மக்களை காப்பாற்ற எப்படி அமெரிக்க நீதிமுறை வேலை செய்கிறது?
அமெரிக்க உச்சநீதிமன்றத்திலே தற்போது 8 பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அதிலே பல வழக்குகளுக்கு 4-4 என ஆதரவாகவும் எதிராகவும் தீர்ப்பு சொல்வதால் பல விசித்திரங்கள் ஆரம்பித்து இருக்கின்றன.
இந்த இடத்தில், உச்சநீதிமன்றத்திலேயே மொத்தம் 8 பேர் தானா எனக் கேட்கலாம். மொத்தம் 9 பேர். அதிலே ஒரு நீதிபதி காலமாகிவிட்டதால் இப்போது இந்த விசித்திரங்கள். ஒப்பீட்டுக்கு, இந்திய உச்சநீதிமன்றத்திலே மொத்தம் 31 நீதிபதிகள் இருக்கலாம். இப்போது 25 பேர் இருக்கிறார்கள். இது ஏன் இந்த வித்தியாசம்?
அமெரிக்க நீதிமன்ற முறை இந்தியாவை விட மிக மிக வித்தியாசமானது. நம்மூரிலே ஒரு வழக்கு முடிய என்பதற்கு 50 வருடங்கள் எனப் பழக்கப்பட்டு போனதால் அமெரிக்க நீதிமன்ற நடைமுறைகளையும் நீதி பரிபாலன முறையும் புரிந்து கொள்வது கடினமே.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் வாழ்நாள் முழுமைக்கும் நீதிபதிகள். அவர்களாக பதவி விலகினாலோ அல்லது இறந்தாலோ ஒழிய இடம் காலியாகாது. நம்மூரைப் போல் 65 வயதிலே ஓய்வு பெறுதல் என்பது இல்லை. ஊழல் புரிந்தால் அமெரிக்க பாராளுமன்றம் விசாரித்து நீக்கும். சீனியாரிட்டி படி பதவி உயர்வெல்லாமும் கிடையாது
உச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமெரிக்க அதிபரால் நியமிக்கப்பட்டு அமெரிக்க மேல்சபையான ‘செனட்’டால் விசாரிக்கப்பட்டு உறுதிசெய்யப்படுவார்கள். அதிபரால் நியமிக்கப்படும் ஒவ்வொரு நீதிபதியும் அமெரிக்க ‘செனட்’டின் நீதிமன்ற கமிட்டியால் முதலில் விசாரிக்கப்படுவார். அவரது கொள்கைகள் என்ன, நல்லவரா, கெட்டவரா என்பதையெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக கேட்பார்கள். பின்பு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அவர் உறுதி செய்யப்படுவார். அங்கே உயர்நீதிமன்றம் என்பது மேல்முறையீடு நீதிமன்றம் என அழைக்கப்படும். அதை வட்ட நீதிமன்றங்கள் எனவும் சொல்வது உண்டு.
இது மட்டுமல்ல, நீதிமன்றங்களுக்கு நிதி மற்றும் பட்ஜெட் ஒதுக்கவும் நீதிபதிகள் அமெரிக்க மேல்சபையின் முன் ஆஜராகி பேசுவார்கள். இதையும் இங்குள்ள நடைமுறைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
அங்குள்ள நீதிமன்றங்களும் மூன்று படி நிலைகளிலே இருக்கும். விசாரணை நீதிமன்றம், மேல்முறையீடு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என. இது மாநிலங்களுக்கு தனியாகவும் மத்தியிலே தனியாகவும் இருக்கும்.
மாநில உச்சநீதிமன்றம் எனவும் இருக்கும். மத்தியிலே உச்சநீதிமன்றம் எனவும் இருக்கும். இது மட்டுமல்லாது ராணுவ வீரர்களுக்கு, வியாபார விஷயங்களுக்கு என தனி பிரிவாக நீதிமன்றங்கள் இருக்கும்.
அது என்ன மாநில நீதிமன்றம் மத்திய நீதிமன்றம் அப்படீன்னா, மாநில சட்டங்களுக்கு மாநில நீதிமன்றம், மத்திய சட்டங்களுக்கு மத்திய நீதிமன்றம்.
ஏன் இப்படி? இந்தியா போல் அங்கே நாடு முழுமைக்கும் ஆன குற்றவியல் சட்டம் கிடையாது. இந்தியன் பீனல் கோடு போல அமெரிக்க பீனல் கோடு கிடையாது. எனவே மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பீனல் கோடுகள் வைத்திருக்கின்றன. அதனால் மாநில சட்டங்களை மாநில நீதிமன்றத்திலும் மத்திய சட்டங்களை மத்திய நீதிமன்றத்திற்கும் எடுத்துப்போகலாம்.
இரு மாநிலங்களில் வசிக்கும் ஆட்களுக்கு இடையேயான பிரச்சினை என்றால் மத்திய நீதிமன்றம் தான். காப்புரிமை, திவால் பிரச்சினைகள் போன்றவை இருந்தாலும் மத்திய நீதிமன்றங்கள் தான்.
கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் மாநில சட்டப்படி தான் குற்றம் என்பதால் மாநில நீதிமன்றங்களிலேயே பிரச்சினை முடிந்துவிடும். இங்கிருப்பது போல் காசு இருக்கிறது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் வழக்கு நடத்தும் பஜனை எல்லாம் கிடையாது.
மத்திய சட்டமீறல் குற்றங்களையும் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துபோக முடியாது. ஏதேனும் மிகப்பெரும் சட்ட சிக்கல் என்றால் மட்டும் தான் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கும்.
அமெரிக்க நீதிமன்றங்கள் பெரும்பாலும் என்பாங்க் (en banc) என சொல்லப்படும் முறையில் முழு நீதிமன்றமும் அமர்விலே அமர்ந்து விசாரிக்கும். மொத்தம் 9 நீதிபதிகள் என்றால் 9 நீதிபதிகளும் அமர்ந்து வாதங்களைக் கேட்பார்கள். இங்கிருப்பது போல் இரண்டு நீதிபதி அமர்வு, மூன்று நீதிபதி அமர்வு என்பதெல்லாம் கிடையாது.
கூடவே குற்றவாளிகளை முன்கொணர்வது, சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றவைகளுக்கு தனி போலீஸ் அமைப்பே இருக்கும். அதற்கு பெயர் யு.எஸ். மார்ஷல்ஸ் (US Marshals). போலீஸே எல்லாம் செய்வது கிடையாது. இங்கிருப்பது போல் பிடியாணை இருக்கிறது ஏன் கைது செய்யவில்லை எனும் காமெடிகள் எல்லாம் அங்கே நடக்காது.
அப்படியானால் வழக்கை நடத்துவது யார்? நீதித்துறை எனும் அமைப்பு தான் எல்லா வழக்குகளையும் நடத்தும்.
இங்கிருப்பது போல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிப்பார்கள். அரசு வக்கீல் வாதாட மட்டும் வருவார் என்ற நிலை அங்கே கிடையாது. நீதித்துறையின் கீழ் தான் போலீஸும் மற்றைய துறைகளும் மாநில, மத்திய அளவிலே இயங்கும்.
நீதித்துறைக்கு தலைவராக ஒரு வக்கீல் இருப்பார். மாநில அளவில் அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். மத்திய அளவில் ‘செனட்’டால் விசாரிக்கப்பட்டு அதிபரால் நியமிக்கப்படுவார். அவர் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவதில் இருந்து குற்றங்களை குறைப்பது வரைக்குமான அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு.
இங்கே சிபிஐ என இருப்பது போல் அங்கே எஃப் பி ஐ உண்டு. என்ன வித்தியாசம் என்றால் மத்திய சட்டங்களுக்கு உட்பட்ட என்ன குற்றம் என்றாலும் எஃப் பி ஐ தானாக முன்வந்து விசாரிக்கும். தானாகவே குற்றவாளிகளை தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிற்க வைத்து தண்டனை பெற்றுத்தருவார்கள். நீதித்துறையும் தானாவே முன்வந்து குற்றங்களை விசாரிக்கும்.
இங்கு போல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என போராடும் அவசியமோ, யாரேனும் புகார் கொடுத்தால் தான் போலீஸோ சிபிஐயோ விசாரிக்கும் என்ற காமெடிகளோ இல்லை. அதுவும் இங்கு போல் வழக்கை யார் நடத்துவது என்ற இழுபறி எல்லாமும் கிடையாது.
மாநில அட்டர்னி அல்லது மத்திய அட்டர்னி தான் அதற்கு பொறுப்பு. அவருடைய தேர்தல் வெற்றியோ அல்லது அவருடைய கட்சியின் வெற்றியோ எந்தளவுக்கு குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்பதை பொறுத்துத்தான்.
எப்படி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருக்கிறதோ அது போல் நகரங்கள், கிராமங்களுக்கும் அதிக அதிகாரம் உண்டு. நகர மேயர்களுக்கு கீழேதான் அந்த நகரத்தின் காவல் படை இருக்கும். மேயருக்குத்தான் நகரத்திலே இருக்கும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரமும் இருக்கும்.
காவல் படையே மேயரின் கையில் இருப்பதால் குற்றங்கள் அதிகரித்தால் மேயரும் நகரத்தின் அட்டர்னியும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இதெல்லாம் எதைக்காட்டுகிறது? யாருமே பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்பது சட்டத்திலேயே இருக்கிறது. இவரிவருக்கு இன்னின்ன வேலைகள் என்பதை வெளிப்படையாக வைத்து அவரவர் அந்த வேலைகளை செய்தே ஆகவேண்டும் என வைத்திருக்கிறார்கள்.
ஒரு சட்ட மீறல் நடக்கிறது என்றால் அதாவது ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறது என்றால், உடனே அமெரிக்க மத்திய வியாபார கமிஷன் நடவடிக்கை எடுக்கும். வாடிக்கையாளர் வந்து புகார் தருகிறாரா? போலீஸ் விசாரிக்கிறதா என்பது இல்லாமல் அவர்களாகவே தானாகவே முன்வந்து நீதிமன்றத்திலே அந்த கம்பெனி மேல் வழக்கு தொடுப்பார்கள். இதையும் இங்கே இருப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்.
மைக்ரோசாப்ட் கம்பெனி மேல் அமெரிக்க அரசு தொடுத்த “வாடிக்கையாளர்களை ஏமாற்றிய வழக்கு” என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அது போல் ஏகப்பட்ட வழக்குகளை அமெரிக்க அரசே தொடுத்து நிறுவனங்களை தண்டித்து உள்ளது.
மத்திய அல்லது மாநில அட்டர்னிகள் தானாகவே முன்வந்து வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத்தருவார்கள். அப்படி செய்யும் நபர்கள் பின்னால் மாநில கவர்னர்கள் ஆகவோ அல்லது மத்திய பதவிக்கோ தேர்தலில் வெற்றி பெற்று உயர்வார்கள்.
இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோபர்கடேவை கைது செய்ய உத்தரவிட்ட பீரித் பாரா என்பவரை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பீரித் பாரா ஒரு மாவட்ட அளவிலான அட்டர்னி. அவர் அமெரிக்க பங்கு சந்தையிலே ஏமாற்றிக்கொண்டிருந்த பல முதலைகளை கைது செய்து உள்ளே வைத்தவர். பல நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பிலே பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வரை அபராதம் விதித்து அதை கட்ட வைத்தவர்.
இது மக்கள், நிறுவனங்கள் என்றில்லாமல் நீதிபதிகளுக்கும் உண்டு. நீதிபதியைக் கண்காணித்து விசாரிப்பது, கவர்னர் போன்றவர்களை விசாரிப்பது ஆகியவற்றையும் நீதித்துறை செய்யும். மாநில நீதிபதிகளை மாநில அளவிலான சென்ட் சபையும் மத்தியிலே மத்திய செனட் சபையும் நீதிபதிகளின் மீதிருக்கும் குற்றங்களை விசாரித்து பதவிநீக்கம் செய்யும்.
இதையும் இங்கிருக்கும் முறைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
அரசு வக்கீல் கேஸ் போட்டா ஆஜர் மட்டும் தான் ஆவார். கேஸ் ஜெயிச்சா என்ன தோத்தா என்ன? குற்றவாளிக்கு தண்டனை கிடைச்சா என்ன கிடைக்காட்டி என்ன?
போலீஸ் கேஸ் போடும். வழக்கு விசாரணைக்கு வர்றதுக்குள்ளேயே போட்ட அதிகாரி ரிட்டையர்ட் ஆயிருப்பாரு இல்லாட்டி புரோமோஷன் வாங்கி போயிருப்பாரு.
நீதிபதி? அவருக்கும் வழக்கை நடத்தினா என்ன நடத்தாட்டி என்ன? ஏன் நடத்தலேன்னு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டும் தான் கேக்கமுடியும். மக்களோ மக்களின் பிரதிநிதிகளோ கேக்கவே முடியாது.
ஏதாச்சும் பிரச்சினைன்னா மக்கள் தான் கேஸ் போட்டு நாயா பேயா அலைஞ்சு வழக்கை நடத்தணும். உதாரணமாக, ஐஐபிஎம் (IIPM) என கல்வி நிறுவனம் வைத்து மக்களை ஏமாற்றி வந்த அரிந்தம் சவுதிரியை கேஸ் போட்டு மூடவைத்தது ஒரு பத்திரிக்கையாளர் தான். அவர் மீது இந்த ஐஐபிஎம் ஆட்கள் வடகிழக்கு மாநிலங்களிலே வழக்கு போட்டு இழுத்தடித்தார்கள். மிகுந்த பொருள் செலவும் நேரவிரயத்திற்கும் பின்பே வழக்கிலே வெற்றி பெற்றார் அந்த பத்திரிக்கையாளர். குஷ்பு மேலும் தமிழ்நாடு முழுக்க கேஸ் போட்டார்களே?
இந்த மாதிரி காமெடிகள் எல்லாம் அங்கே நடக்காது.
அதற்கு என அமெரிக்க முறை முழுக்க உயர்ந்தது என சொல்லவரவில்லை. அங்கேயும் ஒரு நகரத்தில் இருக்கும் எல்லோர் மீதும் சாலைவிதிமீறல் குற்றங்கள் இருப்பது போன்ற வேடிக்கைகளும் உண்டு. சாலைவிதிமீறல்களை பணம் பறிக்கும் உத்தியாக கையாள்வதும் உண்டு. காவல்துறை அதீதமாக நடந்து வேண்டுமென்றே மக்களை சில சமயங்களில் சுட்டுக் கொல்வதும் உண்டு.
ஆனால் அப்படி விதிமீறல்கள், குற்றங்கள் நடக்கும்போது அவை விவாதிக்கப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு மாற்றப்படுகின்றன.
நீதிபதிகளும் அட்டர்னிகளும் தேர்தலில் நின்று மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். என்ன நடந்தால் என்ன எனக்கு சம்பளம் வருகிறது என யாரும் இருக்கமுடியாது.
எனவே இந்திய நீதிமன்றங்களிலே நீதிவேண்டும் என்றால் அதிக நீதிபதிகளோ, தனி/விரைவு நீதிமன்றங்களோ மட்டும் தீர்வு அல்ல. காவல் துறையிலும் வழக்கு நடத்தப்படும் முறையிலும் மாற்றங்கள் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தெளிவாக பொறுப்பாளிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் வேலை செய்யாவிடில் பொறுப்பாக்கப் படவேண்டும்.
இப்படி உருப்படியாக சட்டங்கள், நிறுவனங்கள், விதிமுறைகள் என்றெல்லாம் வைக்காமல் நம்முடைய ஆட்கள் என்ன சொல்லுகிறார்கள்? வேறென்ன சொல்வார்கள் – இங்கே இந்துக்கள் இருப்பதால் தான் இப்படி இருக்கிறது, இந்து மதமும் சாதியும்தான் இதற்கெல்லாம் காரணம் என்றெல்லாம் ஒரே இழவெடுத்த பல்லவியை ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
(ராஜசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
இப்போது இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் முழுவதும் இந்துக்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. சுதந்திரத்திர்ற்கு முன் பிரிடிஷ் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரத்திர்ற்கு பிறகு இந்திய ஆட்சியாளர்கள்/அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து தப்புவதற்கு ஏற்றாற்போல் சில மாற்றங்கள் கொண்டுவந்தார்கள் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். இங்கு சட்டம் இயற்றுபவர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மற்றும் நீதிபதிகளும் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் அதிலிருந்து தப்பலாம். ஒரு ஏழை அநியாயமாக தண்டிக்கப்படவும் செய்யலாம். இந்த மாற்றங்களும் ஐரோப்பிய நாகரீகத்திற்கு அடிமையாகி பிரிட்ஷாருக்கு அன்னியோன்னியமாக இருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டதே. சுதந்திரத்திற்கு பிறகு உண்மையான ஹிந்துக்களால் ஹிந்துக்களின் பாரம்பர்ய முறையை அனுசரித்து சட்டங்கள் இயற்றபட்டிருந்தால் இன்றைய போலி “சமய சார்பற்ற” துர்நாற்றம் வீசும் அரசியலும், சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பேரால் மக்கள் சமூகத்தில் பிளவு உண்டாக்கி குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் வழி வகுத்து அதிலே சுகம் காணும் சுரண்டல் அரசு இருந்திருக்காது. அமெரிக்காவின் நிர்வாகத்தைவிட மேன்மையான நிர்வாகம் ஏற்பட்டிருக்கும். இந்துக்களை குறைகூறியே வயிர் வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு இது கசக்கும்.
நல்ல , தரமான கட்டுரை;சிறப்பான உள்ளடக்கம்; தெளிவான விளக்கங்கள்
நம்முடைய நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். ஒரு கேசுக்கு வைத வாங்கியே வருடக் கணக்கில் இழுத்தடிப்பார்கள்.இது பல்லாண்டு காலமாகவே, நன்கு அறிந்த ஒன்று. இதற்கு தீர்வே கிடையாதா? உலகப் பிரசித்தி பெற்ற சட்ட மேதாவிகள் இங்கு உண்டு. சட்டக் கமிஷன் என்றொரு காமெடி அமைப்பும் உண்டு. எல்லோரும் ஒட்டு மொத்தமாக ‘இவ்வளவு கேசுகள் தேங்கிக் கிடக்கின்றன, ,தாமதமான நீதி, நீதி மறுப்புக்குச் சாம்’, என்றெல்லாம் வாய் கிழிய 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆவேசமாக கத்துகிறார்கள்! ஆனால், இன்று வரை ஒரு அடி கூட முன்னேறவில்லை. மாறாக, வழக்குகள் பெருகி, நீ…..ண்டு கொண்டே போகின்றன. கோடிக் கணக்கில் சுருட்டியவர்கள், வாழ்க்கையை இன்னும் நராகவே அனுபவித்துக் கொண்டு, நம் போன்ற பாமர மக்களைப் பார்த்து கேலிச் சிரிப்பு செய்கிறார்கள்!
nandri