மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

மூலம்: வால்டர் வுல்லன்வெபர்

தமிழில்: அருணகிரி

இந்தக்கட்டுரை, ஜெர்மனியைச்சார்ந்த ஸ்டெர்ன் (STERN) என்கிற ஊடக நிறுவனம் 2003-இல் வெளியிட்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாக்கி எழுதப்பட்டது. இதில் வெளிச்சம் போடப்பட்டுள்ள பல விஷயங்களைக்குறித்து புத்தகங்களும், கார்டியன் முதலான பத்திரிகைகளில் கட்டுரைகள் பலவும், சானல் 4 டாக்குமெண்டரிகளும் வெளிவந்து விட்டன. ஆனால் இன்றுவரை இந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்”  (Missionaries of Charity)  அமைப்பிடமிருந்து எந்த பதிலும் கிடையாது.

அடைப்புக்குறிக்குள்  “மொ.பெ.” என்று குறிக்கப் பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புக்கள்.

இனி கட்டுரை.

ஏழைகளின் தேவதை என்று கருதப்பட்ட மதர் தெரசா சில வருடங்கள் முன்பு காலமானார். வேறு எந்த சேவையமைப்புக்கும் இல்லாத அளவு இன்றும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்”  (Missionaries of Chrity) அமைப்புக்கு பணம் வந்து கொட்டுகிறது. ஆனால் நோபல் பரிசு வென்ற இந்த  அம்மையார் செல்வத்தை உதறித்தள்ளி வறிய வாழ்க்கையை ஏற்பதாக அறிவித்தவர்.  அப்படியென்றால், அவரது அமைப்புக்கு வந்த பணமெல்லாம் எங்கே சென்றது?

mothr-teresa-trib-art-web-tசொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அங்கே தெரசா அவர்கள் கட்டாயம் இருப்பார்கள்தான். மதர் தெரசா என்று பிற்காலத்தில் அன்புடன் அழைக்கப்பட்ட மாஸடோனியாவைச்சேர்ந்த ஏக்னஸ் கான்ஷ்வா போஆஷ்யு ஜனவரி 6, 1929-இல் கத்தோலிக்க லொரெட்டோ அமைப்பின் பெண்துறவியாக கல்கத்தா வந்திறங்கிய போது அவருக்கு வயது பதினெட்டு. 68 வருடங்கள் கழித்து அவர் இறந்தபோது, இந்திய அரசு அவருக்குத் தந்த இறுதி மரியாதையில் கலந்துகொள்ளும் பொருட்டு  உலகத் தலைவர்கள் பலரும் கல்கத்தாவில் கூடினர். இந்த 68 வருடங்களில் தெரசா கத்தோலிக்க சர்ச்சின் வரலாற்றிலேயே வெற்றிகரமானதொரு அமைப்பை நிறுவி, நோபல் பரிசு பெற்று, சமகாலத்தின் மிகப்புகழ் வாய்ந்த கத்தோலிக்க ஆளுமையாக உருவாகி இருந்தார்.

இப்படி ”நினைவுச்சின்னமாகி” விட்ட ஒருவர்மீது சந்தேகம் வரலாமா என்ன? ஆனால் கல்கத்தா மக்கள் பலரும் அவ்வாறு சந்தேகப்படுகிறார்கள்தாம்.

உதாரணத்திற்கு, பற்களெல்லாம் கொட்டிப்போய் கல்கத்தா சேரியில் வாழ்க்கை நடத்தும் சமிதியை எடுத்துக்கொள்வோம். எந்த நகரின் ஏழைகளுக்காக மதர் தெரசா தன் வாழ்வை அர்ப்பணித்ததாகச்சொல்லப்பட்டாரோ அந்த கல்கத்தாவின் ”ஏழைகளிலும் ஏழை”களில் ஒருவர் சமிதி. சேவை அமைப்பு ஒன்று கொண்டு வந்து தரப்போகும் அரிசி பருப்புக்காக கையில் பிளாஸ்டிக் பையுடன் கல்கத்தாவின் பார்க் தெருவில் ஒரு கிலோமீட்டர் நீள வரிசையில் காத்திருப்பவர். ஆனால் அதைக்கொண்டு வந்து தரப்போவது மதர் தெர்சாவின் அமைப்பு கிடையாது. தினமும் 18000 பேருக்கு உணவளிக்கும் அஸெம்ப்ளி ஆஃப் காட் என்கிற அமெரிக்க கிறித்துவ அமைப்பு அது.

சமிதியிடம் கேட்டால் ”மதர் தெரசாவா? அவர்களிடமிருந்து எங்களுக்கு ஒன்றுமே கிடைத்தது கிடையாதே. அந்த சிஸ்டர்களிடம் இருந்து ஏதாவது எங்களுக்கு எப்போதேனும் வந்திருக்கிறதா என்று இங்குள்ள சேரிகளில் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். அப்படி ஒருவரையுமே  நீங்கள் இங்கே பார்க்க முடியாது” என்கிறார்.

பண்ணாலால் மாணிக் அவர்களுக்கும் இந்த ஐயம் உள்ளது. ”உங்களைப்போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்களெல்லாம் இந்தப்பெண்மணியை ஏன்  இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப்புரியவில்லை!” என்கிறார். ராம்பகன் சேரியில் ஐம்பத்தாறு வருடங்களுக்கு முன் பிறந்தவர் பண்ணாலால் மாணிக். ராம்பகன் சேரி என்பது முன்னூறு வருடங்களாக இருக்கும் கல்கத்தாவின் ஆகப்பழமையான சேரிப்பகுதியாகும். அங்கே மாணிக் இன்று செய்து காட்டியிருப்பதை ஓர் அதிசயம் என்றே சொல்லலாம்.

மாணிக் அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார்!  கட்டிட வேலைக்கு அவசியமான பொருட்களை வாங்க வேண்டி – ஒரு அபார்ட்மெண்டுக்கு பத்தாயிரம் மார்க்குகள் (ஜெர்மானியப்பணம்) ஆனது- அவர் கையேந்தியது இந்து சேவை அமைப்பான ராமகிருஷ்ணமடத்திடம்தான்.   ராமகிருஷ்ணமடம் அவருக்கு உதவியது. மதர் தெரசாவின் அமைப்பு? “அவரிடம் மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”

கல்கத்தா நகரில் ஏழைகளுக்கு உதவும் 200 சேவை அமைப்புகள் உள்ளன. மதர் தெரசாவின் அமைப்பு இந்த சேவை அமைப்புகளில் பெரிதாக முன்னே நிற்கும் அமைப்பே அல்ல என்பதே உண்மை. ஆனால் இந்த நிதர்சனம் அந்த அமைப்பைப்பற்றி வெளியுலகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பத்துக்கு நேர்எதிராக இருக்கிறது. மதர் தெரசா என்கிற பெயரே கல்கத்தா நகருடன் இறுகப்பிணைந்த பெயரல்லவா. வறுமையை எதிர்த்தபோரில் மும்முரமாய் அவரது அமைப்பு முனைப்பாய் இயங்கும் இடம் கல்கத்தா என்றுதானே நோபல் பரிசு வென்ற இவரது உலகளாவிய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

final_verdict_book_on_mother_teresa”எல்லாம் பொய்”  என்கிறார் அரூப் சாட்டர்ஜி. இவர் ஒரு மருத்துவர். கல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். மதர் தெரசா என்கிற பொய்ப்பிம்பத்தைப்பற்றிய புத்தகத்துக்கான ஆய்வில் உள்ள இவர்   கல்கத்தா சேரிகளில் உள்ள ஏழைகளிடம் சென்று விசாரித்திருக்கிறார் (இப்போது முடிக்கப் பட்டு விட்டது- The Final Verdict என்று அந்தப் புத்தகத்துக்குப் பெயர்  – மொ.பெ) மதர் தெரசாவின் உரைகளை கூர்ந்து ஆராய்ந்த இவர் சொல்கிறார். “எங்கே ஆய்ந்து தேடினாலும் சரி, நான் கண்டதெல்லாம் பொய்களையே- உதாரணத்திற்கு- பள்ளிக்கூடங்கள் பற்றிய பொய்யைப்பார்ப்போம். கல்கத்தாவில் ஐயாயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை நடத்துவதாக மதர் தெரசா அடிக்கடி குறிப்பிடுகிறார். ஐயாயிரம் குழந்தைகள்!- அப்படியென்றால், அது கட்டாயம் பெரிய பள்ளிக்கூடமாகத்தானே இருக்கும், சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள பெரும்பள்ளிக்கூடங்களிலேயே ஒன்றாகக்கூட அது இருக்கும். ஆனால் அந்தப் பள்ளிக்கூடம் எங்கே? நான் அதை எங்குமே காணவில்லை, அது மட்டுமல்ல, அந்தப் பள்ளிக்கூடத்தைப்பார்த்த ஒருவரையும்கூட நான் எங்குமே கண்டதில்லை” என்கிறார் சாட்டர்ஜி.

கல்கத்தாவின் பிற சேவை நிறுவனங்களை விட மதர் தெரசாவின் சேவை நிறுவனங்கள் இருவிதங்களில் வேறுபடுகின்றன: 1) மதர் தெரசாவின் சேவை நிறுவனங்கள் உலகப்புகழ் பெற்றவை, 2) பிற அமைப்புகளைவிட மிக அதிக நிதிஆதாரம் கொண்டவை.

சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத்தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. சேவை அமைப்புகளின் கணக்குகளை சரிபார்க்க வேண்டிய டெல்லி நிதி அமைச்சகம் இந்த அமைப்பின் சரியான கணக்கு வழக்குகளை வைத்துள்ளதா என்று தெரியவில்லை. ”STERN” நிர்வாகம் இந்திய நிதி அமைச்சகத்தை இதுகுறித்து கேட்டதில் இது வெளியிட முடியாத ரகசியத் தகவல் என்று கூறி விவரங்கள் தர மறுத்து விட்டது. (முதன்முறையாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட போது இருந்த நிலை இது.  ஆர்வலர்கள் இது  குறித்து  தகவல்  அறியும்  சட்டத்தின்  அடிப்படையில்  இப்போது  இந்திய  அரசாங்கத்தை  மீண்டும் அணுகிப் பார்க்கலாம் – மொ.பெ).

மதர் தெரசாவின் சேவை அமைப்பிற்கு 6 கிளைகள் ஜெர்மனியில் உள்ளன. அங்கும் நிதி விவகாரங்கள் ரகசிய தகவல்கள்தான். ஜெர்மனி கிளைகளின் செயல் தலைவரான சிஸ்டர் பௌலினிடம் இதுகுறித்து கேட்டபோது, “எங்களிடம்  எந்த அளவு பணம் உள்ளது என்பது- அதாவது நான் சொல்ல வந்தது எந்த அளவு குறைவாக எங்களிடம் பணம் உள்ளது என்பது- மற்ற யாரும்தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லை” என்றார். மரியா டிங்கல்ஹாஃப் என்பவர் இந்த அமைப்பில் கணக்கு வழக்குகளை எழுதுபவராக 1981 வரை தாற்காலிக வேலை பார்த்து வந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது வருடத்திற்கு மூன்று மில்லியன் (ஜெர்மானிய மார்க்குகள்) வந்ததாக நினைவு கூர்கிறார். ஆனால் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள மதர் தெரசா வெளியாட்களை முழுதும் நம்பவே இல்லை. ஆகவே, 1981-இலிருந்து சிஸ்டர்களே கணக்கு வழக்குகளைக் கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். “நான் வெளியேறியபின் உண்மையில் எவ்வளவு பணம் வந்ததென்று தெரியாது, ஆனால் மூன்று மில்லியனின் பல மடங்குகளாக அவை இருந்திருக்கும்தான்” என்று கணக்கிடுகிறார். அவ்வகையில் “ஜெர்மனிக்கார்களைப்பொறுத்தவரை மதர் தெரசா மிகவும் மகிழ்வாகவே இருந்தார்” என்கிறார் மரியா.

நியுயார்க்கின் ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள ”புனித ஆவி இல்லம்”தான் மதர் தெரசாவின் கிளைகளிலேயே பணம் கொழிக்கும் கிளையாக ஒருவேளை இருந்திருக்கக்கூடும். சிஸ்டர் விர்ஜினாக இருந்து பின்னர் சுசன் ஷில்ட்ஸ் என்று சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பியவர்  ஒன்பதரை வருடங்கள் அங்கே பணியாற்றி இருக்கிறார். “எங்கள் நாளின் பெரும்பகுதியை நன்றிக்கடிதம் எழுதவதற்கும், எங்களுக்கு வந்த செக்குகளை கையாள்வதிலுமே செலவிட்டோம்” என்கிறார்.  ”ஒவ்வொரு இரவும், நன்கொடை ரசீது தயாரிப்பதற்காகவே 25 சிஸ்டர்கள் பல மணிநேரங்கள் செலவழிப்பார்கள். ஒரு தொழிற்சாலை போல செயல்படுவார்கள்: சிலர் தட்டச்சு அடிப்பார்கள், மற்றவர்கள் தொகைக்கான பட்டியலைத் தயாரிப்பார்கள்; பிறர் கடிதங்களை அதன் கவர்களில் போட்டு மூடுவார்கள்; வேறு பலர் வந்த செக்குகளைப் பிரிப்பார்கள். 5 டாலரில் இருந்து 100 டாலர் வரை செக்குகள் வரும். பல நேரங்களில் நன்கொடையாளர்கள் செக்குகளை வாசல் கதவில் வைத்துவிட்டுபோய் விடுவார்கள். கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினங்களில் நன்கொடை கட்டுக்கடங்காமல் போய்விடும். போஸ்ட்மேன்கள் சாக்குமூட்டைகளில் கடிதங்களைக்கொண்டு வருவார்கள்- 50,000 டாலர் நன்கொடை செக்குகள் வருவதெல்லாம்கூட அதிசயம் கிடையாது” என்கிறார் சிஸ்டர் விர்ஜின். நியுயார்க் பேங்க் அக்கவுண்டில் ஒருவருடத்தில் மட்டும் 50 மில்லியன் டார்கள் இருந்ததை நினைவுகூர்கிறார். ஒரு வருடத்தில் 50மில்லியன்  டாலர்கள்!- அதுவும் கத்தோலிக்க பெரும்பான்மை இல்லாத ஒரு நாட்டில்! அப்படியென்றால் ஐரோப்பாவிலும், பிற உலக நாடுகளில் எவ்வளவு வசூல் செய்தார்கள்?

உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள்- இந்த வசூல் பலப்பல வருடங்களாகத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று.

நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசாவின் சேவை அமைப்புகள் அதனளவில் பெரும் நிதியைச் செலவழிக்க முடிவதில்லை. ஸிஸ்டர்கள் ஆதரவில் இயங்கும் சேவை அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை- முக்கியமற்றவை- உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.  பெரும்பாலான நேரங்களில்  ”மதர் தெரசா ஹோம்” என்பது சேவைச்செயல்கள் எதுவும் நடைபெறாத, சிஸ்டர்கள் வாழ்வதற்கான ஓர் இருப்பிடமாகவே இருக்கிறது. வெளித்தெரியக்கூடிய அல்லது பயனுள்ளதான உதவிகள் எதுவுமே அவ்விடங்களில் இருந்து தர இயலாது. இந்த அமைப்புகளுக்கு பெரும் நன்கொடைகள் பணமாகவும் பணமற்ற பிற வகையிலும் அடிக்கடி வருகின்றன. உதாரணத்திற்கு, வெளிநாட்டு மருந்துகள் பெட்டி பெட்டியாக இந்திய விமான நிலையங்களில் வந்திறங்குகின்றன. நன்கொடையாக வரும் உணவுப்பொருட்கள், பால் பவுடர், ஆகியவை கல்கத்தா துறைமுகங்களில் கண்டெய்னர்களில் வந்து இறங்குகின்றன. எண்ணிப்பார்க்கவே முடியாத அளவுக்கு ஆடைகளும், உடைகளும் அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நன்கொடைகளாக வருகின்றன. இவ்வாறு வரும் உபயோகப்படுத்தப்பட்ட மேல்நாட்டு உடைகள்  கல்கத்தாவின் நடைபாதைக்கடைகளில் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதைக்காணலாம். நடைபாதை வியாபாரிகள் “மதரிடமிருந்து சட்டைகள், மதரிடமிருந்து பேண்டுகள்” என்று கூவி விற்கிறார்கள்.

(கேதரின் பூ எழுதிய Behind the beautiful forever புத்தகத்திலும் இதுதொடர்பான குறிப்பொன்று உள்ளது: மதர் தெரசாவை முன்னிறுத்தும் சிஸ்டர் பௌலெட்டின் அமைப்புக்கு பம்பாய் சேரிக்கென்று வரும் நன்கொடைப்பொருட்கள் சில நாட்களில் பம்பாய் நடைபாதைகளில் விற்கப்படுவதை ஆவணப்படுத்தி இருக்கிறார்.கேதரின் பூ பம்பாய் சேரியில் பல வருடங்கள் வசித்தவர். 2012-இல் அவர் புத்தகம் வெளி வந்தது. அன்றும் சரி இன்றும் சரி சேரி அனாதைகளுக்காக கிறித்துவ அமைப்புகளுக்கு வரும் நன்கொடைப்பொருட்கள் வெளியே விற்கப்படுவது மாற்றமின்றி தொடரும் ஒன்று என்பதையே இது காட்டுகிறது. அவரது புத்தகம் பற்றிய அருணகிரியின் கட்டுரைக்கான இணைப்பு இங்கே – மொ.பெ.)

india-mother-teresa
Image Courtesy: AP

பிற சேவை அமைப்புகள் போலல்லாமல், தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்” (Missionaries of Charity) அமைப்பு சுய நிர்வாக செலவுக்காக பெரிதாக எதுவும் செலவழிப்பதில்லை, செலவற்ற ஓர் அமைப்பாகவே அது நிர்வகிக்கப்படுகிறது. 150 நாடுகளில் இருக்கும் நான்காயிரம் ஸிஸ்டர்கள், பல மில்லியன் டாலர்கள் கொண்ட இந்த உலகளாவிய சேவை அமைப்பின் வேலையாட்கள். வறுமை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை வாழ்நாள் நெறியாக ஏற்றுக்கொண்டவர்கள் இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. இவர்களுக்கு உதவுவதற்கென்று சாதாரண குடிமக்களில் இருந்து 3 லட்சம் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.

மதர் தெரசா சொல்வதுபடியே பார்த்தால்கூட அவரது அமைப்பு உலகெங்கிலும் 500 இடங்களில் செயல்படுகிறது. ஆனால் அந்த இடங்களை விலைக்கு வாங்கவோ வாடகைக்கு எடுக்கவோ அந்த அமைப்பு தன் வங்கிக்கணக்கை தொடக்கூட வேண்டியதில்லை. ”அதற்கெல்லாம் செலவழிக்கவே வேண்டாம் என்பார் மதர்” என்கிறார் சுனிதா குமார். சுனிதா குமார் கல்கத்தாவின் பெரும்பணக்கார சீமாட்டிகளில் ஒருவர்;  மதர் தெரசாவின் அமைப்புக்கு வெளியே அவருக்கு நெருக்கமானவரும் கூட. “மதர் தெரசாவிற்கு வீடு தேவைப்பட்டால், அது அரசாக இருந்தாலும், தனிஆளாக இருந்தாலும், நேரடியாக சொந்தக்காரரை அணுகுவார். அவரிடம் பேசிப்பேசி கடைசியில் இலவசமாகவே அந்த இடத்தைப் பெற்றும் விடுவார்”என்கிறார்.

அவரது இந்த வழிமுறை ஜெர்மனியில் பெரும் வெற்றி பெற்றது. 2003 மார்ச்சில் ஜெர்மனியின் ஹாம்பெர்க்கில் இவ்வாறு பெறப்பட்ட ”பெத்லஹேம் வீடு” வீடற்ற பெண்டிருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 4 சிஸ்டர்கள் அங்கு வேலை செய்தனர். தனித்துவம் வாய்ந்த அமைப்புடைய அந்தக்கட்டிடத்தை முடிக்க அன்றைய தேதியில் 2.5 மில்லியன் ஜெர்மன் மார்க்குகள் செலவாயின. ஆனால், மதர் தெரசாவின் அமைப்பு அந்தக்கட்டிடத்திற்காக தன் நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. அதற்கான பணம் கிறித்துவ அமைப்பு ஒன்றால் ஹாம்பர்கில் சேவை நிதியென்று வசூலிக்கப்பட்டது. குறுகியகாலத்தில் மில்லியன்களைத்திரட்ட மதர் தெரசா என்கிற பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது.

(தொடரும்) 

அடுத்த பகுதி

11 Replies to “மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1”

  1. அருணகிரி,

    நிச்சயமாகத் தேவை உள்ள பதிவு. கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.

    சரி அது என்ன மதர் தெரசா? காந்தியையே அடைமொழி இல்லாமல் குறிப்பிடுவதுதான் சரியான அணுகுமுறை என்று கருதுகிறேன். அப்படி மரியாதையாகக் குறிப்பிட வேண்டுமென்றால் தெரசா அம்மையார் என்றோ ஏன் புனித தெரசா (புனிதர் நிலை கிடைத்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.) குறிப்பிடலாமே?

  2. ஆர்.வி, மூலக் கட்டுரையிலும் St. Teresa என்று இல்லை, எனவே “புனித” அடைமொழி ஏன் இதில் இல்லை என்று கேட்க முகாந்திரமில்லை. Mother Teresa என்பதை அன்னை தெரசா ஆக்கியிருக்கலாம்.. ஆனால், மொழிபெயர்ப்பாளர் வேன்டுமென்றே “மதர்” என்பதில் உள்ள அன்னியத் தன்மையை அப்படியே வைத்திருக்க விரும்பினார் என்று தோன்றுகிறது.. எனது பழைய கட்டுரை ஒன்றிலும் நான் இதே மாதிரி செய்திருக்கிறேன். எனவே அருணகிரியின் அந்த சொல் பயன்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள் – https://jataayu.blogspot.in/2009/04/blog-post.html

  3. “அம்மையார்” என்றது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ‘ மகாத்மா” இந்திய அடைமொழி என்றால் ” செயின்ட்” அல்லது “புனித” என்பது வாடிகன் அடைமொழி.அதுவும் படிச்சு வாங்கின பட்டம் இல்லையே.மதர் தெரேசாவுக்கு பதில் ” புனித” அடைமொழி மேல் என்று திரு ஆர் வி கருதுவது ஆச்சர்யம்.

    சாய்

  4. திரு அருணகிரியின் தொடருக்கு வாழ்த்துக்கள் .

    படித்த பலர், தாங்கள் சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தை இந்த அமைப்பினருக்கு கொடுக்கிறார்கள். இவர்கள் இந்த கட்டுரையில் மூலத்தை படித்தாவது உணர வேண்டும், சமீபத்தில் மறைத்த திரு ஹிட்சென்ஸ் இவர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். மேற்குலகம் சொன்னால் தானே கேட்பார்கள்.

    எதாவது சேவை செய்பவர்களை பார்த்து ” என்ன பெரிய மதர் தேரேசான்னு நினைப்போ ” என்று ஏதோ அவர் தான் சமூக சேவையையே கண்டு பிடித்தாற்போல பலர் பேசுகிறார்கள்.

    அப்படித்தான் பொது [ நவீன இந்திய] புத்தியில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது.
    இது போன்ற கட்டுரைகள் இந்நிலையை மாற்றும்.

    சாய்

  5. இதை படிக்கும்போது நிறைய வலிக்கிறது .கை நீட்டி தொழு நோயாளிகளுக்க்காக காசு கேட்ட போது காரி துப்பிய இரு கடைக்காரனை பார்த்து எனக்கு கொடுத்ததை நான் வாங்கி கொண்டேன் அவர்களுக்கு என்ன கொடுப்பாய் என்று கேட்ட அந்த தாயுள்ளத்தின் பெயரால் உருவான இந்த அமைப்பு ஏன் இப்படி கல்லாக போனது ?
    சரி எல்லா அமைப்புகளின் தலை விதியும் ஒரே மாதிரியாகவாபோய் கொண்டு இருக்கிறது ?வெறும் அமைப்பாக போய் விடுகிறது .அதிலும் வேற்ற் மத அமைப்பு வேறு அரசுகள் தனது நுனி கையை கூட அங்கு நீட்டாது .சிறு பானமை ஓட்டும் சர்வதேச அந்த மத அமைப்பின் சுட்டு விரலும் தன் பக்கம் நீண்டு விடகூடாது என்பதில மிக கவனமாக் அல்லவா இருக்கிறது .

  6. ஆர்வி,

    மதர் என்பதில் உள்ள அன்னியத்தன்மையை அப்படியே வைத்திருக்க விரும்பினேன் என்று ஜடாயு சொல்வது மிகச்சரி. மட்டுமல்ல மதர் தெரசா என்பது ஒரு கிறிஸ்துவ மத வியாபாரத்திற்கான அடையாளமாகி விட்ட பிராண்ட். பிராண்ட் பெயர்களை மாற்றாமல் அப்படியே உபயோகிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனாலும் உங்களைப்போன்ற அடைமொழி விரும்பா நண்பர்களின் மனம் மகிழும் விதத்தில் மதர் இல்லாமல் வெறும் தெரசா என்றே சில இடங்களிலேனும் குறிப்பிட்டும் இருக்கிறேன்.

    அன்புடன்,
    அருணகிரி

  7. கிருஷ்ணமூர்த்தி,

    நீங்கள் சொல்லும் கதை ஒரு urban myth. பிரபலமானவர்களைப்பற்றி இப்படி ஜோடனைக்கதைகள் பலவும் உலவுவது சகஜம்தான்.

    வசூலித்த நிதி எதுவும் ஏழைகளுக்கு செல்வதில்லை என்பதை தெரசா முழுக்க முழுக்க அறிந்தே இருந்தார். அந்தப்பணம் அத்தனையையும் வட்டிகன் வங்கிக்கு அனுப்பினார். தெரசாவின் தாயுள்ளம் சாதாரணமானதல்ல, சர்ச்சுக்கு வந்த சிறுவர்களை தொடர்ந்து வருடக்கணக்காக பாலியல் பலாத்காரம் செய்த தன் நண்பரான பாஸ்டரை ஆதரித்து எழுதிய ”தாயுள்ளம்” அது. ஐயாயிரம் சிறுவர்கள் கொண்ட பள்ளியை கல்கத்தாவில் நடத்துவதாக முழுக்க முழுக்க அறிந்தே பொய் சொன்ன ”தாயுள்ளம்” அது. எந்த சேரிக்கு உதவுவதாகச்சொல்லி பணம் வசூலித்தாரோ அந்த சேரி மக்களுக்கு வீடு கட்ட பணமில்லை என்று கைவிரித்த ”தாயுள்ளம்” அது.

    தெரசாவைப்பொறுத்தவரை, கல்கத்தா சேரியின் வறுமையும் அவலமும் வட்டிகனுக்காக பணம் வசூல் செய்ய மேற்குலகிற்கு காட்சிப்படுத்தப்பட வேண்டிய பிரசாரக்கருவிகள். கல்கத்தா சேரியின் வறுமையின் வழி தனது அமைப்புக்கு குவிந்த நிதி அவரைப்பொறுத்தவரை ஏசுவின் அன்பின் அடையாளம். பலவருடங்களில் அவருக்கு இப்படி வந்த பில்லியன் கணக்கான டாலர்களை வைத்து கல்கத்தா சேரிகளைப்போல் பல சேரிகளையும் வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அப்படிச்செய்வது ஏசுவின் அன்பின் அடையாளத்தை இல்லாமல் ஆக்கி விடும் என்பதால் பத்திரமாக அத்தனை பணத்தையும் வட்டிகனின் வங்கியில் கொண்டு போய்ச்சேர்த்த ”தாயுள்ளம்” அது.

    அன்புடன்,
    அருணகிரி

  8. Teresa used unsterilized syringes on Indians but always used sterilized syringes on whites. Who but a racist could have done that? She not only amassed money in the name of the poor of Calcutta and stashed it away in Vatican’s accounts abroad but also repeatedly took money from genocidal dictators and pleaded with politicians not to punish them. She was a heartless hypocrite who denied even the basic medication for the poor of Calcutta but unhesitatingly got herself treated at the Johns Hopkins. It is a tragedy that some Indians hail a criminal.

  9. அருமையான அவசியமானக்கட்டுரை. அன்னிய தெரசாவின் உண்மை முகத்தினை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கட்டுரையாளருக்குப்பாராட்டுக்கள்.
    இன்று ஹிந்து சமயம் ஆன்மிகம் ஆகிவற்றை உலகெங்கும் பரப்பும் ஆச்சாரியார்களை கார்பொரேட் சாமியார்கள் என்று முத்திரைகுத்தும் ப்ருக்ஸ்பதிகளுக்கு கிறிஸ்தவசமயமே ஒரு கார்பொரேட் என்ற அடிப்படை உண்மைகூட உறைப்பதில்லை. அவர்கள் மில்லியன் பில்லியன் ட்ரில்லியன் என்று குவித்துள்ளது தெரியவில்லை. ஆண்டுக்கு 10 சதவீதம் வருமானத்தின் மீது வரி கிறிஸ்தவர்களிடம் வசூலிக்கப்படுவது உலகறிந்த உண்மை. இதைப்பற்றியெல்லாம் அறிவு ஜீவிகள் வாயைத்திறப்பதில்லை. ஹிந்து மதத்தில் உள்ள ஏழைகளுக்கு நம்மவர் யாரும் சேவை செய்வதில்லை என்று மட்டும் உழறுகிறார்கள்.
    பெரிய அபிராஹாமிய கார்பொரேட்டுகளை செல்வந்த மதவெறிக்கும்பல்களை சமாளிக்கவேண்டும் பாரத நாட்டில் பல நூறு குருமார்கள் ஆச்சாரியர்கள் தோன்றவேண்டும். ஆன்மிக நிறுவனங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு உள்ளவையாக வலுவானயவையாக பாரத சமயம் தத்துவம் ஆன்மிகம் பண்பாடு ஆகியவற்றை உலகெங்கும் பரப்பவேண்டும். மானுடட்த்தை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலான மதத்திலிருந்து அனுபூதிக்கு இட்டு செல்லும் ஆன்மிகத்திற்கு கொண்டு செல்லும் உயர் பணியை பாரத நாட்டுக்குருமார்களும் சேவகர்களும் செய்யட்டும். சிவ சிவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *