இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

13.1 வீண்பழி விதைக்கும் வினை

வேறு வழியில்லாமல் மாரீசன் ஒரு தங்க மான் போல உருவம் எடுத்து, பஞ்சவடியில் இராமரின் குடிலுக்கு அருகில் புல் பரந்த வெளியில் துள்ளிக் குதித்து வளைய வந்தான். பார்ப்பவர் மனத்தை அள்ளிக்கொண்டு போகும் அளவு அந்த மான் அழகு மிளிர இருந்ததது. சீதையின் கவனத்தையும் கவர்ந்த அந்த மானைத் தனக்கு சொந்தமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவதால், சீதை அதைப்  பிடித்துத் தரும்படி இராமரிடம் சொல்கிறாள். ஒருவேளை மானை உயிருடன் பிடிக்க முடியாவிட்டால், அதைக் கொன்று வந்தாலும் அதன் அழகிய தோலாவது அவர்கள் அங்கு வசதியாக உட்காரப் பயன்படும் என்று சீதை சொன்னாள். ஆக மானை எப்படியும் பிடித்தாக வேண்டும் என்பதே அவளது ஆசையாக இருந்தது. மாரீசன், வாதாபி, இல்வாலா போன்ற அரக்கர்கள் மிருகங்கள் போல் உருமாறி வந்து, காட்டில் உள்ள சாதுக்களையும் சந்நியாசிகளையும் ஏமாற்றி அவர்களையே கொன்று தின்பார்கள் என்பதை அறிந்த லக்ஷ்மணனுக்கு அது நிஜ மான்தானா என்ற சந்தேகம் பலமாக வந்துவிட்டது.

ஆனால் இராமருக்கோ அந்த மான் மிகவும் அழகாக இருந்ததால் அதைப் பிடிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஒருவேளை ஓர் அரக்கனே பொய் மான் வடிவில் வந்திருந்தால், அதைத் தான் நிச்சயம் கொன்று விடுவதாகவும் சொன்னார். அதனால் எப்படிப் பார்த்தாலும் அதை வேட்டையாடிப் பிடிப்பது நல்லது என்றும், லக்ஷ்மணனைக் காவலுக்கு இருக்குமாறும் சொல்லிவிட்டு, மானைத் துரத்திக்கொண்டு காட்டுக்குள் போனார். மான் வெகு வேகமாக இங்குமங்கும் ஓடி பர்ணசாலையில் இருந்து தொலைதூரத்திற்கு இராமரை காட்டுக்குள் இழுத்து வந்துவிட்டது. மானை உயிருடன் பிடிக்கலாம் என்று அதுவரை துரத்திக்கொண்டிருந்த இராமரும் பொறுமை இழந்து  வேறுவழியின்றி தனது அம்பைச் செலுத்தி மானைக் கொன்றார். முன்பு ராவணன் போட்ட திட்டப்படி, அம்படிபட்ட மாரீசனாகிய மானும் இறக்கும்போது “ஹே! சீதா, ஹே! லக்ஷ்மணா” என்று ஏறக்குறைய இராமர் குரலிலேயே  பர்ணசாலையில் இருந்த சீதா, லக்ஷ்மணனுக்குக் கேட்கும் அளவு மிகவும் பலமாகக்  கூக்குரலிட்டான். அதைக் கேட்ட சீதைக்கு இராமருக்குத்தான் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று நினைத்து, லக்ஷ்மணனை உடனே அங்கு போய் இராமருக்கு உதவி செய்யச் சொன்னாள்.

லக்ஷ்மணனோ தான் கேட்டது இராமருடையது போன்ற போலிக்குரல் என்றும், அரக்கர்கள் சீதையை துன்புறுத்தாமல் இருப்பதற்கு தான் அங்கு காவல் இருக்கவேண்டும் என்றும் தீர்மானமாகச் சொன்னான். சீதைக்கு லக்ஷ்மணன் அப்படிச் சொன்னதில் நம்பிக்கை வரவில்லை. மாறாக அவளுக்கு வந்த கோபத்தில், லக்ஷ்மணனுக்கு இராமர் போய்விட்டால் சீதையை அடையும் விபரீத எண்ணம் இருப்பதால்தான் அவன் போக மறுக்கிறான் என்று பழி சுமத்தினாள். சீதையின் அவதூறுப் பேச்சைக் கேட்ட லக்ஷ்மணனுக்கு அருவருப்பு மேலிட்டு, முன்பு பெண்களைப் பற்றி அவர்கள் சாமர்த்தியமாகவும், அதிகப் பிரசங்கியாகவும் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததாகவும், இப்போது சீதையின் பேச்சைக் கேட்டதும் அது சரிதானோ என்ற சந்தேகம் தனக்கு வருவதாகவும் சொன்னான்.

உத்தரம்ʼ நோத்ஸஹே வக்தும்ʼ தை³வதம்ʼ ப⁴வதீ மம|| 3.45.28||

வாக்யமப்ரதிரூபம்ʼ து ந சித்ரம்ʼ ஸ்த்ரீஷு மைதி²லி|

ஸ்வபா⁴வஸ்த்வேஷ நாரீணாமேவம்ʼ லோகேஷு த்³ருʼஸ்²யதே|| 3.45.29||

மைதி²லி =  Mythili, மைதிலி!
உத்தரம் = reply, பதில்
வக்தும் = tell, சொல்
நோத்ஸஹே  = not intending, உத்தேசம் இல்லை
ப⁴வதீ  = yourself, தாங்கள்
மம  = for me, எனக்கு
தை³வதம் = deity, தெய்வம்
அப்ரதிரூபம் =  unworthy, வேண்டத் தகாத
வாக்யம்  = word, வார்த்தைகள்
ஸ்த்ரீஷு  = among women, பெண்களிடம்
சித்ரம்  = wonder, ஆச்சரியமாக
ந  = not, இல்லை
ஏஷ: =  such, அது
நாரீணாம்  = womens’, பெண்களின்
ஸ்வபா⁴வஸ்த்  = nature, இயற்கை
லோகேஷு  = in the world, இந்த உலகில்
ஏவம்  = likewise, அதே போல
த்³ருʼஸ்²யதே is seen, பார்க்கப்படுகிறது

 

மைதிலி! உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை தாங்கள் பூசிக்கவேண்டிய தெய்வத்தின் அம்சம். நீங்கள் பேசிய வேண்டத் தகாத வார்த்தைகள் போன்றதைப் பெண்களிடம் எதிர்பார்ப்பது இயற்கையே என்பதால், அதை நான் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இல்லை.

 

இந்தக் காலத்துப் பெண்கள் சற்றும் ஒத்துக்கொள்ள முடியாத, அவர்களைப் பற்றிய கண்டனக் கணைகளை நாம் இங்கங்குமாக இராமாயணத்தில்  பார்க்கிறோம். அதே போன்ற கண்டனங்களை ஆண்கள் மேலும் வீசும்படித்தான் பல ஆண்களின் சாகசச் செயல்களும், அதிகப் பிரசங்க வேலைகளும் இருக்கின்றன. ஆனால்  அவை பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே என்று பாதிக்கப்பட்ட எவரும் கேட்கலாம். இதைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடோ, ஓரகப் பார்வையோ அல்லது ஓரினத்தை மட்டுமே குறைகூறும் நோக்கமோ வால்மீகிக்கு இல்லை. அவரது உலகம் அப்படிப்பட்டதாக இருந்தது என்று சொல்வதற்கும் ஏதும் முகாந்திரம் இல்ல. இந்தக் காவியத்தில் வரும் பாத்திரங்களை முழுமையாகச் சித்தரிக்கும் வகையில்தான் அவரது பார்வை இருந்திருக்கிறது. ஆக நாம் காண்பது எல்லாமே அதன் வெளிப்பாடுகள்தான்.

13.2  வேதனையின் வெளிப்பாடும் கலாச்சாரமும்

லக்ஷ்மணன் சீதையிடம் அது ராமரின் குரல் இல்லை, அரக்கர்கள் சூழ்ச்சி செய்து அவனை அங்கிருந்து அனுப்பப் பார்க்கின்றனர் என்று சொல்லியும், சீதை மேலும் புலம்புகிறாள். இராமரைக் காப்பாற்ற யாரும் இல்லையா என அவள் கண்ணீர் விட்டுக் கதறி, அருகில் ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரியில் குதித்தோ, மரத்தில் தூக்குப் போட்டுத் தொங்கியோ, விஷம் ஏதாவது சாப்பிட்டோ, தீயில் குதித்தோ தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுவதாக அரற்றுகிறாள். துக்கத்தின் உச்சியாக அவள் தன் இரண்டு கைகளாலும் வயிற்றில் அடித்துக்கொண்டு வேறு புலம்புகிறாள்.

 

பாணிப்⁴யாம்ʼ ருத³தீ து³:கா²து³த³ரம்ʼ ப்ரஜகா⁴ன ஹ|| 3.45.39||

 

ருத³தீ =  crying, அழுதுகொண்டே
து³:கா²த்  = with grief, துக்கத்தில்
பாணிப்⁴யாம்  = by her hands, தன் இரண்டு கைகளாலும்
உத³ரம்  = belly, வயிற்றில்
पப்ரஜகா⁴ன ஹ  = hit herself, தானே அடித்துக்கொண்டு.

 

தன் இரண்டு கைகளாலும் வயிற்றில் அடித்துக்கொண்டு துக்கத்தில் அழுதுகொண்டே புலம்புகிறாள்.

மகிழ்ச்சி, சிரிப்பு, துக்கம், அழுகை, கோபம், இயலாமை என்ற பலவிதமான உணர்வுகளை நாம் முகபாவங்களிலும், நமது வெவ்வேறு உடல் அசைவுகளாலும் வெளிப்படுத்துகிறோம். அதை வெளிப்படுத்துவதில் நமது பெண்கள் மற்ற நாடுகளிலிருந்தும், கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டே இருந்திருக்கின்றனர். தாங்க முடியாத துக்கத்தில் மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வதும், தரையில் புரண்டு அழுவதும் நமது பெண்களின் பாணி. அப்படிச் செய்வது துக்கத்தை ஓரளவு தாங்கச் செய்து, இதயம் உட்பட மற்ற உடல் உறுப்புகளின் இயக்கத்தையும் ஒழுங்கு படுத்துவதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் தற்காலத்தில் ஆங்கில மற்றும் உள்ளூர் திரைப்படங்களின் தாக்கத்தினால் இவைகளும் வெளிப்பாடு அதிகமில்லாமல் அடங்கி மாறி வருகின்றன. வால்மீகி காட்டும் சீதைக்கோ நம் வழக்கப்படி வாய், வயிற்றில் அடித்துக்கொண்டு அழவும் தெரிகிறது; தனது நாக்கால் சாட்டையடி கொடுப்பது போல சாடவும் தெரிந்திருக்கிறது. பின்னது இன்னும் இருந்தாலும், முன்னது மட்டும் நம் மக்களைப் பொறுத்தவரை பல இடங்களில் ஒரு மறைந்துவரும் கலாச்சாரமாகத்தான் தெரிகிறது.

13.3 பாத்திரம் அறியாத பிச்சை

சீதையின் அழுகையும் கூக்குரலும் பொறுக்காமல், அவளை இங்கும் அங்கும் போகாமல் பத்திரமாக இருக்கும்படி சொல்லிவிட்டு, லக்ஷ்மணன் இராமரின் குரல் போல வந்த திசையை நோக்கி வேகமாகச் சென்றான். சீதை தனியே இருக்கும் இந்தத் தருணத்தை எதிர்பார்த்து மறைந்துகொண்டு காத்திருந்த  இராவணன் உடனே சாது வேஷத்தில் அவள் முன்னே வந்து தோன்றினான். நம் இடம் தேடி வந்திருக்கும் எந்த விருந்தாளியையும் வரவேற்று உபசரிக்கும் நமது கலாச்சாரப்படி, சீதையும் வந்திருப்பது உணவு தேடி வந்திருக்கும் சாது என்று நினைத்து அவனை உள்ளே வருமாறு சொல்லி வரவேற்று உட்காருவதற்கு ஆசனமும் கொடுக்கிறாள். இராவணனும் அவளது பேரழகைக் குறித்து பெருமையாகப் பேசிவிட்டு, இவ்வளவு அழகுடன் இருக்கும் தாங்கள் யார், எதற்காகக் கடும் சூழல் கொண்ட காட்டுக்கு வந்து தங்கி இருக்கிறீர்கள் என்று எதுவும் தெரியாதது போல் கேட்டான். அவளும் அப்பாவித்தனமாக அவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். தான் ஜனக மகாராஜாவின் மகள், இராமர் தனது கணவர் என்றும், கணவர் தன் தந்தையான தசரதர் மனைவி கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, அவள் கேட்டபடி பதினான்கு வருடங்கள் வன வாசம் செய்து, அவரது கெளரவத்தைக் காப்பாற்ற அங்கு வந்து தங்கியிருப்பதாகச் சொன்னாள். அதன்படி ராம-லக்ஷ்மணர்களுடன் தானும் அங்கு வந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகி, தற்சமயம் பதிமூன்றாம் வருஷம் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, இராமரையும் அவரது குணங்களையும் பற்றி ஓர் ஓவியமே வரைந்து காட்டிவிட்டாள்.

இராமர் தான் சொன்னதைச் செய்யும் உண்மையான மனிதர்; வெகு உயர்ந்த குணங்களைக் கொண்ட அவர் உடலாலும் உள்ளத்தாலும் மிகத் தூய மனிதர்.  கண்கள் அகலமாகவும் அழகாகவும், மற்றும் கைகைள் நீண்டதாயும் இருக்கும் அவர், அனைவரிடமும் உண்மையான அக்கறை கொண்ட நல்ல மனிதர். தனது என்று எதையும் நினைக்காமல், யார் எதைக் கேட்டாலும் அதைத் தயங்காது கொடுக்கும் வள்ளலாகிய அவர், பிறருடையது எதையும் விரும்பவும் மாட்டார்; அவர்களாகவே எதைக் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளவும்  மாட்டார். அவர் என்றும் எப்போதும் உண்மையே பேசுபவர்; விளையாட்டுக்குக்கூட பொய் பேசமாட்டார்.

 

த³த்³யான்ன ப்ரதிக்³ருʼஹ்ணீயாத்ஸத்யம்ʼ ப்³ரூயான்ன சான்ருʼதம்|| 3.47.17||

ஏதத்³ப்³ராஹ்மண ராமஸ்ய த்⁴ர்ருʼவம்ʼ வ்ரதமனுத்தமம்|

 

த³த்³யாத்  = giver, கொடுப்பவர்
ந ப்ரதிக்³ருʼஹ்ணீயாத்  = not receive, பெறக் கூடாது
ஸத்யம்  = truth, உள்ளது
ப்³ரூயாத்  = utter, பேச
அன்ருதம்  = other than truth, இல்லாதது
ந ச  = not utter, பேசக் கூடாது ब
ப்³ராஹ்மண  = brahmin, பிராமணர்
ஏதத்³   = this is, இது
ராமஸ்ய  = Rama’s, ராமருடைய
த்⁴ர்ருʼவம்ʼ  = resolve, தீர்மானம்
அனுத்தமம்  = very great, உன்னத
வ்ரதம்  = vow, சபதம்.

 

பிராமணரே! இது அவர் எடுத்துக் கொண்டுள்ள உன்னதமான வாக்குறுதி: “ஒருவர் எப்போதும் கொடுக்கவேண்டும், கொள்ளக்கூடாது; எப்போதும் உள்ளதையே பேசவேண்டும், இல்லாததைப் பேசக்கூடாது”

 

எதையும் யாருக்கும் கொடுக்கும் தயாள குணமும், வேறொருவரின் உடமைகளை விரும்பாததும் பெறாததும் ஆகியவைகளையே இராமரின் எல்லாக் குணங்களிலும் முதன்மையாக சீதை கூறுகிறாள். இதைப் பார்த்தால் ப்ரஹதாரண்யா உபநிஷத்தில் மக்களுக்குப் பிரஜாதிபதி கூறும் இந்த ஸ்லோகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது:

 

ததே³ததே³வைஷாதை³வீ வாக³னுவத³தி ஸ்தனாயித்னுர்த³

த³ த³ இதி தா³ம்யத த³த்த த³யத்⁴வமிதி

ததே³தத்ரயம்ʼ ஸி²த்தே³த⁴மம்ʼ தா³னம்ʼ த³யாமிதி – ( V- ii- 3)

 

எல்லாவற்றையும் கற்றுக் கொண்டபின் பிரஜாபதியாகிய குருவைப் பிரியும்போது சிஷ்யர்கள் கேட்கும் அறிவுரைக்கு, அவர் “த” என்ற ஓரெழுத்துச் சொல்லை தனது பதிலாகச் சொல்கிறார். அதற்கு அவர்களே தமம் (அடக்கம்), தத்தம் (கொடை), தயை (கருணை) என்று புரிந்து கொள்கின்றனர். இவை எல்லாம் சேர்ந்த உருவமாகவே இராமர் இருக்கிறார் அல்லவா?

13.4 வேதம் சொல்லும் உண்மைகள்

சீதை சொன்னதன் விளக்கங்கள் ஏதும் புரிந்துகொள்ள முடியாத ராவணன், அவளிடம் ஆட்சியை இழந்துவிட்டு காட்டினில் தவிக்கும் கையாலாகாத இராமனிடம் இருந்து என்ன பயன், தன்னுடன் இலங்கைக்கு வந்தால் இராணியாக வாழலாம் என்கிறான். அங்கு ஆயிரம் ஆயிரம் ஆட்கள் அவளுக்குச் சேவை செய்யவும், தான் பல போர்களின் மூலம் திரட்டி வைத்துள்ள செல்வமும் அவள் காலடியில் கிடக்கும் என்று ஆசை காட்டுகிறான். வெறுப்புடன் சீதை அவனது வேண்டுகோளை நிராகரிக்கிறாள்.

அதைக் கேட்ட ராவணன் கோபத்தில் சீதையை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு, ஏற்கனவே அங்கு அவன் நிறுத்தி வைத்திருக்கும் விமானத்தில் அவளை ஏற்றினான். சீதை தன்னை ராமரோ லக்ஷ்மணனோ காப்பாற்ற வருவதற்காக உரத்த குரலில் கூவிக்கொண்டே அழுதாள். ஆனால் அவர்களோ கூப்பிடும் தூரத்தில் இல்லாததால் அவர்களுக்கு அவளுடைய அழுகுரல் எதுவும் கேட்கவில்லை. எந்த உதவியும் வருவதாகத் தெரியாததால், பக்கத்தில் இருக்கும் யாராவது உதவிக்கு வரக்கூடாதா என்று பலமுறை மேலும் கூவினாள். அவளது நல்ல வேளையாக, அவளது கதறல் அருகே தூங்கிக்கொண்டிருந்த பறவை ஜடாயுவை எழுப்பியது. விழித்துக்கொண்ட ஜடாயுவும் ராவணனை எதிர்த்து நின்று, அவன் சீதையை பலாத்காரமாக இழுத்துக்கொண்டு போவதை அனுமதிக்க மாட்டேன் என்றது.

 

ந ஸ²க்தஸ்த்வம்ʼ ப³லாத்³த⁴ர்தும்ʼ வைதே³ஹீம்ʼ மம பஸ்²யத:|| 3.50.21||

ஹேதுபி⁴ர்ன்யாயஸம்ʼஸித்³தை⁴த்³த்⁴ருʼவாம்ʼ வேத³ஸ்²ருதீமிவ|

 

மம  = me, என்
பஸ்²யத:  = infront my eyes, கண்களுக்கு முன்னாலே
த்வம்  = you, நீ
வைதே³ஹீம்ʼ =  Vaidehi, வைதேகி
ந்யாயஸம்ʼஸித்³தை⁴:  = by those bound by logic, தர்க்க ரீதியாக
ஹேதுபி⁴:  = by reason, வாதம்
த்⁴ருʼவாம்ʼ  = everlasting, என்றும் நிலைத்திருக்கும்
வேத³ஸ்²ருதீமிவ  = like revelations of vedas, வேதங்கள் காட்டும் வழிகளை
ப³லாத்  = by force, வலுக்கட்டாயமாக
ஹர்தும்  = abduct, அபகரித்து
ந ஸ²க்த:  = not possible for you, உன்னால் முடியாது

 

எப்படி என்றும் நிலைத்திருக்கும் வேதங்கள் காட்டும் வழிகளை குதர்க்கத்தினால் திரித்து வேறு பொருள் கொள்ளமுடியாதோ, அதேபோல நான் இருக்கும் இடத்தில் என் கண்களுக்கு முன்னாலேயே வைதேகியை வலுக்கட்டாயமாக நீ எடுத்துச் செல்வது முடியாது.

இதிலிருந்து சாதுக்கள் இருக்கும் எந்தக் காலத்திலும் சாத்தான்களும் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இல்லையென்றால் வால்மீகி வேதக்  கருத்துக்களைத் திரித்துக் கூறுபவர்களைப் பற்றிப் பேசியிருப்பாரா? எப்போதும் தீய சக்தி இருக்கும், அதனை எதிர்க்கும் நல்ல குணம் கொண்ட வல்லவர்களும் எப்போதும் இருக்கவேண்டும் என்பதே இங்கு நாம் முக்கியமாகக் காணவேண்டியது. அது அன்றும் நடந்திருக்கிறது, இன்றும் ராமன் குடிகாரன் என்று திரித்துப் பேசி அதற்கு வால்மீகியையே துணைக்கு அழைப்பவர்களும் உண்டு. விழிப்புடன் இருப்பவர்களால்தான் வேதம் சொல்லும் உண்மைக் கருத்துக்களைத் திரித்துப் பேசுபவர்களின் முகத்திரையைக் கிழிக்க முடியும். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்க்டன் சொன்ன,”சமாதானம் தழைத்து ஓங்க வேண்டும் என்றால், போருக்கு ஆயத்தமாக இருப்பதுதான் மிகச் சிறந்த வழி” என்ற கூற்றும் மேலே சொன்னதன் எதிரொலிதான்.

அன்பின் மொத்த உருவமான சீதை முன்பு அரக்கர்களுக்காக இராமரிடம் பரிந்து பேசினாள்; பின்னர் சீதையை துன்புறுத்திய அரக்கிகளை அனுமான் துன்புறுத்தும் எண்ணம் கொண்டபோது அது நடக்காதவாறு தடுத்து நிறுத்தியதும் அல்லாமல் அவர்களை மன்னிக்கவும் செய்தாள். இராமருடன் தொடர்ந்து இருந்து உறுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக உலகுக்குத் தன்னை நிலை நிறுத்தினாள். தடுக்க முடியாதபடி துன்பம் வந்தபோது அதை புன்முகத்தோடு ஏற்று அமைதி காத்தாள். இப்படித்தான் எவரும் இருக்கவேண்டும் என்று வேதங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. இதற்கு மாறான திசை திருப்பும் குதர்க்க வாதங்கள் எதுவும் என்றும் எடுபடாது.

(தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *