சீதையின் சீற்றம்!

எனக்கு அலுத்துப்போய் விட்டது.  கோபம்கோபமாக வருகிறது! 

 seethaஇப்பொழுது எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது.  அவள் அடிமைபோல நடத்தப் பட்டாள்!  கற்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவளுக்குக் காலம் முழுதும் கண்ணீரே பரிசாகக் கிடைத்து!  இப்படிப்பட்ட அநீதி இழைத்தவனை, கொடுமைக்காரனை, அவதாரபுருஷன் என்றும், நேர்மையின் மறு உருவம் என்றும், அறநெறியாளன் என்றும் எப்படிப் போற்றமுடியும்? 

“மனைவியை மதிக்கத் தெரியாதவனை மகேசன் எனப் புகழலாமா?  ஒருமுறை தீயில் புகுந்து மீண்டவளை மீண்டும் எவனோ சொன்னான் என்று கானகம் அனுப்பிய கல்நெஞ்சனல்லவா இவள் கணவன்!  அப்படியாவது அவளைக் கானகத்தில் நிம்மதியாக இருக்கவிட்டானா?  மீண்டும் உன் கற்பை நிருபித்துக்காட்டு என்று சொல்லி, அவளை மனம் உடையச்செய்து, உயிர்துறக்கச் செய்துவிட்டானே!”  என்று எனக்குப் பரிந்து பேசுவதாகத் தங்களையே எனக்கு வழக்காடுவோராகச் செய்துகொள்வோர் சிலர்.

இன்னும் சிலரோ, மனம் போனபோக்கில் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். 

“என்னடா இது, சீதை கற்பில் சிறந்தவள் என்று நாமே ஒப்புக்கொள்கிறோமே, அப்படிப்பட்ட கற்புக்கரசி தனது கணவனை மற்றவர் தூற்றுவதைத் தாங்குவாளா?” என்று கணநேரமும் கருத்தில் கொள்வதில்லை.

கணவன் தன்மீது அவதூறு சொல்வது தவறு என்று தட்டிக்கேட்டுத் தீக்கடவுளுக்கே சவால்விட்டவள், தன் கணவன்மீது எப்பழியும் விழக்கூடாது என்று இவ்வுலகுக்குக் காட்டுவதே பெரிது, தனது உயிர்கூடத் துச்சமே என்று எண்ணிய பெண்குலப் பெருவிளக்கு, அவளது கணவரைக் கண்டவர் பழிப்பதை விரும்புவாளா என்று ஏன் அவர்களால் எண்ணிப்பார்க்கத் தோன்றவில்லை?

எப்படி இருந்தாலும், நீங்கள் அனைவரும் என் அன்பான குழந்தைகளே ஆவீர்கள்!  தந்தை ஒழுக்கம் கற்பிக்கிறார் அன்று அவர்களுக்குத் தோன்றாது, தன்னைத் தண்டிக்கிறார், எனவே அவர் இரக்கமற்றவர் என்றே நினைப்பார்கள்!  தாயைத் தந்தை கடிந்துகொண்டால், அவரை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வரும் அறியாக் குழந்தைகளாகத்தான் உங்களை எண்ணுகிறேன்.

எனவே, என்னை யாரும் அடிமைசெய்யவில்லை, ஆதிக்கம்செய்யவில்லை, செய்யவும் இயலாது.  என் கருத்து என்ன என்று ஒரு தாயாக உங்களுக்கு விளக்கக் கடமைப்பட்டு உள்ளேன்!

என் கண்ணினும் இனிய செல்வங்களே! கேளுங்கள்…

…அதற்கு முன்னர், அறிவியலில் வல்ல குழந்தைகளுக்கு விஞ்ஞான விளக்கமும், ஆன்மீகத் துறையில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஆன்மிகம் மூலமாகவும், பெண்மை ஆண்மையைவிட எவ்வளவு உயர்ந்தது, பெண்கள் இல்லாமல் ஆண்களே இல்லை,  ஆண்மையே இல்லை, இந்த உலகம், இயற்கை, படைப்பு எதுவுமே எல்லை என்பதையும் விளக்கிவிடுகிறேன்.x-y genes

மனிதர்களிடம் இருபத்திரண்டு பண்பு காரணித் தொகுப்புகளும் (genes), இரண்டு இனக்கீற்றுகளும் (choromosomes)  இருந்த போதிலும், மனிதக் கரு இரண்டு இனக்கீற்றுகள் மூலம் உருவாகிறது, அது ஆணின் ஒன்றும், பெண்ணின் ஒன்றும் இணைந்து உருவாவது என்பதை விஞ்ஞானம் அறிந்த குழந்தைகளுக்கு நான் விளக்கவேண்டியதில்லை. பெண் கரு இரண்டு X இனக்கீற்றுகளின் இணைப்பினாலும், ஆண் கரு ஒரு  X, ஒரு Y இனக்கீற்றுகளின் இணைப்பினாலும் உருப்பெறுகின்றன என்பதும் நீங்கள் அறிந்ததே!

பெண் X  இனக்கீற்றை மட்டுமே உண்டுபண்ணுகிறாள், ஆண் X மற்றும் Y இனக்கீற்றை உண்டுபண்ணுகிறான்.  இதில் y இனக்கீற்று X இனக்கீற்றை விடச் சிறியது என்றும் என்னுடைய விஞ்ஞானக் குழந்தைகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

X இனக்கீற்று 1098  மரபணுக்களையும், Y இனக்கீற்று 26 மரபணுக்களையும் உள்ளடக்கியதில் இருந்து, பெண்ணை உருவாக்கும் X இனக்கீற்றின் உயர்வை உள்ளலாமே! [1]

பெண்மையே பெரிது என்று அறிவியலிலிருந்து அறிந்துகொள்ளலாமே!

சங்கரர்
சங்கரர்

இதுமட்டுமா!  ஆண் உள்ளர்ந்த ஆற்றல் (potential energy) உடையவன் என்றால், பெண் இயங்காற்றல் (kinetic energy) உடையவள்.  இதைத்தான் சிவம் என்றும், சக்தி என்றும் ஆன்மீகக் குழந்தைகள் இயம்புகிறார்கள்.  சிவத்திடம் எதையும் படைக்கும், காக்கும், அழிக்கும், மறைக்கும், அருளும் உள்ளார்ந்த ஆற்றல் இருந்தாலும், அதை உணரும் ஆற்றல் இல்லை.  சிவத்திடம் உணரும் ஆற்றலை (ego) உண்டுபண்ணி, அவனை அவன் தொழில்களை ஆற்றவைப்பவள் உமையம்மையான, பெண்மையின் வடிவமாகிய சக்தியே என்று ஆதிசங்கரர்  இயம்பி உள்ளாரே! [2]

சக்தியுடன் இணைந்த பின்னரே சிவம் ஆக்கும் திறனைப் பெறுகிறது;  அந்த இணைப்பின்றி சிவம் அசையக்கூட இயலாது.”

என்றல்லவா அழுத்தம் திருத்தமாகப் பெண்மையைப் போற்றிப் புகழந்து உள்ளார்! [3]

எனவேதானே, நாவுக்கு அரசரான அப்பர் பெருமானும் தாயை முதலில் வைத்து, சிவபெருமானை, “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே!” என்று போற்றுகிறார்.  “வேயுறு தோளி பங்கன்” என்று காழிப்பிள்ளையாரும் அப்பனின் உடலில் பாதியை அம்மை தனதாக்கியதை உணர்ந்து ஓதுகிறார்!thirugnana-sambandar

பெண்மையைப் போற்றி, ஆண்கள் பெண்ணடிமை செய்வதாகக் கூறும் என் குழந்தைகளும், பழமையே சிறந்தது என்று ஆண்களை மேலாகப் பேசும் என் செல்வங்களும் ஒரு வடமொழி சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.

பித்ருர் ரக்ஷதி பாலாப்யே, பர்த்ருர் ரக்ஷதி கெளமாரே |

புத்ரோர் ரக்ஷதி வ்ருத்தாப்யே, ந ஸ்திரீ ஸ்வாதந்த்ரமர்ஹதி  ||

தந்தை சிறுவயதில் காப்பாற்றுகிறார், கணவர் குமரிபருவத்தில் காப்பாற்றுகிறார்,

பிள்ளை வயோதிகத்தில் காப்பாற்றுகிறான், பெண் தானாக இருக்கத் தகுதி பெறுவதில்லை.

சரியாக, உள்ளார்ந்து பார்த்தால், பெண்களாகிய நாங்கள் ஆண்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிட்டோம் என்பது இந்த சுலோகத்தில் இருந்து புரியும்.  பெண்களுக்குத் தொண்டுசெய்வதே ஆண்களின் கடமை என்று சொல்லாமல் சொல்லுகிறது அல்லவா இந்தக் குறட்பா!  அதுதானே ஆண்களின் “கால்கட்டு” என்று வழங்கப்படுகிறது.  ஒருவரைக் காப்பாற்றவேண்டும் என்றால், காப்பாற்றுபவர் தனது சுதந்திரத்தையும்தானே இழக்கிறார்!

ஆக, தந்தை, கணவன், மகன் இவர்கள் மூவரின் தானியங்கும் தகுதியையும் ஒரு பெண் கைப்பற்றி விடுகிறாள் என்பதுதானே இந்த சுலோகத்தின் தொடர்ப் பயன், இயல் விளைவு, பின்விளைவு எல்லாம்!

எனவே, ஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா?  நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்புகொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள்!  இது அவரவர் இயல்பு!  வளைந்துகொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்லர்.  வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்துநிற்பதால் ஆண்கள் வலிமையில் சிறந்தவரும் அல்லர்.

தத்துவம் போதும் என்று தோன்றி விட்டதல்லவா! எனவே,  என்னைப்பற்றிச் சொல்லப்போகிறேன்…

…என் கணவர் இராமன் மனிதத் தாயான கோசலையின் வயிற்றில்தான் பிறந்தார்.  எனவே, அவர் பிறப்பு இயற்கைப் பிறப்பு.  ஆனால் என்னை அரசமுனியான ஜனகர் பிள்ளைவரம் வேண்டி நிலத்தை உழுதபோது நான் நிலத்திற்கு அடியில் கிடைத்தேன். [4]  எனவே, நான் மனிதக் குழந்தையாகத் தோன்றினாலும், மனிதப் பிறப்பு அல்ல, தெய்வப் பிறப்பு.  எக்குழந்தையால் மண்ணுக்கடியில் பலகாலம் புதைத்து இருக்க இயலும்?  அறிவுகொண்டு ஆலோசனை செய்யும் என் கண்மணிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

நான் பிறப்பிலேயே உயர்ந்தவள்.  என்னால் மண்ணுக்கடியில் இருக்க இயலுமானால், என் திறன் எப்படிப்பட்ட உயர்வுள்ளதாக இருக்கவேண்டும்!  ஆகவே, பிறப்பிலேயே அதிக வலிமை படைத்தவளாகத்தான் பிறந்தேன்.

என் மிகைப்பட்ட வலிமை விரைவிலேயே வெளிப்பட்டது. seetha bow

சிவபெருமானின் வில் வைக்கப்பட்டிருந்த பெட்டியை ஐயாயிரம் வலிமை மிக்க வீரர்கள் இழுத்து வரவேண்டி இருந்தது! [5]

அப்படிப்பட்ட வில்லை என்னவர் இராமன் நின்று, எடுத்து, நிறுத்தி, நாண் ஏற்றித்தானே உடைத்தார்!  அதற்கு இரு கைகளும்தானே வேண்டி இருந்தது!  என்னைவிட எட்டுவயது பெரிய என்னவருக்கு இரண்டு கைகள் தேவைப்பட்டது.

ஆனால் பூப்பந்து விளையாடிய சிறுமியான நானோ, பந்து சிவபெருமானின் வில் இருந்த பேழைக்கடியில் சென்றபோது, குனிந்து அமர்ந்து, என் ஒரு கையினாலேயே வில் இருந்த பேழையை உயர்த்திப் பந்தை எடுத்தேன்.

இப்போது சொல்லுங்கள், யாருக்கு வலிமை அதிகம்?  எனக்கா, என்னவருக்கா?  ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது.  அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது.  இதை அறியாதவரா என்னவர் இராமன்?  அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமைசெய்ய அவரால் இயலாது என்று அவருக்குத் தெரியாதா, என் கண்மணிகளே?

என்னருமைத் தாயான, சீதையே!  அப்படியானால், அவர் சொன்னதை எல்லாம் நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள்?  ஏன் இராவணனை உங்களைச் சிறைப்பிடித்து எடுத்துச்செல்லவிட்டீர்கள்? உங்கள் கணவரது அவதூறான சொற்களை ஏன் பொறுத்துக்கொண்டீர்கள்? நாங்களாக இருந்தால் இப்படிப்பட்ட ஒரு கணவரைவிட்டு நீங்கி இருப்போமே! 

“தீக்குளித்து உங்கள் தூய்மையத் துலங்கச் செய்த பின்னரும், உளவாளிகள் உரைத்த சொல்லுக்காக, கருவுற்றிந்த உங்களை இரக்கமின்றிக் காட்டுக்கு அனுப்பினாரே உங்கள் கணவர்!  பின்னர் தங்களை முனிவர் வால்மிகியின் ஆசிரமத்தில் கண்டும், மீண்டும் அப்பழுக்கற்றவள் என்று சான்று காட்டச் சொல்லித் தங்களை இவ்வுலகிலிருந்தே நீங்கச் செய்தாரே!  அப்படிக் கருணை என்பதே கடுகளவும் இல்லாதவராக உங்களவர் இருந்தும் தாங்கள் ஒரு உணர்ச்சியற்ற பதுமையைப் போலத்தானே இருந்து விட்டீர்கள்! பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?” என்றுதானே கேட்கிறீர்கள்!

ஏன் என்று விளக்குகிறேன்.

“நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இலக்குவனையோ, பரதனையோ, சுக்கிரீவனையோ, இன்னும் மனதில் தோன்றுபவருடன் நீ செல்லலாம்.” என்று என்னவர் சுட்டுப் பொசுக்கும் சொற்களால் என் இதயத்தைப் பிளக்க முற்பட்டபோது, நான் கலங்கிநின்றேனா!

“ஒரு இழிந்தவன், ஒரு இழிந்தவளுடன் பேசுவதுபோல, சொல்லத்தகாத சொற்களை ஏன் சொல்லுகின்றீர்?” என்று எதிர்த் தாக்குதல்லவா தொடுத்தேன்! [6]

यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः ||[7]  ६-११६-२५

யதா மே ஹ்ருதயம் நித்யம் ந அபஸர்ப்பதி ராகவாது |

ததா லோகஸ்ய ஸாக்ஷீ மாம் ஸர்வத: பாது பாவக: || 6-116-25

எப்பொழுது என் இதயம் தினமும் [ஒருகணமும்] ராகவனை விட்டு அகலவில்லையோ, அப்பொழுது உலகத்தின் சாட்சியே[தீக்கடவுளே], எண்ணெய் எப்பொழுதும் காப்பாற்றிப் பாதுகாப்பாயாக!” agni-brings-sita-back

என்று சவால் விட்டுத்தானே தீப்புகுந்தேன்!  அடிமை செய்யப்பட்டவளாக இருந்தால் அச்சப்பட்டு நடுங்கி இருந்திருக்க மாட்டேனா!

அதுமட்டுமா!

பொசுக்கும் செந்நாக்குகளை உடைய தீக்கடவுளே எனது கற்புக் கனலைத் தாங்கமுடியாது திணறி, என்னை வெளிக்கொணர்ந்து, என்னவரிடம் எனக்காக மன்றாடினானே.  படைக்கும் கடவுளான பிரம்மன் முதல் முக்கண்ணன் வரை அனைவரும் என் பெருமையையே பேசினார்கள் என்றால் அவர்களும் என்னைப் போற்றி, என் பெருமையை அறிந்துகொள்ளும் வண்ணம் என்னவருக்கு அறிவுரை கூறினார்கள் என்றுதானே பொருள்!

கம்பநாட்டாரும்,

அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். [8] – 9.3983

என்று என் கற்பைப் போற்றுகிறார்.

சுடுசொல் சொன்ன என்னவரை விட்டு நான் ஏன் நீங்கவில்லை?  அப்படி நீங்கி இருந்தால் அவர் சொன்னது உண்மை என்று நான் ஒப்புக்கொண்டதாகத்தானே ஆகும்?

“இராமனின் சுடுசொல் தாங்காமல் சீதை நீங்கியதுதான் சரி!” என்றா உலகம் கூறும்?

“சீதை குற்றம் இழைத்தவள்.  எனவே, இராமனின் சொல்லில் இருக்கும் உண்மையைத் தாங்க மாட்டாமல் ஓடி விட்டாள்!” என்றுதானே என்னைத் தூற்றி இருக்கும்!

கற்புக்கரசி சீதை என்று புகழ்பவர்களே, இராமன் பெண்ணடிமை செய்தான் என்று எனக்குப் பரிந்துகொண்டு வருபவர்களே இன்று என்மீது வசைபாடி இருப்பார்களே!

இராவணனை அழிக்கவேண்டும் என்று அவதாரம் எடுத்தவர் என்னவர்.  அதை நான் செய்துவிட்டால் அவருக்கு என்ன பெருமை!  அவர் அவதாரம் எடுத்தது வீணாகி அல்லவா போயிருக்கும்!  எனவே நான் இராவணன் என்னைக் கவர்ந்துசெல்ல அனுமதித்தேன்!

எரிக்கடவுளே என் கற்புத் தீயைத் தாங்க இயலாதபோது, அரக்கன் இராவணனைச் சுட்டுப் பொசுக்க என்னால் இயலாதா?

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், அன்னையே!  இராமர் தங்களைத் தீப்புகும் நிலைமைக்குத் தள்ளியது என்ன நீதி?” என்றுதானே கேட்கிறீர்கள்!

அன்புள்ள ஒரு கணவன் என்ற முறையில் அவர் அதைச் சொல்லி இருந்தால் அது தவறுதான்.  அப்படி அவர் சொல்ல நேர்ந்ததற்குத்தான் என்னிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || [9]  ६-११६-१४

த்வயா து நரஸா’ர்தூல க்ரோதமேவ அனுவர்த்ததா |

லகுனேவ மனுஷ்யேண ஸ்த்ரீத்வமேவ புரஸ்க்ருதம் || 6-116-14

மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

என்னவரை வலிமையற்றவர் என்றும், ஆண்மையைக் கைக்கொள்ளாது பெண்மையைக் கைக்கொண்டு, சினம் காட்டுகிறீர்கள் என்று சாடினேன்.  என் உரிமையை அப்படித்தான் நிலைநாட்டினேன்.

இருப்பினும், அவர் ஒரு மன்னவர்.  மன்னவரின் மானம்காக்க நடத்தப்படும் போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடிகிறார்கள்.  அந்தப் போர்வீரர்கள் தங்களது தனிப்பட்ட பகைக்காவா எதிரிப் போர்வீரனை வீழ்த்துகிறார்கள்?  இல்லையே!  மன்னனுக்காகத்தானே!

ஆகவே, ஒரு மன்னனுக்கு மனைவியைவிட மக்களே பெரிது!  மக்களின் மதிப்பே பெரிது. எனவே மன்னனை ஒரு மனைவியின் கணவனாக மட்டும் அளவிடக்கூடாது, என் குழந்தைகளே!

“அரசியைக் கவர்ந்து சென்ற அரக்கனை அரசர் அழித்தது சரியே!  ஆயினும், மாற்றான் ஒருவன் மனையில் மாதக்கணக்கில் இருந்தவளை நமது மன்னர் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?” என்றுதான் மக்கள் முழங்குவார்கள் என்பதை என்னவர் அறிவார்.

அவருக்காக உயிரையும் உவப்புடன் கொடுக்கும் மக்கள், தன் மீது பழி சொல்லக்கூடாது என்பதில் அரசனுக்கு ஆர்வம் இருக்கவேண்டும்;  எனவே அரசி தன் தூய்மையைத் துலங்கவைக்கவேண்டும் என்பது அவர் மனதில் உயர்ந்து ஓங்கி இருந்தது.

மக்களுக்காகத்தான் மகேசன்.  அவனுக்காக மக்களல்ல என்ற நெறியை உணர்ந்து அதன்படி நடந்துகொண்டவர் என்னவர்.  அவரைப் போற்றாமல் நான் எப்படித் தூற்றுவேன், அல்லது மற்றோரை – அவர்கள் என் மக்கட்செல்வங்களாக இருந்தாலும் – எப்படித் தூற்றவிடுவேன்?

மீண்டும் ஒரு ஒற்றன் கொண்டுவந்த தகவலைக் கேட்டு ஏன் என்னைக் காதுக்கு அனுப்பினார்?

ஒரு சிறு தீப்பொறி பெரிய காட்டையே கொளுத்திவிடும்.  எனவே, அது பெரிதாவதற்குள் அதை அணைத்துவிடவேண்டும்.  இன்று ஒருவன்தானே பேசுகிறான் என்று வாளாவிருந்தால், சிலநாள்களில் பலர் பேசுவார்கள்.

“சீதை தீப்புகுந்ததை நாம் நேரிலா பார்த்தோம்!  ஏதோ கண்கட்டி வித்தை செய்து, அப்படி ஒரு செய்தியை உண்டாக்கி விட்டார்கள்!” என்று புறம் பேசத் துவங்குவார்கள்.  காது, கண், மூக்கு வைத்து அவர்களே ஒரு கதையையும் உண்டாக்கி விடுவார்கள்.

அதனாலேயே அவர் மீண்டும் என்னைக் காட்டுக்கு அனுப்பினார்.

“உங்களைத்தானே காட்டுக்கு அனுப்பினார்!  தான் சுகவாசியாகத்தானே இருந்தார்!  அவரும் பதவியைத் துறந்து உங்களுடன் கானகம் ஏகி இருக்கலாமே!” என்று நீங்கள் கேட்கும் வினாவுக்கு இதுவே எனது விளக்கம்:sethu

அவர் அப்படிச் செய்திருந்தால், “இராமனுக்காக ஆயிரக்கணக்கானவர் இராவணனை எதிர்த்துப் போர் புரிந்தோமே!  கடலில் பாலம் சமைத்தோமே!  இது வீண்தானா?  விழலுக்கு இறைத்த நீர்தானா?” என்று தூற்றி இருக்க மாட்டார்களா?

அவர் காலடியே சுவர்க்கம் என்று தன்னையே அவருக்காகக் கொடுத்த அனுமனே அவரை விட்டல்லவா நீங்கியிருப்பான்!  அவருக்காகப் பதினான்கு ஆண்டுகள் தந்து, தனது அரச போகத்தையும், இல்லாளையும் துறந்து, தமையனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் அவரை உயர்வாக மதித்திருப்பானா?

என் அருமைச் செல்வங்களே!  அறிவில் சிறந்த என் கண்மணிகளே!  சிந்தித்துப் பாருங்கள்!  அரசன் என்று ஆகிவிட்டால் தனது நலத்தைவிட மக்களிடம் நற்பெயர் வாங்குவதே தலையாயதாகி விடுகிறது.

என்னவரும் சுகபோகம் அனுபவிக்கவில்லை.  என் நினைவிலேயே ஏங்கினார்.  அந்நிலையில் அது ஒன்றைத்தானே அரசரான அவரால் செய்ய இயலும்?  நினைத்திருந்தால் வேறுமனைவியரைக் கைக்கொண்டு இருந்திருக்கலாம்.  அதை அன்றைய நெறியும் அரசர்களுக்கு அனுமதித்தது.  அவர் அதைச் செய்யவில்லையே!  என்மேல் இருந்த காதலால்தானே அதைச் செய்தார்!  காதலனை நினைத்து ஏங்கும் கன்னியரைப் பற்றி நிறையக் காவியங்கள் புனைவதைப் படித்திருப்பீர்கள்.  காதல் மனைவியே நினைத்துக் கற்புடன் இருந்த கணவர் என்னவர்தானே!

கடைசியில், நான் ஏன் உயிர் துறந்தேன், என்னவர் மீண்டும் என்னைத் தூயவள் என்று நிரூபிக்கும் நிலைமைக்கு ஏன் தள்ளினார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

முனிவர் வால்மீகி என் செல்வங்களாகிய லவனும், குசனும் அரியணை ஏறி, ரகு வம்சத்தின் மேன்மையைத் தொடர வேண்டும் என்று விரும்பினார்.  என்னவர் என்னை மீண்டும் அப்படியே எப்படி ஏற்பார்?  ஆண்டுகள் கடந்தால் அநியாயப் பழி நீங்கி விடுமா?  மீண்டும் தோண்டி எடுத்துப் பழிபோடமாட்டர்களா?

எனவேதான் என்னவர் அமைதிகாத்தார்.

எனக்கும் அலுத்துவிட்டது.  அவரும் அமைதிபெறவேண்டும், நானும் மீண்டும், மீண்டும்மீண்டும் சுமத்தப்படும்  வீண்பழியிலிருந்து விலகவேண்டும் என்று தோன்றி விட்டது.  ஆகவே, நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த நில அன்னையிடமே சரணடைந்தேன்.

“என் நில அன்னையே!  நான் உண்மையிலேயே என் கணவருக்கு கற்புடைய மனைவியாக விளங்கி இருந்தால், உன் சீதையை இந்த வாழ்வுச் சுமையிலிருந்து விடுவித்துவிடு!” [10]

என்று கோரினேன்.  அவளும் என்னை அன்புடன் அழைத்துச் சென்றாள்.Sitamari.jpg8

நான் தற்கொலை செய்துகொண்டேன் என்று நீங்கள் பலர், பல மொழிகளிலும் எழுதி வருகிறீர்கள்.  உங்களை ஒன்று கேட்கிறேன், என் செல்வங்களே!  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையிலிருந்து வீழ்ந்தால்தான் இறந்துவிடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையாது.  நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்.

இலங்கையில் தீயில் புகும் முன்னர் நான் வாழவேண்டும் என்று விரும்பினேன்.  எனவே என் கற்புக்கனல் தீக்கடவுளைச் சுட்டுப் பொசுக்கியது.  அவனும் என்னைத் திரும்ப என்னவரிடம் ஒப்படைத்தான்.  மீண்டும் பழிசொல்லி என்னைக் கானகத்திற்கு அனுப்பச்செய்த, என் அருமையை அறியாத மாந்தர்கள் நடுவில் நான் வாழவிரும்பவில்லை.  என் இரு கண்ணின் மணிகளை என்னவரிடம்  இணைத்துவிட்டு, என் அன்னையின் மடியில் தஞ்சம்புகுந்தேன்.  அவ்வளவே!…

என் மனதில் உள்ளதை என் செல்வங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டதும் என் சீற்றம் தணிந்து விட்டது.  என் குழந்தைகளான நீங்கள் பதினாறும்பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

 

************************************************

[1]  Chromosomes:  Definitions and Structure, by Jessie Szalay, Live Science, February 19, 2013

[2]  ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லகரி:  சுலோகங்கள் 1 – 41

[3]  சௌந்தரிய லகரி, முதல் சுலோகத்தின் தமிழாக்கம்

[4]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 66 – சுலோகங்கள் 13-16

[5]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 67 – சுலோகங்கள் 3 & 4

[6]  வால்மீகி இராமாயணம் – உயுத்த காண்டம், சர்க்கம் 116, சுலோகம் 5

[7]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 25

[8]  கம்பராமாயணம் – மீட்சி படலம், செய்யுள் 3983

[9]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 14

[10]  வால்மீகி இராமாயணம் – உத்தரகாண்டம்

20 Replies to “சீதையின் சீற்றம்!”

 1. ஆண்டவனும் ஒரு பிறவி ஆனால் தான் தோன்றி உயெர்ந்தவன் அவனும் ஆசா பாசத்திற்கு உட்பட்டவன் ஆனால் பாதிக்காது ஏன் என்றால் உலகம் முழுவத்ம் அவனுள் அடக்கம் அது போல் அவன் உடையவளுக்கும் உலகம் நாடக மேடை அதில் வேடம் கொண்டு வருவது போவது அவன் மாயை லீலை

 2. மிக அருமை! ரசித்துப் படித்தேன். இதற்கு என் கோணத்திலான பதிலைப் பின்னர் தருகிறேன். இதுவும் புதுமை, அருமை, இனிமை, எளிமை!

 3. ராமாயணம் எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் (வால்மீகியைத் தவிர) ஶ்ரீராமனை ஒரு அவதாரமாகவும், கடவுளாகவும், அனைத்தும் அறிந்தவனாகவுமே காட்டப்படுகிறது. நம் இந்தியக் குழந்தைகளுக்கு இரவு நேரப் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாட்டிமார்களால் சொல்லப்பட்டதால் அவற்றில் ஆஞ்சநேய ப்ரபாவம் அதிகமாகவும், விந்தைகளும், அற்புதங்களும் நிறைந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது; ஆனால் ஶ்ரீராமன் அவன் வாழ்ந்த காலம் முழுமைக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே அனைத்து மக்களும் துன்பப் படுவது போல் துன்பங்களை அடைந்து சகித்துக் கொண்டு, மனைவியைப் பிரிந்து, பின்னர் அவளை மனமார சந்தேகங்கள் ஏதுமில்லாமல் ஏற்றுக்கொண்டும் அவளோடு வாழ முடியாமல், வாழ்நாள் முழுவதும் அவள் நினைவிலேயே கழித்து என்று இருந்து வந்திருக்கிறான். ராமன் நினைத்திருந்தால் அவனுடைய அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி சீதையைத் தன்னோடு வாழ அனுமதித்துக் கொண்டு அவளுடன் சந்தோஷமாகவும், இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும் இருந்திருக்கலாம்.
  அவன் நினைத்திருந்தால் சீதையை விடுத்து இன்னொரு பெண்ணைத் தேடி மணந்திருக்கலாம். அல்லது சீதையை ராவணன் பிடியிலிருந்து விடுவித்த உடனேயே அவளை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி எல்லாம்செய்யாமல் அவளோடு வாழத்தான் நினைத்தான். அது அவனுடைய சொந்தக் குடிமக்களிடையே தோற்றுவித்த சலசலப்புத் தான் சீதையை அவன் பிரியக் காரணம்.பலரும் சீதையின் மனம் இதை நினைத்து வருந்தி இருக்குமே; ராமனின் அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டாளே என்றெல்லாம் கேட்பதோடு அவளை அக்னிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியதும் ராமனே என்னும் தவறான எண்ணத்திலேயே இருந்து வருகின்றனர். ஆனால் மூல ராமாயணமான வால்மீகி எழுதியபடி ஶ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவே இல்லை. சீதைதான் தானாக முன் வந்து தீக்குளிக்கிறாள். இதை எழுதியபோது எனக்குப் பல கண்டனங்கள் வந்தன. ஏனெனில் அனைவருமே இப்போதைய 21 ஆம் நூற்றாண்டோடு சீதை இருந்த காலத்தை ஒத்துப் பார்ப்பதே காரணம். இதில் பலருக்கும் ராமாயணம் என்பது ஒரு கதை தான் என்றும் இட்டுக்கட்டின கதை என்றுமே கருத்து. அப்படிக் கருத்துள்ளவர்கள் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இட்டுக்கட்டின கதையில் இப்படி எல்லாம் வரக் கூடாதா? இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன? சீதை தன் கணவனின் ராஜரிக தர்மத்தைப் புரிந்து கொண்டதாலேயே விலகி வாழச் சம்மதிக்கிறாள். தற்கால நடைமுறைப்படி mutual separation. அரசனுக்கு உள்ள முக்கியக் கடமை நீதி பரிபாலனமும், குடிமக்களின் சௌகரியங்களும் மட்டுமே. குடிமக்கள் மன்னனின் ஆட்சியில் குறை கண்டால் மன்னன் ஆட்சி முறையே ஆட்டம் காணும். ஆகவே ஒரு அரசனுடைய மனதில் குடிமக்கள் தான் முதல் இடத்தைப் பிடிப்பார்கள். மனைவி அதற்கு ஒத்துப் போக வேண்டுமே தவிர கணவனுக்கு எதிராகப் போகக் கூடாது அல்லவா? இந்தக்காலத்தை நினைத்துக் கொண்டு பார்க்கக் கூடாது. எப்படிக் கண்ணகிக்கு அநீதி இழைத்த நெடுஞ்செழியன் உயிரை விடும்போது அவன் மனைவி பாண்டிமாதேவியும் சேர்ந்து அல்லவோ உயிரை விடுகிறாள். இங்கேயும் கிட்டத்தட்ட அதே நீதி தான்! கணவன் தன்னைப் பிரிந்து வாழ நினைப்பதால் அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு சீதையும் ஒத்துழைக்கிறாள்.

  ஆகவே படிப்பவர்கள் வால்மீகி காலத்தை மனதில் கொண்டு படிக்க வேண்டும் என்பதோடு அதில் உள்ள நீதிகள், அரச தர்மங்கள், அரசனுக்குரிய கடமைகள், நீதி பரிபாலனங்கள் ஆகியவை தற்காலத்துக்கும் பொருந்தும்படியாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாரத்தை விட்டு விட்டுச் சக்கையை எடுத்துச் சாப்பிட வேண்டாம்.

 4. sundarsvpr
  “ஆண்டவனும் ஒரு பிறவி ஆனால் தான் தோன்றி உயெர்ந்தவன்”.இது ஜைனர் கருத்து. இறைவன் பிறப்பதில்லை என்பது சைவம். ஆனால் இறைவனின் அம்சங்கள் அவதரிக்கின்றன என்பது வைணவம். ஆனால் மனிதனாய் ப்பிறந்தோர் இறையாவதில்லை. பிறந்த மனிதர்கள் நிறை நிலை எய்தி தெய்வமாகலாம் இறையுள் சேரலாம் என்பது ஏற்புடைத்து.

 5. அரிசோனன் ஒரு முக்கியமான சிக்கலுக்கு தெளிவை வழங்கியுள்ளார். பாராட்டுக்கள்
  ஓரு அரிசோனன்
  “சக்தியுடன் இணைந்த பின்னரே சிவம் ஆக்கும் திறனைப் பெறுகிறது; அந்த இணைப்பின்றி சிவம் அசையக்கூட இயலாது.”

  சிவமும் சக்தியும் எப்போதும் இணைந்தே இருப்பவை. இன்னமும் சொல்லப்போனால் அவை இரண்டல்ல ஒன்றேதான். ஆகவேதான் சிவாத்வைதம் சக்திவிசிஷ்டாத்வைதம் என்றழைக்கப்படுகிறது. இது வைணவ விசிட்டாத்வைதிகளுக்கும் பொருந்தும் திருமாலோடு எப்போதும் திருமகள் விளங்குவது அவர்கள் சித்தாந்தம். சாக்தேயர்களும் சிவதோடே சக்தியை வழிபடுவார்கள். ஷோடஷி என்னும் மஹாத்திரிபுரை எப்போதும் காமேஸ்வரனோடே விளங்குகிறாள்.

 6. //ராமனின் அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டாளே என்றெல்லாம் கேட்பதோடு அவளை அக்னிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியதும் ராமனே என்னும் தவறான எண்ணத்திலேயே இருந்து வருகின்றனர். ஆனால் மூல ராமாயணமான வால்மீகி எழுதியபடி ஶ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவே இல்லை. சீதைதான் தானாக முன் வந்து தீக்குளிக்கிறாள்/

  தாங்கள் எழுதியிருப்பது சரியே. நான் ‘தமிழ் இந்து’வில் ‘கம்பனும், வால்மீகியும்’ நான்காது பகுதியில் இதையே எழுதியிருந்தேன். வால்மீகி இராமாயணத்தில் இராமன் சீதையை ‘தீக்குளித்து உன் தூய்மையை நிலைநாட்டு!’ என்று சொல்லவே இல்லை. மாறாக, கம்ப இராமாயணத்தில், இராமன் ‘சாதி[யால்]’, அதாவது, ‘இறந்துபோ,’ என்று சொல்வதாகவே வருகிறது.

  ஆயினும், வால்மீகி இராமாயணமே மூலம் என்பதால், விவாதம் என்று வரும்போது, அதைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். தங்களது நீண்ட விளக்கத்திற்கு நன்றி, கீதா சாம்பசிவம் அவர்களே!

 7. //அரிசோனன் ஒரு முக்கியமான சிக்கலுக்கு தெளிவை வழங்கியுள்ளார். பாராட்டுக்கள்
  ஓரு அரிசோனன்//

  பாராட்டுதல்களுக்கு நன்றி, சிவஸ்ரீ அவர்களே! தங்களிடம் பாராட்டுப்பெறுவதை மிகவும் பெருமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

 8. உங்கள் கோணத்திலிருந்து எளிமையாக சீதாபிராட்டியின் அக்னிப்ரவேசத்தையும் கானகமேகுதலையும் விளக்க முயன்றுள்ளீர்கள்.

  சீதா பரித்யாகம் எனும் உத்தரகாண்ட நிகழ்வுகள் வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டத்திலும் மற்றும் பற்பல சம்ஸ்க்ருத இலக்கிய படைப்பாளர்களாலும் காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு விவரணைகளுடன். தமிழிலும் கூட ஒட்டக்கூத்தர் அவர்களுடைய உத்தரராமசரிதம் உண்டு. உங்களுக்கு சமயம் கிடைக்கையில் அவருடைய காப்பியம் வாயிலாக உத்தரராமசரிதம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்று தனியாக ஒரு வ்யாசம் சமர்ப்பியுங்கள்.

 9. மதிப்பிற்குரிய ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு, நமஸ்தே

  \\ ராமாயணம் எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் (வால்மீகியைத் தவிர) ஶ்ரீராமனை ஒரு அவதாரமாகவும், கடவுளாகவும், அனைத்தும் அறிந்தவனாகவுமே காட்டப்படுகிறது \\

  மாறுபட்ட கருத்துக்கு க்ஷமிக்கவும்.

  வால்மீகி ராமபிரானின் வாயிலாக ராமபிரானைக் காட்டுவதிலும் மற்றைய பாத்ரங்களின் வாயிலாக ராமபிரானைக் காட்டுவதிலும் பேதம் இருக்கிறது.

  ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் (117-11)

  தசரதனின் மகனான ராமனாகிய நான் ஒரு மானுடன் என்று ராமபிரான் தன்னை வெளிப்படுத்துகிறார்.

  அதையடுத்து ப்ரம்மதேவன் 13வது ச்லோகத்தில் சொல்வதாவது :-

  பகவான் நாராயணோ தேவ: ஸ்ரீமான் சக்ராயுத: ப்ரபு: (117-13)

  சக்ராயுதத்தை ஏந்திய பகவான் நாராயணனே தாங்கள்

  என்று சொல்கிறார்.

  ராமபிரான் வாயிலாக ராமபிரானை மானுடனாகவும் மற்றைய பாத்ரங்கள் வாயிலாக ஆங்காங்கு ராமபிரானை பகவானாகவும் முனிசிம்ஹமாகிய வால்மீகி காட்டுகிறார் என்பது முழுமையான சித்தரிப்பாக ஆகும் இல்லையா?

  ஆயினும் ஆதிகவி வால்மீகியின் இதிஹாஸத்தை வாசிக்கும் அன்பர்கள் உருகி உருகி ராமகாதையை அனுபவிப்பது தர்மத்தின் உருவகமாகவும் மானுடனாகவும் ராமபிரானை அனுபவித்தே என்றும் என் புரிதல்.

 10. //ஒட்டக்கூத்தர் அவர்களுடைய உத்தரராமசரிதம் உண்டு. உங்களுக்கு சமயம் கிடைக்கையில் அவருடைய காப்பியம் வாயிலாக உத்தரராமசரிதம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்று தனியாக ஒரு வ்யாசம் சமர்ப்பியுங்கள்.//

  ஆலோசனைக்கு நன்றி, கிருஷ்ணகுமார் அவர்களே, முயற்சிக்கிறேன்.

 11. திரு கிருஷ்ணகுமார், மனிதர்களில் சிறந்தவனைக் குறித்தே வால்மீகி எழுதப் புகுந்தார் அல்லவா? ஆகவே அவர் ஶ்ரீராமனை ஒரு மானுடனாகவே அறிந்திருந்தார் என்பது என் கருத்து. அதைத் தான் இங்கே கூறினேன். மற்றபடி நீங்கள் மற்றவர்கள் வாயிலாக ஶ்ரீராமன் கடவுளாகவே சித்திரிக்கப்படுகிறான் என்பது சரியே! இதில் தவறு ஏதும் இல்லயே! ஆகவே க்ஷமிக்கவேண்டும் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. கருத்து மாறுபாடு சகஜமான ஒன்றே. 🙂

 12. சீதையின் சுய விளக்கம் அருமை.

 13. ஸ்ரீராமரை கடவுள் அவதாரமாகப் பாா்க்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த தெய்வாம்சமும் ஸ்ரீராமனுக்கு தேவையில்லை.இராமாயணத்தை ஒரு நாவலாகக் கருதிப் படிக்கலாம். மனம் அமிர்தத்தில் குளித்தது போல் தெளிந்து இருக்கும். நற்பண்புகள் ஒங்குவதைக் காணலாம். அது போதும்.

 14. திரு ஒரு அரிசோனன்: உங்கள் விளக்கங்கள் நன்றாக இருக்கின்றன. ஒன்றை மட்டும் சுட்ட விரும்புகிறேன்:

  ///தாங்கள் எழுதியிருப்பது சரியே. நான் ‘தமிழ் இந்து’வில் ‘கம்பனும், வால்மீகியும்’ நான்காது பகுதியில் இதையே எழுதியிருந்தேன். வால்மீகி இராமாயணத்தில் இராமன் சீதையை ‘தீக்குளித்து உன் தூய்மையை நிலைநாட்டு!’ என்று சொல்லவே இல்லை. மாறாக, கம்ப இராமாயணத்தில், இராமன் ‘சாதி[யால்]’, அதாவது, ‘இறந்துபோ,’ என்று சொல்வதாகவே வருகிறது.

  ஆயினும், வால்மீகி இராமாயணமே மூலம் என்பதால், விவாதம் என்று வரும்போது, அதைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். தங்களது நீண்ட விளக்கத்திற்கு நன்றி, கீதா சாம்பசிவம் அவர்களே!///

  என்று உங்கள் (கட்டுரையிலன்று) விளக்கத்தில் சொல்லியிருக்கிறீர்கள். இது முற்றிலும் தவறான பார்வை. கம்பனிலும் ‘நீ தீக்குளித்து உன் கற்பை நிலைநாட்டு’ என்று இராமன் சொல்வதாக வரவில்லை. சாதியால் என்றால், ‘எப்படி வேணும்னாலும் போ, செத்துப் போ’ என்று பொருள் வருகிறதே தவிர, தீக்குளித்து உன் கற்பை நிலைநாட்டு என்ற பொருள் வரவில்லை.

  அருள்கூர்ந்து கம்பனுக்கு இழுக்கு கற்பிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 15. // இது முற்றிலும் தவறான பார்வை. கம்பனிலும் ‘நீ தீக்குளித்து உன் கற்பை நிலைநாட்டு’ என்று இராமன் சொல்வதாக வரவில்லை. சாதியால் என்றால், ‘எப்படி வேணும்னாலும் போ, செத்துப் போ’ என்று பொருள் வருகிறதே தவிர, தீக்குளித்து உன் கற்பை நிலைநாட்டு என்ற பொருள் வரவில்லை.
  அருள்கூர்ந்து கம்பனுக்கு இழுக்கு கற்பிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

  ஹரிகிருஷ்ணன் அவர்களே,

  என்னுடைய விளக்கத்திலும், கட்டுரையிலும், கம்பனின் இராமகாதையில், இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதாக வருகிறது என்று எங்கு எழுதியிருக்கிறேன் என்று அருள்கூர்ந்து காட்டுகிறீர்களா?
  // கம்ப இராமாயணத்தில், இராமன் ‘சாதி[யால்]’, அதாவது, ‘இறந்துபோ,’ என்று சொல்வதாகவே வருகிறது.// என்றுதான் எழுதியிருக்கிறேன். வால்மீகி இராமாயணத்தில் இராமன் அப்படிக்கூடச் சொல்லவில்லை. அதைக்குறிக்கவே,//வால்மீகி இராமாயணமே மூலம் என்பதால், விவாதம் என்று வரும்போது, அதைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். தங்களது நீண்ட விளக்கத்திற்கு நன்றி, கீதா சாம்பசிவம் அவர்களே!// என்று எழுதினேன்.

  இவண் நான் கம்பனுக்கு எங்கு இழுக்கு கற்பித்தேன் என்று அருள்கூர்ந்து விளக்குகிறீர்களா? தாங்கள் கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவையும், எனது விளக்கத்தையும் இணைத்து, வேறுவிதமாகப் புரிந்துகொண்டால்…

 16. திரு அரிசோனன் அவர்களே, திருமதி கீதா சாம்பசிவத்துக்கான மறுமொழியில் இவ்வாறு எழுதியிருக்கிறீர்கள்:

  /////தாங்கள் எழுதியிருப்பது சரியே. நான் ‘தமிழ் இந்து’வில் ‘கம்பனும், வால்மீகியும்’ நான்காது பகுதியில் இதையே எழுதியிருந்தேன். வால்மீகி இராமாயணத்தில் இராமன் சீதையை ‘தீக்குளித்து உன் தூய்மையை நிலைநாட்டு!’ என்று சொல்லவே இல்லை. மாறாக, கம்ப இராமாயணத்தில், இராமன் ‘சாதி[யால்]’, அதாவது, ‘இறந்துபோ,’ என்று சொல்வதாகவே வருகிறது.

  ஆயினும், வால்மீகி இராமாயணமே மூலம் என்பதால், விவாதம் என்று வரும்போது, அதைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். தங்களது நீண்ட விளக்கத்திற்கு நன்றி, கீதா சாம்பசிவம் அவர்களே!/////

  நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ தெரியாது. ஆனால் இந்த வாக்கிய அமைப்பைப் பாருங்கள்:

  ////வால்மீகி இராமாயணத்தில் இராமன் சீதையை ‘தீக்குளித்து உன் தூய்மையை நிலைநாட்டு!’ என்று சொல்லவே இல்லை. மாறாக, கம்ப இராமாயணத்தில், இராமன் ‘சாதி[யால்]’, அதாவது, ‘இறந்துபோ,’ என்று சொல்வதாகவே வருகிறது.////

  ‘வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு சொல்லவில்லை, மாறாக (on the contrary) கம்பனின் இற்ந்து போ என்று வருகிறது’ என்று சொல்கிறீர்கள். நுட்பங்கள் அறியாமல் பொதுவாகப் படிப்பவர்களுக்கு, ‘மாறாக’ என்ற சொல் தவறாகப் புரிந்துகொள்ள இடம் கொடுக்கும். அதற்கு மேல்,

  ////ஆயினும், வால்மீகி இராமாயணமே மூலம் என்பதால், விவாதம் என்று வரும்போது, அதைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.////

  என்றும் சொல்கிறீர்கள். இது, வால்மீகி ராமயணத்தில் இராமன் அக்னிப் பிரவேசம் செய்யச் சொல்லவில்லை, மாறாக கம்பராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது; என்ன இருந்தாலும் வால்மீகி ராமாயணமே மூலம் என்பதால் வாதம் என்று வரும்போது மூலத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொனித்து, கம்பனில் இராமன் சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னான் போலிருக்கிறது என்ற இம்ப்ரஷனை ஏற்படுத்தும். தமிழ் ஹிந்துவிலேயே இப்படிப்பட்ட ஒரு கருத்து வெளியாகியிருக்கிறது என்ற அபிப்பிராயம் பரவும். தமிழ்ஹிந்துவின் வலிமையை நான் அறிவேன். ஏனெனில் இந்தத் தளத்தைத் தொடங்கிய காலத்தில் சுமார் ஒரு வருடத்துக்கு இதன் ஆசிரியர் குழுவில் நானும் ஒருவன்.

  இதைத்தான் கம்பனுக்கு இழுக்குக் கற்பிக்க வேண்டாம், வால்மீகியில் சொன்ன தகாத வார்ததையைக் கம்பன் சொல்லியிருக்கிறான் என்ற அபிப்பிராயம் ஏற்பட இடங்கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். வால்மீகியில் சொல்லியுள்ள எத்தனைச் சொற்களைக் கம்பன் தவிர்த்திருக்கிறான் என்பதை கம்பராமாயண முற்றோதலில் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

  ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

 17. ////இதைத்தான் கம்பனுக்கு இழுக்குக் கற்பிக்க வேண்டாம், வால்மீகியில் சொன்ன தகாத வார்ததையைக் கம்பன் சொல்லியிருக்கிறான் என்ற அபிப்பிராயம் ஏற்பட இடங்கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். ////

  மேற்படி வாக்கியத்தில், வால்மீகியில் ****சொல்லப்படாத தகாத வார்த்தையைக்**** கம்பன் சொல்லியிருக்கிறான்…

  என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 18. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு, நான் எழுதிய “மாறாக” என்ற ஒருசொல்லில் இத்தனை நுணுக்கங்களைக் கண்டுபிடித்து விளக்கியமைக்கு நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

  அந்தவிளக்கத்தை எழுதி, “அரிசோனா, நீ எழுதியது இப்படித் தொனிக்க வாய்ப்பிருக்கிறது!” என்று திருத்தவேண்டிய தாங்கள், சினம்கொண்டு, //கம்பனுக்கு இழுக்கு கற்பிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.// என்று எழுதியிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது.

  எனது பல கட்டுரைகளைப் படித்த தாங்கள் இப்படி அவசரப்பட்டு என்னைப்பற்றி முடிவுகட்டலாமா?

  ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

 19. அன்பின் ஸ்ரீ அரிசோனன்

  \\ எனது பல கட்டுரைகளைப் படித்த தாங்கள் இப்படி அவசரப்பட்டு என்னைப்பற்றி முடிவுகட்டலாமா? \\

  மனஸ்தாபம் தவிர்க்க. ஸ்ரீமான் ஹரிக்ருஷ்ணன் அவர்கள் நீங்கள் எழுதிய வாசகத்தினை பொதுவில் வாசிப்பவர்களுக்கு இப்படியும் பொருள் கிட்டக்கூடும் என்றே எழுதியிருப்பதாக உணர்கிறேன்.

  ஸ்ரீ ஹரிக்ருஷ்ணன் அவர்களுடைய அபிப்ராயம் ஸ்ரீ அரிசோனன் அவர்கள் பகிர்ந்த ஒரு வாக்யத்தின் மீதானதேயன்றி ஸ்ரீ அரிசோனன் என்ற வ்யக்தி விசேஷத்தின் மீதல்ல என்றே என் புரிதல்.

  ஒட்டக்கூத்தரின் உத்தர ராம சரிதம் பற்றிய தங்கள் வ்யாசத்திற்குக் காத்திருக்கிறேன்.

  Cheers!!!!!!!!!!!

 20. Pingback: Tamilmalrnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *