வன்முறையே வரலாறாய்…- 32

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

ஒருவேளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வராமல் போயிருந்தால், இந்திய, பங்களாதேசி, பாகிஸ்தானிய சமூகம் இன்றிருப்பதனை விடவும் வேறு விதமாக இருந்திருக்கக் கூடும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. காலனியாதிக்கத் தீமைகள் குறித்து நாம் இங்கு விவாதிக்கவில்லை. எனவே, பிரிட்டிஷ் காலனியாதிக்கச் சுரண்டல்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இதனைக் குறித்தான தகவல்களை சிறிது ஆராயலாம்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் வாள்முனையிலும், அடிமைப்படுத்தலின் மூலமாகவும், இன்னபிற வன்முறைச் செயல்கள் மூலமாகவும் இந்துக்களுடன், பவுத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற இந்தியாவின் இந்துக்களல்லாத பிற மதத்தினரும் எவ்வாறு மதம் மாற்றப்பட்டார்கள் என்பது குறித்து இதற்கு முன்னர் பார்த்தோம். இருப்பினும் ஆயிரம் ஆண்டுகால இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்தியாவின் அத்தனை இந்துக்களையும், பிற மதத்தினரையும் இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவதில் பெரும் தோல்வியுற்றது. கொடிய அடக்குமுறைகளையும், பொருளாதார கசக்கிப் பிழிதல்களையும் இந்திய இந்துக்கள் தங்களின் பொறுமையாலும், அதன் ஆன்மீக பலத்தாலும் அதற்கும் மேலாக எவரொருவராலும் முழுமையாக ஆளமுடியாத அதன் பெரும் நிலப்பரப்பாலும் வென்றார்கள்.

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது. இந்தியாவில் இஸ்லாமிய சுல்தானேட் அமைந்த காலத்தில், பாக்தாதிலிருந்து ஆண்ட இஸ்லாமிய அரசின் தலைமையிடம் பிளவுபட்டு, அதன் அதிகாரம் மெல்லத் தேய்ந்து கொண்டிருந்தது. அதன் அதிகாரம் பாக்தாதிலும், எகிப்திலும், ஸ்பெயினிலும் பிளவுபட்டுக் கிடந்தது. அதே நேரத்தில் மங்கோலியாவின் ஸ்டெப்பிப் புல்வெளியிலிருந்து கிளம்பிய மங்கோலியர்கள் மத்திய ஆசியாவிலும், பாக்தாதிலுமிருந்த இஸ்லாமிய அரசுகளை நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் செய்தார்கள்.

islamic-war

அதே சமயத்தில் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அரேபியாவிலிருந்த இஸ்லாமிய அதிகார வட்டத்திலிருந்து விலகியிருந்தார்கள். பாக்தாத், எகிப்து, சமார்க்கண்ட் போன்ற பகுதிகளை ஆண்ட காலிஃபாக்களுடன் பெயரளவிற்கு மட்டுமே தொடர்புகள் கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வலிமையான அரசாங்கம் இல்லாததும் இந்தியா முழுமையாக வெற்றி கொள்ளப்படாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

வரலாற்று ரீதியில் ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. சுல்தான் முகமது அதன் மீது 1000-ஆம் வருடம் படையெடுத்து அதனை ஒரு நிரந்தர இஸ்லாமிய நாடாக்கினான். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமியர்கள் ஆஃப்கானிஸ்தானைத் தங்களின் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். இந்துக்களும், பவுத்தர்களும் வாழ்ந்த ஆஃப்கானிஸ்தான் இன்றைக்கு முற்றிலும் அதன் அடையாளங்களை இழந்துவிட்டது. இதே நிலைமைதான் பாகிஸ்தானிலும் நிலவுவதனைக் காணலாம். இந்து அரசர்களை வெற்றி கண்டு இஸ்லாமிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து அங்கிருந்த இந்துக்கள் தங்களின் அடையாளத்தை இழந்து காணாமல் போனார்கள். 1998-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 96.28 சதவீத பாகிஸ்தானியர்கள் முஸ்லிம்களே.

இந்தியாவில் அக்பரின் காலத்தில் மட்டுமே ஓரளவிற்குப் பெயர் சொல்லும் வகையில் நாடு முழுவதிலும் இஸ்லாமிய ஆட்சி நிலவியது என்று சொல்லலாம் (மலபார், கோவா போன்ற பகுதிகளைத் தவிர்த்து). அக்பரின் மதச் சார்பற்ற கொள்கைகள் இதற்கு உதவியிருக்கக்கூடும். இஸ்லாமை விரட்டியடிக்கும் வகையில் அவரின் சொந்த மதமான தீன்-இலாஹியை நிலை நிறுத்த முயன்ற அக்பரின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அக்பரின் கொள்கைகள் அவரது மகனான ஜஹாங்கீரின் காலத்தில், பேரனான ஷாஜஹானின் காலத்திலு மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் இஸ்லாமிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய மதமாற்றங்களும் துவங்கப்பட்டன. அவுரங்கசீப்பின் காலத்தில் மீண்டும் வாள்முனை மதமாற்றங்கள் வட இந்தியாவில் முழுவேகத்துடன் செய்யப்பட்டது. இதனைக் குறித்து ஏற்கனவே கண்டிருக்கிறோம்.

ஔரங்கசீப் ஆணையால் மதுரா கோயில் உடைப்பு
ஔரங்கசீப் ஆணையால் மதுரா கோயில் உடைப்பு

அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு, இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு, சிறு பகுதிகளில் ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் ஆட்சியை விரிவுபடுத்தி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இந்துக்களின் மீது இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறையும், கட்டாய மதமாற்றங்களும் முடிவிற்கு வந்தன. அவுரங்கசீப்பின் காலத்திலேயே கூட இந்தியாவெங்கும் அவனுக்கு எதிரான கலகங்கள் வெடித்தன. இஸ்லாமிய அதிகாரம் அவுரங்கசீப்பின் காலத்தில் ஏறக்குறைய முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் அவுரங்கசீப்பின் ஐம்பது ஆண்டுகால கொடுங்கோலாட்சியும், கட்டாய மதமாற்றங்களும் இந்திய மக்கள் தொகையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வட இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டிருந்தார்கள்.

இதே சூழ்நிலை தொடர்ந்திருக்குமானால் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த நேரத்தில் குறுக்கிட்ட பிரிட்டிஷ்காரர்களின் பங்கு முக்கியமானதாகிறது. அவர்களே இந்திய துணைக்கண்டத்து இந்துக்களை இஸ்லாமிய மதமாற்றக் கொடூரத்திலிருந்து காப்பாற்றியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ச்சியான இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அல்லது ஆட்சி எவ்வாறு ஒரு பகுதியின் அல்லது நாட்டின் முகத்தை மாற்றியமைக்கும் என்பதற்கு 1947-ஆம் வருடம் இந்தியாவிலிருந்து பிரிந்த மேற்கு மற்றும் கிழக்கு (இன்றைய பங்களாதேஷ்) பாகிஸ்தானை உதாரணமாகக் கூறலாம். பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இப்பகுதிகளில் தொடர்ந்து நடந்த கட்டாய மதமாற்றங்களும், காஷ்மீரைப் பிரிக்கும் எண்ணத்துடன் 1950-ஆம் ஆண்டிலிருந்து துவக்கப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாதத்தினால் விரட்டப்பட்ட இந்துக்களும் இவ்விரு நாடுகளில் இந்துக்களின் ஜனத்தொகை குறையக் காரணமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பதினை செய்தி ஊடகங்கள் வழியாக அறியலாம். பாகிஸ்தானிய மைனாரிட்டி உரிமைகள் கமிஷனின் ஒரு அறிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்தது 600 இந்து மற்றும் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவிக்கிறது. மத அடிப்படைவாதிகள் கொடுக்கும் அழுத்தங்களும், பொருளாதார நிர்பந்தங்களும் நிறைந்த பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இருக்கும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்துக்கள், வாழ வழியின்றி முஸ்லிம்களாக மாறும் கொடுமை தினமும் நடக்கிறது. இதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இவ்விரு நாடுகளிலும் இந்துக்களின் தொகை பெரிதும் குறைந்துவிட்டது.

2001-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவான பங்களாதேஷ் தேசியக் கட்சியானது, பங்களாதேசி இந்துக்கள் அவாமி லீக் கட்சியை ஆதரித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, ஜமாத்-எ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து கொண்டு நடத்திய கொலைவெறித் தாக்குதல்களாலும், பொது இடங்களில் அவமானப்படுத்துதலாலும், படுகொலைகளாலும், கற்பழிப்புகளாலும், கொடூரமான துன்புறுத்தல்களாலும் பங்களாதேசி இந்துக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். பங்களாதேசின் ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகையின் ஒரு தகவலின்படி, போலா மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறயை 1000 இந்துப் பெண்கள் மேற்கூறிய அமைப்புகளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இதன் காரணமாக, 2001-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்து இலட்சம் (5,00,000) பங்களாதேசி இந்துக்கள் அங்கிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு ஓடி வந்தார்கள்.

(தொடரும்)

One Reply to “வன்முறையே வரலாறாய்…- 32”

  1. After Aurangazeb, it was not the British, who ruled India. It was the Peshwas, who ruled most of northern India (from Bengal to parts of Afghanistan). This fact is ignored by our secular historians and those who frame our text books.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *