேச்சும் இருந்தது.
அப்போது பேச்சினிடையே உள்புகுந்தார் பேருந்தின் நடத்துனர். “என்ன, கூட்டணி உறுதியாகிவிட்டதா? பொள்ளாச்சி தொகுதி யாருக்கு?” என்றபடியே உரையாடலில் நுழைந்த அவரைக் கண்டவுடன் ஒருநொடி திணறினாலும், அவரது ஆர்வம் கண்டு அவரையும் பேச்சுத் துணைக்கு சேர்த்துக் கொண்டோம். அப்போது அவர் கூறிய சில வார்த்தைகள் நாட்டின் திசையைக் காட்டுவதாக இருந்தன. அவர் சொன்னார்:
“சார், நான் 1980-லிருந்து தேர்தலில் வாக்களிக்கிறேன். இதுவரை எனது தேர்வு திமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் தான். ஆனால் இந்த முறை நான் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறேன். எனது தொகுதியில் பாஜக நின்றாலும் சரி, அதன் கூட்டணிக் கட்சி நின்றாலும் சரி, எனது வாக்கு மோடிக்குத் தான்… அவரால் மட்டுமே நாட்டை மாற்ற முடியும். மற்றவர்கள் எல்லோரும் நாட்டை ஏமாற்றவே முயல்கிறார்கள். இம்முறை பாஜக ஆட்சி தான்…”
இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது.
ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற பழமொழியின் பொருளை அன்று நிதர்சனமாகக் கண்டேன். “பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர்.
ஒட்டுமொத்த தமிழகத்திலும் அம்மா அலை வீசுவதாக ஊடகங்கள் தீர்மானித்துவிட்ட நிலையில்தான் இந்தக் கூட்டணி அமைந்து, அனைவரையும் யோசிக்கச் செய்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இதன் பின்புலத்தில் பல மாதங்களாக விடாமுயற்சியுடன் பாடுபட்ட ஒரு குழு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் பாஜக தலைவர்கள் கொண்ட முனைப்பு போலவே அதன் நண்பர்கள் குழாம் மேற்கொண்ட உழைப்புக்கும் பங்கிருக்கிறது.
இந்தக் கூட்டணி ஒருமாதம் முன்னதாக அமைந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து தானே வைத்திருக்கிறான்? எந்த முயற்சியும் காலமும் இடமும் பொருந்தாவிடில் வெற்றிபெறாது. பாஜகவின் தொலைநோக்கிலான கூட்டணி முயற்சி கனிந்துவர சில காலம் தேவைப்பட்டிருக்கிறது. இந்தத் தாமதத்திற்கான முழுக் காரணமும் பாஜகவையே சாரும். எவ்வாறு கூட்டணிக்கு பாஜக காரணமோ, அதேபோல அதன் தாமதத்திற்கும் பாஜக தான் காரணம்.
தேசியக் கட்சியான பாஜக மாநிலத்தில் தன்னை நன்கு வளர்த்துக் கொண்டிருந்தால், இந்தக் கூட்டணி சற்று முன்னதாகவே சாத்தியமாகி இருக்கும். ஆனால், பாஜக தமிழகத்தில் இன்னமும் வளர வேண்டியுள்ளது. இப்போதைய கூட்டணி பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் அதிவிரைவான வளர்ச்சியால் தான் சாத்தியமாகி இருக்கிறது. பாஜகவை நெருங்க விழையும் கட்சிகள் தங்களுக்கு அதனால் லாபம் என்ன என்று சிந்திப்பது இயற்கை. அதற்கான தூண்டுதலை மோடியின் பிராபல்யம் அளித்தது.
ஆனால், மாநில பாஜக-வில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தன. ஒருதரப்பு திமுகவுடன் சேர்ந்தால் சிரமமின்றி 10-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல முடியும் என்றது. இன்னொரு தரப்பு அதிமுகவுடன் சேர்ந்தால் அதிகபட்ச லாபம் இருக்கும் என்றது. இத்தகைய சிந்தனைப் போக்குகள் ஜனநாயக ரீயிலான ஒரு கட்சியில் இருக்கவே செய்யும். தவிர, தேசியத் தலைமையின் வழிகாட்டுதலுடன் தான் எந்த ஒரு முடிவையும் மாநிலத் தலைமை எடுத்தாக வேண்டிய நிலைமை. அவர்களோ ஆரம்பத்தில் சிரமமில்லாத கூட்டணி அமைக்க முடியுமா என்றே சிந்தித்தார்கள்.
இந்த சமயத்தில் தான் பாஜக-வின் நலம் விரும்பும் நண்பர்கள் குழு, பாஜக தமிழகத்தில் மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தது. அதேசமயத்தில் காந்தீய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் இக்கருத்தை பொதுமேடைகளில் பேசத் துவங்கினார். பாஜக-வின் நண்பர்கள் மாநிலத் தலைவர்களுடனான் சந்திப்புகளில் மாற்று அணியின் சாத்தியக் கூறுகளை விவாதிக்கத் துவங்க, அதற்கான கரு உருவாகத் துவங்கியது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்.
பாஜக-வின் மாநிலத் தலைமை தேசியத் தலைமையின் ஒப்புதலுடன் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளின் கூட்டணிக்கு ஆயத்தமானது. தமிழருவி மணியன் பாஜக-வின் தன்னிச்சையான தூதுவராக மதிமுக, தேமுதிக, பாமக தலைவர்களைச் சந்தித்து மாற்று அணியின் அவசியம் குறித்து பேசிவந்தார். இதில் முதலில் மதிமுக-விடம் இருந்து சாதகமான பதில் வந்தது. அதன் தலைவர் வைகோ தில்லி சென்று பாஜக உயர்தலைவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டார்.
ஆனால், தேமுதிக, பாமக-வை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆசைகாட்டுதல்கள், அன்பான எச்சரிக்கைகள், தனிப்பட்ட தொடர்புகளால், பாஜக பக்கம் இவ்விரு கட்சிகளும் நெருங்கத் தாமதம் ஆனது. மறுபுறம் திமுக-வும் தேமுதிக-வுக்கு வலைவீசி வந்தது. தேர்தல் அரசியல் பலகோடிகள் புரளும் வியாபாரமாகிவிட்ட சூழலில், கூட்டணி அரசியல் சார்ந்த முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, தேமுதிக, பாமக இரு கட்சிகளும் மாநிலத்தின் பல பகுதிகளில் சமபலத்துடன் உள்ள கட்சிகள். பாமக தலைவர் ராமதாஸ்- தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருவருக்கும் நல்லுறவும் இல்லை. இந்தச் சூழலில் அவர்களை ஒரே அணியில் இணைக்கும் முயற்சி சவாலானதாக இருந்தது.
ஆனால். பாமக தலைவரின் மகன் அன்புபுமணியும், தேமுதிக தலைவரின் மனைவி பிரேமலதாவும் தமிழக அரசியல் நிதர்சனத்தையும் பாஜக-வுடன் சேர்வதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தனர். அதனால் தான் ஆறு மாதம் பாடுபட்டதற்கு மார்ச் 20-ல் பலன் கிடைத்தது. தனித்தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த மதிமுக-வும் பாமக-வும் பாஜக பக்கம் வருவதற்கு, அக்கட்சிகளின் முந்தைய கூட்டணி அனுபவமும் ஒரு காரணம். வாஜ்பாய் தலைமையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடந்தபோது (1998- 2004) இக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், இப்போதும் பாஜக தலைவர்கள் காட்டிய பெருந்தன்மையும் அவர்களை இயல்பாக தோழமைக் கட்சிகளாக்கின.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பல்வேறு ஜாதி சமுதாயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த நடத்திய சமூக நல்லிணக்க மாநாடுகளில் பங்கேற்ற பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பாஜக-வின் தொடர்பு எல்லைக்குள் வந்திருந்தார்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், பாமக-வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் போன்ற பலரது தொடர்பு இப்போது கூட்டணி அமைய உதவியது. பல்வேறு கட்சித் தலைவர்களுடனான தனிப்பட்ட நட்புறவைக் கொண்டிருந்த பாஜக நண்பர்களின் உதவியும் இதற்கு மிகவும் பயன்பட்டது. சுதேசி இயக்கத் தலைவர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, பேராசிரியர் ப.கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து போன்ற பலரது தனிப்பட்ட முயற்சிகளுக்கு கூட்டணியின் உருவாக்கத்தில் பெரும் பங்குண்டு.
இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், கே.என்.லட்சுமணன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் குழு விடாமுயற்சியுடன் பாடுபட்டது. கூட்டணிக்கு வரச் சம்மதிக்கும் ஒவ்வொரு கட்சியின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து, அவர்களின் நம்பிக்கையை இழக்காமல், அதேசமயம் அவர்களது நிர்பந்தங்களையும் புரிந்துகொண்டு நிதானமாக பாஜக குழு இயங்கியது. அதன் பலன் அழகிய கூட்டணியாக இப்போது மலர்ந்திருக்கிறது. இதனை வெற்றிக் கூட்டணியாக்குவது இனிவரும் நாட்களில் கூட்டணித் தோழர்களின் உழைப்பில் தான் உள்ளது.
கூட்டணியில் இணைவது என்று மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துவிட்டாலும், எந்த கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற கேள்வி அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி என்ற முறையிலும், மக்களிடையே உள்ள விஜயகாந்துக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலும், தேமுதிக-வுக்கு 14 தொகுதிகள் என்று முடிவானது.
அடுத்து ஏற்கனவே சமுதாய அமைக்களை ஒருக்கிணைத்து இயங்கிவந்த பாமக-வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தேமுதிக-வுக்கு அளித்த அதே எண்ணிக்கையில் தனக்கும் தொகுதிகள் வேண்டும் என்றது பாமக. இந்தக் கோரிக்கையால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியானது. கூட்டணியின் சாதக பாதகங்களை விளக்கி, இறுதியில் பாமக-வுக்கு 8 தொகுதிகள் என்ற முடிவுக்கு ஒருவாறாக சம்மதம் பெறப்பட்டது.
பாஜக-வின் இயல்பான நண்பராக இருந்த வைகோ, அரசியல் சூழலின் கட்டாயங்களை உணர்ந்து எந்த கெடுபிடியும் இன்றி 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பார்வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதிக்கு சம்மதித்தன. மீதமிருந்த (தமிழகம் மற்றும் புதுவை) 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடத் தீர்மானித்தது.
ஆக, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகிவிட்டது. இக்கூட்டணியின் தலைவர்களான வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் மாநிலம் அறிந்த தலைவர்கள். இவர்களது மோடிக்கு ஆதரவான பிரசாரம் பாஜக கூட்டணிக்கு மிகவும் தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.
தொகுதிகளின் எண்னிக்கை இறுதி செய்யப்பட்டாலும், எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பதைத் தீர்மானிப்பது அடுத்த சவாலாக இருந்தது. கூட்டணியின் லாபத்தைப் பெறுவதிலும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதிலும் எந்த ஒரு கூட்டணிக் கட்சியும் முனைவது இயற்கையே. இதில் ஒவ்வொரு கட்சியும் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து இறுதியில் சமரசம் கண்டன. ஊடகங்களின் ஏளனமான விமர்சனங்களையும் நையாண்டிகளையும் தாண்டி, பொறுமையுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது பாஜக. இப்போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளும் பாஜக தலைமையிலான கூட்டணியால் அதிர்ந்து போயிருப்பதாகத் தகவல்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு விவரம்:
தேமுதிக-14 : திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி.
பாஜக-8 : தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி.
பாமக-8 : அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
மதிமுக-7 : காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், பெரும்புதூர், தென்காசி, தூத்துக்குடி
இஜக-1: பெரம்பலூர்.
கொமதேக-1 : பொள்ளாச்சி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சென்னையில் சந்தித்த பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் இந்தத் தொகுதிப் பங்கீட்டை மார்ச் 20-ல் அறிவித்தார்.
இதில் இந்திய ஜனநாயகக் கட்சியும் கொமதேக-வும் பாஜக-வின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. தேர்தலில் போட்டியிடும் இக்கட்சிகள் மட்டுமல்லாது, புதிய நீதிக் கட்சி, வல்லரசுவின் ஃபார்வர்டு பிளாக், தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், புதிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி போன்ற பல சிறு கட்சிகளும் இந்தக் கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
இக்கூட்டணியை சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளால் மத்திய அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதற்கு பாஜகவின் மோடியே மாற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக மீனவர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் உறுதி அளித்தார். தமிழகத்தில் கூட்டணியை உறுதிசெய்வதில் முக்கிய பங்காற்றிய தமிழருவி மணியனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மொத்தத்தில், தமிழகத்தில் இணக்கமான ஓர் அற்புதக் கூட்டணி இரு பிரதான திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக உருவாகிவிட்டது. நரேந்திர மோடி என்ற பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் போன்ற மாநிலத் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன், பாஜக புதிய களத்தில் போராடத் துவங்கியிருக்கிறது.
வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டங்களை தமிழக மக்களிடையே கொண்டுசேர்த்து, கூட்டணித் தோழர்களுடன் இணைந்து பாடுபட்டு, வெற்றிகளை பாஜக அறுவடை செய்ய வேண்டும். பாஜக-வின் கூட்டணித் தோழர்களும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும். மாற்றத்திற்கான வாய்ப்பை தமிழக மக்களுக்கு பாஜக வழங்கிவிட்டது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இனி தமிழக மக்களிடமே உள்ளது.
கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு
தொண்டர்கள் பாடுபட வேண்டும்: விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மார்ச் 21-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், தனிநபர் வருமானத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஊழல் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்திடும் வகையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினோம். ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம் என்ற புதிய புரட்சி முழக்கத்தின் மூலம் ஊழலுக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் மாநாட்டை நடத்தினோம்.
தமிழகத்தில் ஊழலுக்குப் பெயர்போன அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸிற்கு மாற்றாக புதியதொரு அணியை உருவாக்கிடும் முயற்சியின் விளைவுதான் தேசிய ஜனநாயக கூட்டணியாகும். இக்கூட்டணியில் இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தாலும், தமிழ்நாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல இயக்கங்கள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. பல இயக்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இது மக்கள் கூட்டணி, தமிழகத்தின் முதல் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.
நாட்டில் ஏழை மக்களின் வறுமைக்கும், அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கும் லஞ்சமும், ஊழலும்தான் பெரிதும் காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை முறையாக தீட்டி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் நிறைவேற்றி இருந்தால் இந்திய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையோ முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்திட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசு அமைய வேண்டும். அது இந்தியாவை கட்டாயம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பாரதீய ஜனதா கட்சியுடன் உடன்பாடு கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இக்கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற தேமுதிக மற்றும் தோழமைக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக பாடுபட வேண்டும்.
அவரவர் சார்ந்துள்ள பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேமுதிகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கழக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் ஆகியோரின் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் அரும்பாடுபட வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும் என்கின்ற நமது குறிக்கோளோடு, சுய விருப்பு, வெறுப்பு இன்றி இரவு, பகலென பாராமல் நீங்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி 40 தொகுதிகளிலும் நம் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற தோழமைக் கட்சியினர் அனைவரும் எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்றிணைந்து இருக்கிறோமோ, அதை நிறைவேற்றும் வகையில் வெற்றியை மட்டுமே நமது குறிக்கோளாகக் கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டணியின் லட்சியமே இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை நல்லரசாக்கவும், அனைவரும் ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம், மகத்தான வெற்றி காண்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாக்குகள் சிதறாமல் தவிர்க்கவே கூட்டணி- அன்புமணி
அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் தடுப்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னையில் தே.ஜ.கூட்டணி அறிவிப்புக் கூட்ட்த்தில் பங்கேற்ற அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது:
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவற்றுக்குத் தீர்வு காணவும் பாஜக உறுதி அளித்துள்ளது. அதனால் தான் பாஜகவை ஆதரிக்கிறோம்.
மாறி மாறி ஆட்சி செய்யும் அதிமுக, திமுக காரணமாக தமிழகம் மோசமான நிலையை அடைந்துள்ளது. இரு திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். பாமக தனித்துப் போட்டியிட்டால் ஆளும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும். இதனைத் தடுப்பதற்காகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றார் அன்புமணி.
இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தர் இந்தக் கூட்டணி குறித்துக் கூறுகையில், “மோடியின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியா முன்னேற்றம் அடையும். மேலும், அவர் தலைமையில் லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு நல்லரசு அமையும். என்னுடைய பார்வையில் தமிழகத்தைப் பொருத்தவரை பா.ஜனதா கூட்டணி சமஅளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும். நாங்கள் கொள்கை அளவில் பா.ஜனதா கட்சியுடன் ஒத்துப்போகிறோம்” என்றார்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூட்டணி குறித்துக் கூறுகையில், “பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியுடன் இணைந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியே முதன்மையான கூட்டணி. வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். எந்தவித நிபந்தனை விதிக்காமல் கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.
நாற்பது இடங்களிலும் வெல்ல வேண்டும்- வைகோ
மத்தியில் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
மதிமுக தேர்தல் அறிக்கையை மார்ச் 22-ல் சென்னையில் வெளியிட்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:
“நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பேசி, மிகப் பெரிய அணியாக இந்தக் கூட்டணி உடன்பாடு வருவதற்கு பாடுபட்டவர் தமிழருவி மணியன். அவருக்கு நன்றி.
பாஜக, தேமுதிக, பாமக ஆகியவை இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று முதலிலேயே நான் விருப்பம் தெரிவித்தேன். மோடி அலை வீசும் நேரத்தில், தமிழகத்தில் இந்த அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அணி அமைய விரும்பினேன். அப்படிப்பட்ட அணி இப்போது அமைந்துவிட்டது.
வரும் மக்களவைத் தேர்தலில் எப்படியும் மற்ற மாநிலங்களிலேயே பாஜக அதிக வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விடும். அதேநேரத்தில், தமிழகத்திலும் பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றால் தான், தமிழகத்துக்கு உரிய பலன் கிடைக்கும்.
இந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த கொள்கைகள் உள்ளன. அவற்றை விட்டுக் கொடுக்கவும் தேவையில்லை; பிறர் மீது திணிக்கவும் தேவையில்லை. நாங்கள் நாட்டுநலன் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார் வைகோ.
பா.ஜனதா கூட்டணி உருவானது எப்படி?
மனம் திறக்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய கூட்டணிக் காட்சி அரங்கேறி இருக்கிறது… பொறுமையை இழக்காமல் விடாமுயற்சியுடன் இந்தக் கூட்டணியை உருவாக்கி சாதித்தவர் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். கடுமையான இழுபறி, கட்சித் தலைவர்களின் பிடிவாதங்களுக்கு இடையே கூட்டணியை உருவாக்கியது எப்படி? என்று கேட்டபோது அவர் மனம் திறந்து கூறியதாவது:
தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக இருந்துவந்த நிலைதான் இருந்தது. ஆனால் நாடு முழுவதும் உருவாகி இருக்கும் மோடி அலையால் தமிழகத்திலும் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியுமா? என்று ஆலோசியுங்கள் என்று கட்சி மேலிடம் எங்களுக்கு கட்டளையிட்டது. அப்போது எங்களுடன் இந்திய ஜனநாயக கட்சி மட்டும் தான் இருந்தது.
கூட்டணிக்கு அச்சாரம் போடும் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஈடுபட்டார். பத்திரிகை மற்றும் கட்சித் தலைவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் ஆற்றிய பணிகள் கணக்கிட முடியாதது. அவருக்குத் தான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் கூட்டணி பேச்சுக்களைத் தொடங்கினோம். முதலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்தோம். அடுத்தடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோரைச் சந்தித்தோம்.
இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மோடி பிரதமராக வரவேண்டும். பாஜக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இதுவே வெற்றிக் கூட்டணியாக அமையும் என்ற உணர்வு எல்லாத் தலைவர்களிடமும் இருந்ததை உணர்ந்தோம். அது எங்கள் கூட்டணி முயற்சிக்கு உற்சாகத்தை அளித்தது.
ஜனவரி–1 புத்தாண்டு தினத்தில் ‘மோடி பிரதமர் ஆக வேண்டும்; மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்கும்’ என்ற அறிவிப்பை முதலில் வைகோ வெளியிட்டார்.
அன்றே விஜயகாந்தையும் சந்தித்தோம். அப்போது அவர், ‘உங்கள் கூட்டணிக்கு வருகிறேன். ஆனால் கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறதே’ என்றார்.
அதை தொடர்ந்து பாமக-வுடன் பேசினோம். கூடுதல் தொகுதி வேண்டும்; வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் வேண்டும் என்பது எல்லா கட்சிகளும் எதிர்பார்ப்பதுதான். அதே மனநிலையில் தான் எல்லா கட்சிகளும் இருந்தன. அதனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது உண்மை தான்.
ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாட்டு மக்கள் விரும்பும் ஒரே தலைவர் நரேந்திர மோடி. விழுப்புரத்தில் விஜயகாந்தும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். எனவே எந்தக் கட்சியும் இந்தக் கூட்டணியை விட்டுப் போகாது என்ற நம்பிக்கை உறுதியானது.
இந்தக் கட்சிகளை ஒருங்கிணைக்க பொறுமை தான் அவசியம் என்பதை உணர்ந்தேன். 1998 முதல் 4 தேர்தல்களில் மற்ற கட்சிகளிடம் சென்று ‘சீட்’ கேட்டோம். அந்த அனுபவம் வேறு; இப்போதைய அனுபவம் முற்றிலும் மாறுபட்ட புதிய அனுபவமாக இருந்தது. இப்போது நாங்கள் பகிர்ந்து கொடுக்கும் நிலையில் இருந்தோம். இது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமான அனுபவம் இது.
ஒவ்வொரு நாளும் பேசும்போது ஒவ்வொரு விதமான சூழ்நிலையைச் சந்திப்போம். நாங்கள் ஒருகோணத்தில் பேசும்போது இன்னொரு கோணத்தில் புது பிரச்னை வரும். அப்போதெல்லாம் விரக்தி வருவது இயல்பு தான்.
ஆனால், தற்போதைய சூழ்நிலை, கட்சிகளின் சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு, இலக்குகள் எல்லாமே எங்களுக்குத் தெரியும். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அந்த மாற்றத்தைக் கொடுக்க கட்சிகளும் தயாராக இருப்பதை உணர்ந்தோம். எனவே மோடிக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகள் சிதறிவிடக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டோம்.
பாஜக-வைப் பொருத்த வரை நானும் ஒரு சாதாரண தொண்டன் தான். வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் எனக்கும் உண்டு.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் தாய் முதலில் தனக்கு எடுத்து வைத்துவிட்டு குழந்தைக்குப் பரிமாற மாட்டாள். கிட்டத்தட்ட அதே நிலைதான் பாஜக-வுக்கும். அதே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு. அந்தப் பொறுப்பை எல்லோரது ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறோம்.
எல்லாத் தொகுதிகளிலும் மோடி நிற்பதாகவே நாங்கள் கருதுகிறோம். எங்கள் மீதான அவதூறுகளை மக்கள் தவிடு பொடியாக்குவார்கள்.
தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக வேகமாக வளர்ந்துவரும் கட்சி. எங்கள் தொலைநோக்குப் பார்வை கட்சியை இன்னும் வலுப்படுத்துவது. இப்போதைக்கு பாஜக ஜெயிப்பது, அதற்கு ஆதரவான கூட்டணி கட்சிகள் ஜெயிப்பது என்பது எங்கள் முதல்வேலை. மோடி வெற்றி பெற்ற மறு நிமிடமே எங்கள் தொலைநோக்கு செயல்திட்டம் தொடங்கும். அடுத்த ஓர் ஆண்டில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: மாலை மலர்
பாஜக கூட்டணி அமைய மூல காரணமாக இருந்தவர் தமிழருவி மணியன். அவர் பாஜக ஆதரவாளர் அல்ல என்றாலும், இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டுமென்கிற ஆர்வம் அவருக்கு. அதில் அவர் போராடி வெற்றி பெற்றார், அதற்கு ஒத்துழைத்த அனைவருக்குமே இதில் பங்கு உண்டு. நாட்டில் இப்போது மக்கள் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். பெயர் சொல்லாத ஒரு தொகுதியைப் பற்றி சொல்லுகிறேன். அந்தத் தொகுதி வழக்கமாக ஒரு திராவிட கட்சியின் கோட்டை. அங்கு செல்வாக்குள்ள ஒரு ஜாதியார்தான் வெற்றி பெற்று வந்தார்கள். இப்போது இரு திராவிட கட்சிகளும் ஒரு கம்யூனிஸ்டும் அந்த மெஜாரிட்டி ஜாதியைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்கள். . பாஜக நிற்கப் போகிறது. அவர்கள் யாரை நிறுத்துவார்கள் என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் வேறு ஜாதியாரை நிறுத்தினால், மெஜாரிட்டி ஜாதியார் மூன்று பேரும் வாக்குகளைப் பிரித்துக் கொண்டால் மீதமுள்ளோர் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்தால் என்ன ஆகும்? ஜாதி அடிப்படையில் தேர்தல்கள் நடப்பதால் இந்த அடிப்படை கணக்கு போட வேண்டியது அவசியமாகிறது. எந்த வகையிலும் பாஜக கூட்டணி இந்த முறை பல வெற்றிகளைப் பெறும் என்பது உண்மை.
ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பாஜக வேறு கூட்டணியை அமைத்தது. இதுதான் உண்மை .
தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கு அதிமுகவின் ஆதரவு தேவைப்பட்டால் , 1998ல் பெற்ற அவமானங்களை மறந்து , பாஜக கண்டிப்பாக ஜெயலலிதாவிடம் கையேந்தி நிற்கும் . அப்போது
பாஜக தன்னுடைய கூட்டணிகளை கழற்றி விட்டு விடும் . பார்க்கத்தான் போகிறோம் .
தமிழ் நாட்டில் பாஜவுடன் சேர்ந்தவர்கள் மோதி அலையின் தாக்கத்தை உணர்ந்து அறுவடை செய்ய உள்ளவர்கள்.
மதிமுகவின் பிரிவினை வாதம் , பாமகவின் ஜாதி வெறி , விஜயகாந்தின் குழப்பமான கட்சி – இவை பாஜகவிற்கு கேடுதளைத்தான் செய்யும் .
ஆண்டவனை வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் – பாஜகவிற்கு அதிமுகவின் ஆதரவு தேடும் நிலை வரக்கூடாது .
This time also the BJP alliance will fail to make an impact in tamilnadu. They have only themselves to blame for this imbroglio .
Vaiko was the first to join the alliance, but he was ignored by the BJP, which was very keen on Vijaykanth. But V’kant kept them guessing till the last minute.
Similar is the case with PMK. Even now, PMK has not agreed on the Pondy seat & are arguing with the NR congress.
When there is so much confusion in forming the alliance itself, what credibility will it have with the voters?
BJP should have first firmed up the seats with Vaiko, then discussed with PMK & DMDK. When these 2 parties started dragging the issue, the BJP should have given them an ultimatum. But they kept pleading with these 2 parties. Even their Delhi leaders were unhappy with this approach.
The AIADMK has already started the campaign well ahead of the others. The DMK too has started, but the BJP alliance is yet to get into it full steam. Only V’kant is doing the campaign.
Even he does not know the name of the BJP candidate in the area where he is campaiging.
The opinion polls show that the AIADMK will win 28 seats followed by the DMK alliance with 10 seats.
It is very difficult for the BJP allance now. They should realise that it is the early bird which catches the worm.
பா.ஜ.க.கூட்டணி அமைந்தவிதத்தையும் அதற்காக பாடு பட்ட தலைவர்களின் உழைப்பையும்,அவர்களின் அறிக்கைகளையும் சேக்கிழான் அவர்கள் தெளிவாக எழுதி இருந்தார்.ஆனால் இவை முழுமையையும் சேர்த்து பார்த்தால் தமிழகத்தில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறார்கள்.கூட்டணி அமைப்பதிலேயே பொன்னான காலம் நிறைய கடந்து விட்டது.இருப்பதோ 30 நாட்களுக்கும் குறைவு.எனவே கூட்டணி தலைவர்கள் திட்டம் போட்டு தீவிர பிரச்சாரம் செய்யாவிடில்,இந்த கடின (கூட்டணி அமைத்த)உழைப்புக்கு பலன் இல்லாமல் போகும்.எனவே கீழ்க்கண்ட செயல்களில் பா.ஜ.க.கூட்டணி உடன் ஈடுபடவேண்டும்.
1) இந்த கூட்டணி அமைய அரும்பாடுபட்ட, தற்சமயம் சிறிது மனக்கசப்பில் இருக்கும் திரு.தமிழருவி மணியன் அவர்களின் பிரச்சார திறமையை உணர்ந்து அவரை வேண்டி, தமிழ்நாட்டின் மூலை,முடுக்கில் எல்லாம் தீவிர பிரச்சாரம் பண்ண வசதி வாய்ப்பு ஏற்படுத்திதரவேண்டும்.மேலும் திரு.வைகோ அவர்களையும் தீவிர பிரச்சாரம் பண்ண வசதி வாய்ப்பு ஏற்படுத்திதரவேண்டும்.திரு.வைகோ அவர்கள் இந்த தேர்தலில் நிற்காமல் எல்லோ தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தால் வெற்றிவாய்ப்பு வெகுவாக கூடும்.தீவிரபிரச்சாரத்தால் விளைந்த பெரும் வெற்றியைபற்றிய இரண்டு நடைமுறை உதாரணங்கள்.
1) சமீபத்தில் நடந்த டெல்லி மாநிலத்தேர்தலில் ஆமாத்மி கட்சியினர் வீட்டுக்கு வீடு பிரச்சாரம் மேற்கொண்டு எதிர்பாராத வெற்றிகளை பெற்றனர்.
2)முன்பு எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த மாநில தேர்தலில் அவர் கூட்டணியில் சுயேட்சையாக சாத்தான்குளம் தொகுதியில் இருந்து போட்டியிட்ட சி.பா.ஆதித்தனாரை, (எம்.ஜி.ஆர் இன் வெகுவான ஆதரவு இருந்தும்)எதிர்த்து ஜனதா கட்சியை சேர்ந்த தியாகி.நெல்லை ஜெபமணி அவர்கள் தனது எளிதான,தீவிரமான பிரச்சாரத்தால் வென்றார்.(ஓன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் அப்பொழுதெல்லாம் ,தேர்தல் கமிசனின் தீவிர கண் காணிப்பெல்லாம் சிறிதும் கிடையாது.அடியாள்பலம் இருதால் போதும் கள்ள ஒட்டு எழுத்தில் போடலாம்)இதை எல்லாம் மீறி அவரின் வெற்றிக்கு நல்வழியில் அந்த நேரத்தில் எங்களை போன்றவர்கள் ‘அணில்’ மாதிரி உதவினோம் என்பதை இப்பொழுது நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.
நண்பர்களே, இன்றைய ஜூனியர் விகடனின் கணிப்பைப் பார்த்து பிஜேபி தோழர்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டுகிறேன். வாய்த்த வாய்ப்பைத் தவறவிடாதீர். முக்கியமாக மத தீவிரவாதமும் மதமாற்றமும் மறைய இதுவே வாய்ப்பு