மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

ஒரு அரிசோனன்

நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒலியாகத்தானே வெளிவருகிறது!

அந்த ஒலியின் முதல் உயிரே  ‘அ’தானே!

அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…

mu10

ஸ்வப்னஸ்தா2னஸ்தைஜஸ உகாரோ த்3விதீயா மாத்ரோத்கர்ஷாது34யத்வாத்3வோத்கர்ஷதி ஹ வை ஞானஸந்ததிம் ஸமானஸ்ச ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ய ஏவம் வேத||                                                          —  10

கனவு நிலையில் இருக்கும் தைஜஸன் இரண்டாம் ஒலியான [எழுத்தான] ‘உ’காரமாக உயர்ந்த நிலையிலும், இடைநிலையிலுமே இருக்கிறான்.  யார் இவ்வாறு அறிகிறானோ அவன் ஞான வழிமரபை உயர்த்துகிறான்.  சமமானவனாகவும் ஆகிறான்.   அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார்.        – 10

 பதவுரை: ஸ்வப்னஸ்தான: கனவுநிலையில் இருக்கும்; தைஜஸ:தைஜஸன்; த்விதீயா மாத்ரா – இரண்டாம் ஒலியான [எழுத்தான];  உகார: – உகாரமாக [அ என்னும் ஒலியாக]; உத்கர்ஷாது – உயர்ந்தவனாகவும்; உபயத்வாது ஹ வை  – இடையில் இருப்பவனாக்கவுமே இருக்கிறான்; ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஞான சந்ததிம் – ஞானவழி மரபை; உத்கர்ஷதி – உயர்த்துகிறான்; ஸமான: ச’ – சமமானவனாகவும்; 4வதி –  ஆகிறான்;  அஸ்ய குலே – அவனது வழித்தோன்றல்களில்; அ ப்ரஹ்மவித் – பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் ; 4வதி –  இருப்பதில்லை..

விளக்கம்:  இரண்டாம் ஒலியான ‘உ’காரமானது உயர்ந்தவனும், இடைப்பட்டவனுமான ஆத்மனின் இரண்டாம் பகுதியான தைஜஸன் என்று உபநிஷத் உரைக்கிறது.

அத்துடன் இவ்வுண்மையை உணர்ந்து அறிபவன் ஞானவழி மரபை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, அனைவருக்கும் சமமானவன் என்றும் சொல்கிறது.

சமமானவர் என்றால் யார் என்று பார்ப்போம்.

சமம் என்றால் உயரத்திலா, எடையிலா, நிறத்திலா, அறிவிலா, திறமையிலா, செல்வத்திலா, மற்ற  எதில் சமம்?

ஆத்மனே பரம்பொருள் என்றும், இருந்தது, இருப்பது, இருக்கப்போவது எல்லாமே ஓங்காரம்தான், ஓங்காரமே பரம்பொருள் என்றால் ஆத்மனின் பகுதிகளும் சமமாகத்தானே இருக்கவேண்டும்!  அதுமட்டுமா? வெளியுலகில் அறிந்த அனைத்தும் கனவுநிலையில் நுண்ணறிவாகத்தானே புலப்படுகின்றன!  அந்த ஒளிமயமான எண்ணப் பதிவுகளில் அனைத்தும் சமமே!  எல்லா அறிவுகளும் அங்கு ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பதிகின்றன.  கனவுலகமே ஒரு ஒளிமயமான நூலகம்.  அங்கு எல்லா அறிவுகளும் உள்ளன.  அறிவின் முன்னர் அனைத்தும் சமமே.  ஏழை-பணக்காரன், ஆண்-பெண், பலசாலி-வலிமையற்றவன் என்ற வேறுபாடே கிடையாது.இவர்கள் அனைவரின் அறிவும் அங்கு நிறைந்துள்ளது.  நினைவுகளின் முன்பு அனைவரும் சமமே.  இந்த அறிவின் கருவூலமான தைஜஸன் அனைத்துக்கும் சமமானவன்.

ஞானவழி மரபை உயர்த்துபவன் என்றால்…

சந்ததி என்றால் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்றுதானே பொருள், ஞானசந்ததி என்றால் அறிவுள்ள குழந்தைகள் என்றுதானே புரிந்துகொள்ளவேண்டும், ஞானவழி மரபு என்ற புதுப் பொருள் கொடுத்தால் எப்படி என்று கேள்வி எழலாம்.

teacher and studentsஒருவர் தன்னிடம் இருக்கும் அறிவை இன்னொருவருக்குப் புகட்டினால் புகட்டுபவர் புகடப்படுபவருக்குத் தந்தை/தாய் ஆகிறார்.  எனவேதான் ஆசானைத் தந்தை/தாய் என்றும் சொல்லப்படுகிறது.

இதெல்லாம் பத்தாம்பசலித்தனம், ஆசானாவது, தந்தை/தாயாவாது, இதெல்லாம் பேத்தல், அறிவுக்கு ஒவ்வாதது என்றுதான் இன்றைய அறிவியல் வாதிக்கும்.  நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம், எனவே  கல்விக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்துகிறோம்;  அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு நமக்கு கல்வி கற்பிக்கிறார்கள்.  அதற்காக அவர்களை நமது பெற்றோருக்கு இணையாகக் கருதமுடியுமா என்றுதான் கேள்வி வரும்.

இந்தக் கேள்வியெல்லாம் நான் காசு கொடுக்கிறேன், எனக்குக் கல்வி போதிக்கப்படுகிறது;  எனவே, எனக்குக் கல்வி கற்பிப்பவர்கள் எனது வேலைக்காரர்கள் என்ற மனநிலையால் ஏற்படும் மயக்கமேயன்றி வேறொன்றுமில்லை. எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் கல்வி தானாக வந்துவிடாது. ஆசான், மாணவர் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அக்கறையோடு செயல்பட்டால்தான் அது கல்வியாகும்.  அதனால்தான் கல்விக்கூடத்தை ஊட்டி வளர்க்கும் அன்னை [Alma-mater] என்றழைக்கும் பழக்கம் இருக்கிறது.  கல்விக்கூடத்தை அன்னை என்றால், கற்பிப்பவர்கள் தந்தையாகவும், தாயாகவும்தானே ஆகமுடியும்!

அதனால்தான் இங்கு சந்ததி என்பதற்கு மரபு என்ற பொருள் பகரப்படுகிறது.  ஆத்மனை அறிவின் கருவூலம் என்று அறிபவர் அனைவரையும் சமமாகத்தான் கருதுவார். அறிவை, ஞானத்தை அனைவருக்கும் சமமாக வழங்குவார்; ஞானவழி மரபை உயர்நிலைக்குக் கொண்டுவருவார்.  அதுவே இந்தச் சொற்றொடர் மூலம் விளங்குகிறது.

 அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார் என்று பதவுரை தருகிறீர்களே, குலம் என்றுதானே போட்டிருக்கிறது, குலம் என்றால் சாதிதானே, இந்த உபநிஷத்து மறைமுகமாக சாதி உணர்வைத்தானே வளர்க்கிறது, அதை மறைக்க வழித்தோன்றல் என்று பொருள் கொடுத்து அதை மறைக்கலாமா என்ற கேள்வியும் எழலாம்.

அதற்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.mother and child

தாய்க்குலம் என்று சொல்கிறோமே, அப்படியென்றால் தாய் என்பது ஒரு சாதியா, இல்லையே!  பெண்கள் அனைவரும் தாய் ஆகிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஒருமைப்படுத்தி, தாய்க்குலம் என்று வழங்கப்படுகிறது.  அதுபோலத்தான் ஒரே மாதிரியானவர்களைக் குலம் என்று சொல்லப்படுகிறது.

இங்கும் அதேமாதிரியான கருத்துடன்தான் குலம் என்று கூறப்படுகிறது.

மெய்ஞானத்தால் பரம்பொருளை அறிய இயலும் என்னும்போது, அப்படிப்பட்ட அறிவை, ஞானத்தைக் கற்பிப்பவர்கள் அந்த அறிவை வாழையடிவாழையாகத் தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார்கள.  எனவே அந்த மெய்ஞானத்தை அறிபவர்களின் குமுகம், கூட்டம், குழு, வழித்தோன்றல்கள் [வழிவழியாக மெய்ஞானத்தைக் கற்பவர்கள்] பரம்பொருளின் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள் என்று உபநிஷத்து உரைக்கிறது…

இங்கு ஆதி சங்கரரின் விளக்கத்தையும் அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரண்டாம் எழுத்தான ‘உ’காரத்திற்கும், தைஜஸனுக்கும் என்ன ஒற்றுமை?  ஒரு பொதுவான சிறப்பியல்பாக உயர்வைச் சொல்லலாம்.  ‘உ’ என்ற ஒலி ‘அ’வைவிடச் உயர்ந்தது[1].  அதைப்போலவே தைஜஸன் வைஸ்வாநரனைவிட உயர்ந்தவன்[2].  இன்னொரு பொதுவான சிறப்பியல்பாகச் சொல்லக் கூடியது – ‘உ’, ‘அ’வுக்கும், ‘ம்’க்கும் இடையில் இருக்கிறது;  அதுபோல, தைஜஸனும், வைஸ்வாநரனுக்கும், ப்ராக்ஞனுக்கும் இடையில் இருக்கிறான். 

இப்பொழுது இந்த அறிவின் [ஞானத்தின்] விளைவு, பயன் விளக்கப்படுகிறது.  அறிவு – ‘உ’காரத்தை இனம் கண்டுகொண்டதனால் ஏற்படும் அறிவு – எப்பொழுதுமே அதிகமாகிறது.  அதாவது, அவனது அறியும் திறன் மிகவும் அதிகமாகிறது.  இவ்வறிவு பெற்றவன் அனைவராலும் அவ்வாறே [அறிவாளி என்றே] அறியப்படுகிறான் அவனது நண்பர்களைப் போல அவனது எதிரிகளும் அவனைக்கண்டு [அவனது அறிவைக்கண்டு] பொறாமைப் படுவதில்லை. மேலும், இவனது மரபில் [இவனிடம் அறிவைப் பெற்றவர்கள்] பரம்பொருளை அறியாதவராக இருக்கமாட்டார்கள்.

——————————————————————————————————–

[1] ‘அ’ என்னும் ஒலி முதலில் வருவதால் அது அனைத்து ஒலிகளைக் காட்டிலும் உயர்ந்ததானாலும், ‘அ’வுக்குப் பின்னால் வருவதால் ‘உ’ உயர்ந்தது என்று மறைமுகமாக எண்ண வாய்ப்பிருக்கிறது.

[2] விஸ்வாநரன் தூலப் பொருள்களையே [ஐம்புலன்களால் உள்ளி உணர்வதையே] விரும்புவதாலும், அவனது அறிவு தூலப் பொருள்களையே நம்பி இருப்பதாலும், நுண்ணுணர்வு மூலம் அனைத்தையும் அறியும் தைஜஸன் விஸ்வாநரனைவிட உயர்வாக அறியப்படுகிறான்.

——————————————————————————————————–

mu11

ஸுஷுப்தஸ்தா2ன: ப்ராக்ஞோ மகாரஸ்த்ருதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இதஹும் ஸர்வமபீதிஸ்ச ப4வதி ய ஏவம் வேத3 ||                                                            —  11

அளப்பதினாலும், ஒன்றியதாலும், ஆழ்உறக்க நிலையினான  அறிவாளி [ப்ராக்ஞன்] உண்மையில் ‘மூன்றாம் ஒலி[எழுத்து]யான ‘ம’காரமே [‘ம்’ என்ற ஒலியே]. எவன் இவ்வாறு அறிகிறானோ [அவன்] இவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு தன்னுள் ஒடுங்குகிறான்.                                                                                                                                     – 11

பதவுரை: ஸுஷுப்தஸ்தான: – ஆழ்உறக்கநிலையில் இருக்கும்; ப்ராக்ஞ: – பிராக்ஞன் [அறிவாளி]; மிதே: அபி – அளப்பதினாலும்; அபீதே: வா – உள்ளே ஒடுங்குவதலுமே த்ருதீயா மாத்ரா – மூன்றாம் ஒலியான [எழுத்தான];  மகார: – ‘ம’காரமே [ம் என்னும் ஒலியே]: ய: : – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; இதஹும் சர்வம் – இவை எல்லாவற்றையுமே[அறிந்துகொண்டு]; அபீதி: ச – உள்ஒடுங்குபவனாகவும் பவதி – ஆகிறான்; மினோதி ஹ வா  – நிச்சயமாக உள் அளப்பவனாகவும் [ஆகிறான்].

விளக்கம்:  நாம் எதிர்பார்த்தபடி மூன்றாம் ஒலியான ‘ம்’ ஆத்மனின் மூன்றாவது பகுதியான பிராக்ஞன் என்று உபநிஷத்தின் பதினொன்றாவது சொற்றொடர் செப்புகிறது.  முந்தைய சொற்றொடர்களைப் போலவே, பிராக்ஞனுக்கும் இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறது – அளப்பவன், உள்ளே ஒடுங்குபவன் அல்லது ஒன்றுபவன்.

அளப்பவன் என்றால் எதை அளக்கிறான்?  எங்கு ஒன்றுகிறான்?

ஆழ்உறக்க நிலையில் உள்ளே இறையுடன் ஒன்றுகிறான் என்றான் ஒருவகையில் ஒப்புக்கொள்ளலாம்.  ஆனால் எண்ணங்களின் குவியல்களாக இருக்கும் பிராக்ஞன் எதை அளக்கிறான்?

ஆதி சங்கரர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.sankaracharya

ஒரு பயிர் வளரும்போது அது பலவிதமாக அளக்கப்படுகிறது.  முதலில் விதையாக இருக்கும் அது, தூவப்பட்ட இடத்தில் முளைவிட்டு நிலத்தைவிட்டு வெளிக்கிளம்புகிறது.  பிறகு நாற்றாக இருக்கும்போது அது இருக்கும் இடத்தைவிட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு சரியான இடைவெளிவிட்டு, நன்கு வளரும்படி நடப்படுகிறது.  அப்படி நடப்பட்ட பயிர் நன்கு வளர்ந்து, பூத்துக் கதிர்விடுகிறது.  இவை அனைத்தையும் குடியானவன் கவனித்து, பயிரின் வளர்ச்சியை அளந்து, அதற்கு நீர்பாய்ச்சுகிறான். அவன் ஆதிக்கமாகவும் நீர் பாய்ச்சுவதில்லை, குறைத்தும் விடுவதில்லை.  சரியான அளவுக்கே நீர் பாய்ச்சுகிறான்.  நாற்றைப் பிடுங்கி நடும் முன்னரும், அது சரியான அளவுக்கு வரந்திருக்கிறதா என்று அளவிட்டபின்னே அதைச் செய்கிறான்.

கதிர் முற்றியபின்னரும், அது அறுவடை செய்யத்தக்க நிலையை அடைந்துவிட்டதா என்று அளந்தபின்னரே அதை மேற்கொள்கிறான்.farmer

அதைப்போலவே வைஸ்வாநரனும், தைஜஸனும் அவர்களது பரிணாம வளர்ச்சியின்போதும், உள்ஒடுங்கி, ஆழ்உறக்கத்தில் ஒன்றி பிராக்ஞனாக பரிணாம மாற்றமடையும்போதும் பிராக்ஞனால் அளக்கப்படுகிறார்கள்.

அதேமாதிரி ஓம் என்னும் சொல்லில் உள்ள அகாரமும், உகாரமும் ஒன்றி ஓகாரமாகி ‘ம்’முடன் ஒன்றுவதையே இச் சொற்றொடர் குறிக்கிறது.  மீண்டும் ஓங்காரத்தை ஒலிக்க, மகாரத்திலிருந்தான் – ‘’ம்’ என்னும் ஒலி நின்றபின்னரே, அகாரமும், உகாரமும் வெளிக்கிளம்புகின்றன.

இன்னொருவிதமாக விளக்கினால், விழித்திருக்கும்போது ஆத்மனாகிய நாம் வெளியுலகிலிருந்து பெரும் அத்துணை உணர்வுகளும், அறிவுகளும், கனவுறக்க நிலையில் அதே ஆத்மனாகிய நாம் காணும் ஒளிமயமயமான நுண்ணுணர்வுகளும், தோற்றமற மறைந்து, ஆழ்உறக்க நிலையில் இருக்கும் ஆத்மனாகிய நம்மிடம் ஒடுங்கிவிடுகின்றன —  மீண்டும் நாம் நனவு, கனவு நிலைக்குத் திரும்பும் வரையும்.

எனவே பிராக்ஞன் வைஸ்வாநரன், தைஜஸன் இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவுகள் இவையெல்லாம் வைக்கப்படும் ஒரு கொள்கலமாக ஆழ்உறக்கநிலையில் இருக்கும் பிராக்ஞன் ஆகிறான்.

அதாவது வைஸ்வாநரனும், தைஜஸனும் ஆழ்உறக்க நிலையில் பிராக்ஞனுடன் ஒன்றி விடுகிறார்கள் —  ஒடுங்கிவிடுகிறார்கள் – ஒன்றாக ஆகிவிடுகிறார்கள்…merging atmans

இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்குகிறது என்றால் என்ன, ஓங்காரத்தின் ஒவ்வொரு ஒலியையும் அறிந்தவர் இப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்று உபநிஷத்து சொல்கிறதே,  ஒலியை ஆத்மனின் ஒவ்வொரு பகுதி என்று அறிவதா, புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதே என்ற கேள்வி பிறக்கிறது.

இதற்கு பதிலாகச் சொல்லபடுவதுதான் தியானம் [meditation].

ஒரு மந்திரம் என்பது மனதிற்குள் சொல்லப்படுவது.

ஓம் என்பது ஒரு மந்திரம்.  இந்த மந்திரத்தை மனதில் சொல்லும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் பொது – ‘அ’ என்ற ஒலியிலோ, ‘உ’ என்ற ஒலியிலோ, ‘ம்’ என்ற ஒலியிலோ மனதை ஒருநிலைப்படுத்தித் தியானிக்கும்போது, தியானிப்பவர்கள், அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒலிக்குத் தகுந்தாவாறு வைஸ்வாநரனையோ, தைஜஸனையோ, பிராக்ஞனையோ உணருகிறார்கள்/ஒன்றுகிறார்கள்/அறிகிறார்கள்.  அப்படி நடக்கும்போது தன்னுள் இருக்கும் ஆத்மனை அறிகிறார்கள்

அந்தந்த ஆத்மனின் பிரிவுக்குள்ள குணங்கள் அனைத்தும் கைவரப்பெறுகிறார்கள்.

அதுசரி, ஏன் வைஸ்வாநரன் தைஜஸனுடன் ஒன்றவேண்டும், அப்படி ஒன்றியபின், தைஜஸன் ஏன் பிராக்ஞனுடன் ஒன்றவேண்டும்?  இவர்கள் ஆத்மனின் மூன்று பிரிவுகள் தானே, ஏன் ஒவ்வொன்றாக ஒன்றுகிறார்கள் என்ற நியாயமான கேள்வியும் நம்முள் எழுகிறது.

உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்;  அதை நான்காகப் பிரித்து, வெவேறு நிறங்களுடைய கண்ணாடிப் பாத்திரங்களில் ஊற்றிவைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.  பாலின் நிறம் அது ஊற்றிவைக்கப்படும் கண்ணாடிப் பாத்திரத்தின் நிறமாகத்தானே தெரியும்?

முதல் பாத்திரம் மஞ்சள் நிறம் – அதனுள் இருக்கும் பால் [ஆத்மனின் பிரிவாகிய வைஸ்வாநரன் – நமது வெளிஅறிவால் உணரக்கூடிய அண்டம்]

இரண்டாம் நீல நிறப் பாத்திரத்தில் இருக்கும் பால் தைஜஸன் – அண்ட மனம்.

மூன்றாவது சிவப்புப் பாத்திரத்தில் பிராக்ஞன் இருக்கிறது.  அதுதான் குணமுள்ள ஈஸ்வரன் [சகுணப் பிரம்மம்]  ஈஸ்வரனே அனைத்தின் தோற்றமாகவும், அதன் முடிவாகவும் இருக்கிறான்.  அவனே விழிப்புநிலையில் நாம் ஐம்புலன்களாலும் உணரும் அண்டங்களையும், கனவுநிலையில் காணும் உணர்வுகளையும், காட்சிகளையும், ஆழ் உறக்க நிலையில் ஒன்றுமில்லா நிலைக்கும் ஒன்று சேர்க்கிறான்.  நனவும், கனவும் ஒன்றுமில்லா நிலையில் [ஆழ்உறக்க நிலையில்] ஒன்றிவிடுகின்றன.

water in colored utensilsமுதலில் மஞ்சள் நிறமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பகுதி வைஸ்வாநரன் என்று வைத்துகொண்டு, அந்தப் பாத்திரத்தில் இருக்கும் பாலை, நீல நிறத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பாலில் [தைஜஸன்] சேர்த்தால் பால் நீலமும், மஞ்சளும் சேர்ந்த பச்சை நிறமாகத் தெரியாது, நீல நிறமாத்தான் தெரியும். இப்பொழுது இரண்டும் இணைந்தாலும் ஒரே நிறமாகத்தானே நமக்குத் தோன்றுகிறது!

இப்படிச் சேர்த்த பாலை முன்பு இருந்ததுபோல மீண்டும் பிரிக்க முடியுமா?  இரண்டறக் கலந்ததுவிட்டபின் அவற்றை தனித்தனியாக எப்படிப் பிரித்தெடுக்கமுடியும்?  தண்ணீரும், எண்ணையும் என்றால் – மணலும் சர்க்கரையும் என்றால் முடியும்.  ஏனென்றால் அவை தனித்தனியான பொருள்கள்.  ஆத்மன் தனித்தனி அல்லவே!  ஒன்றாக இருந்த ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒன்றுசேர்த்தபின், முதலில் இருக்கும் பிரிவுக்கு எப்படிக் கொண்டுசெல்ல இயலும்?

அடுத்தபடியாக நீலப் பாத்திரத்தில் இருக்கும் பாலை [இரண்டறக் கலந்த வைஸ்வாநரன் + தைஜஸன்] சிவப்புப் பாத்திரத்தில் இருக்கும் பாலுடன் [பிராக்ஞன்] ஊற்றினால், பால் கலவை ஊதா நிறமாகத் தெரியாது.  சிவப்பாகத்தான் தெரியும். ஒன்றிய பால் பிராக்ஞன்தான்.  இக்கலவையையும் பழையபடி பிரிக்க இயலாது.

இதற்கடுத்த நிலைதான் துரிய நிலை.  ஓங்காரத்தின் இறுதி விளக்கம்.

 mu12

அமாத்ரஸ்சதுர்த்தோ2 அவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஸ’ம: சி’வோஅத்3வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஸ’த்யாத்மநாத்மானம் ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ||                     –  12

செயல் ஒன்றுமில்லாத, ஒலியற்றவனுமான, நான்காமவன் [துரியன்] அண்டத்தைத் முடிவுறச்செய்பவன், மங்கலமானவன், இருமையற்றவன், இப்படிப்பட்ட ஓங்காரம் ஆத்மன்தான்.  எவன் இப்படி அறிகிறானோ, அவன் தானாகவே தன்னுள் [ஆத்மனுள்] ஒன்றுகிறான்.                                                                                                                                                – 12

பதவுரை: அவ்வியவஹார்ய: செயல்களற்றவன்; மிதே அமாத்ர: ச – ஒலி இல்லாமல் இருப்பதாலும்; சதுர்த்த2: :நான்காமவன் [துரியன் ஆகிறான்]; பிரபஞ்ச உபச’ம: – அண்டத்தை [அனைத்து நிகழ்வையும்] முடிவுறச் செய்பவன்;  சி’வ: – ‘மங்கலமானவன்;  அத்3வைத:: – இருமையற்றவன்;  ஏவம் ஓங்கார: – இப்படிப்பட்ட ஓங்காரம்; ஆத்ம: ஏவ – ஆத்மனே; ய: – எவன்; ஏவம் வேத3இவ்வாறு அறிகிறானோ; ஆத்மனா  – தன்னால் [தானாகவே]; ஆத்மானம் – தன்னை [தன்னுள் இருக்கும் ஆத்மனுடன்]]; ஸம்விஸ’தி – ஒன்றுகிறான்.

விளக்கம்:  இந்த சொற்றொடரில் பரம்பொருளுடன் ஒன்றுவது எப்படி என்று சொல்லப்படுகிறது.  அத்துடன் மட்டுமல்ல, ‘ஓம்’ என்ற சொல் மூன்று ஒலிகளால் ஆனது மட்டுமல்ல, நான்காவதாக ஒலியற்ற நிலைமையும் ஓங்காரத்திற்கு இருக்கிறது, அதுவே ஆத்மனின் ‘துரிய’ நிலை என்றும் எடுத்துரைக்கிறது.

paramaathamaஅந்நிலையில் ஆத்மன் செயல் எதுவும் ஆற்றுவதில்லை.  அந்நிலையில் – ஆத்மனின் செயலற்ற நிலையில் – அண்டமே —  நனவில் திடப்போருளாகக் காணப்படும், கனவுநிலையில் ஒளிமயமான உணர்வுகளாகத் தோன்றும், ஆழ்உறக்க நிலையில் எண்ணங்களின் குவியலாக உருவமற்று இருக்கும் – அந்த அண்டமே முடிந்துபோகிறது.  ஈஸ்வரன் என்று அழைக்கப்படும்  காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு, மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.

முதலீட்டியம் / ஒருமை
முதலீட்டியம் / ஒருமை

இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ!  பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது[1] துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?

அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.[1]

எதுவும் உருவாகாமல் ஒன்றி இருந்த ஒன்று, இருமையில்லாமல் இருந்த ஒன்று — பால்வழி மண்டலங்கள், மற்றும் பெரும்வெடிப்பு தோன்றி அண்டமே உருவாக வழிவகுத்தது — என்று அறிவியலே சொல்லும்போது, அந்த முதலீட்டியமே பரம்பொருள், ஆத்மன் என்று பொருள்கொள்வதில் தவறென்ன!

இந்த வழியிலேயே தொடர்ந்தால் —

  1. இங்கு நாம் காணும் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு முதலீட்டியத்திலிருந்துதான் –பெருவெடிப்பின் மூலம் தோன்றின.
  2. அப்படித் தோன்றியவை அனைத்தும் அந்த முதலீட்டியத்தில்தான் இருந்தன.
  3. உயிரும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும்.
  4. நாம் கண்ட, காணும், காணப்போகும் அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
  5. இவ்வண்டத்தில் நாம் காணும் சக்தி அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
  6. இவ்வண்டம் தோன்றுமுன்னே முதலீட்டியம்தான் இருந்தது. எனவே அந்த முதலீட்டியத்தினுள்தான் அண்டமே ஒடுங்கி இருந்த்திருக்கவேண்டும்.
  7. இந்த அண்டம் தோன்றும் முன்னர் முதலீட்டியம் செயலற்றே இருந்திருக்கவேண்டும்.
  8. எனவே இந்த முதலீட்டியத்தையே — ஆத்மனின் நான்காம் பகுதியான — வைஸ்வாநாரன், தைஜஸன், பிராக்ஞன் இவற்றை உள்ளடக்கிய – ஓங்காரத்தின் நான்காவது ஒலியற்ற ஒன்றாக – துரியனாக அறியலாமே.

நாம் வெளியில் இருந்து, நனவுலகிலோ, கனவுலகிலோ, ஆழ்உறக்க நிலையிலோ, துரிய நிலையை எய்த இயலுமா?

இயலவே இயலாது!

ஏனெனில், வெளியில் இருந்து நோக்கும்போது இருமைதான் இருக்கும், ஒருமை இருக்காது.  எனவே, அந்த ஒருமையான பரம்பொருளினபால் சித்தத்தைச் செலுத்தி ஒன்றி, நிர்விகல்ப சமாதி நிலையை அடையும்போதுதான், அப்பரம்பொருளுடன் நாம் ஒன்ற இயலும்.

‘அ’விலிருந்து ‘உ’’வுக்கும், ‘ம்’க்கும் வருவோம்.

ஆதி சங்கரர் என்ன சொல்கிறார், துரியனைப் பற்றி?

அவர் பரம்பொருளையே இரண்டுவிதமாகப் பிரிக்கிறார், சகுணப் பிரம்மம், நிர்குணப் பிரம்மம் என்று.

இந்த சகுணப் பிரம்மமே —  குணங்களுடன் கூடிய ஈஸ்வரனே – இவ்வண்டத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்.  அவரை [சகுண பிரம்மத்தை] அறிய, கௌடபாதரின் காரிகையில் (விளக்கம்) உள்ள சுலோகத்தின் 26ம் சுலோகத்தின் முதல் வரிப்படி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.

அந்த முதல் வரி எது?

ப்ரணவோ ஹ்யபரம் [ப்ரணவ: ஹி அபரம்] ப்ரஹ்ம ப்ரணவஸ்’ச பர: ஸ்ம்ருத:  |

[பிரணவமான] ஓங்காரமோ எனில் மற்றொரு பிரம்மமே!  [பிரணவமும்]ஓங்காரமும் பரப்பிரம்மமாகவே எண்ணப்படுகிறது.

கூர்ந்து கவனித்தால் மற்றொரு பிரம்மம், அப்படியே எண்ணப்படுகிறது என்று சொல்லப்படுவதைக் காணலாம். மற்றொரு பிரம்மம் என்பதுதான் சகுணப்பிரம்மம் [பரம்பொருள்/ஈஸ்வரன்].  பரம்பொருளை முதலில் அறிய விரும்புபவர்கள் —  அதாவது, முதல் முயற்சி எடுப்பவர்கள் —  ஓங்காரத்தைப் பரம்பொருளாக [ஈசனாக] எண்ணித் தியானிக்கவேண்டும் என்று சொல்வது புரியும்.

தியானம் செய்யப் புகுபவர்கள் — அனைத்தையும் வெளியுலகின் வாயிலாக அறிபவர்கள் – அம்மாதிரித்தான் தியானம் செய்ய – மனதை ஒருநிலைப்படுத்த இயலும்.  எனவேதான் அகர, உகர, மகரமாக, ஒலியாக நிற்கும் ஈசனை, பரம்பொருளை, ஓங்காரத்தை தியானம் செய்யவேண்டும்.  இது கைகூடினால் ‘சகுண சமாதி’ நிலை கிட்டும்.  இந்நிலையை அடைந்தவர்கள் மீண்டும் காரண, காரியம் உள்ள இவ்வண்டத்திற்குத் திரும்பி வருவார்கள்.

அதன்பின் ஒலியற்ற ஓங்காரமான துரியனை, நிர்குணப் பிரம்மத்தின்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

இப்பொழுது இரண்டாம் வரிக்குச் செல்லுவோம்.

அபூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய:  ||

முன்தோற்றமற்றதும், முடிவற்றதும், வெளியில் இல்லாததும், தனித்தன்மை வாய்ந்ததுமான ஓங்காரம் மாற்றமில்லாதது.

முன்தோற்றமற்றது என்றால் என்ன?  இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை.

தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.  நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் —  ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்?  அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா?  முடியாதே!  அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது.  அது எப்பொழுதும் இருக்கிறது.

இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா!  எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

அது வெளியிலும் இல்லை என்றால் என்ன?  எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்!  எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை.  அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது.  அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

அப்படி தோற்றமும் இல்லாமல், முடிவும் இல்லாமல், வெளியிலும் இல்லாத, தனித்தன்மை வாய்ந்த அது மாற்றமின்றித்தான் இருக்கும்.  அங்கு காரணமும் இல்லை, காரியமும் இல்லை.  ஒரே அமைதிதான்.  படைப்பும் இல்லை, காப்பும் இல்லை, அழிப்பும் இல்லை, மறைப்பும் இல்லை, அருளும் இல்லை. எல்லாம் ஓய்ந்துபோன நிலையில் எதுவுமில்லாமல் “சிவனே” என்றிருக்கும் நிலை.

அந்த நிலையில் இருக்கும் – ஒலியற்ற ஓங்காரமாக இருக்கும் இறைவன்/வி ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அதுவுமல்ல.  ஏனெனில் அதை வெளியில் இருக்கும் எதுவும் பார்க்கமுடியாது, அளவிடமுடியாது – ஏனென்றால் அந்த அமைதியான நிலையில் வெளியில்தான் எதுவுமே இல்லையே!

இப்படிப்பட்ட பரம்பொருளை அடைய, அதுவேறல்ல, நான் வேறல்ல என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பரம்பொருளாகவே ஆக, ஒலியற்ற ஓங்காரத்தை தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தவேண்டும்.

இப்படித் தன்னுள் இருக்கும் பரம்பொருளுடன் ஒன்றுவதே நிர்விகல்ப [வேறுபாடற்ற/பிரித்தறியாத] சமாதி நிலை. இந்நிலையை அடைந்தோருக்கு இவ்வுலகமில்லை, பிறப்பு இறப்பு என்னும் காரிய, காரணம் இல்லை. ஆணவம், கர்ம வினைகள், மாயையினால் கட்டப்படாது — அவை நீங்கி — தான், தனது, எனது, மற்றவை, என்ற எண்ணம் இல்லாமல் — பிறித்தறியாமல் — எல்லாமே ஒன்று என்று இருமையற்ற நிலையில், ஒருமையாகி — ஒலியற்ற ஓங்காரத்துடன், பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றிய அவர்கள் — பரம்பொருளாகவே ஆகிவிடுகிறார்கள் [நிர்விகல்ப சமாதி அடைந்து விடுகிறார்கள்]!  பேரின்பநிலையை எய்துகிறார்கள்.

நிர்விகல்ப சமாதி
நிர்விகல்ப சமாதி

thuriyan

இத்துடன் எனது மாண்டூக்கிய உபநிஷத்தின் எளிய விளக்கம் நிறைவு பெறுகிறது.  இராமனுக்கு கடலின் மேல் பாலமமைக்க ஒரு அணில் தனது முன்னங்கால்களால் ஒரு சிறுகல்லை உருட்டிப்போட்டதுபோல என்னால் இயன்றதை எழுதியுள்ளேன்.  நான் எழுதியதில் தவறு இருந்தால், பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் என் தவறைத் திருத்திக்கொள்வேன்.

அமைதி மந்திரம்:sankaara and students

எந்த ஒரு உபநிஷத்துவிற்கும் துவக்கத்தில் ஒரு அமைதி மந்திரம் [சாந்தி ஸ்லோகம்] உண்டு.  எதையும் கற்பதற்குமுன் ஆசிரியரும், மாணவர்களும் அமைதியுடன் இருந்து கற்பிக்க/கற்கவேண்டும் என்பது அதன் காரணமாகும்.  இந்த உபநிஷத்துவுக்கான அமைதி மந்திரத்தை முதலில் எழுதாததற்கு ஒரு காரணம் உண்டு.  இங்கு நான் கற்பிப்பவனும் அல்லன்.  இதைப்படிப்பவர்கள் எனது மாணவர்களும் அல்லர்.

எனவே, முதலில் சொல்லவேண்டிய அமைதி மந்திரத்தைக் முடிவில் கொடுத்து முடிக்கிறேன்.

mu santhi

4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தே3வா: | ப4த்3ரம் பஸ்’யேமாக்ஷபி4ர்யஜத்ரா: | ஸ்த்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தநூபி4:  வ்யசே’ம தேவஹிதம் யதா3யு: | ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்34ஸ்ரவா: |  ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்’வவேதா3:  |  ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: | ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

தேவர்களே [தெய்வங்களே]!  காதுகளால் நல்லதையே கேட்போமாக.  போற்றுதலுக்கு உரியவர்களே, கண்களால் நல்லதையே பார்ப்போமாக.  உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து, எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக.  நிகரற்ற புகழுள்ள இந்திரனே எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி [உண்டாகட்டும்]!  அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி!   தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி!  பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி! 

ஓம்! அமைதி! அமைதி!! அமைதி!!!

[நிறைவு பெறுகிறது]

6 Replies to “மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4”

  1. //அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.[1]//

    விண்மீன் தன் சக்தி அனைத்தையும் இழந்து ஒடுங்கி கடைசியில் கருந்துளையாக மாறிவிடுகிறது என்று படித்ததாக எனக்கு ஞாபகம். கருந்துளைகளில் சிங்குலாரிட்டி இருக்கிறது என்று பிரபஞ்ச அறிவியல் கூறுகிறது. இந்த சிங்குலரிடியிலிருந்து புது விண்மீன்(கள்) மறுசுழற்சியாக தோன்றுகின்றன.

  2. //ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு, மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.//

    மிக சரியாக கூறியிருக்கிறீர்கள். அருமை!

  3. //இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ!//

    ஆம்,அறிவியல் கூறும் ஒருமை/முதலீட்டியம்(singularity) பிரமத்தையே குறிக்கிறது.

    // பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது[1]//

    ஆம்.

    // துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?//

    இல்லவே இல்லை. ஒருமை/முதலீட்டியம்(singularity) என்பதுதான் கடவுள்/பிரம்மம்.

  4. //விண்மீன் தன் சக்தி அனைத்தையும் இழந்து ஒடுங்கி கடைசியில் கருந்துளையாக மாறிவிடுகிறது என்று படித்ததாக எனக்கு ஞாபகம். //

    1. விண்மீன்களின் அளவுக்குத் தகுந்தபடி அவை தன்னுள் இருக்கும் ஹைட்டிரஜன் அணுக்களை ஒன்றிணைத்து [atomic fusion] பெரும்சக்தியை வெளிப்படுத்துகின்றன.
    2. அதன்மூலம் ஆர்கன் அணு உண்டாகிறது.
    3. ஹைட்ரஜன் அணுக்கள் தீர்ந்தவுடன், ஆர்கன் அணுக்களை ஒன்றிணைத்து கரி அணுவை விண்மீன் உண்டு செய்கிறது.
    4. இப்படியே பெரிய அணுக்கள் உண்டாவதால், விண்மீனின் ஈர்ப்புத்தன்மை அதிகரித்து அது வெடித்துச் சிதறுகிறது. அதையே ஆங்கிலத்தில் going nova என்று சொல்கிறார்கள்.
    5. பெரும்பாலான விண்மீன்கள் [நமது கதிரவன் உள்பட] வெடித்துச் சிதறும்போது கருந்துளைகளை உண்டாக்குவதில்லை.
    6. அதற்கான விதிமுறைகள் வேறு.

    அடுத்து நான் ஒரு அறிவியல் கட்டுரை எழுதலாமென்று இருக்கிறேன். அதில் இதைப்பற்றி விளக்குகிறேன்.

    நமது பால்வழி மண்டலத்தில் நடுவில் மிகப்பெரும் கருந்துளை [black-hole] இருக்கிறது என்றும், கருந்துளைகளே நமது பால்வழி மண்டலங்களைப்போல மற்ற வளி மண்டலங்களையும் [galaxies] உருவாக்கின என்று சொல்கிறார்கள்.

    கருந்துளை முதலீட்டியத்தில் முடிகிறது. அதைப்பற்றி அறியவேண்டுமானால் கீழ்க்கண்ட சுட்டியில் சென்று படித்துப்பாருங்கள்.

    https://en.wikipedia.org/wiki/Black_hole

  5. நான் ஸ்டீபன் ஹாகிங் எழுதிய a brief history of time என்ற புத்தகத்தை சுமார் 10 வருடங்களுக்கு முன்பு படித்தேன். அதில் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்பதை பற்றி அவர் விளக்கியிருக்கிறார். நீங்கள் கொடுத்துள்ள விக்கி பீடியா தள சுட்டிக்கு நன்றி. மேலதிக தகவல்களை அதில் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *