தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!

அவர்கள் முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள்;

அடுத்து உங்களை ஏளனம் செய்வார்கள்;

அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார்கள்;

அதற்குப் பின்னரே நீங்கள் வெல்வீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்.

***

சுவாமி விவேகானந்தர் கூறிய இதே அமுதமொழியை மகாத்மா காந்தியும் கூறி இருக்கிறார். உயர் இலக்குடன் செயல்படுவோருக்கு என்றும் வழிகாட்டும் அற்புத வாசகம் இது. இந்த அமுதமொழி தமிழகத் தேர்தல் களத்தில் உண்மையாகி வருவதைப் பார்க்கிறோம்.

தமிழகத்தின் ஏப்ரல் 24-ல் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கடைசிவாரத்தில் மாநில அரசியலின் மையமாக பாஜக கூட்டணி எப்படி மாறியது என்பதுதான் இந்தக் கட்டுரையின் அடிநாதம்.

 

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு
ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு

ஆரம்பத்தில் பாஜகவையும் அதன் கூட்டணி முயற்சிகளையும் கண்டுகொள்ளாத தமிழக அரசியல் கட்சிகள், பிறகு அதனை ஏளனமாக விமர்சித்தன. மோடி அலை எங்கும் வீசவில்லை என்பதே பாஜகவின் எதிரிகளின் தொடர் முழக்கமாக இருந்தது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் பாஜகவை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்த்து வந்தன. பாஜக அரசியல்களத்தில் இல்லாதது போலவே அவை நடித்துவந்தன.

ஆனால், தேர்தலுக்கு 10 நாட்கள் இருக்கும்போது திடீரென, தமிழக அரசியல்வானில் ஏற்பட்ட மாற்றம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தைவிட வேகமான தோற்றமாகக் காட்சி தருகிறது. இதற்கு தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுவரும் அபரிமித ஆதரவு ஒரு காரணம் என்றால், தமிழகத்தில் ஆர்ப்பாட்டமின்றிப் பரவிவரும் மோடி ஆதரவு நிலையும் ஒரு காரணம்.

தமிழகத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள 20 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது குறித்த கருத்துக் கணிப்புகள் பல்வேறு இதழ்களில் வரத் துவங்கியதும், தமிழகத்தை  ‘குத்தகை’க்கு எடுத்துள்ள அரசியல் கட்சிகள் விழித்துக்கொண்டன.

போதாக்குறைக்கு, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பலர், திமுக, அதிமுக தலைமைகளுக்கு அளித்த நெருக்கடியும், அவர்களை மேடையில் முழங்கச் செய்தது. லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் கூட்டணிக்காகவே திமுகவும் அதிமுகவும் அடக்கி வாசிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சிக்கவே, திமுக தலைவர் முதலில் அமைதியைக் கலைத்தார். மதவாதத்தை என்றும் எதிர்ப்பதே தங்கள் மூச்சு; காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலுக்குப் பின் தேவைப்பட்டால் ஆதரவளிக்க திமுக தயங்காது என்றார் கருணாநிதி.

இவரது முழக்கம் கண்டு காதுகுளிர்ந்த  ‘மதச்சார்பற்ற’ கட்சியான தவ்ஹித் ஜமாத், தனது அதிமுக ஆதரவுநிலையை மாற்றிக்கொண்டு திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது. ஏற்கனவே, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி , முஸ்லிம் லீக் ஆகிய ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன என்பது அறியற்பாலது. அதன்பிறகும் கூட, காயிதேமில்லத் முஸ்லிம் லீக் போன்ற  ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கின்றன.

இதனிடையே, தமிழக அரசின் உளவுத்துறை முதல்வருக்குக் கொண்டுசேர்த்த செய்தி உவப்பானதாக இல்லை. ஆரம்பத்தில்  ‘நாற்பதும் நமதே’ என்று கர்ஜித்த அதிமுகவின் நிலை இப்போது 20-ஐ வென்றாலே பெருமை தான் என்ற அளவுக்குத் தாழ்ந்துவிட்டதாக உளவுத் தகவல்கள் கூற, ஜெயலலிதா சுதாரித்தார். இத்தேர்தலில் பாஜக கூட்டணி 15 இடங்களில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கை கூறியதும், அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கு, பாஜகவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்காததே காரணம் என்று ஆலோசகர்கள் காரணம் கூற, அம்மையார் பாஜக எதிர்ப்பு என்ற வியூகத்தை வகுத்தார். அதன் விளைவாகவே, பிரசாரத்தின் கடைசிக் கட்டத்தில் பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்கத் துவங்கினார். அதுவும் குஜராத் மாநிலம் வளர்ச்சியில் முதலிடத்தில் இல்லை; தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்ற அவரது உரையை அவரது கட்சிக்காரர்களே நம்பி இருப்பார்களா என்பது சந்தேகமே. அதிலும் மின்னுற்பத்தியில் குஜராத்தைவிட தமிழகம் மேலாக உள்லது என்று ஜெயலலிதா கூறியபோது  ‘சிரிக்க’ முடியாமல் மக்கள் கரவொலி எழுப்பினார்கள்!

அடுத்து, காவிரி பிரச்னையில் பாஜக துரோகம் செய்துவிட்டது என்றார் ஜெயலலிதா. காங்கிரஸும் பாஜகவும் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் முழங்கினார். வேறு யார் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறார் என்ற கேள்விக்கு அவரிடம் எந்த நிச்சயமான பதிலும் இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவை என்ன காரணத்திற்காக எதிர்க்கிறாரோ, அதே காரணம் தான் தமிழகத்தில் ஜெயலலிதாவின் எதிர்ப்பிலும் வெளிப்படுகிறது. அதாவது, தனது ஆதரவுதளத்தை பாஜக கபளீகரம் செய்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இதில் பிரதானம.

இவ்விருவருக்கும் மாற்று தயார்!
இவ்விருவருக்கும் மாற்று தயார்!

தேர்தல் பிரசாரத்திற்காக சென்னைக்கு ஏப்ரல் 12-ல் வருகை தந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்குக் கூடிய கூட்டமும், அவர் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்ததும் மிகவும் முக்கியமான செய்திகளாக மாறின. அந்தக் கூட்டத்தில் தான், மோடி,  ‘தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஒருவரையொருவர் வசை பாடிக்கொண்டு மக்கள்நலனைக் கண்டுகொள்ளாமல் உள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார். தமிழக அரசியல் களத்தின் மிகச் சரியான மையப்புள்ளியில் மோடி தாக்கியதும், அதன் தாக்கம் வாக்காளர்களிடம் நன்றாகவே வேலை செய்தது.

தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஓர் அரசியல் அணியை பாஜக உருவாக்கிவிட்டது என்று மோடி அறிவித்தபோது, மீனம்பாக்கம் திடலில் எழுந்த கரகோஷமே, தமிழகத்தின் எதிர்கால அரசியல் நிலையைத் தெளிவுபடுத்தியது. அதாவது, இனிவரும் காலத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலை தங்களுக்குக் கிட்டாது என்பதை ஜெயலலிதாவும் கருணாநிதியும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அதாவது, அடுத்து அமையும் மத்திய ஆட்சியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே பெரிய அளவில் பங்கிருக்காது.

மாறாக, தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் மோடி அலையால் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இன்று தமிழக அரசியல் மேடைகளில் பாஜகவை விட வலிமையான மோடி ஆதரவு பிரசாரகர்களாக விஜயகாந்த், அன்புமணி, வைகோ ஆகியோர் விளங்குகின்றனர். இதனை கருணாநிதியாலும் ஜெயலலிதாவாலும் ஜீரணிக்க முடியவில்லை. பாஜகவின் புதிய தோழர்களின் வெற்றி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் இருவரும் உணர்ந்துள்ளனர். அதனால் தான், இப்போது பாஜக எதிர்ப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள் இவ்விருவரும்.

காய்த்த மரம் தான் கல்லடி படும். வற்றிய குளத்தை நாடி எந்தப் பறவையும் வராது. இன்றைய சூழலில் பாஜக மட்டுமே நம்பிக்கை தரும் கட்சியாக மிளிர்கிறது. எனவே, மக்களின் மனநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் இப்போது பாஜகவை கடுமையாக எதிர்க்கத் துவங்கி உள்ளன. மொத்த்தில் தமிழக அளவில் தேர்தலின் நாயகியாக இருந்த ஜெயலலிதாவின் இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார் மோடி.

மோடிக்கும், பாஜக கூட்டணித் தலைவர்களுக்கும் கூடும் கூட்டம், தானாக வரும் கூட்டம். அதேசமயம், ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் கூடும் கூட்டம் எப்படித் திரட்டப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகவே உள்ளது. குறிப்பாக, மக்களைக் கூட்டுவதற்காக ஆளும் அதிமுக கையாளும் அதிகார துஷ்பிரயோகம் மக்களிடையே வெறுப்பையே தோற்றுவிக்கிறது. அரசுப் பேருந்துகளும் தனியார் வாகனங்களும் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்திற்காக திருப்பி அனுப்பப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதுவே தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

இப்போது தமிழகத்தின் ஆறுமுனைப் போட்டி காணப்படுகிறது. ஆளும் அதிமுக, முக்கிய எதிர்க்கட்சியான திமுக, மத்தியில் ஆளும் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், புதிதாகக் களம் காணும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன், பாஜக தலைமையிலான் தேசிய ஜனநாயக்க் கூட்டணியும் களத்தில் உள்ளது. இதில் பாஜ அணி தவிர்த்த ஐந்து கட்சிகளுமே தேர்தலில் கடுமையாக எதிர்ப்பது மோடியைத் தான். தேசிய அளவில் காணப்பட்ட மோடி மைய அரசியல் தமிழகத்திலும் வந்துவிட்டது. இதுவே, பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி தான்.

இத்தேர்தல் ஊழல் எதிர்ப்பு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, திறம் மிகு தலைமை உள்ளிட்ட அம்சங்களை முன்னிறுத்தி நிகழ்கிறது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லும் கட்சியினரை விட, ஏற்கனவே என்ன சாதித்திருக்கிறார் என்பதைத் தான் நாட்டின் வாக்காளர் முக்கியமாகக் கவனிக்கிறார். எனவேதான், குஜராத் மாநிலத்தில் சாதித்துக் காட்டி திறமையை நிரூபித்த நரேந்திர மோடியைச் சுற்றிச் சுழல்கிறது லோக்சபா தேர்தல்.

பாஜக அணி டெபாசிட் வாங்கினாலே அதிசயம் என்று கேலி பேசிய கட்சிகள் பலவும், இப்போது பாஜக அணி வென்றுவிடக் கூடாது; மோடி பிரதமர் ஆகிவிடக் கூடாது என்று பல்லவியை மாற்றி இருக்கின்றன. இந்தக் கடும் எதிர்ப்பும் கூட, மோடியை தமிழக மக்களிடையே இன்னமும் வேகமாகக் கொண்டுசெல்லவே பயன்படும்.

மோடியின் புதிய பிரசாரகர்
மோடியின் புதிய பிரசாரகர்

உண்மையில் சொல்லப்போனால், மோடி என்ற சொல்லை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசென்று சேர்த்தவர்கள் பாஜகவின் எதிரிகளே. நூறு சேனல்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி யுகம் இது. எந்த சேனலைப் பார்த்தாலும் அதில் வரும் மோடி எதிர்ப்பு- ஆதரவு செய்திகள் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. ஜெயலலிதாவாலும் கருணாநிதியாலும் ஒருசேர எதிர்க்கப்படுபவர் நல்ல தலைவராகவே இருப்பார் என்று நடுநிலை வாக்காளர்கள் தீர்மானிக்கக் கூடும். தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தும் கட்சி சார்பற்ற வாக்காளர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரே தேர்தலில் வெல்ல முடியும். அந்த வகையில் பாஜவும் மோடியும் சாதகமான நிலையில் உள்ளனர்.

மோடியின் சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், கன்னியாகுமரி வருகைக்கு தமிழக பத்திரிகைகள் அளித்த முக்கியத்துவம் கூட முன்னர் கண்டிராதது. கோவையில் நடிகர் விஜய் மோடியைச் ச்ந்தித்த்தும், குமரியில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ் மோடிக்கு ஆதரவாக மேடையில் பேசியதும், மு.க.அழகிரியின் பாஜக ஆதரவு நிலைப்பாடும், தமிழகத்தின் பரபரப்புச் செய்திகளாகின. பல நாளிதழ்கள் மோடியை சிறப்புப் பேட்டி கண்டு பிரசுரித்தன. சில தமிழ் தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் மோடியின் சிறப்பு நேர்காணல்கள் வெளியாகின.

மோடியை அடுத்து தமிழகத்தை முற்றுகையிடும்  அத்வானி, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு, உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படை, தேர்தலின் மையவிசை எது என்பதைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது. ஒருங்கிணைந்த தேர்தல் ஏற்பாடுகள், கூட்டணியினருடன் சுமுகமான வியூகம் வகுத்தல், திட்டமிட்ட பிரசார அணுகுமுறை, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட வாக்குறுதிகள்  என பாஜக கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் முன்னிலையில் உள்ளது.

அதன் காரணமாகவே இத்தேர்தலில் பல ஆச்சரியகரமான முடிவுகளை தமிழகம் காணும் என்பதற்கான பல ஆதாரங்களை இப்போதே காண முடிகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 15-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லக்கூடும். பிற தொகுதிகளிலும் தேர்தலின் வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இக்கூட்டணி விளங்கும்.

***

கடைசியாக மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரின் ஒரு மேற்கோள் :

நீ வந்தால் உன்னோடு;

வராவிட்டால் தனியாக;

எதிர்த்தால் உன்னையும் மீறி வெல்வேன்

-வீர சாவர்க்கர்.

.

18 Replies to “தமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி!”

 1. பாடியாடி வாழ்ந்த இந்த பாரதத்தை வீணர், கோடிகடைக் கோடியிலே கொண்டு வைத்து விட்டார் , நாடு வாழ வேண்டுமெனில் மோடி வெல்ல வேண்டும், ஓடி வாரும் தாமரைக்கு ஓட்டளிக்க வாரும்.

 2. பாடியாடி வாழ்ந்த இந்த பாரதத்தை வீணர், கோடிகடைக் கோடியிலே கொண்டு வைத்து விட்டார் . நாடு வாழ வேண்டுமெனில் மோடி வெல்ல வேண்டும், ஓடி வாரும் தாமரைக்கு ஓட்டளிக்க வாரும்.

 3. திரு சேக்கிழான் அவர்களின் இந்த கட்டுரை எந்த கட்சியை சேர்ந்தவர் படித்தாலும் பாராட்டுவர் என்பது உறுதி. இந்த கட்டுரையின் மையக்கருத்து தொடர்பாக நான் மேலும் ஒரு விஷயத்தைப்பற்றி மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இப்போது அம்மா அவர்களும், மம்தா அவர்களும், முலயாம் சிங்கு , நிதீஷ் குமார் ஆகிய முன்னாள் அல்லது இந்நாள் முதல்வர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் , தங்கள் மாநிலம் குஜராத்தை விட நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சொல்லி, தாங்கள் மோடியைவிட சாதித்துவிட்டதாக கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

  தங்களை அறியாமலேயே அவர்கள், தாங்கள் கூறிய பொய்யினை அனைவரும் உணரும்படி செய்து விட்டனர். மத்திய அரசின் நிதி உதவியை நாடி, தங்கள் மாநிலம் மிகப்பின் தங்கிய மாநிலம் என்று சொல்லி, நிதீஷ் குமாரும் ,மமதா, அகிலேஷ் ஆகியோர் பிச்சைப்பாத்திரம் ஏந்துவது எல்லோரும் அறிந்த உண்மை. முன்னேறிய இந்த மாநிலங்கள் , இந்த முதல்வர்களின் கூற்றுப்படி , மத்திய அரசின் உதவி பெறுவது மற்றும் மேலும் உதவி கோருவது , சட்டப்படி குற்றம் ஆகும். உண்மையிலேயே பின் தங்கிய மாநிலங்களுக்கு செல்லவேண்டிய உதவியை , முன்னேறிய இந்த மாநிலங்களுக்கு அளிப்பதும் ஒரு குற்றமே. உ பி, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய , குஜராத்தை விட முன்னேறிய மாநிலங்களுக்கு நிதி உதவி அளித்த காங்கிரஸ் அரசும் ஒரு குற்றவாளியே. பசி ஏப்பக்காரனின் உணவை புளிச்ச ஏப்பக்காரன் சாப்பிடுவது முறையா ?

  மோடியின் கூட்டங்களுக்கு ஆட்கள் அழைத்து வரப்படுவதில்லை : மக்கள் அவர்களாகவே கூடுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு , திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கூலிக்கு ஆட்கள் பிடிக்கும் வழக்கம் கலைஞர் காலத்தில் 1972- க்குப் பிறகு ஆரம்பித்தது. இப்போது , திமுக, அதிமுக எல்லாமே அதே பாணியை பின்பற்றுகின்றன. மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பொது மக்களை மிரட்டியும், நமது கழகங்களைப் போலவே , பிசிபேலா பாத், தயிர் சோறு, மினெரல் வாட்டர், மற்றும் கட்டிங், தினக்கூலி பணம், ( cash daily wages ) கொடுத்து கூட்டி வருகின்றனர் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சியின் கூட்டத்துக்கு கட்டிங் கொடுத்தால் கூட , எந்த நாயும் வராது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

  தானே கூடும் கூட்டம் , கூட்டி வரப்பட்ட கூட்டம் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.ஆனால் கூட்டத்தை மட்டும் வைத்து யாரும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது. ஏனெனில் 82 கோடி வாக்காளர் உள்ள நம் நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு போய், அவர்களின் பேச்சுக்களை கேட்போர் மிகக் குறைவு. எனவே தானாக கூடிய கூட்டத்தை வைத்துக்கூட வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க முடியாது.

  பாஜக அணிக்கு தமிழகம் எங்கும் இந்த தேர்தலில் பேராதரவு உள்ளது என்பது நமது மீடியாக்கள் மூடி மறைக்கும் விஷயம். ஆனால் அதே சமயம் , ஜூனியர் விகடன், போன்ற ஒரு சில பத்திரிக்கைகளின் கருத்துக்கணிப்பில் , மோடி ஆதரவு போக்கு வாக்காளர் மத்தியில் பெருகுகிறது என்று வந்தவுடனேயே , திமுக மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

  இலங்கை தமிழரை படுகொலை செய்த சோனியா, சோனியாவிற்கு சொக்கத்தங்கம் என்று சான்றிதழ் வழங்கிய மஞ்சள் தலைவர் ஆகியோர் கட்சிகள் இம்முறை தமிழக மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்படுவார்கள்.

  டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதும் ,என் டி ஏ 300 இடங்களைப் பிடிப்பதும் உறுதி ஆகிவிட்டது.

 4. முந்தைய தேர்தல்களில் தமிழ் நாட்டில் பா.ஜ.க. என்ற பெயரை உச்சரிக்கக் கூட ஆள் இல்லாமல் இருந்தது. பா.ஜ.க. என்றால் ஜனா கிருஷ்ணமூர்த்தி என்று ஒருவரை மட்டும் மக்களுக்குத் தெரியும், மேலும் திராவிட கட்சிகளுக்கே உரிய வகையில் பா.ஜ.க.வுக்கு ‘பார்ப்பனர்’ கட்சி, வாடா நாட்டுக் கட்சி என்ற முத்திரையும் குத்தப்பட்டது, படித்தவர்களில் பலரும் கூட இதை ஆமோதித்தனர், காரணம் அப்போது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆகிய இயக்கங்களில் தலைவர்களாகக் காணப் பட்டவர்களில் சிலர் பிராமணர். திராவிட இயக்கங்களில் அவர்களை முன்னிலைக்கு அனுப்புவதில்லை. ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டிருந்த காங்கிரசும் தமிழ் நாட்டில் மற்றுமொரு திராவிட கட்சியாக மாறியிருந்தது. காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்பான்ஸ் கூட பிராமணர்களை ‘பார்ப்பனர்’ என்றெல்லாம் பேசத் தொடங்கினர். அப்படி தீண்டத் தகாத கட்சியாகப் பார்க்கப்பட்ட பா.ஜ.க. வாஜ்பாய் காலத்தில்கூட தமிழ்நாட்டில் அதே கதியில்தான் மதிக்கப்பட்டது. அத்வானி போன்ற தலைசிறந்த தலைவர்கள் கூட தமிழ் நாட்டைக் கை கழுவி விட்டதாகத்தான் தோற்றம் காணப்பட்டது. என்று மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரோ, அப்போதே தமிழ் நாட்டில் ஒரு புத்துணர்ச்சி, குறிப்பாக பா.ஜ.க.தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா போன்ற முன்னணி தலைவர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கத் தொடங்கியது. இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் விதத்தில் பல மாதங்களுக்கு முந்தியே விருதுநகரில் நடந்த மகாநாட்டில் வை.கோ. மறைமுகமாகத் தன ஆதரவு பா.ஜ.கவுக்குத்தான் என்பதை, வாஜ்பாய் தன்னை தன மகனைப் போல நடத்தியதையும், அவர் பிரதமராக இருந்த போது அவர் அறைக்கு முழு உரிமையோடு போகும் அனுமதி இருந்ததையும் குறிப்பிட்டபோதே, இங்கு தமிழகத்தில் ஒரு புதிய அலை வீசப்போகிறது என்பது தெளிவாகி விட்டது. இந்த மாற்றத்துக்குத் தண்ணீர் ஊற்றி மரமாக வளரச் செய்த பெருமை தமிழருவி மணியனுக்குத்தான் உண்டு. யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத துருவங்களை ஒன்றிணைத்த பெருமையும் அவருக்கு உண்டு. பா.ம.க. வையும் தே.மு.தி.க.வையும் ஒரே அணியில் கொண்டு வந்தவர் அவரே. அப்படி கொண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டாலும், மனச் சோர்வு அடைந்தாலும், கொண்டு வந்த பின்னர் அன்புமணி இராமதாசும் சரி விஜயகாந்தும் சரி ஒற்றுமையாக இருந்து பா.ஜ.க.வுக்கு பெருமை சேர்த்த காரணத்தால், தமிழகத்தில் பா.ஜ.க. நிச்சயம் ஒரு உரிய இடத்தைப் பெறும். சேக்கிழான் அவர்களின் கட்டுரை மிக யதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 5. The poetical comments of Sri. KRISHNAMOORTY.R clearly portrays the need of the hour. Modiji has to win the elections, with a comfortable majority for taking the country out of the doldrums and into the path to prosperity and glory. May God bless Modiji in this noble task.

 6. What a wonderful article. This is what I was hoping for a long time. DMK and ADMK should be gone for good. Lets have a BJP lead TamilNadu state government in 2016.

 7. கடைசியில் குறிப்பிட்ட வீர் சாவர்க்கர் ன் மேற்கோள் தான் சரியான பன்ச்.

 8. மிக சிறப்பான கட்டுரை பாரத நாட்டுக்கு நல்லது நடக்கட்டும் மோடியின் தலைமையிலே

 9. ராமதாஸ், விஜயகாந்த் போன்ற சில்லறை வணிகர்களை தவிர்த்து பாரதிய ஜனதா தனித்து நின்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். திரு மோடியை ஆதரிக்க போயும் போயும் இவர்களுக்கா வலு சேர்ப்பது? சகிக்க முடியவில்லை.

 10. Sirupanmaienarin vaaku intha varuda aarasiyalil perum maatrathai yerpadhuthum endru oolari konduirukum sirupanmai katchikalluku intha katturai oru nalla padam,hindukal anaivarum orumugamaga B.J.Pyai aatharithal sirupanmaienarin vaakukale thevai illamal poividum.

 11. திரு முகில் (22-4-2014) எழுதியுள்ளது சரிதான். ஆனால் ground reality என்ன என்பதை நாம் பார்க்கவேண்டும். திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆட்களே இல்லை. மோடி கலந்துகொள்ளும் பிஜேபி கூட்டங்களில் கூட்டம் கூடுவதற்கு காரணம் கூட்டணி தொண்டர்கள் கலந்து கொள்வதால்தான். அதுவும் இல்லையென்றால் ரொம்ப அவமானமாக இருக்கும். என்றாலும் இப்போது முன்பை காட்டிலும் தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. ஆனால் இன்னும் நிறைய நிறைய வளரவேண்டும்(அடுத்த சட்டசபை தேர்தலுக்குள்). அது தமிழ் நாடு பிஜேபி கையில்தான் இருக்கிறது. அதற்கு எனது சில கருத்துக்கள்.
  1. தமிழ் தினசரி 1ம், வார இதழ்கள் இரண்டும் இந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையேடு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
  2. மக்கள் டிவி, கேப்டன் டிவி போன்று அர்ப்பணிப்புள்ள டிவி ஒன்று உடனடியாக தேவை.Lotus டிவி கொஞ்சங்கூட பயனில்லை.அது வளர்ச்சிக்கு சிறிதும் உதவாது.
  3. திராவிட கழக (குறிப்பாக திமுக) பேச்சாளர்களை போல பேச்சு திறமை உள்ளவர்களாக மாற்ற பிஜேபி இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். இதற்காக workshop நடத்த வேண்டும்.
  4. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபி மீது தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் திமுக திக ஆகிய கட்சிகள் தூவி உள்ளனர் அதனை (மதவாத கட்சி, பிராமணர் கட்சி , முஸ்லிம் விரோத கட்சி) தமிழக பிஜேபி துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் முழுமையாக மாற்ற முடியும்.
  5. தொண்டர்களின் கருத்துக்களை மதித்து கேட்கவேண்டும். காங்கிரஸ் கட்சி போல தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் தொடர்பு இல்லாதது போல பிஜேபி யை மாற்றிவிடக்கூடாது. தமிழக தலைவர்கள் இதை வன்மையாக மறுப்பார்கள். ஆனால் உண்மையில் தண்ணீருக்கும் (=தொண்டர்கள்) தாமரை இலைக்கும் (=தலைவர்கள்) தொடர்பு இல்லாமல்தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. கேவலம் ஒரு நடிகை கூட தன ரசிகர்களுக்கு அவர்களின் கடிதங்களுக்கு தன கைப்பட பதில் கடிதத்தை எழுதுகிறாள். ஆனால் தமிழக பிஜேபி leader களோ cadre களை பொருட்படுத்தவில்லை என்பது நூற்றுக்கு நூறு பொய் கலவாத உண்மை.
  6. ஐந்து வருடங்கள் ஆனாலும் பொதுக் கூட்டம் போடுவதில்லை. (எங்கள் ஊரில் இல்லை. வேறு ஊர்களில் எப்படியோ) தேர்தல் வரும்போதுதான் கூட்டம் நடத்தப் படுகிறது. இப்போது நடந்து வரும் தேர்தலில் கூட்டத்தில் பேசுபவர்கள் யார் என்றால் கூட்டணி கட்சிகாரர்கள்தான். உள்ளூர் பிஜேபிகாரர்கள் மேடை ஏறி தைரியமாக பேசுவதில்லை.பயந்து சாகிறார்கள். தப்பி தவறி ஏறிவிட்டால் உளறுகிறார்கள். ஆகவே பேச்சாளர்களை உருவாக்கி 6 மதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கூட்டம் போடவேண்டும். அவ்வப்போது மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு (மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில்) நூதனமுறையில் போராட்டம் நடத்தவேண்டும்.
  7. பிஜேபி யில் உறுப்பினர்களை வருடம் பூராவும் தீவிரமாகவும் சேர்க்க வேண்டும்.
  8. நாட்டில் ஏதேனும் தவறு நடந்தால் உடனடியாக கண்டன அறிக்கை விடவேண்டும். மற்ற கட்சிகள் முந்துகொண்டு செய்யும்போது பிஜேபி தூங்கி வழிய கூடாது.
  9. இந்த தேர்தலில் பிஜேபி தான் மத்தியில் ஆட்சி பிடிக்க போகிறது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதன் பின் மோடியின் நல்லாட்சியை உணர்ந்து தமிழ் நாட்டில் கட்சி வளரும். அதற்கு தகுந்தார் போல தமிழக பிஜேபி செயல்படவேண்டும்.
  10) பிஜேபி கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.வி. சேகர் அதிமுகவின் அவலங்களை நாடகமாக ஆக்கி மேடையில் நடிக்கவேண்டும் அந்த காலத்தில் அண்ணா நாடகம் மூலம் கட்சியை வளர்த்தது போல.

  இது போன்ற நற்காரியங்களை 2016 தேர்தலுக்குள் செய்தால் நிச்சயமாக முகில் சொல்வது போல கூட்டணி தேவை இல்லை. இப்போது சேர்ந்துள்ள கூட்டணி கட்சிகள் அனைத்துமே முதல்வர் பதவிக்கு ஆசைபடுவன. ஆகையால் இப்போது கூட்டணி சேர்ந்தது போல அவ்வளவு சுலபமாக (!!??) 2016 ல் முடியாது என்று நான் சத்தியம் செய்து கூறுகிறேன். ஆகவே பிஜேபி தன காலில் நிற்க கற்றுக்கொள்ளவேண்டும். 5 சீட்டு வந்தாலும் பரவாயில்லை. தனித்து நிற்கவேண்டும். ஆட்சி பிடிக்கும் கனவை எல்லாம் ஒரு 15 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்து கொள்ளலாம். இந்த நல்ல 10 முத்தான கருத்துக்களை தமிழக பிஜேபி க்கு தேர்தல் ரிசல்ட் வந்தபிறகு (இப்போது தேர்தலில் பிசியாக இருப்பார்கள்) “தமிழ் இந்து” அனுப்பி வைக்குமா? please

 12. நண்பர்களே, இன்றும் நாளையும் மட்டும் நாம் முக்கியமாக, நம்மால் முடிந்தது ஒவ்வொருவரும் குறைந்தது பத்து ஓட்டுகளையாவது இந்த கூட்டணி பக்கம் திருப்பவேண்டும். இந்த 5000 வாசகர்களும் 50000 ஓட்டுக்களை திரட்ட vendum

 13. The “Honestman”‘s opinion should be taken in the right perspective by the BJP,
  to be a powerful force during the coming Assembly election. Will they do it ?

 14. பல தமிழ் வாரமிருமுறை மற்றும் வாரப்பத்திரிக்கைகளிலும் பார்லிமெண்டு தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு வெளி வந்துள்ளது.

  1. நக்கீரன் கருத்துக்கணிப்பு – ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் சுமார் 600 பேரிடம் கருத்துக்கேட்டு கணிப்பு செய்துள்ளனர். ஆனால் பாண்டிச்சேரி இந்தியாவிலேயே மிகப் பெரிய பாராளுமன்ற தொகுதியாகிய ஆந்திராவின் மல்காஜ் கிரியை விடப் பெரியது என்பதால் . பாண்டிச்சேரிக்கு மட்டும் சுமார் 1000 பேரிடம் கருத்து கணிப்பு செய்து வெளியிட்டுள்ளது. திமுக ஆதரவு பத்திரிகை என்பதால் , வழக்கம் போல , திமுகவே அதன் கணிப்பில் முந்துகிறது .பாஜக கூட்டணிக்கு இரண்டு இடம் கிடைக்கிறது.

  2. ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் பாஜக அணி சுமார் 11 இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  3. குமுதம் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 5 இடங்களில் முன்னிலை.

  4.குமுதம் ரிப்போர்ட்டரில் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை.

  5.தமிழக அரசியல் கருத்துக்கணிப்பில் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை.

  6. நியூஸ் சைரன் கருத்துக்கணிப்பில் பாஜக வுக்கு 10 தொகுதிகளில் முன்னிலை .

  சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் கொண்ட ஒரு பாராளுமன்ற தொகுதியில் 1000 பேரிடம் கருத்து வாங்கி, அதனை வைத்து அலசி ஆராய்வது , உண்மை நிலையை எந்த அளவுக்கு பிரதிபலிக்கும் என்று யாரும் உறுதி செய்ய முடியாது. ஆனால் இந்த வாக்கு கணிப்பில் புலியான சில புள்ளியியல் துறை விவரஸ்தர்கள் கூறுவது சில சமயங்களில் , சில தேர்தல்களில் சரியாக வருகிறது. சில தேர்தல்களில் தவறிப் போய்விடுகிறது.

  அதிக நபர்களுடன் கருத்துக்கேட்டு அலசி ஆராய்ந்த கணிப்பு குமுதம் பத்திரிக்கையுடையது. அதன் படி :

  எம் ஜி ஆர் கட்சி 24-

  கருணாநிதி கட்சி -11.

  பாஜக அணி – 5.

  திமுக , அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிக் கூட்டணி இல்லாது உதிரிக் கட்சிகளான வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், பச்சைமுத்து, கொங்கு ஆகியோருடன் இணைந்து பாஜக அணி ஐந்து இடம் பெற்றாலே, 30 இடம் வென்றதற்கு சமம். தமிழகத்தில் இம்முறை நிச்சயமாக குமுதம் கணிப்பைவிட கூடுதல் இடங்களை பாஜக அணி வெல்லும் என்றே நம்புகிறேன்.

  மோடி பிரதமர் ஆகும் இந்த பொன்னாளில் தமிழகமும் அதன் பங்குக்கு ஆதரவுக் கரம் நீட்டும் என்பது உறுதி. எந்தக் கட்சி வென்றாலும் , ஊழல் வாதி என்று அடையாளம் தெரிந்தவர்களையும், குடும்ப கட்சி அரசியலையும் இம்முறை மக்கள் புதைகுழிக்கு அனுப்பப் போகிறார்கள்.

  தமிழ் நாட்டிலும் கூட உண்மை பேசும் ஒரு அரசியல்வாதி அதுவும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். பெரியவர் ஞான தேசிகன் அவர்கள் இந்த தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றிபெறும் என்ற உண்மையை தெளிவுபடக் கூறி உள்ளார். காங்கிரஸ் 100 இடங்களை கைப்பற்றும் என்று பல பொய்யர்கள் கூறிவரும் நிலையில் , இவர் மட்டுமே காங்கிரசுக்கு 40 இடம் கிடைக்கும்- எனவே அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைக்காமல் போய்விடும் என்பதை மறைமுகமாக குறிப்பாக உணர்த்தியுள்ளார். ஏனெனில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 10 சதவீதம் என்பது 55 ஆகும். அவ்வளவு இடம் காங்கிரசுக்கு கிடைக்காது என்பதை சிறு குழந்தை கூட உணரும்.

  பெரியவர் ஞானதேசிகனைப் போன்ற உண்மைபேசும் அரசியல்வாதிகள் , பொய்யர்களின் கட்சியான காங்கிரசில் மாநிலத்தலைவராக இருப்பது ஒரு வினோதம். அவர் அந்த கட்சியை விட்டு விலகி, பாஜக போன்ற உண்மையான தேசியக் கட்சியில் சேரவேண்டும்.

 15. பாட்டி : என் கையைப் பத்திரமாகப் பிடித்துக்கிட்டு வாப்பா.

  பேரன்: சரி பாட்டி, இந்த தேர்தலில் யார் ஜெயிப்பாங்க பாட்டி ?

  பாட்டி: யார் ஜெயிப்பாங்க என்று கேப்பதை விட, யார் ஜெயிக்கணும் என்று கேளு .

  பேரன்: யார் ஜெயிக்கணும் சொல்லு.

  பாட்டி: டூ ஜி ஊழல், நிலக்கரி ஊழல் , ஆதர்ஷ் ஊழல் , பி எஸ் என் எல் ஊழல் ஆகிய ஊழல்களைச் செய்த கட்சிகளின் வேட்பாளர்களும் , இந்த ஊழல்களை மூடி மறைக்க முயன்ற அரசியல்கட்சிகளின் வேட்பாளர்களும் , அவர்களின் கூட்டணிக்கட்சிகளும் தோற்கடிக்கப்படவேண்டும். எஞ்சிய வேட்பாளர்களில் குறைந்த தீமை யார் என்று பார்த்து அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பாஜக அணியில் எல்லா வேட்பாளர்களும் நல்லவர்களே. அதிமுக அணியிலும் எல்லாம் நல்ல வேட்பாளர்களே. ஆனால் பார்லிமெண்டு தேர்தல் என்பதால், மோடி பிரதமர் ஆகவேண்டும் அதுவே நாட்டுக்கு மிக நல்லது என்று கருதி , தாமரைக் கூட்டணிக்கு வாக்களிப்போம். அதுவே நல்லது.

  பேரன்: திமுக, அதிமுக என்று மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சியில் ஏறிவருவது வழக்கம், வரும் சட்டசபை தேர்தலிலாவது இது மாறுமா ?

  பாட்டி: ஆனானப்பட்ட கம்யூனிசம் என்ற கொள்கையே காற்றில் பறந்து காணாமல் போய்விட்டது. திமுக , அதிமுக ஆகிய இரண்டுமே குடும்ப அரசியல் அல்லது தனி மனித துதிபாடல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கட்சிகள். திமுக என்பது ஊழல், குடும்பம், பொய்யான இனவாதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தெலுங்கர் கட்சி. அதிமுக என்பதோ மறைந்த மக்கள் திலகம் எம் ஜி ஆரின் ஆன்மாவைப் பின் பலமாகக் கொண்டது. எம் ஜி ஆரின் புகழ் மறைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் தக்க நடவடிக்கை எடுத்தால், அதிமுகவுக்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இல்லையென்றால், வரும் தேர்தலிலேயே தூக்கி வீசிவிடுவார்கள். திமுகவோ , குறுகிய சித்த்தாந்தங்களை கொண்ட ஒட்டுக் கட்சி. அதற்கு இனி எதிர்காலம் கிடையாது. இந்து விரோதக் கட்சி என்ற முத்திரையிலிருந்து வெளிவந்தால், அந்தக் கட்சிக்கு சிறிது எதிர்காலம் இருக்கும். சிறிதும் பகுத்தறிவின்றி, இந்து எதிர்ப்பு என்பதை மட்டும் மூலதனமாக கொண்டு அரசியல் செய்ய நினைத்தால் , மக்கள் அதற்கு பாலூற்றி விடுவார்கள். அது ஒரு அசிங்கம் பிடித்த கட்சி அல்ல என்பதை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.

  பேரன்: இந்தியாவின் எதிர்காலம் நன்றாக இருக்குமா ?

  பாட்டி: காங்கிரசைப் போன்ற தேசவிரோதக் கட்சி இந்தியாவில் சுமார் ஐம்பத்து ஐந்து வருடம் அரசாண்டும் , அவர்களால் இந்தியாவை அழிக்க முடியவில்லை. இனி எந்தக்கொம்பனாலும் அழிக்க முடியாது. இந்திய ஜனநாயகம் உலகிலேயே சிறந்த ஜனநாயகம். அது என்றும் வாழும். டெல்லிக் குல்லுக பட்டச்சி இந்திரா காந்தி , 1975-லே அவசர நிலை என்ற பெயரில், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க அனைத்து சதிகளையும் செய்தாள். இந்திய ஜனநாயகம் அந்த அம்மையாரை வீழ்த்தி வெற்றி கண்டது. அப்போது , அந்த குல்லுக பட்டச்சியை பார்த்து, சண்டாளி சதிகாரி, சாத்தூர் பாலகிருஷ்ணனைக் கொன்றாயே, மேயர் சிட்டிபாபுவைக் கொன்றாயே , உன் இரத்த வெறி இன்னும் தீரவில்லையா, சதிகாரி, இரத்தப்பிசாசே என்றெல்லாம் வீர வசனம் பேசிய ஒரு தமிழக அரசியல் தலைவரை நினைத்து நம் மக்கள் சிரிக்கிறார்கள். அந்த கட்சி இனித் தேறாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *