ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?

corruption-in-indiaஒரு அரசாங்கத்தில் அல்லது பெரிய நிறுவனமொன்றில் உயர் பொறுப்புகளில் இருப்போர் விதிமுறைகளுக்கு மாறாக சில தவறுகளில் ஈடுபட்டு ஆதாயங்களைப் பெற்று வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். தனிப்பட்ட அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்கள் ஊரைக்கூட்டி விளம்பரம் செய்துகொண்டா அந்தத் தவறுகளைச் செய்வார்கள். எத்தனைக்கெத்தனை இரகசியமாகச் செய்ய முடியுமோ அப்படிச் செய்வார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு எந்த வித ஆதாரமும் எழுத்திலோ, அல்லது வாய்ச்சொல் மூலமாகவோ, சாட்சிகளையோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி அவர்கள் செய்யும் ஊழல்கள் இரகசியமாகவே இருந்துவிட்டால் அது அவர்களுக்கு ஆதாயம். அவர்கள் பணியாற்றும் அரசு, பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் ஆகியோருக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படுவதோடு, ஒழுங்காய் நடந்து கொள்பவர்களையும் ஊழல் செய்யத் தூண்டுவது போல அமைந்து விடும் இல்லையா? ஆகவே இப்படிப்பட்ட தவறுகளைக் கவனமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் அறியாமல் ஏதாவது ஊழலுக்கான ஆதாரங்களை விட்டிருந்தால் அதை சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகத்துக்கும் அக்கறை கொண்ட உண்மையான பிரஜைக்கும் உரிமை இருக்கிறது.

அரசாங்கங்களே அடுத்த நாட்டு நடவடிக்கைகளை கவனித்துத் தெரியப்படுத்த ஒற்றர்களை வைத்திருக்கிறார்களே. அதற்கென்று இரகசிய அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவே. சில ஆதாரங்களைப் பெற வேண்டுமானால், அந்தந்த இலாகா அல்லது அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரானவர் எவரேனும், இப்படியெல்லாம் நடக்கிறதே என்று கோபப்பட்டு, ஊழலுக்கான ஆதாரங்களை இரகசியமாகப் பிரதி யெடுத்து, நடவடிக்கை எடுக்க விரும்பும் பொதுநல விரும்பிகளுக்குக் கொடுத்தால் தான் உண்டு. இல்லையேல் ஊழல்கள் அத்தோடு மறைக்கப்பட்டு விடும். ஊழல் நடக்கிறது என்பதை மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாமென்றாலோ, யார் யார் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில், உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பங்கு இருக்குமானால் பாதிக்கப்படப்போவது புகார் கொடுத்தவர்தானே தவிர ஊழல் செய்தவர் அல்ல.

ஒருவன் செய்த தவறுக்கு அவனிடம் இரகசிய ஆவணம் இருக்கிறது. அதை அவன் ஊரறிய வால் போஸ்டர் அடித்தா ஒட்டுவான். அந்த இரகசிய ஆவணம் நல்லவன் எவன் கையிலாவது கிடைத்தால் விடுவானா? அதை பிரதியெடுத்து, குற்றம் செய்தவனுக்கு எதிராகப் பயன்படுத்தத்தான் செய்வான். அந்த ஆவணம் உண்மைதானா, குற்றம் நடந்திருக்கிறதா, அப்படி நடந்திருந்தால் அதற்கான ஆவணத்தை மறைத்து வைத்திருந்த ஊழல் பேர்வழியைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஊழலை வெளிப்படுத்திய அந்த ஆவணத்தை இரகசிய இடத்திலிருந்து எடுத்தது யார்? பிரதி எடுத்தது யார்? யாரிடம் அது கொடுக்கப்பட்டது? என்றெல்லாம் கேட்பது, குற்றம் செய்தவனைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி போலத்தான் தோன்றுமே தவிர ஊழலை ஒழிக்கும் உறுதி இருப்பதாகத் தெரியாது. இந்த அளவுக்கு ஒரு நபர் ஊழலுக்கு எதிராக, தனக்குப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது தெரிந்தும் துணிச்சலாக அதை வெளிப் படுத்துகிறானே அவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நாம் நினைப்பதில்லை. மாறாக அவனையே கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து, ஏண்டா நமக்கு இந்த வீண் தொல்லை என்று அவன் மனம் நொந்து இனி யார் எக்கேடு கெட்டால் என்ன, நம் விஷயத்தைப் பார்த்துக் கொண்டு போய்விடுவோம் என்று அந்த நேர்மையாளனும் ஒதுங்கி விடுவான்.

குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றவாளியே அவற்றை எடுத்து இந்தா எடுத்துக் கொள்ளுங்கள் ஆதாரம் என்றா கொடுக்கப்போகிறான். இந்த குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது.

expose-corruptionஎனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒரு பெரிய நாட்டுடமையாக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்டத்தில் சில பணிகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டது. அவர்கள் அந்தந்த பகுதி வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து தேவைப்படும் எண்ணிக்கையைப் போல ஐந்து மடங்கு ஆட்களின் பெயர்களைக் கேட்டிருந்தார்கள். அதன்படி சுமார் 120 பேர் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பெயர்களை அனுப்பி வைத்தன. அவற்றை ஆய்வு செய்து தேர்வுக்கு அழைப்பு விடுக்கும்போது, அந்த 120 பேர்களைத் தவிர இவர்களாகவே சுமார் ஏழெட்டு பேர்களை அதில் சேர்த்து அவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். அப்படி அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் சில அதிகாரிகளின் பிள்ளைகள், ஒரு சிலர் ஊழியர்களின் பிள்ளைகள். அந்தத் தேர்வின் முடிவுகள் பட்டியலாக மக்கள் பார்வைக்கு வைக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பலருக்குக் கடிதம் மூலம் அனுப்பப்பட்டன. அப்படி கடிதம் அனுப்பப்பட்டவர்களில் சிலர் வேலை வாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல; அந்த அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள்அவர்கள். இந்த இரகசியத்தை அறிந்து கொண்ட அதே அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் இதை நேரடியாகச் சென்று புகார் செய்தால் பூசி மெழுகிவிடுவார்கள் என்பதால் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அந்த கோட்டத்திற்குட்பட்ட ஒரு சிற்றூரில் இயங்கும் “வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்” எனும் பொய்யான பெயரில் இந்த விவரங்களைத் தலைமை அதிகாரிக்கு இரகசிய கடிதம் மூலம் தெரிவித்து விட்டார். அந்த அதிகாரி வெளி மாநிலத்தவர். இப்படியொரு ஊழல் நடப்பது அவருக்குத் தெரியாது. உடனடியாக அவர் வேலை வாய்ப்பு அலுவலகம் அனுப்பிய பட்டியலையும், இவர்கள் நடத்திய தேர்வில் பங்கு கொண்டவர்கள் பட்டியலையும் வாங்கிப் பார்த்துவிட்டு ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்து கொண்டார். தன் அலுவலகத்திலேயே சிலர் தங்கள் பிள்ளைகள் பெயரைச் சேர்த்து இப்படியொரு மோசடியைச் செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் பெயரை நீக்கிவிட்டு மற்றவர்களுக்கு வேலைக்குக் கடிதம் அனுப்பினார். இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், ஊழியர்களின் பிள்ளைகளின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு காலப்போக்கில் ஒவ்வொருவருக்காய் பணி ஆணை அனுப்பி வேலையில் சேர்த்துவிட்டனர். இப்படியும் மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த பொதுநல விரும்பி “வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்” என்ற பெயரில் ஒரு கடிதம் அனுப்பி இந்த ஊழலை வெளிக் கொணர்ந்தார். அப்படியொரு சங்கமே இல்லை. இருந்தாலும் அந்தக் கடிதத்தில் கண்டிருந்தவை அனைத்தும் அப்பட்டமான உண்மை; அவை அனைத்தும் நடந்தேறிய ஊழல்கள். அதனால் நிர்வாகம் கொடுத்த வேலை ஆர்டர்களை நிறுத்திக் கொண்டது பிறகு தனித்தனியாக அவர்களும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்பதும் நடந்தது. தவறு செய்தவர்கள் யார் என்பதை விட்டுவிட்டு அந்த ரகசிய லிஸ்டை எடுத்தது யார், பொதுநல விரும்பியிடம் கொடுத்தது யார் என்று ஒரு விசாரணை நடத்தி, அவர்கள் சந்தேகித்த ஒரு நபரை அந்த பிரிவிலிருந்து மாற்றி உபயோகமில்லாத இடத்துக்கு அனுப்பிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான். எல்லாம் நேர்மையாக நடத்த வேண்டிய உயர்நிலைப் பதவி வகிப்பவனே திருட்டுக்குத் துணை போய்விட்டு, அந்தத் திருட்டு அம்பலமானவுடன் திருடியவனை தண்டிக்காமல், திருட்டைக் காட்டிக் கொடுத்தவன் மீது பாய்ந்து குதறியது என்ன நியாயம். அதுதான் இன்றைய நம் நாட்டு நியாயம்.

