ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3

முந்தையவை:பகுதி 1, பகுதி 2

sri-rama-t

அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி*
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை*
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை
என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே

4. க்ரிடிகல் எடிஷன் முயற்சியும் இந்த முயற்சியில் ஈடுபட்ட பதிப்பாசிரியர் குழுவின் பார்வைகளும்.

வால்மீகி ராமாயணத்தின் க்ரிடிகல் எடிஷன் ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் (Oriental Institute), பரோடா என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது. இந்த முயற்சி 1960 ம் வருஷம் துவங்கி 1975ம் வருஷம் நிறைவு பெற்றது. பதினைந்து வருஷ கால முயற்சியில் பதிப்பாசிரியர் குழு (Board of Editors) மற்றும் நடுநிலையாளர்கள் குழு (Board of Refrees) என்ற இரு குழுவாக இயங்கி அறிஞர்பெருமக்கள் இந்த Critical Edition பதிப்பை ப்ரசுரம் செய்வதற்கு கடும் உழைப்பை நல்கினர்.

பதிப்பாசிரியர் குழுவில் டாக்டர்.ஜி.எச்.பட் (Dr.G.H.Bhatt), டாக்டர் பி.எல்.வைத்யா (Dr.P.L.vaidya) ,பி.ஸி.திவான் ஜி, (P.C.Divanji), டி.ஆர்.மன் கட் (D.R.Mankad), ஜி.ஸி.ஜலா (G.C.Jhala) மற்றும் டாக்டர் யு.பி.ஷா (Dr.U.P.Shah) போன்ற அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர்.

டாக்டர் ஜேக்கபி (Indologist) வால்மீகி ராமயண நூலுக்காக க்ரிடிகல் எடிஷன் என்ற முயற்சி எடுக்கப்படவேண்டும் என்று தன் அவாவினைத் தெரிவித்திருந்தார். இந்த Critical Edition முயற்சியில் அன்னாரது Das Ramayana நூலும் டாக்டர் எஸ்.என்.கொஸால் (Dr.S.N.Ghosal) அவர்களால் வடிக்கப்பட்ட அதன் ஆங்க்ல மொழியாக்கமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

க்ரிடிகல் எடிஷன் முயற்சிக்காக இந்தக் குழுவினர் கிட்டத்தட்ட நூறு கைப்ரதிகள் / ஓலைச்சுவடிகளை ஹிந்துஸ்தானத்தின் பல பகுதிகளிலும் இருந்து சேகரம் செய்தனர். சேகரம் செய்த ப்ரதிகளில் தொன்மை, தூய்மை மற்றும் முழுமை போன்றவற்றை அலகீடுகளாகக் கொண்டு 29 – 41 ப்ரதிகளைத் தேர்வு செய்தனர். நேபாள பீர் நூலகத்தைச் சார்ந்த ப்ரதி எண் : 934 என்ற ப்ரதி மிகவும் தொன்மை வாய்ந்ததாகச் சுட்டப்படுகிறது. இது பொதுயுகம் 1020 ஐ ச்சார்ந்ததாக சொல்லப்படுகிறது.

சேகரம் செய்யப்பட்ட மூல வால்மீகி ராமாயண ஏட்டுச்சுவடிகள் மட்டுமின்றி ராமானுஜாசார்யர், மஹேசதீர்த்தர், கோவிந்தராஜர், கடகர், நாகேச பட்டர் போன்றோருடைய வ்யாக்யானங்களையும் (விரிவுரைகள்) ஆய்வாளர்கள் தங்கள் முயற்சியில்கு கையாண்டுள்ளனர். இந்த வ்யாக்யானங்களெல்லாம் தக்ஷிண பாரதத்தைச் சேர்ந்தவை. இவை பொ.யு. 1250 க்கும் 1700 க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவை.

இவை தவிர வால்மீகி ராமாயண நிகழ்வுகள் பற்றி மற்ற நூற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட ராமாயண கதைகளும் இந்த முயற்சியில் கையாளப்பட்டன. பல புராணங்களில் சொல்லப்பட்ட ராமகதை, மஹாபாரதத்தில் ஆரண்யக பர்வத்தில் சொல்லப்பட்டுள்ள ராமோபாக்யானம், காஷ்மீர கவி க்ஷேமேந்த்ரரால் இயற்றப்பட்ட ராமாயண மஞ்சரி போன்ற நூற்கள் இந்த முயற்சியில் கையாளப்பட்டுள்ளன. மூல ராமாயணத்தில் சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு புறச்சான்றாக இந்த நூற்கள் எடுக்கப்பட்டன. மூல நூலில் வடிக்கப்பட்ட வார்த்தைகளைச் சரிபார்க்குமுகமாக இவை எடுத்துக்கொள்ளப்படவில்லை .

பௌத்த ஜைன ராமாயணங்கள் வேறு கட்டமைப்பில் வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டுள்ளதால் அந்த ராமாயணங்கள் இந்த முயற்சியில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். உத்தர மற்றும் தக்ஷிண (Northern, Southern). இந்த இரண்டு பாடாந்தரங்களும் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறு பட்டாலும் தங்களிடையே பொதுவிலான ராமாயண கதையை பாதுகாத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த பொதுமையான குணாதிசயம் தான் மூலராமாயணம் (Ur-Ramayana) என்ற நூல் இந்த பாடாந்தரங்களின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்ற முக்யமானதொரு முடிபை எட்ட ஆய்வாளர்களுக்கு ஹேதுவாக இருந்தது என்றால் மிகையாகாது.

ராமகதை தூய கங்கை நதியைப் போன்று வடக்கிலிருந்து தெற்கிற்கு தனது மூல மற்றும் முழுமையான வடிவில் வந்தது எனச் சொல்லலாம். ஆயிரத்து சொச்சம் வருஷ முன்னமேயே தெற்கிலே இந்த வால்மீகி ராமாயண காவ்யம் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவதானிக்கத் தக்கது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலின் மீது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து எழுதப்பட்ட விரிவுரைகள் இந்த நூல் ப்ரதி மாறாது பாதுகாக்கப்பட ஹேதுவாக இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம் மூலராமாயணம் என்று கருதப்படும் நூலினை அதனுடைய மூல மற்றும் தொன்மையான வடிவில் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளது என்ற டாக்டர் ஜேக்கபி அவர்களின் கருத்தை பதிப்பாசிரியர் குழுவினர் வழிமொழிகின்றனர்.

அதே சமயம் வடக்குப் பாடாந்தரம் அதன் வடிவு மற்றும் உள்ளடக்கங்களில் பெரும் மாறுதலைச் சந்தித்துள்ளது என்றும் கருதுகின்றனர். உத்தர பாரதத்தில் சம்ஸ்க்ருத புலமை பெருமளவில் விகஸிதமாக இருந்தபடியால் உத்தரபாரதத்துப் பண்டிதர்கள் மொழித்தூய்மையுடன் ராமாயண காவ்யத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர் என்பது அவதானிக்கத்தக்கது. இவ்வாறு மொழித்தூய்மையை உத்தேசித்துப் பாதுகாக்கப்பட்ட ராமாயண காவ்யமாகிய இதனை காவ்ய லக்ஷணம் என்ற அலகீட்டுக்கு கொணர வேண்டி பன்முறை சீர்திருத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாடாந்தரங்கள் உத்தரம் தக்ஷிணம் என்று இரண்டாக அங்கீகரிக்கப்பட்டாலும் இவற்றிலும் கிளைகள் இருந்தமையையும் கவனிக்க வேண்டும்.

உத்தர பாடாந்தரம் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் மேற்குப் பாடாந்தரங்களைக் கிளைகளாகக் கொண்டிருந்தது. இந்தக் கிளைகளும் இவற்றினிடையே தனித் தன்மைகளைக் கொண்டிருந்தன. நேபாளி, மைதிலி, பாங்க்ளா (வங்காள), சாரதா மற்றும் தேவநாகர லிபியில் எழுதப்பட்ட சுவடிகளில் உத்தர பாடாந்தரங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.

தக்ஷிண பாடாந்தரங்கள் முறையே தெலுகு, க்ரந்தம் மற்றும் மலயாள அக்ஷரங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தன என்பதும் மூன்று வெவ்வேறு வரிவடிவங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பினும் மூன்றும் கிட்டத்த்ட்ட ஒரே வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் தெற்கத்திய பாடாந்தரத்தின் சிறப்பு. ஆகவே தான் டாக்டர் ஜேக்கபி அவர்களும் க்ரிடிகல் எடிஷனின் பதிப்பாசிரியர் குழுவினரும் தெற்கத்திய பாடாந்தரமானது மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் மூல வடிவினை அப்படியே பாதுகாத்து வந்துள்ளது என்ற முடிபினை எட்ட ஹேதுவாக இருந்திருக்கலாம் எனத்தெரிகிறது.

பாலகாண்டத்தை பதிப்பிக்கும் பதிப்பாசிரியர் பொறுப்பிலிருந்த ஸ்ரீ பட் அவர்கள் (பொது பதிப்பாசிரியரும் கூட) பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் மூல ராமாயணத்தின் பகுதிதானா என்ற பரிசீலனையில் கூட இறங்காது சர்வ சாதாரணமாக இவ்விருகாண்டங்களும் பொதுவில் பிற்சேர்க்கை என்று தானே கருதப்படுகின்றன என்று முதலில் கருத்துப் பகிர்ந்தார். ஆனால் இந்த விஷயம் மிகவும் உயர்தர பரிசீலனைக்கான விஷயம் என்றும் முதல் க்ரிடிகல் எடிஷன் என்ற படிக்கு நம்பகமான தொன்மையான தூய்மையான முழுமையான ஏட்டுச்சுவடிகளை சேகரம் செய்வதிலேயே எங்களது பெரும் கவனமும் சென்றது என்பதால் இப்படிப்பட்ட ஒரு உயர்தர பரிசீலனையை இப்போது செய்ய இயலவில்லை எனக் கருத்துப்பகிர்ந்துள்ளார்.

யுத்தகாண்டத்தை பதிப்பிக்கும் பொறுப்பிலிருந்த பதிப்பாசிரியரான ஸ்ரீ ஷா (பொது பதிப்பாசிர்யரும் கூட) அவர்கள் கேரள பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ப்ரதி எண் L652 மற்றும் கோரேஸியோ எடிஷன் (Gorresio edition) என்ற இந்த இரண்டையும் கணக்கிலெடுத்து இவை யுத்தகாண்டத்துடன் நிறைவுறுவதால் அப்படியும் ஒரு பாடாந்தரம் இருந்திருக்கிறது எனத் தெரியவருகிறது என்றும் ஆகையால் உத்தரகாண்டம் என்பது பிற்சேர்க்கையாக இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு என்ற கருத்தைச் சொல்லியுள்ளார். இப்படி இருப்பினும் கூட உத்தரகாண்டத்தின் பதிப்பாசிரியர் என்ற படிக்கு உத்தரகாண்டத்தின் சர்க்கங்கள் 1-42 பிற்சேர்க்கை என்றுகருதப்பட வாய்ப்புள்ளது என்றாலும் மற்றைய சர்க்கங்கள் காவ்ய கர்த்தாவான வால்மீகி மகரிஷியாலேயே அனுபந்தமாகப் பின்னால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அஸ்வமேத யாக சமயத்தில் ராமபிரானுடைய ராஜசபையில் அரங்கேறியிருக்க வேண்டும் என்றும் அபிப்ராயப்படுகிறார்.

தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது இந்த அறிஞர்கள் இந்த பதிப்புப் பணியைச் செய்துள்ளார்கள் என்பது சில பதிப்பாசிரியர்கள் தாங்கள் பால காண்டம் அல்லது உத்தரகாண்டம் மூல ராமாயணத்தின் பகுதி என்று கருதாவிட்டாலும் பதிப்பாசிரியர் குழுவின் பொதுக்கருத்து மற்றும் ப்ரதிகளின் நம்பகத்தன்மை இவற்றை அனுசரித்து இவற்றை இந்தப் பதிப்பில் ஏற்ற சம்மதித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்கள் கூற்றின் படி, நாங்கள் அந்தந்த பாடாந்தரங்களின் தூய்மையை அவ்வப்படியே காக்க விழந்தோமேயல்லாது ஒரு புதிய பாடாந்தரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது நோக்கத் தக்கது. நாங்கள் பதிப்பித்துள்ள ராமாயணம் மூல ராமாயணத்தின் தூய பதிப்பு என்பதும் இப்பதிப்பு பெரும்பாலும் தெற்கத்திய பாடாந்தரத்தைச் சார்ந்து பதிப்பிக்கப்பெற்றுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பதிப்பாசிரியர் குழுவினர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தக்ஷிண பாடாந்தரத்திலிரிந்தும் இடைச்செருகல்கள் என்றுகருதப்படும் பகுதிகள் களையப்பட்டுள்ளன எனவும் கருத்துப் பகர்ந்துள்ளனர்.

இந்த Critical Edition முயற்சியில் எங்களுக்குக் கிடைத்த சுவடி ஆதாரங்களின் மூலமும் எங்கள் பரிசீலனைகளின் மூலமும் தக்ஷிண பாடாந்தரங்கள் தான் மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் தூய்மையை உள்ளது உள்ள படி பாதுகாத்துள்ளது எனக்கூற முடியும் என அறுதிக்கருத்து தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ மன்கட் அவர்கள் ராமாயண காவ்யம் எப்படி எழுத்தில் வந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் அனுமானம் :-

1. முதல் நிலையில் மூலகாவ்யமான ராமாயணம் வால்மீகி முனிவரால் அதிகமான அழகுபடுத்தல்கள் இல்லாது ஒரு குறுங்காவ்யமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப்படைக்கப்பட்ட காவ்யத்தின் சுவடி ஏதும் இன்று நமக்குக் கிட்டவில்லை.

2.அதன் பின் இந்தக் காவ்யம் பல நபர்களால் பல முறை மாறுபாடுகள் செய்யப்பட்டிருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும் இந்த மாறுபாடுகள் இந்த ராமாயண காவ்யம் தக்ஷிண பாரதத்தை அடையுமுன் வரையிலும் மட்டிலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மூல நூல் தக்ஷிண பாரதம் வந்தடைந்ததும் மாறுதல்கள் மேற்கொண்டு நிகழவில்லை என்பது நோக்கத் தக்கது.

ஸ்ரீ பட் அவர்கள் தெரிவிப்பதன் படி, பொதுயுகத்தின் முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளின் வாக்கில் ராமாயண காவ்யம் தக்ஷிண பாரதத்தை வந்தடைந்த சமயம் ஆழ்வார்களின் காலமாதலாலும் இந்த காவ்யம் வைஷ்ணவர்களுக்கு முக்யமான காவ்யம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாலும் அவர்களது பங்களிப்புடன் ராமாயண காவ்யத்தின் தக்ஷிண பாடாந்தரத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். பதிப்பாசிரியர் குழுவின் பரிசீலனையின் படி ராக்ஷசர்கள் பற்றிய குறிப்புகள் மாறுதல்களால் ஏற்பட்ட குறிப்புகள் எனக்கண்டடைந்து அதன் படி தக்ஷிண பாடாந்தரத்திலிருந்து இவை நீக்கப்பட்டுளன என பதிப்பாசிரியர் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நமக்குக் கிடைத்த புராதனமான ஏட்டுச்சுவடி ப்ரதி பொ.யு. 1020 என்ற தொன்மையுடையது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலுக்கான வ்யாக்யானங்கள் இதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் படைக்கப்பட்டன. ஆனால் மூல காவ்யம் இதற்கு சற்றேறக்குறைய 1500 வருஷங்கள் முன்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொன்மையான ப்ரதிக்கும் முந்தைய ப்ரதி ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படியேதும் ஒரு ப்ரதி இருக்குமானால் அது அடுத்த க்ரிடிகல் எடிஷனில் கையாளப்பட வேண்டும் என பதிப்பாசிரியர் குழுவினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். பதிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கையில் மேற்கொண்டு கிட்டிய சுவடிப்ரதிகளையும் – அது நம்பகத்தன்மையும் முழுமையும் வாய்ந்ததாகக் கருதப்பட்டால் – அவை பதிப்புப்பணியில் கையாளப்பட்டன என்பதனை சில உதாரணங்களுடன் விளக்குகின்றனர்.

அறுதியாக தக்ஷிண பாடாந்தரமே மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் வடிவத்தை அப்படியே பாதுகாத்துள்ளது என்பதாலும் மாறுதல்களுக்கு உட்படாததாலும் பஹு சம்மதமான (பலராலும் ஏற்கப்படும்) ப்ரதி (Vulgate) எனக்கொள்ள வேண்டும் எனவும் ஒருமனதாகப் பதிப்பாசிரியர் குழுவினர் கருதுகின்றனர்.

அதே சமயம் உத்தர பாடாந்தரம் குறைந்த நம்பகத் தன்மையுடையது என்று கருதலாகாது என்ற முக்யமான கருத்தையும் தெரிவிக்கின்றனர். உத்தர பாடாந்தரங்களில் பெருமளவு மாறுதல்கள் மொழிசார்ந்தவையே அல்லாது வடிவு அல்லது உள்ளடக்கம் சார்ந்தவை அன்று என்றும் பகிரப்பட்ட கருத்து நோக்கத் தக்கது.

டாக்டர் ப்ராகிங்க்டன் அவர்களுடைய பார்வையையும் இந்தப் பார்வைகள் பொதுவிலே நமக்கு உணர்த்துவது யாது என்பதனையும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்!*
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ!*
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!*
எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே! தாலேலோ.

41 Replies to “ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3”

 1. Dear Krishnakumar,

  This is an excellent article!

  I belong to the camp that thinks that the language in which you choose to express yourself is your biggest handicap and that tends to hide the substance of your remarks. IMO, the first part of this series suffered from that handicap and it was not easy to look beyond the language and appreciate the content. This one is almost free of that idiosyncratic language – much easier to read, understand and appreciate. I request you to continue this trend – I definitely don’t want the excellence of your content covered by (in my eyes), the artificial “manipravalam”.

 2. திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
  தாங்கள் எழுதிவரும் இராமாயணப் படைபார்வுகளை ஆர்வமுடன் படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. நான் தங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தவறாக எண்ணவேண்டாம். தாங்கள் தேவைக்கும் அதிகமாக வடமொழிச் சொற்களைத் தங்கள் படைபார்வில் திணிப்பது போலத் தோன்றுகிறது. உதாரமாக ‘தென் பாரதம்’ என்பதற்குப் பதிலாக, ‘தக்ஷிண பாரதம்’ என்றும், ‘பஹு சம்பந்தமான’ என்று எழுதிவிட்டு அது புரியாது போனால் என்ன செய்வது என்று அடைப்புகளுக்குள் ‘பலராலும் ஏற்கப்படும்’ என்றும் எழுதியிருக்கிறீர்கள். எந்த மொழியில் எழுதும் பொழுதும் அதன் இலக்கந்த்திற்குக் கட்டுப் பட்டு எழுவது அந்த மொழிக்கு அழகு சேர்க்கும். தான் தங்கள் பெயரை ‘கிருஷ்ணகுமார்’ என்று எழுதாமல், ‘க்ருஷ்ணகுமார்’ என்று எழுதுவதிலிருந்தே தங்களுக்கு உள்ளூர தமிழ் மீது தங்களையும் அறியாத ஒரு புறக்கணிப்பு (involuntary rejection) இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. நான் வடமொழியான சம்ஸ்கிருதத்தை ஆறு ஆண்டுகள் முறைப்படி பயின்றவன். ரகுவம்ச மகாகாவ்யம் போன்ற காப்பியங்களை நன்கு பயின்றவன். ஆகவே எனக்கு சமஸ்கிருதத்தின் மீது வெறுப்பு என்று தங்கள் மனதிற்குள் ஒரு தவறான நினைப்பை நிறுத்திக் கொள்ளவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மற்றும் எனக்கு இந்தியும் நன்றாகத் தெரியும். தமிழ் இந்து என்று பெயர் கொண்ட இந்த மகத்தான இந்த வளையத்தில் தேவைக்கு அதிகமாக மாற்று மொழிச் சொற்களைத் திணித்து, படிப்பதற்கு கடினமாக ஆக்கி விடாமல், எளிய தமிழிலேயே எழுதி வருமாறு தங்களைத தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சமஸ்கிருதத்திலோ, ஆங்கிலத்திலோ, இந்தியிலோ தமிழைப் புகுத்தி எழுத மாட்டோம், அதை யாரும் ஏற்கவும் மாட்டர்கள். அப்படி இருக்க, தமிழை மட்டும் தமிழாக எழுத நாம் ஏன் அஞ்ச வேண்டும்? ஒருவேளை ஒரு சாராரைத் தமிழர்கள் அல்ல என்று ஒன்றும் அறியாத மூடர்கள் சொல்லி வருவது, தங்கள் அடிமனதில் தன்னறியாத் தாக்கத்தை (involuntary) ஏற்படுத்தி இருந்தால், தாங்கள் செய்வது அந்த மூடர்களின் வாதத்திற்குத தலை சாய்ப்பது போல அல்லவா ஆகிவிடும்? சற்று எண்ணிப்பாருங்கள். தாங்கள் ஏன் இப்படி எழுகிறீர்கள் என்பதற்கு வேறு எந்த விளக்கம் தங்களிடம் இருந்தாலும், அதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன். தமிழர்களாகிய நம் அனைவரையும் சனாதன அறமாகிய இந்து சமயத்திற்கு ஈர்க்க வேண்டும் என்றால், நாம் தமிழ் இந்துக்கள் என்று பெருமை கொள்ள வேண்டும் என்றால், நாம் கூடியமட்டும் நல்ல தமிழில், தமிழர்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் தமிழில், எழுவதே சாலச் சிறந்தது என்பதைத தங்கள் முன் மிகவும் பணிவுடன் முன்வைக்கிறேன். என் எழுத்துக்களிலும் சில வடமொழிச்சொற்கள் இருக்கின்றன. அவை மிகவும் தேவைப்பட்ட இடங்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. நான் எழுதியது எதுவும் தங்கள் மனதைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. வாழ்க தமிழ் இந்து சமயம். வளர்க உங்கள் பணி!

 3. திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
  என்னுடைய மறுமொழியில், ஒரு இடத்தில் ‘இலக்கந்தத்திற்கு’ என்று தவறாகப் பதிவாகி இருக்கிறது. அருள்கூர்ந்து அதை ‘இலக்கணத்திற்கு’ என்று பொருள் செய்து கொள்ளுங்கள்.

 4. அன்புள்ள கிருஷ்ணகுமார் ,
  நமஸ்காரம்.
  மிகவும் உபயோகமான தொகுப்பை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
  நன்றி. மிகவும் ரசித்துப் படித்தேன். படித்து வருகிறேன்.
  உங்கள் எழுத்தின் நடையை குறிப்பிட்டு வெளிவந்துள்ள சில கருத்துக்களை நீங்கள் சரியான வகையிலே கவனத்தில் கொள்ள வேண்டுமே என்று ஆசைப்படுகிறேன். என் பிரார்த்தனைகள். உங்களுடைய உன்னதமான எண்ணக் கோர்வைகள் மேலும் பலப்பல நல்ல உள்ளங்களை சென்று பலன் தந்தாகவெண்டுமெ என்கிற ஆவலிலே முன்வைக்கப்படுபவை இந்த ஆர்வங்களின் வெளிப்பாடுகள். 25 வருஷம் முன்பு
  தென் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெரியவர், சென்னையிலே டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியின் ஒரு முக்கியமான தமிழ் ஆர்வர்களின் மத்தியிலே பேசும்போது, தான் நாற்ப்பது வருஷங்களுக்கும் மேலாக வட நாட்டிலே தமிழ் அல்லாத சூழலிலே வாழ்ந்து சிந்தித்துப் பழகிய காரணத்தாலே சரளமாக பேசு தமிழிலே பேச முடியாது போனதற்கு வருந்தினார். அதையும் ஆங்கிலத்திலேயே சொல்லி வைத்தார். உங்களுக்கும் அத்தகைய ஒரு இடைஞ்சல் இருக்கலாம். உங்களுக்கு இயற்கையாக அமைந்த சரஸ்வதி கடாக்ஷத்தின் அருளை அனைவரும் கவனித்து பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை.
  பராசக்தி துணை.
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 5. அன்புள்ள பெருமதிப்பிற்குரிய திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

  தங்களுடைய இந்த தொடரையும் , இதற்கு முன்னர் பல்வேறு சுட்டிகளில் தங்கள் எதிர்வினைகளையும் ( மறுமொழிகள்) தொடர்ந்து படித்து மகிழ்ந்துவருகிறேன். இராமாயணம் பற்றிய இந்த பகுப்பாய்வு மிக சிறப்பாக உள்ளது. தாங்கள் வட இந்தியாவில் நீண்ட காலம் இருந்து , தொடர்ந்து அங்கே பணியாற்றி வருவதால், தங்கள் தமிழ் நடை நாங்கள் அனைவருமே சற்று சிரமப்பட்டுத்தான் படித்துப் புரிந்துகொள்கிறோம். இருந்தாலும் கருத்தாழம் உள்ள கட்டுரைகளாக அவை இருப்பதால் , அவசியம் படித்தே தீரவேண்டும் என்ற நிலை உள்ளது. உங்கள் கட்டுரைகளை இன்னும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் , சுலபமாக , எளிய தமிழில் எழுதுங்கள். உங்களுக்கு அது முடியாவிட்டாலும் ஒன்றும் குற்றமில்லை. நமது தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்கள் , தங்கள் கட்டுரைகளை எளிமைப்படுத்தி , அதன் பின்னர் பிரசுரித்தால் மேலும் பலர் படித்து மகிழ ஏதுவாகும். திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் , எல்லா நலன்களும் விளைய, எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள்வானாக. வெற்றி வேல், வீர வேல். வையகம் வளமுடன் வாழ்க.

 6. திரு அரிசோணன் அவர்களுக்கு ,

  உயர்திரு கிருஷ்ணகுமார் அவர்கள் நமது தளத்தில், மிக நீண்ட காலமாக பல கட்டுரைகளையும், எதிர்வினைகளையும், ( மறுமொழி) தொடர்ந்து வழங்கி வரும் முருக பக்தர் ஆவார். அன்னார் மிக நீண்ட காலமாக வட இந்தியாவில் காஷ்மீரம் போன்ற பனிப்பிரதேசத்தில் , பணியாற்றி வருவதால், தமிழ் பேசப்படாத பகுதியில் வாழ்ந்து வருவதால், அவரது நடையில் வடமொழிக்கலப்பு இருப்பது தவிர்க்க முடியாதது. அவரும் மிக சிரமப்பட்டுத்தான் தனது கருத்துக்களை எளிதாக்க முயன்று வருகிறார். இந்த விஷயம் பற்றி ஏற்கனவே , தனது நிலையை அவர்கள் வெளிப்படுத்தி கடிதம் எழுதியுள்ளார்கள். அவர் வேண்டுமென்றே வட மொழியை கலக்கவில்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  அன்புடன்

  கதிரவன்

 7. மறைந்த மலர் மன்னன் அவர்களின் வேண்டுகோலுக்கு இனங்க திண்ணையில் ஓரூ தனி கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் திரு க்ருஷ்ணகுமார் தெளிவாகவே சொல்லிவிட்டார். தமிழ் சிரமம் என்று . அதற்க்கு — அவர் பல ஆண்டுகளாக இருக்கும் காஷ்மீர் போன்ற பகுதிகள். இது ஓரு காரணத்தினாலய அவர் தமிழ் அக்கரை இல்லாதவர் என்று சொல்லுவது அபத்தம். இலங்கை தமிழர் போன்ற விசயங்களில் அவருடைய நிலை பற்றி அவரின் பல பின்னோட்டம் படித்தால் புரியும்.

 8. அன்புள்ள க்ருஷ்ணகுமார்,
  மிகவும் அழகான வ்யாசம். ஆரம்பத்தில் இருக்கும் அழகான ஸ்ரீ ராமர் படத்தைப் பார்த்து ரசித்தேன். உங்கள் தமிழ் நடை எனக்குப் பிடித்திருக்கிறது. தூய தமிழில் எழுதினாலும் மணிப்பவள (மணிப்ரவாள) நடையில் எழுதினாலும் என்னால் ரசிக்க முடியும். மற்ற வாசக அன்பர்கள் விரும்புவதுபோல் எழுதினாலும் தொடர்ந்து ராமாயணம் பற்றிய இன்னும் பல தகவல்களை எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க உங்கள் பணி.

 9. Dear Shri RV and Rama, thanks for the appreciation.

  Probably, since you have a very good command over Tamizh, you were able to perceive difference in first and third part which I could not prima facie percieve.

  The forthcoming series is specific rebuttal of many issues and I have to quote chapter and verse from Valmiki and other Ramayanas apart from giving brief meaning / saramsa of shlokas. I would surely note the esteemed suggestions of you and other readers. I would try my level best.

  அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன், கதிரவன் மற்றும் பாண்டியன், உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

  ஸ்ரீ அரிசோனன், நான் முறையாக சம்ஸ்க்ருதம் வாசிக்காதவன். உங்களது முறையான வாசிப்பு நான் பகிரும் கருத்துக்களில் உள்ள குறைகளையும் பிழைகளையும் சுட்டுமானால் நானும் ஏனைய வாசகர்களும் மிக்க பயனடைவோம்.

  இந்த வ்யாசம் என்னுடைய ஆய்வின் படி அன்று. பல ஆய்வாளர்கள் நிகழ்த்திய படைப்பாய்வுகளை ஸ்ரீ ராமாஷ்ரய ஷர்மா அவர்கள் ஆங்க்லத்தில் ஒரு வ்யாசமாக சமர்ப்பித்துள்ளார். மூல வ்யாசத்தினை https://www.indologica.com/volumes/vol21-22/vol21-22_art19_RSHARMA.pdf உரலில் காணலாம்.

  தற்போது புழக்கத்தில் உள்ள கோரக்பூர் வால்மீகி ராமாயண மூலப்பதிப்பு மற்றும் வால்மீகிராமாயண தளத்தில் உள்ள குறிப்புகள் இவற்றினை அணுகி மேற்கண்ட வ்யாசத்தின் சாரத்தை என்னுடைய சில புரிதல்களுடன் இந்த வ்யாசத் தொடரில் பகிர்ந்துள்ளேன்.

  கடந்த இரண்டரை தசாப்தமாக நான் ஹிந்துஸ்தானத்தின் பல எல்லைப்பகுதிகளில் உத்யோகம் செய்தபடிக்கு தமிழில் மிகக் குறைவாகப் பேசி, தினப்படி உரையாடல்களில் ஹிந்தி, ஆங்க்லம், பஞ்சாபி/டோக்ரி மற்றும் தமிழ் – முன் பின் சொன்ன அளவில் பேசிவரும் படி என்னுடைய எந்த பாஷைப் பேச்சிலும் அடுத்த பாஷையின் தாக்கம் ஒரு மஜ்பூரி.

  என்னுடைய அலகீட்டில் தமிழில் இரண்டே சைலி. தூய கலப்படமில்லா தமிழ். கலப்பட தமிழ். என்னுடையது துரத்ருஷ்டவசமாக இரண்டாவது சைலி. நான் முதலாவதான தமிழை மிகவும் நேசிக்கிறேன். அப்படிப்பட்ட தூய தமிழில் நமது தளத்தில் வ்யாசங்கள் எழுதும் பல அன்பர்களின் வ்யாசங்களையும் உத்தரங்கள் எழுதும் ஸ்ரீ தாயுமானவன் மற்றும் ஸ்ரீ பாலா போன்றோரின் உத்தரங்களையும் கவனத்துடன் வாசிக்கவும் விழைகிறேன்.

  என்னுடைய அடுத்த வ்யாசத் தொடரில் உங்கள் அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி எழுத விழைகிறேன்.

 10. I thank Ms. Pandiyan and Kathiravan for throwing light about Mr.Krishnakumar. I have started accessing Tamil Hindu only recently and I am impresed by it. I have no way of knowing that Mr. Krishnakumar is away from Tamilnadu. I am away from Tamilnadu for the last 32 years. Hence I can understand difficulty Mr. Krishnakumar faces. I want to put a small reqest of Mr. Pandian. I penned my reponse very respectfully. Without knowing I am quite new for this site, and looking at the polite words I used, commenting ‘apaththam’ on my inputs turn the discussion into a discord. May I politely request of Mr. Pandian to understand before responding emotionally? No hard feelings, Mr. Pandian. We are all the children of the same Tamil mother. I really like the response and explanation of Mr. Kathiravan.

 11. திரு கதிரவன் மற்றும் திரு பாண்டியன் அவர்களுக்கு,
  நீங்கள் இருவரும் திரு கிருஷ்ணகுமார் ஏன் தமிழில் அதிக அளவு வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுகிறார் என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள். மிக்க நன்றி. அவரது முயற்சி மிகவும் மகத்தானது என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. அதற்கு நான் தலை வணங்குகிறேன்.
  திரு பாண்டியன் அவர்களே,
  நான் ஒன்றை உங்களுக்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன். எனது கருத்துக்களைப் நீங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால் திரு கிருஷ்ணகுமார் அவர்களை தமிழில் அக்கறை இல்லாதவர் என்று குறிப்பிடவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். மேலும் நான் மிகவும் மரியாதையுடனும், அவருக்கு மிகவும் மதிப்புக்கொடுத்தும், மிகவும் பணிவுடனும் எனது கேள்விகளை எழுப்பி அவரிடம் விளக்கம் கேட்டிருகிறேன் என்பதும் நன்கு விளங்கும்.
  நான் முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடிபுகுந்திருக்கிறேன். இங்கு ஒரு இந்து ஆலயம் அமைப்பதில் பல இந்து நண்பர்களுடன் ஒத்துழைத்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ் இந்து வலையத்தைப் பற்றி அறிந்துகொண்டு, அதில் வெளியிடப்படும் பல கருத்துள்ள சமய ஆராய்ச்சிகளைப் படித்து மகிழ்ந்து வருகிறேன். எனவே தாங்கள் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு தமிழில் எழுதுவதற்குள்ள சிரமத்தைப்பற்றி அறிந்திருக்க எனக்கு வாய்ப்பே இல்லை. அதைத் திரு கதிரவன் அவர்கள் நல்ல முறையில் தெளிவுபடுத்தி இருந்தார். தாங்களும் அதை ஆமோதித்து எழுதி இருந்தீர்கள்.
  மீண்டும் நன்றி.
  ஆயினும், தாங்கள் நான் எழுதியது ‘அபத்தம்’ என்று குறிப்பிட்டது சற்று அதிகம் என்று எனக்குப் படுகிறது. போகட்டும். நாம் இந்த நல்ல வலையத்தில் ஒருவருக்கொருவரை மரியாதையுடன் நடத்திக்கொள்வது ஒரு நல்ல தமிழ்ப் பண்பு என்று படுகிறது. நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.
  முப்பத்தி இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் ஆங்கிலமே பேசி எழுதி வந்தும் நான் எளிய தமிழில் எழுதி இருக்கிறேன். எனவே திரு கிருஷ்ணகுமாரும் முயன்று பார்ப்பது ‘பொன் மலர் நாற்றமுடைத்து’ (a golden flower possessing a frangrance) என்பதற்கு ஒப்பாகும் என நம்புகிறேன்.
  இதுபற்றி அவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன். வணக்கம்.

 12. திரு கிருஷ்ணகுமார் அவர்களே,
  உங்களது தன்னடக்கமான பதில் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. எங்கோ பன்னிரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் எனக்கு ‘தமிழ் இந்து’ விருந்து கிடைப்பது என்பது முன்பிறப்பின் நல்வினையே ஆகும். முயற்சியை நன்கு தொடருங்கள். நான் அதைத் தொடர்ந்து படித்து மகிழ்கிறேன். வாழ்க தமிழ் இந்து சமயம்!

 13. நல்ல தொகுப்பு கிருஷ்ணகுமார்.

  ஆழ்வார்களின் காலம் பொ.பி 6ம் நூற்றாண்டுக்குப் பிந்தையது. அவர்களது அருளிச் செயல்களின் அடிப்படையில் வால்மீகி ராமாயண சுலோகங்களின் பிரதிகளில் பிற்சேர்க்கைகள் ஏற்பட்டன என்று ஸ்ரீ பட் கூறுவது ஏற்புடைய கருத்தல்ல. ஆழ்வார்களின் காலம் பற்றி அவருக்கு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.

  உத்தர, தட்சிண பாடாந்திரங்களே கூட recension என்ற வகை சார்ந்தவை, அவை ஒற்றைப் பிரதிகள் அல்ல, தொகுப்புகளே. பல நூறு வருட கலாசாரத் தொடர்ச்சி கொண்ட ராமாயணம் போன்ற ஒரு இலக்கியப் பிரதியை இன்று வாசித்தால் கூட அதன் ஆதிகாவிய கர்த்தாவான வால்மீகியின் இதயத்துடன் நாம் பேசமுடிகிறது என்பதே ஒரு வரலாற்று அதிசயம். நமது பண்பாட்டின் உன்னதம் அது.

  உத்தர காண்டம் வால்மீகி படைத்த மூல ராமாயணத்தின் பகுதி அல்ல, பிற்சேர்க்கையே என்பது எனது உறுதியான கருத்து. ராமாயண ஆய்வாளர்கள் பலரும் சொல்லும் கருத்தும் கூட. இதற்கான வாதங்களையும் தரவுகளையும் முன்வைத்து விரிவாகவே எழுத முடியும்.

 14. // ராமானுஜாசார்யர், மஹேசதீர்த்தர், கோவிந்தராஜர், கடகர், நாகேச பட்டர் போன்றோருடைய வ்யாக்யானங்களை //

  இந்த ராமானுஜாசார்யர் யார்? கேள்விப் பட்டதே இல்லையே. பொதுவாகப் புகழ்பெற்ற வியாக்யானங்கள் –

  Govinda Raja – Bhushana
  Madhava Yogi – Amritakataka
  Shiva Sahaya – Siromani
  Nagoji Bhatta – Tilaka
  Maheswara Thirtha – Tattva Deepa
  Tryambaka Raja Makhi – Dharmakuta

 15. திரு ஜடாயு,

  // உத்தர காண்டம் வால்மீகி படைத்த மூல ராமாயணத்தின் பகுதி அல்ல, பிற்சேர்க்கையே என்பது எனது உறுதியான கருத்து. ராமாயண ஆய்வாளர்கள் பலரும் சொல்லும் கருத்தும் கூட. இதற்கான வாதங்களையும் தரவுகளையும் முன்வைத்து விரிவாகவே எழுத முடியும்.//

  இதற்கு ஓரிரண்டு அதிக பலம்வாய்ந்த தரவுகளை இங்கு சுட்டிக் காட்டினால் பயன்பெறுவேன். விஸ்தாரமாக பிறகு நீங்கள் எழுதலாம்.

 16. திரு அரிசோனன் அவர்களே உங்களை காயப்படுத்தவேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. அந்த வார்த்தை தவறுதான்.

 17. அன்புள்ள கந்தர்வன், ஏற்கனவே அங்கங்கு கொஞ்சம் எழுதியது தான். உதிரியாக தரவுகளை வைத்தால் சரிவராது. எனது நிலைப்பாட்டை முழுமையாக விளக்கி ஒரு கட்டுரையாகவே எழுதவேண்டும். அடுத்த வாரம் கட்டாயம் எழுதி விடுகிறேன். ப்ராமிஸ் 🙂

 18. வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ ஜடாயு

  \\ உத்தர, தட்சிண பாடாந்திரங்களே கூட recension என்ற வகை சார்ந்தவை, அவை ஒற்றைப் பிரதிகள் அல்ல, தொகுப்புகளே. \\

  ஆம். அது சார்ந்த விபரங்களும் வ்யாசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  உத்தர பாடாந்தரம் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் மேற்குப் பாடாந்தரங்களைக் கிளைகளாகக் கொண்டிருந்தது. இந்தக் கிளைகளும் இவற்றினிடையே தனித் தன்மைகளைக் கொண்டிருந்தன. நேபாளி, மைதிலி, பாங்க்ளா (வங்காள), சாரதா மற்றும் தேவநாகர லிபியில் எழுதப்பட்ட சுவடிகளில் உத்தர பாடாந்தரங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. தக்ஷிண பாடாந்தரங்கள் முறையே தெலுகு, க்ரந்தம் மற்றும் மலயாள அக்ஷரங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தன என்பதும் மூன்று வெவ்வேறு வரிவடிவங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பினும் மூன்றும் கிட்டத்த்ட்ட ஒரே வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் தெற்கத்திய பாடாந்தரத்தின் சிறப்பு.

  \\ உத்தர காண்டம் வால்மீகி படைத்த மூல ராமாயணத்தின் பகுதி அல்ல, பிற்சேர்க்கையே என்பது எனது உறுதியான கருத்து. ராமாயண ஆய்வாளர்கள் பலரும் சொல்லும் கருத்தும் கூட. இதற்கான வாதங்களையும் தரவுகளையும் முன்வைத்து விரிவாகவே எழுத முடியும். \\

  உங்களுடைய மற்றும் ஸ்ரீ கந்தர்வன் அவர்களுடைய – மாற்றுக்கருத்துக்கள் கொண்ட இரண்டு வ்யாசங்களும் அடுத்தடுத்து பகிரப்பட்டால் ஒரு முழுமையான பார்வை கிட்டும் என்பது என் அபிப்ராயம். அவகாசம் இருந்தால் தாங்களும் தங்கள் கருத்துக்களை தனி வ்யாசமாகப் பகிரவும். இரண்டு கருத்துக்களிலும் எனக்கு சில சம்சயங்கள் உண்டு.

  ஸ்ரீ பட் அவர்கள் மட்டிலும் முந்தைய இந்தியவியலாளர்களின் கருத்தான பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்ற கருத்தைப் பகிர்ந்து பின்னர் அது மேற்கொண்டு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

  ஸ்ரீ ஷா அவர்கள் உத்தரகாண்டத்தின் முதல் நாற்பத்து இரண்டு சர்க்கங்கள் பிற்சேர்க்கை என்ற கருத்தைப் பதிந்தாலும் மற்றையவை ஆதிகவியினாலேயே இயற்றப்பட்டு ஆனால் மூல காவ்யம் வடிக்கப்பட்ட பின் பிற்சேர்க்கையாக அவராலேயே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து தெரிவித்துள்ளார்.

  இரண்டாம் பாகத்தில் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டம் சார்ந்த பகுதிகள் 2-6 காண்டங்களுடன் எப்படி தொடர்புள்ளன என்பதற்கு மூல ஆங்க்ல வ்யாசத்தில் ஒரு நீண்ட அனுபந்தம் கொடுத்துள்ளார். தற்போது புழக்கத்தில் உள்ள கோரக்பூர் பதிப்பு மூல ராமாயணத்துடன் சரிபார்த்து ஒரு உதாரணம் மட்டிலும் பகிர்ந்துள்ளேன். ஒருக்கால் பாடாந்தர பேதம் காரணமாக மற்றைய பல உதாரணங்களை சரிபார்க்க முடியவில்லை.

  உத்தரகாண்டம் என்பது பிற்சேர்க்கை என்று கருத்துப் பதியப்படுமானால் :-

  உத்தரகாண்டத்தில் மற்ற காண்ட நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட விவரணைகள் பற்றிய தொடர்பு எப்படி விவரிக்கப்படும் – Just coincidence?

  இரண்டாம் பாகத்தில் புறச்சான்றுகளாக மஹாபாரதத்திலிருந்தும் மற்றும் உத்தரகாண்டத்திலிருந்தும் ச்லோகங்கள் உதாஹரிக்கப்பட்டுள்ளன. அவை எப்படி அணுகப்படும்? அதை மறுதலிக்க வேண்டுமானால் மஹாபாரதத்தில் ராமாயணம் பற்றிய ச்லோகங்கள் இடைச்செருகல்கள் என்று நிறுவ வேண்டும். அப்படி நிறுவ ஏதும் ஆய்வுக்கூறுகள் உண்டா அவை பரிசீலிக்கப்பட்டு முடிபுகள் உள்ளனவா?

  உத்தரகாண்டம் என்பது பிற்சேர்க்கை அல்ல – மூல காவ்யத்தின் அங்கமே என்று சொல்லப்படின் :-

  யுத்தகாண்டத்து அறுதியில் வரும் காவ்ய ப்ரசஸ்தி / பலச்ருதி மற்றும் உத்தரகாண்டத்து அறுதியிலும் வரும் காவ்ய ப்ரசஸ்தி / பலச்ருதி எப்படி விளக்கப்படும்? இது சமப்ந்தமாக ஸ்ரீ ராமாஷ்ரய ஷர்மா பகிர்ந்த சமாதானங்கள் போதுமானவையா என்பதையும் அறிய விழைகிறேன்

 19. அன்புள்ள ஸ்ரீ ஜடாயு அவர்களே, 24 அக்ஷரங்கள் கொண்ட காயத்ரி மந்திரம். ஒரு அக்ஷரத்திற்கு 1000 ஸ்லோகங்கள் வீதம் காயத்திரி அக்ஷர வரிசையிலேயே 24000 ஸ்லோகங்களும் அடங்கியது ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் உட்பட.
  உத்தரகாண்டம் இல்லையென்றால் காயத்திரி மந்திரத்தின் எல்லா அக்ஷரங்களும் ராமாயண காவியத்தில் மேற்கண்ட அமைப்பின்படி அலங்கரிக்க முடியாது. ஆகவே, உத்தரகாண்டம் வால்மீகியின் மூலப் படைப்புத் தான் என்று தோன்றுகிறது.
  24 அக்ஷர வரிசையும் அதன்படி வரும் ஸ்லோகங்களும் “https://www.valmikiramayan.net”
  என்ற லிங்க்-இல் காணப்படும். (பாலகாண்டத்தில்)
  இது ஹிந்துக்கள் எல்லோரும் நம்பிக்கை வைத்திருக்கும் ஐதீஹம் தான் என்றாலும் அதற்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

 20. ஆர் எஸ் ஐயர் அவர்களைப்போன்று இப்படியெல்லாம் சொல்லப்படும் வியாக்யானங்கள் ஆராய்ச்சி மனப்பான்மை ஹிந்து சமயிகளுக்கிடையே வளர்வதற்கு தடையாகும். இன்றைய உலகளாவிய சூழலில் நம்முடைய தர்மத்தினை சமய விழுமியங்களை காக்கவேண்டும் எனில் ஆழ்ந்த அறிவோடு ஆராய்ச்சி மனப்பான்மை ஆர்வம் ஈடுபாடு ஆகியவையும் அவசியம்.
  இந்த மனப்பான்மையை விட்டு நியாயம் மற்றும் மீமாம்சத்தோடு அறிவியல் பார்வையில் நமது இலக்கியம், கலை, சமூக அமைப்பு அத்துணையையும் நாம் ஆய்வு செய்வோம். அந்தவகையில் பயணித்டுக்கொண்டிருக்கும் ஸ்ரீ ஜடாயு ஆகியோரின் பணி தொடரட்டும்.

 21. நான்கு வேதங்களும் இன்றும் ஒரு சொல்கூட மறையாமல் பாதுகாக்கப்பட்டு வருவதற்குக் காரணம் ‘கனபாடம்’ ஆகும். வேதத்தில் இருக்கும் சொற்கள் சிலவற்றை மீண்டும் மீதும் திரும்பச் சொல்வதும், திரும்ப அடுத்துவரும் சொற்களைச் சேர்த்துக்கொண்டு, முதலில் சொல்லப்பட்ட சில சொற்களை விட்டுவிடுவதுமே ஆகும். இப்படி வேதத்தினை ஓதத் தெரிந்தவர்களை ‘கனபாடிகள்’ என்று சொல்வார்கள். இவ்வாறு ‘கனம்’ சொல்பவர்கள் ஒரு சொல்லை மறந்தாலும் ‘கனத்தை’ ஓதுவது என்பது இயலாது. ‘கனம்’ ஒதுவதுமூலம் வேதத்தின் ஒரு சொல்லும் விட்டுப்போகாமல் பாதுகாக்கப் பட்டது.
  நான்கு வேதங்களும் இன்றும் அழியாமல் ஒருசொல்லும் விட்டுப் போகாமல், ‘ஸ்வரத்துடன்’ காக்கப்பட்டு வருவது கனபாடிகள் மூலம் மட்டுமே. அதனாலேய தமிழில் வேதத்தை ‘எழுதாக் கிளவி’ (unwritten words) என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். தவிரவும், வேதத்தில் ‘ஸ்வரங்கள்’ — அதாவது, ஒலிகளைக் கூடியும், குறைத்தும், இயல்பாகவும் சொல்வது மிகவும் முக்கியம் ஆகும். ‘ஸ்வரம்’ மாறினால் பொருள் மாறும் என்பதால், வேதங்களை எழுதப் படாமல் நினைவிலேயே பாதுகாத்து வந்தார்கள். அச்சில் ஏறும்பொழுது உருமாறுவதற்கும், சேர்ப்பதற்கும், விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
  வால்மீகியின் இராமாயணம் முதலில் நினைவிலேயே கொள்ளப்பட்டது என்றாலும், வேதத்தைப்போல ‘கனம்’, ‘ஸ்வரம்’ அதில் இல்லாததால், அதில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கும், இடைச்செருகல் செய்யவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன.
  பின்னர், மற்ற மொழிகளில் இராமாயணம் எழுதப்பட்ட பொழுது, அந்தந்த நாட்டின் பழக்க வழக்கங்களுக்குத் தகுந்தவாறு, மாற்றங்கள் செய்து எழுதப் பட்டது. கம்பர் தனது இராமகாதையை எழுதும் பொழுது தமிழ்நாட்டு மரபை அனுசரித்தே எழுதினர். எனவேதான், இராவணன் சீதாப்பிராட்டியை கையைப்பற்றிக் கவர்ந்து சென்றதாக எழுதாமல், நிலத்துடன் பெயர்த்து எடுத்துச் சென்றதாக இயம்பினார்.
  அயோத்தியையும், கோசல நாட்டையும் பற்றி அவர் விவரித்ததெல்லாம் சோழ வள நாட்டின் விவரிப்புதான்.
  அவர் இராமபிரானைத் திருமாலின் அவதாரமாகவே உருவமைத்திருந்தார்.
  எனவே, திரு கிருஷ்ணகுமாரின் கருத்தாராய்வை ஒரு விஞ்ஞான நோக்கத்துடன் பார்ப்பது சாலச் சிறந்தது என்பது எனது தாழ்மையான கருத்து. சான்றுகள் இல்லாமல் கருத்துத் தெரிவிப்பது, திரு கிருஷ்ணகுமாரின் சிறந்த பணிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ஒப்பாகும் என்பது எனது துணிபு.

 22. கருத்துப்பகிர்ந்த மற்ற அன்பர்களுக்கும் நன்றி.

  மரபு சார்ந்த பார்வைக்கு அதற்கு உரித்தான கௌரவம் என்றும் உண்டு. மரபு என்பது எண்ணிறந்த பலதலைமுறைகளாக பரிச்ரமத்துடன் பாதுகாக்கப்பட்டு வருவது. ராமாயணத்தை பாராயணம் செய்து வருதல், வ்யாக்யானாதிகளை கற்றறிந்த சான்றோர் வாயிலாகக் கேட்டு கசடறக்கற்று அதை அடுத்த தலைமுறைக்கு கற்பித்து என வாழ்வின் அங்கமாக வால்மீகி ராமாயணத்தை – கம்ப ராமாயணத்தை – துளசி ராமாயணத்தை கைக்கொள்வது மரபு.

  மரபின் பாற்பட்ட பார்வையாளர்களே முதன் முதலில் க்ரிடிகலாக வால்மீகி ராமாயணத்தை ஆய்வு செய்தனர் என்பது முதல் பாகத்தில் பகிரப்பட்டுள்ளது. இடைச்செருகல்கள் என்று கருதப்படும் ச்லோகங்களை முதன்முதலாக துலக்கியவர்கள் ஆதிகாவ்யமான ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அதை வ்யாக்யானம் செய்யப்புகுந்த மரபார்ந்த சான்றோர்கள் என்பதனை மறக்கலாகாது.

  கருத்தாழம் மிகுந்த ஆய்வு என்பது மரபாளர்களிடம் இருந்து தான் துவங்கியது என்பதனையும் இந்தியவியலாளர்களின் ஆய்வு என்பது இந்த கட்டத்திலிருந்து முன்னகர்ந்த ஒரு செயற்பாடு தான் என்ற விஷயமும் இந்த வ்யாசத்தின் முதற்பகுதியில் தெள்ளெனத் தெளிவாக பகிரப்பட்டுள்ளது.

  ஆய்வாளர்களின் பார்வையும் மரபு சார்ந்தவர்களின் பார்வையும் ஏதோ எதிரும் புதிருமானது அல்ல என்ற விஷயம் வ்யாசத்தை முழுமையாக வாசித்தால் துலங்கும் விஷயம். பலப்பல விஷயங்களில் இரு பார்வைகளும் குவியவும் செய்கின்றன. பலப்பல விஷயங்களில் பார்வைகளில் வேறுபாடுகளும் உள்ளன.

  அதே சமயம் ஆய்வாளர்களின் பார்வைகள் அனைத்தும் ஏற்கப்படவும் இல்லை. அல்லது ஆய்வாளர்கள் அனைவரின் பார்வைகளும் மறுக்கப்படவும் இல்லை.

  கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூறுகள் அவற்றினை விவரிக்குமுகமாக ஆய்வாளர்கள் கொடுக்கும் விவரணைகள் அதைத்தொடர்ந்து அவர்கள் அடையும் முடிபுகள் என்று இவையனைத்தும் ஆய்வின் அங்கம். இவற்றை அணுகுபவர்கள் கறாரான போக்குடன் ஆய்வுகளை விசாரம் செய்வர்.

  இந்த பாகத்தைத் தொடர்ந்து அடுத்த படி விசாரிக்கப்படவிருக்கும் ஸ்ரீ ப்ராகிங்க்டன் அவர்களது ஆய்வுப் பார்வையில் அவரது ஆய்வுக்கூறுகளும் அவர் அடைந்த முடிபுகளும் எவ்வாறு அணுகப்பட்டன என்பதனைப் பார்க்கலாம்.

  ஆய்வுகள் ஒரு விஷயத்தை எப்படி நிர்த்தாரணம் செய்கின்றன என்பதன் ஆதாரத்தில் மரபு நிலைப்பதில்லை. கற்று கற்ற விஷயத்தில் ஆழ்ந்து கற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு போதித்து அது அதையடுத்து அதையடுத்து என்று தலைமுறைகள் கடந்து பாதுகாக்கப்படுவது மரபு. மரபு என்றும் ஸ்வதந்த்ரமான ஆய்வின் பாதையில் குறுக்கிட்டதும் இல்லை. அவற்றால் சலனமடைந்ததும் இல்லை. மரபுக்கூறுகளுடைய பாட்டை தனி;

  ஸ்ரீ ஜடாயு அவர்கள் முன்வைக்கும் ஆய்வுக்கூறுகள் எவை அவற்றுக்கு அவர் அளிக்கும் விவரணைகள் மூலம் எவ்வாறு தன் முடிபுகளை எட்டுகிறார் என அறிய ஆவலாக உள்ளேன். கூடவே ஸ்ரீ கந்தர்வன் அவர்களுடைய விசாரங்களும்.

  இந்த பாகம் சம்பந்தமாகப் பகிர வேண்டிய ஓரிரு விஷயங்கள் அடுத்த உத்தரங்களில்.

 23. \\ // ராமானுஜாசார்யர், மஹேசதீர்த்தர், கோவிந்தராஜர், கடகர், நாகேச பட்டர் போன்றோருடைய வ்யாக்யானங்களை //

  இந்த ராமானுஜாசார்யர் யார்? கேள்விப் பட்டதே இல்லையே. பொதுவாகப் புகழ்பெற்ற வியாக்யானங்கள் – \\

  இந்த வ்யாசத்திற்காக நான் மேற்தகவல்களைப்பெறும்போது நாடிய உரல்

  https://valmiki.iitk.ac.in/index.php?id=amrutakatakaE

  மேற்கண்ட உரலில் தக்ஷிண பாரதத்தைச் சார்ந்த வ்யாக்யானாதிகளைத் தவிர உத்தரபாரதத்தைச் சார்ந்தவர்கள் எழுதிய வ்யாக்யானங்களும் பகிரப்பட்டுள்ளன. முழுக்குறிப்புகளும் இல்லை. ஆனால் பகிரப்பட்ட பெயர்களிலிருந்து சில உத்தரபாரதத்தைச் சார்ந்தவை என அனுமானிக்கிறேன்.

  ராமானுஜீய வ்யாக்யானம் என்பது கண்டல ராமானுஜரால் எழுதப்பட்டது என்ற குறிப்பு மட்டிலும் கிடைக்கிறது. கூகுளிலிருந்து இவர் பற்றிய மேற்தகவல் ஏதும் கிட்டவில்லை. கண்டல என்பது ஆந்த்ரப்ரதேசத்தைச் சார்ந்த ஒரு விகுதி என நினைவு.

  இன்னொரு கவனத்தைக்கவரும் வ்யாக்யானம் அப்பைய்ய தீக்ஷிதேந்த்ரரால் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ராமாயண தாத்பர்ய நிர்ணயம். இது அடையப்பலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரால் இயற்றப்பட்டதா என சம்சயமெழுகிறது.

  உன்மத்த பஞ்சாசத் எழுதிய ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் இயற்றிய ஒரு வரதராஜ ஸ்தவம் நினைவில் உள்ளது. ஆனால் இவரே ராமாயணத்திற்கும் கூட ஒரு வ்யாக்யானம் எழுதியுள்ளாரா என ஆச்சர்யமாக உள்ளது.

  மேற்கொண்டு இது சம்பந்தமான விபரங்களை ஸ்ரீமான் கந்தர்வன் ஸ்ரீமான் சார்ங்க் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ஆழ்ந்த அன்பர்கள் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  ஆழ்வார்களின் காலக்ரமம் பற்றி எனக்கு தகவல்கள் ஏதும் தெரியாது. மூல ஆங்க்ல வ்யாசத்தில் பகிரப்பட்ட தகவல் அப்படியே என்னால் பகிரப்பட்டுள்ளது. காலக்ரமம் தவறானதால் ஆழ்வாராதிகள் ராமாயண மூல க்ரந்தத்தில் இடைச்செருகல்கள் செய்திருக்கலாம் என்ற ஆய்வுக்கூறு நிராகரணம் செய்யத்தகுந்தது எனத் தெரிகிறது.

 24. இந்த பாகத்தில் க்ரிடிகல் எடிஷன் பதிப்பு என்ற முயற்சியில் ஈடுபட்ட பதிப்பாசிரியர் குழுவினரின் முயற்சிகள் அவர்களுக்கு இருந்த சவால்கள் அவர்கள் எதிர்கொண்ட விஷயங்கள் அவர்களது அணுகுமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

  மிகவும் குறுகிய விஷயமாக விவரிக்கப்பட்டிருந்தாலும் நான் மிகவும் கவனமாக அணுகிய விஷயம் வால்மீகி ராமாயணப் படைப்பாய்வில் ஆய்வாளர்கள் மூலநூலை ஆய்வதற்காக எடுத்துக்கொண்ட மற்றும் புறந்தள்ளிய ராமகதைகள்.

  \\ பௌத்த ஜைன ராமாயணங்கள் வேறு கட்டமைப்பில் வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டுள்ளதால் அந்த ராமாயணங்கள் இந்த முயற்சியில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. \\

  மூல வ்யாசத்தில் சம்பந்தப்பட்ட ஆங்க்ல வாசகத்தை கீழே பகிர்கிறேன்.

  The various versions of the Rama katha contained in Jaina and Budhist traditions have been ignored, for, as Dr.G.H.Bhatt remarks, “they have altogether different setting with a special purpose and are, therefore of little help” (The Balakanda Introduction P.XXIX, 1960)

  இலக்கிய பரிபாஷையில் மறுவாசிப்பு என்று எவற்றை அடையாளப்படுத்துகிறார்கள் என்ற விபரங்கள் அறியேன்.

  ஆனால் வால்மீகிராமாயணம் பற்றிய ஆய்வில் ராமகதையைச் சொல்லும்படிக்கான மற்றைய பல க்ரந்தகளைப் புறச்சான்றாக எடுத்துக்கொண்ட (முழுக்குறிப்புகளும் வ்யாசத்தின் இந்தபாகத்தில் மேற்கொடுக்கப்பட்டுள்ளது) ஆய்வுக்குழுவினர், பௌத்த மற்றும் ஜைன ராமாயணங்களை புறந்தள்ளியுள்ளனர் எனத்தெரிகிறது.

  இதற்கு ஆய்வுக்குழுவினர் இரண்டு காரணங்களை முன் வைக்கின்றனர்.

  ஒன்று வேறுபடும் கட்டமைப்பு – altogether different setting

  இரண்டு வேறுபடும் நோக்கம் – special purpose

  ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள பாத்ரங்கள் பௌத்த ஜின ராமாயாணங்களில் காணப்பட்டாலும் இந்த ராமாயணங்களில் அந்த பாத்ரங்களிடையே சொல்லப்படும் உறவு முறைகள் மாறுகிறது. இப்படி ஒரு அடிப்படை மாற்றமிருப்பதால் அதை அடியொற்றி கதையின் வடிவிலும் கூட மாற்றங்கள் காணக்கிட்டுகிறது. ஆய்வுக்குழுவினர் இவை எழுதப்பட்டிருக்க வேண்டிய வேறு படும் நோக்கத்தைப் பற்றியும் ப்ரஸ்தாபித்துள்ளது கவனிக்கத் தக்கது.

  மேற்சொன்னவை இந்த விஷயம் பற்றி விக்கிபீடியா மற்றும் சீதாயண அலக்கிய உத்தரங்களிலிருந்து பொதுவாகத் தெரிந்த விஷயங்கள். ஹிந்துஸ்தானத்தை அடுத்த தாய்லாந்து, வியத்னாம், இந்தோனேஷியா போன்ற தேசங்களிலும் ராமகதை ப்ரபலமானது எனத்தெரிகிறது. கதையின் வடிவில் பாத்ரங்களின் உறவுமுறைகளில் வேறுபாடுகள் உள்ளதா என்ற விபரம் தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் பகிரவும்.

  பௌத்த ஜின ராமாயணங்கள் அதனதன் வடிவில் அதனதன் நோக்கப்படி அந்தந்த சம்ப்ரதாயத்தில் முக்யத்துவம் வாய்ந்தவை என்ற விஷயத்தை முற்றிலுமாகப் புரிந்துகொள்கிறேன். மறுவாசிப்பு என்ற இலக்கிய பரிபாஷையின் படி இவை அடையாளப்படுத்தப்படுமா என்ற விஷயம் தெரியவில்லை.

  ஆனால் ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணம் காட்டும் ராமகதையை ஒத்த — தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் ஹிந்துஸ்தானத்தின் பல பாஷைகளில் எழுதப்பட்ட ராமகதையிலிருந்து — இவை விலகியவை என்பது திண்ணம்.

  சனாதன தர்மம் என்ற மரபை ஒட்டியபடிக்கான — ஒத்த வடிவை உடைய — அருளாளர்கள் படைத்த — கம்பராமாயணம், ராம்சரித்மானஸ் போன்ற– பலப்பல பாஷைகளில் எழுதப்பட்ட ராமாயணங்களை — மரபாளர்கள் “ஆர்ஷ வசனம் – ஆன்றோர் வாக்கு” என்ற படிக்கு சிரமேற் கொள்ளுகிறார்கள் என்பது முதல் பாகத்தில் பகிரப்பட்டது. புறச்சமயத்தைச் சார்ந்த ராமகதைகள் இதே அலகீட்டில் ஆர்ஷ வசனம் என்ற படிக்கு சனாதன தர்மத்தைச் சார்ந்தவர்களால் ஏற்க முடியாது என எண்ணுகிறேன்.

  ஆனால் சனாதனத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த ஹைந்தவம் என்ற கோட்பாட்டில் — புறச்சமயங்களான பௌத்தம் மற்றும் ஜைனம் போன்றவையும் உள்ளதால் — வேறு வடிவத்தை உடைய வேறு நோக்கத்தை உடைய இந்த ராமகதைகளும் அடங்கும் என்பது தெரிகிறது.

  இவை எனது புரிதல்கள். இதை ஒத்த கருத்துடைய ஆனால் மேலும் தெளிவு கொடுக்கக்கூடிய மற்றும் இக்கருத்திலிருந்து மாற்றுக்கருத்து கொண்ட அன்பர்களின் புரிதல்களையும் அறிய விழைகிறேன்.

 25. அன்பார்ந்த திரு. கிருஷ்ணகுமார்………….

  எனக்கு பற்பல வேலைகள் இருந்த காரணத்தினால் இணையத்தில் என்னால் போதுமான நேரம் செலவிட முடியாமல் போனது…. ஆகவே காலம் கடந்த உளமார்ந்த பொங்கல் மற்றும் தை தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்… சித்திரை திங்களன்று சித்திரை நன்னாள் வாழ்த்தினை கண்டிப்பாக கூறுவேன்…

  //கடந்த இரண்டரை தசாப்தமாக நான் ஹிந்துஸ்தானத்தின் பல எல்லைப்பகுதிகளில் உத்யோகம் செய்தபடிக்கு தமிழில் மிகக் குறைவாகப் பேசி, தினப்படி உரையாடல்களில் ஹிந்தி, ஆங்க்லம், பஞ்சாபி/டோக்ரி மற்றும் தமிழ் – முன் பின் சொன்ன அளவில் பேசிவரும் படி என்னுடைய எந்த பாஷைப் பேச்சிலும் அடுத்த பாஷையின் தாக்கம் ஒரு மஜ்பூரி.//

  அன்பரே இதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்று கொள்ளவியலாது … வரலாற்றில் இந்திய தேயத்தில் இருந்து வணிகத்திற்காக கடல் கடந்து சென்ற முன்னோடி இனம் தமிழ் இனம். மலேயா, சாவா, கிரேக்கம், ரோமாபுரி,சீனம் போன்ற தேசங்களுக்கு சென்ற போதிலும் யாரும் தங்களுடைய தமிழன் என்கிற இன அடையாளத்தையும் இழக்க வில்லை, தமிழ் மொழியின் மீது தாங்கள் சென்று வந்த நாடுகளின் மொழியின் தாக்கத்தை ஏற்படுத்தவும் இல்லை. சங்க காலம் முதற் கொண்டு சங்கமருவிய காலம்,பக்தி இயக்க காலம் வரை அவ்வண் காலங்களில் தொல்காப்பியர் இயற்றிய இலக்கண முறையை பின்பற்றி தான் தமிழை வளர்த்தார்கள்.

  சைவ குரவர்கள், சந்தான குரவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் முதல் கம்பன் வரை அனைவரும் கைகளை கட்டி கொண்டு தங்கள் ஆசான் தொல்காப்பியர் வகுத்த இலக்கண முறை படிதான் நடந்து கொண்டார்கள். யாரும் பிறழ்ந்து போனதில்லை. திருப்பாவை படிய ஆண்டாளின் வரிகளை கவனியுங்கள் அங்கு எங்காவது கிரந்த நஞ்சை, மணிப்ரவாளம் என்னும் புல்லுருவி தனத்தை எங்கணும் காண இயலுமோ. கம்பனின் தமிழில் எங்காவது மேற்கூறிய கிரந்த நஞ்சை காண முடியுமா. சில இடங்களில் வடமொழி சொற்களை கையாண்டு இருக்கலாம் ஆனால் அவை மிக குறைவு தான். 100க்கு 5 விழுக்காடு என்கிற அளவில் தான் அவை உள்ளன.

  நான் இந்து சமயத்தின் மீது பற்று கொண்டாலும், சைவ சமயத்தின் மீது தான் நமக்கு மீளா பற்றுள்ளது. எம்பெருமான் ஈசனை தவிர பிற தெய்வங்கள் யாவும் புற தெய்வங்களே நமக்கு. ஆயினும் இன்று வரை யாம் சைவ இலக்கியமாம் அருணகிரிநாதரின் பாடல்களை படித்ததில்லை, விரலாலும் சீண்டியதில்லை காரணம் அதிலுள்ள மிகுதியான வடமொழி சொற்கள். அருணகிரிநாதர் தான் என்றில்லை தாயுமானவர், பாம்பன் சுவாமிகள் போன்றோரின் பக்தி இலக்கியங்களை அதில் எவ்வளவு தான் மாபெரும் மெய்பொருள்கள் அடங்கி இருப்பினும் அதை யாம் ஒறுத்து ஒதுக்கினோம். கிருஷ்ணா குமார் அவர்களே இன்றும் நான் உங்களை வாழும் அருணகிரிநாதராக தான் பார்க்கிறேன்.

  தமிழ் மொழி என்பது ஏனைய இந்திய மொழிகளை காட்டிலும் தனி தன்மை வாய்ந்தது. மற்றைய இந்திய மொழிகள் அனைத்தும் வடமொழி இலக்கணத்தை தழுவி நிற்க, தமிழ் மட்டுமே தனித்தன்மை வாய்ந்த இலக்கண வளத்தை பெற்றுள்ளது. ஏனைய மொழிகளை போன்று “ஷ,ஜ,ஹ.க்ஷ.ஸ” போன்ற வல்லோசை மிகுந்த ஒலிப்புகளை தன்னகத்தே ஏற்றுக்கொண்டதில்லை. இந்தியாவில் உள்ள அணைத்து மொழிகளும் “பாஷைகள்” என்றிருக்க தமிழ் மட்டுமே “மொழி” என்று தனித்து சிறப்புடன் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இராமாயணம் மொழி பெயர்கபட்டது ஆனால் அதில் வரும் கதை பாத்திரத்தின் பெயர்கள் யாவும் வடமொழி தழுவி நிற்க கம்ப இராமாயணத்தில் மட்டுமே அணைத்து பெயர்களும் தமிழ் மொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்க பெற்றுள்ளது. எ.கா. இராமன். இலக்குவன், சீதை, வீடணன், தயரதன் போன்று. நினைத்திருந்தால் கம்பன் வடமொழி ஒலிப்புகளோடு இயற்றி இருக்கலாம். யாரும் அவனை ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் தமிழின் இனிமையை ராமனுக்காகவும் விட்டு கொடுக்க கம்பன் ஆயத்தமாக இல்லை. கம்பனை விடவா நாம் அறிவுள்ள இந்துக்கள்.

  ஆகவே, தங்களிடம் இந்த அடியேன் இரந்து கேட்டு கொள்வது ஒன்று தான். ஆரிய மொழி இறந்து பட்டு போனது காலத்தின் கோலம். ஒரு இந்துவாக வடமொழியை உயிரூட்டி அனைவர் நாவிலும் கொண்டு சேர்க்க முயற்சி எடுப்போம். அதை விடுத்து, வடமொழியை உய்விப்பதற்காக வாழும் மொழியாம் தமிழின் இனிய சொற்களை கொன்று புதைத்து விட்டு, அவ்வண் இடங்களில் வடமொழி சொற்களை வலிந்து திணிப்பது எவ்வகையில் அறம் என்பதை தாங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று தங்களின் சுடர்மிகும் அறிவுக்கு முன்னால் தலை தாழ்த்தி கேட்டு கொள்கிறேன். நன்றி.

 26. தாயுமானவன்

  //ஆரிய மொழி இறந்து பட்டு போனது காலத்தின் கோலம். ஒரு இந்துவாக வடமொழியை உயிரூட்டி அனைவர் நாவிலும் கொண்டு சேர்க்க முயற்சி எடுப்போம். அதை விடுத்து, வடமொழியை உய்விப்பதற்காக வாழும் மொழியாம் தமிழின் இனிய சொற்களை கொன்று புதைத்து விட்டு, அவ்வண் இடங்களில் வடமொழி சொற்களை வலிந்து திணிப்பது எவ்வகையில் அறம் //

  இது சம்பந்தமாக விரிவான விளக்கம் தர முடியுமா, எது வட மொழி வார்த்தை, எது தமிழ் வார்த்தை என்று. நான் கேட்பது பெரியார் comedy இல்லை. ஆதாரபூர்வமான ஆராய்ட்சிகள்.

 27. ” கிரந்த நஞ்சை, மணிப்ரவாளம் என்னும் புல்லுருவி தனத்தை எங்கணும் காண இயலுமோ. கம்பனின் தமிழில் எங்காவது மேற்கூறிய கிரந்த நஞ்சை காண முடியுமா. சில இடங்களில் வடமொழி சொற்களை கையாண்டு இருக்கலாம் ஆனால் அவை மிக குறைவு தான். 100க்கு 5 விழுக்காடு என்கிற அளவில் தான் அவை உள்ளன. -”

  அன்புள்ள தாயுமானவன் அவர்களே,

  தங்கள் கருத்து மிக்க வேதனையானதும், தவறானதும் ஆகும். ஏனெனில், கிரந்தம் என்பது ஒரு மொழி அல்ல.அது ஒரு எழுத்து வகையே. வட இந்தியாவில், சந்தஸ்- என்ற ஆதி சமஸ்கிருதமும் , பின்னர் வந்த நவீன அல்லது புதிய சமஸ்கிருதமும் , தேவநாகரி என்ற எழுத்து வகையை பயன்படுத்தி எழுதப்பட்டன. ஆனால் தென் இந்தியாவில் தேவநாகரிக்குப் பதிலாக கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. அவ்வளவே. எனவே ஒரு எழுத்துவகைக்கு எதிராக தாங்கள் வெறுப்பை காட்டுவது பொருளற்றது

  அப்படிப் பார்த்தால், பெரியார் எழுத்துக்களை தமிழில் புகுத்தியவர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்… அந்த எழுத்துக்களை நாம் கடந்த 35 வருடங்களாக பயன்படுத்திவருகிறோம் .

  பிற மொழிகளையும், பிற எழுத்துவகைகளையும் அரக்கி என்றும், நஞ்சு என்றும் சொல்லி கடும் விமரிசனம் செய்வதால் யாருக்கும் உருப்படியான ஒரு பலனும் இல்லை. மொழி இயலில் ஆக்ஸ்போர்ட் அகராதியில் ( டிக்சனரியில்) ஆங்கில மொழியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட திசை சொற்களை அவர்கள் ஏற்றார்கள். இன்றைய ஆங்கில அகராதிகளில் தமிழ், தெலுங்கு, மந்தாரின், காண்டனீஸ், ஸ்பானிஷ், இந்தி, சமஸ்கிருதம், போன்ற பிறமொழி திசை சொற்கள் ஏராளம் உள்ளதால், அந்த மொழி மேலும் ஏற்றம் பெற்று , இன்று உலகப் பொதுமொழி என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மறைந்தாலும், ஆங்கில மொழியின் வளர்ச்சி மேலும், மேலும் அதிகரித்து வருகிறதே ஒழிய குறையவில்லை.

  ஆங்கிலேயர்களுடன் நூறாண்டு போர்புரிந்தவர்கள் பிரஞ்சுக் காரர்கள். அதாவது நீண்ட கால எதிரிகள். ஆனால் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆங்கில அகராதிகளில் , அந்த வெறுப்பை காட்டாமல், ஏராளமான பிரஞ்சு சொற்களையும் சேர்த்துக்கொண்டனர். ஒட்டு மாங்கனி மேலும் சுவைபெறும் என்பது அறிவியல் உண்மை.

  எட்டுத்திக்கும் சென்று அறிவுச்செல்வங்களை சேகரித்து நம்மிடம் குவிக்க வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று உலகுக்கு முதலில் உரைத்த இனம் தமிழினம். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற உண்மையையும் பல ஆயிரம் ஆண்டு முன்னரே உரைத்த இனம் நம் தமிழினமே ஆகும். நம்மை வளர்த்துக்கொள்வோம், பிறரும் வளர வழி வகுப்போம்.

  அருணகிரியாரின் பாடல்களை தாங்கள் படிக்காததால் யாருக்கு நட்டம் ? அவற்றை தயவு செய்து படித்து, அந்தப் பாடல்களை நடைமுறை தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு , எளிய கவிதையாக ஆக்குங்கள் நண்பரே. அனைவரும் கந்தவேளின் அருள் பெற உதவுங்கள்.

 28. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்

  இடைவிடாது மாற்று மொழிகளில் புழங்கும் ஒருவருக்கு மொழிக்கலப்பு நிகழ்தல் என்பதன் சாத்தியக்கூறை விளக்க எனக்கு தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  உங்களது கலப்பில்லாத் தூய தமிழ் மொழி என்ற அலகீட்டினை நான் மிகவும் மதிப்பதும் அதை சிரமேற்கொள்ளுவதும் உங்களுக்குத் தெரிந்ததே. அதன் பாற்பட்டு மொழிக்கலப்பை நீங்கள் கண்டால் அதனை இடித்துறைக்க விழைவதையும் கூட நான் மிகவும் மதிப்பு மிகவே அவதானிக்கிறேன்.

  வலிந்து நான் மாற்று மொழிகளைக் கலப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.

  கலப்பில்லாத் தூய தமிழ் மொழியில் எழுதுவது புழங்குவது என்பது மிக உயரிய விஷயம்.

  என்னுடைய கருத்துக்களை ஆங்க்லத்தில் எழுதுவதா அல்லது கொஞ்சம் கஷ்டப்பட்டாவது மாற்று மொழிகள் கலந்த தமிழில் எழுதுவதா என்றால் பின்னர் சொன்னதையே நான் கடைபிடிக்க விழைவேன். சில சமயம் என் கருத்துக்களை பல அன்பர்களால் உள்வாங்க முடியவில்லை என்று அறிந்த பின்னர் என் எழுதுமுறையில் மாற்றங்களை கொணர ப்ரயாசித்துள்ளேன். அவசர கதியில் எழுதும் உத்தரங்களில் மாற்று மொழி ப்ரயோகம் அதிகமாக இருக்கலாம். வ்யாசம் சமர்ப்பிப்பது எனில் அதை ஒரு முறை எழுதி பரிசீலனை செய்த பிறகே — என்னால் இயன்ற வரை சீர் செய்த பிறகே சமர்ப்பிக்கிறேன். எழுதும்போது என் எண்ணப்பாங்கின் படி எழுதி முடித்த பின் — அதை சரிசெய்ய விழைகிறேன்.

  அடுத்து சமர்ப்பிக்க இருக்கும் வ்யாசத்தொடரில் இன்னமும் ப்ரயாசிக்கிறேன் ஐயா.

  மனதிற்கு சொல்லொணா வருத்தம் அளிக்கும் விஷயம் தாங்கள் திருப்புகழைப் பற்றித் தெரிவித்த கருத்து. நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் அமுதினுமினிய திருப்புகழை எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் தமிழர்களுக்கு மட்டிலும் என்று அளிக்கவில்லை ஐயா.

  பாருளீர் வாருமே வந்து மயிலையும் அவன் திருக்கையயிலையும் அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே என்று பரந்து விரிந்த உலகோர் அனைவரையும் வருந்தி அழைத்து தமிழ்க்கடவுள் குமரன் திருவடிகளில் சேர்க்கும் பெருமையை நான் என்னவென்று சொல்வது. சென்றவிடமெலாம் திருப்புகழ் இசைக்கப்பட்டாலேயே எந்த மொழியைச் சார்ந்தவர்களும் அதில் சொக்கி மயங்குவதை என்னென்று சொல்வது. மலேயரும் சீனரும் த்வீபாந்தரங்களில் எந்தெந்த மொழி பேசுபவரையும் திருப்புகழ் தன் வசமாக்குகிறது. தில்லிமாநகரத்தில் சர்தார் இஷ்விந்தர்ஜித் சிங்க் என்ற அன்பர் அதே போல் இந்த தெய்வத்திருப்பாவினால் கவரப்பட்டு அதை இசைக்கும் போது — அதில் மனது ஒன்றி மகிழ்ந்து முருகன் திருவடிகளை நினைத்தாலும் — மனதில் ஒரு பகுதியில் எனது தாய்மொழி தமிழில் யாக்கப்பட்ட பா உலகோரை எப்படியெல்லாம் கவர்கிறது என்றும் வியந்ததுண்டு. அது தவறு என்று உங்கள் உத்தரம் தெரிவிக்கிறது.

  உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் மீது பற்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தூய தமிழ்க்காதலின் மீது என்றும் எனக்கு உகப்பும் மரியாதையும் உண்டு.

  உங்கள் அளவுக்கு சைவத்தின் மீது எனக்கு பற்று இல்லாமல் இருக்கலாம். நான் சைவன் இல்லையே. ஆனால் ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்களை மதிக்க வேண்டும் என்று எங்கள் வள்ளல் பெருமான் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதிலிருந்து பிறழ்பவர் நரகுழல்வார் என்றும் இடித்துரைத்துள்ளார். என் உத்தரம் சிவத்தொண்டு புரியும் உங்களுக்கு உகப்பளிக்கவில்லையெனில் க்ஷமிக்கவும்.

  பொங்கல் வாழ்த்து பகிர்ந்த அந்த திரியில் மேற்கொண்டு கருத்துப் பகிரவும். கிழக்கு ஈழத்தில் இஸ்லாமிய சஹோதரர்கள் சிவாலயங்களையும் தமிழர்களது வழிபாட்டு ஸ்தலங்களையும் அழித்தமை பற்றி உங்கள் கருத்தைப் பதியவும். சிவலிங்க வழிபாட்டை இழிவுடன் பேசிய சீமான் என்ற க்றைஸ்தவ அன்பரை தமிழிலும் சைவத்திலும் பற்றுடைய தங்களைப்போன்றோர் சீர்திருத்த மேற்கொண்டுள்ள அல்லது மேற்கொள விழையும் விஷயம் பற்றியும் அந்தத் திரியில் மேற்கொண்டு கருத்துப்பதிந்தால் அந்த திரிக்கு உரிய விவாதம் தொடர சரியாக இருக்கும்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 29. திரு தாயுமானவன்

  ஆன்மிக அனுபவத்துக்கு மொழி ( எந்த மொழியாக இருந்தாலும் ) ஒரு அளவுக்குத்தான் உதவி செய்யும். எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கி, ஒதுங்கி அமரும்போது நமக்கு இருப்பது மௌனம் ஒன்றுதான். இந்த தளத்தில் இருப்பவர் யாரும் தமிழுக்கு எதிரிகள் அல்லர். பிற மொழிகளை வெறுப்பவர்களும் அல்லர். அதே சமயம் வட மொழி பேசினால் ஆயுள் குறையும் என்ற மறை மலை அடிகள் போன்றவர்கள் கூறியதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்

  ரங்கன்

 30. தம்மை இந்து என்றும் சைவர் என்றும் அழைத்துக்கொள்ளும் திரு தாயுமானவன் வடமொழிக்கு எதிராகவும் அது தென்னகத்தில் புகழோடு விளங்கக்காரணமான கிரந்த எழுத்தின் மீதும் மணிப்ரவாள நடையின் மீதும் அதன் நாயகராகிய சந்தசக்கரவர்த்தி ஸ்ரீ அருணகிரிநாதர்மீதும் தனது வெறுப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆங்கிலேய காலனி ஆதிக்கம் அதன் ஐந்தாம் படையாக விளங்கிய பாதிரிகளின் வரலாற்று மொழியியல் புரட்டுகள்தாம் திராவிட இயக்கத்தின் கருத்தியலின் மூலம். தமிழுக்கும் வடமொழிக்கும் இடையில் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்துவது. ஆரியன் திராவிடன் என்ற இல்லாத இனங்களுக்கிடையில் போராட்டத்தினை கதைகட்டுவது. வேதம் மற்றும் தந்திரம் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்று புரட்டுவது ஆகிய எல்லாமே மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி மதமாற்றத்தினை அதிகரித்து பண்பாட்டினை சிதைத்து அடிமைத்தனத்தினை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை.
  சாதிவெறி எப்படித்தவறானதோ அப்படியே இனவெறியும் மொழி வெறியும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாதவை.
  தமிழைப்போற்றிய நாயன்மாரும் ஆழ்வார்களும் வடமொழியையும் வேதங்களையும் போற்றினார்கள் என்பதை இவர்கள் வெகு சாமர்த்தியமாக மறந்துவிடுகிறார்கள். தாம் தரிசித்த தமிழாம் முருகப்பெருமானை மன்றத்தில் அனைவரும் காட்சி பெறவைத்த பேரருளாளர் அருணகிரி வள்ளல் தந்த திருப்புகழையும் இவர்கள் எனும்போது என்ன சொல்ல இவரை பிடித்த அபிராஹாமிய மாயையின் வல்லமையை.
  அடியேனைப்பொருத்தவரை தனித்தமிழில் எழுதுவதோ அல்லது வடமொழியில் எழுதுவதோ இரண்டையும் கலந்து மணிப்பிரவாளத்தில் எழுதுவதோ அவரவர் விருப்பம் இன்னும் சொல்லப்போனால் உரிமை. அன்றி மணிப்பிரவாளத்தில் எழுதுவது கூடாது என்று கூறுவதே கூட உரிமைமீறல் தான்.
  ஸ்ரீ க்ருஸ்ணகுமார் மஹாசயர் அவரது அனுபவம் சூழல் ஆர்வம் ஆகியவற்றின் மூலம் தனக்கென்று ஒரு அழகிய நடையில் தமிழ் ஹிந்துவில் எழுதிவருகிறார். அவர் கட்டுரைகளின் ஆழ்ந்த ஆன்மநேய ஒருமைப்பாடு தேசபக்தி மற்றும் மட்டற்ற இலக்கிய ஈடுபாடு ஆகியவற்றைக்காண முடிகிறது.
  ஒரு சில அன்பர்களுக்கு அவரது மணிப்பிரவாளம் பிடிபடாமல் இருக்கும். அவர்களுக்காக மஹாசயர் பயன் படுத்தும் சில சமஸ்கிருதப் பதங்களுக்கு நேரான தமிழ் பதங்களை .வழங்கும் படி ஸ்ரீ ஜடாயு மற்றும் ஸ்ரீ அ நீ அவர்களை வேண்டுகிறேன்.
  ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
  சிவசிவ

 31. திரு வெள்ளைவாரணன், ரங்கன் அவர்களுக்கு,
  எந்த ஒரு மொழியிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துவிடும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மறைமலை அடிகளார், பரிதிமால் கலைஞர் காலத்தால் தமிழில் ஐம்பது விழுக்காடுக்கு (சதவிகிதம்) மேல் வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்டு இருந்தன. அந்தத் தமிழ் கிட்டத்தட்ட திரு கிருஷ்ணகுமாரின் தமிழைப் போலத்தான் இருக்கும். அனைத்து மக்களும் தமிழைப் புரிந்து கொள்ளவேண்டும், தமிழ் தமிழாக எழுதப் படவேண்டும் என்ற சீரிய எண்ணத்தினாலாயே ‘தனித் தமிழ் இயக்கம்’ துவங்கப் பட்டது. இப்பொழுது தமிழில் பதினைந்திலிருந்து இருபது விழுக்காடு பிறமொழிச் சொற்கள் கலக்கபட்டு வருகின்றன. சென்னைத் தமிழர்களும், கல்லுரி மாணவர்களும் ‘தங்க்லீஷ்’ பேசி ‘மணிப்பிரவாளத்’தை விட ஒரு கொடும் மொழியைப் பேசி வருகின்றனர்.

  திரு கிருஷ்ணகுமார் தனது இயலாமையைச் சொல்லி, அதைச் சரிசெய்ய முழுவதாகச் சொல்வதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். எளிய இலக்கணப் புத்தகத்தைப் படித்தால் கிருஷ்ணகுமாரும் நல்ல, எளிய தமிழில் எழுத இயலும்.

  அதை விட்டுவிட்டு, ‘மொழி கருத்துப் பரிமாறலுக்கான ஒன்று’ என்று ஒரு சிலர் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. எப்படி இருந்தாலும், தாய், தாய்தான். மற்ற உறவுகள் வந்ததற்காகத் தாயைத் தள்ளிவிட இயலாது.

  வெள்ளைவாரணன் அவர்களே, தேவைப்படும் பொழுது தமிழ் மற்ற சொற்களை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது. பல தமிழ் சொற்கள் வடமொழியிலும் இடம் பெற்றுள்ளன என்று மொழி ஆராச்சியாளர்கள் குரிப்ப்பிட்டுள்ளர்கள்.

  திரு பாண்டியன் அவர்களே,
  1935ம் ஆண்டிலேயே வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளி இட்டு இருக்கிறது. மதுரைத் தமிழ் நூல் இணையத்திற்குச் சென்றால் அந்த நூலை வலையம் மூலமாகப் பெறலாம்.

  கடைசியாக, திரு தாயுமானவன் அவர்களே, உங்களைப்போல நானும் சிவபக்தன்தான். ஆயினும் மற்ற கடவுளர்களை நான் நிந்தனை செய்யமாட்டேன். தமிழ் என்பதால் நான் ‘கம்பனையும்’ கற்கிறேன், திவ்யப் பிரபந்தத்தையும் படிக்கிறேன். அருணகிரிநாதர் அதிக அளவில் வடமொழிச் சொற்களைக் கையாண்டிருப்பது உண்மையே. ஆயினும், தமிழுக்கே உரித்தான புதுக் கவிதை வடிவை அவர் ஈந்து சென்றார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் கவிதைகளைப் படித்தால்தான் அதிலிருக்கும் முருகபக்தி உணர்வு நம்மை ஆட்கொள்ளும்.

  பல மொழிகளைக் கற்பது நமது வீட்டிற்கு ஜன்னல்கள் அமைப்பது போன்றது. ஆனால் வீட்டு வாயிலைக் நிலைப்பது தாய்மொழி மட்டுமே.
  அதர்வ வேதமும், ‘தாய் மொழிதான் இரத்தத்தோடு கலந்தது; இறைவழிபாடைத் தாய் மொழியில் செய்யுங்கள். அதுவே தேவர்களுக்கு உகந்தது’ என்று பறைகிறது.

 32. திரு.கிருஷ்ண குமார்,

  //வலிந்து நான் மாற்று மொழிகளைக் கலப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.//

  உங்களது இந்த கூற்றை நான் ஏற்று கொள்கிறேன்.. வெகு விரைவில் நீங்கள் தூய தமிழ் நடைக்கு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  //மனதிற்கு சொல்லொணா வருத்தம் அளிக்கும் விஷயம் தாங்கள் திருப்புகழைப் பற்றித் தெரிவித்த கருத்து. நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் அமுதினுமினிய திருப்புகழை எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் தமிழர்களுக்கு மட்டிலும் என்று அளிக்கவில்லை ஐயா.//

  அன்பரே… மேற் கூறிய கருத்து தங்கள் உள்ளத்தை புண்படுத்தி இருந்தால் அதற்க்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்னுள்ளத்தில் இருக்கும் ஆற்றாமையை இதை விட என்னால் பொறுமையாக வெளிக்கொணர இயலவில்லை.. இன்றளவும் என்னால் அருணகிரியாரின் திருப்புகழ் செய்யுள்களை சுவைக்க கூடவில்லை. “நாத விந்து கலாதி நமோ நம.,வேத மந்த்ர சொருபா நமோ நம” என்கிற வரிகளை கேட்டால் சீற்றம் தான் வருகிறது. தங்களுக்கு அமிழ்தினும் இனியதாக தோன்றும் பாடல், எனக்கு உவப்பாக இல்லை.காரணம், அருணகிரியார் எடுத்தாண்ட மிகுதியான வடமொழி ஒலிப்புகளுடன் கூடிய வடமொழி சொற்கள். மற்றையோர்க்கு எப்படியோ,என்னளவில் திருப்புகழ் ஒரு கொடுந்தமிழ் இலக்கிய வகையை சார்ந்தது.

  //உங்கள் அளவுக்கு சைவத்தின் மீது எனக்கு பற்று இல்லாமல் இருக்கலாம். நான் சைவன் இல்லையே. ஆனால் ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்களை மதிக்க வேண்டும் என்று எங்கள் வள்ளல் பெருமான் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதிலிருந்து பிறழ்பவர் நரகுழல்வார் என்றும் இடித்துரைத்துள்ளார். என் உத்தரம் சிவத்தொண்டு புரியும் உங்களுக்கு உகப்பளிக்கவில்லையெனில் க்ஷமிக்கவும்.//

  அன்பரே, நான் சைவ சமயத்தின் பால் மிகு பற்று கொண்டவன் தான், எனையாளும் ஈசனை தவிர பிறிதொரு தெய்வங்களை யாம் தொழுவதில்லை என்பது மெய்தான். ஆனால், அதற்காக வைணவம் போன்ற இன்னபிற பிரிவுகளை பின்பற்றுவோரை ஏளனம் செய்வது, தூற்றுவது போன்ற அடாது செயல்களில் ஈடுபட்டதில்லை. அதே நேரம் மொழியை மறந்து பக்தியில் திளைக்கும் உள பாங்கும் எனக்கில்லை. தங்களின் மறுமொழிகள் எப்பொழுதுமே எனக்கு பிரியமனாவையே.

  திரு. வெள்ளைவாரணன் ,

  //பிற மொழிகளையும், பிற எழுத்துவகைகளையும் அரக்கி என்றும், நஞ்சு என்றும் சொல்லி கடும் விமரிசனம் செய்வதால் யாருக்கும் உருப்படியான ஒரு பலனும் இல்லை. //

  அன்பரே, பிற மொழிகளையும், பிற எழுத்து வகைகளையும் வசைபாட வேண்டும் என்பதல்ல நம்முடைய நோக்கம், வடமொழி வடமொழியாய் இருப்பதில் நமக்கு துன்பம் ஒன்றும் இல்லை. ஆனால் சொல்வளம் மிக்க தமிழ்மொழியில் தேவை இல்லாமல் மிகுதியான அளவில் சமற்கிருத சொற்களை புகுத்த நினைக்கும் புல்லுருவி தனத்தை தான் நாம் தடுக்க நினைப்பது. அதை தான் தொல்காப்பியர் மிக தெளிவாக கூறி விட்டாரே.
  “வடசொற் கிளவி வடவெழுத்து ஓரிஇ
  எழுத்தோடு புணர்ந்த சொல்லாகுமே” என்று தூய தமிழ் சொற்களையே பயன்படுத்த வேண்டும் ஒரு வேலை சமற்கிருத சொல்லை பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கோவிலுக்கு வெளியே செருப்பை கழற்றிவிட்டு வருவது போல வடமொழி ஓசைகளை உச்சரிப்பை தூர எரிந்து விட்டு சொல்லை மட்டும் பயன்படுத்து என்கிறார். தங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் .

 33. அன்பின் ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயர் அவர்கள் பகிர்ந்த உசிதமான மொழிகளுக்கு மிக்க நன்றி.

  அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  \\ வெகு விரைவில் நீங்கள் தூய தமிழ் நடைக்கு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\\

  க்ஷமிக்கவும். இயலாத விஷயத்திற்கு நான் ப்ரதிக்ஞை செய்ய மாட்டேன்.

  அன்ய மொழிக்கலப்பில்லாத் தூயதமிழ்நடையில் யாரும் எழுதி வருவதாக எனக்குத் தெரியாது.

  மொழிக்கலப்பு என்பது மிக இயல்பான ஒரு விஷயம் என்பது நான் முன்னமே பகிர்ந்த கருத்து. கூடவே நான் மிகவும் என்றென்றும் மதிப்பும் பெருமையும் மிக உகக்கும் எந்த மொழியும் கலப்பில்லாத தூய தமிழ்மொழியில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும்.

  எனது கலப்புமொழிநடையில் பொதிந்துள்ள மணிப்ரவாளம் எனது அடையாளம். எங்கள் குலதனமாகிய திருப்புகழை சென்ற திசையெலாம் ஓதி ஓதி எனக்குள் அமிழ்ந்த எனது அடையாளத்தை வலிந்து என்னால் து’றக்க முடியாது. எனது கருத்துப்பரிவர்த்தனங்களில் எனது கலப்பு மொழிநடையை வாசிக்கும் வாசகர்களுக்கு புரிதலில் இருக்கும் பரிச்ரமத்தை அவசியம் குறைக்க முயலுவேன். எனது உத்தரங்களில் மொழிக்கலப்பு இருக்கும் சாத்யக்கூறுகளை நிவர்த்தி செய்ய இயலாது. ஆனால் எழுதப்படும் வ்யாசங்களில் அதைக் கவனத்தில் கொள்ள முடியும்.

  திருப்புகழ் பற்றிய பழிச்சொல்லைக் கேட்டது மனதில் முள்ளாக உறுத்தினாலும் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் சிவநேயச் செல்வர்களிடம் நிறைகளை மட்டிலும் காணவே சொல்லிக்கொடுத்தபடி என் உத்தரத்தைப் பகிர முனைந்தேன். திருப்புகழையே ஓதி ஓதி பாயிரங்களை வாசித்து வாசித்து எனது க்லேசத்தை சமனம் செய்துகொண்டேன். அமுதத் திருப்புகழை ஓத இப்படியும் கூட ஒரு வ்யாஜம். எங்கள் வள்ளல்பெருமானின் வாக்கை வாயினாற்பாட தமிழ்த்ரயவிநோதப்பெருமான் மனதில் நிறைய குறையென்று ஒன்றும் உலகில் மிஞ்சிக்கூடவிடும்?

  ராமாயணம் பொதுதளத்தில் இழிவு செய்யப்பட்டதை முதலில் எழுதி முடித்து திருப்புகழ் பெருமையை சிறியேன் பகிரவேண்டும் என்பது ****சற்போதகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப்பணிந்துருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும்**** என்று எங்கள் குலதெய்வம் பழனிப்பதிவாழ் பாலகுமாரனிடம் இறைஞ்சிய எங்கள் வள்ளல்பெருமானுடைய மற்றும் பழனியாண்டவனுடைய திருவுளம் போலும். அதற்காக இப்படி எனக்கு ஒரு சம்வாதத்தைக்கொடுத்துள்ளான் என்றே நான் கருதுகிறேன்.

  எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் வாக்கு :-

  சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்.

  ஆங்க்லம், உர்தூ என்று எந்த பாஷையின் பாலும் எனக்கு த்வேஷம் கிடையாது. எந்த ஒரு பாஷையும் இறைவனையடைய ஒரு சாதனம். ஒவ்வொரு பாஷையும் பாஷையில் உள்ள விவித சைலிகளும் அப்படியான புனிதத் தன்மை கொண்டவையே.

  சம்ஸ்க்ருத பாஷையை ****செருப்பு**** என்ற படிக்கு சுட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இயல்பான மொழிக்கலப்பை ****புல்லுருவித்தனம்***** என்று சுட்டுவதிலும் உடன்பாடு இல்லை. ****லோகோ பின்ன ருசி: ***** உலகத்தின் சுவை பலவிதம் என்ற சான்றோர் வாக்கை அறிவேன்.

  இந்த விஷயம் சார்ந்து என் தரப்பிலிருந்து இது தற்போதைக்கு கடைசீ உத்தரம்.

  சிவநெறிச் செல்வர்களின் திருவடிகளில் என்றென்றும் என் சென்னியிருக்கக் கடவதாக

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

  நற்றுணையாவது நமச்சிவாயவே

 34. அன்பார்ந்த திரு. கிருஷ்ண குமார்…

  ஏன் இப்படி? நான் புல்லுருவி தனம் என்று கூறியது தங்களை அல்லவே… தங்களுக்கு முன்பிருந்து மணிப்ரவாளம் என்கிற கொடுந்தமிழ் போக்கை இயற்றியவர்களை. கலப்பு நடை தொடர்பாக தங்களின் சென்ற மறுமொழிகளில் தாங்கள் கூறியது என்ன. நீங்கள் கூறியதை ஒரு முறை நீங்களே பாருங்கள்..

  //கடந்த இரண்டரை தசாப்தமாக நான் ஹிந்துஸ்தானத்தின் பல எல்லைப்பகுதிகளில் உத்யோகம் செய்தபடிக்கு தமிழில் மிகக் குறைவாகப் பேசி, தினப்படி உரையாடல்களில் ஹிந்தி, ஆங்க்லம், பஞ்சாபி/டோக்ரி மற்றும் தமிழ் – முன் பின் சொன்ன அளவில் பேசிவரும் படி என்னுடைய எந்த பாஷைப் பேச்சிலும் அடுத்த பாஷையின் தாக்கம் ஒரு மஜ்பூரி.

  என்னுடைய அலகீட்டில் தமிழில் இரண்டே சைலி. தூய கலப்படமில்லா தமிழ். கலப்பட தமிழ். என்னுடையது துரத்ருஷ்டவசமாக இரண்டாவது சைலி. நான் முதலாவதான தமிழை மிகவும் நேசிக்கிறேன். //

  நீங்கள் இவ்வாறு கூறியதன் பயனாய் நான் மேற்கண்ட படி தாங்கள் தூய தமிழ் நடைக்கு வரும் காலத்தை ஆவலோடு எதிர்பார்பதாக கூறினேன். ஏதோ தாங்கள் வடஇந்திய மாநிலங்களில் பணி செய்வதால் இது தங்களுக்கு இயல்பாக ஏற்பட்ட மொழிக்கலப்பு ஆகவே இவ்வித மொழிநடையில் இருந்து வெளிவர விரும்புகிறீர்கள் போல் என்று நினைத்து அவ்வாறு பகர்ந்தேன். ஆனால் தாங்கள் தற்பொழுது கூறியது என்ன ,

  //எனது கலப்புமொழிநடையில் பொதிந்துள்ள மணிப்ரவாளம் எனது அடையாளம். எங்கள் குலதனமாகிய திருப்புகழை சென்ற திசையெலாம் ஓதி ஓதி எனக்குள் அமிழ்ந்த எனது அடையாளத்தை வலிந்து என்னால் து’றக்க முடியாது.//

  // எனது உத்தரங்களில் மொழிக்கலப்பு இருக்கும் சாத்யக்கூறுகளை நிவர்த்தி செய்ய இயலாது.//

  அன்பரே .. நீங்கள் ஏதோ அறியாமலும் விரும்பாமலும் தான் மணிப்ரவாள நடையில் எழுதுகிறீர்கள் என்றே இது நாள் வரையில் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால்,நீங்கள் இதை விரும்பி தான் செய்கிறீர்கள் என்று இப்பொழுதுதான் எனக்கு தங்களின் மறுமொழியின் மூலமாக தெரியவருகிறது.. தவறு உங்கள் மீதில்லை. தாங்கள் கூற வருவதை சரியாக புரிந்து கொள்ளாத என்மீது தான் மன்னிக்கவும். இனியொரு முறை தங்களுடன் இது குறித்து எந்த ஒரு விவாதங்களும் செய்ய மாட்டேன். தங்கள் எந்த நடையில் வேண்டுமானாலும் எழுதுங்கள், முடிந்தால் வடமொழி என்ன ஆங்கிலம், உருது,இலத்தின், பாரசீகம்,சீனம் என்று எல்லா மொழிகளையும் கூட தமிழில் கலந்து அடித்து விடுங்கள். இனி தங்களை ஒரு வார்த்தை கேட்க மாட்டேன் ஐயா. சால மன்னிக்கவும்.

  //க்ஷமிக்கவும். இயலாத விஷயத்திற்கு நான் ப்ரதிக்ஞை செய்ய மாட்டேன்.

  அன்ய மொழிக்கலப்பில்லாத் தூயதமிழ்நடையில் யாரும் எழுதி வருவதாக எனக்குத் தெரியாது.//

  ஐயா .. யார் இப்பொழுது நூறு விழுக்காடு தூய தமிழ்நடையை தங்களை பயன்படுத்த சொன்னது. கூடுமானவரை பிறமொழி சொற் பயன்பாட்டை குறைத்து கொள்ளலாமே என்று தான் ஆதங்க பட்டேன்.

  //சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்./

  ஐயா .. யார் இப்பொழுது திருப்புகழை பழித்தது. நான் என்ன கிருத்துவர்கள் கூறுவதை போன்று இவையெல்லாம் சாத்தானை வழிபடும் பாடல்கள் என்றா தூற்றினேன். எதற்க்காக என்மீது இப்படி அறம் பாடுகிறீர்கள். நான் வருத்த பட்டு குறை கூறியது அருணகிரியாரின் மொழிநடையை மட்டுமே. இப்போதும் சொல்கிறேன் திருப்புகழ் கண்டிப்பாக கொடுந்தமிழ் இலக்கியமே.

  கடைசியாக, நான் கடும் சொற்கள் எதாவது பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும். இனி வரும் காலங்களில் என் மொழி தொல்லை உங்களுக்கு அறவே இருக்காது வாழ்க தங்களின் சனாதன தொண்டு.என்னுடன் கருத்து பகிர்ந்ததற்கு நன்றி.

 35. //எனது கலப்புமொழிநடையில் பொதிந்துள்ள மணிப்ரவாளம் எனது அடையாளம். //

  திரு கிருஷ்ணகுமார் அவர்களே, உங்களுடைய இக்கருத்துக்கு நான் எந்தவிதத்தில் பதிலிறுக்க இயலும்? இருப்பினும் உங்களுடைய மனதைப் புண்படுத்தாமல் என் கருத்தை தெரிவிக்க முயல்கிறேன். தப்பித்தவறி நான் எழுதுவதில் ஏதாவது தங்கள் மனதை உறுத்தினால் அதற்காக முன்னதாகவே ‘பிழை பொறுக்குமாறு’ கேட்டுக் கொள்கிறேன்.
  மணிப்பிரவாள நடை தமிழ் மூதரிஞர்கள் பலராலும் விரும்பப்படாத ஒன்று. அப்படிப்பட்ட ஒரு கலப்புதான், சேரநாட்டில் மலையாளம் என்ற ஒரு மொழி தோன்றக் காரணமாக இருந்தது. சேரமான்கள் (சேர மன்னர்கள்) சிவனையார்களாகவும், வைணவப் பெரியோர்களாகவும், தமிழில் எழுதியிருக்கிறார்கள். நாம் ஒருபொழுதும் வடமொழியான சமஸ்கிருதத்தில் தமிழையோ, மற்ற எந்த மொழிகளையோ கலந்து, அதற்கு ‘கதம்பம்’ என்று பெயர் கொடுத்து எழுத மாட்டோம். காரணம், அந்த மொழியில் எல்லாச் சொற்களும் இருக்கின்றன என்று மருதளிப்போம். அதே போன்று தமிழில் அனைத்துச் சொற்களும் உள்ளன. இல்லாத ஒரே ஒரு சொல் face என்பதற்கு நாம் கையாளும் ‘முகம்’ என்ற சொல்தான். அதனாலேயே தமிழைக் தரக் குறைவாகப் பேச முற்படுவோர் ‘தமிழ் முகமில்லாத மொழி’ என்று கிண்டல் செய்வார்கள். அது போலவே வடமொழியில் வாய் என்னும் உறுப்பைக் குறிப்பிடத் தனியான சொல் ஒன்றும் இல்லை. எனவே, வாய் ‘ मुखम என்றே வடமொழியில் குறிப்பிடப்படும். வடமொழியைக் கிண்டல் செய்ய விரும்புவோர் ‘சம்ஸ்க்ருதம் வாயில்லாத, அதாவது, வழக்கொழிந்த மொழி’ என்று சொல்வார்கள்.
  வடமொழிக்கு எப்படி பாணினி இலக்கணம் எழுதினாரோ, அதே மாதிரி தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய காலத்திலேயே, வடமொழிச் சொற்களை தமிழில் எப்படி எழுதவேண்டும், ஒலிக்க (pronounce) வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்தார். ஷ், ட் டாகவும், ‘ஹ’ ‘அ’ ஆகவும், இப்படி மாற்றி எழுதப்படுகின்றன. மேலும், தமிழில் இரண்டு மெய்யெழுத்துக்கள் ஒரு சொல்லின் துவக்கத்தில் வரக்கூடாது. எனவேதான், உங்கள் பெயரை கிருஷ்ணகுமார் என்று எழுதவேண்டும். ஆனால் தாங்கள் க்ருஷ்ணகுமார் எழுதுகிறீர்கள். அது இலக்கணப் பிழையானாலும் அதை உங்களது அடையாளமாகக் காட்டிக்கொள்கிறீர்கள். நிறைய வடமொழிச் சொற்களை உங்களது நடையில் (ஷைலி) கலக்கிறீர்கள்.
  ஆங்கிலத்தில் எழுதும்பொழுது நாம் அப்படிச் செய்ய மாட்டோம். அதை யாரும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், தமிழுக்கு மட்டும் இப்படி ஒரு சாபக்கேடு உண்டு. இந்தமட்டும் தமிழில் எழுதுகிறார்களே என்று விட்டுவிட வேண்டி இருக்கிறது. நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். வழியில்லாதபோது, எளிதாக மற்றவர்களுக்குப் புரியவைக்க வேண்டி வரும்பொழுது மற்ற மொழிச் சொல்களைக் கையாள்வதில் பிழை ஏதும் இல்லை. வலிந்து கட்டிக்கொண்டு, வடமொழிச் சொற்களைக் கலக்கவேண்டாமே, தமிழ் இலக்கணத்தை ஓரளவு, இயன்ற அளவு பின்பற்றலாமே என்றுதான் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்வதும், விளக்குவதும் உங்கள் விருப்பமே. உங்களைக் கட்டாயப் படுத்த எங்கள் யாருக்கும் உரிமை இல்லை.
  திரு தாயுமானவனும், நானும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகிறோம். ஆனால் சொல்லும் முறைதான் வேறாக இருக்கிறது.
  திரு தாயுமானவன் அவர்களே, நமது கருத்தைச் சொல்லும்போழுது, அந்தக் கருத்தை எதற்காகச் சொல்லுகிறோம் என்பதைச் சற்றுச் சிந்துப் பார்க்க வேண்டும். தூய, எளிய தமிழில் ஒருவர் எழுத வேண்டும் என்று நாம் விரும்பினால், அதைச் சொல்லும் முறை ஏற்றுக்கொள்ளும்படி இருக்கவேண்டும். மனம் புண்பட்டால் நாம் சொல்வதில் இருக்கும் உண்மை மறுக்கப்படும். நீங்கள் வடமொழியான சமஸ்க்ருதத்தைச் காலணிக்கு ஒப்பிடுவthu அதுவும் சிவனடியாரான தாங்கள் சொல்வது, அனைத்துச் சிவனடியார்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் ஒன்றாகும். அருள்கூர்ந்து, தங்கள் சொல்லும் முறையைச் சிறிது மாற்றிக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

 36. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்

  உங்கள் உத்தரத்தில் தாபம் உள்ளது என்று தென் பட்டதால் எனது மற்றொரு உத்தரம்.

  உங்களுடன் உரையாடுவதில் எனக்கு பிணக்கு என்று ஏதும் இருக்கவியலும்? அபிப்ராய பேதங்கள் இருப்பது சஹஜம் தானே ஐயா.

  \\ தங்கள் எந்த நடையில் வேண்டுமானாலும் எழுதுங்கள், முடிந்தால் வடமொழி என்ன ஆங்கிலம், உருது,இலத்தின், பாரசீகம்,சீனம் என்று எல்லா மொழிகளையும் கூட தமிழில் கலந்து அடித்து விடுங்கள். இனி தங்களை ஒரு வார்த்தை கேட்க மாட்டேன் ஐயா. சால மன்னிக்கவும். \\

  இல்லை ஐயா, நான் எழுதிய வாசகத்தை தாங்கள் முழுமையாக வாசிக்காது இருந்திருக்கலாம்.

  \\ எனது கருத்துப்பரிவர்த்தனங்களில் எனது கலப்பு மொழிநடையை வாசிக்கும் வாசகர்களுக்கு புரிதலில் இருக்கும் பரிச்ரமத்தை அவசியம் குறைக்க முயலுவேன். எனது உத்தரங்களில் மொழிக்கலப்பு இருக்கும் சாத்யக்கூறுகளை நிவர்த்தி செய்ய இயலாது. ஆனால் எழுதப்படும் வ்யாசங்களில் அதைக் கவனத்தில் கொள்ள முடியும். \\

  இது எனது மேற்கண்ட கருத்து.

  \\ ஆனால்,நீங்கள் இதை விரும்பி தான் செய்கிறீர்கள் என்று இப்பொழுதுதான் எனக்கு தங்களின் மறுமொழியின் மூலமாக தெரியவருகிறது.. \\

  தமிழில் விருப்பத்துடன் என்ற சொல்லுக்கும் ……. இயல்பான என்ற சொல்லுக்கும் வித்யாசம் உள்ளது ஐயா.

  எனது செயற்பாடு இயல்புடன் ஒன்றியது. எமது அடையாளத்துடன் ஒன்றிய இயல்பு விருப்பு வெறுப்பின் பாற்பட்டது அன்று. நான் வாசிக்க நேரும் விஷயங்களில் நான் ஒரேயடியாக வெகுண்டெழும் விஷயத்தை வாசிக்க நேர்ந்தாலோ அல்லது அபூர்வமாக நான் வாசித்த விஷயங்களைப் பகிர நேர்ந்தாலோ மட்டிலும் நான் வ்யாசம் எழுதுவது. என் இயல்பிற்கும் நான் பகிரும் விஷயத்திற்கும் இடையே மொழிநடை எங்கோ இடிக்கிறது என்று அறிவேன். நான் ஒன்றும் தேர்ந்த எழுத்தாளன் இல்லையே.

  என் இயல்பை முற்றிலும் துறக்க முடியாது எனினும் தூய தமிழ் மீதும் சைவத்தின் மீதும் பற்றுள்ள உங்கள் போன்ற அன்பர்களின் அபிலாஷையை நான் ஏன் புறக்கணிப்பேன். என்னுடைய அடுத்த வ்யாசத்தொடரில் உங்களது அன்பார்ந்த யோசனையை நான் எந்த அளவு உள்வாங்கியுள்ளேன் என்பதை நீங்கள் வாசித்து அவதானிக்கலாம். அது சம்பந்தமான உங்கள் மேலான கருத்தை நான் ஆர்வமுடன் அறியவும் விழைவேன்.

  என் வ்யாசங்களில் மாற்று மொழிக்கலப்பை இயன்ற வரை நிச்சயம் குறைக்க முயலுவேன் ஐயா. என்னுடைய சம்சயமெல்லாம் பூதக்கண்ணாடி கொண்டு நான் எங்கெங்கு மாற்று மொழிச்சொற்களை ப்ரயோகம் செய்துள்ளேன் என்று மற்றோர் தேடுவதைத் தான்.

  எந்த சிவநெறிச் செல்வர்களின் திருத்தாள்களில் எமது சென்னியிருக்கக்கடவது என்று ஹ்ருதயபூர்வமாகச் சொல்வேனோ அவர்கள் பால் நான் எதற்கு அறம் பாடுவேன் ஐயா.

  திருப்புகழ் எங்கள் குலதனம் என்று சொல்லியபடி அதன் பால் சற்றளவேனும் குறை சொல்லப்பட்டால் அதை மனது ஏற்காது. எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் காலத்திலும் கூட அவரிடம் திருப்புகழமுதை ஓதியவர்கள் மற்றோர் பகிர்ந்த குறைகளை சொல்லியிருப்பார் போலும். அதற்கு அவர் பகிர்ந்த சமாதானமாக மேற்கண்ட திருத்தணித் திருப்புகழ் இருக்கலாம்.

  மிகவும் உயர்ந்த கொள்கையான கலப்பில்லாத் தூயதமிழ் தழைத்தோங்க வேண்டும் என்ற உங்கள் உளப்பாட்டின் மீதும் உங்கள் சைவப்பற்றின் மீதும் எனக்கு அளவு கடந்த மரியாதை என்றும் உள்ளது.

  நம்மிடையே சம்வாதம் தொடர்ந்து இருக்க எங்கள் வள்ளல் பெருமானிடமும் பழனிப்பதிவாழ் பாலகுமாரனிடமும் இறைஞ்சுகிறேன். எனது அடுத்த வ்யாசத் தொடரை தாங்கள் வாசிக்க வேண்டும் என்றும் அதை வாசித்த தங்களின் மேலான கருத்துக்களை சிறியேன் நிச்சயம் அறிய விழைவேன்.

  உளமார்ந்த அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 37. திரு அரிசோனன் , திரு தாயுமானவன் அவர்கள் பொறுமை காக்க வேண்டிய தருணம் இது. ஜெயபாரதன் எனும் நபர் நாம் புராண இதிகாசங்களை அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கும் தருணத்தில், திரு க்ருஷ்ணகுமார் அவர்கள் மிக ஆதார பூர்வமாக , அசைக்க முடியாத ஆதாரங்குழடன் அவரின் வாதங்களை வலுவிழ்க்கும் முயற்சியில் வெர்றி பெர்ரு இருக்கின்றார். இதற்க்கு முன் மகாத்மா காந்தி விசயத்தில் இப்படிதான் வெர்றி கண்டார். பழய விசயங்கள் படிக்காமல் வருபவர்கள் முதலில் இதை திரிந்துகொண்டால் நலம் .

 38. அன்பார்ந்த கிருஷ்ணகுமார், தாயுமானவன், ஒரு அரிசோனன் உள்ளிட்டோருக்கு,

  சிவநெறிச் செல்வர்களின் திருத்தாள்களில் எமது சென்னியிருக்கக்கடவது – என்று கிருஷ்ணகுமார் கூறியதை என் சிரமேற்று வழி மொழிந்து எழுதுகிறேன். என்னைப் பொறுத்த மட்டில், எத்தெய்வமும் பரமேஸ்வரனான சிவபெருமானின் பரிமாணமே, எனவே திருப்பதி பெருமாள் சந்நிதியாகட்டும், பழனித் தண்டாயுதபாணிச் சந்நிதியாகட்டும் அங்கும் திருவைந்தெழுத்தைவோதியே தொழும் வழக்கம் கொண்டவன்.

  ஆழ்வார்களும், நாயன்மார்களும் வேத நெறியையும் வடமொழியையும் உயர்த்திப் பாடியபோதும் கூடத் தமது பாசுரங்களிலும் தேவாரங்களிலும் வடமொழிக் கலப்பைச் செய்ததில்லை என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். பதினோராம் நூற்றாண்டினர் காலத்திலும் இல்லாத கலப்பு பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில், சோழர்களும் பாண்டியர்களும் சேரர்களும் வலுவிழந்த பின்னர் வந்துள்ளது என்பதே அனுமானம். போசளர்கள் துளுவ மன்னர்கள், அவர்கள் காலத்தில் இது ஆரம்பித்து அவர்களது ஆளுமையைப் பின்னாள்களில் ஏற்று நடத்திய கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட விஜயநகரத்தார் காலங்களில் இப்போக்கு வலுவடைந்திருக்கிறது என அனுமானிக்கலாம்.

  அருணகிரிப் பெருமான் இருந்த திருவண்ணாமலை போசளர்களின் தென் தலைநகராகவும் இருந்திருக்கிறது. அருணகிரிப் பெருமான் காலத்தில் அப்பகுதியை ஆண்டவர் விஜயநகரப் பேரரசின் சிற்றரசனான பிரபுட தேவராயர் என்பது வரலாறு. கிருஷ்ணதேவராயர்தான் (அவர் வைணவர் ஆனாலும்) திருவருணை 217 அடி உயர ராஜகோபுரத்தை நிர்மாணித்தவர் என்பது வரலாறு.

  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. எனவேதான் அருணகிரிப் பெருமானின் சொல்லாக்கத்தில் வடமொழிக் கலப்பு வெகு அதிகம் என்பது திரிபு.

  ஆயினும் கூட, இறைவனுக்குக் கருணை எல்லையற்றது, அவர் மொழி, இனம், மதம், சாதிப் பாகுபாடின்றி அருள்செய்பவர் எனபதில் எம்மதத்தவருக்கும் எம்மொழியினருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அவரறியாததொன்றில்லை, மொழி உள்பட!

  எனவேதான், தூய தமிழில் பாடியவருக்கெல்லாம் அருள்செய்ததை விடவாகவும் ஒருபடி மேலே (அல்லது கீழே இறங்கி வந்து ?!) அருணைக் கோபுரத்தில் இருந்து விழுந்த அருணகிரி நாதரின் உடலைத் தொட்டுத் தாங்கி அருள் செய்தார்! தெய்வத்திரு சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்” என்று சொல்லெடுத்துக் கொடுத்தவர், கச்சியப்ப சிவாச்சாரியாருக்குத் “திகடச்சக்கர” என்று சொல்லெடுத்துக் கொடுத்தவர், அருணகிரிப் பெருமானை மட்டும் முதலில் “சும்மாயிரு சொல்லற” என்றாராம்! ஒருவேளை தனது உத்தரவை அவரே பின்னலில் மாற்றிக் கொள்ளாது இருந்திருப்பின், நமக்கெல்லாம் நல்வழி காட்டும் திருப்புகழும் இன்னபிற திருப்பாடல்களும் கிடைத்திருக்க மாட்டா, இந்த விவாதமும் இருந்திருக்காதோ? அருணகிரிப் பெருமானின் திருப்பாடல்களை திருமுருகனே ஏற்று கம்பத்திலையனாராகக் காட்சி தந்ததும் வரலாறு. தமிழ்க்கடவுளான முருகப் பெருமானுக்கே ஏற்புடைய திருப்புகழும் கந்தரலங்கரமும், கொடுந்தமிழ் என்று தாயுமானவன் அவர்கள் கூறுவது சிறிதும் ஏற்புடையதல்ல. அடியார் மனம் நோகச் செய்யும் சொற்களை மீண்டும் மீண்டும் அறுதியிட்டுக் கூறுதல் தமிழுக்கும் சிவனடியாருக்கும் சிறப்புச் செய்ய மாட்டா. அது தெய்வத்தமிழ் என்றே நாமனைவரும் ஏற்க வேண்டும்.

  எது கொடுந்தமிழ்? அவையடக்கம் என்ற திருக்குறளின் அதிகாரம் படித்தவர்கள் கூறட்டும். மேடைப் பேச்சில் வண்டி வண்டியான சொற்களைப் பொதுக் கூட்டத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் பேசி, தலிமுறை தலை முறையாய் நெறிதவறிய பேச்சாளர்களை வளர்த்து விட்ட ஈ.வே.ராவின் தமிழ்தான் கொடுந்தமிழ். இதைத் தாயுமானவன் போன்றோர் வினவு, முரசொலி, விடுதலை, நக்கீரன் போன்ற பத்திரிக்கை/ தளங்களிலும், கருணாநிதி, வீரமணி, சீமான், ஜெகவீரபாண்டியன் போன்றோரிடமும் கூறுவாரே ஆனால் அது தமிழுக்குச் செய்யப் படும் சிறப்பு.

  ஆனால் தெயவத் தமிழான அருணகிரிநாதரின் திருப்புகழைக் கொடுந்தமிழ் என்று கூறுவாரே ஆனால் அது கொடுஞ்சொல் அன்றி வேறல்ல.

  1920 களில்தான் இந்தத் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. சிவபெருமானின் திருதொண்டரான மறைமலை அடிகளாரிடம் பரமன் குறித்த விவாதத்தில் ஈடுபட்ட சில வைணவர்களே வடமொழி உயர்ந்ததென்றும் தமிழ் குறித்து நீசபாஷை என்று சிறுமையான சொல்லைச் சொல்லியும் தமது கருத்துக்கு அதுவே வலு சேர்க்கும் என்பதால் கூறியதின் விளைவே இந்நாள் வரை தொடரும் இந்த வடமொழி-தமிழ் சச்சரவுகள். எவரோ, தவறாகச் சொன்னதை இன்றுவரை மக்கள் நினைவில் இருந்து யாராலும் அழிக்க முடியவில்லை. எனவேதான் தாயுமானவன் அவர்கள் செருப்பு என்பது போன்ற சொற்களைப் பயன் படுத்தும் முன்னர் சிந்திக்கவேண்டும்.

  கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்வது போல இந்த நடை இயல்பானது என்பது என்னைப் பொருத்தமட்டில் ஏற்கத்தக்கதாகத் தென்படவில்லை. நானறிந்த வரையில் சொல்வழக்கில் இந்த நடை கொண்டோர் இப்போது இல்லை. அவரது உத்தரம், பரிச்ரயம், மகாசயர் என்ற சொற்களை இராமாயண, மகாபாரத இன்னபிற சமயச் சொற் பொழிவாளர்களின் உரைகளில் கூட நான் கேட்டதில்லை. முதல் முறையாகக் காணும் சொற்களை அவை கையாளப்பட்ட இடம் கருதியே பொருள் கொண்டுவருகிறேன். இவற்றுக்குத் தமிழ் வழக்கில் பல சொற்கள் இருக்க இவற்றைக் கையாளும் காரணம் வலிந்து திணிப்பதாகவே படுகிறது என்ற தாயுமானவன் அவர்களின் கூற்றில் எனக்கும் உடன்பாடாகவே இருக்கிறது.

  பாண்டியன் அவர்கள் சொல்வது போல பிறிதொரு விஷயத்தில் கிருஷ்ணகுமார அவர்களின் சேவை செம்மையானது என்பதால் தமிழில் கலப்புச் செய்வதைப் பொறுத்தே ஆகவேண்டும் என்ற கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.

  என்கருத்துக்களை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம், உரிமை. இதில் கண்ட எனது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் கேட்டு உள்வாங்கிக் கொள்வேன் என உறுதி கூறுகிறேன்.

 39. என்னுடைய கவனம் ராமாயணம் பற்றிய வ்யாசத்தில் உள்ளது.

  இயன்றால் மொழிநடை பற்றி தனியாக ஒரு வ்யாசம் சமர்ப்பித்து அதில் இந்த விஷயத்தை விவாதிப்பேன்.

  நன்றி – அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *