சிவபிரான் சிதைத்த சிற்றில்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான அழகிய சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். பிள்ளையை, குழந்தையைத் தமிழால் பாடுவது என்பதே பிள்ளைத்தமிழ் எனப்படும். எங்கும் நிறைந்து விளங்கும் பரம்பொருளை எத்தனையோ வடிவங்களில் வழிபடுகின்றோம். அவற்றுள்  தெய்வத்தைச் சிறு பிள்ளையாக்கி, அது ‘குறுகுறு’ நடந்து, ‘சிறுகை நீட்டி’ மழலை பேசி வர நாம் அனுபவிக்கும் இன்ப வெள்ளம் மனிதப் பிறவி அனுபவிக்கும் இன்பங்களுள் தலையாயது எனலாம்.

பிள்ளைத்தமிழ், ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப் படும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனப் பத்து பருவங்களாக ஆண்பால் பிள்ளைத் தமிழிலும், கடைசி மூன்று பருவங்கள் அம்மானை, நீராடல், ஊசல் எனும் மூன்று பருவங்களாகப் பெண்பால் பிள்ளைத் தமிழிலும் வரும். தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்களை எல்லாம் புகழ்ந்து பருவங்களுக்கேற்பப் பொருந்தப் பாடுவது வழக்கம். இலக்கிய நயமும், பக்தி ரசமும், தெய்வ தத்துவங்களும் வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் நிறைந்து விளங்கும் கற்பனைக் கருவூலங்கள் இவை.

muruga07கண்ணபெருமான், உமையம்மையின் பல அவதாரங்களான மீனாட்சி, காந்திமதி, பெருந்திரு முதலான அம்மையர், பல பதிகளில் குடி கொண்டிருக்கும் முருகப் பெருமான், என எல்லாத் தெய்வங்களின் மேலும் பிள்ளைத்தமிழ் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் பிறப்பிலிப் பெருமான் ஆதலால் சிவப் பரம்பொருளுக்கு மட்டும்  பிள்ளைத்தமிழ் எழுதப்படாது என்பது மரபு.

ஆண்பால் பிள்ளைத்தமிழில் தான் சிற்றில் சிதைத்தல் என்ற பருவமும் அதன் தொடர்பான விளையாட்டும் கூறப்படும். பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிறுவீட்டை, ஆண்குழந்தைகள் சிதைத்து மகிழ்வார்கள். பெண் பிள்ளைகள் இதனால் அவர்களிடம், “சிற்றில் சிதையேலே,” என வேண்டுவதாக பாடல்கள் இப்பருவத்தில் அமையும்.

குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகு திகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.

சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர்.  மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில.

உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை  முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ!

உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து,  புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்ற வெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது  மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்!

வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள்.

(உ- ம்) திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்.

‘கூவிப் பரிந்து முலைத்தாயர்…
        …………………………………..
        ஆவித்துணையே வழியடிமை
                        அடியேம் சிற்றில் அழியேலே
                அலைமுத் தெறியும் திருச்செந்தூர்
                        அரசே சிற்றில் அழியேலே,’ என வேண்டுவர் சிறுமியர்.

அல்லது சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

        சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய எட்டுச்
                        சுவர்க்கால் நிறுத்திமேருத்
                தூண்ஒன்று நடுநட்டு வெளிமுகடுமூடிஇரு
                        சுடர்விளக்கு இட்டுமுற்ற
        எற்றுபுன லில்கழுவு புவனப்பழங்கலம்
                        எடுத்துஅடுக் கிப்புதுக்கூழ்
                இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
                        இழைத்திட அழித்தழித்தோர்
        முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
                        முன்னின்று தொந்தமிடவும்
                முனியாது வைகலும் எடுத்தடுக்கிப்பெரிய
                        மூதண்ட கூடமூடும்
        சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
                       செங்கீரை ஆடியருளே
                தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
                        செங்கீரை ஆடியருளே.

meenakshi-deviதாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும். சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான்.

எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன.

ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் இப்பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை  தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது.  அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது எனக் கொள்ளலாம்.

        எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
        எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
        எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
        தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே (திருமந்திரம்)

சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்திருப்பதால், எல்லாவற்றிலும் பொருந்தி நின்று ஐந்தொழில்களையும் தனது சக்தியாலே செய்கின்றான் எனலாம். சிவமும் சக்தியும் ஒன்றே; அந்த ஒன்றான இறையே  சிவம், சக்தி என இரண்டாகப் பிரிந்து நிற்கின்றது. ‘ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,’ என்ற இன்னொரு திருமந்திரப் பாட்டின் மூலம் இதை அறிந்து கொள்ளலாம். ஆக, சக்தியின் வடிவில் இறைவன் திரும்பத் திரும்ப உலகங்களைப் படைத்துக் காக்கின்றான்; பின் மறைத்துச் சிறுவர்கள்  சிற்றில் சிதைப்பது போல விளையாட்டாக அழிக்கின்றான். இச்சமயம் அவனது இயக்கம் நடன வடிவில் இருப்பதால், சக்தியான அன்னை சிவகாமி, அசைவற்று, சிவம் போல அந்த நடனத்தைக் கண்டவண்ணம் நிற்கிறாள். பின்பு அவன் இன்னும் தொடர்ந்து  அவள் முன்பு ஆனந்தக் கூத்தாடுகின்றானே, தாண்டவமாடுகின்றானே, எதற்காக? விஞ்ஞான நோக்கில் கண்டால் இயற்கையின் இடையறாத சுழற்சியே இந்தத் தாண்டவம் என்பது புலப்படும்.

        உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
        செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
        சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
        இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.(திருமந்திரம்)

ஆகாயத்திலும் உத்தமர் உள்ளத்திலும் அவர்கள் உய்வுபெறும் வண்ணம் நடனமிடுபவன் அவன்; செம்பொன் நிறமான ஆகாயத்தில் பிரபஞ்சப்போரில் (சக்கரமாகச் சுழன்று வரும் பிறப்பிலும் இறப்பிலும்) ஈடுபட்டுள்ள சீவன்களுக்கு தோன்றாத் துணையாக விளங்கியபடிக் கூத்தாடுகிறான். (மீனாட்சியை ‘தோன்றாத் துணைக்கோர் துணையாகி துவாதசாந்தப் பெருவெளியில்’  விளங்குபவளாக குமரகுருபரர் பிறிதோரிடத்தில் குறிப்பிடுகிறார்). இவ்விதமாகவே அவன்  ஆன்மாக்களைத் தன் திருவடிச் சம்பந்தப் படுத்திக் கலந்து நடமிடுகிறான்.

        மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
        பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
        சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
        ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே (திருமந்திரம்)

‘மன்றினுள் நடனமிடும் மாணிக்கக் கூத்தன்; வண்தில்லைக் கூத்தன். உயர்ந்த பெரியோர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுபவன்; திருச்சடை கொண்ட கூத்தன்; அறிவுப் பேரொளி பொங்க உயிர்கள் அனைத்தும் நன்மை பெறுமாறு சிவானந்தத் தேனை அள்ளிச் சொரிந்தபடி நடமாடும் ஆணிப் பொற்கூத்தனை யாரால் உணர்ந்து அளவிட்டு அறிந்துரைக்க இயலும்?’ என்பார் திருமூல நாயனார்.

ஆகவே, சிவபிரான் சிற்றில் சிதைப்பது என்ற சிறு விளையாட்டை பிரபஞ்சப் பெருநடனத் தத்துவத்தைப் பொதிந்து நமக்கு குமரகுருபரனார் அருளியுள்ளார் என்றே தோன்றுகிறது. படிக்கப் படிக்கப் புதுக் கருத்துக்களைச் சிந்தையில் ஊற்றெடுக்க வைக்கும் தெய்வப் பாடல்கள் இவை.

7 Replies to “சிவபிரான் சிதைத்த சிற்றில்”

 1. Excellent, beautifully and elegantly described and summarised! Can any one translate it in English for the wider audience to uphold the poetry richness in Tamil.

 2. அருமை. பிள்ளைதமிழ் மூலம் மிகப் பெரிய கருத்துக்களை எடுத்து இயம்பிய குமரகுருபரர் அடி போற்றி! அவர்தம் பெருமையை எடுத்து இயம்பிய மீனாக்ஷி பால கணேஷ் அவர்கள் அன்னை மீனாக்ஷி அருள்பெற வேண்டுகிறேன்.

 3. தங்கள் அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி. இது எல்லாமே மீனாட்சி அன்னையின் கருணையின் வெளிப்பாடு தான் எனக் கருதுகிறேன்.

 4. மிக அருமை. மேலும் எழுதுங்கள்.
  நன்றி.

 5. மிக நல்ல விளக்கம்.

  சிதைத்த சிற்றில் கருப்பொருளை நல்லதொரு
  கதைமூலம் உலகோர்க்கு விளக்கி -தொட்டிலில்
  உதைக்கும் தெய்வக் குழந்தையாம் மீனாக்ஷி
  விதைத்த அருளில் நீவிர் வளர வாழ்த்துவமே !

 6. ஐயா. பாலகணேஷ்.. என்ன மனிதர் ஐயா நீர்? பாதம் பணிகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *