ஓகே கண்மணி படம் நேற்றிரவு பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை படம் ஓகே. கன்னத்தில் முத்தமிட்டாலுக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கிய ரசிக்கும் படியான படம் இது தான். நடுவில் வந்த 4 சுமார்களையும் விட (ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல்) நல்ல படம் இது. எளிமையாக நேர்கோட்டில் சிடுக்கின்றி செல்லும் கதை என்பதால் துல்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் நடிக்கும் நான்கு பாத்திரங்களையும் மணியால் நன்றாக ‘செதுக்க’ முடிந்திருக்கிறது. நித்யா மேனனின் screen presence அபாரம். யௌவனத்தின் ஒளிமிகு கனவு போல, கவிதை போல, வரும் ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சை அள்ளுகிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு வழக்கம் போலவே வெகு நேர்த்தி. பல காட்சிகளும், கோணங்களும் visual delight என்று சொல்லத் தக்க வகையில் உள்ளன. ரஹ்மானின் பின்னணி இசையும் நன்றாக, பொருத்தமாக இருக்கிறது.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்
என்ற அழகான வரிகள் இனிமையான குரலிலும் இசையிலும் கலந்து வரும்போது, மனதை மயக்குகின்றன.
பல பாலிவுட் படங்கள் லிவ் இன் சமாசாரத்தை அடித்துத் துவைத்து விட்ட பிறகு, அதன் அதிர்ச்சி மதிப்பு ஒன்றுமில்லாமல் ஆகி விட்டது. உதாரணமாக, Hunterr என்ற சமீபத்திய (ஏ சான்றிதழ்) ஹிந்திப் படத்தில், செக்ஸ் பைத்தியமான ஒரு இளைஞன் கண்டபடி சுற்றி கடைசியில் திருந்தி கல்யாணம் செய்து கொள்கிறான். அவன் மணம் செய்து கொள்ளும் பெண், லிவ் இன்னில் கூட வாழ்ந்தவன், எதிர்பாராமல் கர்ப்பமான போது அபார்ஷன் கிளினிக்குக் கூட உடன் வரவில்லை என்பதால் அவனது உண்மை முகத்தை அறிந்து கொண்டு அவனிடமிருந்து பிரிந்து விட்டவள். இருவரும் ரொம்ப சாதாரணமாக உரையாடி இதை முடித்து விடுகிறார்கள். இத்தகைய படங்கள் லிவ் இன் உறவுகளை மிகவும் நார்மல், சகஜமானது என்று வேண்டுமென்றே சித்தரிக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், ஓகே கண்மணி படம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் படத்தின் லிவ் இன் சித்தரிப்பு ஆபாசமாகவோ, விரசமாகவோ இல்லை. இதே போன்ற கதைப் பின்னணி கொண்ட Friends with Benefits படத்துடன் ஒப்பிடுகையில், ஓகே கண்மணியின் காட்சிகள், குறும்பும் காதலும் ததும்புவதாக, இயல்பாகவே இருந்தன. இது காதல் ரசம் ததும்பும் சாக்லேட் ரொமான்ஸ் படம், எனவே இப்படித் தான் இருக்கும். நாயகனும் நாயகியும் தங்கள் அலுவலக பிரசினைகள் குறித்தோ அல்லது அறிவுபூர்வமாகவோ ஏன் பேசுவதில்லை என்றெல்லாம் கேட்பது அர்த்தமில்லாதது. அவர்கள் எப்போதும் ‘அலைந்து’ கொண்டிருப்பதாக எண்ணுவது, ரௌடித் தனமும் வக்கிரமும் ததும்பும் ‘காதல்’ சித்தரிப்புகளையே கண்டு வளர்ந்த சென்ற தலைமுறை வெகுஜன தமிழ் சினிமா பார்வையாளர்களின் சங்கோஜமான, முதிரா மனநிலையை மட்டுமே காட்டுகிறது. தங்கள் மனமொப்பி சந்தோஷமாக சல்லாபிக்கும் இணைகளை புன்னகையுடன் இல்லாமல் அருவருப்புடன் பார்க்க வைத்திருப்பது பல்லாண்டு கால தமிழ் சினிமாவின் சா(வே)தனை. நான் நேற்று படம் பார்த்த திரையரங்கில், சில நல்ல காட்சிகளின் போது ஆ – ஊ, ஓகோ அப்படியா, அப்படிப் போடு போன்ற சத்தங்களும் அசிங்கமான விசில்களும் எழுப்பப் பட்டன. பெங்களூரின் சராசரி தமிழ் விடலைத் தன மனநிலையின் பிரதிபலிப்பு அது. ஒரு கூட்டம் இப்படி இருக்க, இன்னொரு கூட்டம் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு படத்திற்கு வருகிறது. கொடுமை (இந்தப் படம் அதன் பேசுபொருள் காரணமாகவே, குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பது என் கருத்து).
சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் ‘பழைய ஸ்டைல்’ காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன? அப்படி எண்ண முடியவில்லை. மாறாக, ஒரு பழங்கால ஆதர்ச தம்பதியின் நேசமும் பாசமும் இன்றைய இளைய தலைமுறையின் மதிப்பீடுகளை ஆழமாக பாதிப்பதாகத் தான் படம் சொல்கிறது. கிழட்டு தம்பதிகளூடன் துல்கர்-நித்யா இளம் ஜோடி எவ்வளவு இயல்பாக ஒன்றி விடுகிறார்கள் என்பது தலைமுறை இடைவெளி எளிதாகக் கரைந்து விடும் சாத்தியங்களைக் காட்டுகிறது.
மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல. கடந்த 4 படங்களில் அரசியல், சமுக பின்னணியில் இதே ஃபார்முலாவைத் தூவி படமெடுத்து படு மோசமாக சொதப்பிய பின், ஒரு ஆசுவாசமாக மீண்டும் அவரது பழைய பல்லவியை பழைய சுருதியில் மட்டுமே அவரால் பாட முடிகிறது. இது அவரைப் போன்ற ஒரு ‘மூத்த’ இயக்குனருக்கு பெருமையா அல்லது சிறுமையா என்பது அவருக்கே வெளிச்சம்.
ஓ.கே.கண்மணி ஒரு சாதாரணமான, நல்ல பொழுதுபோக்குப் படம். இந்தப் படத்தைக் குறித்த மிகையான விதந்தோதல்கள், தீவிர கலாசார கண்டனங்கள் இரண்டுமே தேவையற்றவை. சமன் இல்லாத அதீத மனநிலைகளிலிருந்து அவை வருகின்றன.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
சில நடுத்தர வயதினர் தங்கள் மகன்-மகளின் எதிர்காலப் போக்கைத் தாங்குவதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள அறைகூவல் விடுப்பது இக்கட்டுரையின் கதையம்ச விளக்கம் போலத் தெரிகிறது.
ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கு விமர்சனம் என்ற படிக்கு இந்த விமர்சனத்தில் குறை காண முடியாது.
ஆனால் **லிவிங்க் டுகெதர்** என்ற ஒரு கோட்பாடு சமூஹத்தில் விளைவிக்கும் ப்ரச்சினைகளை இந்தப் படம் விவாதிக்க விழைகிறதா என்றால்………… இந்த விமர்சனத்தைப் பார்த்து இல்லை என்று தான் சொல்ல முடியும். இப்படி இணைந்து வாழ்வது கிளப்பும் சட்ட ப்ரச்சினைகள்………… சில மாதங்கள் இணைந்து வாழ்ந்து பின்னர் பிரிகையில்……….. ஒரு பார்ட்னர் (ஆண் அல்லது பெண்) விவாஹத்துக்கு எதிர்பார்த்து அது நடக்காமல் பிரிவில் முடிந்ததற்கு வருந்துவது………. அல்லது விவாஹமே ஆகாமல் குழந்தையும் பெற்றுக்கொண்டு………. ஆண் தன் பெண் இணையை கைவிட்டு விடுவது……..இதில் சட்ட ப்ரச்சினைகள்……… அதற்கான சட்டத் தீர்வுகள்………..யார் யாருக்கு என்னென்ன உரிமைகள்……… கடமைகள்…….பதிலில்லாத கேழ்விகளே நிறைய…….
70களில் ஹிப்பி கலாசாரம் என்று இளைஞர்கள் கஞ்சா அபின் உண்டு………… யாருடனும் யாரும் இருக்கலாம் என்று விட்டேத்தியாக சுற்றித் திரிந்த அவலம் கூட ………ஹிந்தியில் தேவ் ஆனந்த்தும் அவர் தங்கையாக ஜீனத் அமன் அவர்களும் நடித்த படத்தில் ……… இந்த விட்டேத்தி கலாசாரம் எதிர்மறையாகக் காண்பிக்கப்பட்டது. பெயர் மறந்து விட்டது. தம்மாரே தம் மிட்டு ஜாயே கம்………… போலோ சுப: சாம் ஹரே க்ருஷ்ணா ஹரே ராம்………… என்ற பாடல் ரொம்ப பாபுலர். இந்த படம் ஹிப்பி கலாசாரத்தைப் பற்றிய ஒரு பயத்தை மக்களுக்கு அளித்து ……… அதிலிருந்து அவர்களை விலகச் செய்தது.
இந்தப் படம் முறையற்ற வாழ்க்கை முறையை சமூஹத்தில் ஏற்கவொண்ணா முறைமையாக அழுத்தமாகக் காண்பிக்காது…….. அதில் உள்ள குறைகளை …………. பல கட்டங்களில் எழ வாய்ப்புள்ள சட்ட ப்ரச்சினைகளைத் தொடாது……….. மணிரத்னம் பாணியில்………. போலி நவீன மாயை உலகை கட்டமைத்து இந்த முறையற்ற வாழ்க்கையின் மென்மையான பக்கங்களை மிகைப்படுத்திக் காண்பித்தபடிக்குத் தான் இந்த விமர்சனத்திலிருந்து தெரிகிறது.
அந்த முறையற்ற வாழ்க்கையை உதரித் தள்ளுவதற்கு………… அந்த முறையற்ற வாழ்க்கை முறை நிதர்சனத்தில் அளிக்கும் சுடும் நிஜங்கள் இந்தப் படத்தில் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மிகவும் நாடகத்த்தனமான ஒரு காரணம் மற்றும் காட்சி அமைப்பின் மூலம்…….முறையற்ற வாழ்க்கை முறையை கைவிடுவதன் மூலம்……… குடும்ப வாழ்க்கை முறையின் பாதுகாப்புக் காரணி வேண்டுமானால் தீர்க்கமாகக் காண்பிக்கப்பட்டது என்று சொல்லலாம். ஆனால் முறையற்ற வாழ்க்கை முறையின் சங்கடமான பக்கங்கள் காண்பிக்கப் படாமல் மறைக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜடாயு முதலில் நீங்கள் Qualified Criticகா… அருக்காணியக்கா விமர்சக கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றவரா.
The best review about this movie is I have seen in vikatan comment area;
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் – அலைபாயுதே !
தாலி கட்டாமல் ஊருக்குத் தெரிய வாழ்ந்தால் – ஓ காதல் கண்மணி !
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் – மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்திக் கொண்டு போனால் – ராவணன்
தாலி கட்டலாம வேண்டாமா என சிந்தித்தால் -கடல்
ஸ்கூல் பெண்ணுக்கு தாலி கட்டினால் – நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டி விட்டு இரு மனைவியருடன் வாழ்வது – அக்னி நட்சத்திரம்
ஒரு பெண்ணுக்கு ரெண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் – திருட திருட
தாலி கட்டி விட்டு புருஷனுக்காக போராடினால் – ரோஜா
காதலித்த பெண்ணுக்கு தாலி கட்ட முடியாமல் போனால் – இதய கோயில்
—– ரத்னம் டா ! மணிரத்னம் டா !!