வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1

ராமாயண காவியத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத ஆனால் அதன் மீது காழ்ப்பு கொண்டு வெட்டியாக அவதூறு பேச விழைபவர்கள் உரத்த குரலில் கூச்சலிடக் கையாளும் ஒரு சொற்றொடர் ***முன்னூறு ராமாயணங்களும். ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அப்படி ஏ.கே. ராமானுஜம் என்ன தான் எழுதி விட்டார் என்பதனையே அறிய விழையாது விடலைகளின் கூச்சல்களிலேயே கலவரமாகி ஏ.கே ராமானுஜம் என்ற வ்யக்தி விசேஷத்தையே சந்தேஹாஸ்பதமாக புறந்தள்ள விழையும் இன்னொரு கும்பல். அப்படியானால் அது என்ன முன்னூறு ராமாயணம் என்ற வினா எழும். ராமாயணம் என்ற பெயரில் சகட்டுமேனிக்குக் கண்ட கண்ட குப்பைகூளங்களையும் ராமாயண சாகரத்தில் அள்ளி வீச விழையும் இழி செயலை சரியான முறையில் அடையாளம் காணுவதற்கு இந்த விவகாரத்தைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் வழிவகுக்கும் என்பதால் வ்யாசத் தொடரின் இந்த பாகம் எழுதப்படுகிறது.

கர்நாடகத்தில் வசித்த ஸ்ரீ ஏ.கே. ராமானுஜன் என்ற பிரபல பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எழுதிய ஒரு வ்யாசத்தை வைத்து முன்னெடுக்கப்படும் ஒரு (கு)தர்க்கம் 300 ராமாயணம். இந்த சுட்டியில் ஸ்ரீ ராமானுஜம் அவர்கள் எழுதிய முழு வ்யாசத்தினையும் காணலாம் – A. K. Ramanujan’s “Three Hundred Rāmāyaṇas: Five Examples and Three Thoughts on Translation.”

ஸ்ரீ ராமானுஜன் அவர்களது வ்யாசத்தை வைத்து முன்னெடுக்கப்படும் 300 ராமாயணம் என்பது ஏன் குதர்க்கத்தின் பாற்பட்ட கோஷம் என்பதனை புரிந்து கொள்ள இந்த விஷயம் சம்பந்தப்பட்ட மூன்று முக்யமான நிலைப்பாடுகளை நாம் பார்க்க வேண்டும்.

1. 1875 முதற்கொண்டு 1975 வரைக்கும் வெவ்வேறு இந்தியவியல் அறிஞர்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் படைப்பாய்வில் ஒரு முக்யமான புள்ளி Bhandarkar Oriental Research Institute என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பை ஆய்வின் பாற்பட்டு பதிப்பித்த அறிஞர் பெருமக்களுடைய ஆய்வின் பாற்பட்ட கருத்துக்கள்.

2. ஸ்ரீ ஏ.கே ராமானுஜன் அவர்கள் தனது 300 ராமாயணம் வ்யாசம் மூலமாக முன்வைக்கும் ப்ரதானமான கருத்துக்கள்.

3. ஸ்ரீ ஏ.கே ராமானுஜன் அவர்களது வ்யாசத்தை மறுதலிக்கும் படிக்கு சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் அவர்கள் இண்டியாஃபேக்ட்ஸ் இணையதளத்தில் பகிர்ந்த “முன்னூறு ராமாயணம் என்ற முகமூடியின் பின்னணியில்” என்ற வ்யாசம்.

மேற்கண்ட மூன்று நிலைப்பாடுகளும் தனித் தனியாக விளக்கப்படுகின்றன. இதையடுத்து ஃபேஸ் புக் பக்கங்களில் இதனைச் சார்ந்த உரையாடல்கள் பலவற்றையும் நான் கவனித்து வந்தேன். ஸர்வ ஸ்ரீமான்கள் ஜடாயு, ஆர்வி, ராம்சூரி மற்றும் மஹேஷ் சங்கர் போன்ற அன்பர்கள் தமது உரையாடல்களின் இந்த விவகாரம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். தவறான புரிதல்களின் பாற்பட்டு சில விஷயங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டுள்ளன. ஆகவே இந்த விவகாரத்தை மேற்கண்ட மூன்று தனிப்பட்ட நிலைப்பாடுகளை ஒட்டி தனித்தனியாக பார்ப்பதை அடுத்து ஸ்ரீ ராமானுஜன் மற்றும் ஸ்ரீ கணேஷ் முன்வைக்கும் விஷயங்களை சிறு குறு வினாக்களாக முன்வைத்து அவற்றுக்கு விடையளிப்பதன் மூலம் தவறான புரிதல்களை துலக்குவது வ்யாசத்தொடரின் இந்த பாகத்தின் அறுதி செயற்பாடு.

*****

1. ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பாசிரியர்களின் முக்யமான கருத்து:

valmiki_ramayana_critical_editionகிட்டத்தட்ட நூறு வருஷ காலமாக ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூலை எண்ணிறந்த அறிஞர் பெருமக்கள் படைப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவர்கள் இந்நூலை ஆராயுமுகமாக ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் வெவ்வேறு பாடாந்தரங்களை (recensions) ஆய்வு செய்துள்ளனர். இதற்காக நூற்றுக்கணக்கான ஓலைச்சறுக்குகளையும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்திற்காக எழுதப்பட்ட வெவ்வேறு வ்யாக்யானங்களையும் தங்களுடைய ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்ல ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூல் பகிரும் கதைக்களனை மையமாகக் கொண்ட வெவ்வேறு பாரதீய பாஷைகளில் இயற்றப்பட்ட வெவ்வேறு ராமாயண நூற்களையும் கூட தங்களது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வில் ஈடுபட்டிருந்த பதிப்பாசிரியர் குழுவில் டாக்டர்.ஜி.எச்.பட் (Dr.G.H.Bhatt), டாக்டர் பி.எல்.வைத்யா (Dr.P.L.vaidya) ,பி.ஸி.திவான் ஜி, (P.C.Divanji), டி.ஆர்.மன் கட் (D.R.Mankad), ஜி.ஸி.ஜலா (G.C.Jhala) மற்றும் டாக்டர் யு.பி.ஷா (Dr.U.P.Shah) போன்ற அறிஞர் பெருமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட ராமாயண நூற்களை ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் படைப்பாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆய்வாளர்கள், ஜைன பௌத்த ராமாயணங்களை தங்களுடைய ஆய்வுக்கு ஏன் எடுத்துக்கொள்ளவில்லை இதற்குப் பின்வருமாறு காரணம் கூறுகிறார்கள் –

“The various versions of Ramakatha contained in the Jaina and Budhist traditions have been ignored for, as Dr.G.H.Bhat remarks, “they have an altogether different setting, with a special purpose and are, therefore of little help”.

ஜைன பௌத்த ராமாயணங்கள் வேறு குறிக்கோள்களைக் கொண்டு வேறு கதைக்களனுடன் படைக்கப்பட்டதால் வால்மீகி ராமாயண நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்புக்கு இந்த ராமாயணங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்று பதிப்பாசிரியர் குழுவில் அங்கம் வகித்த ஒரு பதிப்பாசிரியராகிய டாக்டர் ஜி.எச்.பட் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

*****

2. ஸ்ரீ ஏ.கே ராமானுஜன் அவர்கள் தனது 300 ராமாயணம் வ்யாசம் மூலமாக முன்வைக்கும் ப்ரதானமான கருத்துக்கள் :

ஏ.கே.ராமானுஜன்
ஏ.கே.ராமானுஜன்

ஸ்ரீ அத்திப்பட்டு க்ருஷ்ணஸ்வாமி ராமானுஜன் அவர்கள் கர்நாடகத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் பேசும் குடும்பத்தினைச் சார்ந்தவர். விரிவுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிஞர் என்ற பன்முகப் பெருமை உடைய இந்த அன்பர் ஆன்மீகம் மற்றும் இலக்கியம் சார்ந்து ஆங்க்லத்திலும் கன்னடத்திலும் பல நூற்களை இயற்றியிருக்கிறார். ஹிந்துஸ்தானம் கொண்டாடும் பெருமை மிக்க அறிஞர்களுள் ஒருவர் ஸ்ரீ ஏ.கே. ராமானுஜன் அவர்கள்.

அன்பர் ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் அவர்களுடைய பல படைப்புகளுள் ஒன்று அவர் எழுதிய ஒரு வ்யாசம் முன்னூறு ராமாயணம்: ஐந்து உதாரணங்கள் மற்றும் மூன்று விதமான வாசிப்புகள்

அதன் முக்யமான சில அம்சங்களைப் பார்ப்போம்.

1. “I have come to prefer the word tellings to the usual terms versions or variants because the latter terms can and typically do imply that there is an invariant, an original Ur-text” (134)

ஒவ்வொரு ராமாயண நூலும் ஒரு தனிவாசிப்பு என்று கருதப்பட வேண்டும். (telling). ஆகவே ஒரு குறிப்பிட்ட தனிவாசிப்பினை அது எவ்வளவு தான் தொன்மையாக இருந்தாலும் மூல நூல் (Ur-Ramayana) என்று அடையாளப்படுத்துவதை மறுதலிக்கிறேன்.வெவ்வேறு ராமாயண காவ்யம் சொல்லும் வாசிப்புகளும் தனிவாசிப்புகள் என்று கருதப்படவேண்டுமேயன்றி மறுவாசிப்புக்களல்ல ( Version or Variant)

2.”…no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text.”

அசல் படைப்பு (original) என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொறு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது. ஒரு ராமாயணக்கதை பகிரும் ஒரு கதை அதில் முடிவு பெற்றாலும் கூட ராமாயண கதை இன்னது தான் என்று முடிவு பெற்ற கதையும் கிடையாது. எதிர்காலத்திலும் பல ராமாயணக்கதைகள் சொல்லப்படக்கூடும்.

ஐந்து வெவ்வேறு ராமாயணங்களை உதாரணபூர்வமாக விவரிப்பதாக ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது.  அவையாவன. 1.ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம். 2. கம்ப ராமாயணம். 3. ஜைன ராமாயணங்கள். 4. தாய்லாந்திய ராமகீன் 5. தக்ஷிண பாரதத்தைச் சார்ந்த நாட்டார் வழக்கு ராமாயணக் கதைகள்.

மூன்று வாசிப்பு / மொழியாக்க கருத்தாக்கங்களாக அது முன்மொழிபவை யாவை?

1. Iconic :- ஒன்றையொன்று பெருமளவில் ஒத்த இரு வேறு நூற்கள்.

கணிதத்தில் சொல்லப்படும் முக்கோணம் என்ற வடிவத்தினை உதாரணமாகக் கொண்டு இரு வேறு நூற்களை வடிவொற்றுமை சார்ந்து ஆராயப்புகுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒட்டு மொத்த வடிவத்தின் அளவு, தனித்த மூன்று கோணங்களின் பாகைகளின் அளவு, கோடுகளின் நிறம் வேறானாலும் கூட இவை இரண்டும் ஒரு முக்கோணம் என்பதில் வேறுபாடு இருக்கவியலாது.

மேற்கத்திய உலகில் Iconic மொழியாக்கம் என்பதனை விவரிக்கிறார். ஒரு நூல் க்ரேக்க மொழியிலிருந்து ஆங்க்லத்திற்கு மொழியாக்கம் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். சொல்லும் கருத்துக்கள் எந்த விதத்திலும் மாறுபடாது இருப்பது மட்டுமல்லாமல் மூல நூலில் எந்த விருத்தப்பாக்களில் செய்யுட்கள் இயற்றப்பட்டனவோ அதே விருத்தப்பாக்களில் ஆங்க்லத்திலும் செய்யுட்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டியதும் மூல நூலில் எந்த எண்ணிக்கையில் செய்யுட்கள் இயற்றப்பட்டனவோ அதே எண்ணிக்கையில் மொழியாக்கத்திலும் அவை இயற்றப்படிருப்பதும் இப்படி பல குணாதிசயங்களைக் கொண்ட ஒரு மொழியாக்கமாக இருந்தால் அது Iconic மொழியாக்கம் எனப்படும்.

2. Indexical :- ஒத்த கதைக்களனையும் ……மரபார்ந்த விவரணைகளால் மாறுபடும் நடையைக் கொண்ட……. வேறு பாஷையில் சமைக்கப்படும் ……. அல்லது ஒரே பாஷையில் வேறுப்ரதேசத்தில் சமைக்கப்படும் நூல்.

ஒரு நூல் ப்ராந்திய பாஷையில் எழுதப்படுகையில் ப்ராந்திய மரபு அங்கு முன்வகிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட ஒரு ப்ராந்திய மரபை ஒட்டி அந்நூல் சொல்லப்படாது போனால் பொருளற்றதாகி விடும். Indexical எனப்படும் ஒரு பாஷாந்திர நூலில், ஒரு மூல நூலின் அடிப்படை அம்சங்களாகிய கதைக்களன், கதாபாத்திரங்கள் போன்றவை பெருமளவு ஒருமைப்பாட்டுடன் Iconic என்ற படிக்கு காணக்கிட்டும். ஆயினும் ப்ராந்திய சடங்கு சம்ப்ரதாயங்கள், வழமைகள், மொழி, மரபுகள், தத்துவார்த்தங்கள் போன்ற அலகீடுகளின் பாற்பட்டு மூல நூலின் விவரணைகளிலிருந்து வேறுபட்டு பாஷாந்திர நூலில் காணக்கிட்டும். மூல நூலின் கதைக்களனை அப்படியே ஏற்கும் ஒரு ப்ராந்திய நூலில் ப்ராந்திய மரபுகள் மேலேற்றப்பட்டு ஒரு இலக்கியம் சமைக்கப்படும் படிக்கு அதன் கதைக்களன் Iconic என்ற அலகீட்டின் படி இருக்கையிலேயே விவரணைகள் Indexical என்ற அலகீட்டின் படி காணக்கிட்டும்.

3. Symbolic :- மறுப்பு வாசிப்பு.

நூல் ஒன்றில் சொல்லப்படும் கதைக்களனையும் கதாபாத்ரங்களையும் மிகக் குறைந்த அளவில் அல்லது பெயரளவிற்கு உள்வாங்கி முற்றிலும் வேறு விதத்திலான ஒரு கதையைச் சொல்ல முயலும் இரண்டாவது நூல் Symbolic எனப்படுகிறது. சில சமயம் முதல் நூல் சொல்லும் கதைக்களனை முற்றிலுமாகச் சிதைத்து அதற்கு முற்றிலும் வேறுபாடான கதைக்களனை இரண்டாவது நூல் சொல்லக்கூடும். இவ்விரண்டு நூற்களிலும் கதாபாத்ரங்களின் பெயர்கள் மற்றும் கதைசொல்லப்படும் போக்கு ஆகியவற்றில் ஒற்றுமை இருக்கும்பக்ஷத்திலும் கூட கதை நிகழ்வுகள் மற்றும் கதையின் பின்னணி போன்றவை பெருமளவு மாறுபட்டிருக்கும். இவ்விரண்டு நூற்களும் குறைந்த பக்ஷ ஒற்றுமைகளை தங்கள் வசம் கொண்டு பெருமளவு ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்தாக்கங்களையும் பாவார்த்தங்களையும் பகிருபவையாக இருக்கும்.

சுருக்கமாக மறுவாசிப்பு, மாற்று வாசிப்பு மேலும் மறுப்பு வாசிப்பு என்று தொகைப்படுத்தினால் எளிதாக இருக்கும் என்பது என்புரிதல். அல்லது இன்னமும் பொருள் பொதிந்த சொற்களால் இவற்றை தமிழ்ப்படுத்த முடிந்தால் அதுவும் சிறப்பே.

ஸ்ரீ ஏ.கே.ராமானுஜம் அவர்களது வ்யாசத்தில் பற்பல ராமாயண கதைக்களன்கள் வ்யாசத்தின் வாயிலாக விளக்கப்பட்டிருந்தாலும் ஜைன ராமாயணம் பகிரும் கதைக்களனும் மற்றும் தாய்லாந்தின் ராமாகீன் (Ramakien or Rama’s Story) அல்லது ராமகீர்த்தி ( Ramakirti or Rama’s glory) எனும் கதைக்களனும் மாறுபட்ட கதைக்களன்களை அதன் பின்னணியுடன் கூட விரிவாக விளக்குபவை. அவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்ரீ ஏ.கே ராமானுஜன் அவர்களுடைய 300 ராமாயணம் என்ற வ்யாசம் முன்வைக்கும் சில முக்யமான சித்திரங்களை கூர்ந்து பார்க்கையில் டாக்டர் ஸ்ரீ ஜி.எச்.பட் அவர்களது கருத்தின் தாக்கமும் கூட முழுமையாகப் புரிய வருகிறது. அவற்றை விபரமாகப் பார்ப்போம்.

*******

வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்கள் :-

கம்பநாட்டாழ்வார் ஆதிகவி வால்மீகி முனிவரின் ராமகதையை ஒட்டி தமது ராமாயணத்தை வடிவமைத்தமை கம்பனின் செய்யுள் வாயிலாக தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த எழுத்தாளராகிய ஸ்ரீமான் கந்தர்வன் அவர்களால் சொல்லப்பட்டுள்ளதை இங்கு நினைவு கூர்கிறேன். கம்பன் வாயிலாக ஆதிகவி வால்மீகி முனிபுங்கவரைப் பற்றிய அபிப்ராயம் அல்லவா?

கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

(நன்றி:  ஒரு பழைய தமிழ்ஹிந்து கட்டுரை)

kambarஅதே சமயம், கம்பன் மற்றும் வால்மீகி எனும் இரண்டு ராமாயணங்களிலும் மூழ்கி முத்தெடுத்த / முத்தெடுத்துவரும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் மூத்த சான்றோராகிய குஹத்திரு ஹரிகிருஷ்ணன் ஐயா அவர்கள் பகிர்ந்த கருத்தையும் உடன் அவதானிப்பது ஒரு முழுமையான சித்திரத்தைப் பகிரும் ஆதலால் அதையும் கூடவே பகிர விழைகிறேன்.

ஆகவே, வால்மீகியைப் பேரளவுக்கு எடுத்துக் கொண்டிருந்த கம்பன் பல மாற்றங்களைச் செய்திருந்தாலும், அவற்றுக்கு பழந்தமிழ் நூல்களின் வழியாக வந்த மரபு என்று ஒன்றும் அவனுக்குத் துணை செய்திருந்திருக்கிறது. இதைச் சொன்னால்தான் செய்தி முழுமை பெறும்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் காட்டும் சம்பவங்களின் ஒரு மாலை கம்ப ராமாயணம் என்ற நூலிலும் மாறுவதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதே போன்று கதாபாத்ரங்களின் கதைக்கான பங்களிப்புகளும்.

வேறுபடுவது குறிப்பிட்ட நிகழ்வுகளை விவரிக்கும் விதம்.

வால்மீகி ராமாயணம் பெரும்பாலும் நெடுக 32 அக்ஷரங்களால் ஆன அனுஷ்டுப் என்ற பா வடிவிலேயே செல்லும். ஆங்காங்கு இடையிடையே வேறு விருத்தத்திலான ச்லோகங்களும் காணப்படுகின்றன.ஒவ்வொரு ஸர்க்கத்தின் (அத்யாயம்) அறுதி ச்லோகம் மாற்று விருத்தத்தில் காணப்படும். ஸர்க்கம் முழுதும் வேறான பாக்களில் அமைந்து ஆங்காங்கு சுந்தரகாண்டம் போன்ற காண்டங்களில் காணக்கிட்டும். கம்பராமாயணம் இனிமையான வெவ்வேறு விருத்தப்பாக்களில் அமைந்துள்ளது.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண விவரணைகள் கம்ப ராமாயண விவரணைகளிலிருந்து மாறுபடுவதை ஸ்ரீ அரிசோனன் அவர்களது ஒப்பீடு வ்யாசத் தொடர் பகிர்ந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். மாறுபடும் விவரணைகளுக்கு மாறுபடும் மரபு காரணம் என்ற விஷயம் சுட்டப்பட்ட போது தளத்தின் மூத்த எழுத்தாளரான ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் அதை மறுதலித்து விளக்கங்கள் அளித்ததும் அத்தொடரின் இரண்டாம் பாகத்தில் காணக்கிட்டும்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகிரும் மரபு உத்தரபாரதத்தைச் சார்ந்த மரபு என்பதும் கம்பநாட்டாழ்வார் தனது ராமாயண காவ்யத்தின் வாயிலாகப் பகிரும் தமிழக மரபு வேறானது என்பதும் ஆழ்ந்த விளக்கங்களால் விளக்கப்பட வேண்டிய விஷயங்கள். கம்ப ராமாயண நிகழ்வு விவரணைகள் மூலமாகப் பகிரப்படும் தமிழ் மரபு யாது. அப்படிப்பட்ட மரபைப் பேசும் தமிழ் நூற்கள் யாவை அவை சித்தரிக்கும் மரபு யாது. அதே போன்று மாறுபடும் ஒரு மரபைச் சுட்டும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் காட்டும் வேறுபாடான மரபு யாது. அதைப் பகிரும் மாறுபட்ட மரபிற்கு ஆதாரமான நூற்கள் யாவை. அவை சுட்டும் மாறுபாடான மரபு யாது? இப்படி முழுமை சார்ந்த பரந்த விளக்கங்கள் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கும்.

இவ்வளவு இருந்தும், மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ராமபிரான் அயோத்தி திரும்பி மனைவி மற்றும் தம்பிமார் புடைசூழ பட்டாபிஷேகம் செய்து கொள்வதுடன் முடியாது மேற்கொண்டு நீண்டு உத்தரகாண்டத்துடன் நிறைவு பெறுகிறது. இந்தியவியலாளர்கள் மற்றும் க்ரிடிகல் எடிஷன் பதிப்பாசிரியர்கள் பலரும் வால்மீகி ராமாயணத்தில் உத்தரகாண்டம் என்பது ஆதிகவியால் இயற்றப்பட்ட பகுதி அல்ல மாறாக பிற்சேர்க்கை என்று அபிப்ராயப்படுவதையும் இங்கு நினைவு கூற வேண்டும். கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் எனும் கம்பராமாயணம் யுத்தகாண்டத்தின் அறுதியில் ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்தியவியலாளர்கள் வால்மீகி ராமாயணத்தில் ராமபிரான் மனிதனாகக் காண்பிக்கப்படுகிறான் என்பதிலிருந்து மனிதனாகக் காண்பிக்கப்பட்டு அதிமானுடனாக உருப்பெற்று கடவுள் நிலைக்கு உயர்கிறான் என்று சொல்லப்படும் வெவ்வேறு சித்திரங்களை முன்வைக்கின்றனர். மரபார்ந்த வ்யாக்யானங்களை முன்வைக்கும் சான்றோர்களோவெனில் ராமபிரானை அவதார புருஷனாகவே சுட்டுகின்றனர். இப்படி சர்ச்சைக்கெல்லாம் இடம் வைக்காது நூலின் பெயரிலேயே ஆணி அடித்தது போல ராமாவதாரம் என்று ராமபிரானை அடையாளப்படுத்துகிறார் கம்பநாட்டாழ்வார்.

எது எப்படி இருப்பினும் வெவ்வேறு மாறான தாறுமாறான கதைக்களன்களைக் கொள்ளாது ஒத்த கதைக்களனைக் கொண்டவை ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமும் கம்ப நாட்டாழ்வாரின் ராமாவதாரம் எனும் ராமாயண மஹாகாவ்யமும் என்பது என்னுடைய புரிதல். இது கருத்தொற்றுமை சார்ந்த விஷயம். இதில் நிச்சயமாக மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் மூன்று விதமான வாசிப்புகளில் கம்ப ராமாயணம் ICONIC என்ற வாசிப்பாகாது மாறாக INDEXICAL எனப்படும் வாசிப்பாக பரிமளிக்கிறது என்று மேம்போக்கான புரிதல் கிட்டுகிறது. ஆயினும் மரபார்ந்து மாறுபடும் விஷயங்களின் கருத்து வேற்றுமையை விளக்க வேண்டுமானால் இரண்டு நூற்களையும் ஆழ்ந்து கற்றவர்கள் இது சம்பந்தமாக விரிவான விளக்கங்கள் அளிப்பது மட்டிலுமே ஒரு முழுமையான சித்திரத்தை தெளிவாக அளிக்கும் என்பதால் முன்னூறு ராமாயண வ்யாசம் சொல்லும் மற்ற விபரங்களை மேற்கொண்டு பார்ப்போம்.

அடுத்ததாக, ஜைன ராமாயணங்களை எடுத்துக் கொள்வோம்.

(தொடரும்)

7 Replies to “வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1”

 1. ஏ.கே. ராமானுஜன் அமெரிக்காவில் பணியாற்றி, அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தக்கபடி பக்கவாத்யம் வாசித்து அறிஞர் என்ற ‘பெருமை’ யைப் பெற்றவர். அவர் தமிழ்.கன்னட இலக்கியத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைப் படித்துப் பார்த்தால் அவருடைய உள் நோக்கம் புரியும். மக்களே போல்வர் கயவர் என்று வள்ளுவ நாயனார் இத்தகையவர்களைக் குறித்தே சொன்னார் போலும்.

  பொதுவாக, நமது பழைய இலக்கியங்களைப் பயில்பவர்கள் இருவகையினர்: மரபுவழி வந்தவர்கள் ராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் “இதிஹாசம்” என்றே கருதுகின்றனர். இதி-ஹ-ஆஸ = இது இப்படி நடந்தது என்பதே இதன் பொருள். பல்லாயிரம் ஆண்டுகள் பல மொழிபேசும் மக்களிடம்
  வழக்கிலிருந்ததால் இதில் வரும் சில நிகழ்ச்சிகள் மாறுபட்டவாறு வரும். ஆனால் ராமாயணம் ஆதி காவியம்; வால்மீகியே ஆதி கவி என்பதில் ஆஸ்திகர்களுக்கிடையே சந்தேகம் இல்லை.Ramayana is not a mere epic in the Western sense;the word or concept of Itihasa has no equivalent in the English language. வால்மீகி எழுதியது காவிய நடையில் அமைந்த இதிஹாசம்- வரலாறு. இது கதை என்று சொல்பவன் ” நான் என் அப்பனுக்குப் பிறக்கவில்லை” என்று சொல்வதைப் போன்றது என்று ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகள் பச்சையாகச் சொல்லுவார்.

  பிரச்சினை எழுவதற்குக் காரணம்,நம்மவர்களிடையே நிலவும் மேலை நாட்டு இலக்கிய பாணியின் தாக்கமும் ஆதிக்கமும். மேல் நாட்டினரின் நன்மதிப்பைப் ( வருமானத்தையும்) பெறவிழையும் நம்மவர்கள் அதற்குத் தகுந்தவாறு ஆடவேண்டிய நிலை . நமது இலக்கிய மரபையும் நமது அணுகுமுறைகளையும் விளக்கவோ, நிலை நாட்டவோ இவர்களுக்குத் துப்பில்லை; துணிச்சலும் இல்லை.

  நம்மிடையே வழக்கிலிருக்கும் பல மொழி ராமாயணங்களை எடுத்துக்கொண்டால்., அவற்றினிடையே வித்தியாசங்கள் இல்லாமலில்லை. கம்பன் வால்மீகியிலிருந்து சற்று விலகுவதுபோல், துளசிதாசரும் மாறுபடுகிறார். ஆனால் கம்பரோ, துளசிதாஸரோ வால்மீகியையே வழிபட்டவர்கள்! அவருடன் விதண்டாவாதம் செய்யவில்லை.

  தற்கால இலக்கிய வாதிகள். மரபுகளைத் தாக்கியே பிழைப்பவர்கள். இதுவே இவர்கள் செய்யும் புதுமை! இவர்களுடைய ஆராய்ச்சிப் பட்டங்களுக்கு வித்து! 1940களில் ஸ்ரீ வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியார் சென்னையில் ராமாயணம் பற்றி தொடர் உரை நிகழ்த்தினார். அதில் ராமாயண கதாபாத்திரங்களை, ஏதோ ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பாத்திரங்கள் போல் விமர்சனம் செய்தார்.இது ஓரளவுக்கு புதுமையாகத்தோன்றினாலும், உண்மையில் வால்மீகியின் வழியிலிருந்து புரளவில்லை. ஏனெனில், வால்மீகியே ராமனை உத்தம மனிதனாகக் காட்டினாரேயன்றி அவரை அவதாரமெனப் பிரச்சாரம் செய்யவில்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவ நியதியின் படி கம்பர் காலத்திலும் துளசிதாசர் காலத்திலும் ராமர் அவதாரமாகிவிட்டார்! அவர் பெயரே மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரமாகிவிட்டது! இதைத் துணிந்து பறைசாற்றியவர் நமது கம்பர்!

  ராமர், ராமாயணம் பற்றி கருத்து வேறுபாடுகளைச் சொல்வது தவறாகாது; அனால் அதன் நோக்கம் சரியாக இருக்கவேண்டும். உள் நோக்கம் கொண்டு சொல்லும் மெய்யும் பொய்மையை மிஞ்சும் கயமையாகிவிடும்..

  A truth told with bad intent
  Beats all the lies you can invent. – William Blake

 2. அன்பின் ஸ்ரீ கே எஸ் சங்கரநாராயணன் ஐயா,

  தங்களுடைய உரையும் அது சம்பந்தமாக செண்டர் ரைட்டில் பகிரப்பட்ட வ்யாசமும் சிறியேனுக்கும் இதைக்கண்ணுறும் அன்பர்களுக்கும் தகவற்பேழை போன்றவை. பகிர்தலுக்கு நன்றிகள் ஐயா.

 3. அன்பின் ஸ்ரீ நஞ்சப்பா ஐயா அவர்களுக்கு

  விரிவாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  \\ அவர் தமிழ்.கன்னட இலக்கியத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைப் படித்துப் பார்த்தால் அவருடைய உள் நோக்கம் புரியும். \\

  ஐயா, ராமானுஜன் அவர்களுடைய இந்த வ்யாசத்தை மட்டிலும் நான் வாசித்திருக்கிறேன். மற்றபடி அவருடைய பன்முக செயல்பாடுகளையும் அவருடைய இலக்கிய பங்களிப்புகளைப் பற்றியும் பொதுவாக மட்டிலும் அறிவேன்.

  அவருடைய மொழியாக்கங்களை வாசித்து அதில் மறுதலிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் இருக்குமானால் நிச்சயமாக அவையும் மறுதலிக்கப்பட வேண்டும்.

  300 ராமாயணங்கள் என்ற முகமூடியின் பின்னணியில் என்ற சதாவதானி ஸ்ரீ கணேஷ் அவர்களது ஆங்க்ல வ்யாசத்தை ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை ஒட்டிய விவாதங்களில் ராமானுஜன் அவர்களது 300 ராமாயண வ்யாசத்தில் ………….. அவர் மிக வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ள முக்யமான கருத்துக்களை அறியாது……… ஆனால் ராமானுஜன் அவர்களது வ்யாசத்தை ஆதரிக்கும் போக்கை காண நேர்ந்தது.

  ராமானுஜன் அவர்களது வ்யாசத்தில் அவர் பகிரும் கருத்துக்கள் என்ன? அதில் எனக்கு முரணாகப் படும் கருத்துக்கள் யாவை என்பதை பகிருமுகமாக இந்த வ்யாசம் பகிரப்பட்டுள்ளது.

  என்னுடைய புரிதல்களில் தவறுகள் இருந்தால் அவற்றையும் தாங்கள் பகிரலாம்.

  \\ ஆனால் ராமாயணம் ஆதி காவியம்; வால்மீகியே ஆதி கவி என்பதில் ஆஸ்திகர்களுக்கிடையே சந்தேகம் இல்லை \\

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஆதிகவி வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மூலகாவ்யம் என்ற விஷயத்தில் நூறு வருஷ காலம் தொடர்ந்து ராமாயண காவ்யத்தை படைப்பாய்வுக்கு உட்படுத்திய ஆய்வாளர்களுக்கும் இதில் கருத்து வேறுபாடு இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

  அப்படி ஒரு முடிவினை நீண்ட ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் எட்டியிருக்கிறார்கள். தங்கள் ஆய்வுக்கான கருதுகோள்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். அதை விளக்கியிருக்கிறார்கள். அதனையொட்டி தங்கள் முடிவினை எட்டியிருக்கிறார்கள்.

  ஸ்ரீ ராமானுஜன் அவர்கள் ராமாயண காவ்யம் பேசும் எந்த ஒரு நூலும் எவ்வளவு தொன்மையதாயினும் சரி அதை மூல நூல் என்று ஏற்கக்கூடாது என்று சொல்லுகிறார். ஏன் ராமாயண காவ்யம் பேசும் நூற்களில் மிகத் தொன்மையான ஒரு நூலை மூல காவ்யம் என்று சொல்லக்கூடது என்பதற்கு விடையில்லை.

  \\ அதில் ராமாயண கதாபாத்திரங்களை, ஏதோ ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பாத்திரங்கள் போல் விமர்சனம் செய்தார். \\

  பல பெரியோர்கள் இப்படிப்பட்ட ஒரு நோக்கினை மறுதலித்திருக்கிறார்கள். நான் வாசிக்க நேர்ந்த கருத்துக்களை பின்னர் விவரிக்கிறேன். இந்தக் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு ஐயா.

  \\ ராமர், ராமாயணம் பற்றி கருத்து வேறுபாடுகளைச் சொல்வது தவறாகாது; அனால் அதன் நோக்கம் சரியாக இருக்கவேண்டும். \\

  ஸ்ரீ ராமானுஜன் அவர்கள் மூன்று விதமான வாசிப்புக்களைத் தெளிவாக விவரித்திருக்கிறார். மிக அருமையான விளக்கம் அது. ஆனால் அப்படி இருப்பினும் கூட …………… பற்பல ராமாயணக்கதைகள் பலபேர் சொல்லியிருப்பினும் கூட………..ராமகாதை என்பது இன்னமும் கூட முற்றுப்பெறாத ஒன்று என்றும் சொல்லுகிறார்.

  அதையொட்டி எதிர்காலத்தில் ராமாயண காவ்யத்தினின்று கதாபாத்ரங்களை மட்டிலும் கடன் வாங்கி முன்னுக்குப்பின் முரணாக கதாநாயகனை வில்லனாகவும் வில்லனை கதாநாயனாகவும் சித்தரிக்கும் ஒரு ராமாயணம் படைக்கப்பட்டால் இந்த முன்னூறு ராமாயண வ்யாசத்தை ஒட்டி அதையும் கூட ராமாயண காவ்யங்களுள் ஒன்றாக சித்தரிக்கலாம்.

  ஆனால் அதே போன்று மாற்று மதத்தைச் சார்ந்த ஏசு சரித்ரத்தையும் கூட விவிலியத்திலிருந்து விலகிப் பேசுகிறார்கள். முன்னுக்குப்பின் முரணாகக் கூட. ஆனால் அங்கு இப்படிப்பட்ட ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுவதில்லை.

 4. ராமாயண கதாபாத்ரங்களை வெறுமனே கதாபாத்ரங்களாகக் கருதக்கூடாது என்று பெரியோர்கள் சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு என்று பதிந்திருக்க வேண்டும். கருத்தை முழுமையாகப் பகிராத வாசகத்துக்கு க்ஷமிக்கவும்.

 5. உடன்பிறப்பே ,
  //ஏனெனில், வால்மீகியே ராமனை உத்தம மனிதனாகக் காட்டினாரேயன்றி அவரை அவதாரமெனப் பிரச்சாரம் செய்யவில்லை.//
  ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி : !
  அர்திதோ மானுஷோ லோகே ஜஜ்னே விஷ்ணுஸ் சனாதன: !!
  வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 1ம் சர்கம் 7 ம் ஸ்லோகம் சொல்கிறது .
  ராவணனால் கொடுமைப்படுத்தப்பட்ட ,தேவர்களின் ப்ரார்த்தனைக்கு இறங்கி திருமாலே மானுட உலகில் ராமனாக அவதரித்தார் .
  https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga1/ayodhya_1_frame.htm

  என்னும்போது ,நீர் குறுக்குசால் ஓட்டுவது ஏன் அன்பரே ?
  ராமன் மனிதனல்ல . முழு முதற்கடவுளாம் .நினைவில் கொள்ளும் .
  முதலில் சமஸ்க்ருதம் கற்கவும் . பிறகு உம் கருத்தைக் கூறலாம் .
  http://www.samskritabharati.in

  அன்புடன்
  கணேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *