அத்தி மரத்தடியில்..

நேற்று இந்த பிரம்மாண்டமான அத்தி மரத்தைப் பார்த்தேன். அதன் நிழலில் நின்று உளம் பூரித்தேன். பெங்களூரின் பசவனகுடி பகுதியில் உள்ள அழகான, விசாலமான சிருங்கேரி மட ஆலய வளாகத்தில் ஆதி சங்கரர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ளது இந்தப் பெருமரம். அத்திமரம் தான் என்று நிச்சயித்துக் கொள்வதற்காக பக்கத்தில் இருந்த கன்னடப் பெண்மணியிடம் மரத்தின் பெயரென்ன என்று கேட்டேன். “உதும்பரா” என்றார். அத்திக்கான சம்ஸ்கிருதப் பெயர், கன்னடத்திலும் அதே தான் போலிருக்கிறது.

aththi-maram

நியக்ரோதோதும்பரோஸ்வத்த: என்ற விஷ்ணு சகஸ்ரநாம வரி உடனே மனதில் எழுந்தது. நியக்ரோத (nyagrodha), உதும்பர (udumbara), அஸ்வத்த (ashwattha) – ஆல், அத்தி, அரசு. இந்த மூன்றுமே மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு வந்துள்ளன. விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் இந்த மூன்று மரங்களின் பெயர்களும் அடுத்தடுத்து வருவது ஒரு சிறப்பு.

கர்ப்பவதிகளின் எட்டாம் மாதத்தில் நடக்கும் சீமந்தம் என்ற வைதிக சடங்கில் அத்திமொட்டு, ஆலமொட்டு, அரசமொட்டு மூன்றையும் பிழிந்து கணவன் கருவுற்றிருக்கும் மனைவியில் மூக்கில் ஊற்றவேண்டும் என்பது மரபு. நானும் இந்த சடங்கை செய்திருக்கிறேன். இந்த மலர்ச்சாறு ஒரு மூலிகை போல, உள்ளிருக்கும் கருவுக்கு இவை சக்தியளிக்கும் என்ற விளக்கம் தரப்பட்டது.

அந்த மரத்தடியில் நிற்கும்போது, இந்த மரங்களின் மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. என்ன அது? இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப் பருவங்களின் (fig) அடியில் மறைந்து கிடக்கிறது. “அத்தி பூத்தாற்போல” என்பது வழக்கு. ஹிந்தியிலும் goolar kaa phool என்று இதே போல, அபூர்வத்தைக் குறிப்பதற்காக சொல்வார்கள். கருவுக்குள் உயிர் யாருக்கும் தெரியாமல் குகையில் வளரும் கனல் போல வளர்கிறது, குழந்தையாக அது வெளிப்படும்போது (manifest) தான் நாம் அதைக் காணமுடிகிறது. இந்த மரங்களின் மலர்தலும் கனிதலும் சிருஷ்டியின் மகா ரகசியத்தின் குறியீடுகளோ? இருக்கலாம்.

பெரும்பாலும் தத்தாத்ரேயர் கோயில்களில் எல்லாம் உதும்பர மரம் இருக்குமே நீங்க பார்த்திருக்கலாம் என்றார் அந்தப் பெண்மணி. அரசமரத்தைப் போன்றே அத்தியும் ஞானத்தின் அடையாளம் போலும். புத்த மதத்திலும் இந்த மூன்று மரங்களும் புனிதமானவையாகக் கருதப் படுகின்றன.

worship_tree1நெடியோனாகிய திருமால் குறளாக, வாமனனாக அவதரித்ததை, “ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்” என்கிறான் கம்பன். “ஆலமும் வித்து ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்றும் பிரகலாதன் வாக்காக இதையே குறிப்பிடுகிறான்.

சாந்தோக்ய உபநிஷதத்தில், புகழ்பெற்ற சுவேதகேது உரையாடலில் வருவது அத்திப் பழம் என்று தான் நினைத்திருந்தேன் – “துகள்போன்று சிறிய விதைகள்” என்பதை வைத்து. ஆனால் மூலத்தில் “நியக்ரோத” என்று தான் இருக்கிறது. எனவே அது பெரும்பாலும் ஆலம்பழமாக இருக்கக் கூடும்.

சங்கரரின் திருச்சன்னிதியில், அந்த மரத்தடியில் நிற்கையில் அந்த உரையாடலை மனதில் மீட்டத் தொடங்கினேன். சிலிர்த்தேன்.

இந்த மண்ணின் மீது காலகாலமாக நின்றுகொண்டிருக்கும் பெருமரங்களே, ஒப்பற்ற மெய்ஞானமெனும் ஆயிரமாயிரம் விதைகள் உறங்கும் மகா விருட்சங்களே, உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

******

இந்த மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.

இதோ ஐயா.

இதை உடை.

உடைத்துவிட்டேன் ஐயா.

அதில் என்ன காண்கிறாய்?

துகள்கள் போன்று சிறிய விதைகள், ஐயா.

அவற்றில் ஒன்றை உடை.

உடைத்துவிட்டேன் ஐயா.

அங்கு என்ன காண்கிறாய்?

ஒன்றுமில்லை ஐயா.

அவர் சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது.

சிரத்தை கொள், அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

இந்த உபநிஷத அத்தியாயம் முழுவதையும் முன்பு நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இங்கே வாசிக்கலாம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

3 Replies to “அத்தி மரத்தடியில்..”

 1. அபூர்வமாகப் பூப்பது அத்தி.

  தமிழ் மற்றும் ஹிந்தி மொழி வழியாக அத்திப்பூவின் அபூர்வத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்.

  கருத்தொற்றுமை ஒரே தேசத்தில் புழங்கும் மொழிகளில் மட்டுமல்ல. சமயங்களிலும் காணக்கிட்டும் விஷயம்.

  மஹாயான சூத்ரங்களில் ப்ராபல்யமான ஸத்தர்ம புண்டரீக ஸூத்ரம் (Lotus sutra) எனும் சூத்ரத்தில் இந்த ஔதும்பர புஷ்பம் பற்றிய குறிப்பு வருகிறது சூத்ரத்தின் இரண்டாம் பாகத்தில். (நன்றி விக்கிபீடியா). அபூர்வம் என்ற கருத்தைப் பகிர வேண்டிய இடங்களில் இந்த புஷ்பத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.

  तद्यथापि नाम शारिपुत्र उदुम्बरपुष्पं कदाचित् कर्हिचित् संदृश्यते, एवमेव शारिपुत्र तथागतोऽपि कदाचित् कर्हिचित् एवंरूपां धर्मदेशनां कथयति।

  தத்யதாபி நாம சாரிபுத்ர உதும்பர புஷ்பம் கதாசித் கர்ஹிசித் ஸந்த்ருச்யதே, ஏவமேவ சாரிபுத்ர ததாகத: அபி கதாசித் கர்ஹிசித் ஏவம்ரூபாம் தர்மதேசானாம் கதயதி. (37)

  The Buddha told Shariputra, “A wonderful Dharma such as this is spoken only occasionally by the Buddhas, the Thus Come Ones, just as the udumbara flower appears but once in a great while.”

  औदुम्बरं पुष्प यथैव दुर्लभं
  ஔதும்பரம் புஷ்ப யதைவ துர்லபம்
  कदाचि कहिंचि कथंचि दृश्यते।
  கதாசி கஹிஞ்சி கதஞ்சி த்ருச்யதே
  मनोज्ञरूपं च जनस्य तद्भवे-
  மனோக்ஞரூபம் ச ஜனஸ்ய தத்பவேத்
  दाश्चर्यु लोकस्य सदेवकस्य॥१३७॥
  ஆஸ்சர்யு லோகஸ்ய ஸதேவகஸ்ய

  It is like the udumbara flower,
  Which all love and enjoy,
  Seldom seen by gods and men,
  Appearing but once in [long] periods.

 2. கிருஷ்ணகுமார் ஐயா, மஹாயான சூத்ரங்கள் பற்றிய குறிப்புகளுக்கு மிக்க நன்றி. மிக அழகான சுலோகங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *