இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான  சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது. மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து, பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  அத்தியாவசியப் பணியாகும்.

இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில், பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம், பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம்  தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.Indian economy

காலனி ஆதிக்கக் காலத்தில் தான் இந்தியாஉள்ளிட்ட பல பொருளாதாரங்கள் பெரும் சிதைவுகளுக்கு உள்ளாயின.  எனவே பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே  இந்தியப் பொருளாதாரம் பெருமளவு நசிந்து போனது. அதனால் சுதந்திரம்  வாங்கும் முன்னரே  மிகவும் ஏழை நாடாக ஆகியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்கள் கடுமையாக உழைக்கத் தொடங்கினர். பலவிதமான சிரமங்களுக்கிடையிலும் முடிந்த வரை அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொண்டனர். வெவ்வேறு  புதிய தொழில்களில் நுழைந்தனர்.

இந்தியக் கலாசாரத்தில் நமது நாட்டுக்கெனப் பல தனித்தன்மைகள் உள்ளன. அவையே பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக அமைகின்றன. நம்முடைய குடும்ப அமைப்பு, எளிய வாழ்க்கை முறை, சேமிக்கும் குணம், உறவுகள் சார்ந்த வாழ்க்கை,  தொழில் முனையும் தன்மை எனப் பாரம்பரியமான குணங்கள் பலவும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலேயே  அமைந்துள்ளன.

இந்தத் தன்மைகளால் மக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து, தங்களின் குடும்பங்கள் முன்னேற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதனால் நாட்டின் சேமிப்புகள் மொத்த பொருளாதார உற்பத்தியில்  கடந்த சில வருடங்களாக முப்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கின்ற உந்துதலால், மக்கள் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.  எனவே உலகின் பணக்கார நாடுகளை விட சொந்தத் தொழில் செய்பவர்கள் நமது நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளனர்.

இந்தியாவில் எட்டரை கோடி பேர் தொழில் முனைவோராக உள்ளதாக லண்டன் மேலாண்மை நிறுவனம்  சொல்கிறது.  இது உலக அளவில் அதிகமானதாகும்.  அப்படித் தான் நாடு முழுவதும் பல விதமான சிறு, குறு மட்டும் நடுத்தரத் தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் உதவிகள் அதிகமின்றி நடத்தப்படுபவை.

அதனால் தான் அரசுகளின் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் பலவிதமான குறைபாடுகள் இருந்த போதும், இந்தியப் பொருளாதாரம் சமூகங்களால் பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பலன்களைப் பெறும் வகையில் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை அரசாங்கங்கள்  வகுக்கத் தவறிவரும் போதும், நாடு முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஆகையால் சுதந்திரம் பெற்று ஒரு அறுபது வருட காலத்தில் இந்தியா உலக அளவில் ஒரு முன்னணிப் பொருளாதாரமாக மாறியது. மேலும் எதிர்காலத்தில் உலக அளவில் மிக அதிகமாக வளருவதற்கு வாய்ப்புகள் நிறைந்த இரண்டு நாடுகளில் ஒன்றாக இருக்கும் என நிபுணர்களால் ஒருமனதாகக் கணிக்கப்படுகிறது.Indian economy2

சென்ற 2008 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் தோன்றிய நிதி நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்தது.  அதனால் உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அவற்றில் பல நாடுகள் இன்று வரைக்கும் சிரமங்களிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. உலகின் பல நாடுகளையும் சிரமப்படுத்திய அந்த நெருக்கடிகளால் அதிக   பாதிப்புகள் இல்லாமல்  செயல்பட்டு வந்த நாடுகளில் முக்கியமானதாக இந்தியா உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் இருபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே உலகின் கவனத்தை அதிகமாக ஈர்க்கத் தொடங்கின. இந்தியாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேற்கத்திய நிபுணர்கள், உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் , சர்வதேச அளவில் புகழ் பெற்ற  பல்கலைக்கழகங்கள் எனப் பல பிரிவினரும் முயற்சிகளை  மேற்கொண்டனர். அதனால் இந்தியப் பொருளாதாரம், அதன் வலிமைகள், அவற்றால்  நாட்டுக்குள்ள வாய்ப்புக்கள் ஆகியவை பற்றி விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. எனவே சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

அந்தக் காலகட்டங்களில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பங்கு பெறுவதும் அதிகரித்தது. அதிகம் படிக்காத மக்களால் நடத்தப்படும் திருப்பூர்,  சூரத் போன்ற பல இந்தியத் தொழில் மையங்கள் உலக அளவில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி நாட்டுக்குப் பெயர் சேர்த்தன. கூடவே அமெரிக்காவின் கணினித்  துறையில் இந்திய இளைஞர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

அப்போதிருந்த வாஜ்பாய் அரசு  ‘தங்க நாற்கரச் சாலை’  போன்ற திட்டங்கள் மூலம் கட்டுமானத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆகையால் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தன. பொருளாதாரச் செயல்பாடுகள் தீவிரமடைந்தன. அரசுக் கணக்கில் வழக்கமாக வருடாவருடம் தொடர்ந்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்குப் பதிலாக, 1970களுக்குப் பின்  முதன்முறையாக,  2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் உபரித்தொகை ஏற்பட்டது. எனவே சுதந்திரத்துக்கு அப்புறம் முதல்தடவையாக நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கையும் பெருமித உணர்வுகளும் ஏற்படத் தொடங்கின.

பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக எட்டு விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. வெவ்வேறு மட்டத்திலும் தொழில் செய்தவர்களுக்கு மேலும் வளர புதிய வாய்ப்புகள் தென்பட்டன. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் குறித்து உலகின் பல இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருந்த   இளைஞர்களுக்கு  வாய்ப்புகள் பெருகி எதிர்காலம் குறித்து எப்போதுமில்லாத உற்சாகம் தோன்றியது.Indian economy3

அதனால் இந்தியப் பொருளாதாரம் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரித்து உலக அளவில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக வருமளவு வேகமாகச் சென்றது.  தங்களின் பொருளாதார வழிமுறைகள் தான் மிகவும் உயர்வானது என மார்தட்டி வந்த பணக்கார நாடுகள் எல்லாம் இந்தியாவின் செயல்பாடுகளைப் பற்றி ஆச்சரியமாகப் பேச  ஆரம்பித்தன. எனவே சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒதுக்கி விட்டு எந்த நாடும் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேச முடியாத சூழ்நிலை  உருவானது.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக,  இதுவரை பத்தாண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால்,  கடந்த சில ஆண்டுகளாக நிலைமை பெருமளவு மாறி வருகிறது. அரசு மட்டங்களில் கொள்கைகளை வகுப்பதில்  பெரும் தவறுகள் நடைபெற்று வருகின்றன. வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வருடாவருடம் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் விவசாயத் துறையை விட்டு  லட்சக் கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள நமது தேசத்தில், விவசாயம் நசிந்து போனால் நாடுஎப்படி சுயசார்புடன் செயல்பட முடியும் என்பது குறித்து அரசு யோசித்ததாகக் கூடத் தெரியவில்லை.

அதிகம் பேருக்கு வாய்ப்புகளை அளிக்கக் கூடிய சிறு தொழில்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றன. இந்தியாவின் சில்லறை வணிகம் என்பது  சாதாரண மக்களால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 14 விழுக்காடு அளவு பங்களிக்கக் கூடிய மிக முக்கியமான துறை. அதில் சுமார் நான்கு கோடி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் எந்தவித அடிப்படை நியாயமும் இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பலன் பெறுவதற்காக அது திறந்து விடப்பட்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் அவை செயல்பட்டு வரும் நாடுகளில் எல்லாம் உண்டாக்கியுள்ள சீரழிவுகளைப் பார்க்கக் கூட அரசு தயாராக இல்லை.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மின்சாரம், சாலை வசதிகள், சமூக மேம்பாடு  உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்புகள் மிகவும் அவசியமாகும். அதற்காக அவற்றில் மூலதனங்களும் தொடர்ந்த கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட  வேண்டும். ஆனால் கொள்கை முடிவுகளை எடுப்பதில் பெரிய சுணக்கம் நிலவுகிறது. அதனால் லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் மதிக்கப்புள்ள திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் தவறுகளும், ஊழல்களும் நிறைந்திருப்பது வெளியாகி வருகிறது. அதனால் அரசுக்கு நியாயமாக வர வேண்டிய பல  லட்சம் கோடி ரூபாய் வருமானங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சில பேருக்குச் சென்று கொண்டிருப்பது  தெரிகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றை மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக நமது நாட்டில் அதிக அளவில் நிலக்கரி உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டியது அரசின் கடமை. அப்போது தான் பொருளாதாரம் வளர முடியும். ஆனால் தனது  தவறுகளால் அரசு அவற்றை முறையாகப்  பயன்படுத்தித் திட்டமிட முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

Indian economy4நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சம்பந்தப்பட்ட  அரசாங்கத்தின் அத்தியாவசியமான பணியாகும்.  இங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் புதியதாக உழைக்கும் வர்க்கத்தில் இணைந்து வருகின்றனர். அதில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து படித்து வருபவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் கடந்த 2004- 05 ஆம் வருடம் தொடங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மிகவும் மோசமாக உள்ளது.

1999- 2004 காலகட்டத்தில் அப்போதைய அரசு ஆறு கோடி பேருக்கு மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு  2004 முதல் 2009 வரை வெறும் இருபத்தேழு லட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக  மத்திய அரசின் மாதிரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இரண்டாவது முறை  மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை.

இந்தியப் பொருளாதாரத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கினை அளித்து வருவது சேவைத் துறையே ஆகும். கடந்த பல ஆண்டுகளாகவே அதுவே பிற துறைகளை விட வேகமாக வளர்ந்தும் வருகிறது. ஆயினும் அந்தத் துறையில் 2005 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் எண்பத்தாறு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மிகக் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளிலும் கணிசமான அளவு தற்காலிகமானவையாகவே உள்ளன.

கூடவே அரசின் நிதி நிர்வாகமும் மிகவும் மோசமாகிவிட்டது. 2004 முதல் 2013 வரையான காலகட்டத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று விட்டது.

அதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும்  சென்ற நிதியாண்டு முதல் மிகவும் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற 2012-13 ஆம்   ஆண்டில் வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக் கீழ்தான் இருக்கும் என மத்திய அரசின் புள்ளி விபர அலுவலகம் கணித்துள்ளது.

எனவே அண்மைக் காலமாக  இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தொழில் செய்பவர்கள் மூலதனங்களை  மேற்கொள்ளப் பயப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சொந்தத் தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

pm-modiஅதனால் பொதுவாக பல தரப்பு மக்களும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இந்தியா உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைப் பெற்று விளங்குகிறது. வேலை செய்வதற்குப் போதுமான மக்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி  நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசிடம் திட்டங்கள் இல்லை.

எனவே நமது (முந்தைய) ஆட்சியாளர்கள் ஒரு பெரும் வரலாற்றுத் தவறுக்குக் காரணமாக இருந்து விட்டார்கள். இந்தியா என்னும் சக்தி மிகுந்த நாட்டினுடைய முன்னேற்றம் தடைப்பட்டு நிற்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தியப் பொருளாதாரம் மேலெழுந்து வந்து கொண்டிருந்த போது, வெளிநாட்டு நிபுணர்கள்  சிலர் ஒரு பேரரசு மீண்டும் எழத் தொடங்கி விட்டது என்று காலனி ஆதிக்க காலத்துக்கு முந்தைய நமது பழைய வரலாற்றைத் தொடர்பு படுத்திக் கூறினார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கும் வகையில்  மன்மோகன் அரசின் அணுகுமுறைகள் அமைந்து விட்டன. அதனால் பொருளாதார வளர்ச்சியில்  கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. மேற்கத்திய பொருளாதாரங்களுக்குப் பிரச்னைகள் அதிகரித்து உலக அளவில் நமது நாட்டுக்கென வாய்ப்புகள் பெருகி வரும் இந்தச் சூழ்நிலையை நமது அரசு சரியாகப் பயன்படுத்தத்  தவறிவிட்டது.

இவற்றை சரிசெய்ய வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமராக புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உள்ளது.  மோடி இதை சரி செய்வார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

 

6 Replies to “இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?”

 1. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தவறான ஆட்சி முறைகளால் என்பது உண்மை

  இது வரை நம் நாட்டை அரசாண்டு மக்களுக்கோ நாட்டுக்கோ ஏதும் செய்யாமல் தங்களை வளப்படுத்திக்கொள்ளப் பாடுபட்ட கட்சிகளிடமிருந்து அவர்கள்

  அடித்திருக்கும் கோடி கோடியான பணத்தை சட்ட உதவி கொண்டு முறையாக வசூல் செய்து இந்திய அரசாங்க கஜானாவில் நிரப்பினால் ஒரளவு சரி செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

  மக்களை கவர்ச்சிகரமான பேச்சுக்களால் ஏமாற்றி அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்துவிட்டு மக்களுக்காகவோ நாட்டுக்காகவோ ஏதும் செய்யாதவர்களைப் புறக்கணிக்க வேண்டும் மக்கள்

  இனி இந்தியாவை ஆளவிருக்கும் திரு மோடி அவர்கள் இப்போதிருக்கும் நிலமையை நன்கு உணர்ந்து தன்னையும் , தன்னைச் சார்ந்த அரசியல் கட்சிகளையும் கைக்கொண்டு நாட்டை வளப்படுத்த முனையவேண்டும்

  முனைவார் என்று எதிர் பார்க்கிறேன்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. கட்டுரை மிக விரிவாக நமது நிலையை விளக்கி உள்ளது. எனது கவலை என்ன எனில், இப்போது டில்லியில் உள்ள அதிகாரிகள் பத்திரிகை களில் எழுத ஆரம்பித்து இருப்பது தான். இப்போது அவர்கள் பார்வை, சாதாரண மக்களின், LPG, petrol மற்றும் விவாசாயிகளுக்கு கொடுக்கும் மான்யம். இதனை ஒழிக்க வேண்டும் என மாறி மாறி எழுதி வருகிறார்கள். மோதி என்ன செய்வார் என பயமாக உள்ளது.

 3. Modi may be good but what about others in his would be cabinet:
  1. Sushma swaraj – dear sister to Reddy brothers who swindle our Iron ore.
  2. Arun Shourie – last NDA govt he sold many of our PSU for less than even their cash reserve or building price
  3. Arun Jaitley – power broker who is no different from Srinivasan in BCCI
  4. Luckily Pramod Mahajan – Reliance broker is dead
  5. Jaswant Singh – A royal lineage waste who will not even talk to Additional Secretary level office because it is below his dignity. Now his son will come in.
  6. Maneka Gandhi – Varun Gandhi – almost all our cities are filled with rabies dogs because MNC pharma pays this lady in millions to keep spreading dog bites and sell drugs.
  USA and Europe needs dog bite drugs but the domestic dog bites is less than 2% there, so it not profitable to produce dog bite drugs for just 2%. So keep spreading the rabies in other countries
  and give them incentive in the form 98% dog bites in Asian countries.
  7. Yaswant Singha – another Reliance broker.
  8. Vajpayee son-in-law is still roaming around in Delhi doing power deals.

  Modi needs to avoid these Corporate broker ministers and bring in RSS school-ed MPs who love this country.

  What about IAS and IPS officers? Will they change because of Modi?

  3.2 crore cases pending in Indian Courts – its because of the laziness and corruptness of Indian Judiciary that most of the criminals do crime because they know there is no Justice here.

 4. 1) Bring back the overseas investments by our corrupt Industrialists and leaders.
  2) Do once again the Land Reforms.
  3) Enforce collection of NPAs of Banks.
  4) Ruthlessly punish the Economic offenders.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *