அள்ளக் குறையாத அமுதம் – 2

[சென்ற வாரம்: கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்று சிலம்பை விற்று வரும் பணத்திலே, புதிய வணிகம் செய்து வருவாய் பெறலாம் என்று செல்கின்றனர். மதுரையின் எல்லையில் இருக்கும் ஆயர்பாடியில் மாதரி அவர்களுக்கு வீடும், பொருள்களும் தந்து குடியிருத்துகிறாள். அங்கே செல்வப் பெருங்குடியில் வந்த கண்ணகி தன் கையால் அன்போடு சமைத்து உணவுதர, அதை உண்ட கோவலனின் மனம் கண்ணகியின் நிலைகண்டு துன்புறுகிறது.]

“என் அருகே வா” என்று கண்ணகியை அழைத்து அணைத்துக்கொள்கிறான். “இத்தனை கடுமையான வழியே இவளை நடத்தி வந்தது தவறுதானோ? பெரும் செல்வத்தையுடைய எனது பெற்றோரும், கண்ணகியின் பெற்றோரும் இருக்கும்போது எதற்காக நான் இவ்வளவு தொலைவு இவளை நடத்திக் கூட்டிவந்தேன்? தவறு செய்துவிட்டேனோ?” என்று எண்ணத் தொடங்கி தனது இழிந்த சகவாசம், தீச்செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் குறித்து அவளிடம் சொல்லி வருத்தப்படுகிறான். ‘அட நான்தான் முட்டாள்தனமாக் கூப்பிட்டேன். பதில் பேசாம என்கூட நீபாட்டுக்குக் கிளம்பி இந்த ஊருக்கு வந்துட்டியே?’ என்று சொல்லி முடிக்கிறான். அவளாவது “மாட்டேன்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இத்தனைத் துன்பமும் வந்திருக்காதே என்று எண்ணுகிறான்.

“நீங்கபாட்டுக்கு மாதவி வீட்டிலே போய் இருந்துட்டீங்க. அப்போ உங்க அம்மாவும் அப்பாவும் என்னைப் பாக்க வந்தாங்க. என்னைப் பாக்க வரும்போது உங்கமேலே இருந்த செமத்தியான கோவத்தை மறச்சுக்கிட்டுத்தான் வந்தாங்க. உங்களைப் பிரிஞ்சு இருக்கற என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசினாங்க. நான் ஒண்ணுமே பேசல. சும்மா ஒரு புன்னகையில்லாத புன்னகைதான். அதுவே என் கஷ்டம் எல்லாத்தையும் அவங்களுக்கு எடுத்துச் சொல்லிச்சு. அதைப் பாத்து அவங்க ரொம்ப வருத்தப் பட்டாங்க.” இப்படிச் சொன்னதோடு கண்ணகி நிறுத்தவில்லை.

கண்ணகி மிகப் பண்புடையவள். கணவன் கேட்குமுன்னே அவனுக்கு “இந்த சிலம்பை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தவள்தான். முழுதும் செல்வ வாழ்க்கையில் வாழ்ந்தும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் கணவனோடு வாய் திறவாது நடந்துவந்தவள். ஆனாலும் ஒருவார்த்தை சொல்கிறாள்: “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்!”. ‘நல்லவங்க யாருமே செய்யக்கூடாத காரியத்தைச் செய்தீர்’ என்று நறுக்குத் தெறித்தாற்போல் சொல்கிற அவள் அதற்காக மேலே புலம்பவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் சொல்வதற்கு முன்னால் அவள் வருந்துகிறாள்.

அவளுடைய வருத்தம் என்ன தெரியுமா? “என்னால் தர்மவான்களுக்கு உணவளிக்க முடியவில்லை. அந்தணரைப் பேணமுடியவில்லை. துறவியரை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. நம்முடைய பழைய மரபுப் பெருமையான விருந்தினரை அழைத்துத் தக்கவற்றைச் செய்யமுடியவில்லை. ஓர் இல்லறப் பெண்ணான எனது கடமைகள் எல்லாவற்றையும் செய்யும் நற்பேறை இழந்த என்னைப் பார்க்க உன் தாயும் தந்தையும் வந்திருந்தனர்” என்றுதான் அவள் தொடங்குகிறாள். செல்வக் குடிப்பெண்ணாகப் பிறந்த அவள் “எனக்குப் பட்டும் பீதாம்பரமும் இல்லை, முத்தும் வைரவைடூரியுமும் பதித்த தங்கநகைகள் இல்லை, பெருமாளிகை வாசம் இல்லை” என்று கூறவில்லை. மாறாக

அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை

(சிலப்பதிகாரம்: கொலைக்களக் காதை: 71-73)

[எதிர்தல், எதிர்கோடல் – வரவேற்று உபசரித்தல்]

என்று கூறியே வருந்தினாள்.

கணவன் தன்னோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் (போர், வணிகம் முதலிய காரணங்களுக்காக வீட்டைவிட்டு நீங்கியிருந்தாலும்) விருந்தினரை வரவேற்று உபசரித்தல் மனைவியின் கடமையாகக் கருதப்பட்டது. ஐயனாரிதனார் எழுதிய ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்ற மிகப் பழைமை வாய்ந்த நூல் ஒன்று இருக்கிறது. வளமான இல்லத்திலே வாழும் ஒரு மனைவி தன் கணவனின் செல்வச் செழிப்பை வாழ்த்துவது ‘கற்பு முல்லை’ என்ற துறையாகப் புறத்திணையின் பொதுவியல் படலத்தில் சொல்லப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பெண் சொல்வதைக் கூறும் செய்யுளில் “கருப்பான மலைபோன்ற மார்பை உடைய என் கணவன் கொடுத்த செல்வத்தினால் விருந்துபசரிக்கின்ற இந்த வளமை நெடுங்காலத்துக்குப் பெருகி வாழ்வதாக!” என்று வாழ்த்துகிறாள்.

ஊழிதோ றூழி தொழப்பட்டு உலைவின்றி
ஆழிசூழ் வையத்து அகமலிய – வாழி
கருவரை மார்பன் எம் காதலன் நல்க
வருவிருந்து ஓம்பும் வளம்.

(புறப்பொருள் வெண்பாமாலை: பாடல் 284)

[கருவரை – கருத்த மலை]

“எனக்குப் பல்லக்கு வாங்குவதற்கு உதவிய என் கணவனின் பணம்” என்றோ, “என்னுடைய பிடியிடைக்கு (பிடி என்றால் பெண்யானை என்றும் ஒரு பொருள் உண்டு) ஒட்டியாணம் செய்துகொள்வதற்கு உதவிய என் கணவனின் செல்வம்” என்றோ அவள் ஏன் சொல்லவில்லை? செல்வம் என்றால் விருந்தோம்பும் பண்புக்கு ஏதுவாக இருப்பது, வறுமை என்றால் அந்தக் கடமைக்குக் குறுக்கே வரும் இல்லாமை என்று சொல்லுமளவுக்கு விருந்தோம்பல் உயர்த்திக் கூறப்பட்டது.

பணக்காரர்கள் என்று இல்லை, வறுமையில் வாடியவர்களும் தம்மிடம் இருக்கும் அந்த எளிய உணவைக் குறைந்த பட்சம் தன்போலவே வறுமையில் வாடும் உறவினருடன் சேர்ந்துதான் சாப்பிட்டனராம். ‘எதுவுமில்லாத சமையலறையில், கண்ணைக்கூட இன்னும் திறக்காத, மடிந்த காதை உடைய நாய்க்குட்டிகள் ஓடிப்போய் வறண்டு கிடக்கும் தாயின் முலையைக் கவ்வுகின்றன. அதுவோ வலி தாங்காமல் குரைக்கிறது. கூரையிலிருந்து மூங்கிற்கம்புகள் விழுகின்றன. சுவர்களோ செல்லரித்து மண்படர்ந்திருந்தது. போதாததற்கு ஆங்காங்கே ஈரத்தில் பூஞ்சைக்காளான் பூத்திருந்தது. அந்த வீட்டின் பெண் இடை இளைத்திருப்பது பசியாலே. கையிலே வளையல் அணிந்திருக்கிறாள். குப்பைமேட்டில் வளர்ந்திருக்கும் வேளைக்கீரையைத் தன் நகத்தாலே கிள்ளி எடுத்துக்கொண்டு வருகிறாள். அதை உப்புக்கூடப் போடாமல் சமைக்கிறாள். பிறகு தாங்கள் இத்தனைய எளிய உணவை உண்கிறோமே, இதை யாரும் பார்த்துவிடக் கூடதே என்று வெட்கப்பட்டுக் கதவை அடைத்துவிட்டு, தன்னம்ப் போலவே வறுமையில் வாடிய உடலைக் கொண்ட பெரிய சுற்றத்தினரோடு அமர்ந்து அந்த உப்பில்லாக கீரையைப் பகிர்ந்துகொள்கிறாள்’ என்று நெஞ்சை உருக்கும் ஒரு காட்சியை வர்ணிக்கிறது சிறுபாணாற்றுப்படை:

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட
(130-140)

குப்பைக்கீரைச் செடியைக் கூட ஒடித்து எடுத்தால் மறுநாளைக்கு எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிற அந்தப் பெண், தன் நகத்தாலே இலைகளை மட்டும் கிள்ளி எடுக்கிறாள். அப்போதுதானே அது மீண்டும் தளிர்க்கும். சாதாரணமாகச் சமைக்காத அடுக்களையில் பூனை தூங்கும் என்பார்கள். இந்த வீட்டில் புனிற்றுநாய் (அப்போதுதான் குட்டிபோட்ட நாய்) தன் குட்டிகளோடு உறங்குகிறது. இப்படிப்பட்ட வறுமையான வீட்டில் வந்து அண்டிய நாய்க்கும் உணவில்லாததால் பால் சுரக்கவில்லை. இந்த வறிய நிலையிலும், கிடைத்த அந்த குப்பைக்கீரையைத் தனது ‘இரும்பேர் ஒக்கலொடு’ (மிகப்பெரிய சுற்றத்தாரொடு) சேர்ந்து உண்கிறாளே, அவளை என்ன சொல்லிப் போற்றுவது!

மனைவிக்கு மட்டும்தான் இந்தக் கடமையா?

(தொடரும்)

முந்தைய இடுகை…

One Reply to “அள்ளக் குறையாத அமுதம் – 2”

  1. அன்புள்ள அய்யா,

    தங்களது அள்ள அள்ள குறையாத அமுதம் பாகம் இரண்டு படித்தேன். மிக்க நன்றாய் எழுதி இருக்கிறீர்கள். படிக்க ஆர்வமும் படித்ததை பிறருக்கு தரும் விதமும் எழுதிய உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    தமிழர் இலக்கியங்களை எத்தையோ பேர் எத்தனையோ விதமாய் கொடுத்திருந்தாலும் தாங்கள் அளிக்கும் விதம் நன்று. தொடர்ந்து எழுதுங்கள். ஆவலாய் படிக்கிறோம். அன்பன் ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *