அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

<< முந்தைய பகுதி

அம்பேத்கரின் இந்த நூலானது இந்து மதமும் இந்துக்களும் முன்னேற வேண்டும், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே எழுதப் பட்டுள்ளது. இதில் யாரும் ஐயம் கொள்வதற்கு முகாந்திரம் இல்லை. அவரது நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அவர் சொல்லும் தீர்வுகள் முழுதாக சரியாக வரவில்லை. தீர்வு சரியாக இருந்திருந்தால் இந்நேரம் சாதி ஒழிந்திருக்கவேண்டும் அல்லவா?

சாதியின் தீமைகள் பற்றி அம்பேத்கர் சொல்பவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளகூடியதே. அதற்கு மாற்றாக அம்பேத்கர் முன்வைப்பது அரசு மதத்தில் தலையீடுவது என்பதாகும். இது மதத்தின் ஆட்சி என்ற அளவிலேயே கொண்டு போகும் இல்லையா?

இந்த நூலின் கருத்துக்கள் குறித்த எனது விமர்சனங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.


சாதியும் அரசும்

மத்திய ஐரோப்பாவின் சமூக அடுக்குகள்
மத்திய ஐரோப்பாவின் சமூக அடுக்குகள்

சாதி என்பது ஓர் அரசமைப்பு, அரசியல் அதிகார அமைப்பு. சாதி பற்றி ஆய்வு செய்த பெரும்பாலான அறிஞர் சாதி என்பதை ஓர் அரசு அமைப்பு என்றே சொல்கிறார்கள். மனித சமுதாயம் வளர்ந்த பொழுது அரசு என்பது பழங்குடிகள், குலங்கள், வழியாகவே அமைந்தது. இங்கிலாந்தை அமைத்த வைக்கிங்குள், மிகப்பெரும் அரசை நிறுவிய மங்கோலியர்கள், சீனர்கள் என உலகின் எல்லா இடங்களிலும் அரசுகள் என்பவை இப்படியே அமைந்தன.

பின்பு இதற்கு மாற்றாக மதத்தை முன்வைத்து அரசு அமைப்புகள் வந்தன. ஆபிரகாமிய மதங்கள் அனைத்தும் இதற்கு எடுத்துக்காட்டு. ஒரு பிரபஞ்சம் ஒரு கடவுள் போல ஓர் உலகம் ஒரு அரசர் என்ற கோட்பாட்டை முன்வைத்து உலகை கைப்பற்ற முயன்றன. மதச்சட்டங்கள் இயற்றப்பட்டும் மீறுபவர்களை மத பூசகர்களே விசாரணை செய்து தண்டித்தார்கள். கிறிஸ்துவத்தின் தலைவரான போப் தனியாக நாடுகளை ஆளவும், மற்றைய ஐரோப்பிய நாடுகளின் மன்னர்களை நியமிக்கவும் அதிகாரம் கொண்டிருந்தார். இன்றும் கத்தோலிக்க சர்ச் தனி விசாரணை நீதிமன்றங்களை கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் அரசி இன்றும் மதத்தின் பாதுகாவலர் எனும் பட்டத்தை கொண்டிருக்கிறார்.

சீன, கொரிய, ஐப்பானிய அரசர்கள் சொர்க்கத்தின் ஆசியை பெற்ற அரசர்கள் என அழைக்கப்பட்டனர். பவுத்தத்தின் ஒரு பிரிவின் தலைவரான தலாய் லாமா திபெத்தை தனி அரசராக ஆண்டார். முஸ்லீம் மன்னர்கள் தங்களை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அரசராக அறிவித்துக்கொண்டனர். ஷரியா எனும் சட்டமே அரசியல் சட்டமாக கருதப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. உலகின் ஒட்டு மொத்த நாடுகளுக்கும் அரசர் என்பதான கலீபா/கலீபாத் என்பதை அமைக்கவேண்டும் என முஸ்லீம் இயக்கங்கள் முயல்கின்றன.

18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சாதி, மதம் இந்த இரண்டுக்கும் பதிலான ஆட்சியாக கொள்கைகள் மூலமாக அரசு, சட்டங்கள் மூலமான அரசு என்பதான கருதுகோள் உருவாகி அதன் மூலம் அரசுகள் அமைந்தன. தேசியம், நாடு போன்ற கருதுகோள்கள் உருவாகி வந்தன. ஐரோப்பிய நாடுகளில் முன்பிருந்த நடைமுறையான மதம் அரசியலில் தலையிடுவதை தடுக்கவேண்டும், சர்ச்சும் நாடும் பிரிந்தே இருக்கவேண்டும் என்ற கோட்பாடுகள் வலுப்பெற்று மதத்தின் ஆதிக்கத்தை குறைத்தன.

கம்யூனிசம், சோசிலிசம், ஜனநாயகம், மக்கள் நல அரசு என்ற கொள்கைகள் மூலம் அரசு அமைக்க முயன்றார்கள். மன்னராட்சி முறைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களின் ஆட்சியோ அல்லது கம்யூனிசத்தின் ஒரு கட்சி ஆட்சியோ பரவலாக வரத்தொடங்கியது. இந்த சூழ்நிலையில் தான் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பற்றிய கருத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவில் மக்களாட்சி

நிறவெறிய இனவெறியர்களான வெள்ளையர்கள் இங்கே ஆட்சியை பிடித்த பிறகு ஆட்சியை விட்டு போனால் இந்தியர்களுக்கு ஆளத்தெரியாது, இந்தியா உள்நாட்டு போரில் சீரழியும், நிலையான அரசு என்பது அமையாது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் ஜனநாயகம் நிகழ்வது கண்டு ஆச்சரியப் பட்டார்கள். காரணம்? ஏற்கனவே ஒரு அரசமைப்பு முறை இருந்ததே காரணம், அதை இன்னோர் அரசமைப்புக்கு மாற்றுவது நடக்கக்கூடிய காரியமே. சாதி எனும் அரசமைப்பு இருந்த இடத்தில் இன்னொன்றை கொண்டு வர அதிக நேரம் பிடிக்கவில்லை.

அரசு என்ற ஒன்றோ அரசமைப்பு என்ற ஒன்றோ இல்லாத போதிலும் இந்தியாவில் படையெடுப்புகளுக்கு மிக கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்தியாவில் படையெடுத்த அன்னியர்கள் அரசு என்ற ஒன்று இல்லாத போதிலும் போர் எப்படி நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் போனார்கள். அன்றைய காலகட்டத்தின் மிக நவீன ஆயுதங்களுடன் வந்த வெள்ளையர்களால் கூட இந்தியா முழுவதும் ஆட்சிக்கு கொண்டு வர நூற்றாண்டு பிடித்தது. இதையே ஒரு சில வருடங்களில் தென்னமரிக்கா, வட அமெரிக்காவில் செய்து முடித்தார்கள் என்பதை ஒப்பிட்டால் போர் எப்படியிருந்தது என்பது புரியும். இந்தியர்கள் சாதியின் வழியாகவே ஒருங்கிணைந்து போரிட்டார்கள்.

அமைப்புகளும் ஊழலும்

அமைப்பு என வரும் போதே ஊழலும் கூடவே வருகின்றது. பேரரசுகளின் வீழ்ச்சி ஊழலாலேயே நிகழ்கிறது. பல பேரரசுகள் வரலாற்றில் தோன்றி மறைந்திருக்கிறன. எனவே மிகவும் சரியான அமைப்பு என்ற ஒன்றை வைத்து அதை நெடுநாள் பாதுகாப்பது என்பது முடியாத காரியம். இங்கே ஊழல் என சொல்வது பணத்தின் மூலமாக நடப்பது மட்டுமல்ல. பல வழிகளில் அதிகாரத்தின் மூலம், கொடுமையின் மூலம், போர் மூலம் என பல வழிகளில் சொல்லலாம்.

குலங்கள், குடிகள், இனங்கள் மூலம் அமைந்த அரசு மற்ற சமூகங்களை கொடுமைப்படுத்துவதை ஊழல் என கொள்ளலாம். அதே போல் மதரீதியாக அமையும் அரசு எந்த விதியை கடைபிடிப்பது? யார் உண்மையான விசுவாசி, நம்பிக்கையாளன் என்பதில் கருத்து மோதல் ஏற்படுவதை ஊழல் என கொள்ளலாம். இதே போல் கம்யூனிசம் போன்ற கொள்கை மூலம் ஆட்சியை பிடிப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் திளைத்து கட்சி எதிராக கருத்து சொல்பவர்களை கொலை செய்வதையும் ஊழல் என கொள்ளலாம். வரலாற்றில் இது போன்ற காரணங்களுக்காகவே அரசுகள் அழிகின்றன. இவை அரசுகளுக்கு மட்டுமல்லாது 21 ஆம் நூற்றாண்டின் தனியார் நிறுவனங்களுக்கும் சொல்லலாம்.

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு அம்பேத்கர் வைக்கும் தீர்வுகளை பார்ப்போம்.

கலப்புத் திருமணங்கள்

சாதியை ஒழிக்கவேண்டுமானால் சாதிகளுக்குள் திருமணம் செய்துவிட்டால் எல்லா சாதிகளும் கலந்து ஒரே சாதி ஆகி சாதி ஒழிந்துவிடும் என்பது கேட்க எழுதிப்பார்க்க மேடையில் பேச நன்றாகவே இருக்கிறது. ஆனால் அதிலே சாதி முழுவதுமாக ஒழியாது.

ஏன் ஒழியாது? இதற்கு சாதி என்பதற்கான அரசியல் வார்த்தை ஆன கேஸ்ட் (caste) என்பது எப்படி வந்தது என பார்ப்போம்.

caste எனும் வார்த்தை போர்ச்சுகீசிய வார்த்தை. சாதியே இல்லாமல் இருந்தவர்கள் என சொல்லப்படும் போர்ச்சுகீசியர்களுக்கு ஏன் அந்த வார்த்தை தேவைப்பட்டது? 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆசிய அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். ஸ்பேனியர்களும் போர்ச்சுக்கீசியரும் தென்னமெரிக்காவையும் பிலிப்பைன்ஸ் நாடுகளையும் கைப்பற்றி அடிமையாக்கினார்கள். அதிலே அங்கிருந்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் கலப்பு திருமணம் மூலம் பிறந்தவர்கள் தனித்தனி சாதியாக பிரித்தார்கள். அது தான் casta என அழைக்கப்பட்டு பின்பு ஆங்கிலத்திலும் வந்தது.

ஆப்பிரிக்கருக்கும் ஸ்பேனியர்களுக்கு பிறந்தவர் – முலாட்டோ
ஸ்பேனியருக்கும் ஸ்பேனியருக்கும் பிறந்தவர் – கிரில்லோ
ஸ்பேனியருக்கும் அமெரிக்க பழங்குடிக்கும் பிறந்தவர் – மேசிட்டோசோ
ஆப்பிரிக்கருக்கும் அமெரிக்க பழங்குடிக்கும் பிறந்தவர் – ஜேம்போ

இது தென்னமெரிக்காவில் மட்டுமல்ல பல இடங்களிலும் இப்படியே போய் முடிந்தது. இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் பிறந்தவர்கள் ஆங்கிலோ இண்டியன் என்று தான் அழைக்கப்படுகிறார்களே ஒழிய ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் திருமணம் செய்து கொண்டு எல்லாம் ஒரே இனமாக ஆகிவிடவில்லை அல்லவா?

divine-weddingsஇந்த இனக்கலப்பு/சாதிக்கலப்பு முன்பே இந்தியாவில் மிகப் பெரிய அளவில் நடந்திருக்கிறது. அம்பேத்கர் கடுமையாக விமர்சித்த மனுஸ்மிருதியிலேயே அதற்கான உதாரணங்கள் இருக்கிறனவே? மனுஸ்மிருதி 10 ஆவது பாகம் நால் வர்ணங்களில் பிறந்த கலப்பு திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் எப்படி அழைக்கப்படுவார்கள் என சொல்கிறது. பிராமண வைசிய கலப்பில் பிறந்த மகவு அம்பாஸ்ததன், பிராமண சூத்திர கலப்பில் பிறந்த மகவு நிஷாதன் என ஒவ்வோரு வர்ணக்கலப்பும் எப்படி அழைக்கப்படும் என சொல்கிறது. இது ஏன் சொல்லப்படவேண்டும்? இல்லாத ஒரு நிகழ்வை தடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் பலர் பின்பற்றும் நிகழ்வை தடுக்கவும் முடியாது என்பதால் இப்படி பெயரிட்டு அழைத்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது. ஆக அம்பேத்கர் சொல்லும் கலப்பு திருமணம் காலம் காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு இன்னோர் உதாரணமும் பார்க்கலாம். அம்பேத்கர் மற்றைய மதங்களிலும் சாதி இருக்கிறது ஆனால் கலப்பு திருமணம் செய்ய அனுமதியும் இருக்கிறது என சொல்கிறார். இது எப்படி சாத்தியம் ஆகும்? கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடும் என்றால் இப்போது கலப்பு திருமணம் செய்து கொண்டிருக்கும் மதங்களில் சாதி இருக்ககூடாது அல்லவா? ஆனால் சாதி இருந்து கொண்டே இருக்கிறதே எப்படி? முஸ்லீம்களில் சாதிகளும் பிரிவுகளும் இருக்கின்றன. கலப்பு திருமணம் செய்ய தடையும் இல்லை. ஆனாலும் ஏன் சாதி இருக்கிறது?

சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா? என்பது கேள்வி. கொடுமை இருக்கிறது என்றால் அதற்கு சமூக பொருளாதார முறைகளை பார்க்கவேண்டுமே ஒழிய திருமணங்கள் போன்ற தனிப்பட்ட நடவடிக்கைகள் தீர்வல்ல. பக்கத்து நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சண்டை இருக்கிறது. இது கிட்டத்தட்ட 60 ஆண்டுக்காலமாக நடக்கிறது. சிங்களவர்கள் தமிழர்களின் உரிமையை பறித்து தமிழர்களை கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர்.

இதற்கு இதே கலப்பு திருமணம் என்ற தீர்வை முன்வைக்கமுடியுமா? சிங்களவர்களும் தமிழர்களும் மண உறவு கொண்டால் கொடுமைகள் ஒழிந்துவிடும், உரிமைகள் கிடைத்துவிடும் என்று சொன்னால் எவ்வளவு நகைப்பிற்குரியதோ எவ்வளவு முட்டாள் தனமானதோ அப்படி பட்ட முட்டாள் தனமானதே இந்த கலப்பு திருமணத்தால் சாதி ஒழியும் கொடுமைகள் மறையும் என்ற கருத்தும் தீர்வும்.

அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா? இங்கே நாடார்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேற்றம் பெற்றது கலப்பு திருமணத்தாலா? என்பதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சாதி இணக்கத் திரும்ணங்கள் இந்து சமூக மேம்பாட்டிற்கும் இந்து ஒற்றுமைக்கும் மிக அவசியமானவை என்பதே தமிழ்ஹிந்து இணைய தளத்தின் கருத்து. இதைப் பல பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளோம். இதற்கு மாறான இக்கட்டுரை ஆசிரியரின் மேற்கண்ட தனிப்பட்ட கருத்து விவாதப் பொருள் என்ற அளவில் இங்கு பதிப்பிக்கப் படுகிறது.

– ஆசிரியர் குழு

இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா?

ஆபிரகாமிய மதங்களான யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவை ஒரு புத்தகத்தின் அடிப்படையில் இருப்பதால் அதை பின்பற்றுவோர்களின் எதிர்பார்ப்பு மற்றவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்பதாகும். இந்தியாவை அடிமையாக்கிய வெள்ளையர்கள் இங்கேயும் ஒரே புத்தகத்தை முன்னிறுத்த முயன்றார்கள் அவர்கள் எடுத்துக்கொண்டது தான் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதியை பெரும்பாலான இந்துக்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. சாதிக்கு காரணமாக அதை காட்டுவதும் இல்லை. ஆனால் அம்பேத்கர் முன்வைப்பது மனுஸ்மிருதியையே எல்லாரும் பின்பற்றுகிறார்கள் என.

அம்பேத்கர்
அம்பேத்கர்

அம்பேத்கர் தன்னுடைய 6,7 வாதங்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இல்லை, ஒரே சமூகமாக இல்லை என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் அதே சமயம் 20,21,22 ஆம் வாதங்களில் சாஸ்திரங்களே தடையாக இருக்கிறன; வேதம் மனுஸ்மிருதி முதலானவற்றை இந்துக்கள் பின்பற்றுவதால் தான் சாதி இருக்கிறது; எனவே சாதியை ஒழிக்க இவற்றை ஒழிக்கவேண்டும் என்கிறார்.

இந்த வாதங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணானவையாக இருக்கிறது. ஒரே புத்தகம் அல்லது 10 புத்தங்களை எல்லோரும் ஒரே மாதிரியாக பின்பற்றினால் பின்பு இந்துக்கள் ஒற்றுமையாக இல்லை என சொல்லமுடியாது. ஒரு புத்தகத்தை இந்தியா முழுமைக்கும் பின்பற்றியிருந்தால் அது ஒற்றுமை தானே? மற்றைய மதங்கள் போல் ஒரே புத்தகம் ஒரே கொள்கை என இருந்தார்கள் என ஒப்புக்கொள்ளமுடியுமா? மனுஸ்மிருதியை எல்லா இந்துக்களும் பின்பற்றி ஒற்றுமையாகவே இருந்திருந்தால் இந்தியா தனித்தனியாக இருந்தது, வெள்ளையர்கள் வந்து தான் ஒன்று சேர்த்தார்கள் என சொல்லவும் முடியாதே. இந்தியா முழுமைக்கும் மனுஸ்மிருதியே சாதிக்கு காரணமாக இருந்திருந்தால் அந்த புத்தகத்தை விமர்சனம் செய்து ஒழிப்பதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியுமே?

ஆனால் சாதி ஒழியவில்லை, மனுஸ்மிருதியை ஒழிப்பதன் மூலம் சாதி ஒழியாது. அப்படியிருந்திருந்தால் இன்னேரம் சாதி ஒழிந்திருக்கவேண்டுமே?

மதச்சார்பற்ற அரசும் அம்பேத்கர் முன் வைக்கும் இந்து சட்ட தீர்வும்

தன்னுடைய 24 ஆவது வாதமாக அரசே பூசாரிகளை நியமிப்பது, அரசே அதற்கு தகுதித்தேர்வு வைப்பது, கண்காணிப்பது, எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது என பல செயல்களை சொல்கிறார். அவை இந்து மதத்தை மேம்படுத்தலாம் ஆனால் அப்படி செய்யும் அரசு இந்து அரசாகவே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்துக்களின் அனைத்து மத செயல்களையும் அரசு கட்டுப்படுத்தினால் அதற்கு ஏகபோக உரிமை கொண்டாடினால் அப்படிப்பட்ட அரசு இந்து அரசாக இருக்கும் அல்லவா? அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது – ஆனால் இந்தியாவில் அல்ல, இஸ்லாமிய நாடுகளில்.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய விவகாரங்களை கண்கானிக்க தனி அமைச்சரவையும் அமைச்சரும் இருக்கிறார்கள். அரசு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்துகிறது, வழிபாட்டு இடங்களை கட்டி பராமரிக்கிறது மதத்தலைவர்களை நியமித்து மதசடங்குகளை செய்விக்கிறது. கிறிஸ்துவ நாடுகளிலும் நிலமை இப்படித்தான். இங்கிலாந்து அரசி தான் அந்நாட்டு சர்ச்சின் தலைவர். மதத்தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையின் படி நியமிக்கிறார்கள். மேல் நிலை தலைவர்கள் பாராளுமன்ற மேலவையில் அமரும் உரிமை பெற்றவர்கள். இப்படி பட்ட ஒரு நிலையைத்தான் அம்பேத்கர் முன்வைக்கிறாரா என்பது கேள்விக்குறியது.

அம்பேத்கர் இந்த புத்தகத்தில் மட்டும் இந்த தீர்வை முன்வைக்கவில்லை. அரசியல் அமைப்பு சட்டவை கூடிய பொழுதும் சரி, இந்து சட்டங்களை பாரளுமன்றத்தில் கொண்டு வந்தபோதிலும் சரி, இந்த தீர்வை முன்வைத்திருக்கிறார். இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான். அந்த அருமையான நடைமுறைக் கருத்திற்கு எதிர்ப்பு இந்து உறுப்பினர்களிடம் இருந்து தான் வந்தது என்பது அம்பேத்கர் இதிலே எதிர் கொண்ட அவல நிலையை விளக்கும்.

பழங்குடியினரின் மத மாற்றமும் சமஸ்கிருத மயமாக்கல் என்ற குற்றச்சாட்டும்

அம்பேத்கர் தன்னுடைய 8 ஆவது பகுதியில் இந்துக்கள் பழங்குடியினரை ஏற்கவில்லை. பழங்குடியினரை ஏற்காமல் போனதற்கு சாதியே காரணம் என்ற குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார். இந்த இடத்தில் சமஸ்கிருதமயமாக்கல் என்ற குற்றச்சாட்டையும் நாம் பார்க்கவேண்டும்.

சமஸ்கிருதமயமாக்கல் என்ற குற்றச்சாட்டு வைப்பவர்கள் சொல்வது என்ன? பழங்குடியாக இருந்த “ஆதி குடிமக்களின்” மதங்களை மொழிகளை அழித்து சமஸ்கிருதத்தையும் வேற்று மதங்களையும் புகுத்தினார்கள் அதனால் தான் சாதியும் அடிமைத்தனமும் ஏற்பட்டது என. ஆரிய திராவிடம் எனும் பொய்யான கொள்கையும் இதன் அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட்டதே. இன்றைக்கும் இந்தியாவின் பழங்குடியின மக்களிடையே இந்து சமயப் பணிகளும் சமூக சேவையும் செய்து வரும் அனைவரையும் இந்துத்துவாவிற்கு ஆள் பிடிக்கும் ஆட்கள் என திட்டி வருபவர்களான் தான் இந்தக் குற்றச் சாட்டையும் வைக்கிறார்கள். ஒரிசாவின் பழங்குடியினருக்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்த மகாத்மா லஷ்மாணந்த சரஸ்வதி போன்றவர்களை கொடூரமாக கொலை செய்தவர்களும் இதே ரீதியிலான வெறுப்பை முன்வைப்பதை பார்க்கலாம்.

hindus_and_ambedkarஇந்த இரண்டு வாதங்களும் முன்னுக்குபின் முரணாக இருப்பதை காணலாம். பழங்குடிகள் தங்கள் கலாச்சாரத்தை தொடர்ந்தால் அது பழங்குடியின கலாச்சாரமாகவே இருக்கும். உதாரணம் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா அவர்களின் இறுதிச்சடங்கு முழுக்க முழுக்க பழங்குடியின சடங்காகவே இருந்தது.

ஆக, இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி? இந்த இடத்தில் கிறிஸ்துவ மயமாக்கல், அரேபிய மயமாக்கல், ஆங்கில மயமாக்கல் என்றெல்லாம் யாரும் ஒப்பாரி வைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். இந்து, இந்து பண்பாடு போன்வற்றை முன்னெடுத்தால் மட்டுமே சமஸ்கிருத மயமாக்கல் என்பது பேசப்படுகிறது !

இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்வது அம்பேத்கர் மிகவும் விரும்பிய ஒன்று, முன்னெடுத்த ஒன்று என்று அதை ஆதரிக்க வேண்டியது தான் நம்முடைய கடமையாக இருக்கவேண்டும். ஆனால் அம்பேத்கரை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வர்கள்  அதீத வெறுப்புடன்  அதை எதிர்ப்பது தான் சுவாரஸ்யமான முரண்நகை.

சட்டம் போட்டு சாதியை ஒழித்துவிட முடியுமா?

சாதி என்பது அரசியல் அதிகார அமைப்பு என்றால் இன்னோர் அரசியல் அதிகார அமைப்பான அரசியல் சட்டம் சாதியை ஒழித்துவிட முடியுமா? இதைத்தான் பலர் முயற்சி செய்தார்கள். ஆனால் சாதி ஒழியவில்லை. இதற்கு மற்றைய நாடுகளில் இருந்த சாதி எப்படி விலகியது என பார்க்கவேண்டும். ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவையும் சாதிகளின் பிடியில் இருந்தவையே. செர்புகள் எனப்படும் அடிமைகள் விவசாயக்கூலிகளாக வேலை செய்து வந்தார்கள். ஐரோப்பிய பிரபுக்கள் தங்களின் கீழிருக்கும் பெண்களை யாராக இருந்தாலும் திருமணத்தன்று அனுபவிக்கும் உரிமையை பெற்றிருந்தார்கள். இப்படி எல்லாம் இருந்தவை எப்படி ஒழிந்தன என பார்த்தால் பொருளாதார முன்னேற்றமே அவைகளை செய்தது.

தொழிற்புரட்சியும் விஞ்ஞான முன்னேற்றங்களும் கோடிக்கணக்கான மக்களை ஏழ்மையில் இருந்து விடுவித்தன. பொருளாதாரம் உயரும்போது மற்றயவை எல்லாம் தானாக அடிப்பட்டு போயின. இதை நிலை மற்றைய நாடுகளிலும் நடைபெற்றது.

ஒரு ஒப்பீட்டுக் கருத்து:

ஆனால் முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது?

17 ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து அபரிமிதமான மூலதனம் ஐரோப்பாவிற்குள் பாய்ந்தது. ஐரோப்பிய இனம் ஆசிய,அமெரிக்க,ஆஸ்திரேலிய கண்டங்களில் வியாதியெனப் பரவியது. அடிமை வியாபாரமும் கண்டங்களின் நிலப்பரப்பும் ஐரோப்பிய இனங்களுக்கு கிடைத்ததும் அவற்றின் சாதிய முறைகள் தேவையற்றதாகி விட்டன.

வேறுவிதமாகச் சொல்லவேண்டுமென்றால், காலனி ஆதிக்கத்தினால், ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டினரைவிட உயர்ந்தவர்களானார்கள். வேறு நாட்டினர் அடிமைகளாகக் கிடைத்ததால், தங்கள் நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஐரோப்பியர்களை, மற்ற ஐரோப்பியர் தங்களுக்கு சமமாக நடத்த ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த தாழ்த்தப் பட்டவர்களும் அடிமைப் படுத்தப்பட்ட நாட்டினரை விட உயர்ந்தவர்களாக மாறினர். இதனால், ஐரோப்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு விலையாக ஆசிய, ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க, அமெரிக்க பூர்விக மக்கள் இனங்கள் அடியோடு அழிக்கப்பட்டன; அல்லது மிகக்கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய சமுதாயத்தின் சாதியமானது ஆசிய-ஆஸ்திரேலிய-ஆப்பிரிக்க-அமெரிக்க கண்டங்களின் பூர்விகக் குடிகளின் இரத்தத்தால் துடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரத சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார இயக்கமாக அல்லாமல், ஆன்மநேய ஒருமைப்பாட்டு அடிப்படையில் மானுட சமத்துவத்துக்கான குரல்கள் காலம் தோறும் எழுந்தவண்ணம் உள்ளன. தற்போதும் அது தொடர்கிறது.

– தமிழ்ஹிந்துவில் முன்பு வெளிவந்த சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் தொடரிலிருந்து

இங்கேயும் நம்முன்னேயும் ஒர் உதாரணம் இருக்கிறது. நாடார்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்து பின்பு படிப்பு, கடின உழைப்பு மூலம் முன்னேறிய சமூகமாக ஆனார்கள். எனவே சாதிக்கொடுமைகள் ஒழிய ஒட்டு மொத்த பொருளாதாரமும் விஞ்ஞானமும் வளரவேண்டும்.

சாதி என்பது ஓர் அடையாளமாக இருக்கும் சாதிக்கொடுமைகளும் பூசல்களும் சச்சரவுகளும் இருக்காது. பொருளாதாரம் முன்னேறினால் தனிநபர் வருமானம் முன்னேறும் தனி நபர் வருமானம் முன்னேறினால் கொடுமைகள் தானாக ஒழியும். தமிழ்நாட்டில் காமராஜரும் எம்ஜியாரும் கொண்டு வந்த கல்வி முறைகளும் சீர்திருத்தங்களும் பெரும்பாலானவர்களை முன்னேற்றியிருக்கிறன. இன்றைக்கு யாரேனும் பொறியியல் படிக்கமுடியவில்லயே இடமில்லையே என வருத்தப்படுகிறார்களா? சமூக சீர்திருத்ததிற்கு அடுத்து பொருளாதாரம் அல்ல, பொருளாதாரத்தை அடுத்தே சமூக சீர்திருத்தம்.

அம்பேத்கரின் நோக்கங்கள் உண்மையானவை. அவர் கொடுமைகளை ஒழிக்க பாடுபட்டார். ஆனால் கொடுமைகளை ஒழிப்பதாக சொன்ன கம்யூனிசமும் சோசிலிசமும் அதைவிடக்கடும் கொடுமைகளை செய்தது போல, அம்பேத்கரின் சில தீர்வுகள் மேலும் கொடுமைகளுக்கான சாத்தியங்களை கொண்டு வருகின்றனவோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இந்து மதத்தை மேம்படுத்தவும் இந்து சமுதாயத்தை முன்னேற்றவுமே அம்பேத்கர் விரும்பினார். அந்தளவில் அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களையும் ஒவ்வொரு இந்துவும் படித்து புரிந்து கொள்ளவேண்டும்.

(முற்றும்)

4 Replies to “அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2”

  1. மிகவும் நல்ல விளக்கம். மாறுபாடான கோணத்தை முன்வைத்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

  2. மிகவும் அருமையான கட்டுரை . ஜாதி ஒழிய வறுமை ஒழிய வேண்டும் ! சட்டம் போட்டு ஒன்றும் ஆகாது. அம்பேத்கர் இந்து மத எதிர்ப்பு , ஆபிரகாம் மதத்தவருக்கு , பாதிரிகளுக்கு சாதகமாக மாறியது என்பதை மறுக்க முடியாது .

  3. இந்தக்கட்டுரையை இவ்வளவு நாள் மிஸ் பண்ணி இருக்கிறேன். இப்போதுதான் படித்தேன். அருமையாக எழுதி இருக்கிறார் ராஜ சங்கர்.

    இயல்பாக உருவாகும் சாதி இணக்கக் காதல் திருமணங்கள் ஆதரிக்கப்பட வேண்டியவையே, ஆனால் சாதி ஒழிப்புக்காக என்று வலிந்து ஒரு தீர்வாக இவ்து சமூகத்தில் புகுத்தப்பட்டால், சாதி ஒழியாது. மாறாக அது எதிர்மறை விளைவுகளே உண்டாகும். அம்பேத்காரின் கருத்துக்கள் அவரை எந்தளவுக்கு மேற்கின் அன்றைய கல்வி நிறுவனங்களும், ஆபிரஹாமிய சிந்தனா முறைகளும் பாதித்திருந்தன என்பதையே வெளிச்சம் போடுகின்றன.

    ராஜசங்கரின் தெளிவான இந்தக் கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *