கம்பராமாயணம் – 66 : பகுதி 1

கம்பராமாயணம் – 66  (தேர்ந்தெடுத்த அறுபத்தாறு பாடல்கள்)

தொகுப்பு, உரை: ஜடாயு

kambar1கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய தமிழின் ஒப்புயர்வற்ற காவியமான கம்பராமாயணத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இதனை முழுவதுமாக அல்லது பகுதிகளாகக் கூடக் கற்பது என்பது, தொடர்ந்த வாசிப்பையும், உழைப்பையும் கோரும் ஒரு பணியும், ஒரு வாழ்நாள் முழுவதற்குமான கல்வியும், நற்பேறும் ஆகும். பல்வேறு பணிகளுக்கிடையில் அதனை மேற்கொள்ளுதல் என்பது ஆர்வமுடையவர்கள் பலருக்கும் கூடக் கடினமான ஒன்று.

இந்த மிகச் சிறிய தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது.

இராமாயண பாராயணம் என்ற வகையில் பக்தியுணர்வுடன் இப் பாடல்களை ஓதிப் பயன்பெறலாம். கதைச் சொற்பொழிவுகளில் எடுத்தாளலாம். தமிழார்வம் உள்ள குழந்தைகள் இந்தப் பாடல்களை மனப்பாடம் செய்ய ஊக்குவிக்கலாம்.

இப்பாடல்களை எனது 6 மணி நேர இராமாயண உரையிலும் அந்தந்த இடங்களில் கூறி விளக்கியுள்ளேன்.

கம்பராமாயணம் முழுவதும் உரையுடன் tamilvu இணையதளத்தில் கிடைக்கிறது.   பெங்களூர் கம்பராமாயண வாசிப்பு இயக்கம் வாரந்தோறும்  நடத்தும் வகுப்புகளின் முழுமையான வீடியோ பதிவுகள் யூட்யூபில் கிடைக்கின்றன.

கம்பராமாயணத்தை விரிவாகக் கற்க அனைவருக்கும் இது ஒரு தூண்டுகோலாக அமையட்டும்.

கம்பராமாயணம்-66 முழுவதையும் மின்-நூல் வடிவில் pdf கோப்பாக இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாயிரம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.   (1)              

(உளஆக்கல் – படைத்தல்; பெறுத்தல் – காப்பாற்றுதல்; அலகு இலா – அளவில்லாத)

எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

காவியம் பிறந்த களம்

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.   (2)

(பேர் – புகழ்மிக்க; தொடை – செய்யுள்; தோம் அறு – குற்றமற்ற; மாக்கதை – மகத்தான கதை)

நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம். அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம், வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது (காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை. தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும் வெகுசில இடங்களிலும் கூறுகிறார்).

Ram-sita-weddingபால காண்டம்

வால்மீகி முனிவர் புகழ்ந்த தேசம் (கோசல நாட்டு வளம்)

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன். (3)

(வாங்க அரும் – எடுக்க முடியாத; பாதம் – அடிகள்; வகுத்த – இயற்றிய; தீம் கவி – அமுதமயமான கவி; நறவம் – மது; மாந்தி – பருகி; மூங்கையான் – ஊமை; மொழியல் – பேசுதல்)

ஒரு சொல்லைக் கூட எடுத்து விட முடியாதபடி, நான்கு அடிகள் கொண்ட (இருபத்து நான்காயிரம்) சுலோகங்களால் இராமாயணத்தை இயற்றினான் வான்மீகி முனிவன். தேவர்களும் தம் செவிகளே வாயாகப் பருகும்படி இனிமையான அமுதமயமான கவிதைகளைச் செய்தான். தனது ஆதி காவியத்தில் அந்த முனிவன் புகழ்ந்துரைத்த (கோசல) நாட்டை, அன்பு என்னும் மதுவைப் பருகி, ஊமையே பேசத் தொடங்கி விட்டான் என்றது போல நான் பேசலானேன்.

திருமால் தேவர்களுக்கு வரம் தருதல்

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய, யாம்
கசரத துரகம் ஆள் கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி.               (4)

(மசரதம் – கானல் நீர்; நிசரத – குறிதவறாத; நீறு செய்ய – சாம்பலாக்க; கச ரத துரகம் – யானை தேர் குதிரை; மதலை – மகன்; தாரணி – உலகம்).

“கானல் நீரைப் போன்ற அரக்கர்களுடைய வரங்களின் பலத்தையும் வாழ்வையும், குறிதவறாத அம்புகளால் சாம்பலாக்கி அழிப்பதற்காக, யானை தேர் குதிரை காலாள் என்னும் கடல் போன்ற நான்கு சேனைகளையுடைய வேந்தன் தசரதனுக்கு மகனாக, நானே உலகத்தில் வந்து அவதரிக்கிறேன்”.

கோசலை இராமனைப் பெறுதல்

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை.   (5)

(ஒருபகல் – ஒரு காலத்தில்; உதரத்துள் – வயிற்றில்; அருமறை – வேதம்; உணர்வு அரும் – தெரிந்து கொள்ள இயலாத; அஞ்சனம் – மை; திருஉற – மங்கலம் நிறைந்திட, பயந்தனள் – பெற்றாள்)

ஒரு காலத்திலே, பிரளயத்தின்போது, எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கியவன், அரிய வேதங்களாலும் தெரிந்து கொள்ள இயலாதவன் அந்தப் பரம்பொருள். மை போன்றும், கருமேகம் போன்றும் அழகுடைய சோதி வடிவாய்த் திகழ்பவன். அவனை, உலகம் எங்கும் மங்கலம் நிறைந்திட, தெய்வத்திறம் கொண்ட கோசலை தன் வயிற்றில் பெற்றெடுத்தாள்.

இராமலக்குமணர் வேள்வி காத்தல்

எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்.       (6)

நினைத்துப் பார்ப்பதற்கும் செய்வதற்கும் மிக அரிய செயல் இது! விசுவாமித்திர முனிவர்  தேவர்களின்  பொருட்டுச் செய்த வேள்வியை, நல்லாட்சி செய்து  காக்கும் மன்னனான தசரதனுடைய மைந்தர்களான இராம இலக்குவர்கள், கண்விழியைக் காக்கும் இமைபோல, ஆறு நாட்கள் வரை காப்பாற்றினர்.

விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன்.   (7)

(உய்வண்ணம் – உய்யும் வழி; மழை – மேகம்; அண்ணல் – இராமன்)

“இவ்வாறு அகலிகையின் வரலாறு முற்காலத்தில் நிகழ்ந்தது. இனிமேல் (நீ அவதரித்த பின்பு) இந்த உலகத்து உயிர்களெல்லாம், கடைத்தேறும் வழியே அல்லாமல், அதற்கு மாறாக, துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ? மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே! அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில், உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்) பார்த்தேன். இங்கு, கால்வண்ணம் (அகலிகைக்கு சாபவிமோசனம் அருளிய திருவடியின் பெருமையை) பார்க்கிறேன்”.

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்ளுதல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.    (8)

(நலத்தினாள் – அழகுடையவள்; இனையள் – இவ்வாறு; நின்றுழி – நின்றபொழுது)

மனத்தால் எண்ணுவதற்கும் அரிய அழகுடைய சீதை, இவ்வாறு (கன்னிமாடத்தில்) நின்றபொழுது, ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் கவர்ந்து பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று உண்ணவும், இருவரது சிந்தையும் நிலையழிந்து போய், ஒன்றுடன் ஒன்று கூடின. இராமன் சீதையைப் பார்த்தான். அவளும் இராமனைப் பார்த்தாள்.

இராமன் கையில் சிவதனுசு என்னும் பெரிய வில் உடைதல்

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.   (9)

(தாளில் – பாதத்தில்; மடுத்ததும் – மிதித்ததையும்; நுதி – முனை; நோக்கார் – பார்க்கவில்லை; கடுப்பினில் – வேகத்தால்; அறிந்திலர் – அறியவில்லை; இற்றது – முறிந்தது)

சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை. இராமன் தன் கையால் வில்லை எடுத்ததைக் கண்டார்கள். அடுத்த கணம் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்!

இராமன் சீதை மணக்கோலம்

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.   (10)

(மன்றல் – நல்வாசம்; தவிசு – ஆசனம்; வென்றி – வெற்றி; ஆர்வத்து – அன்புகொண்ட; எய்தி – நெருக்கமாக)

நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை உடைய வெற்றிவீரனான இராமனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள அன்னம் போன்ற சீதையும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த போகத்தையும் (பேரின்ப வாழ்வு) யோகத்தையும் (யோக நெறி) போல இருந்தார்கள்.  

Ayodhya-kandam

அயோத்தியா காண்டம்

இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி

பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார். (11)

(பூவலயம் – பூமி; தெறும் – அழிப்பான்; யாவது கொல் – எப்படிப் பட்டதோ)

இவன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர். இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர் (இராமன் ஆளும்போது  தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.

கைகேயி ‘மன்னன் ஆணை இது’ என்று கூறுதல்

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்,
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள். (12)

(ஆழி – கடல்; தாழ் இருஞ்சடைகள் – தொங்குகின்ற பெரிய சடைகள்; பூழி – புழுதி; வெங்கானம் – கொடிய கானகம்; நண்ணி – சென்று)

கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் பரதனே முடிசூடி ஆட்சி செய்வான். நீ நாட்டை விட்டுப் போய், சடாமுடி தாங்கி, செய்வதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து, புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும் என்று அரசன் கூறினான் – இவ்வாறு கைகேயி சொன்னாள்.

கைகேயி சொற்கேட்ட இராமன் நிலை

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (13)

(எம்மனோரால் – எம்மைப் போன்றவர்களால்; செவ்வி – அழகு)

இப்பொழுது எம்மைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதோ? யாரும் சொல்லித் தீராத நற்குணங்களையுடைய இராமனுடைய திருமுகத்தின் அழகைப் பார்த்தால், அது கைகேயி சொன்னதைக் கேட்பதற்கு முன்பும், கேட்ட பின்பும் ஒன்று போலவே, செந்தாமரை போலவே இருந்தது. ஆனால், அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்த சமயத்தில், மலர்ந்த செந்தாமரையை வென்று விட்டது!

சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

(நறும்புனல் – நல்ல நீர்; அற்றே – அது போல; பதி – தலைவன், தந்தை; பயந்து – பெற்று; புரந்தாள் – வளர்த்தாள்; மைந்த – மகனே; வெகுண்டது – கோபித்தது)

மகனே!  என்றும் நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது, அந்த நதியின் குற்றம் அன்று. அது போல, (என்னை வனவாசம் போகச் சொன்னது) நம் தந்தையின் குற்றம் அன்று. (அப்படி வரம் வாங்கியது) நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று. அவள் மகன் பரதனது குற்றமும் அன்று. இது விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றம். இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான் (அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்றது).

சீதை நானும் உடன் வருவேன் எனல்

‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்றிலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு?என்றாள். (15)

(இகந்த – இல்லாத; ஒருவுகின்றனை – விட்டுச்செல்கிறாய்; ஊழி – பிரளயம்; அருக்கன் – சூரியன்; யாண்டையது – எங்குள்ளது; ஈண்டு – இங்கு)

பரிவில்லாத மனத்துடன், ஒரு சிறு பற்று கூட இல்லாமல், என்னை விட்டுவிட்டுச் செல்வேன் என்கிறாய். பிரளய காலத்துச் சூரியன் போல எரியும் இடம் எங்குள்ளது? (காட்டிலே வெப்பம் இப்படி இருக்கும் என்று இராமன் முன்பு கூறியதைச் சுட்டுகிறாள்). உன் பிரிவைக் காட்டிலும் அந்தப் பெரிய காடு சுடுமோ? என்றாள்.

இராமன் காடு செல்வது கேட்ட மாந்தர் நிலை

கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். (16)

(கிள்ளை – கிளி; பூவை – நாகணவாய்; பூசை – பூனை; மாற்றத்தால் – சொல்லால்)

இராமன் வனவாசம் செல்வான் என்று சொல்லிய சொல்லால், கிளியும், நாகணவாய்ப் பறவையும் (மைனா) அழுதன. மாளிகையின் மாடங்களுக்கு உள்ளே இருந்த வீட்டுப் பூனைகள் அழுதன. வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் கூட அழுதன. பெரியோர்கள் அழுததைப் பற்றி என்னவென்று சொல்வது?

இராமன், சீதை, இலக்குவன் மூவரும் வனத்துக்குள் போதல்

தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு,
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே. (17)

(தையல் – பெண், சீதை; தகவு – மேன்மை; மை – குற்றம்; உணர்வு – ஞானம்; செய்ய – நிமிர்ந்த; சேமம் – பாதுகாப்பு; அல்லின் நாப்பண் – நள்ளிரவில்)

சீதையின் கற்பும், தனது மேன்மைப் பண்பும், தம்பியாகிய இலக்குவனும்,  குற்றமற்ற கருணையும், ஞானமும், சத்தியமும், நிமிர்ந்த தனது வில்லும் ஆகிய இவற்றையே பாதுகாவலாகக் கொண்டு நள்ளிரவில் அந்தக் காட்டு வழியிலே ஐயன் இராமன் சென்றான்.

குகனின் ஓடத்தில் ஏறி கங்கையைக் கடத்தல்

விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன் நெடு நாவாய், முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார்.   (18)

(கடிது – வேகமாக; முடுகினன் – செலுத்தினான்; நாவாய் – ஓடம்; முரி திரை – அலையடிக்கின்ற; நீர்வாய் – நீரோட்டத்தில்)

‘வேகமாக விடு’ என்று இராமன் கூற, அவனிடத்து உடம்பும் உயிரும் போன்ற நட்பை உடைய குகன், அலையடிக்கின்ற நீண்ட நீரோட்டத்தில் பெரிய ஓடத்தை விரைந்து செலுத்தினான். அந்த ஓடம் இளம் அன்னப்பறவை நீரில் நீந்துவது போலச் சென்றது. கரையிலே நின்றவர்கள் பெரும் துன்பமடைந்தார்கள். மறையவர்கள் நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல்

நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். (19)

(தேர்ப்பாகன் – தேரோட்டி; நம்பி – இராமன்; சேயனோ – தொலைவில் உள்ளானோ; அணியனோ – அருகில் உள்ளானோ; தேர் வலான் – சாரதி; வேய் – மூங்கில்; கானம் – கானகம்; மிதிலைப் பொன்- மைதிலி, சீதை; போழ்தத்தே – பொழுதிலே)

தசரதன் மீண்டும்  தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?” என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்” என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.

பரதன் படையுடன் வருவதைத் தொலைவில் கண்டு குகன் உரைத்த வீர உரைகள்

அஞ்சன வண்ணன், என் ஆருயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே !
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், நாய்க்குகன் என்று எனை ஓதாரோ? (20)

(அஞ்சனம் – மை; செஞ்சரம் – சிவந்த அம்பு; உஞ்சு – உய்ந்து, தப்பித்து)

மை போலும் கரிய திருமேனி அழகன், என் ஆருயிர் நாயகன் இராமன் அரசு ஆளாதபடி, சூழ்ச்சியால் அந்த அரசாட்சியைக் கைப்பற்றி அடைந்த மன்னர் பரதர் இதோ வருகிறார்! தீ உமிழும் எனது சிவந்த அம்புகள் இவர்கள் மேல் செல்லாமல் போய்விடுமோ? இவர்கள் (என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால் ‘நாய்க்குகன்’ என்று உலகத்தவர்கள் என்னைப் பற்றி சொல்லாமல் இருப்பார்களா?

பரதனின் தவக் கோலம் கண்டு குகன் மனம் உருகுதல்

வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். (21)

(வற்கலை – மரவுரி; மெய்யானை – உடல் கொண்டவனை; மதி – சந்திரன்)

(அருகில் வர வர), மரவுரி ஆடையை உடுத்தி, புழுதி படிந்த உடம்புடன், நல்ல கலைகளில்லாத சந்திரன் போல ஒளியிழந்த முகத்துடன், கல்லையும் கனியச் செய்யுமளவு துயரத்துடன் கூடிய பரதனை குகன் பார்த்தான். கையிலிருந்த வில் தானே சோர்ந்து கீழே விழ, துன்பத்தால் கலக்கமுற்று ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

பரதன் இராமன் திருவடிகளை முடிமேல் சூடிச் செல்லுதல்

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். (22)

(அடித்தலம் – பாதுகை; முடித்தலம் – திருமுடி, கிரீடம்; படித்தலத்து – மண்ணில்; பொடித்தலம் – புழுதி; பொலம்கொள் – பொன்மயமான)

இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன் முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான். பின்னர், புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான திருமேனியுடைய பரதன், மண்ணில் விழுந்து வணங்கி, மீண்டும் (அயோத்திக்குச்) சென்றான்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

6 Replies to “கம்பராமாயணம் – 66 : பகுதி 1”

  1. நன்றிகள் பல கோடி. கண்களைப் பனியவைக்கும் அருமையான பொழிப்புரை. வாழ்க உமது தொண்டு. இனிவரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  2. ஐயா! தங்களீன் கம்பராமாயணம் புத்தகம் எங்கு கிடைக்கும்? pl give details.Thx
    Dr.Umesh

  3. தங்களுடைய ரமயணம்பதிப்பித புத்தகம் எங்கு கிடைக்கும்

  4. அருமையான எளிமையான விளக்கம்.உம்முடைய தமிழ்த் தொண்டிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  5. நடையில் நின்று உயர் நாயகன்- ஒழுக்கம் கொண்டு அதனை இடைவிடாது இராம அவதாரம் முழுவதுமாக பின்பற்றி, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கடப்பாட்டை வாழ்வின் ஆதாரசுருதியாகக் கொண்டு, அத்தகைய ஒழுக்க குணத்தால் அவதாரம் முழுதும் பெருமை பெற்றவன். அதனால் தான் கம்பன், திருவள்ளுவரின் குறளான, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற குறளுக்கு ஏற்ப இப்பாடலை நடித்திருப்பார். நடையில் நின்று யர் நாயகன்”, மிகச்சிறந்த சொற்றொடராகும். இதற்கு மேலும் விளக்கம் செலின் மிகவும் விரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *