எப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.
புல்லரிக்க வைக்கும் ஒரு விஸ்தாரமான கல்யாணி ராக ஆலாபனை; அழகழகான பிடிகளும் பிருகாக்களும்- செவிக்கும் சிந்தைக்கும் விருந்து தான்! வித்வான் ராஜ்குமார் பாரதி பாடிக் கொண்டிருந்தார். ‘சிவராத்திரிக் கச்சேரி ஆயிற்றே, சிவன் மேல் கல்யாணியில் இது என்ன பாட்டு,’ என சபையோர் எல்லாரும் வியந்து யோசிக்கிறார்கள். நானோ ஆனந்தக் களிப்பில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் வித்வான் எனது வேண்டுகோளின் படி முத்துத் தாண்டவரின், ‘ஆடினது எப்படியோ திருநடனம் ஆடினது எப்படியோ,’ என்ற பாடலைப் பாடப் போகிறார் என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்! அந்தப் பரவச நிலைக்காகத் தயாராகி விட்டேன்.
ப: ‘ஆடினது எப்படியோ திருநடனம் ஆடினதெப்படியோ
அ: தேடிய மெய்ப்பொருளே வளமேவு சிதம்பரத்-
தேஒரு சேவடி தூக்கி நின்(றாடினதெப்படியோ)
ச: பஞ்சவண்ணமுமல்ல பஞ்ச பூதமுமல்ல
நெஞ்சில் நினைவும் அல்ல நினைவில் கணமும் அல்ல
அஞ்சு முகமும் அல்ல ஆறாதாரமும் அல்ல
வஞ்சி மரகதவல்லி கொண்டாட நின்(றாடினதெப்படியோ)’
தன்னை மறந்து, தன் சுற்றுச் சூழலையும் மறந்து, இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல்! அழகு தமிழில் எளிய சொற்களைக் கொண்டு அமைந்தது. இன்னும் வேண்டுவோருக்குப் பெரும் தத்துவங்களையும் பொதிந்து வைத்துக் கொண்டிருப்பது.
முதன் முதலாக இந்தப் பாடலை பம்பாய் சகோதரிகள் பாடி ஒரு ஒலிநாடாவில் கேட்டிருந்தேன். வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா? யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம். ஆறு நிமிடங்களில் பாடியிருந்தார்கள். இன்று கச்சேரியின் முக்கியப் பாடலே இது தான்! ராக ஆலாபனை, ‘அஞ்சு முகமுமல்ல,’ என்ற இடத்தில் நிரவல், கற்பனை ஸ்வரங்கள், தொடர்ந்த தனி ஆவர்த்தனம் என ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாடப்பட்ட பாடல். உள்ளம் நிறைந்து தளும்பி மெல்ல வழியும் ஆனந்தத்தில், கண்ணீர் பெருக கரங்குவித்துச் சிரம் தாழ்த்தி நடராஜனை என் சிந்தையில் இருத்திய பாடகருக்கு நன்றி செலுத்தினேன்.
ஆடினதெப்படியோ – கல்யாணி – பம்பாய் சகோதரிகள் குரலில்
இதன் பின் இந்தப் பாடலை யாருமே துக்கடாவாகக் கூடப் பாடிக் கேட்கவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது. ஏன் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது!
முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை இவர்கள் மூவரும் ‘தமிழிசை மூவர்’ என அறியப் பட்டனர். 16, 17ம் நூற்றாண்டுகளில் சீர்காழியில் வாழ்ந்த முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். பெற்றோர் இட்ட பெயர் தாண்டவன். இள வயதில் ஒரு தீராத அருவருக்கத்தக்க நோயால் பீடிக்கப் பட்டுத் துன்புற்றதனால் இவர் தமது குலத்தொழிலில் ஈடுபட இயலவில்லை. அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார். இவ்வாறு செய்யும்படி அவருக்குக் கூறியதும் பார்வதி அன்னையே! நோய் நீங்கி ஒளி பொருந்திய உடலைக் கொண்டதால் இவரது பெயர் இப்போது முத்துத் தாண்டவர் என வழங்கப்பட்டது. முதலில் இவ்வாறு அவர் பாடிய பாடல் ‘பூலோக கயிலாயகிரி சிதம்பரம்,’ என்பதாம்.
முதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது.
‘அருமருந்தொரு தனிமருந்தம்பலத்தே கண்டேனே,’ என்ற பாடலை நம்மில் நிறையப் பேர் கேட்டிருப்போம். காம்போதியிலும் மோஹனத்திலும் பாடப்படுகிறது. முத்துத் தாண்டவரை ஒருமுறை பாம்பு கடித்தபோது பாடிய பாட்டாகக் கூறப்படுகிறது. இதன் சரணங்களை நோக்கினால் இது மனிதனின் பெரும் பிறவி நோய்க்கு மருந்தாகவல்லவோ கூறப்படுகிறது என நாம் அதிசயிப்போம்.
திருமருந்துடன் பாடும் மருந்து
தில்லை அம்பலத்தாடும் மருந்து
இருவினைகளை அறுக்கும் மருந்து
ஏழை அடியார்க்கிரங்கும் மருந்து.
த்ருத்தித் தித்தி என்றாடும் மருந்து
தேவாதி மூவர்கள் காணா மருந்து
கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து
காலனைக் காலால் உதைத்த மருந்து.
அருமருந்தொரு தனி மருந்து- காம்போதி – எஸ்.மஹதி குரலில்
தில்லை ஈசனைத் தாம் வழிபட்டு மகிழ்ந்த அனுபவத்தை ஆந்தோளிகா ராகத்திலமைந்த ‘சேவிக்க வேண்டுமைய்யா,’ என்ற கீர்த்தனையில் நயம்பட வர்ணிக்கிறார். எவ்வாறு தரிசனம் செய்ய வேண்டும் எனவும் மற்ற அடியாரை எல்லாம் ஆற்றுப்படுத்தியும் வைக்கிறார். பொருளும் அருளும் மிகுகின்ற பாடல்!
சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு (சேவிக்க)
சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி
சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து
பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து
பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ (சேவிக்க)
நல்ல திருவிழா ஆணித்திருத்தேரும்
நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்
தில்லை மூவாயிரவர் வளர் வீதியும்
திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும் (சேவிக்க)
இந்த மார்கழியில் யாரெல்லாம் தில்லை சென்று தரிசித்தார்களோ கொடுத்து வைத்தவர்கள் !
சேவிக்க வேண்டுமைய்யா- ஆந்தோளிகா- ஜி என் பாலசுப்ரமண்யம் குரலில்
மற்றுமொரு முத்தான பாடல் – கேட்டேயிராதது- கிட்டத்தட்ட 40-50 ஆண்டுகள் ஆகி விட்ட பொக்கிஷமான ஒரு ஒலிப்பதிவு- இதில் என்ன புதுமையைக் காண்கிறோம் ? எல்லாரும் வழிபடுவது போலத்தான் இப்பாடல்களும் தில்லை ஈசனை ஏற்றுகின்றன; போற்றுகின்றன. ஆயினும், ‘என்னப்பனல்லவா, என்னய்யன் அல்லவா,’ என ஒரு அடியார் பாடியதைப் போன்ற உரிமை கலந்த பேரன்பு வெகு இயல்பாகச் சொற்களில் இழந்தோடுவதை வெளிப்படையாக இந்தப் பாடல்களில் உணர இயலும்!!
சுந்தர குஞ்சித பாதநிலை கண்டு
தொண்டு செய்வாய் மனமே
சந்ததம் தில்லை சிவகாமி பங்கனார்
தானந்தமாகிய ஆனந்த நாடக (சுந்தர)
நல்லவர் செம்மை மனத்தவர் போற்றும்
நம்பும் அடியார் பிறவியை மாற்றும்
தில்லை மூவாயிரர் பூஜை செய்தேற்றும்
திருமால் தன் கண்ணை மலரென சாற்றும் (சுந்தர)
தெரியாதவர்களுக்கு ஒரு புராணக் கதை இந்தக் கடைசி வரியில் பொதிந்துள்ளது. திருமால் ஒரு சமயம் சிவபிரானை நூற்றெட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார். அர்ச்சனை முடியும் சமயம் ஒரு மலர் குறைந்து காணப் பட்டது. உடனே சிறிதும் கவலைப் படாமல் தமது ஒரு கண்ணையே அகழ்ந்தெடுத்து மலராக சிவபிரானுக்குச் சாற்றினாராம்! திருமால் இதனால் தான் தாமரைக் கண்ணன், அம்புஜாக்ஷன், அரவிந்த லோசனன் எனப்படுகிறாரோ என்னவோ என்று அதைத்தான் முத்துத் தாண்டவர் இக்கடைசி வரியில் கூறுகிறார்.
சுந்தர குஞ்சித பாத நிலை- கரஹரப்ரியா- பி. ஏ. பெரியநாயகி குரலில்
தில்லைச் சிற்றம்பலத்தானின் நடனத்தைக் கண்டு அன்பு கொண்டு தன்னையே இழந்து அவனை, அவனது நடனத் திருவுருவைப் பாடிப் பரவிய அடியார்கள் பலர். அவர்களுள் முத்துத் தாண்டவரும் ஒருவர் என்றாலும் அழகான எளிய சொற்களைக் கொண்டு அமைந்த அவரது பாடல்களை ஆழ்ந்து நோக்கிச் சிந்தித்தால் அவர் ஐயனின் நடனத்தை அணு அணுவாக ரசித்து அனுபவித்து ஆனந்தவயத்தராகிப் பாடும் அருமை விளங்கும்.
‘ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டாமோ,’ என்ற பாடலில் ஆடலரசனின் அற்புத நடனத்தை ஒவ்வொரு கூறாகப் பார்த்துத் தாம் பெற்ற எல்லையற்ற பேரானந்தத்தை நமக்குப் பாட்டின் சரணத்தில் நிறைத்து அளித்து நம்மையும் அவன் சரணாரவிந்தங்களில் பணிய வைக்கும் நேர்த்தி ஒரு அற்புத அனுபவம். உதாரணத்திற்கு எல்லாரும் வழக்கமாகப் பாடும் ஒரு சரணம். இன்னும் இரண்டு சரணங்கள் உள்ளன.
ஆரநவமணி மாலைகள் ஆட ஆடும் அரவும் படம் பிடித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம்
பேர்களும் பூஜித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட கனகசபை தனிலே (ஆடிக் கொண்டார்)
கண்டு களிக்கவில்லையா நீங்கள் கண்முன் ஐயனின் ஆனந்த நடனத்தை? இதனை சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்கும்போது புல்லரிக்கும்.
ஆடிக்கொண்டார் – மாயாமாளவகௌளை – வித்யா கல்யாணராமன் குரலில்
தில்லை ஈசனிடம் பேரன்பு பூண்டவர் எனக் கண்டோம். ஆக்கி அளித்து உலகை நீக்கி மறைத்து அருளி ஐந்தொழில் புரிபவனின் செயலை, ‘மாயவித்தை செய்கிறானே அம்பலவாணன்’ என்ற கரஹரப்ரியா பாடலில் அவனை ஒரு மாயவித்தைக் காரனாக வர்ணித்துப் பாடும் நயம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
அனுபல்லவி:
மாயவித்தை செய்கிறான் காயம் இன்றெடுத்துக் கொண்டு
நேயமான வெளி தன்னில் உபாயமாய் கோட்டத்திருந்து (மாயவித்தை)
சரணம்:
உண்டு பண்ணி வைக்கிறான் கொண்டு கொண்டு போகிறான்
நன்றுக்கும் தீதுக்கும் நடுவாய் இருக்கிறான்
பண்டு நாலு வெளியெங்கும் பாரெங்கும் காணவொண்ணான்
அண்டர் தொழ அம்பலத்தில் நொண்டி கட்டி ஆடிக்கொண்டு (மாயவித்தை)
பிறப்பு இறப்பு பற்றிய பெரும் தத்துவக் கருத்துக்களையும், சித்தரான திருமூலர் விளக்கியருளும் இறைவனின் அரும் பெரும் அதிசய குணங்களையும், அவன் நமக்கெல் லாம் எளியனாய்த் தில்லையம்பலத்தில் ‘நொண்டி கட்டி’ ஆடிக் கொண்டு அருள் புரிவதையும் இதை விட அழகாக, அன்பு மிக யாரால் கூற முடியும்? (பண்டு சிறுமியர் ஒரு காலை மடித்துக் கொண்டு, நொண்டிய வண்ணம் ‘பாண்டியாடுவது’ என ஒரு விளையாட்டை விளையாடுவர். அதைப் போல் ஈசனும் ஒரு காலைத் தூக்கிய வண்ணம் ‘நொண்டி’யாட்டம் ஆடுகிறான் எனக் குழந்தை போல உரிமையுடன் கூறியுள்ளார்.)
இதையும் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கேட்பது உணர்ச்சி பூர்வமான ஒரு அனுபவத்தை நமக்களிக்கின்றது. சமீப காலங்களில் இவைகளை எல்லாம் யாரும் பாடிக் கேட்கவே இல்லை எனும் வருத்தம் மேலிடுகிறது. தமிழிசை மூவரில் ஒருவர் இயற்றியது என்றால் சும்மாவா? இவையெல்லாம் விலைமதிப்பற்ற இசைரத்தினங்களல்லவா? காப்பாற்றிப் போற்ற வேண்டாமா?
மாயவித்தை செய்கிறானே -கரஹரப்ரியா- சீர்காழி கோவிந்தராஜன் குரலில்
நாதநாமக்ரியாவில் அமைந்து உள்ளத்தை உருக்கும் எம். எஸ். சுப்புலட்சுமியின், ‘ஆரார் ஆசைப்படார்,’ என்ற பாடலைக் கேட்காத சங்கீத ரசிகரே கிடையாது. ‘அந்தமுடன் பதஞ்சலி புலி போற்ற அனவரதமும் கனக சபையில் ஆடிச் சிவந்து என்னைத் தேடிய பாதத்துக்கு ஆரார் ஆசைப்படார்.’ பாடலின் சொல்லாட்சி சிலிர்க்க வைக்கிறது. தேடிவந்து உய்விக்கும் தெய்வம் என அல்லவா தில்லையானை ஏற்றுகிறார்! அருமை!
‘அய்யனே நடனம் ஆடிய பொற்பாதா ஆனந்த கைலாயனே,’ எனும் சாவேரி ராகப் பாடலில் திரும்பவும் நடமிடும் பொற்பாதங்களில் ஆழ்ந்து, அந்த நடனத்துக்கு ஏற்பத் தனது கிருதியில் ஜதி சொல்கிறார்!
துய்யனே திருச்சபை தன்னில் தாண்டவம்
தோகுஜம் தரி தாகுதித்திமி திகுதம் என்றொரு பாதம் தூக்கிய (அய்யனே)
வேழமுகனைப் பெற்ற விமலா நமசிவாயா
ஆழிதரித்த கையான் ஆன முகுந்தன் நேயா
சோழன் கை வெட்டுண்ட தூயா அன்பர் சகாயா
தோகுஜம் தரி தாகுதித்திமி திகுதம் என்றொரு பாதம் தூக்கிய (அய்யனே)
அய்யனே நடனம் – சாவேரி – விஜய் சிவா குரலில்
தில்லை அம்பலவாணனைப் பாடியே காலங்கழித்தவரின் மிக அருமையான பாடல்கள் பல தற்போது வழக்கொழிந்து அறுபது பாடல்களும் 25 பதங்களுமே கிடைத்துள்ளன! பதங்கள் அனைத்துமே நாயகி பாவத்தில் அமைந்து நாயகனை (ஈசனை) அடையத் துடிக்கும் தலைவியின் (ஆன்மாவின்) தாபத்தை, ஆவலை வெளிப்படுத்துவதாக உள்ளன என்பது அருமையானது. மிகவும் பிரபலமாக, நாட்டியக் கலைஞர்களாலும் இன்றும் மேடைகளில் ஆடப்படும் பதம் ‘தெருவில் வாரானோ,’ என்ற கமாஸ் ராகப் பதமாகும்.
பல்லவி
தெருவில் வாரானோ என்னை சற்றே திரும்பிப் பாரானோ
அனுபல்லவி
உருவிலியொடு திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடராஜன் (தெருவில்)
சரணம்
வாசல்முன் நில்லானோ எனக்கொரு வாசகம் சொல்லானோ
நேசமாய்ப் புல்லேனோ கழைவைத்த ராஜனை வெல்லேனோ
தேசிகன் அம்பலவாணன் நடம்புரி தேவாதி தேவன் சிதம்பரநாதன் (தெருவில்)
தெருவில் வாரானோ – பரத நாட்டியத்தில்
இதில் இன்னொரு வருத்தம் என்னவெனில், தமிழர்களாகிய நாம், பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ‘உருவிலி’ என்னும் சொல்லை ‘ஒருவிழி’ எனச் சிலர் பாடி ஆடுவது தான்! ‘உருவமற்ற (அனங்கன்) ஆகிய மன்மதனையும் திரிபுரத்துடன் எரித்த நடராஜன்,’ எனப் பொருள் கொள்ள வேண்டும்!
மற்றுமொரு பதம் ‘இத்தனை துலாம்பரமாய், என்பது- தன்யாசி ராகத்தில் அமைந்தது. ஒவ்வொரு பாடலையும் பதத்தையும் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். வாய்ப்பு உண்டானால் மற்றொரு சமயம் அவற்றை விளக்கமாய்க் காணலாம்.
தில்லை அம்பலத்தானைப் பாடித் தன் வாழ்நாளைக் கழித்த முத்துத் தாண்டவர் ஒரு ஆவணி மாதம் திருப்பூச நட்சத்திரத்தன்று, ‘மாணிக்கவாசகர் பேறெனக்குத் தர வல்லாயோ அறியேன்,’ என உருக்கமாகப் பாடி நின்றார். அவ்வமயம் மூலத்தானத்தில் இறைவனிடமிருந்து ஒரு பேரொளி எழுந்து அவரைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டது.
சில முக்கியமான இசைக் குறுந்தகடுகள்:
1. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடியுள்ள தமிழ் மும்மணிகள்- அழகான சில அபூர்வக் கிருதிகளைக் கொண்டது.
2. மாதங்கி ராமகிருஷ்ணன் குழுவினர் பாடியுள்ள முத்துத் தாண்டவர் கீர்த்தனைகள் (நீண்ட நாட்களுக்கு முன்பு ஒலிநாடாவாக வாங்கியது; இப்போது குறுந்தகடு வெளிவந்துள்ளதா எனத் தெரியவில்லை)
கட்டுரை அருமை ! நல் வாழ்த்துக்கள் !
“ஆடினது எப்படியோ !” என்று முதன் முதலில் வியந்து உறைந்து நின்றது அன்னை மாகாளியாகத்தான் இருக்கமுடியும் ! திருவாலங்காட்டில் சிவனாரின் வேகமான சுழல் நடனத்தைக் கண்டு மயங்கியவள் அன்னை ! யாரும் பார்க்காவண்ணம் கீழே விழுந்த குழையை பெரு விரலால் சுண்டி எடுத்து காதில் மாட்டிக்கொண்டே நடன வேகம் தடைபடாது நடந்தது எப்படியோ !! உலகளந்த பெருமாளை மிஞ்சும் வகையில் ஊர்த்துவ தாண்டவம் தோன்றியது எப்படியோ !! அந்த ஊர்த்துவ திருப்பாதமும் பாதாளம் ஏழும் கடந்து கீழே போன பாதமும் அயனும் மாலும் அறியாது வியந்தது எப்படியோ !!
தமிழுக்கு தமிழிசைக்கு இங்கு மரியாதைதர ஆட்கள் இருக்கிறார்கள் என்று காணும்போது உவகையேற்படுகிறது..
இராஜ்குமார் பாரதி பாடியதைக் கேட்டால், தமிழுக்கு மரியாதை கொடுக்க மனது வராமலிருக்குமா?.
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று பாடிய பாரதியின் குருதியல்லாவா அவரிடம் ஓடுகிறது! (கொள்ளுப்பெயரன்னல்லவா!) வியப்பொன்றுமில்லை.
நன்றிகள்
மற்ற பகுதிகள் போல இப்பகுதியிலும் ஒலிநாடாக்களை / காணொளிகளைப் பகிர்ந்தமை மிக சிறப்பு.
ஆடிக்கொண்டார் இந்த வேடிக்கை காணக்கண் ஆயிரம் வேண்டாமோ …………. இந்த பாடல் மிகவும் ப்ரஸித்தி பெற்ற பாடல்.
பல வித்வான் களும் பாடிய பாடல்.
மற்ற பாடல்களையும் மனதொன்றிக் கேட்டு மகிழ்ந்தேன்.
ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கீர்த்தனைகள் பற்றிய பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி மீனாக்ஷி கணேஷ்.
தமிழன்பர்களின் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி. திருச்சிற்றம்பலம்
தமிழிசை மூவர் திருவடி போற்றி
Can you provide the meaning of caraNam 3 please? I have some doubts regarding the meaning of: uttaNDa, cittajan. Also in caraNam 2 what does “sOzhan kai veTTuNDa” mean?