நானும் ஒடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து முகத்தில் அறைகிற உண்மை என்னவென்றால் இதெல்லாம் ஒருவிதத்தில் மேட்டிமை பார்வையிலிருந்து உருவானதுதான். காலனியமும் சமூக தேக்கநிலையும் இருந்த கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட இன்று ஒடுக்கப்பட்டதாக சொல்லும் சமுதாயங்கள் நம் பண்பாட்டுக்கு செய்த நன்கொடை அபரிமிதமானது. உண்மையில் நாம் எல்லாரும் செய்ய வேண்டியது பார்ப்பனீயம் பிராம்மணீயம் என்று கண்ட ஈயங்கள் மீது பழி போடாமல் வரலாற்றை மீட்டெடுப்பது மட்டும்தான்.
இதோ பிள்ளையார் சதுர்த்தி திருவிழாக் காலம். இத்தருணத்தில் இவரை நினைவு கூர்வோம்:
அவர் உலக சுற்றுப்பயணம் முடித்த பிறகு நாகையில் இந்து மனிதாபிமான சங்கத்தை ஏற்படுத்தினார். ஊர்மக்கள் வேண்டுக்கோளுக்கிணங்க நாகை இந்து போதனா பள்ளியை கட்டிக் கொடுத்தார்.
சைவ சித்தாந்தியான இவரின் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான். தம் வீட்டிலேயே மூன்றாம் மாடியை விநாயகர் ஆலயமாக்கி அனுதினம் பூஜைகள் செய்து வந்தார்.
தூத்துக்குடி சிவஞான பிரகாச சபையினர் ஆழ்வார்கள் நாயன்மார்கள் சித்தர்கள் பாடல்களையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பிரசுரங்கள் அடிக்க பொருளுதவி செய்தார்.
முதல் பர்மா போரின் போது பர்மாவுக்கு சென்ற தமிழர் கட்டிய காமாட்சி அம்மன் கோவில் நலிவடைந்து கிடப்பது கண்டு அக்கோவிலை செப்பனிட்டது மட்டுமன்றி அது நலிவடைந்த காரணம் அதனை பராமரிக்க கோயிலுக்கு நிலையான வரும்படி இல்லாமையே என கண்டு அதற்குரிய ஏற்பாடுகளை செய்தார்.
ரங்கூன் தமிழ் ஹிந்து சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய அவர் அநேக காலம் இந்து மத பரிபாலன சபையின் தலைவராக இருந்ததுடன், பல இந்து தரும ஸ்தாபனங்களின் டிரஸ்டியாகவும் இருந்து வந்தார்.
1881 டிசம்பர் 23 ஆம் தேதி 63 நாயன்மார்களுடைய வரலாற்றை இரங்கூனில் பெரியதொரு விழாவில் வெளியிட்டார். இலட்சம் பிரதிகள் பர்மாவிலும் தமிழ்நாட்டிலும் வெளியிட ஏற்பாடுகள் செய்தார். இவ்வாறு நம் பண்பாட்டு நூல்களை அச்சிட்டு வழங்க காலமும் பொருளும் விரயமாவதை தடுக்க மார்க்கண்டெய்ல் பிரஸ் எனும் பதிப்பக நிறுவனத்தையும் தொடங்கினார்.
பர்மா வரும் ஏழை எளிய இந்தியர்கள் தங்க பார்க் தெருவில் ‘ரெஸ்ட் ஹவுஸ்’ என்கிற சத்திரத்தை நிறுவினார். இங்கு பர்மாவுக்கு வேலை தேடி வரும் ஏழை இந்தியர் எவரும் சாதி மத மொழி பாகுபாடின்றி இலவசமாக தங்கிக் கொள்ளலாம்.
1882 இல் பர்மா வாழ் இந்தியர்கள் அனைவரும் தம் வாழ்க்கை சடங்குகளை வளப்படுத்தவும் ஒன்று கூடி உணர்வால் ஒற்றுமைப்படவும் ஓர் மெய்ஞான மையமாக ஒரு கோவிலை கட்டுவித்தார்.
1886 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரியில் சத்விஷயதான சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி சைவ-வைணவ ஒற்றுமையையும் உரையாடலையும் ஏற்படுத்தினார்.
பர்மாவில் அனைத்து தமிழர்களுக்காகவும் ஒரு கல்வி கூடத்தை ஏற்படுத்தினார். மத வேறுபாடுகள் இன்றி இந்து இஸ்லாமிய குழந்தைகள் கல்வி பயில அந்நிறுவனத்தை உருவாக்கி அதை மேம்படுத்தினார்.
1896 இல் “இந்து வாலிப நாடகக்குழு” எனும் அமைப்பை உருவாக்கி அற போதனைகளையும் சமுதாய நோக்கங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வழி வகுத்தார், ஜான் ரத்தினம் அவர்கள் நடத்தி வந்த ஆதுலர் தொழில்கல்வி மையத்திற்கு உதவிகள் வழங்கினார்.
1912 இல் இவர் ஒரு கப்பலை வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டார். அக்கப்பலுக்கு மீனாட்சி என பெயரிட்டார்.
யார் இவர்?
சென்னை வேப்பேரியெனும் வேதியர் புரத்தினும், புரசைபாக்கமெனும் ரகுநாத புரத்தினும் தொன்று தொட்டு வசித்தவரும், மக்களுக்கு உழைத்தவருமான மார்க்கண்ட மூர்த்தி ஆதி வள்ளுவ குல தீபன், சைவ வள்ளுவ குல திலகன், திருவள்ளுவர் குலத் தோன்றல் என்றெல்லாம் சரம கவி பஞ்சரம் எனும் கவிதை நூல் இவரை கூறுகிறது.
இவரது மகனான பெ.மா.மதுரைப் பிள்ளை அவர்களே மேலே கூறிய சமூகத் தொண்டுகளை ஆற்றியவர்.
இவர் வரலாற்றை தலித் வரலாற்றாராய்ச்சியாளர் அன்பு பொன்னோவியம் அவர்கள் நூலாக வெளியிட்டுள்ளார்கள். நூல் கிடைக்குமிடம்: சித்தார்த்தா பதிப்பகம், 99 திரிசரண இல்லம், முதல் தெரு, அவ்வை திருநகர், கோயம்பேடு சென்னை -600 092,
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
அறியாத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
பிள்ளையார் சதுர்த்தியன்று அவருக்கு அத்யந்தபக்தராகவும் ஹிந்து சமுதாய ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட ஒரு மாமனிதரைப்பற்றி ஒரு அருமையான குறிப்புரையை வழங்கியுள்ளீர்கள். அறிவார்ந்த அரவிந்தன் அவர்களுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
Dr.Shabbir Ahmed என்ற வலைதளத்தில் இசுலாம் குறித்து சில கட்டுரைகள் உள்ளன. அவற்ற தமிழில் மொழிபெயா்த்து வெளியிடலாமே.இறையில்லா இசுலாம் மற்றும் new age islam போன்ற வலைதளங்களில் உள்ள கட்டுரைகளை வெளியிடலாமே! மேற்படி வலைதளங்களுக்கு இணைப்பு கொடுக்கலாமே.
புது புது தகவல்கள். திரு அ. நீ. அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.
நீண்ட சமயத்துக்குப் பிறகு ஸ்ரீ அ.நீ அவர்களது பதிவை தமிழ்ஹிந்து தளத்தில் காண்பதில் மகிழ்ச்சி. அதுவும் ஹிந்து மதத்திற்கு பெரும் சேவை செய்த ஸ்ரீ மதுரைப்பிள்ளை அவர்களைப் பற்றிய அரிதான தகவல் தொகுப்புகள். அருமை.
படித்ததில் மனதுக்கு ரொம்பவும் இதமாக இருந்தது.