corruptionஇங்கு தவறுகளையும் ஊழல்களையும் செய்யலாம், செய்த தவறுகளையும் ஊழல்களையும் சாமர்த்தியமாக மறைக்கலாம். ஆனால், அவற்றைச் சுட்டிக் காட்டினால் அது தவறு. தவறுக்கான ஆதாரங்களைக் காட்டினால் அது ஏன், எப்படி, யாரால் வெளிவந்தது என்பதில்தான் விசாரணை போகின்றதே தவிர, அந்த தவறு நடந்தது உண்மையென்றால், அந்த ஆவணமும் சரியானதுதான் என்றால் தவறு செய்தவன் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, தவறை வெளிக்கொணர்ந்தவன் அல்ல. அப்படி அவன் வெளிக் கொணர்ந்தது தவறு என்பது நிரூபிக்கப்பட்டால், அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கை களை எடுத்துக் கொள்ளட்டும். ஊழலை ஒழிக்க அடிமட்டம் தொடங்கி, மேல் மட்டம் வரை நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே தர்மமும் நீதியும் நிலைநாட்டப்படும். இல்லையேல் நீதியும் நியாயமும் புதைகுழிக்குத்தான் போகும். படிக்காத மூடன் தவறிழைப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் படித்தவன் தெரிந்தே தவறுகளைச் செய்வானானால் அவனை மன்னிக்க முடியாது. அதனால்தான் மகாகவி பாரதி சொன்னான், “படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்” என்று.

நமக்குக் குறி ஊழலும் ஊழல் புரிந்தவனும்தான்; ஊழலை வெளிக்கொணர்ந்தவன் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். அப்படி ஊழலை வெளிக் கொணர்பவனுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அதைவிட்டு அவனை பலிகடாவாக ஆக்குவது ஊழலுக்குத் துணை போவதாகும்.

6 Replies to “ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?”

 1. பொருள் பொதிந்த கட்டுரையை வழங்கியுள்ள திரு தஞ்சை வெ கோபாலன் அவர்களுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டும் உரித்தாகுக.

  ஊழலை வெளிக்கொணர்வோர் சந்திக்கும் போராட்டங்களை அழகாக வெளிப்படுத்தியமைக்கு மீண்டும் நன்றி.

  இதற்கு சாதாரணக் குடிமகன்களை மட்டும் குற்றம் சொல்கின்றன மீடியாக்கள், உதாரணமாக உத்திரப்பிரதேசம் என்ற மாநிலத்தில் ஒரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு , பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்னர் சமாஜ்வாதிக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளால் பெரும் கொடுமை இழைக்கப்பட்டு, அவரை அநியாயமாக தற்காலிகப் பணிநீக்கம் செய்தனர். அவருக்கு துணையாக, ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கம் கூட வாய் திறந்து போராடியதாக நான் செய்திதாள்களில் படிக்கவில்லை. ஒருவேளை ஐ ஏ எஸ் அதிகாரிகளின் போராட்டத்தை நமது மீடியா இருட்டடிப்பு செய்துவிட்டதோ என்னமோ ?

  ஐ ஏ எஸ் போன்ற அகில இந்திய பணிகளில் இருக்கும் அதிகாரிகள் துர்கா சக்தி போலவும், சகாயம் போலவும் நேர்மையாகவும் , பயப்படாமலும் இருந்தால் நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எவ்வித தவறும் செய்ய வழியே கிடையாது.

  தலை சிறந்த பொருளாதார நிபுணராக இருந்த திரு மன் மோகன் சிங்கு பிரதமராக இருந்தபோது, ராஜாவை கண்டித்து இருந்தால், டூ ஜி ஊழலே நடந்திருக்காது. மகாத்மா காந்தி இந்தியா சுந்தந்திரம் அடைந்தவுடன் காங்கிரசை கலைத்துவிட்டு வேறு பெயரில் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து செயல்படுங்கள் என்று சொன்னதை அன்றைய காங்கிரஸ் எருமைகள் கேட்டிருந்தால், காங்கிரஸ் என்ற நல்ல இயக்கத்துக்கு இவ்வளவு கெட்டபெயர் ஏற்பட்டிருக்காது.

  மேலே உள்ள கட்டுரையில் தாங்கள் தெரிவித்துள்ள ஆளெடுப்பில் மோசடி என்பது இந்தியாவில் பல மாநிலங்களிலும் பல் துறைப் பணியாக நடந்துள்ளது. சில இடங்களில் மோசடிகள் வெளிவந்துவிடுகின்றன. பல இடங்களில் மோசடிகள் வெளிவராமலேயே புதைக்கப்பட்டு விடுகின்றன.

  மகாராஷ்டிர மாநிலத்தில் அந்த மாநில துணை முதல்வர் மீது அந்த மாநில உள்துறை அமைச்சரே ஊழல் விசாரணை மற்றும் வழக்கு தொடுக்க அனுமதி கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் PIL -காரணமாக ஏற்பட்டுள்ளது. இரு அமைச்சர்களும் இத்தனைக்கும் ஒரே கட்சியை அதாவது NCP -சேர்ந்தவர்கள்.

  நமது மக்களிடமும் தவறுகள் இருக்கின்றன. ஆனால் மேலிடத்தில் உள்ளவர்கள் ஒழுங்காக இருந்தால், கீழே இருப்பவனும் தவறு செய்ய அஞ்சுவான். காலப்போக்கில் தவறுகள் குறையும். மொரார்ஜி தேசாய், வல்லபாய் படேல், காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி, சிவராஜ் பட்டீல் , ஏ கே அந்தோணி, அத்வானி, வாஜ்பாய், நரேந்திர மோடி போன்ற உன்னதமான தலைவர்களும், சகாயம், துர்கா சக்தி போன்ற நேர்மையான ஐ ஏ எஸ் அதிகாரிகளும் அதிக அளவில் இன்று நம் நாட்டிற்கு தேவைப் படுகிறார்கள். விரைவில் நம் நாட்டில் நல்ல மாறுதல்கள் சிறிது சிறிதாக வரும். இந்தியா வாழ்க இந்தியா வளர்க உலகெங்கும் அமைதி ஓங்குக எங்கும் வளம் பெருகி இன்பம் பெருகட்டும்.

 2. எந்தக் கட்சி ஆட்சி புரிந்தாலும், முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல்களை வெளிக் கொணர, தண்டனை பெற்றுத் தர முனைவதே இல்லை. இந்த நம்பிக்கையில்தான் பெரிய பெரிய ஊழல்கள் நடை பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

  Bofors ஊழல் வெறும் 60 கோடி ரூபாய்தான். இன்று ஒரு கவுன்சிலர் செய்யும் ஊழலே கோடிக் கணக்கில் வருகின்றது.

  நமது நாட்டில், பணமும் செல்வாக்கும் இருந்தால், நீதியைக் கூட விலைக்கு வாங்கி விடலாம் அல்லது வழக்கினை வருடக் கணக்கில் நடத்திக் கொண்டே இருக்கலாம் (ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெயலலிதா வருமான வரி வழக்கு, லாலு பிரசாத்தின் மாட்டுத் தீவன வழக்கு, மாயாவதியின் சொத்து வழக்கு, மற்றும் பிற.)

  ஊழல் செய்வதிலும் செய்த ஊழலை மறைப்பதிலும், முந்தைய ஆட்ட்சியின் ஊழல்களை கண்டு கொள்ளாமால் இருப்பதும் – அனைத்துக் கட்சிகளும் ஒன்றேதான்.

 3. முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, ஊழலை வெளிக் கொணரவும் சில
  எதிர்மறை பாவனைகளை செய்துதான் ஆக வேண்டும்.

  ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்றால் அதனைப் பிடிக்கச் செல்லும் போலீசார் மஃடியில் சென்று தங்களுக்கும் சாராயம் தேவை என்பது போல் நாடகம் ஆடுவதில்லையா?

  லஞ்சம் வாங்குவோரை ஊழல் கண்காணிப்புப் போலீசார் பவுடர் தடவிய ரூபாய்த் தாளைக் கொடுத்து சாட்சி தயார் செய்வதில்லையா?

  இப்போது புகார் கொடுப்பவர் மீதே பாயும் சட்டமுள்ள காலம் போலும்?!

 4. Goopalan’s argument are untenable.According toCr.PC a superior officer canfind out if the investigation is on proper line.Rankit Sinha was if dishonest he could have ensured no entries are made in the diary.It is preposterous to say that simply because he was meeting persons allegedly accused of corrruption he was also corrupt.Why no one has questioned the timing of this PIL BY bHUSHAN ONLY WHEN mARANS ARE BEING QUESTIONED.AND WHAT IS LOCUS STANDI OF THE n go and what are its financiers.. We should also remember that it was Sinha who brought to the notice of the SC the imprroper interference of the Coal Minister and the PMO.We should also remember the aim is to discredit the institution and derail the entire investigatio for somebody’s personal gain or protect some interest byusing the purlointed register
  A.T.Thiruvengadam

 5. ஊழல் தவாறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?
  மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் முரணான காரணத்தை தானே கூறுவார்கள்!!!
  பாதிக்கப் பட்டவன் பயத்திலே இப்படித் தானே பாதையை மாற்றுவான்!!!.
  கொடுமை தான்… கோடரிக் கொண்டு வெட்டி வீழ்த்த முடியாத கொடுமை.. கொள்ளையர்களின், கொலைகாரர்களின் கூடாரத்தில் நல்லவன் சேர்ந்திருக்க வேண்டிய அவலத்தினால் அல்லல்ப் படுத்தும் கொடுமை!!!

  புத்திசாலி, திறமைசாலி, நல்லபண்பு, இது இன்று ஒன்று சேர்ந்து இருக்க வழியிலாது போகும்படி ஆகிவிட்டது! இந்த மூன்றும் ஒருங்கே சேர்ந்தவனுக்கு தைரியம் உள்ளும் புறமுமாக கிடைக்காது போகும் போது அவனும் பயனற்றுப் போகிறான்.

  அரசு அலுவலகங்களில் இம்மூன்று தன்மைகள் கொண்ட மனிதர்கள் வெகுசிலரே இருக்கிறார்கள் அவர்களைக் கண்டும் இருக்கிறோம். அதிலே பெரும்பாலோர் தங்களது ஐம்புலன்களில் நான்கை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்தாவதான மனதை அடக்க முயன்று, அதனால் அவஸ்தைக்கு உள்ளாகி, சில நேரங்களில் பொங்கி எழுந்து இது போன்ற ஊழல் பேர்வழிகளை வெளிக் கொணர முயன்று பெரும்பாலும் விரக்தியில் உட்கார்ந்து விடுகிறார்கள்.

  மதுப் பழக்கம் அதை செய்வது ஒருகாலத்திலே மிகப் பெரிய குற்றமாக சமூகத்திலேப் பார்க்கப் பட்டது. ஆனால் இப்போது அதன் நிலை மிகவும் சர்வ சாதாரணமானதாக பார்க்கப் படுகிறது. காரணம் நல்ல சட்டத்தை கொண்டு சமூகத்தை வழி நடத்த வேண்டிய அரசே அதை சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்யும் போது?! நல்ல குடிமகன்கள் உருவாக்கப் படுகிறார்கள்!!!

  அதிலும், நாங்கள் செய்யாவிட்டாலும் தனிமனிதன் இதைச் செய்து எப்படியும் பொருளீட்டப் போகிறான் என்று தனது கையாலாகத் தனத்தை கூறிக் கொண்டே அந்த கேவலத்தை அரசே செய்ய ஆரம்பிக்கிறது.

  இப்படியேத் தானே ஊழலும், எங்கும் பரவிப் போன; இந்திய மக்களின் சுவாசத்தில் கலந்து போன இந்த விசத்தை சுத்தப் படுத்த முயலும் நல்ல மனிதன் அதன் விசத் தாக்குதலுக்கு ஆட்பட்டு அவதியில் நிற்கிறான்.

  ஒரு காலத்தில் அரசு வேளையில் இருந்து கொண்டு இந்த சமூகத்திற்கு சேவை செய்வதோடு, தானும் தனது குடும்பமும் நிம்மதியான வாழ்வை வாழலாம் என்று அதற்காக மெனக்கெடுவது வழக்கம்.

  இன்றைய நிலையில், அரசு வேளையில் சேராமல் இருப்பதே மிகவும் நிம்மதியான வாழ்வை, இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யாது போனாலும், பாவத்தை செய்யாமலாவது இருக்கலாமே என்று சாதாரண நல்லப் பண்பு கொண்ட மனிதன் எண்ணும் அளவிற்கு போய் விட்டது.

  கருவில் ஆரம்பித்து, கல்லறை வரைக்கும் எங்கும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த கொடுமையை வேரோடுப் பிடுங்கி எரிய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் ரத்தத்தில் ஊறிய உயரியக் கொள்கை யாகாத வரை, இதைத் சரி செய்வது என்பது இயலாதது.

  இப்படி நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராட ஒரு காலத்தில் நான்கு பேராவது கூடினார்கள்.. இன்று மது வெள்ளத்திலே அடித்துச் செல்லப் பட்ட இளைஞர்கள் போக மீதம் உள்ளவர்கள் தொலைக் காட்சியில் தொலைந்து போய்விட்டார்கள். இன்னும் சிலரோ வயிற்றுப் பிழைப்புக்காக வெற்றுத் தேசங்களுக்குச் சென்று விட்டார்கள். அப்படி வேற்று தேசங்களுக்கு போனவர்கள் பலரும் இது போன்ற அவலத்தை எத்ரித்து போராட அனைத்துத் தகுதிகளையும் பெரும்பாலும் பெற்று இருந்தும், இந்த அரசாங்கம் அவர்களை அரவணைத்து ஆற்றுப் படுத்தி அதன் பயனை அனுபவிக்கத் தவறி விட்டது. நல்ல வேலை அதற்கும் சாதி அடிப்படை இட ஒதுக்கீடு ஏதும் கொண்டு வந்திருக்க வில்லை.

  நல்ல மனிதர்களைப் பற்றிய பாடங்களை நடத்தி நல்ல இளைஞனை உருவாக்கிய பள்ளிக் கூடங்களில் இப்போது நல்ல மனிதர்கள் ஆசிரியர்களாக இல்லாதும் போனார்கள். அப்படி எங்காவது இருந்தாலும் அவனும் மிரட்டப் பட்டு நசுக்கப் பட்டும் விடுகிறான். கலை இலக்கியம், பண்பாடு, தேசப் பற்று, விடுதலை போராட்டம், மனித நேயம், தர்மம் இவைகளைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவர்கள் அரசாங்கத்திலும், அரசு அலுவலகங்களிலும், குறிப்பாக பள்ளிக் கூடங்களிலும் இருந்துக் கொண்டு அதை இயக்கிக் கொண்டுப் போகும் போது அதன் பயணம் எப்படிப் பட்டதாக இருக்கும்!!!!

  நீதி போதனைகள் செத்துப் போய் நிதி போதனைகள் தான் எங்கும், அதை சம்பாதிக்கும் குறுக்கு வழிகள் தான் எங்கும் போதிக்கப் படுகிறது. இந்த சூழலில் இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நல்ல மனசாட்சி உள்ள தைரியமுள்ள மனிதர்களின் செயல்கள்; அதன் நோக்கத்தில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ? அவர்கள் உண்மையில் தனது செய்கை தவறென்று ஒரு போதும் வருந்த மாட்டார்கள் என்பது மாத்திரமே ஆறுதலான விஷயம்.

  என்ன? அவரின் செய்கையால் வரும் விளைவுகளை புரிந்துக் கொண்டு அவரை இன்னும் காயப் படுத்தாத குடும்பத்தார் அவரோடு, இருந்தாலே அது அவருக்கும், நியாயப் போராட்டத்திற்கும் கிடைக்கும் பெரும் வெற்றியாகவும் எண்ணியும் கொள்வார்!!!

  நோய் எதிர்ப்பு சக்தி ரத்தில் இருக்குமானால் அது ஒன்றே ஒன்றாக இருக்குமானாலும் சரி அது மடியும் வரை நோயை எதிர்த்து அதற்காக சாகும் வரை போராடும் காரணம் அது அதனின் குணம், தன்மை.

  தவறென்பது, தவறே, அதை சரி செய்ய அதன் வழியில் விரட்டிச் சென்றால் தானே அதனை அழிக்க முடியும். இதை உணராது, ஊழலை வெளிக் கொணர்ந்த முறையையும், நபரையும் தேடித் தண்டிக்கும் நிலையை எண்ணி வருந்த வேண்டிய நிலையிலே தான் வெகு சிலாராவது இருக்கிறோம்.

  ஸ்ரீராமன் வந்து அரியணையில் அமராதவரை ராம ராஜ்ஜியம் வெறும் கனவே!!! அங்கொன்றும், இங்கொன்று மாகவாது சமூகத்தில் சிறைபடுத்தப் பட்ட சீதா தேவியர் வெளியே சுதந்திரமாகத் தோன்றி நல் மக்களை ஈன்று வளர்த்து ஆளாக்காதவரை, தர்ம சீலர்களை இந்த சமூகம் பெறுவதும் கனவே!!!

  அலுவலக புறத்தூய்மையை கடை பிடிக்க அக்டோபர் 2 ல் புதியதோர் விதியை துவக்கு கிறார் பிரதமர். அதுவே அடுத்த அக்டோபருக்குள் அகத்தூய் மைக்கும் அடித்தலமாகட்டும்.

  மகாகவி விதைத்த விதைகள் இன்னும் ஈரப்பதம் சாராமல் காய்ந்த பூமிக்குள் இருக்கின்றன !!! அது கங்கை அன்னையை தனது கைகளை கன்னியாகுமரிவரை பரவும் போது ஈரப் பதம் பெற்று எங்கும் முளைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

  அதன் சகாயத்தை இந்த சமூகம் அனுபவிக்க இன்னும் பல சகாயங்கள் தோன்றுவதோடு, இது அநீதிகளை அழிக்கப் புறப்படும் பட்டாளங்களை வழி நடத்த இன்னும் பல கோபால கிருஷ்ணர்கள் சாரதிகளாக தோன்றவும் போகிறாகள் என்றும் நான் தீர்க்கமாக நம்புகிறேன்!!!

  திருவாளர் கோபாலன் ஐயா அவர்களின் ஆதங்கம், சமூகப் பிரஞ்ஞைக்கு தலை வணங்குகிறேன்!

  வாழ்க! வளர்க மகாகவியின் சிந்தனைகள்!

 6. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது போட்ட சொத்துக்குவிப்பு வழக்கு ஆரம்பத்தில் சுப்பிரமணிய சுவாமி அவர்களால் போடப்பட்ட மனுவின் மீது அமைந்த வழக்கு. அதற்காக அவர் நீதிமன்ற வாசலில் காட்சி பெற்றார் என்பது அனைவரும் அறிந்த வரலாறு. எந்த ஒரு கிரிமினல் வழக்கும் , அரசால் நடத்தப்படுகிறது என்பதே சட்ட ரீதியான உண்மை. ஆனால் இந்த வழக்கில் தேவை இல்லாமல் திமுக தன்னை இணைத்துக்கொண்டு, அனாவசியமாக மேலும் மேலும் கேட்ட பெயர் வாங்கியதுதான் மிச்சம்.

  உண்மையில் சுப்பிரமணியசாமி அண்ணாதிமுக ஆட்சியிலேயே கவர்னரின் அனுமதி கேட்டு போராடினார். ஆனால் 1996-தேர்தலில் ஆட்சிக்கு வந்த பின்னர், திமுகவினர் ஜெயலலிதா மீதான இந்த வழக்கில் தேவையில்லாமல் குழப்பி, இந்த வழக்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் ஒரு வழக்கு போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர். இது திமுக செய்த பெரிய தவறு. யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டதுபோன்ற செயல். திமுகவினர் அதிக அளவில் தலையிட்டதால், நைசாக சுப்பிரமணிய சாமி கழண்டு கொண்டார் என்றே பலரும் கருதுகிறார்கள்.

  2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும், அதிர்ச்சி அடைந்த திமுகவினர் வெட்டி மனுக்கள் போட்டு, தமிழ் நாட்டில் வழக்கை நடத்தக் கூடாது – வெளி மாநிலத்தில் தான் நடத்தவேண்டும் என்று வழக்கு நடத்தி வழக்கை மேலும் தாமதப் படுத்தினார்கள்.

  ஜெயலலிதா மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டு, ( என் ஞாபகம் சரியாக இருந்தால் 14 என்று நினைக்கிறேன்) இந்த ஒன்றை தவிர எல்லா வழக்குகளும் வாயைப் பிளந்து, எள்ளும் , தண்ணீரும் ஊற்றி கோவிந்தா ஆகிவிட்டது. இதில் பெரிய கேவலம் என்ன என்றால், லண்டன் ஓட்டல் வழக்கு என்ற வழக்கு சிரிப்பாய் சிரித்ததுதான். அந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது போய், வாபஸ் வாங்க நேரிட்டதை நான் பத்திரிகைகளில் படித்ததாக ஞாபகம்.

  கலைஞருக்கு தமிழ் நாட்டினைச் சேர்ந்த நீதிபதிகள் மேல் அவ்வளவு பயம். எனவே, ஜே மீதான ஏதோ ஒரு வழக்கை தமிழகத்தை சேர்ந்த நீதிபதி விசாரிக்க கூடாது என்று சொல்லி, வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நீதிபதியை வைத்து விசாரித்து அந்த நீதிபதியும் தீர்ப்பு சொல்லி, எல்லா வழக்கும் கோவிந்தா தான்.

  வெளிமாநில நீதிபதி விசாரித்த வழக்கும் கோவிந்தா, வெளிமாநில நீதிமன்றத்தில் விசாரித்த வழக்கும் கோவிந்தா என்று ஆகிவிடுமா என்பது சனிக்கிழமை காலை நண்பகல் 12- மணி அளவில் தெரிந்துவிடும். கோவிந்தா ஆகிவிட்டால், திமுகவுக்கு தமிழக அரசியல் வரலாற்றில் இனி இடம் இருக்காது. தமிழகம் முழுவதும் இந்த வழக்கை மிக பரபரப்பாக எதிர்பார்த்து , தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசு தரப்பு தோற்றால், இந்த வழக்கை கெடுத்த பெருமை திமுகவினருக்கே சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *