அக்கரைப் பச்சை

சமீபத்தில் சிகாகோ நகரின் உள்ளூர் செய்தி பத்திரிக்கை ஒன்றை பார்க்க நேர்ந்தது. அது இந்தியர்களுக்காக இந்தியர்களால் வெளியிடப்படும் பத்திரிக்கை. முதல் பக்கத்தில் அமெரிக்காவிற்கு வந்து வெற்றியடைந்த பிரபலமான இந்தியர்களைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதில் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண் தொழிலதிபர்களும் இடம் பெற்றிருந்தார்கள். பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு மனிதரின் பின்புலத்தைப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து அமெரிக்காவிற்கு கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி வந்து முன்னேறியவர்களாகவே இருந்தார்கள்.

Non resident Indiansஇவர்களெல்லாம் வெற்றி அடைந்தவர்கள். இவர்களைப்போல எத்தனையோ பேர் அமெரிக்கா போன்ற வளமான வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்து வெற்றி பெற்று சாதித்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக வாழ்க்கையில் முயற்சி செய்து, வாய்ப்புகளை தேடி பிடித்து வெளிநாடுகளை அடைந்து, எதாவது சில காரணங்களால் தோல்வி அடைந்தவர்கள் எவ்வளவோ பேர். ஏன் இதை சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், வாழ்க்கையில் வெற்றிகளிலிருந்து உற்சாகத்தையும் தோல்வியிலிருந்து அனுபவ பாடத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்தானே!

நான் படித்துக் கொண்டிருந்த அதே பத்திரிகையில் வேறொரு பக்கத்தில் ஒரு இந்திய இளைஞரைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்கள். திருமணமாகாதவர். அவர் அமெரிக்காவின் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ஏதோ எதிர்பாராத காரணத்தில் வேலை இழக்கவும், அந்த கவலையில் மனமொடிந்து போயிருக்கிறார். இந்தியாவிலிருந்து அவரது பெற்றோர் திரும்பி வரச்சொல்லி கேட்டும் அவர் அதற்கு இசையவில்லை. தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க இயலவில்லை. நண்பர்கள் யாரும் உதவாததால் நகர வீதிகளில் தங்கியிருந்திருக்கிறார். ஒரு நாள் மிகவும் மனம் ஒடிந்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தோல்வியும் மரணமும் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றியும், அவரைப் போன்ற இளைஞர்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றியும் சில கேள்விகளை எழுப்புவதாக அந்த செய்தி கூறியது.

ஒருவர் வெளிநாடு சென்று வாழ்கிறார் என்றால் அவரது வீட்டிலிருப்பவர்களும், சொந்தங்களும் அவரை எப்படி அணுகுகிறார்கள்? அவரது சொந்த நாட்டில் சமூகத்தில் எப்படி அவரை நினைக்கிறார்கள்? வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்காக வருபவர்களுக்கும், குடியேற நினைத்து வருபவர்களுக்கும் ஏற்படும் பொதுவான அனுபவங்களும் சவால்களும் என்ன? வாழ்க்கை தரத்தை உயர்த்த எண்ணி வெளிநாடு வருபவர்கள் எந்த வகையான எண்ண ஓட்டத்தை (attitude) கொண்டிருப்பது வெற்றியை தரும்? இவையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் பிரமிக்கத் தக்கதாக இருக்கும்.

சென்னையில் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் வயதான பெற்றோர் தமது பெண்ணையும் வெளிநாட்டில் மணமுடித்து, பையனையும் வெளிநாட்டில் மனைவியுடன் அனுப்பி வைத்து விட்டார்கள். ஒரு நாள் இரவு, அந்த வீட்டு பெரியவருக்கு நெஞ்சு வலி வர, பக்கத்தில் மகனோ மகளோ யாரும் இல்லாமல் அனாதையாக அவர்கள் படும் கஷ்டம் பாவமாக இருந்தது. அவர்கள் பெற்ற குழந்தைகளால் அதன் பிறகு அடுத்த பல நாட்களுக்கு மணிக்கணக்காக தொலைபேசியில் பேசத்தான் முடிந்தது.

இன்னொரு வீட்டில் வெளிநாட்டில் இருக்கும் அந்த வீட்டு பெண்ணுக்கு பிரசவம் என்பதால் பெற்றோர் இருவரும் வெளிநாடு சென்றார்கள். சில நாட்களில் பெண்ணின் தந்தை மட்டும் திரும்பி விட பெண்ணின் தாயார் பெண்ணுடனேயே தங்க நேரிட்டது. அந்த குடும்பத்தில் இதனால் பல சிக்கல்களும், கஷ்ட நஷ்டங்களும் ஏற்பட்டது. வெளிநாட்டில் இருப்பதில் முதல் கஷ்டமே பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உறவும், ஆதரவும் பாதிக்கப் படுவதுதான்.

இந்த சம்பவங்களை பார்க்கும் போது எதுவும் சரி என்றோ தவறு என்றோ சொல்வதற்கு இல்லை – ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும், வெளிநாட்டில் இருக்கவும் விரும்புகிறார்கள், இந்தியாவிலிருப்பது போன்ற பெற்றோருடன், உறவினர்களுடன் சேர்ந்த வாழ்க்கைக்கும் ஆசைப்படுகிறார்கள் – இது வட்டத்துக்குள் சதுரத்தை அடைக்க முயற்சிப்பதாகவே எனக்கு தோன்றுவது உண்டு.

பொதுவாக செய்திகளில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண்ணைக் கொடுத்து ஏமாற்றப்பட்டதாக செய்திகள் வருவதுண்டு. இதற்கு மறுபக்கமும் உண்டு. தற்காலத்தில் சரியாக விசாரிக்காமல் செய்தித் தாளிலும், வலை மனைகளிலும் வரன்களை பார்த்து மணமுடித்து, பிறகுதான் பெண் வீட்டில் பெண்ணின் வயதிலிரிந்து, படிப்பு முதலான பல வற்றில் சகட்டு மேனிக்கு பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் உண்டு.

வெளிநாட்டில் வாழ்வதில் பிள்ளைகளை வளர்ப்பதிலும் பல எதிர்பாராத சவால்கள் உண்டு. இங்கே நாங்கள் இருக்கும் பகுதியில் புதிதாக ஒரு தமிழர் குடி வந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை – நான்கு வயதிருக்கும் – அந்த பிள்ளை வாயை திறந்து ஒரு வார்த்தை பேசமாட்டான் – காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்கு போய் விட – காப்பகத்தில் (Day care) குழந்தை இருக்க – அந்த குழந்தையுடன் பேச ஆளில்லாமல் அது பேசவே கற்றுக்கொள்ள வில்லை. இது ஏதோ ஒரு விதி விலக்கான நிகழ்ச்சி என்று நினைத்தேன் – இதே போல இன்னொரு நண்பரின் குடும்பத்தையும் காண நேரிட்டது – அன்றுதான் குழந்தைகளை வெளிநாட்டில் வளர்ப்பதில் சிக்கலை உணர்ந்தேன்.

பெண் குழந்தைகளை வெளிநாட்டில் வளர்ப்பதை பல பெற்றோரும் விரும்புவதே இல்லை. நிறைய பேர் இதற்காக வாய்ப்புகளை எல்லாம் துறந்து தாய் நாட்டிற்கு திரும்பி விடுவது உண்டு. வாய்ப்புகளுக்காக குழந்தைகளையும் இந்தியாவிலேயே விட்டு பிரிந்திருப்பவர்களும் உண்டு. இளம் வயதிலேயே காதல், திருமணம், விவாகரத்து என்று வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளுமோ என்ற பயமே காரணம்.

நமது சமூகத்தில் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) என்றாலே அவர் வெறும் கோழையாக, சுயநல வாதியாக, சமூகப் பொறுப்பற்றவராக இருப்பார் என்கிற வகையில் மறைந்த பெரும் எழுத்தாளர் சுஜாதாவிலிருந்து, ‘கற்றது தமிழ்’ படம் எடுத்த இயக்குனர் போன்றோர் வரை ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் உள்ளூரில் வாழ்க்கை நடத்துபவர்களை விட, வெளிநாடுகளில் வாழ்ந்து அதன் சவால்களும் சங்கடங்களும் அனுபவித்து வெற்றி அடைந்தவர்கள், மன உறுதி, செயல் திறன், தைரியம், பொறுமை என்று பலவற்றிலும் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளூரிலேயே இருப்பவர்களைப் போல் ஆட்டோ ட்ரைவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் வம்புக்கு போகாமல் கேட்ட காசை கொடுத்து பிரச்னையை என்.ஆர்.ஐக்கள் முடித்துக்கொள்ளுவது உண்மைதான் – இவர்களிடமெல்லாம் சண்டைக்குப் போய் உரிமை நிலைநாட்டுவதில்லை என்பதால் அவர்கள் கோழைகள், பொறுப்பற்றவர்கள் என்ற அர்த்தம் இல்லை.

படித்த, தொழில் திறமை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் நிறைய வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய சம்பாதிக்கவும், சாதிக்கவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் முடிகிறது. நிறைய பேருக்கும் உதவவும் முடிகிறது. அதனால் நிம்மதி இல்லாமல் இல்லை. வாழ்க்கை வாழ்ந்த திருப்தியும், நிம்மதியும் கிடைத்தவர்கள் நிறையவே வெளிநாட்டில் இருக்கிறார்கள். இதில் அடிப்படையான விஷயம் என்னவெனில், தாய் நாட்டில் வாழ்வதை விட பல மடங்கு சவால்களும், சாதனைகளும் வெளிநாட்டில் சந்திக்க நேரிடும் – அதற்குரிய மனப்பக்குவம் உள்ளவர்களே வெற்றி அடைய முடியும் என்பதே.

10 Replies to “அக்கரைப் பச்சை”

 1. ஒரு சிக்கலான கேள்வியை எடுத்துக் கொண்டு அதனைப் பல கோணங்களிலும் அணுகியிருக்கிறீர்கள். நல்ல பதிவு ஸ்ரீகாந்த்.

 2. சரியாகச் சொன்னீர்கள், இது மட்டுமல்ல, அந்த சுஜாதாவிலிருந்து, இந்த இயக்குனர் வரையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதே வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை சார்வதை குறித்து வெட்கப்படுவதில்லை. அவர்களின் பணமோ, திறமையோ நம் நாட்டிற்கு செய்யும் , செய்யப்போகும் நன்மைகளை மறுப்பதில்லை. என்ன ஒரு வெளிவேஷம், ஹிப்போகரஸி (சொல்மாறாட்டம் அ/ எண்ணமாறாட்டம்) ?

 3. ஸ்ரீகாந்த் ஐயா,

  தங்களின் NRI கட்டுரையில் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு தெளிவாக தெரிய மாட்டேன் என்கிறது.

  தயை செய்து என் கீழ்க்கண்ட சந்தேகங்களை தெளிவியுங்கள்.

  1. வெளிநாட்டில் இருக்கும் பல கஷ்டங்களைச்சொல்கிறீர்கள். வெளிநாட்டுக்கு போகலாமா வேண்டாமா?

  2. வெளிநாட்டுக்கு போய் பணம் பார்த்தவர்கள் ஜெயித்தவர்கள் என்கிறீர்கள். அப்படி என்றால் மற்றவர்கள் தோற்றவர்களா?

  3. NRI கோழையாக இருப்பான் என்று யோரோ சொன்னதாக சொல்கிறீர்கள். ஆனால், நீங்களே ஒரு தற்கொலை உதாரணம் கொடுக்கிறீர்கள். இது கோழைத்தனம் இல்லையா.

  4. இந்த கோழைத்தனத்துக்கு உதாரணமாக நீங்கள் ஆட்டோக்கு பேரம் பேச மாட்டார்கள் என்று சொல்கிறீர்கள். (ஆனால், இதுவும் சரியல்ல. அமெரிக்கவாழ் nri க்கும் வளைகுடா nri க்கும் வித்தியாசம் உண்டு.) அதுதான் கோழைக்கான ஆதாரமா?

  5. வெளிநாட்டில் பல மடங்கு சவால்கள் இருக்கிறது என்று முடிக்கிறீர்கள். இந்தியாவில் வாழ்ந்து ஜெயிப்பது தான் சவாலானது என்று பலர் (நானும் கூட) நினைக்கிறார்களே. நீங்கள் அதை ஏன் மறுக்கிறீர்கள்.

  6. வெளிநாட்டில் பல மடங்கு சவால்கள் இருக்கிறது என்று முடிக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையானால், வெளிநாடு போக ஏன் அடித்துக்கொள்கிறார்கள்.

  தயை செய்து இதை விளக்குங்கள் ஐயா

  நன்றி

  ஜயராமன்

 4. ஜயராமன் அவர்களே: நல்ல கேள்விகள்.

  ஸ்ரீகாந்த் அவர்கள் தீர்வு சொல்வதற்காக எழுதவில்லை என்று தோன்றுகிறது, வெளிநாட்டில் வாழும், வேலை செய்யும் இந்தியர்களைப் பற்றி ஆராயும் போது, பல கோணங்களையும் ஆராய்வது நல்லது என்கிற கருத்தை தெரிவிக்க விரும்பினார் என்று தோன்றுகிறது. “வெளிநாட்டிற்கு போய்விட்டார் என்பதால் ஒருவர் பெரியவர், புத்திசாலி, பண்பாளர் என்றோ இல்லை அதற்கு நேர் மாறாகவோ அவசரப்பட்டு தீர்மானித்து விடாதீர்கள்” என்று சில சம்பவங்களைக் கொடுத்து வலியுறுத்துகிறார் என்றே தோன்றுகிறது.

  முன்னாளில் வேலை கிடைக்காதவர்கள் பாம்பே, டெல்லி என்று போனதைப் போலத்தான் வெளிநாடு போவதும். சரி, சரி, சில பல வித்தியாசங்கள் கண்டிப்பாக உண்டு. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தான் பிறந்த, பழகிய இடத்தை விட்டு விட்டு, வேறு வித பழக்கம், மொழி, உணவு (மற்றும் கலாச்சாரம்) உள்ள இடத்திற்கு சென்று அங்கு படித்து இல்லை வேலை தேடிக்கொண்டு, குடுமபத்தையும் பேணி வளர்ப்பதில் இரண்டுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு.

  அவர்கள் காணும் சவால்கள் தமிழ்நாட்டிலேயே உள்ள தமிழர்கள் சந்திக்கும் சவால்களை விட பெரியதா இல்லை சிறியதா, அற்பமானதா, என்பதெல்லாம் என் கருத்தில் வேண்டாத ஒப்பு நோக்குதல். அனாவசிய சர்ச்சை.

  என் தாயார் இந்தியாவில் இருந்தவரை ‘வெளிநாட்ல எல்லாத்துக்கும் மெஷின், நம்ப ஹாயா உக்காந்து பொழுத ஓட்டலாம்’ என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் அங்கே போய் இருந்த ஒரு ஆறு மாதத்தில், ‘உங்களுக்கு ஒரு கோயில் வச்சு கும்பிடணும்மா, நித்தியம் ராத்திரி பதினோரு மணிவரை நீங்க ஓடுற ஓட்டம், தமிழ்நாட்டுல கூட இவ்ளவு வேலை இல்லடியம்மா’ என்று சொன்னது மட்டுமில்லாமல், ஊரிலும் திரும்பி வந்து எல்லாரிடமும் சொல்லி அவர்கள் எண்ணத்தையும் தன்னையறியாமல் (கொஞ்சமாவது) மாற்றினார்.

 5. மனோ ஐயா,

  என் கருத்துக்கு மதிப்பளித்து பதில் கொடுத்ததற்கு நன்றி.

  நீங்கள் சொன்ன பெரும்பாலான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.

  ஆனால், இந்த கட்டுரையில் சில முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவே எனக்குத்தோன்றுகிறது. உதாரணமாக…. /// இதில் அடிப்படையான விஷயம் என்னவெனில், தாய் நாட்டில் வாழ்வதை விட பல மடங்கு சவால்களும், சாதனைகளும் வெளிநாட்டில் சந்திக்க நேரிடும் – அதற்குரிய மனப்பக்குவம் உள்ளவர்களே வெற்றி அடைய முடியும் என்பதே. ///

  இது மாதிரி கருத்துக்களை நான் மேலும் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். என் பார்வையில் இந்தியாவில் வாழும் இந்தியர்களின் சவால்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை விட அதிகம். குழந்தை படிப்பிற்காக இரவு முழுக்க பள்ளிக்கூட வாயிலில் படுத்துக்கிடப்பது ஆகட்டும், எல்லோர் கால் கையை பிடித்து லஞ்சம் கொடுத்து மின்சாரம், லைசன்ஸ், வாடகைக்கு வீடு, ரேஷன் கார்டு பெறுவதில் ஆகட்டும், மின்சாரம்,தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ்க்கையை வாழ்வதாகட்டும், இங்கிருக்கும் அதீதமான போட்டிக்கு குழந்தைகளை குடும்பமே தயார் செய்யும் ஆயுட்கால போராட்டமாகட்டும், ஏமாற்றும் வணிகர் கூட்டம் முதல் ஆட்டோக்காரர்கள் வரை போராடுவதாகட்டும், பெண்களுக்கு இருக்கும் அபாயங்களாகட்டும், வேலைப்பிரச்சனையாகட்டும், வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காத ஒரு நிலையற்ற தன்மையாகட்டும் – யோசித்துப்பாருங்கள், இந்தியாவின் நிலைமையை.

  இந்த இடத்தில் நான் பத்து வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தவன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

  அதனால், இந்த கட்டுரை வெறும் பல்வேறு பரிமாணங்களை பட்டியல் இடுவதில்லை. அதில் சில கருத்துக்களை முன்வைக்கிறது. அதற்கான தெளிவை நான் ஆசிரியரிடம் கேட்டேன்.

  நன்றி

  ஜயராமன்

 6. அன்புள்ள ஜயராமன்,

  நீங்கள் வளைகுடா நாடுகளில் இருந்தது எனக்கு தெரியும். வெளிநாடு வாழ்க்கையைப் பற்றி புதியதாக ஒரு புரிதலை உங்களைப் போன்றவர்களிடம் ஏற்படுத்த நான் நினைக்கவில்லை. இந்த கட்டுரை வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றிய விளக்கமோ, தீர்வுகளோ, முடிவுகளோ இல்லாமல் எனது பார்வையாக எழுதவே தொடங்கினேன்.

  வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள சிக்கல்களை கேள்விப்பட்டு யாரும் போகாமல் இருக்கப் போவதில்லை. போகலாமா கூடாதா என்பதற்கு வேறு பல காரணிகள், உதாரணத்திற்கு, படித்த படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பு, பொருள் ஈட்ட வாய்ப்புகள் போன்றவை இருக்கின்றன. பணம் சம்பாதிப்பதன் மூலம் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார்கள் – வெளிநாடு சென்று பணமும் சம்பாதித்தாலும் வாழ்க்கையின் மற்ற சில விஷயங்களை தொலைத்து விடுகிறார்கள். அதனால் ஒருவர் தன்னுடைய முயற்சி வெற்றி அடைந்ததா இல்லையா என்பது அவரவருக்கே தெரியக் கூடியது.

  சொந்த ஊருக்கு திரும்பும் NRI-க்களிடம், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட காசை வீசி கஷ்டத்தை தவிர்த்து விடலாம் என்கிற போக்கு ஒரு வகையில் கோழைத்தனம், சமுகப் பொறுப்பற்ற தன்மை என்கிற ஒரு கருத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்கள். எல்லா NRI-க்களும் அப்படி அல்ல – மேலும் அதை அந்த கோணத்தில் மட்டும் பார்க்க தேவை இல்லை என்பதே என் எண்ணம்.

  உங்களின் மற்ற கேள்விகள், தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனமா?, பல கஷ்ட நஷ்டங்கள் சவால்கள் இருக்கும்போது ஏன் அங்கே போக அடித்துக் கொள்கிறார்கள்?, நிறைய சவால் இந்தியாவிலா, வெளிநாட்டிலா, அப்படியானால் எந்த வெளிநாட்டில் சவால் அதிகம்? போன்ற கேள்விகளை இதைப் படிக்கிற மற்ற பேரிடம் விட்டு விடுகிறேன் 🙂

  அன்புடன்
  ஸ்ரீகாந்த்

 7. உண்மைக்கு புறம்பான ஊடகங்களின் பார்வையை தவிர்த்து பார்த்தால் தெரியும் நிஜம்.

  சொந்த பந்தங்களை தொலைத்து விட்டு, சொந்த முகத்தில் இருந்து அன்னியப்பட்டு வெளிநாட்டில் உழைப்பதற்கு காரணம் – பெருகி வரும் சென்னை மற்றும் இதர நகரங்களின் விலை உயர்ந்த பங்களா களின் நடுவில் ஒரு குடிசை கட்டவும் & தனது அடுத்த சந்ததி உயரவும் தான். அதன் பலனும் சரி வலியும் சரி – அனுபவதிர்க்களுக்கு தான் புரியும்.

  This is a compromoise for the next generation !!!

 8. திரு ஜயராமன் அவர்களுக்கு:

  இந்தியாவில் வாழ்ந்து, வேலை செய்து, குடும்பத்தை வளர்ப்பவர் ஒவ்வொருவரும் உங்கள் கூற்றை 120 சதமானம் ஒப்புக்கொள்வார் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் சவால்கள் ஏராளம் தான்.

  ஆனால் முக்கால்வாசி அல்லது அதற்குமேல் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களும், இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே போராடி, படிப் படியாக முன்னேறி, பின் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர் என்பதும் பெரிய கருத்து வேறுபாடு இல்லாமல் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

  ஒரு சிலர் வேண்டுமானால் கணிணித்துறையின் வளர்ச்சியாலோ வேறு காரணங்களாலோ தகுதி இல்லாமல் இருந்தும் கடல் கடந்து போயிருக்கக்கூடும்.

  அப்படி முயன்று வாழ்க்கையில் சந்தர்ப்பங்களை உபயோகித்து வெளிநாடு போனவர்களை வெளியே போனவுடன் ‘அவனுக்கென்னப்பா, அவன் பாடு கொண்டாட்டம்’ என்று (லேசாகவானாலும்) ஒரு விதமான பொறாமைக் கண்ணால் இளக்காரமாக பார்ப்பது / பேசுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று தோன்றுகிறது. அதுவும் அப்படி சொல்பவர்களே தங்கள் பிள்ளைகளையும், தங்களை சேர்ந்தவர்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பினால், அதை எப்படி மனம் ஒப்புக்கொள்ளும் ?

  நம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வெளியில் இருப்பவனெல்லாம் சுகவாசி, நானே எல்லா விதமான சவால்களையும் சந்திக்கிறேன், என்னுடைய சவால்களே பெரிது என்பது போன்ற எண்ணங்களை, பலவிதமான ஏற்றத் தாழ்வுகள் உள்ள, ஏற்றத் தாழ்வுகள் மாற வேண்டி கடுமையாக உழைக்கின்ற, வேகமாக பொருளாதார ரீதியில் முன்னேறத் துடிக்கும் இந்திய நாட்டு மக்களுக்கு தேவையல்ல என்பதே என் எண்ணம்.

  இந்தமாதிரி எண்ணத்தை முளையிலேயே கிள்ளவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் தான் மிஞ்சும்.

  சூழ்நிலையால் கிராமத்தில் தங்கிவிட்டவன் நகரத்தாரையும், நகரத்தில் ஏழைக் குப்பத்தில் வேலையில்லாது உள்ளவன் படித்து உத்தியோகம் பார்ப்பவனையும், கடுமையான வெய்யிலில் சாலை போடுகிறவன் பேருந்தில் போகிறவனையும், பேருந்தில் போகிறவன் ஆட்டோ, கால் டாக்ஸியில் போகின்றவரையும், தென்னிந்தியாவில் அவதிப்படுபவன், மும்பை, கல்கத்தா என்று போய் முன்னேறியவனையும் பார்த்து ‘அவனுக் கென்னப்பா ஷோக்காகீறான், இங்க இருந்து அவதிப் பட்டாத்தானே தெரியும்’ என்று எண்ண எண்ண, கூறக் கூற, தன் தரத்தை, தகுதியை, ஏன் திறமையையும் தானே குறைத்துக் கொள்வதாகத் தான் படுகிறது….

  நீங்கள் குறிப்பிட்ட பல சவால்களும் நாமே நமக்காக ஏற்படுத்திக் கொண்டவை. கணக்கில்லாமல் பிள்ளைகளைப் பெற்றோம். கூட்டமாக நகரங்களுக்கு (சென்னை) வந்தோம். சென்னையிலும் (எந்த நகரத்திலும்) பரந்து விரிந்து வாழாமல் ஒரு குறிப்பிட்ட சதுர எல்லைக்குள் வாழத்துடிக்கிறோம். அடிப்படை வசதிகள் முன்னேறாமல் ஆசைகள் மட்டும் படு வேகமாக முன்னேற அனுமதித்துள்ளோம். கடனுக்கு எல்லா பொருட்களையும் வாங்கும் வெளிநாட்டு பழக்கத்தை ஆர்வமாக பின்பற்றுகிறோம். வெளிநாட்டு கலாச்சாரமான (இது ஒரு கலாச்சாரமா என கேட்கக்கூடிய) பழக்கங்களை இறக்குமதி செய்து (வாலண்டைன் டே, தாய் நாள், தந்தை நாள்) பித்துக்குளித்தனமாக பின்பற்றுகிறோம். வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் போட்டிபோட்டு ஒழுக்கமின்மையை பறைசாற்றும் நம் நாட்டு நிகழ்ச்சிகளை விழுந்து விழுந்து பார்க்கிறோம், இதையெல்லாம் செய்து கொண்டே இந்திய வெளிநாட்டு வாசியை சாடுகிறோம். பின்னர் நம் வீட்டுப் பையன் எப்போது விமானம் ஏறுவான் என்று கனவும் காண்கிறோம்.

 9. மனோ ஐயா,

  தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி.

  //// இந்தியாவில் வாழ்ந்து, வேலை செய்து, குடும்பத்தை வளர்ப்பவர் ஒவ்வொருவரும் உங்கள் கூற்றை 120 சதமானம் ஒப்புக்கொள்வார் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் சவால்கள் ஏராளம் தான்.

  ஆனால் முக்கால்வாசி அல்லது அதற்குமேல் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களும், இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே போராடி, படிப் படியாக முன்னேறி, பின் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர் என்பதும் பெரிய கருத்து வேறுபாடு இல்லாமல் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன். ///

  இந்தியாவில் சவால்கள் ஏராளம். அதனால், எப்படியாவது கஷ்டப்பட்டு வெளிநாடு போக வேண்டும் என்று முயல்கிறார்கள். இதற்கு போட்டி அதிகமாய் இருக்கிறது. அதனால், வெளிநாடு போவதும் சவாலாய் இருக்கிறது.

  ஆனால், நான் கேட்கவந்தது வெளிநாட்டில் இருக்கும் சவால்கள் என்ன? அது இந்தியாவை விட கடினமானது என்று எப்படிச்சொல்கிறீர்கள்?

  /// ஒரு சிலர் வேண்டுமானால் கணிணித்துறையின் வளர்ச்சியாலோ வேறு காரணங்களாலோ தகுதி இல்லாமல் இருந்தும் கடல் கடந்து போயிருக்கக்கூடும். ///

  வெளிநாடு போகிறவர்கள் தகுதியானவர்களா, தகுதி இல்லாதவர்களா என்பது இங்கே கேள்வி இல்லை.

  இரண்டு தரப்பினரும் வெளிநாடு போகத்தான் செய்கிறார்கள்.

  ஆனால், தகுதி இருந்து போனதால் அவன் அங்கே சுகப்படுகிறான் என்று ஏன் சொல்லக்கூடாது? தகுதி இல்லாமல் வெளிநாடு போனால் மட்டும் அவன் “ஷோக்கா கீறாம்பா” என்று சொல்லலாமா? வெளிநாடு வாழ் இந்தியர்களில் இம்மாதிரி இரண்டு பிரிவு இருக்கிறது. தகுதி இருந்து போனவர்கள் ஷோக்காக இருக்க மாட்டாராகளா? நீங்கள் குழப்புகிறீர்கள்

  /// அப்படி முயன்று வாழ்க்கையில் சந்தர்ப்பங்களை உபயோகித்து வெளிநாடு போனவர்களை வெளியே போனவுடன் ‘அவனுக்கென்னப்பா, அவன் பாடு கொண்டாட்டம்’ என்று (லேசாகவானாலும்) ஒரு விதமான பொறாமைக் கண்ணால் இளக்காரமாக பார்ப்பது / பேசுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று தோன்றுகிறது. ///

  அவன் பாடு கொண்டாட்டமா, திண்டாட்டமா என்பது தான் கேள்வி. அதற்கு நீங்கள் விளக்கம் கொடுங்கள் ஐயா.

  அவன் பாடு கொண்டாட்டம் தான் என்றால் அதை மற்றவர்கள் சொல்வதில் என்ன தவறு? அப்படிச் சொன்னால் தேசத்துக்கு என்ன கெடுதல் வந்துவிடும்? நீங்கள் சொல்வது வினோதமாய் இருக்கிறது.

  /// அதுவும் அப்படி சொல்பவர்களே தங்கள் பிள்ளைகளையும், தங்களை சேர்ந்தவர்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பினால், அதை எப்படி மனம் ஒப்புக்கொள்ளும் ? ///

  இதில் என்ன முரண்பாடு. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாடு கொண்டாட்டம் என்று சொல்பவர்கள் அந்த கொண்டாட்டத்தை தன் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று முயல்வதும், மகிழ்வதும் என்ன தவறு? ஏன் உங்கள் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது?

  /// நம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வெளியில் இருப்பவனெல்லாம் சுகவாசி, நானே எல்லா விதமான சவால்களையும் சந்திக்கிறேன், என்னுடைய சவால்களே பெரிது என்பது போன்ற எண்ணங்களை, பலவிதமான ஏற்றத் தாழ்வுகள் உள்ள, ஏற்றத் தாழ்வுகள் மாற வேண்டி கடுமையாக உழைக்கின்ற, வேகமாக பொருளாதார ரீதியில் முன்னேறத் துடிக்கும் இந்திய நாட்டு மக்களுக்கு தேவையல்ல என்பதே என் எண்ணம். ///

  நீங்கள் “தெளிவாக” குழப்புகிறீர்கள். இந்தியாவில் வசிப்பது, வெளிநாட்டில் வசிப்பதை விட கஷ்டமா இல்லையா என்பது கேள்வி. அது உண்மையாக இருந்தால் என்னுடைய சவால் பெரிது என்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது.

  வெளிநாடு போகிறவர்கள் எந்த விதத்தில் “ஏற்றத்தாழ்வுகள் நீங்க” உழைக்கிறார்கள். ஏதோ நாலு காசு பார்ப்போம், ஒரு வீடு வாங்குவோம் என்று போகிறார்கள். நீங்கள் சொல்வதைப்பார்த்தால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் சமூக புரட்சியாளர்கள் போல இருக்கிறதே!

  வெளிநாட்டில் வாழ் இந்தியர்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கிறது? இந்திய வாழ் இந்தியர்களை விட எந்த விதத்தில் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லாமல் மீண்டும் மீண்டும் இந்திய வாழ் இந்தியர்களை வசை பாடுவானேன்.

  /// இந்தமாதிரி எண்ணத்தை முளையிலேயே கிள்ளவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் தான் மிஞ்சும். ///

  யாருக்கு? இந்தியாவில் திண்டாட்டம் என்று ஒருத்தன் நினத்தால் அது வெளிநாட்டு இந்தியர்களுக்கு “வெறுப்பும், வேதனையும்” தருமா? அது மாதிரி அந்த வெளிநாடு வாழ் இந்தியன் ஆரம்பத்தில் நினைத்துத்தானே வெளிநாடு போக முயற்சித்தான்.

  ஐயா, நான் மீண்டும் கேட்கிறேன். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என்ன அதிகப்படியான கஷ்டம் இருக்கிறது?

  /// சூழ்நிலையால் கிராமத்தில் தங்கிவிட்டவன் நகரத்தாரையும், நகரத்தில் ஏழைக் குப்பத்தில் வேலையில்லாது உள்ளவன் படித்து உத்தியோகம் பார்ப்பவனையும், கடுமையான வெய்யிலில் சாலை போடுகிறவன் பேருந்தில் போகிறவனையும், பேருந்தில் போகிறவன் ஆட்டோ, கால் டாக்ஸியில் போகின்றவரையும், தென்னிந்தியாவில் அவதிப்படுபவன், மும்பை, கல்கத்தா என்று போய் முன்னேறியவனையும் பார்த்து ‘அவனுக் கென்னப்பா ஷோக்காகீறான், இங்க இருந்து அவதிப் பட்டாத்தானே தெரியும்’ என்று எண்ண எண்ண, கூறக் கூற, தன் தரத்தை, தகுதியை, ஏன் திறமையையும் தானே குறைத்துக் கொள்வதாகத் தான் படுகிறது…. ///

  மறுபடியும் குழப்புகிறீர்கள். நீங்கள் சொன்ன எல்லோரும் மற்றவர்களை விட “ஷோக்காகீற”வர்களா இல்லையா? அது உண்மையானால், அவர்கள் சொல்வதில் என்ன தவறு? அப்படி உண்மையை சொல்வதால், அவர்கள் தரமும், திறமையும் எப்படி குறையும்?

  மறுபடியும் கேட்கிறேன். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என்ன அதிகமான கஷ்டங்கள் இருக்கின்றன? இதற்கு நேரடி பதில் தாருங்கள். அதை விடுத்து இந்திய வாழ் இந்தியர்களுக்கு சாபம் / வசை இடாதீர்கள்.

  /// நீங்கள் குறிப்பிட்ட பல சவால்களும் நாமே நமக்காக ஏற்படுத்திக் கொண்டவை. கணக்கில்லாமல் பிள்ளைகளைப் பெற்றோம். கூட்டமாக நகரங்களுக்கு (சென்னை) வந்தோம். சென்னையிலும் (எந்த நகரத்திலும்) பரந்து விரிந்து வாழாமல் ஒரு குறிப்பிட்ட சதுர எல்லைக்குள் வாழத்துடிக்கிறோம். ///

  எதனால் கஷ்டம் என்பதா இங்கு பேச்சு? கஷ்டமா இல்லையா என்பதுதானே பேச்சு? வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும் இந்த காரணிகளுக்கு பொறுப்பு இல்லையா? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  /// அடிப்படை வசதிகள் முன்னேறாமல் ஆசைகள் மட்டும் படு வேகமாக முன்னேற அனுமதித்துள்ளோம். கடனுக்கு எல்லா பொருட்களையும் வாங்கும் வெளிநாட்டு பழக்கத்தை ஆர்வமாக பின்பற்றுகிறோம். வெளிநாட்டு கலாச்சாரமான (இது ஒரு கலாச்சாரமா என கேட்கக்கூடிய) பழக்கங்களை இறக்குமதி செய்து (வாலண்டைன் டே, தாய் நாள், தந்தை நாள்) பித்துக்குளித்தனமாக பின்பற்றுகிறோம். வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் போட்டிபோட்டு ஒழுக்கமின்மையை பறைசாற்றும் நம் நாட்டு நிகழ்ச்சிகளை விழுந்து விழுந்து பார்க்கிறோம், ////

  மாச பட்ஜெட்டை ஒவ்வொரு மாதமும் ஒப்பேற்ற கஷ்டப்படும் அதே சமயம் எல்லாவற்றிலும் லஞ்சம், விலைவாசி என்று கஷ்டப்படும் ஒரு சமூகத்தை பார்த்து வேலண்டைன் கொண்டாடுவதால் இந்த கஷ்டங்கள் வந்திருக்கிறது என்கிறீர்களே. இதைப்படித்து அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை? தொலைக்காட்சியில் “சம்பூர்ண ராமாயணம்” பார்த்தால் கிரசின் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா? புரியவில்லையே! கையில் காசில்லா விட்டால் கடனுக்குத்தானே ஐயா வாங்க வேண்டும். குழந்தைகள் படிப்புக்கும், புத்தகங்களுக்கும் பின் என்ன செய்வது?

  /// இதையெல்லாம் செய்து கொண்டே இந்திய வெளிநாட்டு வாசியை சாடுகிறோம்.
  பின்னர் நம் வீட்டுப் பையன் எப்போது விமானம் ஏறுவான் என்று கனவும் காண்கிறோம். ///

  “சாடுவோம்” என்பது என்ன? நீங்கள் செய்வதா? அல்லது, வெளிநாட்டில் ஷோக்காகீறான் என்று சொல்வதா? விளக்குங்களேன்.

  நன்றி

  ஜயராமன்

 10. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் வாழ்பவர்களைவிட கஷ்டம் குறைவு என்பது எனது அபிப்ராயம். பெரும்பான்மையானோருக்கு கம்பெனி செலவிலேயே கார், பெட்ரோல் மற்றும் வாகன பராமரிப்பு, வீட்டு வாடகை மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா செல்ல பயண சீட்டு என எல்லாமே கிடைத்துவிடுகிறது. நாம் பேசுவது படித்த மக்கள் வேலைக்கு வெளிநாட்டுக்கு வருவதைப்பற்றி.

  மற்றபடி தற்போதைய இந்தியாவில் வாழ்வது என்பது சர்க்கஸ் காரனைவிட அதிக சாதுரியமும், அதிகபட்ச பொறுமையும், எந்த சூழ்நிலைக்கும் பழகிக்கொள்ளும் திறனும் தேவைப் படுகிறது என்பது எனது அபிப்ராயம். எனது சொந்தக்காரர் ஒருவர் கூறிய அறிவுரை உங்கள் கம்பெனியில் வெளியே செல் எனக்கூரும்வரை வெளியே வராதீர்கள் அதாவது இந்தியாவுக்கு. வெளிநாட்டுக்கு வந்த பின்னர் நரகத்தை அனுபவிப்பவர் குறைவாகவும், சொர்க்கத்தை அனுபவிப்பவர் அதிகமாகவும் இருக்கிறார்கள் என்பதும் எனது கருத்து. ஸ்ரீகாந்த் அய்யா அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். நல்லது. நான் தற்போது ஒரு மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிகிறேன், இது ஒரு தகவலுக்கு மட்டுமே ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *