அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]

னக்கு பத்து வயது இருக்கும் பொழுது பரவலாக எல்லாராலும் ‘காடி கானா வீடு’ என்று  அறியப்பட்ட வீட்டில் குடியிருந்தோம். உண்மையில் அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்றே எங்கள் யாருக்கும்  தெரியாது. சொல்லப் போனால் அதைப் பற்றி யாரும் யோசிக்க கூட இல்லை. அப்புறம் பல வருடங்கள்  கழித்து எனக்கு மணமாகி நான் வடக்கு பக்கம் போன பின்தான் அதற்கு ‘வண்டி நிறுத்தும் இடம்” என்று அர்த்தம் என்று தெரிந்து கொண்டேன். ஒடுக்கமாக வெகு நீண்டு இருந்த அந்த வீட்டின் அமைப்பை நினைத்துப் பார்க்கையில் அது ஒரு காலத்தில் மாட்டு வண்டி நிறுத்தும் இடமாகவும், பின் வந்த காலத்தில் மோட்டார் வண்டி நிறுத்தும் இடமாகவும் இருந்திருக்க கூடும் என்று ஊகிக்க முடிந்தது. ஒரு பெரிய பழைய அக்ரஹார வீட்டின் பக்க வாட்டில் இருந்த அந்த இடம், பின்னர் அந்த வீட்டினரின் பொருளாதார வீழ்ச்சியாலும், வளர்ந்து வருகிற ஒரு நெருக்கடி நிறைந்த ரெண்டும் கெட்டான் நகரத்தின் வாடகை வீட்டுத் தேவையாலும், வீடாக உரு மாற்றம் பெற்றிருக்க வேண்டும். வீடு என்ன பெரிய வீடு? ஒரு சிறிய ஹால், பின்னர் சமையலறை, அதற்கும் பின்னால் பாத் ரூம் வகையறா, ஒன்றன் பின் ஒன்றாக.

old-house-TNஆனால் ஒன்று எங்களைப் போன்ற பரிதாபத்துக்குரிய குடித்தனக் காரர்களின் மேல் தயை கூர்ந்து ,வீட்டுக்காரர்கள் ஒரு அழகான ஏற்பாடு செய்திருந்தார்கள். அதாவது அந்த வீட்டின் மிகப் பெரிய இரும்பு கேட்டிலிருந்து, வீடு ஒரு 25 அடி தூரம் உள் தள்ளி இருந்தது. அதில் கேட்டை ஒட்டி பத்து அடியை வெற்றிடமாக விட்டு பாக்கி இருந்த 15 அடிக்கு 10 அடி இடத்தில் தரையில் சிமெண்ட் தளம் பாவி,கருங்கல் தூண்கள் நட்டு.அடர்த்தியாக தென்னங்கீற்றுகூறை வேய்ந்து கொடுத்திருந்தார்கள். அந்த இடத்தை  நாங்கள் பர்ண சாலை என்றே அழைத்தோம். இப்போது யோசித்து பார்க்கையில் புழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தையை நாங்கள் எவளவு இயல்பாகவும், சரளமாகவும் உபயோகித்துக் கொண்டிருந்தோம் என்று ஒரு லேசான ஆச்சரியம் எற்படுகிறது. அதன் அமைப்பும், அழகும், சௌகர்யமும், குளிர்ச்சியும் அதன் பெயர்க் காரணத்தை நியாயப் படுத்தின.

அந்தப் பர்ண சாலைதான் எங்கள் நால்வருடைய விளையாட்டுக் கூடம், விவாத மேடை, வீட்டுப் பாடம் எழுதுகிற இடம் இன்னும் சண்டை போடுகிற இடம் இத்தியாதி இத்தியாதி இடம். அது எங்கள் வளர் இளம் பருவத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக இருந்தது.

நாங்கள் அது வரை குடியிருந்த இடங்கள் எல்லாம் எல்லா வகுப்ப்பினரும் வசிக்கிற, கீழ் ,மத்திய வர்க்க குடும்பங்கள் வசிக்கும் இருப்பிடமாகவே இருந்து வந்திருக்கின்றன. இதற்கு எங்கள் அப்பவின் கம்யூனிச சித்தந்தின் மேல் இருந்த ஈடுபாடு காரணமா, இல்லை பொருளாதார நெருக்கடிதான் காரணமா என்பதைப் பற்றி பல முறை விவாதித்து இரண்டாவதுதான் காரணம் என்ற முடிவுக்கு ஒவ்வொரு முறையும் வந்திருக்கிறோம்.

ஆனால் இந்த முறை நாங்கள் குடி வந்த வீடு  காடி கானா வீடு இருந்த தெரு ஒரு விதி விலக்காக சில மத்தியதர , வெகு சில மேல் தட்டு வர்க்கத்தவரையும் கொண்டிருந்தது.இடது புறம் வீட்டு சொந்தக்காரர்களின் அக்ரஹார வீடு, வலது புறம் ஒரு அழகான மஞ்சள்: நிற குட்டி பங்களா. எங்கள் வீட்டின் கூச்சலுக்கும், சத்ததுக்கும் ,குதூகலத்துக்கும்,சச்சரவுக்கும் முழு முரண் பாடாக அந்த பங்களா வீடு எப்போதும் அமைதியில் மூழ்கியிருக்கும்..

நாங்கள் பேசி விளையாடிக் கொண்டிருக்கையில் லேசாக நிழலாடுவது மாதிரி, எப்போதாவது இருக்கும்.திரும்பிப்பார்த்தால் அந்த வீட்டு மாமி  எங்களைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரித்து விட்டு நகர்ந்து விடுவாள்.

பார்த்த பத்து வினாடிக்குள் பேசுகிற, எல்லாரையும் பேச வைக்கிற அம்மாவுக்கு அந்த மாமி மிகப் பெரிய சவாலாக இருந்தாள்.

“என்ன மாமி, சமையலாச்சா?”

இன்ரைக்கு ஒரே புழுக்கம்,வெயில் தாங்கலை!”

“வேலைக்காரி வந்தாளா?”

என்ற மட்டத்துக்கான பேச்சின் நிலையை அடையவே மூணு மாதம் பிடித்தது. அனேகமாக பேச்சு அடுத்த மட்டத்தை எட்டும் பொழுது, மாமிக்கு ஏதாவது வேலை வந்து விடும். இந்த பேச்சு வார்த்தை எல்லாம் அந்த பர்ணசாலையை பார்த்த மாதிரி இருக்கும் அந்த வீட்டு சன்னல் மூலமாகத்தான்.

எங்கள் அம்மாவின் மூலமாகத்தான் தெரிந்தது, அந்த மாமிக்கு ஒரு பையன் இருக்கிறான் என்றும், அவன் ஏதோ மலைப் பிரதேச பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கிறான் என்றும்.

அந்த தெருவைச் சேர்ந்த எந்த வீட்டுக்கும் அந்த மாமி போனதில்லை, யாரும் அந்த வீட்டுக்குள் போயும் நாங்கள் பார்த்ததில்லை.

எங்கள் அம்மாவுடன் பேசுகிற அபூர்வ சந்தர்ப்பங்களிலும் அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.

இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை. பார்க்கப் போனால் எங்கள் அப்பா நாங்கள் செய்து கொண்டிருக்கிற எந்த காரியத்திலும் அவரும் கூட உற்சாகமாக கலந்து கொண்டு ஒரு இயல்பான தொடர்ச்சியாகவே போய்க்கொண்டிருக்கும்.

அம்மா சொல்லுவாள்- “அந்த ப்ராமணனைப் பாத்தாலே இப்பிடி நடுங்கறாளே” (அம்மாவுக்கு நடுத்தர வயதடைந்த எல்லா ஆண்களுமே ப்ராமணன் தான், அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி) இருக்கிற ஒரு பிள்ளையையும் ஹாஸ்டெலில் சேத்துட்டு, யாரோடையும் பேசாம கதவ அடைச்சிண்டு, ஜெயிலாட்டம் இருக்காளே! ப்ராமணன் வர்ற சத்தம் கேட்டாலே சப்த நாடியும் ஒடுங்கறதே அவளுக்கு” என்பாள்.

அந்த பையன் லீவுக்கு வரும் போது கூட வீடு அமைதியாகவே இருக்கும். அவர்கள் யாரும் ஒருவரொடு ஒருவர் பேசிக் கொள்ளவே மாட்டார்களா என்ற சந்தேகம் எங்கள் எல்லாருக்கும்.

குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி, அவர்களின் தேவைகள் எல்லாம் கவனிக்கப் பட்ட பிறகு, அனேகமாக எல்லா வீட்டு அம்மாக்களும் ஒரு சாயங்கால நேர சம்பாஷணைக்குத் தயாராவர்கள். எல்லாரும் அவரவர் வீட்டு வாசலில் நின்று கொண்டோ, அல்லது எந்த வீட்டு அம்மாவின் வம்பு அன்று சுவாரசியமாகப் படுகிறதோ, அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு விலை வாசி ஏற்றத்திலிருந்து அதிகமாகிக் கொண்டே வருகிற தண்ணீர் கஷ்டம் வரை இன்னும் என்னன்னவோ பேசுவார்கள். இடையில் அவரவர் வீட்டு ‘ ஆம்பிளை ஆளுக’ படுத்தற பாடும் தவறாமல் இடம் பெறும். தவிர லேட்டஸ்டாக அந்த ஏரியாவில் நடைபெற்ற வம்பும் அலசப் படும் (பின் தெருவில் ஒரு வீட்டு பெண் கார் மெக்கானிக்கோடு ஓடிப் போய் திரும்பி வந்த கதை உட்பட). இந்த மாதிரி சாயங்கால கூட்டத்துக்கு அந்த பக்கத்து வீட்டு மாமி வந்ததேயில்லை. பார்க்கப் போனால் அந்த மாமியை எங்கள் வீட்டினரைத் தவிர அந்த தெருவில் யாரும் இலை மறைவு காய் மறைவாகக் கூட பார்த்ததில்லை.

இதைத் தவிர கல்யாண மாதங்களில் வருகிற மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்கள், பக்கத்து பெருமாள் கோவில் உற்சவத்தின் போது வருகின்ற சாமி ஊர்வலங்கள் எல்லாவற்றுக்கும் தெருவே திரண்டு வேடிக்கைப் பார்க்கும் பொழுதும் அந்த மாமி வந்ததில்லை.

சாப்பிடும்பொழுதோ ,விளையாடும் பொழுதோ ரொம்ப அபூர்வமாக நாங்கள் பேசாமல் இருக்கிற தருணங்களில் ஒன்றில் நான் சொன்னேன் ”அந்த மாமி பாவம் இல்ல!!” அண்ணா சொன்னான் “போடி பாவமும் இல்ல  ஒண்ணும் இல்ல! பெரிய பங்களாவில இருங்காங்க. கார் வச்சுண்டு இருக்காங்க பையன் கான்வெண்டில படிக்கறான் ஊட்டியிலயோ எங்கயோ, நம்மளை மாதிரி கார்பரேஷன் ஸ்கூலா என்ன? ஜாலியாத்தான் இருக்காங்க. நாமதான் பாவம்!”

குழந்தைகளோ பெரியவர்களோ ,ஒரு விஷயத்தைப் பார்க்கும் பார்வையில், உணரும் விதத்தில்,ஒரு பெண்ணுக்கும்,ஆணுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு எடுத்துக் காட்டிய முதல் தருணம் அது என்று நினைக்கிறேன்.

இதற்கப்புறம் பல வீடுகள் மாறி (கின்னஸ் புத்தகத்தில் எங்கள் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்றே நம்பியிருந்தேன், “ஒரு வருடத்திற்குள் அதிகமாக வீடு மாற்றியவர்கள்” என்கிற ஒரு பிரிவில்) ”புமலர் இல்லம்” என்று எங்கள் நண்பர்களால் கேலியாக அழைக்கப்பட்ட வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.அது உண்மையில் “அன்பு மலர் இல்லம்” என்று பெயரிடப்பட்ட வீடு. அதில் சிமெண்டில் செய்யப்பட்ட ‘அ’ வும் ‘ன்’ ம் விழுந்து விட்டதால் புமலர் இல்லம் ஆகி விட்டது.

கீழ் வீட்டில் இரண்டு குடித்தனங்கள் ,மாடியில் இரண்டு (மாடியில் இருந்தவர்களைப் பற்றி இன்னொரு கதை தனியாகத் தான் சொல்ல வேண்டும்). எங்களோடு கிழே குடியிருந்த இன்னொரு குடித்தனம் கணவன்,மனைவி , மூன்று குழந்தைகள் உள்ளடங்கியது.

மாமா புத்திசாலி,பல விஷயங்களைப் பற்றிய அறிவும்,அதை மற்றவர்களிடம் சுவாரசியமாக பகிர்ந்து கொள்ளக் கூடிய வாசாலகமும் படைத்தவர். மாமி கொஞ்சம் சாது, அசடு என்றே பல சமயங்களில் நினைக்கத் தோன்றும்” மக்கு, மர்க்கடம்,மண்டு, முட்டாள்” என்று  பல சமயங்களில்  மாமாவால் விளிக்கப்படுபவள். தான் செய்த காரியத்துக்கு ,மாமாவுக்கு சால்ஜாப்பு சொல்லியே மாமி முகத்தில் ஒரு நிரந்தர அசட்டுக்களை. மற்றவரின் அனுதாபத்தையும், இரக்கத்தையும் எப்போதும் யாசித்தவாறே இருந்ததால் எப்போதும் ஒரு பரிதாபகரமான சிரிப்பு தங்கிய முகம். அவர்கள் வீட்டு சம்பாஷணைகள் பொதுவாக இந்த ரீதியில் இருக்கும் (நாங்கள் ஒட்டுக் கேட்க வேண்டும் என்று கேட்பதில்லை,இரண்டு வீட்டுக்கும் இடையில் இருந்த பலவீனமான ஒற்றைச் சுவர் எல்லவற்றையும் ரேடியொ நாடகம் மாதிரி ஒலி பரப்பும்)

“ எப்பவும் துணிக்கு போடற சோப்பு ஒரு மாசம் முழுக்க வருமே, இப்பொ ஏன் 20 நாளிலெ தீந்து போயிடுத்து?”-மாமா “அது இல்லேன்னா, இந்த தடவை என் தங்கை..” மாமியை முடிக்க விட மாட்டார்.

“முட்டாள்! கொஞ்சமாவது பொறுப்பு இருந்தாதானே!ஒத்தன் கஷ்டப் பட்டு சம்பாதிப்பதை இப்பிடியே கரியாக்கு!”

”ரண்டு தடைவைதானே சட்னிக்கு அரைச்செ! அதுக்குள்ள எப்பிடி பொட்டுக்கடலை காலியாச்சு”

“கால் கிலொ புளியை ஒரு மாசத்துக்குள்ளே காலி பண்ணி தூம்தாம் குடித்தனம் பண்றயே!என்ன வளத்திருக்கா உங்க அம்மா?”

20 எலுமிச்சை பழத்தை வாங்கி ஊறுகாய் போட்டயே, பூஞ்சக்காளான் பிடிச்சிருக்கு,அதைக் கூட ஒழுங்கா போட துப்பில்லை! வெயிலிலாவது

எடுத்து வைக்கணும் தோணவேயில்லையா?”

“அய்யொ!” கூடவே ஒரு சிரிப்பு,”மறந்து போயிடுத்து, இதோ இப்ப வக்கறேன்”

“முண்டமே! இப்பொ ஏது வெயில், சாயங்காலம் மணி அஞ்சு!! நாளைக்காவது எடுத்து வைச்சுத் தொலை!”

இதையெல்லாம் கேட்க கேட்க எங்கள் அம்மாவுக்கு கோபம் வரும்.” வாயில்லப் பூச்சியா ஒத்தி ஆப்டுண்டா போதும் ,என்ன பாடு படுத்தறான் இந்த பிராம்ணன்! இப்பவே போய் கேட்கறேன்” என்று கிளம்புவாள். நாங்கள் எல்லாம் காலில்,கையில் விழுந்து, இன்னொருத்தர் வீட்டு விஷயத்தில் தலையிடுவது தவறு என்று அம்மாவை அடக்கி வைப்போம்..

thenkuzhal-murukkuவாரத்துக்கு ஒரு நாள் எண்ணை சட்டியை அடுப்பில் வைத்து, தட்டை,தேங்குழல்,முறுக்கு என்று பண்ணுகிற அம்மா மாமியை கூப்பிட்டு பட்சணம் கொடுப்பாள், கொடுத்துவிட்டு சொல்லுவாள் ”நீ சாப்பிடு, குழந்தைகளுக்கு நிறைய கொடு, பாக்கி இருந்தா உங்க ஆத்துக்காரருக்கு கொடு, இல்லாட்டாலும் பரவால்ல!”

கிக்கிக்கி என்று ரொம்ப நேரம் சிரித்து விட்டு மாமி சொல்லுவாள்.

“ஆமா மாமி! நீங்க சொல்றது ரொம்ப கரக்ட்டு” சொல்லி முடித்து விட்டு திரும்பியும் சிரிப்பு.

“மாமி ,நான் கூட பட்சணம் பண்ணலாம்னு இருக்கேன்,அடுத்த வாரம்!” என்பாள்.

அம்மா உள்ளே வந்து “ஆமா சாதத்தையே பருக்கை பருக்கையா எண்ணி தர பிராம்ணணை வச்சுண்டு என்னத்த பட்சணம்,பாடி பண்ணப் போறாளோ?”

ஆனால் பல மாதங்கள் கழித்துஒரு ஞாயிற்றுக் கிழமை மாமா வீட்டில் இருக்கும் தினத்தில் அவர்கள் வீட்டிலிருந்து எண்ணை காயும் வாசனை வந்தது, எங்கள் வீட்டு ஞாயிற்றுக் கிழமை களேபரத்தில் அதை அத்தோடு மறந்து விட்டோம்.

இரண்டு,மூ ன்று நாள் கழித்து சாயங்கால வேளையில் அம்மா வாசலில் உட்கார்ந்து கமலா மாமியொடு பேசிக் கொண்டிருந்தாள். மாமியுடைய குழந்தைகள் கொஞ்ச நேரம் வாசலில் விளையாடுவதும், பின்னர் அம்மாவிடம் மெதுவான குரலில் ஏதோ கேட்பதுவுமாக இருந்தன.. மாமி தலையை தலையை ஆட்டிக் கொண்டு” இதோ அப்பா வந்துடுவார், அப்புறம் தரேன்” என்று சமாதானமாக சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மா கேட்டாள்” குழந்தை என்ன கேட்கிறது? கேட்கறதை கொடேன்”

“இல்லை மாமி! அவர் வரட்டும்”

“குழந்தைகள் கேட்கறதை கொடுக்க அவர் ஏண்டி வரனும்?”

“இல்லை மாமி! இப்போ வந்துடுவார் எப்பவுமே 5, 51/2 க்கு வந்துடுவரே”

குழந்தைகள் அழற மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு கெஞ்சின.

அம்மா திரும்பி “ என்னடா வேணும்?”

“பட்சணம் வேணும் மாமி”

அம்மாவுக்கு எண்ணை காய்ந்த மர்மம் விளங்கியது..

“பண்ணிண பட்சணத்தைக் கொடுக்க என்ன மீன மேஷம்? கொடேன் குழந்தைகளுக்கு?”

“இல்லை மாமி! சாவி அவர்ட்ட இருக்கு”

“சாவியா?”

“ஆமா மாமி! பட்சணத்தை காட்ரேஜ் பீரோவில வச்சு பூட்டிட்டு போயிருக்கார், இப்பொ வந்துடுவார்”

“பட்சணத்தை வச்சு பூட்டினாரா?”

“ஆமா மாமி, எண்ணயும் ,சாமானும் விக்கற விலையில் கஷ்டப் பட்டு பண்ணியிருக்கு, நான் எடுத்து போக வர தின்னுட்டா வேஸ்ட் தானெ மாமி, அவர் கணக்கா எடுத்து கொடுப்பார் எல்லாருக்கும், சரிதானே மாமி?”

வருத்தமோ, மனத்தாங்கலோ இல்லாத சாதாரணக்  குரலில், நியாயமான ஒன்றை சொல்வது போல, மாமி தலையை தலையை ஆட்டிக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.

அம்மா விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

இந்த நிகழ்ச்சியின் பின்னூட்டமாக , நான் ஒன்று சொல்லாவிட்டால் அந்த மாமாவுக்கு நியாயம் செய்தது ஆகாது என்றே நினைக்கிறேன்.

மாமியை கோபித்துக் கொண்டு கத்துகிற அந்த மாமாவுக்கு இன்னொரு முகமும் இருந்தது.அவர் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவே இருந்தார் என்று தோன்றுகிறது. தினம் சாயங்காலம் ஆபிசிலிருந்து வந்தவுடன், தன் குழந்தைகளுக்கு அன்பாய், ஆசையாய் பாடம் சொல்லிக் கொடுப்பார். சாயங்காலம் விளக்கேற்றும் வேளையில் குட்டி குட்டி சமஸ்கிருத ஸ்லோகங்களை அருமையான உச்சரிப்புடன் பாடக் கற்று கொடுப்பார். சனி,ஞாயிறுகளில் குழந்தைகளை சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு, 2 கி .மி தூரத்தில் இருந்த பார்க்குக்கு கூட்டிச் சென்று விளையாடிவிட்டு வருவார்.

தவிர, பிளிச்சிங்க் பவுடர் போட்டு பாத் ரூம், டாய்லெட்டுகளை பளிங்கு போல சுத்தம் செய்து வைப்பார். நான்கு குடித்தனங்களுக்கும் பொதுவாக உள்ள நல்ல தண்ணீர் குழாயில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிற குடி தண்ணீரை குடம், குடமாக பிடித்து மாமிக்கு ஒத்தாசை செய்வார்.

ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள்.

சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக இருக்கின்ற தருணங்கள் வெகு குறைவே என்ற ஞானம் எனக்கு பிறந்தது.

இன்னும் சில வருஷங்களுக்கு பிறகு நாங்கள் குடி போன வீடு மரங்கள் அடர்ந்த ஒரு அழகான தெருவில் இருந்தது. அந்த வீட்டிற்கு போன பிறகு என்னுடைய அண்ணா, தம்பியின் நண்பர்கள் பல பேர் காலையிலும் மாலையிலும் அடிக்கடி அவர்களை தேடிக் கொண்டு வர ஆரம்பித்தனர். அது அந்த தெருவின் அழகாலும் அந்த வீடு அமைந்திருந்த சௌகர்யமான இடத்தாலும் என்று பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில்  என் தம்பியிடம் இதை குறிப்பிட்ட போது “நிஜம்மா உனக்கு தெரியலியக்கா? நம்ம பக்கத்து வீட்டிலே யார் இருக்கா? ஜயஸ்ரீ! ஜயஸ்ரீ!!!” என்று இரண்டு தடவை அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு புருவம் உயர்த்தி ஆச்சரியம் காட்டினான்.

“அதனாலே?”

“என்ன, இவ்வளவு சர்வசாதரணமா அதனாலங்கறே , அவ கடைக்கண் பார்வைக்கு என் காலேஜே தவம் இருக்கு”

“போடா! ஒல்லிக் குச்சியா, கண்ணாடி போட்டுண்டு, கொஞ்சி கொஞ்சி பேசிண்டு! அவளா அழகி?”

“அக்கா!! நீயும் ஒரு பெண்ணுங்கறதை காமிச்சிட்டயே!!” என்று நாடகத் தனமாக நெஞ்சில் அறைந்து கொண்டான்.

“என் ஃப்ரண்ட் ,அண்ணா ஃப்ரண்ட் கிட்ட கேட்டு பாரு அவ மஹாத்மியத்தை” என்றான்.

என் தங்கையோட வருத்தமே வேறாக இருந்தது.

“அக்கா! அவளுக்கு இருக்கற கொழுப்பை பாத்தியாக்கா? அவ காலேஜில இரண்டாம் வருஷம், நான் முதல் வருஷம், எப்போ பாத்தாலும் என்னை அக்கா அக்கான்னு கூப்பிடறா. ஏய்! நான் உன்னை விட ஒரு வயசு சின்னவன்னு எத்தனை தடவை சொன்னாலும் அப்பதான் முதல் தடவை கேட்கற மாதிரி கண்ணை அகல விரிச்சு அப்பிடியாங்கறா. அன்னிக்கு பேச்சுவாக்கிலே நீங்க ரொம்ப வருஷம் முன்னாடி குடி இருந்த கோகலே தெரு வீட்டிக்கு வந்திருக்கேன் , நான் அப்ப அஞ்சாவதோ, ஆறாவதோ படிச்சிண்டு இருந்தேங்கிறேன் ,மூஞ்சியை பச்சைக் குழந்தை மாதிரி வச்சிண்டு ‘எனக்குத் தெரியாது ,நான் அப்பொ பிறந்தே இருக்க மாட்டேனேங்கிறா!’ கொழுப்பை பாரேன், கன்னத்தில பளார்னு அறையணும் போல இருந்தது. கணக்கில இவ்வளவு வீக்கா இருக்கிற இவளுக்கு எந்த மட சாம்பிராணி எஞ்ஜினீயரிங்க் சீட் கொடுத்தானோ தெரியலெ” புலம்பித் தள்ளி விட்டாள்.

கனவுலகில் மிதந்து கொண்டிருந்த என் அண்ணா தம்பியின் காதுகளில் இது விழுந்ததாவென்றே எனக்கு சந்தேகம்தான். இந்த ஜயஸ்ரீ இந்த கதையின் உப கதாபாத்திரம்தான். முக்கியமான கதா பாத்திரங்களை பார்க்கலாம்.

அந்த பக்கத்து வீட்டில் மாமா (பெயர் தெரியவில்லை), சரோஜா மாமி, மூன்று பெண்கள்..பெரியவள் நன்றாக படித்துவிட்டு ஒரு மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தாள் (எனக்கென்னவோ சின்னவளைக் காட்டிலும் இவள் அழகி என்று தோன்றும்,பின்னாளில் ஹிந்தி நடிகை ரேகாவைப் பொழுதெல்லாம் எனக்கு இவள் ஞாபகம்தான் வரும்). கம்பீரமாக, தோரணையாக இருப்பாள். அந்த தோரணையான முக மூடிக்குப் பின்னால் ஒரு மெல்லிய சோகம் இருப்பதாக எனக்குப்படும். நடுப்பெண் சுமாரான படிப்பு படித்துவிட்டு வீட்டு வேலைகளில்  அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்தாள். கடைக்குட்டி ‘ அழகி’ எஞ்சினீயரிங்க் படித்துக் கொண்டிருந்தாள். வீடு நடப்பதும், கடைக்குட்டி படிப்பதும், பெரிய அக்கா கைங்கர்யம். அவர்களின் அப்பா ஏதோ பெரிய வேலை பார்த்து விட்டு  கை நிறைய பென்ஷனோடு ரிடயர்ட் ஆனவர். நாள் முழுவதும் அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வீட்டில் வாங்கும் ‘ஹிந்து’ எங்கள் வீட்டில் வாங்குகிற இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இரண்டையும் பாரயணம் பண்ணுவார். கண்ணில் அகப்பட்ட அக்கம் பக்கத்து பேரிடம் (அனேகமாக எங்கள் தாத்தாதான் மாட்டிக் கொள்வார், ஆனால் தத்தாவுக்கும் அது பிடித்துதான் இருந்தது என நினைக்கிறேன்.) தான் படித்த நியூஸை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்வார். அரசியலிலிருந்து அணுகுண்டு தயாரிப்பு வரை அவருக்கு எல்லாவற்றையும் பற்றிய தீர்மானமான அபிப்ராயமும், உலக பிரச்னைகள் அனைத்துக்கும் சரியான தீர்வும் இருந்தன. அவர் வீட்டுக்குள் போயே நாங்கள் யாரும் பார்த்ததில்லை. ஒரு நாளின் எந்த பொழுதிலும் தென்னை மரத்தடியோ திண்ணையோதான் அவரது வாசம். தன் வீட்டு மனிதர்களிடம் அவர் பேசி நாங்கள் பார்த்ததில்லை.அவர் தனக்கு பேசத் தகுந்தவர் என தீர்மானித்தது, வயதான ஆண்களை மட்டும்தான். தாத்தா அந்த காலத்து மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் உரிமையுடன் அவரிடம் கேட்டார் –

“என்ன மாமா பொண்ணுக்கு வரன் பாத்துண்டு இருக்கேளா? எனக்கு நல்ல இடங்களெல்லாம் நிறைய தெரியும்”

“ஓ1 பேஷா பாக்கலாமே!,ஜாதகம், குடும்ப பிண்ணனி எல்லாம் கொடுங்கோ!,காலா காலத்தில் பண்ண வேண்டியதுதான்”

கொண்டு வந்து கொடுத்தால் மாதக் கணக்கில் பதிலே வராது. நெருக்கிப் பிடித்துக் கேட்டால் “ஜாதகம் பொருந்தலையெ சார்!! அப்பிடி பொருந்தாம பண்ணிட்டு அப்புறம் ஏதாவது இசைகேடா ஆயிடுத்துனா என்ன பண்றது சார்?”

சரோஜா மாமியும் ,நடுப் பெண்ணும் நாள் முழுக்க சமையலறை வாசம் இல்லையென்றால் கொல்லையில் துணி தோய்த்துக் கொண்டோ பாத்திரம் தேய்த்துக் கொண்டோ காம்பவுண்ட் சுவர் அருகில் அம்மாவை சந்திக்கிற அபூர்வ தருணங்களில் மாமி கிட்டத்தட்ட அழுவாள்.

“நன்னாத்தான் மாமி பென்ஷன் வருது!ஆனால் அத்தனை பணத்தையும் தலைப்பிலே இழுத்து முடிஞ்சிண்டு, நான் இருக்கிறதுக்கும், சாப்பிடறதுக்கும் நூறு ரூபா தரேன், அதுவே ஜாஸ்தி! இதுக்கு மேல என்னைக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாதுன்னு சொல்றது மாமி இந்த பிராம்ணன்! பெரியவளுக்கு இப்பவே வயசு 30க்கு மேல. எந்த ஜாதகத்தை பாத்தாலும் பொருந்தல பொருந்தலன்னு பொய் சொல்றது மாமி!!. எங்கே அவ கல்யாணம் ஆகி போயிட்டா தன்னை  குடும்ப பாரம் பிடிச்சுண்டுடுமோன்னு  பயம் மாமி அதுக்கு! ஈஸ்வரா! நான் இதுலேந்து எப்பிடி இதுகளை கரை சேப்பேன்னு தெரியலேயே மாமி!” கொஞ்ச நேரம் அழுது முடித்து விட்டு சின்னக் குரலில் சொல்லுவாள் “உங்காத்து மாமா தங்கம் மாமி! பகவான் புண்யத்தில ரொம்ப நாள் நன்னா இருக்கட்டும்”

ஆனால் பகவான் புண்யமோ, எங்கள் புண்யமோ எதுவும் பலிக்கவில்லை, சில வருடங்களிலேயே அப்பா போய் விட்டார். அவர் போன சமயத்தில்  மாமி என் தங்கை கையை பிடித்துக் கொண்டு  விம்மி விம்மி அழுது கொண்டே சொன்னாள் “ உங்க அப்பா தங்கமான மனுஷன்! அவர் போனதுக்கு எங்காத்து மாமா போய், உங்க அப்பா உயிரோடு இருந்திருக்கப் படாதோ”

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அடி வயிற்றில் கல்லாய் ஏதோ கனத்தது.

மாமி எங்க அப்பா போனதுக்கு ஒரு பங்கு அழுதாள் என்றால் அவாத்து மாமா போகாததற்கு இரண்டு மடங்கு அழுதாள் என்று தோன்றியது. இத்தனை வருஷங்களுக்கு பிறகு யோசித்துப் பார்க்கையில், சரோஜா மாமி, கமலா மாமி முகங்கள் ஓரளவுக்கு நினைவுக்கு வருகின்றன. ஜன்னலுக்கு அந்த புறம் தெரிந்த அந்த பெயர் தெரியாத மாமியின் முகத்தை நினைவு கூற முயலுகிறேன், ம்ஹூம்…. முடியவில்லை. யோசித்துப் பார்த்தால் அது எனக்கு தெரிந்த என்னையும் உள்ளிட்ட எல்லாப் பெண்களின் முகமாகவும் எனக்குத் தோன்றுகிறது.

4 Replies to “அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]”

  1. இது கதையாகத் தோன்றவில்லை.. இதுபோல் பல குடும்பங்கள்… நானே பார்த்திருக்கிறேன்.. கீழ் மட்டத்தில் இருக்கும் பெண்களின் துயரங்கள் வெளியில் தெரிந்த அளவு மற்றைய தளப் பெண்களின் துயரங்கள் வெளித் தெரிந்தது இல்லை…

    மனது கனக்கிறது..

  2. தன்மீது நம்பிக்கை இல்லாத ஆண்களும்,வாழ்க்கை மீதும், சமுதாயத்தில் தன் மீது
    உள்ள மதிப்பும், மரியாதையும் கட்டி காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ!
    என்ற பயமுமே சில ஆண்களை இதுபோன்ற பலகீனமான செயல்களை செய்து
    குடும்பத்தினரை மிகவும் கஷ்டப்படுத்துவார்கள் இது போன்ற ஆண்கள் எல்லா
    சமூகத்திலும் இருக்கிறார்கள்.

  3. எளிய நடையில் எழுதப்பட்ட இயல்பான நடையுள்ள சிறுகதை. ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *