வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

வால்மீகியின் ராமர் வழிபாட்டுக்கு உரியவரா?

தினமலர் ஆன்மீகம் சேனலில் இராமாயணம் குறித்த பல கேள்விகளுடன் நண்பர் விஷ்ணு சர்மா என்னுடன் நிகழ்த்திவரும் தொடர் உரையாடலின் சமீபத்திய பகுதியின் தலைப்பு இது. வீடியோவின் தலைப்புக்கான பின்புலத்தை அதிலேயே கூறியிருக்கிறேன்.

சில வருடங்கள் முன்பு ஒரு கம்பன் கழக மேடையில் ஒரு பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் “வால்மீகியின் இராமன் வழிபாட்டுக்கு உரியவன் அல்லவன், அவன் பச்சையான இராமன், கொச்சையான இராமன்.. கம்பன் தான் இராமனை பண்புள்ள தெய்வமாக ஆக்கினான்” என்றெல்லாம் படு அபத்தமாக உளறியதைக் கேட்க நேர்ந்தது.

வால்மீகி ராமாயணத்தின் ஒருசில பக்கங்களையாவது இந்த பிரபல பேச்சாளர் புரட்டிப் பார்த்திருப்பாரா தெரியவில்லை. அது போகட்டும், பொதுப்புத்தியை சற்று உபயோகித்திருக்கலாம். கம்பரின் காலம் பொ.யு 12ம் நூற்றாண்டு. அதற்கு 5-6 நூற்றாண்டுகள் முன்பிருந்தே பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமபிரானைப் பாடியிருக்கிறார்கள். அதுபோக, கம்பன் என்ற பெயரையே கேட்டிராத பாரதநாட்டின் பல பகுதிகளில் இராமர் வழிபாடு பொ.யு முதல் நூற்றாண்டுக்கும் முன்பாகவே நிலைபெற்றிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்த அடிப்படை விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லாமல் அவர் இஷ்டத்துக்கு அடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.

இதைப்பற்றி வேதனையுடன் நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டபோது, தமிழ்நாட்டின் பெரும்பாலான “கம்பன்” பேச்சாளர்கள் இப்படித் தான் பேசுவார்கள் சார் என்றார். வருத்தமாக இருந்தது. இதைப் பற்றிய பிழையான புரிதல் வெகுஜன அளவில் ஏற்பட்டு விட்டது என்று தோன்றியது. எனவே, இந்தப் பகுதியில் “வால்மீகி – கம்பர் ஒப்பீடு” என்பதைச் செய்வதற்கான சரியான வழிமுறை என்ன என்பதைப் பற்றி பேசியிருக்கிறேன்.

இத்தொடர் உரையாடலின் அனைத்து வீடியோக்களையும் (முந்தையவை, இனி வருபவை) கீழ்க்காணும் Playlist மூலம் காணலாம்.

முந்தைய பகுதிகளின் வீடியோக்கள் கீழே:

தமிழகத்தில் இராமாயணத்தை அறிமுகம் செய்தவர் கம்பரா?

தென்கிழக்கு ஆசியாவில் இராமாயணம்

வால்மீகி ராமாயணமே பிரமாணம் – ஏன்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *