தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

 

 முந்தைய பகுதி

 

 தமிழகத்திலும் மோடியால் மாற்றம் வருமா?

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிரான தேர்தலாகவே கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் உள்ள நிலையிலேயே, இத்தகைய தோற்றத்தை உருவாக்கிக்கொண்ட ஆட்சியாக மன்மோகன் சிங்கின் ஆட்சி தான் இருக்க முடியும். சொல்லப்போனால், இந்த நிலைக்கு தற்போதைய மத்திய அரசு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எந்தத் துறையை எடுத்தாலும் ஊழல்; விலைவாசி கிடுகிடு உயர்வு; பொருளாதார வீழ்ச்சி, பயங்கரவாதம் அபாய வளர்ச்சி, வழக்கு ஆதாரங்கள் சீர்குலைப்பு, பல மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசின் நம்பகத்தன்மை இழப்பு, என பல அம்சங்களில் மன்மோகன் சிங் அரசு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

modi006இந்த அரசுக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என்ற எண்ணம் தேசம் முழுவதும் ஒரு மின்னலை போலப் பரவி இருக்கிறது. அரசுக்கு எதிரான தேர்தலாக, எதிர்மறையாக இருந்த இந்தச் சூழலை, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு, ஆக்கப் பூர்வமானதாக ஆக்கி இருக்கிறது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது தனி ஆளுமையாலும், ஆளுகைத் திறனாலும் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறார். இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனாக அவர் உருவெடுத்திருக்கிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் கேவலமான ஆட்சியும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இருளில் புதையும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரு உதய தாரகையாக நரேந்திர மோடி உருவானது காலத்தின் கட்டாயமே என்று சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியிடம் எதுவெல்லாம் இல்லையோ (நேர்மை, தேசபக்தி, ஆளுகை, தன்னம்பிக்கை, தியாகம்) அவை அனைத்தையும் மோடியிடம் நாடு கண்டது. காங்கிரஸ் கட்சி மிகையாக முன்னிறுத்தும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை நாடு உணர்ந்துவரும் வேளையில், அந்த மாய்மாலத்திற்கு அடிபணியாதவராக மோடி காட்சி தருவது அவரது மதிப்பை உயர்த்துகிறது.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக அவர் சுயநல அரசியல்வாதிகளாலும், மண்டை கனத்த ஊடகங்களாலும் கடுமையாக வசை பாடப்படுகிறார்.  மத்திய அரசு மோடிக்கு எதிரான எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடாமல் அவரை சிறுமைப்படுத்த முயன்றுகொண்டே  இருக்கிறது. போலீஸார் மீதான போலிமோதல் கொலைக் குற்றச்சாட்டுகள், அமெரிக்க விசா விவகாரம், காவல்துறை அதிகாரிகளின் மிரட்டல், கூட்டணிக் கட்சியினரின் விமர்சனம் என எது கிடைத்தாலும் கும்மாளமிட்டு மகிழ்ந்த காங்கிரஸ்காரர்கள் தான், மோடியை இன்று மைய அரசியலுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள். கோகுலத்தில் எங்கோ விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை ராஜதர்பாருக்கு இழுத்து வந்தது கம்ஸனின் தொடர்ந்த தாக்குதல்கள் தானே?

இப்போது மோடி பிரதமர் வேட்பாளராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாஜக, சங்க பரிவார் இயக்கங்கள், கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும் இந்த அறிவிப்பு புத்தெழுச்சி ஊட்டி இருக்கிறது. இதைக் கண்டு இப்போது பொருமுகிறது காங்கிரஸ். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது காங்கிரஸ் கட்சியில் வழக்கம் இல்லையாம்! ஜவஹர்லால் நேரு இருந்தவரை அவரே நிரந்தரப் பிரதமர்;  அவரது மகள் இந்திராவோ, பிரதமர் பதவிக்காக சொந்தக் கட்சியையே பிளந்தவர்; அவரது மகன் ராஜீவ் காந்தியோ, பிரதமருக்கென்றே வார்க்கப்பட்டவர்; இவை எல்லாம்  எந்த நாட்டின் மக்களாட்சி நடைமுறைகளாம்?

கொஞ்சமும் மனசாட்சியின்றி, மோடி தேர்வு குறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். உள்ளூர ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் துடிக்கும் காங்கிரஸ் கட்சி, இப்போது தேர்தலுக்குப் பின்னரே தங்கள் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இருப்பதாகக் கூறுகிறது. தேர்தல் முடிவுகளில் இரட்டை இலக்க (அதாவது 99 இடங்களுக்குக் கீழ்) வெற்றி பெறுவதே சிரமமாக இருக்கக் கூடிய சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு யாரையும் அப்போது பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் தேவை ஏற்படாது என்பதும் உள்ளூரத் தெரியுமோ?

மோடி குறித்த அறிவிப்பை ஆரம்பத்தில் எதிர்த்த மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி அதற்குக் கூறிய காரணம், மோடியை இப்போதே முன்னிறுத்தினால், மோடிக்கு எதிரான துஷ் பிரசாரத்தால் தன் மீதான ஊழல் கறைகளை காங்கிரஸ் மறைத்துக் கொள்ள முயலும் என்பது தான். அதுவும் உண்மை தான். ஆனால், எத்தனை நாட்களுக்குத் தான் துவேஷிகளின் பிரசாரத்துக்குப் பயந்துகொண்டு காத்திருப்பது? அலை எப்போது ஓய்வது? கடலில் எப்போது குளிப்பது?

இப்போது, நாடு மோடியையே எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்தவுடன் அத்வானி தனது பிரதம(ர்) சீடனுக்கு மனப்பூர்வமாக ஆசி வழங்கிவிட்டார். இதையும் காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. பாஜக-வுக்குள் குத்துவெட்டு நிகழும் என்று எதிர்பார்த்து ஏமாந்த நரியான காங்கிரஸ், இப்போது மோடியுடன் அத்வானியையும் புழுதி வாரித் தூற்றுகிறது. மொத்தத்தில் அடுத்த தேர்தலே மோடியை மையமாகக் கொண்டதாக, ஆக்கப்பூர்வமானதாக மாறி இருக்கிறது.

அதாவது அடுத்து வரும் தேர்தல், காங்கிரஸ் தலைமையிலான செயலற்ற அரசுக்கு எதிரானது மட்டுமல்ல; நரேந்திர மோடி என்ற- தேசத்திற்கு நம்பிக்கை ஊட்டும் தலைவனை நாட்டின் உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகவும் இருக்கிறது. ஒரு எதிர்மறையான தேர்தல் ஆக்கப்பூர்வமான வடிவம் பெற்றிருக்கிறது. மோடிக்கு நன்றி!

எந்த ஒரு தேர்தலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு அனுதாப அலையும் வீசாத பட்சத்தில் ஆட்சி மாற்றமே பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த வழக்கமான நடைமுறை இம்முறை மாறுகிறது. இந்தத் தேர்தல்-  செயலற்ற, சுயநல வடிவான, ஊழல் மலிந்த ஐ.மு.கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பும் ஒரு செயல்வீரரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வானது, நாடு முழுவதுமே ஒரு உந்துசக்தியைப்  பாய்ச்சி இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சி மேலும் வலுப்படவும், பாஜக வலிமையாக உள்ள மாநிலங்களில் அதிகமான வெற்றிகளை ஈட்டவும் மோடி தலைமை கண்டிப்பாக உதவும்.

பாஜகவின் இப்போதைய கூட்டணிக் கட்சிகளான அகாலிதளம், சிவசேனா இரண்டுமே மோடி தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. மேலும் சில கட்சிகள் அக்டோபர் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர உள்ளன. பாஜக-வுடன் ஊடல் கொண்டு பிரிந்து சென்ற எடியூரப்பா, பாபுலால் மராண்டி போன்றவர்கள் தாய்க் கட்சியில் ஐக்கியமாகும் வாய்ப்பையும் மோடி தேர்வு உருவாக்கி இருக்கிறது. மதச்சார்பின்மை பேசி கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதளம் பிகாரிலேயே கடும் தோல்வியைக் காணும் நிலை உருவாகி இருக்கிறது. இன்னமும் பல மாற்றங்களை வரக்கூடிய மாதங்களில் காணலாம்.

நாடு முழுவதும் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் இருந்து தமிழகம் மட்டும் தப்பிவிட முடியுமா,  என்ன? மோடி என்ற காரணியால் தமிழகத்தில் பாஜக-வின் வாக்குவங்கி அதிகரித்திருப்பதாக, பாஜக-வை விஷமாக வெறுக்கும் சில ஊடகவாலாக்களே கருத்துக் கணிப்பு செய்திகளை வெளியிடத் துவங்கிவிட்டனர். தமிழகத்தில் பல்லாண்டுகளாக இருந்துவரும் இரு கழக அரசியலால் விரக்தி அடைந்த பலரும் புதிய மாற்றத்திற்காக ஏங்குவதை இந்தக் கணிப்புகள் காட்டுகின்றன.

திமுக, அதிமுக என்ற இரு துருவங்களிடையே பந்தாடப்படும் களமாகவே தமிழக அரசியல் இருந்து வந்திருக்கிறது. அதனை மாற்றும் அற்புதமான வாய்ப்பு பாஜகவுக்கு இம்முறை கிடைத்திருக்கிறது. நரேந்திர மோடி என்ற பெயர் இடம் பெறாத நாளிதழ்ப் பக்கங்கள் இல்லை என்ற நிலைமையை தமிழகத்தில் இப்போதே காண முடிகிறது. ஆதரவோ, எதிர்ப்போ, மோடி குறித்த செய்தி தான் இப்போதைக்கு உச்சபட்ச செய்தி.

tn_vote_bjp_2

குஜராத் மாநிலத்தில் அவர் நிகழ்த்திக் காட்டிய ஆட்சியின் அற்புதக் காட்சிகளால் விளைந்த நன்மை இது. மிகை மின்சார மாநிலம், விவசாயிகளுக்கு தடையற்ற பாசன வசதி, மாநிலத்திற்குள் நதிநீர் இணைப்பு, அற்புதமான முன்னோடி நலத் திட்டங்கள், வெளிப்படையான -ஊழலற்ற நிர்வாகம், ஆட்சியில் அரசியல் தலையீடின்மை, யாரும் சந்திக்க முடியக் கூடிய எளிமை, பாரபட்சமற்ற ஆட்சி- போன்ற குஜராத்தின் அனைத்து நல்லம்சங்களும், தமிழக மக்கள் கனவில் மட்டுமே காணக் கூடியவை. எனவே தான் தமிழகத்தில் மோடிக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக தலைமையில் புத்தெழுச்சி மிகுந்த ஓர் அரசியல் அணியை உருவாக்க வேண்டும். அதற்கு மோடியின் தனியாளுமை நிச்சயமாக உதவும். இரு கழகங்களுக்கு மாற்றாகவும், ஊழல் மிகுந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் ஓர் நன்னம்பிக்கை அணியை உருவாக்கும் கடமை பாஜகவுக்கு உண்டு.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த மதிமுக, பாமக ஆகியவற்றை அணியில் சேர்ப்பதில் பாஜகவுக்கு சிரமம் இருக்காது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக- இரு கழகங்களிடமிருந்து வேறுபட்டு நிற்க விரும்பும் என்பதால் அக்கட்சியையும் அரவணைப்பது பாஜகவுக்கு எளிது.

இந்த 4 கட்சிகளும், இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்படும் நிலை உருவாகும். இந்திய ஜனநாயகக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கமும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு துணையாக நிற்கும்.

ஊழல் கூட்டாளிகளான காங்கிரஸ், திமுக அணியை எதிர்க்கும் தார்மிகப் பேராற்றல், அதிமுக தலைமையிலான ஆளும் கட்சிக் கூட்டணியை விட, மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக்கே தமிழகத்தில் அதிகமாக இருக்கும்.

பாஜகவின் நண்பரும் ஜெயலலிதாவின் ஆலோசகருமான துகளக் ஆசிரியர் சோ.ராமசாமி அதிமுக- பாஜக கூட்டணிக்கு முயற்சிக்கக் கூடும். அந்த வலையில் சிக்காமல் இருப்பது, பாஜகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நல்லது.

(தொடரும்)

.

மோடியை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு!

-மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

PonAarசென்னை, செப். 18:  தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் நரேந்திர மோடியின் திருச்சி வருகையை எதிர்பார்த்துள்ளனர். அதுகுறித்து எங்களிடம் பேசியும் வருகின்றனர் என்று கூறியுள்ளார், பாஜக-வின்  தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார். பாஜக தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

மோடியின் வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதால் பாஜக-வினர் மிகவும் உற்சாகத்துடன் மாநாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் திருச்சி -ஜி கார்னர் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியேற்றி பேசுவதுபோல வடிமைக்கப்பட உள்ளது. மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மோடியின் வருகையை எதிர்பார்த்துள்ளனர். அதுகுறித்து எங்களிடம் பேசியும் வருகின்றனர்.

மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார்  ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ.  10 நுழைவுக் கட்டணம் செலுத்தி, மாநாட்டில்  பங்கேற்கலாம்.

நுழைவுக் கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே மாநாட்டில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக மாநாட்டு அரங்கில் 200-க்கும் அதிகமான கவுன்டர்கள் அமைக்கப்படும். கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் அமர இருக்கைகள் போடப்படும். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக 500-க்கு மேற்பட்ட பாஜக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,  தேசிய இளைஞரணித் தலைவர் அனுராக்சிங் தாகூர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

நன்றி: தினமணி (19.09.2013)

22 Replies to “தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2”

 1. சுதந்திரப் போராட்ட கால காங்கிரஸ் காரர்களை உணர்ந்தவர்கள் இன்று வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குக் காங்கிரஸ் என்றதும் அந்த பழைய நாட்கள் நினைவுக்கு வரலாம். உடல் பொருள் ஆவி அனைத்தையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டு, சுதந்திரத்துக்குப் பிறகு அரசு தர விரும்பிய பென்ஷன் கூட வேண்டாம் என்று மறுத்த தியாகிகள் இருந்தார்கள். இன்று, உடுப்பது மட்டும் கதர்; உணர்வெல்லாம் காங்கிரசின் கொள்கைகளுக்கு மாறானவை. திராவிட இயக்கங்களின் தாக்கம், வன்முறையில் நம்பிக்கை, கதர் உடுத்திக் கொண்டு மது அருந்தும் கொடுமை, நாட்டு நலனில் அக்கறை இல்லாமல் சுயநலம் மட்டுமே கொண்ட கூட்டம் இன்றும் மக்களை அந்த நாட்களைப் போல படிக்காதவர்கள் என்ற எண்ணத்தில் பொய்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டு, பொல்லாங்கு பேசிக்கொண்டு, ஜாதி வெறியைத் தூண்டிக்கொண்டு பதவி வேட்டைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். யார் தருமன், யார் சகுனி என்பதெல்லாம் தெரிந்து கொண்டு விட்டார்கள். வருகிறது 2014. சரியான பாடம், 1977ஐக் காட்டிலும் கடுமையான பாடம் கற்றுத்தர வேண்டும். தமிழ் மக்களே தயாரா? அப்படியானால் திருச்சிக்கு வாருங்கள். அங்கு சூரியன் உதிக்கப் போகிறது. தமிழகம் ஒளிரப்போகிறது.

 2. தமிழ் நாட்டில் எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் ஆனால் தி மு க வுடன் மட்டும் வேண்டாம். இதைப் படிக்கும் அத்தனை பா ஜ க தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து அந்த விபரீத முடிவுக்கு மட்டும் சென்று விடாதீர்கள். அதற்குப் பதிலாக தோற்கலாம், எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம் ஆனால் தி மு க வுடன் மட்டும் கூட்டு வேண்டாம் இதை அனைத்து தலைவர்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.

 3. நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை இந்த நாடு காண போகிறது. அது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடக்கும். ஊழல் இல்லாத நேர்மையான ஒரு ஆட்சியை மக்கள் எதிபார்க்கிறார்கள். அதை செய்வார்கள்.

 4. 1. 18 வயது முடிந்து இன்னும் வாக்குரிமை பெறாத அணைத்து இளைஞர்களையும் (YOUTHS ) அணுகி வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெற தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அந்தந்த ஊர்களில் இருக்கும் பிஜேபி நிர்வாகிகள் உடனடியாக எடுக்கவேண்டும். இதற்கு “இளந்தாமரை” மாநாடு முடிந்த உடன் தமிழக பிஜேபி தன கட்சி நிர்வாகிகளுக்கு instructions கொடுக்கவேண்டும்

  2. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் அன்பர்களே! இங்கே பாருங்கள்.
  அரசியல் ஒரு துர்நாற்றம் வீசும் சாக்கடை
  ஆனால் பிஜேபி அதில் மலர்ந்த பூக்கடை.
  தேவி வீற்றிருப்பது வெள்ளை தாமரை
  தேசம் நம்பியிருப்பது பிஜேபி தாமரை
  அன்பர்களே நண்பர்களே வாருங்கள் கரம் சேர்ப்போம்.
  அன்னை சோனியாவின் கனவுகளை கருவறுப்போம்
  2014 மே மாதம் தாமரை மலரும்
  ஏழைகள் சிந்திய கண்ணீர் உலரும்
  காங்கிரஸ்காரன் சட்டை மட்டுமே கதர்
  அவன் மனசில் உள்ளதனைத்தும் பதர்.
  அன்று வாழ்ந்தோர் நாட்டுக்கு உழைத்த தியாகிகள்
  இன்று வாழ்வோர் கதர் சொக்கா போட்ட துரோகிகள்.

  3. திரு விஸ்வாமித்திரா சொல்வது போல திமுக்வுடன் கூட்டணி வேண்டாம். அதே போல திரு சேக்கிழார் (தன கட்டுரையில்) கூறுவது போல அதிமுகவும் வேண்டாம் They are the two sides of the same coin

 5. விஜயகாந்தால் தொல்லைதான். அவ்ர் அரசியலில் பக்குவமில்லை. திமுக பச்சோந்தி.அதிமுகவின் ஜெ நம்பத்தகுந்தவர் அல்ல. வைகோவுடன் கூட்டு வோட்டையும் வெற்றியையும் பெற்றுத்தருமா என்பது யோசிக்க வேண்டியுள்ளது. மதச்சார்பின்மை எனும் முக மூடியால் வைகோ பயன் பெற முயலலாம். போலி மதச்சார்பின்மையைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக தெளிவான பொதுக்கூட்டங்களை நடத்தவேண்டும்

 6. பாஜக தேமுதிக, மதிமுக மற்றும் பாமக கூட்டண் விரைவில் அமைந்துவிடும் என்பது அனைவரின் எதிர்பார்பாக இருக்கிறது. இந்தக்கூட்டணி அமைவதில் விஜயகாந்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்தக்கூட்டணி உருவாக இரண்டு நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவேண்டும்.
  ஒன்று காங்கிரஸ் திமுக ஆகியவற்றின் பக்கம் அவர் தாவாமல் இருக்கவேண்டும். இரண்டு திருச்சியில் மோதி ஜியைகாண திரண்டுவரும் மக்கள் அலையை கண்டு செல்வி ஜெயலலிதா பாஜகவை கூட்டணிக்கு அழைக்காமல் இருக்கவேண்டும்.
  இவை இரண்டும் நடக்காமல் இருந்தால் தமிழ அரசியலிலும் மத்திய அரசியலிலும் மாற்றும் மிக மிக உறுதி.

 7. All the very best to the public function to be addressed by Narendra Modiji. Let this be the beginning of the end of the Dravidian parties and the corrupt Congress. Hope the Tamilnadu BJP stitch in a grand alliance with MDMK, DMDK, and the PMK, which can give a good fight to the two groups lead by AIADMK and the DMK.

 8. மாற்று அணியில் திராவிட முன்னேற்ற கழகத்தை எக்காரணம் கொண்டும் இணைத்து கொள்ள வேண்டாம் என்பது தான் எங்கள் வேண்டுகோள். நன்றி.
  N.Paramasivam.

 9. பா.ம.க-வோடும் கூட்டணி வேண்டாம். வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம். அப்படி வைப்பது, தாழ்த்தப்பட்டவர்களிடையே, அவ நம்பிக்கையை விதைக்கும். அவர்களது ஆதரவு மிக மிக முக்கியம். இது அரசியல்ரீதியாக மட்டுமல்ல, மதமாற்று சக்திகளுக்கு எதிராகவும் இருக்கும்.

  மட்டுமல்லாமல், வெளிப்படையாக ‘வெட்டுவோம், குத்துவோம்’ என்று பொறுக்கி மொழி பேசியவர்களை கொண்டாடும் கும்பல் பா.ம.க கும்பல். அதை கூட்டணிக்காக சேர்ப்பது பெரும் பிழை.

  தீயை அணைக்க தண்ணீரே கிடைக்காதபோது சாக்கடையை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் பெட்ரோலை பயன்படுத்தும் விபரீதம் நிகழ்ந்துவிடக்கூடாது.

 10. விசவாமித்ரா

  “தமிழ் நாட்டில் எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் ஆனால் தி மு க வுடன் மட்டும் வேண்டாம்.”

  … என்றால் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாமா?

  கருணாநிதி இந்து மத எதிரி என்றால், ஜெயலலிதா இந்துமதத் துரோகி.
  துரோகியை விட எதிரி மேல், ஏனெனில் எதிரி எப்போது அடிப்பான் என்று எதிர்பார்த்துத் தற்காத்துக் கொள்ளலாம், ஆனால் துரோகி எதிர்பாராமல் நமக்குக் கூட இருந்தே குழி பறித்துவிடுவான். அதல பாதாளம்தான்.

  ஜெயலலிதா தன்னை நம்பிக் கூட்ட்டணி வைத்த அத்தனை கட்சிகளையும் காலம் பார்த்துக் கழுத்தறுத்திருக்கிறார் .

  வாஜ்பாயியும் அத்வானியும் சோனியாவும் ஜெயலலிதாவிடம் அவமானப் பட்டது போதாதென்று மோடியையும் அந்த லிஸ்டில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. சோ அதற்குத்தான் இப்போது ஆசைப் படுகிறார்!

  தமிழ்நாட்டில் திமுக அதிமுக இரண்டும் இல்லாத பாஜக கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு உடனடியாக இல்லாவிட்டாலும் வரும் காலத்திலாவது விடிவு காலம் கிடைக்கும். அதிமுகவுடன் கூட்டணி வைத்து இப்போது இருக்கும் அந்தப் “பொன்னான” வாய்ப்பைக் கெடுத்து விட வேண்டாம்.

  தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்று இல்லாததால்தான் மக்கள் இவர்களுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து வருகிறார்கள். மூன்றாவதாக ஒரு கட்சி முளைக்கும்போது இதுவாவது வளரவேண்டும் என்ற ஆவலில்தான் சில இடங்களில் பாமகவுக்கும், சில இடங்களில் தேமுதிகவுக்கும் அவை தனித்து நிற ஆரம்பகாலங்களில் மக்கள் ஆதரவு ஆறிலிருந்து எட்டு சதவிகிதம் வரை கிடைத்தது. அவை வளரக் கூடாது என்றுதான் இரு கழகங்களும் அவர்களிடம் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து அவற்றை மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தின, அதன் தலைமைகளும் அதற்குத் தோதாக நடந்து குட்டிச் சுவராகிப் போயின.

  பாஜகவாவது ஒரு மூன்றாவது மாற்று அணியைத் தமிழ்நாட்டில் தலைமை ஏற்று நடத்தினால், உடனடியாக இல்லாவிட்டாலும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவுகாலத்தைக் கொடுக்க முடியும்.

  இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை வெறும் திமுக எதிர்ப்பாக்கி, ஜெயலலிதா என்ற நச்சுப் பாம்புக்குப் பால் வார்க்க வேண்டாம். கடந்த காலங்களில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மத மாற்றிகளுக்கும் ஆதரவாகச் செய்த செயல்கள் ஏராளம்.

  எப்படி ஆயினும் தமிழ்நாடு கேரளம் தவிர பிற மாநிலங்களில் பாஜக நல்ல நிலையில் இருக்கிறது. மோடி அலை வீசுவதைப் பார்த்தால் 325 சீட்டுகள் வென்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. தமிழ்நாட்டில் கூட பாஜக மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளை வைத்துத் தனியாகக் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணி பத்து பனிரெண்டு சீட்டுகள் வரை வெராலும் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்க சோவின் பேச்சைக் கேட்டு மோசம் போய்விடக் கூடாது.

 11. The people in between 50 to 70 age group people are in 25% of over Tamil Nadu likes diravida kalakangal, Congress and Communist. Below 50 to 40 age group of Tamil Nadu people is 40 %.This people want to change the Present Govt (Congress). Over Below 40 to 20 age group of people 35% Educated(Students,workers,Engineers,Doctors,Lowers,). This people want Modi.
  BJP should not take alliance with DMK ,ADMK,MDMK and DMTK. Overall India Modi having lot of chance for change the government. BJP should take right alliance for changing the government

 12. மோடி இந்திய பிரதமராகும் அந்த நல்ல நாளை ஆவலுடன் எதிர்பார்துகொண்டிருகிறோம் .

 13. திமுகவுடன் கூட்டணி வர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

 14. இன்று நாம் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டும் தன்மை உள்ள ஒரே தலைவன் நம் மோடி அவர்கள் மட்டுமே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆதலால் இந்த தேர்தலில் பிஜேபியின் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு நம் தேசத்தை அந்நிய சக்திகளிடம் இருந்து பாதுகாப்போம்.

 15. அன்புள்ள ஜெகதீசன் அவர்களே,

  தாங்கள் சொல்வது படிக்க நன்றாக இருந்தாலும் நடைமுறை என்ன என்பதை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள். தமிழகத்தில் திமுகவுடன் சேர்வது தற்கொலைக்கு ஒப்பானது. அதிமுக அம்மா அவர்கள் பாஜகவை பக்கத்தில் கூட சேர்க்கமாட்டார்கள். எப்படியாவது 40 தொகுதிகளையும் கைப்பற்றி , அம்மா அவர்களே பிரதமர் ஆகவேண்டும் என்பது அவர்கள் கட்சிக்காரர்கள் உட்பட பலரின் எதிர்பார்ப்பு. எனவே, விஜயகாந்த் ( இதுவரை ஆட்சிக்கு வந்து ஊழல் செய்யாதவர்) வைகோ, ( நல்ல பேச்சாளர்- திமுகவில் நீண்டகாலம் இருந்தவர் என்றபோதும் தில்லுமுல்லு பேர்வழி அல்ல ) ஆகியோருடன் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து , 2014- மே மாத தேர்தலில் போட்டியிட்டு, தமிழருவி மணியன் போன்ற நடுநிலையான பேச்சாளர்களையும் துணைக்கொண்டு பிரச்சாரம் செய்தால் , 40-லே நிச்சயம் 12 முதல் 15 வரையிலான இடங்களை வெல்ல முடியும். அதுவே மிகப்பெரிய வெற்றியாகிவிடும். ஏனெனில் இது பாராளுமன்ற தேர்தல். அதனை விட்டுவிட்டு, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி என்ற சிந்தனை பாஜகவுக்கு வந்தால் அது முழு தற்கொலை தான். சட்டசபை தேர்தலுக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் காண்பித்து முறையே எம் ஜி ஆருக்கும், இந்திரா காங்கிரசுக்கும் வாக்களித்து , 1980- தேர்தல்களில் 4 மாத இடைவெளிக்குள்ளேயே ஜனநாயக புரட்சி செய்தவர்கள் தமிழ் நாட்டு வாக்காளர்கள். பாஜக மத்தியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தால் , தமிழகத்திலும் எதிர்காலத்தில் பெரிய கட்சியாக வளரும்.

 16. பொன்.முத்துக்குமார் கோரிக்கை நிச்சயம் நிராகரிக்கப்படும்
  வாக்குவங்கிக்காக ஹரிஜனங்களைக் கொன்றாலும்,உடமைகளை சூறையாடினாலும் பெரிய விஷயமில்லை.டாக்டரின் ஒரே லட்சியம் மகனுக்கு மத்திய அரசில் சம்பாதிக்க நல்லசெல்வாக்கான மந்திரிபதவி.

  எளிய குடும்பத்தைச்சார்ந்த மோடியின் சுயனலமின்மையும், நிர்வாகத்திறனிலாலும் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் மகோன்னதமான மனிதர் வி.ஆர்.கிருஷ்னைய்யர்,மகோன்னதமான மனுஷி மது கிஷ்வர் ஆகிய இருவரின் பரிந்துரையால் முற்போக்கு முகாமில் உள்ள ஆயிரக்கணக்கானோரும் மோடியின் பக்கம் சாய்ந்துள்ளனர்.மனிதர்களை மனிதர்களாக மதிக்காத சனாதனக்குப்பைக்கொள்கைகளையும் ,நடைமுரைகளையும் விட்டொழியுங்கள்.
  ஜெயித்தால் போதும் என்று பாமக,தேமுதிக,காந்தியை அழித்துக்கொண்டு ,நல்ல வே ளையாக ஒழிந்து தொலைந்த விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் மணியன் இவர்களின் உதவியால் தேர்தலில் வெல்லலாம் என்ற கனவை இன்றே தொலையுங்கள்.

  (Edited and published)

 17. இந்த வலைதளத்தில் முன்பை காட்டிலும் தற்போது நிறைய நண்பர்கள் மறுமொழி எழுத முனைந்துள்ளனர் இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.இவர்கள் அனைவரும் தங்களது உறவினர், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று அனைவருக்கும் “தமிழ் ஹிந்து” பற்றி கூறி அதனை தவறாமல் பார்க்க சொல்லுங்கள் மேலும் முடிந்தால் மறுமொழி எழுத சொல்லுங்கள். இதில் வரும் கட்டுரைகளை அவர்கள் படித்தால் உண்மை நிலைகளை உணர்ந்து மனம் மாறுவர் என்பது என எண்ணம். பின் அவர்கள் மோடி ஆதரவாளர்களாக மாறுவர் என்பது திண்ணம்.

  தமிழ் ஹிந்து வலை தளத்தினருக்கு ஒரு வேண்டுகோள்: தேர்தல் முடியும் வரை அரசியல் அல்லாத ஆன்மிக கட்டுரைகளை “தற்காலிகமாக” நிறுத்தி வைத்து தேர்தல் முடிந்ததும் முழுக்க முழுக்க ஆன்மிக கட்டுரைகளையே அன்றாடம் வெளியிடலாம் Political Joker லாலுவின் ஊழலுக்கு கிடைத்த கோர்ட்டின் தீர்ப்பு, மற்றும் மாற்று கட்சியினர் மோடி அல்லது பிஜேபி மீது சுமத்தும் வீண் குற்றச்சாட்டுகளுக்கு சுடச்சுட பதில அளிக்கும் வகையில் கட்டுரைகள் எழுதிகொண்டே இருக்கவேண்டும். கட்டுரையை படிக்கும் நண்பர்கள் மோடியை விட்டு விலகாமல் இருப்பார்கள்.தேர்தல் வெற்றிக்காக இது ஒரு “விரதம்” என்று கொள்ளலாமே அன்றி எனது கோரிக்கை ஆன்மிகத்திற்கு “விரோதம்” அல்ல. இது இந்த வலைதளத்தினர் காதுகளில் விழுமா.அல்லது மறுமொழி எழுதும் நண்பர்களிடமிருந்து எனக்கெதிராக கேள்வி கணைகள் எழுமா? நானறியேன்.

  ////பொன் முத்துகுமார் கோரிக்கை நிராகரிக்கப்படும்//////// பொன் முத்துகுமார் கூறிய கருத்தும் msthamizhan என்ற நண்பரின் கருத்தும் (டாக்டரின் ஒரே லட்சியம்……………………………………..மந்திரி பதவி) ஒரே மாதிரியாக உள்ளபோது அவரின் கோரிக்கை “””நிராகரிக்கப்படும்””” என்று கூறுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை.தமிழருவி மணியன் ஒரு விடுதலை புலி ஆதரவாளர் என்பதை நான் கடுமையாக மறுக்கிறேன். அவர் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபிறகுதான் இலங்கை தமிழர்களுக்கு(கவனிக்கவும் விடுதலைபுலிகளுக்கு அல்ல) ஆதரவாக பேச துவங்கினார். அந்த மனித படுகொலைகளை பார்த்த பிறகும் ஒருவர் வாய் மூடி மௌனியாக இருந்தால் அவர் மனித பிறவிக்கே லாயக்கில்லாதவர். தமிழ் நாட்டில் 95% நேர்மையான அரசியல்வாதி அவர் ஒருவர்தான். அவர் எடுத்துள்ள முயற்சியை பாராட்ட வேண்டும். ஆனால் அதில் பாமக வேண்டாம். என்ற பொன் முத்துகுமார் என்பவற்றின் கருத்து நல்லது. பாமகவின் சமீபத்திய செயல்பாடுகள் பேச்சுகள்தான் மக்களிடம் அதன் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கிவிட்டது.

  //////மனிதர்களைமனிதர்களாக…………………………………………….விட்டொழியுங்கள்/////////
  இது ஏற்றுகொள்ளகூடிய வாதம். அவற்றை விட்டொழித்து விட்டால் அப்புறம் பிரச்சனையே இல்லை. நாட்டில் சாதி ஒழியும் நீதி நிரம்பி வழியும் இந்து மதம் மீது விழாது எந்த பழியும் இல்லை எனில் விரைவில் அம்மதம் அழியும்.(தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்த இரு பிரிவினர்க்கும் ஏற்பட்ட ஒற்றுமை போல அணைத்து ஊர்களிலும் அணைத்து விஷயங்களிலும் சமூக ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் அப்புறம் என்ன பிரச்சனை இருக்கிறது?)

 18. திரு மோடி தலைமைலான் நல்லாட்சி மலர எல்லாம்வல்ல அண்ணாமளையையரை பிரார்த்திக்கிறேன்

 19. 2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
  குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.
  2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
  2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.
  நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
  ‘ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை பொருளாதார சுதந்திரம்தான், இது இல்லாவிட்டால், பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது’ என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சிக் கண்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியில் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். மேலும், அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

 20. தமிழகத்தில் பா.ஜ.க. இரண்டு கழகங்களுடனுமே கூட்டு சேரக்கூடாது.ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே நின்று பலத்தை சோதித்த பா.ஜ.வை, மோடி ஜுரத்தில் நாடே குலுங்கும் இந்த நேரத்தில், ‘மரம் பழுத்தால் வவ்வாலை வா என்று இரைந்தழைப்பார் யாருமுண்டோ? என்பதற்கேற்ப, கூட்டணிக்கரம் பிடிக்க ஒவ்வொரு கட்சியும் துடிக்கும்.
  இதில்,தீவிர நாத்திகம், சந்தர்பவாதம், ஊழல் என முக்கண் வழியே வாக்களர்களை நோக்கும், இந்துக்களை எள்ளிநகையாடும், இந்துமனங்களை புண்படுத்தும், குறுகிய எண்ணம் கொண்ட தி,மு,க-வை இந்துக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள், எனவே தி.மு.க வேண்டாம்.
  — தீர்கமான முடிவு எடுப்பவர் என்றாலும், தலைக்கனம், கூட்டணிக்கட்சிகளை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என அவமதிக்கும் அ.தி.மு.க-வும் வேண்டாம்.
  — கழகங்கள் அளவிற்கு மேடைப் பேச்சாளர்கள் இல்லாக்குறையை நீக்கிட சரத்குமாரையும், சிறந்த பேச்சாளர், ஊழலற்றவர், நேர்மையான அரசியல்வாதி, மக்களைக்கவரும் தன்மை உடையவர் என்பதால் வை.கோ-வையும், கட்சிதொடங்கினால் எங்களுடன் கூட்டணி சேர வாருங்கள் என முன்பதிவு செய்தோம் என்ற உரிமையில் விஜயகாந்தையும், வன்முறையைக் கழித்துப்பார்த்தால் நல்ல கொள்கைகளை உடைய கட்சி என்பதால் பா.ம.க-வையும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்குடைய, உறவு சொல்லி உரிமை கொண்டாடும் மக்களை உடைய கொ.மு.க-வையும் கூட்டணியில் இணைத்துக்கொள்ளலாம்.
  இதில் எதுவுமே இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
  இதுபோல் நாடு முழுவதும் கூட்டணி அமைத்து, ஒருவேளை தோற்றுவிட்டால்கூட கௌரவமாக இருக்கும். ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தகுதியற்றவர்களுடன் கூட்டணி அமைத்தால், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கும் மோடி அவமானத்தையே சந்திக்கவேண்டி வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *