எப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.
கவிகுஞ்சரபாரதி (1810 – 1896)
கர்நாடக சங்கீத உலகில் இந்தப் பெயர் மிகவும் அறிமுகமான பெயர். இவர் பாடல்கள் இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருபவை. பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இந்த கவி குஞ்சர பாரதியார்.
இவருடைய முன்னோர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து குடிபெயர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்கரை எனும் ஊருக்குக் குடியேறினார்கள். 17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட ரகுநாத சேதுபதி மஹாராஜா இவருடைய முன்னோர்களுக்கு இந்த கிராமத்தை கொடையாக அளித்திருக்கிறார்கள். கவி குஞ்சர பாரதியின் தந்தை வழித் தாத்தாவின் பெயர் கோட்டீஸ்வர பாரதி. தந்தையார் பெயர் சுப்பிரமணிய பாரதி. தாத்தாவின் பெயரே இவருக்கும் கொடுக்கப்பட்டதால் இவரை பெயர் மாற்றி அழைத்து வந்தனர். இந்தக் குடும்பத்தில் அனைவருமே இசையில் வல்லவர்கள். கவி குஞ்சர பாரதியின் தாய்வழிப் பாட்டனார் பெயர் நந்தனூர் நாகபாரதி. இவருடைய தந்தை பாட்டானார் அனைவருமே தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இவருடைய பெற்றொர்கள் குழந்தைக்காக தவமிருந்து பெருங்கரைக்கு அருகிலுள்ள கொடுமாலூர் எனுமிடத்தில் உள்ள முருகனை வழிபட்டு இந்தக் குழந்தை பிறந்ததால், இவன் முருகனின் கொடை என்று கருதினார்கள். இவரது இளம் வயதிலேயே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் முறையாகப் படித்தார். இவருக்கு மொழிப் புலமையும், கவி இயற்றும் திறமையும் இயற்கையிலேயே அமைந்திருந்தது. இசையிலும் இவர் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் இப்படி பல்துறை வித்தகராகப் பரிமளிக்கத் தொடங்கியதுமே, அப்போது பிரபலமாக இருந்த மதுரகவி பாரதியார் என்பவருடன் அறிமுகமானார். இவ்விருவரின் நட்புறவின் பயனாக கவி குஞ்சர பாரதி தனது 12ஆம் வயதிலேயே கவிதைகள் இயற்றத் தலைப்பட்டு விட்டார். தமிழில் கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் கூட இயற்றத் தொடங்கினார். இவர் பாடல்களில் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைத்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது.
இவன் ஆரோ (காம்போதி) – சுகுணா வராதாச்சாரி குரலில்
இவருடைய 18ஆம் வயதில் இவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அபாய கட்டத்தை அடைந்து நினைவிழந்து கிடந்தபோது, இவருடைய கனவில் அவ்வூரின் கிராம தேவதை தோன்றி தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடுமாறு கேட்டதாம். மறுநாள் அவரது உடல்நிலை படிப்படியாகத் தேறத் தொடங்கியது. அதன் பின் தன்னுடைய ஆபத்தான கட்டத்தில் தன் கனவில் தோன்றித் தன்னைப் பாடுமாறு பணித்த அந்த கிராம தேவதையின் மீது அடுக்கடுக்காகப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். 1840இல் இவர் இயற்றிய “அழகர் குறவஞ்சி” மிகவும் பிரபலமடைந்தது. இந்த குறவஞ்சி இலக்கியம் முதன்முதலாக சிவகங்கை ஜமீந்தாரின் அவையில் அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகு இந்தக் குறவஞ்சி பிரபலமடைந்து தொலைதூர ஊர்களில் எல்லாம் கூட இது பாடப்பட்டு வந்திருக்கிறது.
அப்போதைய சிவகங்கை மன்னர் கெளரிவல்லபர் தன்னுடைய அவையில் புலவர்கள், பண்டிதர்கள் ஆகியோர் நிரம்பியிருக்கிற அவையில் வந்து தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட கவி குஞ்சர பாரதியும் அரசர் அவைக்குச் சென்று பல பாடல்களை மன்னர் பேரில் பாடினார். இவருடைய திறமையைப் பாராட்டி அவர் இவருக்குக் “கவி குஞ்சரம்” எனும் விருதினை வழங்கி இவரைத் தனது சிவகங்கை சமஸ்தானத்து ஆஸ்தான வித்வானாக நியமித்தார். அது முதலாக இவர் அந்த சிவகங்கை அவையில் அடுத்து வந்த சத்ரபதிபோதகுரு என்பவரின் காலத்திலும் தொடர்ந்து அந்த சிறப்போடு அங்கு இருந்து வந்தார்.
இனிமேல் அவர்க்கும் (பைரவி) : எஸ்.பி.ராஜாயி குரலில்
“வேங்கைக் கும்மி” என்ற பெயரில் ஒரு கும்மி அடிக்கும் பாட்டையும் இவர் இயற்றினார். சிவகங்கை மன்னர் ஒரு முறை 16 அடி நீளமுள்ள வேங்கையொன்றை வேட்டையாடிக் கொன்றாராம். மன்னருடைய திறமையைப் புகழ்ந்து பாராட்டி இவர் இந்த வேங்கைக் கும்மியை இயற்றினாராம். இந்த கும்மிப் புகழ் மாலையைப் பாராட்டி சிவகங்கை அரசர் இவருக்கு கொட்டாங்கச்சியேந்தல் எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல், இவரை ஒரு பல்லக்கில் உட்காரவைத்துப் பரிசுப் பொருட்களையும் ஏராளமாகத் தந்து அந்த கிராமம் வரையிலும் அரச குடும்பத்தார் பின் தொடர இவரை அங்கு கொண்டு போய் விட்டனராம்.
இவரது புகழைக் கேள்விப்பட்டு இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா இவரைத் தங்கள் ஊருக்கும் அழைத்து, அந்த சமஸ்தானத்து ஆஸ்தான வித்வானாகவும் நியமித்து பெருமை சேர்த்தார். இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அரசர் சேதுபதி மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவர் “ஸ்கந்தபுராண கீர்த்தனைகள்” எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 55 ஆகியிருந்தது. அதன் பின்னர் இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் தானுண்டு தன் இசையுண்டு என்று கவிகள் இயற்றிப் பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஒருவர் ஏதாவதொரு துறையில் பிரபலமடைந்து விட்டாலே அவரைப் பற்றி பல பொய்யும், மெய்யும் கலந்து செய்திகள் வெளிவருவதுண்டு அல்லவா? அந்த வகையில் இவரைப் பற்றி சொல்லப்படும் செவிவழிக் கதையொன்று உண்டு. ஒரு முறை இராமநாதபுரம் சமஸ்தானம் மழையின்றி வறண்டு கிடந்த நிலையில் இவர் ஒரு வெண்பாவைப் பாடி மழையை வரவழைத்தார் என்கிறார்கள். இவர் தன்னுடைய 86ஆம் வயதில் சுற்றத்தார் அனைவரும் அவ்ரைச் சுற்றி சூழ்ந்திருக்க அமைதியாகத் தன் பூதவுடலை நீத்து அமரர் ஆனார்.
எல்லாம் அறிவேன் – பதம் (கல்யாணி): நாட்டியம்
இவரது படைப்புகளில் பெருமை சேர்ப்பவைகளில் “அழகர் குறவஞ்சி”யும் ஒன்று. திருமாலிருஞ்சோலைமலையில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப்பட்ட குறவஞ்சி இலக்கியம் இது. “அடைக்கலமாலை”, “கயற்கண்ணிமாலை” ஆகியவை மதுரை மீனாட்சியம்மன் மீது பாடப்பட்டவை. “பேரின்ப கீர்த்தனைகள்” எனும் தொகுப்பு இவரது பெருமையை பறைசாற்றும் நூலாகும். இவருடைய பாடல்கள் சிலகாலம் முன்பு வரை தலைசிறந்த சங்கீத வித்வான்களால் சபைகளில் பாடப்பட்டு வந்திருக்கின்றன. தற்போது கவி குஞ்சர பாரதியின் பாடல்களைப் பாடுவது சற்று குறைந்து போயிருப்பதைப் போலத் தோன்றுகிறது. மீண்டும் அவரது அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டால், அது அந்த மகானுக்குச் செய்யும் கைமாறாகக் கருதலாம்.
முக்கியமான ஒரு செய்தி, பல வாக்யேயக் காரர்கள் செய்வது போல, இவரும் இவருடைய சாகித்தியங்களில் ‘கவி குஞ்சரம்’ எனும் முத்திரையை பதித்து வைத்திருக்கிறார். காலவோட்டத்தில் எத்தனையோ வாக்யேயக் காரர்கள் தோன்றினாலும், கவி குஞ்சர பாரதி போன்ற மகான்கள் ஒளி வீசிக்கொண்டுதான் இருப்பார்கள். வாழ்க கவி குஞ்சர பாரதி புகழ்!
இவருடைய பால்களில் அமரத்துவம் பெற்றுவிட்ட பல சாகித்தியங்கள் உள. அவைகளில் குறிப்பிடத் தக்கவை:
1. சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த “எல்லோரையும் போலவே”
2. பேகடா ராகத்தில் அமைந்த “என்னடி பெண்ணே உனக்கு”
3. மோகன ராகத்தில் அமைந்த “சந்நிதி கண்டு”
4. கல்யாணி ராகப் பாடலான “தெய்வம் உண்டென்று”
5. காம்போஜி ராக “இவனாரோ?”
6. கலாவதி ராகத்தில் அமைந்த “சித்தி விநாயகனே”
அன்புள்ள அய்யா,
வண்ணக்கம்!! பபனச சிவம் பற்றி அழுத்துமாறு
அவ்வளவாகத் தெரியாத ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி!
ஏதாவது ஆடியோ இணைப்புகளும் தர முடியுமா?
நல்லதொரு தகவல் நன்றி இவர் பாடல்களை சங்கீத வித்வான்கள் பாடீருந்தால் இதன் ஆடியோ விவரங்கள் வழங்கினால் சங்கீத கச்சேரிகளில் பாடி எல்லோரும் மகிழலாம் இவைகள் கிடைக்கும் இடங்கள் தெரிவித்தால் நலம்
இதில் தெரிவது என்னவென்றால் – தமிழ் சங்கீதம் 16-17 ஆம் நூற்றாண்டில் இருந்தே இருக்கிறது. ஏதோ ஒரு சாரர் தமிழுக்கு விரோதி என்பது ஒரு தவறான கருத்து.
தமிழ் இசை சங்க காலத்திற்கும் முன்பிருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இசைத்தமிழ் , முத்தமிழில் ஒன்று.
அன்புள்ள திரு -தனசேகரன், நான் கூறியது – இன்றைய கீர்த்தனை மரபு பற்றி. அதை அவ்வாறு கூறாதது என் தவறுதான். இசைத்தமிழின் தொன்மை தங்கள் கூறியபடியே பழமையானதே.
தமிழிசை தொன்மையானது. சங்க காலத்துத் தமிழிசை பற்றி அதிகம் அறிய இயலவில்லை. சங்க இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடல் பரிந்த பாட்டாக இசையுடன் அமைந்தது ஆகும். சங்க காலத்தில் இசைக்கலைஞர்கள் ராக தாளத்துடன் பாடி வந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பட்ட பரிபாடலில் இசையாசிரியர்கள் பண்களை பாலையாழ், நோதிறம், காந்தாரம் என வகுத்தனர். இவை கர்நாடக இசையின் ராகங்களில் இடம் பெற்றுள்ளன. இன்று கர்நாடக இசைக்கலைஞர்கள் பாடும் தோடி என்பது மிகப்பழமையான தமிழிசை ராகமாகும். தக்கேசி எனப்படும் தமிழிசை ராகம் இன்று கர்னாடக இசையில் வழங்கி வரும் காம்போதி ராகமாகும். கி.பி. 7-8ம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட தேவாரம் திருவாசகம் முதலியன பல வகைப்பட்ட பண்களைக் கொண்டு பாடப்பட்டனவாகும்.
இந்த மரபைத் தொடர்ந்தே இடைக்காலத்தும் தற்காலத்தும் தமிழில் அழகான பாடல்களை இயற்றிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார், மாரிமுத்தா பிள்ளை முதலியோர், எல்லாரும் புரிந்து கொண்டு பாடும் வண்ணம் எளிமையான சொல் நயத்தில் அருமையான தத்துவங்களைப் பொதிந்து வைத்து இறைவன் மீது பாடல்களை இயற்றினர். இவற்றுள் பல பாடல்கள் அக்காலத்து சங்கீத வித்துவான்களுக்குத் தெரிந்திருக்கிறது. பிறகு வழக்கொழிந்தும் போயுள்ளன.
கவி குஞ்சர பாரதியின் இன்னும் ஒரு பாடல்: சுகுணா புருஷோத்தமன் பாடியுள்ள ‘திருக்கல்யாணம்’ எனும் பாடல்- மோஹன ராகத்தில் அமைந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகடாக வெளிவந்தது.
நாரதா, ஹ்ம்ம்… இதை வைத்து மீண்டும் தமிழிசை விவாத விளையாட்டை துவங்குகிறீர்கள்.
எல்லாம் நன்மைக்கே பிரபோ …!!
கர்நாடக இசை தமிழிசையை அழித்துவிட்டது
கர்நாடக இசை தான் தமிழிசை
தமிழில் பாடப்படுவது எல்லாமே தமிழிசை
தமிழிசை என்பது வேறு கர்நாடக இசை என்பது முற்றிலும் வேறு
கர்நாடக இசை என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் இசை
கர்நாடக இசை என்பது தமிழர்கலின் இசை அல்ல
தமிழிசை என்பது கர்நாடக இசையை விட பல படி மேலான ஒன்று
கர்நாடக இசை வேதத்திலிருந்து வந்தது
தமிழிசை சிவனின் உடுக்கிலிருந்து வந்தது
தமிழ் செய்யுள்கள் எல்லாமே இசைப்பாடல்கள் தாம்
உலகின் முதல் மூத்த இசை தமிழிசைதான்
உலகத்தோற்றத்தின் மூல இசை கர்நாடக இசைதான்
குறிப்பிட்ட மொழிகளில் பாடுவது மட்டுமே தெய்வத்திடம் அதை கொண்டு சேர்க்கும்
கர்நாடக இசையை தமிழில் பாடினால் அவ்வளவாக ருசி இல்லை
என்றெல்லாம் சொல்பவர்கள் வரிசையாக தகுந்த சான்றுகளோடு வரவும்.