கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1

மூலம்: ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்
தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்

ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்  (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர்.  வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர்.  சாதியத்தின் கோரப் பிடியில் சிக்கியிருந்த சமுதாயத்தை அதனின்றும் விடுவிக்க வந்த விடிவெள்ளி.  வேதஞானமும் தெய்வ வழிபாடும் அனைத்து இந்துக்களும் உரிமையானவை என்று  ஆதாரபூர்வமாக நிறுவியர். தாழ்த்தப் பட்டுக் கிடந்த மக்களின் உரிமைகளுக்காகவும்  பெண்கல்விக்காகவும் முதற்குரல் எழுப்பியவர். கிறிஸ்தவ மதமாற்றங்களையும் மிஷநரிகளின் சூழ்ச்சிகளையும் நேரடியாக விமர்சித்தவர். ஸ்ரீநாராயண குரு, சுவாமிகளைத் தனது முதன்மையான ஆசானாகவும் வழிகாட்டியாகவும் கருதினார்.

மாபெரும் அறிஞரான சுவாமிகள் உரைநடையாகவும், கவிதையாகவும் மலையாளத்தில் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் ஒரு நூலை, ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சிவஸ்ரீ. விபூதிபூஷண். இந்த மொழியாக்கத்தினை வெளியிடுவதில் தமிழ்ஹிந்து பெருமையடைகிறது

– ஆசிரியர் குழு

ஆங்கிலமொழி பெயர்ப்பாளரின் அறிமுக உரை:

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்

கிறிஸ்துமதச்சேதனம்“, ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று.  இந்த நூலின் தனிச்சிறப்பு, கிறித்தவ மதத்தினை ஒரு ஹிந்துவின் நோக்கில் ஆராய்கிற நூல் என்பதாகும்.[i].

கிறிஸ்தவ மதத்தினைக் கண்டித்து மலையாள மொழியில் எழுதப்பட்ட முதல் நூல் என்ற சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.  மலைநாடாம் கேரளத்தில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது, மிசனரிகள் ஏழைஎளிய மக்களை ஆசைகாட்டி மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்ட காலக்கட்டத்தில் மலைநாட்டின் ஆன்மிக விடிவெள்ளிகளில் ஒருவராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளால் — கிறிஸ்தவ மதத்தினை கேள்வி கேட்பதற்கே எந்த ஒரு ஹிந்துவும் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில் — இந்த நூல் எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில்  எல்லாமதங்களும் சமம்(எம்மதமும் சம்மதம்) என்ற எண்ணம் ஹிந்துக்களிடத்தில் மேலோங்கி இருந்தது. பின்னாளில் சர்வதர்ம சமபாவம் என்று இந்தக்கருத்து வழங்கப்பட்டது[ii]. மாற்றுமதத்தவர்கள் ஹிந்து தெய்வங்கள், வேத சாஸ்த்திரங்கள் ஆகியவற்றை இழிவுபடுத்தினாலும் கூட அவர்களைக் கேள்விக்கேட்கவோ மறுக்கவோகூட எந்த ஹிந்துவும் தயங்கியகாலம் அது. ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்தான் இந்தத் தேக்கநிலையை உடைத்து முதன்முதலில் கிறிஸ்தவமதத்தினை விமர்சித்தார்.

கிறிஸ்தவமதத்தினை விமர்சிப்பதற்கான தமது நோக்கத்தினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் இந்த நூலில் இப்படிக் கூறுகிறார்.

“தமது புனிதநூல்களை கடவுளின் வாக்காக எல்லாமதத்தவரும் கருதுகின்றனர். யாரேனும் கிறிஸ்தவமதத்தின் புனிதநூலை ஆராய்ந்து, அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, இவை பொய் என்று சொன்னால், அந்தமதத்தினர் இந்தநூல் கடவுளால் அருளப்பட்டது, கடவுளின் வேலை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது, கடவுளின் ஞானம் மனித அறிவைக்காட்டிலும் மேம்பட்டது, கடவுள் தன்னிச்சைப்படி நடக்கவல்லவர் என்றும் சொல்கிறார்கள்.

“அப்படியானால் எல்லா மதங்களையும் உண்மையானவை என்றும் சமமானவை என்றும்தானே கருதவேண்டும்?

“ஆனால் கிறித்தவர்கள் தங்கள்மதம் மட்டுமே உண்மையானது என்று கூறுகிறார்கள். அது தவறானாது. ஆகவே நாம் ஒவ்வொரு மதத்தினையும் ஆராய்ந்து, அதன் நல்ல அம்சங்களையும் தவறான அம்சங்களையும் புரிந்துகொள்வது அவசியமாகிறது”.

தனது முன்னுரையில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் சொல்கிறார் “கிறிஸ்தவப்பாதிரிகளும் அவர்களது ஊழியக்காரர்களும் ஹிந்துசமயம், தெய்வங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள் ஆகியவற்றை அடிப்படையில்லாமல் இழிவாக விமர்சிப்பதைக் கேட்கிறோம். அவர்களது வெளியீடுகளான அஞ்ஞானகுடாரம்(கோடாரி),  திரிமூர்த்தி லக்ஷணம்,  குருட்டுவழி, சத்குருலாபம், சத்யஞானோதயம், சமயப்பரிக்ஷை, சாஸ்த்ரம், புல்லெலிக்குஞ்சு போன்ற நூல்களையும் கண்டோம். அவர்கள் சாணார், புலையர், பறையர், போன்ற சாதிகளின் மக்களை தொப்பிகள், ஆடைகள் போன்றவற்றைத் தந்து, ஆசைகாட்டி, கிறிஸ்தவமதத்திற்கு மாற்றமுயல்வதையும் கண்டோம். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டும், ஒன்றும் செய்யாமல் வாளாவிருப்பது தர்மமாகாது”.

அந்தக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் வெறியாட்டம் எப்படி இருந்தது என்பதை சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர்[iii] பின்வருமாறு எழுதுகிறார்.

இன்றும் கோவிலுக்கு முன்னால் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம்

“கேரளத்தில் ஆங்கிலேய ஆட்சியின் வருகையோடு கிறிஸ்தவ மிஷனரி வேலைகள் வலுவடைந்தன. கோயிலுக்கு செல்லும் ஹிந்துக்களைத் தடுத்து நிறுத்தி, சாத்தானை[iv] வழிபடக் கோயிலுக்குப் போகாதீர்கள், இயேசு கிறிஸ்துவே உண்மையான கடவுள் அவரை நம்புங்கள், கிறிஸ்தவமதத்தில் சேருங்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இருந்தது. அன்று அவர்களைத் தடுக்கவோ, மறுக்கவோ, எதிர்க்கவோ எந்த ஒரு ஹிந்துவுக்கும் தைரியம் இல்லாமல் இருந்தது.  இந்தச்சூழலில்தான் ஸ்ரீலஸ்ரீசட்டம்பி சுவாமிகள் கிறிஸ்துமதச்சேதனம் என்ற இந்த அரிய நூலை ஷண்முகதாசன் என்ற புனைப்பெயரில் எழுதி வெளியிட்டார்”.

சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் மேலும் கூறுகிறார்.

“ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் அறிவார்ந்த தமது சீடர்களில் சிலருக்கு இந்த நூலைக்கற்பித்து, அவர்களை சிறந்த சொற்பொழிவாளர்களாகவும் பயிற்றுவித்தார்.  கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் பொதுவிடங்களிலும் கோயில்களிலும் கூடும் ஹிந்துக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது, சுவாமிகளின் இந்த சீடர்களும் கிறிஸ்தவத்தினை கண்டிக்கும் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். பின்னாளில் 1890க்குப்பிறகு சுவாமிகளின் இரு முக்கிய சீடர்கள் கேரளம்முழுவதும் பிரயாணம்செய்து கிறிஸ்துமதச்சேதனத்தில் உள்ளக் கருத்துக்களைப் பரப்பினார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

கிறிஸ்தவ மதமாற்றத்தினைத் தடுத்து முறியடிப்பதற்கு மிகச்சிறந்தவழி அவர்களது கிறிஸ்தவம் மட்டுமே உண்மையானமதம் என்ற கருத்தினை நிராகரிப்பதுதான் என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தெளிவாக அன்றே உணர்ந்திருந்தார்.

இந்த நூலில் சுவாமிகள் கிறித்தவமதத்தின் ஆதாரக்கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, தமது ஆணித்தனமான மறுக்கவியலாத வாதங்களால் உடைத்தெரிகிறார். அவர்களின் புனித நூலிலில் இருந்தே மேற்கோள்களைக்காட்டி, ஜெஹோவாவும் இயேசுவும் தெய்வீகத்தன்மை அற்றவர்கள் என்று நிறுவுகிறார். மேலும் பைபிள் சில கைதேர்ந்தவர்களால் புனையப்பட்டக் கட்டுக்கதையென்றும் அவர் சொல்கிறார்.

இந்த நூலின் முடிவுரையில் எல்லா ஹிந்துக்களும் இந்த நூலை ஆழ்ந்து படித்து, கிறிஸ்தவம் எப்படி ஹிந்துசமயத்திடமிருந்து வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அடிகள் கூறுகிறார். இந்த நூல் சொல்லும் அரிய பாடம் என்னவென்றால், எல்லா மதங்களும் சமம் என்ற ஹிந்துக்களின் சொலவடை ஒரு ஆதாரமற்ற புனைவு என்பதுதான். ஹிந்துக்கள் மட்டுமே இதை நம்புகிறார்கள். இதை யூதர்களோ, கிறித்தவர்களோ, அல்லது இஸ்லாமியரோ ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் மதம் என்றப் போர்வையில் இருக்கும் ஏகாதிபத்திய அரசியல் கருத்தியல்கள் என்பதை ஹிந்துக்கள் அனைவரும் உணரவேண்டும். ஹிந்துமதத்திலிருந்து ஒருவர் வெளியேறும்போது நமது எண்ணிக்கையில் ஒருவர் குறைகிறார் என்பதோடு நமது எதிரிகளில் ஒருவர் அதிகரிக்கிறார் என்பதும் உண்மை என்ற சுவாமி விவேகாநந்தரின் கருத்தினை அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டும்.

இன்றைய நமது சமயச்சூழல் இன்னும் படுமோசமாகவில்லை என்றாலுமகூட மோசமாகவே உள்ளது. மிஷனரிகள் இன்றும் ஹிந்துமதத்தினை எந்த ஆதாரமுமோ, தர்க்கமோ, நியாயமோ இன்றி இழிவாக விமர்சிப்பதுத் தொடர்ந்து நாம் பார்க்கமுடிகிறது. இந்த குழப்பமானக் காலக்கட்டத்தில் ஹிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கற்றறிந்த ஹிந்துக்களின் கடமையாகும். எளிய மக்கள் வறுமை, அறியாமை ஆகியவற்றில் மூழ்கியிருப்பது தொடரும்வரை அவர்கள் மிஷனரிகளால் ஏமாற்றப்படுவது தொடரத்தான் செய்யும். இந்த நூலைக்கற்பவர்களுக்கு இந்த் நூல் ஓர் அரணாகவும் மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கான கருவியாகவும் பயன்பட்டு சனாதன தர்மமாம் தொல்நெறியைப் பாதுகாக்கும்.

— ஆங்கில மொழிபெயர்ப்பாளார்

 தமிழ்மொழிபெயர்ப்பாளனின் குறிப்புரை

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் சைவசித்தாந்த நூல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த அரியநூலைக் கண்டேன். தரவிறக்கம் செய்து வாசித்தேன்.

இந்த நூலில் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் பயன்படுத்திருந்த தர்க்க நியாயமும், அவரது சைவசித்தாந்த நோக்கும், எனது உள்ளத்தில் ஒரு பெரும் தாக்கத்தினை உருவாக்கின. இந்த நூலின் சிறப்பு தத்துவார்த்தமாக வரலாற்று ரீதியாக இது கிறிஸ்தவத்தினை நிராகரிப்பதாகும். பதி, பசு, பாசம் ஆகிய மூன்றைப்பற்றி இயேசுமதம் என்னசொல்கிறது என்று ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உயர்வானவையோ சரியானவையோ அல்ல என்று சுவாமிகள் சொன்னபோது — அவருக்கு வயது நாற்பது கூட ஆகவில்லை என்று படித்தபோது — அவரது மேன்மை, மேதமை புலப்பட்ட்து.

இந்த நூலைத்தொடர்ந்து வாரம்தோரும் ஒரு பகுதியாக மொழிபெயர்த்து, நமது தமிழ் ஹிந்துவில் வெளியிட விரும்பினேன். அதற்கு இசைவளித்த ஆசிரியர் குழுவினர்க்கு நன்றி. அன்புக்குறிய வாசகர் பெருமக்கள் இதைப்படித்து விவாதிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

— சிவஸ்ரீ.விபூதிபூஷண்

குறிப்புகள்:

[i] இந்த நூலை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் 1890 இல் எழுதினார். இதற்கு முன்னர் பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த கற்பனைக்கழஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் ஏசுமத நிராகரணம் என்ற நூலை எழுதினார். ஆனால் அந்த நூலின் ஒரு சிலபாடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

[ii] சர்வதர்ம சமபாவம் என்பது வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ காணப்படும் ஒரு மந்திரம் அல்ல.ஆனால் இது பின்னாளில் மஹாத்மா காந்தி அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கோசமாகும்.

[iii] சுவாமி  வித்யானந்த தீர்த்த பாதர் எழுதிய ஸ்ரீ மத் தீர்த்தப்பாத பரமஹம்சர். தொகுதி I, அத்தியாயத்தலைப்பு “கிறிஸ்தவப்பாதிரிகளின் மதமாற்ற முயற்சிகள்”.

[iv] ஹிந்து தெய்வங்களை சாத்தான் என்று கிறிஸ்தவ மிசனரிகள் அன்றுமுதல் இன்றுவரை இழிவு செய்துவருகிறார்கள்.

(தொடரும்)

17 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1”

 1. நமது தமிழ் ஹிந்து தளத்துப் பங்காளர்கள் ஹிந்து மதத்தின் பல்வேறு சமயங்கள் பற்றி, பயங்கரவாத மதமாற்ற ஆப்ரஹாமிய மதங்களின் இழிவான பக்கங்களைப் பற்றி நிறைய வ்யாசங்கள் எழுதிப் பகிர வேண்டும் என்பது என் அபிலாஷை.

  அதைப் பகிர்ந்திருந்தேன் வேறொரு வ்யாசத்தினூடே.

  ஸ்ரீ சிவஸ்ரீ மஹாசயர் அவர்களது பெருமுயற்சியில் இந்த வ்யாசம் நமது தளத்தில் பதிவேற்றப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  நிறைய முத்து முத்தான கருத்துக்கள்

  \\ ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் எல்லாமதங்களும் சமம்(எம்மதமும் சம்மதம்) என்ற எண்ணம் ஹிந்துக்களிடத்தில் மேலோங்கி இருந்தது. பின்னாளில் சர்வதர்ம சமபாவம் என்று இந்தக்கருத்து வழங்கப்பட்டது[ii]. \\

  எம்மதமும் சம்மதமில்லை. எம்மதமே சம்மதம் என்று ஹிந்துக்களிடையேயும் விழிப்புணர்வைப் பார்க்க நேருகையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

  \\ இந்த நூல் சொல்லும் அரிய பாடம் என்னவென்றால், எல்லா மதங்களும் சமம் என்ற ஹிந்துக்களின் சொலவடை ஒரு ஆதாரமற்ற புனைவு என்பதுதான். ஹிந்துக்கள் மட்டுமே இதை நம்புகிறார்கள். இதை யூதர்களோ, கிறித்தவர்களோ, அல்லது இஸ்லாமியரோ ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை. \\

  மிக மிக அருமையான கருத்து.

  தள நிர்வாகிகளுக்கு ஒரு விக்ஞாபனம். இக்கருத்து போல்ட் மட்டிலும் செய்யப்பட்டுள்ளது. மாறாக பச்சை நிறத்தில் ஃபில் அப் செய்தால் இந்த வ்யாசத்தினூடே இது ஒரு முக்யமான கருத்து என்று புரிந்து கொள்ள முடியும். இயலுமானால் இந்த கருத்தை பச்சை நிறத்தில் ஃபில் அப் செய்யவும்.

  ஹிந்துஸ்தானத்தில் பிறந்து புழங்கிய வைதிகம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற ஹிந்து மதத்தின் எந்தச் சமயங்களும் தங்கள் சமயத்தைச் சாராதவர்கள் மீளா நரகம் ஏகுவார்கள் என்று பயமுறுத்துவதில்லை. மாறாக யார் எந்த சமயத்தை ஒழுகினாலும் இறைவன் திருவடியை ஏகுவார்கள் என்றே ஹிந்துஸ்தானத்தில் பிறந்த சமயங்கள் பகிர்கின்றன. பறைசாற்றுவதில்லை. உயர்வான இக்கருத்தியல் பறைசாற்றப்படவேண்டிய கருத்தியல்

  ஆனால் ஒவ்வொரு ஆப்ரஹாமிய மதமும் மதம்பிடித்தவனவாய் அந்த மதத்தைப் பின்பற்றாத ஒவ்வொரு மனிதனும் நரகமேகுவான். மீளாத நரகமேகுவான் என்று வெறுமனே பகிர்வதில்லை. ஊரூராய் தெருத்தெருவாய் கக்கூஸ் சுவர்களைக் கூட விட்டுவைக்காது பறைசாற்றுகின்றன.

  எந்த ஒரு ஆப்ரஹாமிய சஹோதரர்களும் அவரவரது மதத்தை பின்பற்றுதல் என்பது அவரவர் உரிமை. மதிக்கப்பட வேண்டிய உரிமை. ஆனால் கருத்தியல் ரீதியில் எம்மதமும் சம்மதம்; எல்லா மதங்களும் ஒரே உண்மையை போதிக்கின்றன போன்ற பித்தலாட்ட மதிமயக்கக் கருத்துக்கள் நிர்தாக்ஷண்யமாக கட்டுடைக்கப்படுதல் அவச்யம்.

  வாழ்த்துக்கள். மற்ற பகுதிகளையும் வாசிக்க ஆவலாகக் காத்திருக்கிறோம்.

 2. ஸ்ரீ விபூதி பூஷண் அவர்களுக்கு நன்றி. தொடர்ச்சியை எதிர் நோக்குகின்றேன்.

 3. நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் தமிழில் ஆறுமுக நாவலர் எழுதிய “சைவ தூஷணப் பரிகாரம்” என்ற புத்தகம் சைவ மதத்தின் குறைகளாக அன்றைய பாதிரிகள் சொல்லிய அனைத்தையும் பைபிளிலேயே காணலாம் என்று கூர்மையான வாதங்களால் நிறுவுகிறது. புத்தகத்தைப் பற்றி மேலும் இங்கே
  https://siliconshelf.wordpress.com/2014/05/07/ஆறுமுக-நாவலர்-எழுதிய-சைவ/

  மின்புத்தகத்துக்கான இணைப்பும் இங்கே இருக்கிறது.

 4. எம்மைப்போன்ற சைவசித்தாந்த மாணவர்களின் அறிவுதாகத்தினை தமது அரிய இனிமையானக்கட்டுரைகளை தமிழ் ஹிந்துவின் வாயிலாக வழங்கி நிறைவு செய்யும் முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களும் தமது மணிப்பிரவாள நடையினாலே சைவ வைணவ ஒற்றுமையை இங்கே எப்போதும் போற்றிவரும் ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசர் அவர்களும் இங்கே தமது ஆசிகளை வழங்கி இருக்கிறார்கள். ஆச்சாரியர்கள் இருவருக்கும் அடியேனுடைய நன்றிகள். சித்தாந்தம் வேதாந்தம் ஆகிய இரு தத்துவ மரபுகளில் வந்த இப்பெரியோர்களின் ஆசிர்வாதத்தினை இரண்டுக்கும் மூலமாய் விளங்கும் எந்தை சிவபெருமானின் ஆசியாகவே கருதுகின்றேன். இந்த இரண்டிலும் தலைசிறந்துவிளங்கிய கிறிஸ்துமதச்சேதன ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் ஆசி அடியேனுக்கு கிடைத்துவிட்டதாகவே எண்ணுகிறேன். சிவசிவ

 5. அறிவார்ந்த RV அவர்கள் ஈழத்து சைவசமயப்பெரியார் ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய சைவதூஷணப்பரிகாரம் என்ற அருமையான நூலை இங்கே அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. அந்த நூலை கடந்த ஆண்டு இணையத்தில் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். ஒரு சைவர் பைபிளையும் கரைத்துக்குடிக்கமுடியும் என்பது புரிந்தது. அதில் உள்ள அடிப்படைச்சிக்கலே சைவத்தில் உள்ளப்பல வழிபாட்டுமுறைகள் பைபிளிலும் உள்ளது என்று நிரூபிக்கமுயல்வது. எல்லாமே பைபிளில் உள்ளது என்பதை நிரூபித்தது போலாகிவிடுகிறது. சைவத்தில் உள்ளதெல்லாம் பைபிள் உள்ளது என்பது சரியாகாது. ஹிந்துக்கள்(குறிப்பாக சைவர்கள்) கிறிஸ்தவத்தினை நிராகரணம் செய்யவேண்டும். சைவசித்தாந்த நூல்களான சிவஞான சித்தியார் மற்றும் சங்கற்ப நிராகரணம் அதைத்தான் செய்துள்ளன. வீரசைவ அருளாளர் இயேசுமத நிராகரணம் என்ற நூலைப்பாடி அதைச்செய்தார். அந்த நூலை இல்லாமல் செய்துவிட்டனர் மிச நரிகள். பாரத நாட்டின் தத்துவ மரபின் சிறப்பே உரையாடுவது விவாதிப்பது. உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவைகள் நமது நெடிய விவாதமரபின் தொடர்ச்சி. பூர்வபக்ஷம் உத்தரபக்ஷம் என்று மாற்று தரிசனங்களை சிந்தனைகளை விவாதிக்கவேண்டிய அவசியம் இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. சமய ஆன்மிகத்தளங்களில் மட்டுமன்று அரசியல் பொருளாதாரத்தளங்களிலும் சரி மேலை அபிராஹாமிய சிந்தனையில் திரண்டக்கோட்பாடுகளை நமது பாரம்பரிய சிந்தனை நோக்கில் ஆராய்வதும் நிராகரிப்பதும் ஏன் சேதிப்பதும் அவசியமானது. சேதனம் என்றால் கட்டுடைத்தல். தூள் தூளாக்குதல். உலகம் முழுவதும் ஒரே அபிராஹாமிய ஐரோப்பிய மயமாக்குதலை தடுப்பதற்கு முக்கியப்படி இதுதான்.

 6. மிகச்சிற்ந்த படைப்பு. தொடரட்டும்.

 7. அன்புள்ள சிவஸ்ரீ. விபூதிபூஷண்,

  // அதில் உள்ள அடிப்படைச்சிக்கலே சைவத்தில் உள்ளப்பல வழிபாட்டுமுறைகள் பைபிளிலும் உள்ளது என்று நிரூபிக்கமுயல்வது. எல்லாமே பைபிளில் உள்ளது என்பதை நிரூபித்தது போலாகிவிடுகிறது. சைவத்தில் உள்ளதெல்லாம் பைபிள் உள்ளது என்பது சரியாகாது. // என்னுடைய புரிதல் சற்று வேறுபடுகிறது. அன்றைய பாதிரிகள் சைவத்தின் காட்டுமிராண்டிப் பழக்கங்கள் என்று அவதூறு செய்த ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயமும் (உதாரணமாகப் பிரசாதம் சாப்பிடுதல், செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குப் போதல்) பைபிளிலும் வருகிறது என்பதைத்தான் நாவலர் எடுத்துக் காட்டி இருக்கிறார். பாதிரிகளின் பிரச்சாரத்துக்கு பதிலே தவிர வழிபாட்டு முறைகளை ஒப்பிடுவது அல்ல என்றே கருதுகிறேன்.

 8. தமிழ் ஹிந்து அன்பர்கள் தொடர்ந்து இத்தகைய கட்டுரைகளை வெளியிட வேண்டும். சனாதன தர்மம் சாஸ்வதமானது என்று சொல்லும் அதே நேரம் தர்மோ ரக்ஷதி ரக்ஷித: என்பதும் முக்கியமானது. இத்தகைய தூக்ஷணைகளை ஹிந்துக்கள் சகித்து கொள்ளாமல் இருப்பதோடு எதிர்மறை விவாதம் புரியவும் இவை மிக பயன்படும்.

 9. ஆர்வி
  “பாதிரிகளின் பிரச்சாரத்துக்கு பதிலே தவிர வழிபாட்டு முறைகளை ஒப்பிடுவது அல்ல என்றே கருதுகிறேன்”. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ஈழத்திலும் தமிழகத்தில் வாழ்ந்த சைவப்பெரியார்களில் மகத்தானவர். அவரது கருத்துக்களில் தவறில்லை. அதை செய்கின்ற போதாது எல்லாமே பைபிளில் உள்ளது என்று கருதுகிற கிறிஸ்தவர்களுக்கு அது உரமாகி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சில நண்பர்களையும் கண்டிருக்கின்றேன். ஆகவே அந்த அணுகுமுறை தேவையில்லை என்பது அடியேனின் நிலை. நிராகரணம் என்பது பாரத தத்துவ தரிசனங்கள் ஆகியவற்றுக்குள் உரையாடும்பொழுது ஒருவர் மற்றொருவரோடு வாதிடும் முறை. ஆனால் சேதனம் என்பது முற்றிலும் பயனற்றது என்று நிறுவும் முறை. இந்தச்சேதன அணுகுமுறையை நாம் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் நூலில் காண இருக்கிறோம். நிராகரண முறையை ஸ்ரீ ராஜிவ் மல்ஹோத்ரா இப்போது மேற்கத்திய இந்தியவியல் கிறிஸ்தவ இறையியலாளர்களோடு உரையாடுவதற்குப்பயன்படுத்திவருகிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ கலவை வெங்கட் சேதன அணுகுமுறையைப்பயன்படுத்திவருகிறார். இந்த இருமுறைகளும் இன்றையக்காலக்கட்டத்திற்கு அவசியம். ஏனெனில் சேதன அணுகுமுறையை இந்திய சமயம் பண்பாடு, சமஸ்கிருத மொழி ஆகியவற்றிற்கு எதிராக அபிராஹாமியமயமான ஐரோப்பிய் இந்திய இயலாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். மார்க்சியர், ப்ராய்டியர், கிறிஸ்தவ இறையியளார் ஆகியோர் அணுகுமுறையை எதிர்கொள்ள இந்த இரண்டும் அவசியம். அதைவிட்டுவிட்டு எங்களிடம் உள்ளதெல்லாம் உங்களிடமும் உள்ளது என்பது அபத்தம். அதைவிட உங்களிடம் உள்ள பல எங்களிடம் ஏற்கனவே உள்ளது என்பது இன்னமும் அபத்தம்.

 10. கிறிஸ்துவ விவிலியம், சர்ச்சின் சிறையில் – ப்ரோட்டஸ்டண் கிளர்ச்சிக்குப் பின் வெளி வந்த பின் கடந்த 200 ஆண்டுகளில் அதில் நடந்த ஆய்வுகள், மேலும் இஸ்ரேல் – எகிப்து – சிரியா, சமாரியா என பைபிள் கதை நடந்த இடங்களின் தொல்பொருள் அகழ்வாய்வுகள் பழைய ஏற்பாடு முழுமையும் இயேசுவிற்கு 50- 100 ஆண்டு முன்பு தான் உருவாகின, பைபிளின் ஐக்கிய இஸ்ரேல் யூதேயா -இஸ்ரேல் இணைந்ததான ஒன்று இருந்ததே இல்லை என்றும், இஸ்ரேல் பகுதியில் பொமு 950 வாக்கிலும், யூதேயாவில் பொமு730 வாக்கில் மக்கள் குடியேற்றம் நடந்து ஒரு மிகச் சிறிய நாடு, நாகரீக வளர்ச்சியில்லா ஆடு- மாடு மேய்க்கும் முரட்டு இன கும்பலே எபிரேயர் எனத் தெளிவாகியுள்ளது.
  அதாவது ஆபிரகாம், மோசே, தாவீஇது சாலமோன், ஜெருசலேம் ஆலயம், எகிப்தில் எபிரேயர்கள் வாழ்ந்தது, யாத்திரை எல்லாமே கட்டுக்கதைகள்.

  இயேசு பற்றி சுவிசேஷக் கதைகள் சற்றும் ஆதாரமில்லா கட்டுக் கதை என்பதை அனைத்து பன்னாட்டு பல்கலைக் கழக பைபிளியலாளரும் ஏற்கின்றனர்.

  (Edited and published)

 11. திருமிகு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” , “தீதும் நன்றும் பிறர் தர வாரா” போன்ற வரிகள் தாங்கள் அறியாதன அல்ல.

 12. அன்புள்ள சிவஸ்ரீ. விபூதிபூஷண்,

  // எங்களிடம் உள்ளதெல்லாம் உங்களிடமும் உள்ளது என்பது அபத்தம். அதைவிட உங்களிடம் உள்ள பல எங்களிடம் ஏற்கனவே உள்ளது என்பது இன்னமும் அபத்தம். //
  என் கருத்தில் நாவலர் சொல்ல வருவது வேறு – “எங்களிடம் உள்ள அநாகரீகமான, மோசமான சடங்குகள், நம்பிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் உங்களிடமும் உள்ளது” என்கிறார்.

  என் புரிதல் வேறுதான். ஆனால் அந்த வேறுபாடு அவ்வளவு முக்கியமானதல்ல என்று தோன்றுகிறது.

 13. RV
  “எங்களிடம் உள்ள அநாகரீகமான, மோசமான சடங்குகள், நம்பிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் உங்களிடமும் உள்ளது” என்கிறார்.
  “என் புரிதல் வேறுதான். ஆனால் அந்த வேறுபாடு அவ்வளவு முக்கியமானதல்ல என்று தோன்றுகிறது.
  ஐயா பரிகாரம் என்பதை நீங்கள் எவ்வாறு நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பது அடியேனுக்கும் புரிகிறது. அதைப்புரிந்துகொள்ளுவதில் எனக்கு எந்த சிரமும் இல்லை. ஆனால் அதுபோதுமா என்பதற்கான எனது பதில் இல்லை என்பதாகும்.
  நம்முடைய அறிவியல் அறிஞர்கள் தத்துவவாதிகள் எல்லாம் மேல் நாட்டினர் சொல்லும் கருத்துருக்களும், கோட்பாடுகளும் இங்கே ஏற்கனவே உள்ளன என்று பலமுறை சொல்லிவந்திருக்கிறார்கள். காலனியாதிக்கத்தில் இருந்தக்காலத்திலே ஆதிக்க நாடு பண்பாடு சமயம் அறிவியல் ஆகியவற்றுக்கு மேலாக மாற்றாக நம்முடைய அணுகுமுறைகள் உள்ளனவா என்ற சிந்தனை மிகச்சிலரிடமே இருந்திருக்கிறது. மேற்கத்திய அபிராகாமிய சிந்தனை செயல்பாட்டுப்போக்குகளை நம்முடைய நோக்கில் கறாராக ஆய்வு செய்கிறத்துணிவு இன்னமும் கூட நம்மில் பலருக்கு வரவில்லை என்பதே துரதிருஷ்டம். ஆனால் அதை செய்யும் துணிவு அந்தக்காலத்திலேயே ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளுக்கு இருந்தது, விவேகானந்தர், தயானந்தர் ஆகியோருக்கு இருந்திருக்கிறது. நமக்கென்று ஒரு நெடிய சிந்தனை மரபிருந்தும் அதை செய்யத்தயங்குவது சரியல்ல. அதை மீட்கவேண்டும் என்று ஒரு சமூகப்பொருளியல் ஆராய்ச்சியாளனாக எண்ணினேன். சுவாமிகளின் கிறிஸ்துமதச்சேதனம் என்ற அரிய நூலை மொழிபெயர்க்கத்துவங்கினேன்.

 14. //சமய ஆன்மிகத்தளங்களில் மட்டுமன்று அரசியல் பொருளாதாரத்தளங்களிலும் சரி மேலை அபிராஹாமிய சிந்தனையில் திரண்டக்கோட்பாடுகளை நமது பாரம்பரிய சிந்தனை நோக்கில் ஆராய்வதும் நிராகரிப்பதும் ஏன் சேதிப்பதும் அவசியமானது.//

  – மறுமொழிகள் – சிவஸ்ரீ. விபூதிபூஷண் on August 24, 2015 at 7:45 pm

  ஐயா,

  தாங்கள் மேலே குறிபிட்டுள்ள வாக்கியத்தில், “மேலை அபிராஹாமிய சிந்தனையில்” என்று எழுதயுள்ளீர். இனி “மேலை” என்று எழுதாமல் “கீழை” என்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 15. George
  “தாங்கள் மேலே குறிபிட்டுள்ள வாக்கியத்தில், “மேலை அபிராஹாமிய சிந்தனையில்” என்று எழுதயுள்ளீர். இனி “மேலை” என்று எழுதாமல் “கீழை” என்று எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்”.
  அன்புக்குறிய ஜார்ஜ் அவர்களுக்கு நன்றி. இந்தத்தொடரைத்தொடர்ந்து படித்து தங்களது மேலானக்கருத்துக்களை வழங்கவேண்டுகிறேன்.
  மேலை – கீழை என்பது மேல் கீழ் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. West East ஆகியவை மேலைக் கீழை என்று மொழி பெயர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அதில் மேல் கீழ் என்ற பொருள் தொக்கி இருப்பது உண்மைதான். மேற்கத்திய கிழக்கத்திய என்று இனிமேல் எழுத முயல்வேன். இந்த கட்டுரைத்தொடர் நிறைவு பெற்றவுடன் நூலாக வரும்போது இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
  சிவசிவ

 16. திரு சிவஸ்ரீ. வீபூதிபூஷண்

  இது மிகவும் தேவையான மொழிபெயர்ப்பு முயற்சி. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி ஸ்வாமிகளின் இந்த நூலை பற்றி கேள்விப்பட்டு, பலநாளாய் படிக்க எண்ணியிருந்தேன். இவ்வாறு உங்கள் முயற்சியால் தமிழில் படிக்கக்கிடைத்துள்ளது. மிக்க நன்றி அய்யா.
  படிப்படியாய் நீங்கள் இதை முழுதும் செய்து ஒரு நூலாக வெளியிட தில்லை சபாநாயகரின் அருளை வேண்டுகிறேன்.

 17. நன்றிகள் பல. இந்த அரிய நூல்கள் எல்லாம் என் போன்ற பலருக்குத் தெரியாமலேயே போயிருந்திருக்கக் கூடும்.இந்த மதமாற்ற யுகத்தில் இந்த நூலும் இதன் மொழி பெயர்ப்பும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது.இது போன்ற நூல்கள் பல உருவாக வேண்டும்.அனைத்து மொழி மக்களையும் சென்று சேர வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *