ஆசிரியர் குழு முன்னுரை …
ஆண்டாள் வந்துதித்த ஆடி பூரமான இன்று இந்த புதிய தொடர் ’தமிழ்ஹிந்து.காம்’ இணையத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் சர்ச்சைக்குரிய தொடராக இருக்கலாம். ஆனால் தமிழ்ஹிந்து.காம் இதை சர்ச்சைக்காகவோ அல்லது பரபரப்புக்காகவோ வெளியிடவில்லை. அறிவார்ந்த விவாதத்துக்காகவும் ஆழ்ந்த உரையாடலுக்காகவும் இந்த தொடர் வெளியிடப்படுகிறது. உடலை, உடலின் இயற்கை வேட்கைகளை, இயற்கை வேட்கைகளின் மாறுபாடுகளை சாபம் என்றும் பாவம் என்றும் ஒதுக்காமல் அவற்றையும் ஆன்ம விடுதலைக்கான கருவிகளாக மாற்றிய பண்பாடு நம்முடையது. ஆன்மிகமும் ஆன்ம அறிவும் அனைவருக்குமான பொதுவுடமை. அதை எந்த குறிப்பிட்ட சமுதாயக்குழுவோ, இனக்குழுவோ அல்லது சித்தாந்த குழுவோ தன்னுடையது மட்டுமென உரிமை கொண்டாட முடியாது. இந்த குரலை எல்லா ஆன்மிக பண்பாடுகளிலும் கேட்க முடியும். இன்னும் ஒரு படி மேலே போய் அதை எந்த பாலினமும் ஆத்ம அறிவை தன்னுடையது என கூற முடியாது என்று சொல்லி அனைத்து பாலினங்களுக்கும் ஆன்ம அறிவு ஒரு அடிப்படை உரிமை என்பதை தானும் உணர்ந்து உலகுக்கும் கூறியது பாரத பண்பாடு. எனவேதான் உடல்சார்ந்த ஆன்மிகத்தை ஒரு சமுதாயத்துக்கு கொடுத்து அதனை ஒரு ஆண்டில் ஒரு மாதம் முழுவதும் சடங்கு ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் உணர வைத்த ஆண்டாள் பிறந்த ஆடி பூரத்தில் இந்த தொடரை தொடங்குவதில் தமிழ்ஹிந்து.காம் பெருமையும் பேருவகையும் அடைகிறது.
மேற்கத்திய உலகில் LGBT (Lesbian Gay Bisexual Transgender) என்கிற பெயரில் ஒரு பெரிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மேற்கிற்கே உரிய உயர்கல்வி நிறுவனங்கள் (academia) அரசு சாரா நிறுவனங்கள் (NGO) அமைப்புகள் மூலமாக இயங்குகின்றன. மேற்கத்திய வரலாற்றில் இன்று LGBT என்று அழைக்கப்படும் தன்மை/ போக்கு கொண்டவர்கள் மிக அண்மை காலங்கள் வரை வேட்டையாடி கொல்லப்பட்டார்கள். அரசு இயந்திரங்கள் -அது ஸ்டாலினோ ஹிட்லரோ- அவர்களை கொன்றொழிப்பதில் தனி சிரத்தை காட்டின. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் மேற்கத்திய உலகு முதலாளித்துவத்துக்கும் மார்க்சியத்துக்கும் மாற்றாக ‘கீழை தேய’ தத்துவங்களை கண்டடைந்த போது ஏற்பட்ட கிளர்ச்சி இயக்கங்களில்தான் இந்த LGBT விஷயங்கள் மெல்ல மெல்ல பேசப்பட்டு திரண்டு உரு கொண்டு எழுந்தன. மெதுவாக இதை ஒற்றைத்தன்மை கொண்டதாக்கி உயர்கல்வி அமைப்புகள் அலச தொடங்கின. அமெரிக்காவில் உருவான ஞானமல்லவா எனவே அதை கீழ்தேசங்களுக்கு மூன்றாம் உலக நாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டாமா? அகாடமிக்குகளும் அரசு சாரா அமைப்புகளும் பெரும் டாலர் உதவியுடன் களமிறங்கின. இருளும் அடக்குமுறையும் மட்டுமே கொண்ட மூன்றாம் உலகநாடுகளில் நசுக்கப்பட்டு வரும் LGBT சமூகத்தவருக்கு உதவ அறைகூவல் விடுத்தன. டாலர்கள் கொட்டி கிடைக்கும் டாலர்கள் – மூன்றாம் உலக நாடுகள் – இவ்வளவும் இருந்தால் மதமாற்ற அமைப்புகளுக்கு மூக்கில் வியர்க்காமல் இருக்குமா என்ன… இன்று நாம் இந்தியாவில் பார்க்கும் LGBT என்பது மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க இயக்கத்தை அப்படியே பிரதி எடுக்கும் ஒரு விசித்திரம்.
ஆனால்…
இதில் அடிபடுவதும் அழிக்கப்படுவதும் இந்த தேசத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாலினப்பன்மையை பேணி பாதுகாத்து வந்த ஒரு பண்பாட்டின் வெளிப்பாடுகள். அவற்றை அமெரிக்க LGBT அசுரத்தனமாக அழிக்கிறது. இங்கு ஏற்கனவே இந்த பாலினச்சிறுபான்மையினர் தம் உடல்சார்ந்து ஆன்மிக மரபுகளை சமுதாய உறவுகளை வளர்த்துள்ளனர். அவற்றில் கணிசமானவை ஆரோக்கியமும் அழகும் ஆழ்ந்த ஆன்மிக நலமும் உள்ளவியல் முக்கியத்துவமும் கொண்டவை. உலகமெங்கும் சிறுமைப்படுத்தப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட வேட்டையாடப்பட்ட அந்த பாலின சிறுபான்மையினர் இங்கு மட்டும்தான் தமக்கென கோவில்கள் தமக்கென தெய்வங்கள் தம் உயர்வை உறுதி செய்யும் சமூக அங்கீகாரங்கள் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் அவை எல்லாம் காணாமல் போகின்றன. அவற்றை காப்பாற்றுவது யார்? ஒரு புறம் அமெரிக்காவை பிரதி எடுக்கும் LGBT என்றால் மறுபுறமோ விக்டோரிய ஒழுக்க விதிகளை இந்திய பண்பாடு என நினைக்கும் காலனிய மனசிறைக்குள் வசிப்பவர்கள். இந்த சூழ்நிலையில்தான் கோபிஷங்கரின் குரல் முக்கியத்துவம் பெறுகிறது.
கோபி ஷங்கர்… மாணவர். ஸ்ரீ ராமகிருஷ்ண -விவேகானந்த வேதாந்த மரபில் வேர் கொண்டவர். இவருடனான உரையாடல்களில் பாலினச்சிறுபான்மையினருக்கான சமூக பண்பாட்டு வெளி பாரத பண்பாட்டில் எத்தனை முக்கியமாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறவர்:
ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு.
பாரத பண்பாட்டில் மட்டுமல்லாது பிற பண்பாடுகளிலும் பாலினச் சிறுபான்மையினருக்கான வெளிகளையும் சாத்தியங்களையும் ஆராய்ச்சி செய்து வருபவர் கோபி. எனவே பாரத பண்பாட்டை குறித்து அவர் கூறுவது சுய பண்பாட்டு பிரியத்தினால் அல்ல.
பாரதம் எங்கும் உள்ள பாலினச்சிறுபான்மையினரின் பண்பாட்டு அம்சங்களை அவர் உணர்ச்சிபூர்வமாக விவரிப்பதை கேட்பதே ஒரு நல்லனுபவம். பண்பாட்டை பேசுவதுடன் அவர் நின்றுவிடவில்லை. அதன் அடிப்படையில் மாற்றுப்பாலினத்தோர் அல்லது பாலினச்சிறுபான்மையினருக்கான உரிமைகளை மீட்டுத்தருவதிலும் அவர் தீவிரமாக இயங்கி வருகிறார். பாலின வேற்றுமை என்பது குறித்த அறிவில்லாமல் பாரத தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தொடர்ந்து ஊக்கம் இழக்காமல் போராடி வரும் மிகக்குறைவான ஒரு சிலரில் இவரும் ஒருவர். அவரது நூல் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ இவ்விதத்தில் தமிழில் ஒரு முக்கியமான நூல். சரித்திர முக்கியத்துவம் கொண்ட நூல்.அந்த நூலை பாரதிய ஜனதா கட்சியின் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. வலதுசாரி என முத்திரை குத்தப்படும் பாரதிய ஜனதா கட்சி மேற்கத்திய அடையாளப்படுத்துதலில் ‘இடதுசாரி’ பிரச்சனை என கருதப்படும் ஒரு விஷயத்தை எடுத்து பேசுவது மிக அவசியமான ஒரு முன்னகர்வு. இன்னொரு விதத்தில் இந்துத்துவம் தன் வேர்களில் முக்கியமான ஒரு வேரை கண்டடைந்திருக்கிறது.
ஒரு மாணவராக திரு கோபி ஷங்கர் செய்திருக்கும் இந்த ஆவணப்படுத்துதல் தமிழில் ஒரு முன்னோடி நூலை உருவாக்கியிருக்கிறது. அவர் உருவாக்கிய ஒரு வலைப்பின்னல் இயக்கம் ’சிருஷ்டி’. அது அரசு சாரா அமைப்பு அல்ல. இன்னும் சொன்னால் அமைப்பே இல்லை. அதன் தன்மைக்கு சரியாக ஒரு படிமத்தை சொன்னால் புள்ளிகளால் உருவாக்கப்படும் கோலம். சாத்தியங்களை காட்டும் ஒரு இயக்கம். அந்த இயக்கத்தை அதுவும் மாற்றுப்பாலின சிறுபான்மையினருக்காக உழைக்கும் ஒரு இயக்கத்தை நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் ஒரு மாணவருக்கு வேண்டும். துணிச்சல் என்பதை விட ஆன்ம பலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அது கோபி ஷங்கருக்கு இருக்கிறது. எனவேதான் ’ஜய ஆண்டின் இளம் இந்து விருது’ அவருக்கு தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழுவின் முடிவின் படி அளிக்கப்பட்டது. அதனை அளித்தவர் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.ஜோ டி குரூஸ் அவர்கள். இந்த தருணத்தை சாத்தியப்படுத்தியமைக்காக தமிழ்ஹிந்து.காம் திரு.கோபி ஷங்கருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறது. அத்துடன் அவரது நூலிலிருந்து பாகங்களை ஒரு கட்டுரையாக இன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்கு அவர் அனுமதியை தந்துள்ளார். அதற்காக அவருக்கு தமிழ்ஹிந்து.காம் தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.
இங்கு கோபி சங்கரின் நூலில் இணை ஆசிரியராக முக்கிய பங்காற்றிய விஜய் விக்கி அவர்களுக்கும் எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த நூலே விஜய் விக்கி இல்லாமல் இருந்தால் சாத்தியப்பட்டிருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் கோபி.
ஆண்டாளின் குரலால் பக்குவமும் செழுமையும் உயர் ஆன்மிகமும் அடைந்த நம் பண்பாட்டில் கோபி ஷங்கரின் இயக்கம் அந்த மரபின் உண்மையான நீட்சி… இனி கோபி ஷங்கர்.
1. தீர்ப்பு – சிறுபான்மையினர்- ஜமாத்
ஏப்ரல்-15-2014 அன்று உச்சநீதிமன்றம் இந்தியாவில் அது வரையிலும் வெளிப்படையாக தெரியாத ஒரு பாலின அரசியலை முன்னிறுத்தும் விதமாக முக்கிய ஆணை ஒன்றை பிறப்பித்தது. இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் விண்ணப்பித்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் ’ஹிஜிரா சமூகம்’ என்று அறியப்படும் அரவாணி சமூகத்தின் பாலினத்தை அங்கீகரிக்கும் விதம் ஆண், பெண் தவிர்த்து இனி அரவாணி சமூகத்தில் இருப்பவர்களை அரசாங்கம் மூன்றாம் பாலினம் என்று அங்கீகரிக்கின்றது என்றும் மேலும் அரவாணி சமூகத்தை பிற பிற்படுத்தப்பட்டோருடன் சேர்ப்பதாகவும் அரசியலமைப்பில் இருக்கின்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் அரவாணி சமூகத்திற்கும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் கல்வி, அரசியல், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துத்துரும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கு அரவாணி, திருநர்(திருநங்கை, திருநம்பி) மாற்று பாலினத்தவர் என்று பலதரப்பட்ட பாலின சமூகத்தை குறிக்கும் சொற்களை 130 பக்க தீர்ப்பு அறிக்கை குறிப்பிட்டாலும் மொழி, சமூக, அரசியல், மருத்துவ ரீதியாக இந்த தீர்ப்பை அணுகுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. இந்த சட்டத்தில் இருக்கும் சிக்கல்கள் முதலில் திருநங்கை, மாற்று பாலினத்தவர் என்றால் யார்?
இதைப் பற்றி சரியான தெளிவு இல்லை.
திருநங்கைகளின் உரிமை பற்றி பேசுகிறது. ஆனால், யாரை திருநங்கை என்று கூறுவதில் தெளிவு இல்லை.
ஆணிலிருந்து பெண்ணாக மாறிய மாற்று பாலினத்தவரை மையப்படுத்தி இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதை தவிர்த்து பிற பாலினத்தவர்களை இந்த சட்டம் கருத்தில் கொள்ளவில்லை. பிற பாலினங்களை பற்றி இந்த தீர்ப்பில் குறிப்பு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு மொழி ரீதியாக அவர்களை குறித்து வார்த்தை தெளிவின்றி அமைந்துள்ளது.
ஹிஜிரா, இனக், அரவாணி, திருநர், மாற்று பாலினத்தவர் என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அதில் புலப்படும் அர்த்தம் வேறாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது மேற்கூறிய அனைத்து பாலின அடையாள சொற்களையும் ஒரு பொருள்பட அணுகுவதுதான் இதில் உள்ள பிரச்சனை.
இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பானது பிறப்பால் பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்கள் சார்ந்து வரும் பிற பாலின அடையாளங்களுக்கும் இடையிலிங்க நிலையுடன் பிறப்பவர்களுக்கும் எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நுணுக்கமான பல்துறை சார்ந்த சட்ட சிக்கல்களை இந்த தீர்ப்பு கண்டு கொள்ளவில்லை. பால்-புதுமையினர் என ஒரு கண்ணுக்குத் தெரியாத மக்கள் கூட்டத்தின் இருப்பானது இந்த தீர்ப்பின் ஒரு புள்ளி அளவு கூட பதிவு செய்யப்படவில்லை. அமைப்புரீதியாக எங்கும் நிலவும் வன்முறைக்கு மூன்றாம் பாலினம் என அடையாளப்படுத்தப்படுபவர்களின் ‘ஜமாத்’ எனும் அமைப்பும் விதிவிலக்கல்ல. ஆனால் ஜமாத் எனும் ஹிஜிரா மற்றும் அரவாணி சமூகத்தினர் வாழும் அமைப்பில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றியோ ஒடுக்குதல் பற்றியோ இந்த தீர்ப்பு கேள்வி எழுப்பவில்லை. இந்த சமூகம் சார்ந்த ஜமாத் எனும் கட்டமைப்பில் இருக்கும் தேக்கநிலையை அழித்து இந்த அமைப்பை திறந்த அமைப்பாக்கும் வரை திருநர், மாற்று பாலினத்தவர், ஹிஜிரா, அரவாணி எனப்படும் இவர்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்கவோ சமூகக் கட்டமைப்பில் தெளிவான பெரும் பங்காற்றவோ இயலாது.
பெரும்பாலான பால்புதுமையினர் தங்களை திருநர் என்று நினைத்து ஜமாத் எனும் கட்டமைப்பில் தான் வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே அதை அணுகாமல் பெரும்பாலான திருநங்கை சமூகம் வரவேற்றாலும் எந்த விதமான பெரும் மாற்றத்தை இந்த சட்டத்தால் மாற்ற இயலாது. மாறுபட்ட புதிதான சமூக சிக்கல்களுக்கே இது விழி வகுக்கும். மாறாக அரசு சாரா நிறுவனங்களுக்கும் பல்வேறு தனிப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கும் வசதி செய்வதாய் அமையும். அது மட்டுமல்ல இந்தியாவில் பாலின அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
130 பக்கங்களுக்கு மேலான ஒன்றோடு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை அறிக்கையாக தனது தீர்ப்பில் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். பெரும்பாலும் வெளிப்படையாக கண்ணுக்கு தெரிந்த ஆணிலிருந்து பெண்ணாக மாறும் திருநரின் பிரச்சனைகளை மற்றும் மையப்படுத்தும் இந்த தீர்ப்பானது சிறுபான்மையினர் என்றால் யார்? என்கிற பிரச்சனையை எந்த அளவு தீர்க்கமாக அணுகியுள்ளது? ஒரு குறிப்பிட்ட குழு ஒரு சிறுபான்மையினம் சமூகத்தில் பெரும்பான்மை வகிக்கும் பொழுது உண்மையான சிறுபான்மையினராக எந்த அடிப்படை தேசிய உரிமைகளும் இல்லாமல் இடையிலிங்க மக்கள் பால்புதுமையினர் போன்ற பல பாலினம் சார்ந்த சமூகங்களை மொத்தமாக ஒடுக்கப்படுவது நிகழ்கிறது. இவர்களின் வாழ்க்கை நியாயங்கள் இன்னும் சமூக பார்வைக்கே வரவில்லை.
காரணம் இங்கு திருநராகவும், பால் புதுமையினராகவும், மாற்று பாலினத்தவராகவும், அரவாணிகளாகவும் சாதித்தவர்கள் ஒரு சிலரே. அப்படி சாதித்த ஒரு சிலரும் முக்கியமான திருநங்கைகள் தங்களின் வெற்றிக்கு பின் தங்களை மட்டுமே முன்னிறுத்தி கொள்கின்றனரே தவிர ஆதரவிற்காக, அங்கீகாரத்திற்காக தவிக்கும் பிற பாலினத்தவரையோ ஏன் சம திருநங்கைகளை கூட கைதூக்கி விடுவதில்லை. இந்திய திருநர் சமூக போரட்டத்தில் பெரும் பங்காற்றியவர் திருநங்கை ஸ்வப்னா. டி.என்பி.சி தேர்வை வெற்றிகரமாக எழுதிய முதல் திருநங்கை இவரே. அவர் கூறுகிறார் “நான் என்னைப் பற்றி பேசுவதை விட என் (ஒடுக்கப்பட்ட) பாலினத்தைப் பற்றி பேச வாய்ப்பு கேட்கிறேன். என்னுடன் சேர்ந்த இதர பாலினத்தவரின் உரிமையையும் கேட்கிறேன். எண்ணிக்கையில் இத்தகையவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர்களுக்கான அனைத்து அடிப்படை குடியுரிமைகளை பெற இந்த நாடு வழி செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.
”பாலினம்” என்றால் என்ன? ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் தான் உள்ளனவா?
இல்லை அதற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றனவா?
இருக்கின்றன! எக்கச்சக்கமாக இருக்கின்றன!
அவற்றை அடுத்த வாரம் காண்போம்.
புதுமையான கட்டுரை.
பொதுவாக அனைவருக்கும் இருப்பது அறியாமையின் அச்சமே (fear of the unknown)!
மாற்றுப் பாலினத்தோரைப் பற்றி விளக்கி, அறியாமையின் அச்சத்தை அகற்ற முனையும் கோபி சங்கருக்கும், அவரது கட்டுரைத் தொடரை வெளியிட முன்வந்திருக்கும் தமிழ் இந்து இணைய தலத்திற்கோருக்கு எனது பாராட்டுக்கள்!
காலத்திற்கு தேவையான விழிப்புணர்வு…………. இந்து சமுதாயத்தின் ஒரு சாராரை காலம் காலமாக ஒதுக்கி வைத்திருக்கும் தன்மை, அவர்களை பற்றிய தவறான கண்ணோட்டம், அவர்களை கண்டு மிரட்சி கொள்ளும் கண்ணோட்டம்………. இவை தீர இந்த தொடர் வழிகாட்டட்டும்………………..
மூன்றாம் பாலினம் என்றாலே கடைகளில், ரயில்களில் பிச்சை எடுக்க மட்டுமே லாயக்கு என்ற நிலையை மாற்ற வேண்டும். அதற்கு இந்த கட்டுரை மற்றும் அதன் மூலம் நடக்கும் சமுதாய சிந்தனை வழிகாட்டினால் மிக்க சந்தோசமாக இருக்கும்.
தைரியம் உள்ளவன் விழுந்த இடத்திலிருந்தே எழுவான்; கோழை தனக்கு வாய்த்த தாழ்ச்சியை எண்ணி விதும்பி கொண்டு இருக்கமாட்டான், எதிர்ப்பிலேயே வாழ கற்றுக் கொள்வான். மூன்றாம் பாலினரும் அப்படி எதிர்ப்பிலேயே வாழ கற்றுக் கொள்ள வேண்டும்; எவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று மன உழைச்சலை விடுத்து முன்னேற வேண்டும். அதற்கு ஆத்ம பரிசோதனை பயிற்சிகள் உதவும்.
எல்லாம் வல்ல ஈசன் அவர்களை உயர்த்திக் கொள்ள வழிகாட்டட்டும்!
இந்த மந்திரத்தை அவர்கள் தொடர்ந்து உச்சரித்தால் வலிகளுக்கு ஒத்தடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஓம் நமசிவாய நம:
ஆன்மீக எழுச்சிதான் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற போகிறது.
Thanks for you sir and mam