தெலுங்கு இலக்கியத்தில் வேமனாவின் படைப்புகள் புரட்சிகரமான சிந்தனையின் அடையாளமாக விளங்குகின்றன. ஆந்திர மாநிலத்தில் கொண்டவீடு என்ற இடத்தில் வேமனா பிறந்தார். குமரகிரி வேமா ரெட்டி என்பது இயற்பெயர். இளைய வயதிலேயே தாயை இழந்து, மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகி அனபைத் தேடி அலைந்தார். தேவதாசியிடம் உறவுகொண்டு, பின்பு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வெற்றி அடையாமல் போனதாக அவர் வாழ்க்கை பற்றிய கதைகள் கூறுகின்றான். இளைய வயதிலேயே யோகத்தில் ஈடுபாடுகொண்டு லம்பிகா சிவயோகியிடம் பயிற்சிபெற்றதாகவும் செய்திகள் உண்டு. இந்தப் பின்னணியில் யோகி வேமனா என்றும் அழைக்கப் படுகிறார்.
ஏறக் குறைய மூன்றாயிரம் பாடல்கள்கொண்ட வேமனாவின் படைப்பு ’வேமனாவின் பத்யங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. பாடல்கள் நான்கு அடிகளைக்கொண்டு உள்ளன. மூன்று வரிகள் அவர் கருத்தையும் இறுதி அடி ‘விஶ்வதாபிராமா வினுரா வேமா’ என்ற முத்திரையோடும் அமைகிறது. எளிமையான மொழியில் எல்லாக் கால கட்டத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக்கொண்டு பத்யங்கள் அமைகின்றன.
சாதிகளுக்கு முதலிடம் தந்து சக மனிதர்களை மனிதர்களே புறக்கணித்த காலகட்டத்தில் இராமானுஜர் ஓர் சீர்திருத்தவாதியாக செயல்பட்டதைப் போலவே வேமனாவும் தன் காலகட்டத்தில் சாதியைத் தீவிரமாக எதிர்த்தவர். அவர் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது. சிவனை மட்டும் வழி படும் ஜங்கம் பிரிவைச் சேர்ந்தவர். உழவு குடும்பத் தொழிலாகிறது. சிவன் அவருக்கு பிடித்த கடவுளாக இருந்ததைப் பாடல்கள் காட்டுகின்றன. என்றாலும் கடவுளைக் காட்டி மக்களை வேறுபடுத்தும் தன் கால அவலத்தை அவரால் பொறுக்கமுடியவில்லை.
“மனிதன் நடக்கும் மண் குடிக்கும் தண்ணீர்
எரிக்கும் தீ எல்லாம் ஒன்றே இதில்
சாதியும் குலமும் எங்கிருந்து வந்தன
விஶ்வதாபிராமா வினுரா வேமா”
என்பது பாடல்.
இதே கருத்தை கன்னட ஞானியான சர்வஞ்ஞரும் வலியுறுத்துகிறார். எந்தச் செயலிலும் வெற்றி அடைவதற்கு மனிதன் தொடர்ந்து செய்யும் பயிற்சிதான் காரணமாக முடியும் என்று நவீன உளவியல் இன்று சொல்வதை வேமனா அன்றே காட்டியிருக்கிறார். சர்வஞரும் அதையே சொல்கிறார்.
‘பாடப் பாட ராகம் இனிமையாகும்
தின்னத் தின்ன வேம்பு சுவைக்கும்
பயிற்சிதான் செயலை முடிக்கும்
விஶ்வதாபிராமா வினுரா வேமா
என்பது அவர் கவிதை.
துன்பம் தந்தவரை அழித்தே தீருவேன் என்ற வெறுப்பு மனமோடு வாழ்வது சகஜம்தான். ஆனால் அதிலிருந்து விடுபடும்போதுதான் தான் மனிதன், தன் பிறவிக்கான அடையாளத்தைப் பெறுகிறான். குற்றம் செய்தவனை மன்னித்து தண்டிக்காமல் சுதந்திரமாக விடுவதே மனிதத் தன்மை என்பது அவர் கருத்தாகிறது. இது வள்ளுவரின் ’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்பதோடு ஒன்றுகிறது.
இலக்கியம் என்பது எவராலும் அணுகமுடிவதாக இருக்கும் போதுதான் அது சமூகப் பயன்பாடு உடையதாகிறது. பாரதி உறுதிபடுத்தியதைப்போல எளிமைதான் நல்ல கவிதையின் அடையாளம்.
அன்றே இதைச் சில பெரியபுராணப் பாடல்களும், நாலாயிர திவ்யப்பிரபந்தப் பாடல்களும், ஒன்பதாம் நூற்றாண்டைய கன்னடமொழி வசனங்களும், தெலுங்குமொழி பத்யங்களும் காட்டி உறுதிசெய்துள்ளன. நல்ல கவிதை என்பதும், கவிஞன் என்பவன் என்று உணரப்படுவதும் அவற்றில் இருந்து வெளியாகும் உவமைகள் மூலம்தான். சான்றாகச் சாதாரண மனிதனுக்குத் தெரிந்த உப்பு, கற்பூரம், பசும்பால் இவையெல்லாம்தான் வேமனாவின் உவமைப் பொருள்களாகின்றன. உப்பும், சூடமும் பார்வைக்கு ஒன்றுபோலத் தெரிந்தாலும் கூர்மையான கவனிப்பு அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை அறியச்செய்வதுபோல, தனித்த பார்வையால் இரக்கம் உடையவர்களை இனம்காணமுடியும் என்கிறார். பாத்திரம் நிறைய இருந்தாலும் கழுதைப்பாலால் பயன் இல்லை. சிறு கிண்ணத்தில் உள்ள பசும்பாலைப்போல சிறிதளவு உணவு என்றாலும் மரியாதையோடு தரப்படும் போதுதான் சிறப்பு கிடைக்கும் என்கிறார்.
முக்காலமும் உணர்ந்தவர்களாகவே சமூக சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கின்றனர். முதியோர் இல்லங்கள் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில், வேமனா அன்று சொன்ன கருத்து பொருத்தம் உடையதாகிறது. ”தாய் தந்தையிடம் மதிப்பும், நன்றியும் இல்லாத மனிதன் எதற்காகப் பிறக்கிறான்,” என்ற வினாவை முன் வைக்கிறார்.
சில வினாக்களுக்கு விடை ஒவ்வொருவரின் மனசாட்சியுமாகத்தான் இருக்கமுடியும். இந்த வினாவின் நோக்கமும் படிப்பதோடு நின்றுவிடாமல் தன் பிறப்பின் காரணத்தை ஒவ்வொருவரும் அறியவேண்டும் என்பதுதான். பெற்றோர்களிடம்கூட சரியான உணர்வுகளை வெளிப்படுத்தாதவன் ஆறறிவு அற்றவன் என்பது அவர் பார்வையாகிறது.
தோற்றத்தை வைத்து மனிதனை எடைபோடுவது சரியான தீர்வாவதில்லை. ஆனால் உலகம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அந்த நிலையை ஓர் எளிய உவமைமூலம் புரியவைக்கிறார். ’உலகம் அத்திப்பழம் போன்றது. அத்தியின் வெளித்தோற்றம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. அதை எப்படி வெட்டினாலும் உள்ளே புழுக்கள் பெருகிக் கிடப்பதைப்போல, புறம் அழகாக இருந்தாலும் அகம் அழுக்கு நிறைந்து கிடப்பதாக உள்ளது என்கிறார். இந்த அத்திப்பழ உவமை கன்னட ஞானி பசவேசராலும் சொல்லப் படுகிறது.
“எனது மனமோ அத்திப் பழம், பாரையா
ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை”
என்ற வசனம், வெளிப்புறத்தில் மிக அழகான தோற்றம் கொண்ட அத்திப்பழம்போன்ற வெளித்தோற்ற அழகிருந்தாலும். பழத்தின் உள்ளே பெருகிக்கிடக்கும் புழுக்களைப் போன்றது மனதின் கசடுகள் என்ற அவரது உவமையை இங்கு ஒப்பிடலாம்
வழிபாட்டைவிட அதன் நோக்கம்தான் எப்போதும் முக்கியமானதாகிறது. தன்னுடைய வாக்கைக் காப்பாற்றமுடியாமல் போகும்போது பக்குவமான மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை.
தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. அதை உறுதியாக்கும் வகையில் அவர் கவிதைகளும் கருத்துகளும் வாழ்கின்றன. எல்லாக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துக்கள்கொண்ட ஓரிரு கவிதைகள் தரப்பட்டுள்ளன.
“இடமும் நேரமும் நம்முடையதாக இல்லாதபோது
வெற்றி நமக்கில்லை, இதனால் நாம் சிறியவர்களில்லை
கண்ணாடியில் மலை மிகச்சிறியது தானே
விஶ்வதாபிராமா வினுரா வேமா”
“தளர்வு நேரத்தில் உறவுத்தன்மையைப் பார்க்கவேண்டும்
பயமான சமயத்தில் படைபணியைப் பார்க்கவேண்டும்
வறுமைப்பொழுதில் மனைவியினியல்பைப் பார்க்கவேண்டும்
விஶ்வதாபிராமா வினுரா வேமா”
மக்கள் கவி வேமனாவிற்கு தன்னம்பிக்கையே பலம். ஒளிவுமறைவின்மை, அச்சமின்மை, அனுபவமே படைப்பு என்று ஒரு கலவையாக வாழ்ந்தவர் அவர்.
“மழையில் நனையாதவர் எவருமில்லை
வேமனாவின் கவிதையை அறியாதவருமில்லை”
என்ற பாராட்டு அவருக்கு உரியதாகிறது.
மீனா அவர்களின் வேமனாவின் பத்யங்கள் பிற மொழியில் உள்ள கலை இலக்கிய சிறப்புகளை தமிழில் அறிந்து கொள்ள உதவும் நல்ல முயற்சியாகும்.இதைத்தான் பாரதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.என்று கூறினார்.வெளிநாட்டு கவிஞர்களையும், தலைவர்களையும்,
தத்துவவாதிகளையும் பெருமையாக பேசிக்கொண்டும்,எழுதிக்கொண்டும், இருக்கும் அதே நேரத்தில் நம் இந்திய மண்ணில் தோன்றிய ஞானிகளையும்.
தத்துவவாதிகளையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதும், அல்லது அறிந்துகொள்ளாமல் இருப்பதும்,அதைவிட தென்னாட்டு தலைவர்கள் ஞானிகள் ,
பற்றி வடநாட்டு மனிதகளால் இருட்டடிப்பு செய்வதும் தற்காலத்தில் பெருமளவில் குறைந்து உள்ளது இந்திய தத்துவங்கள் பெருமளவில் வெளிவர வாய்ப்பாக இந்த சூழ்நிலை அமைந்துள்ளது.தமிழ் மொழியைப்பற்றியும், தமிழ் நாட்டைப்பற்றியும் வாய்கிழிய பேசியவர்கள் செய்யாததை வடநாட்டை சேர்ந்த பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் திரு.தருண்விஜய் அவர்கள் திருக்குறளை வடநாட்டிலும், வெளிநாட்டிலும் திருக்குறள் சிறப்பை எடுத்துச்சென்று பரப்புவது என்பது இந்திய இலக்கிய உணர்வு அனைவருக்கும் சமமாக பரவ எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.அதுபோன்ற முயற்சிதான் தி.இரா.மீனா அவர்களின் வேமனாவின் பத்யங்கள் என்ற தெலுங்கு இலக்கிய இந்த படைப்புமாகும்.நன்றி, வாழ்த்துக்கள்.
வணாக்கம்
நல்ல பதிவு பதிவு இட்டவருக்கு இதயம் கனிந்த நன்றி
எத்தனை தான் கற்றாலும் நல்லறிவு பெறாவிடின் உண்மை அறிவே மிகும் என்பதை யோகி வேமனா மிக அழகாகப் பாடுகின்றார்
எலுக தோலு தெச்சி………… நலுபு நலுபே கானி தெலுபுக்கு ராது என்பதே அச்செய்யுள்
வேமன யோகீயின் முழு பத்யங்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்து அதன் பொருளையும் தருவீர்களா.
அன்புடன்
நந்திதா
வாமனா, சர்வஞ்ஞர் ஆகியோரின் நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளனவா ? முடிந்தால் தெர்விக்கவும்.
குருசரண் அவர்கள் செய்த திருக்குறளின் தெலுங்கு மொழிபெயர்ப்பு ஒரு பிரதி என்னிடம் உள்ளது