அமெரிக்க [அதிபர்] அரசியல் – 5

9.  முதல்நிலை வாக்கெடுப்பும், கட்சிக்குழுக் கூட்டமும்

[Primaries and Caucuses]

 

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் இரண்டுவிதமாக நடைபெறுகிறது. image (1)

ஒன்று, வாக்காளர்கள் நேரடியாக எந்த வேட்பாளரை விரும்புகிறோம் என்று வாக்களிப்பது;  இது எளிதானது.  வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இருக்கும்.  நமக்கு யார்வேண்டுமோ, அவருக்கு வாக்களிக்கலாம்.

image (2)இரண்டாவது கட்சிக்குழுக் கூட்டம்;  வாக்காளர்கள் கூட்டம் நடக்குமிடத்திற்குச் சென்று, கூட்டத்தில் கலந்துகொண்டு, விரும்பும் வேட்பாளருக்கு முதலில் ஓட்டளிப்பார்கள்.  அந்த ஓட்டுகளை எண்ணிமுடிந்தவுடன், வேட்பாளர்குழுத் தலைவர்கள், தங்கள் வேட்பாளர்களைப்பற்றி உயர்வாகப் பேசி, குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களைத் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுவார்கள்.  அப்பொழுது வாக்காளர்கள் தாங்கள் முதலில் யாருக்கு வாக்களித்தார்களோ, அவரை விட்டுவிட்டு, மற்றவர்பக்கம் சேர்ந்து கொள்வதும் நடக்கும். இப்படிப்பட்ட கட்சிவேட்பாளர்கள் தேர்வை எப்படி நடத்துவது என்பதை நடுவண் அரசு தீர்மானிப்பதில்லை.  அதை மாநில அரசுகளுக்கே விடப்பட்டுள்ளது.  அதனால் ஒவ்வொரு மாநிலமும், கட்சிகளும் அதனதன் விருப்பப்படி இத்தேர்தல்களை நடத்துகின்றன.[1]

 “என்ன பழக்கம் இது?  இங்கு கட்சிமாறி, கூட்டணிவைத்துக்கொள்வதுபோல இருக்கிறதே!” என்று தோன்றுகிறதா?  அதே, அதே!  தங்கள் கட்சியிலேயே ஒரு வேட்பாளரைவிட்டுவிட்டு, இன்னொரு வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவை நல்குவதுதான் அது.

இப்படிப் பலமுறை செய்து, ஒருமுடிவுக்கு வருவதற்கு சிலமணி நேரம் பிடிக்கும்.  அதனால் கட்சிக்கூட்டமான காகஸுக்கு மிகவும் குறைவானவர்களே வருவார்கள்.  இதை மனதில்கொண்டு, எந்த வேட்பாளர் தங்கள் ஆதரவாளர்களைக் காகஸுக்கு வரவழைப்பதில் வெற்றிகாணுகிறார்களோ, அவர்களே அந்த மாநில் காகஸில் வெற்றிபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.

இதனால்தான் 2016ல் நடந்த காகஸ்களில், கட்சிக்கூட்டத்திற்கு ஆதரவாளர்களைத்திரட்டி வரவழைப்பதில் வெற்றிகண்ட ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த பெர்னி ஸான்டஸும்[Benie Sanders], குடியரசுக்கட்சியைச் சேர்ந்த டெட் க்ரூஸும்[Ted Cruz] காகஸ் நடந்த மாகாணங்களில் தத்தம் கட்சிவாக்குகளை அதிகம் பெற்றார்கள்.  ஹிலரி க்லின்ட்டனும், டானல்ட் ட்ரம்ப்பும் அந்த மாகாணங்களில் தோல்வியைத் தழுவினார்கள்.[2]

Inline image 1முதல்நிலைத் தேர்வுகளும், காகஸ்களும் பிப்ரவரி மாதத்தில் ஐயோவா மாநிலத்தில் துவங்கி, ஜூன்மாதத்தில் கலிஃபோர்னியா மாநிலத்தில் முடிவடைகின்றன.

ஏன் இவ்வளவு நாள் ஒன்றன்பின் ஒன்றாகத் தேர்வுகள் நடக்கவேண்டும், மாநிலங்கள்தான் அவற்றவற்றின் விருப்பப்படிதானே இவற்றை நட்த்துகின்றன என்ற கேள்வி மனதில் எழுவதும் இயற்கையே!

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள ஐம்பது மாநிலங்களிலும் ஒரேயடியாகப் போட்டியிட நிறையப் பணம் வேண்டும்.  இது கட்சி வேட்பாளர்கள் தமக்குள் இடும் போட்டி என்பதால், கட்சிகள் அவர்களுக்கு நிதியுதவி செய்யமாட்டா.  மேலும், முதலில் நிறைய வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் பொதுவேட்பாளராகவேண்டும் என்றே விரும்புவதால், அவர்களில் திறமையற்றவர், தகுதியற்றவர் வடிகட்டப்படவேண்டும்.

எனவே, முதலில் சிறிய, பலவிதமானபோக்குடைய மக்களும் அடங்கிய சிறிய மாநிலங்களில் அவர்கள் தத்தம் திறமை, தகுதி இவைகளை மக்களிடம் பொதுக்கூட்டங்களிலும், நேரிலும் கண்டு, பேசி, அவர்கள் ஆதரவைப்பெற்று, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள இப்படிப்பட்ட போட்டி உதவியாக இருக்கும்.  தொலைக்காட்சி நிறுவனங்களும் அவர்களுக்குள் பேச்சுப்போட்டி நடத்தி, அவர்களைப்பற்றிய விவர்ங்களை வெளிக்கொணர வழிசெய்யும்.

இதில் முதலில்வரும் ஓரிருவர்களே கடைசிவரை போட்டியிடுவார்கள்.  பல்வேறு தனி அரசியல் பற்றுள்ள நிறுவனங்களும், தனியார்களும் வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வருவார்கள்.  இதனால்தான் வெர்மான்ட் என்ற மிகச்சிறிய மாநிலத்தில் அமெரிக்க செனட்டராக இருக்கும் பெர்னி ஸான்டர்ஸ் பெரும்பாலும் தனியார்களின் சிறுநிதியுதவிபெற்று [இருபத்தியைந்திலிருந்து நூறு டாலர்களுக்குள்] திறமையாக ஹிலரி க்ளின்டனை எதிர்த்துப் போட்டியிட்டுவருகிறார்.  அவர் ஜனநாயகக் கட்சியின் பொதுவேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டாலும், அவர் திறமையாகப் போட்டியிட்டுவருவதால், அவருடைய கொள்கைகளில் சிலவற்றை ஹிலரி க்லின்ட்டன் ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.

அதுபோலவே, அனுமதியில்லாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக வன்மையாகக் கண்டனம் தெரிவித்து வருபவரும், மத்தியகிழக்கு முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று குரல்கொடுத்துவருபவரும், தொலைக்காட்சிமூலம் பிரபலமானவருமான டானல்ட் ட்ரம்ப் 2016 அமெரிக்க ஆளுநர் தேர்தலுக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகும் நிலைமையில் உள்ளார்.  கட்சி ஆதரவும் பணபலமும்பெற்றிருந்த ஜெப் புஷ்ஷும், மார்க்கோ ரூபியோ, க்ரிஸ் க்ரிஸ்டி போன்றோரும் முதல்நிலையிலேயே வடிகட்டப்பட்டுவிட்டனர்.

ஐயோவா காகஸைத் தொடந்து, நியூ ஹாம்ப்ஷையர் என்னும் சிறிய மாநிலத்தில் முதல்நிலைத் தேர்தல் நடைபெறுகிறது.  இந்த மாநிலத்தில் இருபெரும் கட்சிகளுக்கும், சுயேச்சையாளர்களுக்கும் ஒரேவிதமான வாக்காளர் எண்ணிக்கை உள்ளது.  மேலும், இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நேரில் பார்த்து முடிவுகட்டியபின்னரே, மக்களின் பிரச்சினைகளை அவர்களுடன் பேசியபின்னரே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதால், இத்தேர்தல் அமெரிக்காவில் ஒரு முக்கிய முதல்நிலைத் தேர்தலாய்க் கருதப்படுகிறது.[3]

அடுத்து எவ்வளவு பிரதிநிதிகள் பெற்றால் கட்சியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் உரிமைகிடைக்கிறது என்று பார்ப்போம்.

10.  பிரதிநிதிகள் தேர்வுக் குழப்பம் — 1

[Delegates confusion]

 “பிரதிநிதிகள் தேர்வில், எந்தவொரு மாநிலத்தின் முதல்நிலைத் தேர்தலிலோ, காகஸிலோ எவர் வெற்றிபெறுகிறாரோ, அந்தக் கட்சி வேட்பாளருக்கு அந்த மாநிலத்துக் கட்சிப் பிரதிநிதிகள் செல்லவேண்டியதுதானே? அதில் என்ன குழப்பம் வந்துவிடப்போகிறது?” என்ற கேள்வி நம் மனதில் எழுவது சரியானதே.

ஆயினும், அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வுமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொறு விதமான கணக்கீட்டைப் பின்பற்றுகிறது.  இதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், தேர்தலில் ஒரு விறுவிறுப்பும் நமக்கு ஏற்படுகிறது.  தமிழ் தொலைக்காட்சி சீரியல் கதைகளில் உள்ள குழப்பங்களும், வளைவுநெளிவுகளும் தோற்றுப்போகும் அளவுக்கு நெளிவுசுளிவுகள் இருக்கின்றன.  எனவே ஒரு தமிழ் தொலைக்காட்சி சீரியலைப் பார்க்கும் மனப்பான்மையுடன் —  எந்தவிதமான தர்க்கமுறைக் கேள்விகள் மனதில் எழுந்தாலும், அதை அடிமனதில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்க்கும் மனப்பாங்குடன் – பின்தொடருங்கள்.  உங்கள் மனதில் தோன்றும் பலவிதமான உணர்ச்சிகளையும் பொருட்படுத்தாதீர்கள்.

முதலில், பிரதிநிதிகளிலேயே பிரிவுகள் இருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர், கட்சி உறுப்பினர்கள்:  அதிலும், எண்ணிக்கையில் இருகட்சிகளும் மாறுபடுகின்றன.  அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதமும் மாறுபடுகிறது.

குடியரசுக்கட்சியின் [Republican Party] பிரதிநிதித் தேர்வுமுறை:

image (3)குடியரசுக் கட்சியில் மூன்றுவிதமான பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் மாவட்டப் பிரதிநிதிகள் [district delegates], மாநிலப் பிரதிநிகள் [at-large delegates], குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் [Republican National Committee Members] ஆவர்.[4]

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பிரதிநிதிகள் வழங்கப்படுகின்றனர். இதில் எந்த மாவட்டம் குடியரசுக்கட்சிக்கு அதிகம் வாக்களித்தது, எது வாக்களிக்கவில்லை என்று கணக்குப்பார்த்து அதிகமாகவோ, குறைவாகவோ பிரதிநிதிகள் வழங்கப்படாது ஒரேசீராகவே எண்ணிக்கை அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தது பத்து மாநிலப் பிரதிநிதிகள் வழங்கப்படுகிறார்கள்.  அந்த மாநிலத்தில் குடியரசுக் கட்சி ஆளுநர், செனட்டர், கட்சிப் பெரும்பான்மை இவற்றைப் பொறுத்து, அதிக பிரதிநிதிகள் வழங்கப்படுகிறார்கள்.

இதுபோக குடியரசுக்கட்சி செயற்குழு உறுப்பினர்கள் [Republian National Committee] அனைவரும் தானாகவே பிரதிநிதிகள் ஆகிறார்கள்.  இவர்கள் தங்களுக்கு வேண்டிய கட்சிவேட்பாளரை ஆதரிக்கலாம்.  ஒரு வேட்பாளர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றாலும், இவர்கள் அந்த வேட்பாளரைவிடுத்து வேறொருவருக்குத் தங்கள் ஆதரவை அளிக்கலாம்.

இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்டால், கிடைக்கும் பதில் இதுதான்:  ஒரு மாநிலத்து மக்கள் குறுகிய நோக்கமுள்ள, பொதுத்தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லாத வேட்பாளரத் தேர்ந்தெடுக்க்க் கூடும்.  மற்ற மாநிலங்கல் வேறொருவரை – பொதுத் தேர்தலிலோ, கட்சித்தேர்தலிலோ வெற்றிபெற வாய்ப்புள்ளவருக்கு ஆதரவளிக்கலாமல்லவா! அதனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதைப்பொறுத்தோ, தங்கள் கொள்கைகளை ஆதரிக்கும் வேட்பாளருக்கோ தங்கள் ஆதரவை நல்குகிறார்கள்.

2016ம் ஆண்டு வேட்பாளர் தேர்தலில் 1305 மாவட்டப் பிரதிநிதிகளும், 999 மாநிலப் பிரதிநிதிகளும், 168 குடியரசுக்கட்சி செயற்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மொத்தம் 2472 பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.  இதில் குறைந்தபட்சம் 1237 பிரதிநிதிகளை யார் பெறுகிறாரோ அவர் குடியரசுக்கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார்.

தேர்வுமுறைக்கு வருவோம்.

2016 குடியரசுக்கட்சி [ரிபப்லிகன்] வேட்பாளர்கள்

குடியரசுக்கட்சியின் வேட்பாளர் தேர்வுமுறையில் சில மாநிலங்களில் வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு அனைத்துப் பிரதிநிதளும் அளிக்கப்படுகின்றனர்.  இதை வெற்றிபெறுபவர் அனைத்தையும் அடைவர் [winner take all] என்று சொல்லப்படுகிறது.[5]

பரவாயில்லையே, நியாயமாக இருக்கிறதே என்று எண்ணவேண்டாம்.  இது சரியில்லை என்று பலரும் வாதிடுகிறார்கள்.  அவர்கள், “இப்படிப்பட்ட தேர்தல்முறையினால் பெரும்பான்மையுள்ள ஒருபிரிவினர் சார்புள்ளவரின் கையோ ஓவ்குகிறது.  [இந்தியாவில் பெருவாரி மக்களால் பேசப்படாத, ஆனால் மற்றெந்த மொழி பேசுபவர்களைவிட அதிகமாகப் பேசப்பட்ட ஒரு மொழி அலுவலக மொழியாக்கப்பட்டதுபோல].  இது சரியல்ல.” என்று தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள்.[6]

அந்த ஒருசில மாகாணங்களிலும் சிலவற்றில் ஐம்பது விழுக்காடுக்கும் அதிகமாக வாக்குப் பெற்றிருந்தால்மட்டுமே அனைத்துப் பிரதிநிதிகளும் அளிக்கப்படுவர். இல்லாவிட்டால், மற்ற மாகாணங்கள் செய்வதுபோல — குரங்கு அப்பம் பிய்த்து வழங்குவதுபோல — அவரவர் பெறும் விழுக்காட்டுக்குத் தகுந்தவாறே வழங்கப்படும். அதிலும் குடியரசுக்கட்சி ஒரு டொக்கு வைத்திருக்கிறது.

வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் இருபது சதவிகித வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால்தான் பிரதிநிதிகள் வழங்கப்படுவர்.  இல்லையேல் கிடையாது.

ஏன் என்று கேட்கிறீர்களா?  இப்படி ஒரு சதவிகிதம், அரை சதவிகிதம் என்று ஓட்டு வாங்கினால் இருக்கும் பிரதிநிதிகளை எப்படித் துண்டாடி வழங்குவது?  உதாரணமாக, ஒரு மாநிலத்தில் இருபது மாவட்டங்கள் இருந்தால் இருபதோ மாவட்டப் பிரதிநிதகள் இருப்பார்கள்.  ஒருவர் ஒரு விழுக்காடு வாக்குகள் பெற்றால் அவருக்கு ஐந்தில் ஒரு பிரதிநிதி என்று கணக்காகிறது.  அதை எப்படி வழங்க இயலும்? இப்படி மிகக்குறைவான வாக்குகள் பெறும் ஒரு வேட்பாளர் எதிர்கட்சி வேட்பாளரை எவ்வாறு வெல்ல இயலும்? மேலும், பல வேட்பாளர்களை வடிகட்டி, கடைசியில் ஒரு வேட்பாளரைக் கட்சியின் வேட்பாளர் என்று அறிவிக்க இப்படிப்பட்ட விதியை வைக்கவேண்டியிருக்கிறது என்று கட்சி தீர்மானித்திருக்கிறது.

அடுத்து மக்களாட்சிக்கட்சி [Democratic Party] எப்படிப் பிரதிநிதிகளை வேட்பாளர்களுக்கு வழங்குகிறது என்று பார்ப்போம்.

மக்களாட்சிக்கட்சியின் [Democratic Party] பிரதிநிதித் தேர்வுமுறை:

image (5)இக்கட்சியில் உறுதியளிக்கப்பட்ட பிரதிநிதிகள் [pledge delegates], மேம்பட்ட [சூப்பர்] பிரதிநிதிகள் [super delegates] என்று இருபிரிவுகள் உள்ளனர்.

உறுதியளிக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை கீழ்வருமாறு கணக்கிடப்படுகிறது:

  • மாவட்டப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, ஒரொரு மாவட்டத்திலும் சமீபத்தில் நடந்த தேர்தலில் மக்களாட்சிக்கட்சிபெற்ற வாக்குகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறே அமைகிறது. அந்தந்த மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற வாக்குகளுக்கேற்ப மாவட்டப் பிரதிநிதிகள் வழங்கப்படுகிறார்கள்.
  • மாநிலப் பிரதிநிதிகளை வேட்பாளர்கள் மாநில அளவில் தாங்கள் அடைந்த வாக்குகளுக்குத் தகுந்தவாறு பெறுகிறார்கள்.
  • இதுபோக, உள்ளூர், மாவட்ட, மாநிலக் கட்சித்தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் கட்சிப் பிரதிநிதிகள்[எம்.எல்.ஏ, எம்,எல்.சி மேயர்கள் மாதிரி] உறுதியளிக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒருபிரிவாக கட்சியால் நியமிக்கப்பட்டு, மாநில முதல்நிலைத் தேர்தல் வாக்குகளின் விகிதப்படி வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுகிறார்கள்.
  • உறுதியளிக்கப்பட்ட பிரதிநிதிகளைப்பெற குறைந்தபட்சம் பதினைந்து சதவிகித ஓட்டுகளை ஒரு வேட்பாளர் அடைந்தாகவேண்டும். மக்களாட்சிக்கட்சியைப் பொறுத்தமட்டில் இந்த விதிமுறையே அனைத்து மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.  வெல்லோருகெல்லாம் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதில்லை.

மேலும், சூப்பர் பிரதிநிதிகள் என்று ஒரு பிரிவு இருக்கிறது.  இவர்கள் குடியரசுக்கட்சிமாதிரியே தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு ஆதரவு தரலாம்.  மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த கவர்னர்கள், ஆட்சிமன்ற உறுப்பினர்க்ள், செனட்டர்கள், கட்சித்தலைவர்கள், கட்சிச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இதில் இடம் பெறுகிறார்கள்.image (6)

மொத்தம் 4765 பிரதிநிதிகளில் 15% சூப்பர் பிரதிநிதிகள், மற்றவர்கள் உறுதியளிக்கப்பட்ட பிரதிநிதிகள்.  ஒரு வேட்பாளர் இவ்விரு பிரதிநிதிகளையும் சேர்த்து 2383 பேர் ஆதரவை அடைந்தால்தான் அதிபர் வேட்பாளராகமுடியும்.

[தொடரும்]

***   ***   ***

பின்குறிப்புகள்:

[1]   https://people.howstuffworks.com/question721.htm

“Federal law doesn’t dictate how states choose their delegates, so individual states decide what system to use. Most states use the primary system — where voters statewide simply cast a vote for the candidate they support — but some use the older caucus system.”

Presidential election primaries and caucuses are two very different methods of accomplishing the same basic thing.  Simply put, they are both a means for each political party to let vote­rs nationwide select their party’s presidential nominee.  More specifically, primaries and caucuses are means of selecting delegates (representatives of party members in each state) to send to the party’s national convention.

Caucus night is more time-consuming because it includes discussing candidates, picking convention delegates and dealing with state party business.

https://people.howstuffworks.com/question721.htm

[2]   https://fivethirtyeight.com/features/bernie-sanders-continues-to-dominate-caucuses-but-hes-about-to-run-out-of-them/

https://www.usatoday.com/story/news/politics/elections/2016/2016/04/09/sanders-looks-wyoming-win-ahead-critical-new-york-primary/82833914/

[3]  https://www.bustle.com/articles/139850-why-is-the-new-hampshire-primary-so-important-the-granite-states-picks-rarely-become-president

New Hampshire is critical not because it’s first, but because it forces candidates to put aside overgeneralized campaign slogans like “Make America Great Again” and talk directly to voters about issues that matter to them (even if those issues don’t exactly align with what the majority of U.S. voters care about).

[4]   https://ballotpedia.org/2016_presidential_nominations:_calendar_and_delegate_rules

The Republicans also have three types of delegates: congressional district delegates, at-large delegates and Republican National Committee (RNC) members.

[5]   https://ballotpedia.org/Winner-take-all

Winner-take-all or winner-takes-all is an electoral system in which a single political party or group can elect every office within a given district or jurisdiction.

[6]   https://www.fairvote.org/proportional_representation#what_is_fair_voting

Instead of reflecting all voters, our legislators reflect only the biggest or strongest group of voters that elected them, leaving all others unrepresented.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *