சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]

<<  மற்ற பகுதிகள்

அழகிய நீலவானம் — மாசுமருவற்று சின்ன மேகம்கூட இல்லாமல் விளங்கியது.  அந்திப்பொழுது நீங்கி கீழ்த்திசையில் உதித்த திங்கள், அகன்ற நீலவானில் ஒருமுனையில் சிறிய அளவில் தோன்றினாலும், அதன் தோற்றம் பார்ப்பவர் கண்களுக்குப் பளிச்சென்று தெரிந்த்து. இது எப்படி என்றால், எவ்விதத் தீநெறியும் இல்லாமல் நன்நெறியில் வாழ்பவர், சிறிய தவறு ஒன்றே ஒன்று செய்தாலும், பார்ப்பவர்களுக்கு அந்தத் தவறு மட்டும் பளிச்சென்று தெரிவதுபோலாகும். பூம்புகார் நகரில் அந்திப்பொழுது போய் இரவு வந்தது  .உடன் வெள்ளிச் செம்பைக் கவிழ்த்துப்  பாலைச் சொரிவதுபோல வெண்ணிலவும் வந்தது.

என்னசெய்வது என்பது அறியாமல் மணிமேகலையும் சுதமதியும் தவித்துக்கொண்டிருந்தனர். அறநெறியாளர்களுக்கு உடைமையான இந்த உவவனத்தில் இருக்கும்வரையில் மணிமேகலைக்குக் காவலுண்டு. உதயகுமாரன் உவவனத்தில் அட்டூழியங்கள்செய்து, அவளைக் கவர்ந்துசெல்ல முயற்சிக்கமாட்டான். ஆனால் எத்தனை மணித்துளிகள் இங்கே காத்திருப்பது?

‘சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை’

திருவள்ளுவருக்கென்ன, கற்பை மகளிருக்கே உரிய சொத்துபோலச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். மணிமேகலையும் சிறுபெண்தானே! பருவம் தனக்குள்ள தன்மையை வெளிப்படுத்தாமல் போகுமா என்ன? இயற்கையின் வேட்கைக்கு ஆண்-பெண் பேதம் ஏது? ஆயின் தவறு நேரும்போது அதிகம் பாதிக்கப்படுவது பெண்தானே! ஆண்களுக்குக் களவொழுக்கத்தில் இப்படி ஓர் எளிதில் தப்பித்துச் செல்லும் வசதி ஏன்?

இரு பெண்களிடமும் உள்ளத்தில் இருந்த கொந்தளிப்பைத் தவிர வாய் வார்த்தை இல்லாமல் போனது.

“தெய்வம்தான் துணை இருக்கவேண்டும்,“ என்றாள் மணிமேகலை.

“ஆமாம், அந்தத் தெய்வம் அப்படியே நேரில்வந்து தோன்றப்போகிறது, பார் “ என்று கேலியாகப் பேசினாள் சுதமதி.

மின்னல்வெட்டியதுபோல வானில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் இருவர்முன்பும் வானவில்லின் அத்தனை நிறங்களும் மின்னியதுபோல மணிமேகலா தெய்வம் தோன்றியது. மணிமேகலாவின் தெய்வத்தன்மை இருவரையும் வியக்கவைத்தது. மணிமேகலா தெய்வம் பளிக்கறையிலிருந்த புத்தரின் பத்மபீடத்தை மும்முறை வலம்வந்து ஒரு மானுடப் பெண்ணின் வடிவத்தையடைந்து இருவர்முன்பாக வந்துநின்றது.உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள். manimekala deity

சுதமதியின் நல்ல முகத்தை ஏறிட்டு நோக்கி, “யார், நீங்கள் இருவரும்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்றது மணிமேகலா என்ற பெண்தெய்வம்.

“நீங்கள் யாரென்று தெரியவில்லையம்மா. இருப்பினும் இப்பொழுதில் எங்களுக்கு உதவிபுரிவீர்கள் என்று தோன்றுகிறது. இவள் என் தோழி. மணிமேகலை என்று பெயர். கணிகையர்குலத்தில் பிறந்த மாதவி என்பவளுக்கும், வணிகர்குலத்தில் பிறந்த கோவலன் என்பவருக்கும் மகளாகப் பிறந்தவள். ஊழ்வினை காரணமாக இவள் தந்தை மதுரையில் கொலைக்களப் பட்டார். கோவலனின் உரைசால் பத்தினி கண்ணகி, தனது கற்பென்னும் நெருப்பால் மதுரையம்பதியை எரித்து வானுலகம் சென்றாள். மாதவி தனது கணிகைத் தொழிலைத் தொடரவிரும்பாமல் தானும் புத்தமதத்தில் சேர்ந்து, தன் மகளையும் சேர்த்துக்கொண்டுவிட்டாள். இளம் துறவியான இவளை புத்ததுறவி என்ற மரியாதையைக்கூடக் கொடுக்காமல் இப் புகாரின் மன்னன்மகன் உதயகுமாரன், காமவெறியுடன் துரத்திவருகிறான். அவனிடமிருந்து  தேரோடும்  வீதிகளில் தலைகாட்ட முடியவில்லை.  அவனுடைய பிடியிலிருந்து தப்பிக்கவே இந்தப் பளிக்கறையில் புகுந்தோம்,“ என்றாள்.

“ஓ!” என்று அந்த மணிமேகலா தெய்வம் சிறிதுநேரம் சிந்தையில் ஆழ்ந்தது.

“பெருநகர வீதிகளில் செல்வது ஆபத்தானதுதான். எந்தநேரமும் இவள் நினைப்பு மாறாத உதயகுமாரன் துரத்தி வருவான். ஒன்று செய்யுங்கள். நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டத்தின் மேற்குப்புறச் சுவர் வழியாகச் சென்றால், அங்கே ஒரு சிறிய வாயில் இருக்கும். அதன் உள்ளே நுழைந்து போனால், சக்கரவாளக் கோட்டம் என்ற கோவில் ஒன்று இருக்கும். அங்கே தவம்புரியும் முனிவர்கள் இருப்பார்கள்.  இரவுமுழுவதும் தங்கினாலும் உங்களுக்கு எவ்வித அச்சமும், ஆபத்தும் நேராது,“ என்றது மணிமேகலா தெய்வம்.

“அட! ஆச்சரியமாக உள்ளதே! வஞ்ச விஞ்சகனான மாருதிவாகனும்,  இந்த ஊரில் உள்ள மற்றவர்களும் அந்த இடத்தைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றுதான் அழைப்பார்கள். நீ மட்டும் எப்படி அதனைச் சக்கரவாளக் கோட்டம் என்று அழைக்கிறாய்?” என்றாள்.

“பெரிய கதையம்மா அது. சொல்லிமுடிப்பதற்குள் இரவு முடிந்துவிடும். நீங்கள் கேட்க ஆயத்தம் என்றால் நான் சொல்லக் காத்திருக்கிறேன்,“ என்றது மணிமேகலா தெய்வம்..

“நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்,“ என்றாள் சுதமதி, உற்சாகமாக.

“சொல்கிறேன். இந்தப் புகழ்மிக்க புகார்நகரம் தோன்றியபோதே ஈமக்காரியங்களுக்கு அடுக்கிவைக்கப்பட்ட விறகுக்கட்டைகள் நிறைந்த இந்தச் சுடுகாடும் தோன்றிவிட்டது. அந்தக் கோட்டம் இந்தக் கோட்டத்தின் மதிலுக்கு அருகில் உள்ளது. அதன் நுழைவாயிலின் அமைப்பு, தேரின் விமானம்போன்று அழகாகப் புனையப்பட்டது. அதன் வழியாக வானவர்கள் செல்வதற்குக் கொடித்தோரணங்கள் தொங்கும் வாயில் ஒன்று உள்ளது. பசுமையான நெல்வயல், கரும்புவயல், நீர்நிலைகள், மலர்ச் சோலைகள்போன்றவை, காண்பவர் கண்களைக் கவரும் வண்ணம் ஒவியங்களாகச் சுவரில் வரையப்பட்ட  இன்னொரு வாயிலும் உள்ளது. வெள்ளியைப்போன்று தோன்றும் வெண்மையான சுண்ணாம்பினால் உருவம் எதுவும் வரையப்படாத வெற்றுச் சுவரினை உடைய வாயிலும் உள்ளது. மடித்துச் சிவந்த கோரமான வாயும், கடுமையான அச்சமேற்படுத்தும் பார்வையும், ஒரு கரத்தில் பாசக்கயிறும், மற்றொரு கரத்தில் சூலமும் தாங்கிய, சுதைமண்ணால் செய்யப்பட்ட பூதவடிவத்தைத் தாங்கிய வாயில் ஒன்றும் உள்ளது. இப்படி நான்குபுறமும் காவல் சூழப்பட்ட வாயில்களை உடைய கோட்டம் அது. தலைமுடியை மரத்தில் சுற்றியபின்னர், தலையை அரிந்து பலி கொடுப்போர்களின் தலைகளைத் தாங்கிய மரங்கள் சூழ்ந்த பலிபீடம் உடைய முன்றிலும், காட்டில் வழிபடும் தெய்வமான துர்க்கையின் கோவில் ஒன்றும் அங்கு உள்ளது.””

மேலும் தொடர்ந்தது, மணிமேகலா தெய்வம்.

“அருந்தவம் செய்யும் துறவிகள், இந்த மண்டலத்தை ஆளும் அரசர்கள், கணவன் இறந்தபின்பு  அவன் பிரிவைத் தாங்காமல் உயிர் இழக்கும் பத்தினிப் பெண்டிர், நான்கு வருணங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இறந்த பின்னர், அவர்களுடைய உற்றார்-உறவினர்கள்  செங்கற்கள்கொண்டு சிறியதாகவும், பெரியதாகவும், சிறிய குன்றுபோலவும் எழுப்பிய பல கோட்டங்கள் நிறைந்த இடம் அது.

“அங்கு இறைவனைத் தாங்கிய கடவுள்-கம்பமும், ஒரு பலிபீடமும் இருக்கும். அமர்வதற்கு வசதியாகக் கருங்கல் திண்ணைகளும்(பூங்காக்களில் இருக்கும் பெஞ்ச்போன்ற இருக்கைகள்), வளைந்துவளைந்து செல்லும் பல சந்துகளும் உடைய சுடுகாட்டுப் பகுதி அது. கையில் கோலும், மண்டையோடும் தாங்கிய சுடுகாட்டுக் காவலர்கள் தங்கி, உண்பதற்கும், உறங்குவதற்கும் ஏற்ற குடிசைகள் உள்ளன. கொடிபோல அசையும் புகையும், எரிக்கும்போது மேலெழும் சுடரும், ஈமக்கிரியைகள் நிறைவேற்றப் பந்தல்களும் நிறைந்திருக்கும்.

“எரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது.

“பலத்த ஓசை  என்றால் சாதாரண ஓசையா அது? கடலின் ஓசையைப்போலப் பெரிய ஓசை. இறந்தவருடன் வந்தவர்கள் மத்தியில் ஈமச்சடங்குகளின் போது எழும் சங்கின் ஓசையும், துறவிகள் இறந்ததால் உடன் வந்தவர்கள் பாடும் சாந்திப் பாடல்களின் ஓசையும், இல்லறத்தோர் இறந்தால் உற்றத்தார் எழுப்பும் ஒப்பாரி ஓசையும், நீண்ட முகங்களை உடைய நரிகளின் ஊளையும், இறந்தவர்களை அழைப்பதுபோல அலறும் ஆந்தையின் அலறலும், பிணம்தின்னக் காத்திருக்கும் கோட்டான்களின் கூவலும், பிணத்தின் தலையைக் கொத்தித்தின்னும் ஆண்டளைப் பறவைகளின் சப்தமும், ஒன்றுசேர்ந்து ஒலிக்கும்போது நதிகள் பாய்வதால் கடல் எழுப்பும் ஓசையைப்போல இருக்கும்.

“தான்றி மரமும், ஒடுமரமும், வாகைமரமும் உயர்ந்து வளர்ந்திருக்கும். கான்றை, சூரை, கள்ளி என்ற புதர்ச்செடிகள் செறிந்துள்ள இடங்களில் கடும்பசியில் காய்கின்ற பேய்கள் திரண்டு வரும். வானில் உள்ள மேகங்களைத் தொடும் அளவிற்கு நீண்டு உயர்ந்த வாகைமரத்தின் அடியில் ஒரு மன்றம் இருக்கும். பிணங்களின் தசைகளைப் பிய்த்துத் தின்றுவிட்டுப் பறவைகள் வந்து அமரும் விளாமரத்தின் அடியிலும் மன்றம் ஒன்று உள்ளது. கபாலிகர்கள் சமைத்து உண்பதற்கு ஏதுவாக அடுப்புமேடையுடன் கூடிய மன்றம் ஒன்று அங்குள்ள பெரிய வன்னிமரத்தின் கீழே உள்ளது.  மண்டை ஓடுகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்துகொள்ளும் விரதமிருக்கும் துறவிகள் தங்குவதற்கு இலந்தைமரத்தின் அடியில் ஒரு மன்றம் உள்ளது. பிணம்தின்னும் மனிதர்கள் ஊனினை இட்டு விருந்துசெய்வதற்கு வசதியாகப் பானைகளை இடும் அடுப்புகள்கொண்ட மன்றம் ஒன்றும் வெளியிடத்தில்  உள்ளது.

“பானை ஒன்றில் நெருப்பும், ஓட்டைப் பானை ஒன்றில்  நீரும்கொண்டு முன்னால்வர பிணம் சுமந்துவரும் பாடை பின்னால் வருகிறது. ஈமைக்கிரியைகளுக்குத் தேவைப்படும் பலகாரங்களைச் சுமந்துவரும் பானைகள் தொங்கும் உறியும் அதற்குப் பின்னால் வருகிறது. அந்த இடம் முழுவதும் பாடையில் தொங்கிவந்து, பின்னர் அறுத்து எறியப்பட்ட மாலைகள் என்னும் மலையால் மூடப்பட்டிருக்கிறது. இது போதாதென்று உடைந்த பானைகளின் ஓடுகளும் அரிசி, நெற்பொரிபோன்ற்வைகளும் மிகுதியாக இறைந்து காணப்படுகிறது

“காலன் ஒரு கொடிய தொழில் புரிபவன். அவன் தவம்புரியும் ஞானிகள் என்றோ, மிகப்பெரிய செல்வந்தர்கள் என்றோ, இதோ இப்போது மலர்ந்த இளம்பெண்கள் என்றோ, ஒன்றுமறியா பச்சிளம்பாலகன் என்றோ கருதாமல் காலம் கூடிவரும்போது அவர்களைக் கொன்றுகுவிக்கும் கொடுங்கோலன். என்றாவது ஒருநாள் இந்தச் சுடுகாட்டு நெருப்பு நம்மை விழுங்காமல் விடாது என்று தெரிந்திருந்தும் நல்லறங்களைப் புரியாது களிப்பூட்டும் செல்வம் என்றுகொண்டாடிக் கள்ளுண்டு வாழும் மனிதர்களைப்போல மடையர்கள் இருக்கிறார்களா?”

“இத்தனை குணங்களைக்கொண்டு ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டிற்குள் அது ஏதோ ஒரு நகரம் என்று தவறாக எண்ணியபடி சார்ங்கலன் என்னும் பெயரையுடைய அந்தணச் சிறுவன் ஒருவன் உள்ளே நுழைந்தான்.”” என்று நிறுத்தியது, மணிமேகலா தெய்வம்.

“ஐயோ! பிறகு என்னவாயிற்று?” என்று கேட்டாள் சுதமதி.

“சொல்கிறேன். நெஞ்சம் பதைபதைக்கும் கதை.,” என்று  அந்தப் பெண்தெய்வம் தொடர்ந்தது.

“ஒரு நரியானது செம்பழஞ்சுக் குழம்பினால் அழகிய சித்திரம் எழுதப்பட்ட இளம்பெண் ஒருத்தியின்  பாதம் ஒன்றை வாயில் கவ்விச்  சென்றுகொண்டிருந்தது. அந்தக் குஷியில் அது ஆனந்த  ஊளை இட்டவண்ணம் இருந்தது. கழுகு ஒன்று அந்த இளம்பெண் பிணத்தின் இடுப்பின்மேல் அமர்ந்து அப்பெண்ணின் அழகிய அல்குலை தனது அலகால் கிளறித் தின்று ஆனந்தக் கூச்சல்  இட்டுக்கொண்டிருந்தது. கங்கணம் அணிந்திருந்த  அந்த இளம்பெண்ணின் கையை, உடையும்வண்ணம் ஒரு செந்நாய் பற்றியிழுக்க, அது முடியாமல்போகவே, அந்தச் செந்நாய் கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தது. சந்தனம் எழுதப்பட்ட அந்த இளம்பெண்ணின் வனமுலையைப்  பசியால்வாடிய கழுகு ஒன்று ஓசை எழுப்பியபடி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.”

“அங்கிருந்த பெண் பிணத்தின் தலையை ஒரு பேயானது கைகளில் எடுத்துக் களிநடனம் புரியத் தொடங்கியது.”

“மழை மேகமா,  அல்லது இது கூந்தலா, இவை கயல் மீன்களா அல்லது கருவிழிகளா, அழகிய சிமிழா அல்லது எடுப்பான நாசியா, இதழில் இருப்பவை முத்துக்களா அல்லது வெண்பற்களா என்று ஐயம் எதுவும்கொள்ளாது — பாவம் பெண்தானே என்றும் இரக்கம்கொள்ளாமல், கண்களைத் தோண்டியும், கால்களைப் பிளந்தும் ஒரு பேய் தணியாத களிப்புடன் ஆடிக்கொண்டிருந்த கூத்தினைச் சார்ங்கலன் கண்டான்.”

“அந்தப் பேயைப் பார்த்ததும் சிறுவன் அலறி, நடுங்கித் திசைதெரியாது ஓடினான். அந்தப் பேய் விடாது துரத்தி அவனைப் பற்றிக்கொண்டது. சார்ங்கலன், ‘அம்மா, அம்மா,’ என்று அலறினான். பேய் விடுவதாக இல்லை.  அம்மா இந்தக் கொடிய பேயின் உணவாக நான் மாட்டிக்கொண்டுவிட்டேன். காப்பாற்றுங்கள்!“ என்று அலறி, முடிவில் அச்சத்தில் இறந்துபோனான்.”

“அடப்பாவமே!“ என்றாள் மணிமேகலை. அந்தச் சிறுவனின் இறப்பிற்காக அவள் கண்ணீர் விட்டாள்.

“அப்புறம் என்னவாயிற்று?”” என்றாள் சுதமதி.

மணிமேகலா தெய்வம் தொடர்ந்தது.

“காலையிலிருந்து தன் மகனை எங்கும் காணாமல் அலைந்து தேடிய அந்தணமாது இறுதியில் சக்கரவாளக் கோட்டத்தில் தன் மகனை பிணமாகக் கண்டாள்.

“சிறுவன் சார்ங்கலனின் தாய் வெகுண்டெழுந்தாள். சிறுவனின் உடலைக் கைகளில் ஏந்தியபடி சம்பாபதி கோவில்முன் சென்றாள். சிறுவனின் பிணத்தைச் சம்பாபதிமுன் கிடத்தினாள். ஆவேசமாகச் சம்பாதியைப் பார்த்து, ‘என் கணவன் ஒரு அந்தணன். கண்பார்வையற்றவன். எங்கள் இருவருக்கும் இவன் ஒரே புதல்வன். தீவினைப் பயனை அனுபவிக்கும் அப்பாவி என் மகன். யாருமற்ற  வறியவள் நான் என்ற இரக்கம் கூடக்கொள்ளாமல் என் மகனின் உயிரைக் குடித்தது பெண்பிசாசோ, பேயோ எதுவென்று தெரியவில்லை, உனக்கென்ன சம்பாதி, உட்கார்ந்த இடத்திலிருந்தே நீர்நிலைகளையும், மன்றங்களையும், வலிமையான மரங்களையும், கோவில்களையும் காப்பவள் நீ. அப்படிப்பட்ட நீ என் மகனை அந்தப் பேயிடமிருந்து காப்பற்றவில்லையே, ஏன்? உன் தெய்வத்தன்மைக்கு இது அடுக்குமா?”” என்று தனது மகனை மார்புடன் தழுவிக்கொண்டு அந்தணப் பெண் கதறினாள்.”

“சம்பாபதி தோன்றினாளா?” என்றாள் சுதமதி.

“ஆமாம். பொன்னிற வடிவில் தகதகவென்று மின்னியபடி அப்பெண் முன்னர் தோன்றிய சம்பாபதி,” ‘அர்த்தராத்திரி வேளையில் என்னை அழைத்து முறையிடும் பெண்ணே, உன் குறை என்ன?’ என்றாள்.

“ ‘அறியாப் பாலகன் என் மகன். எல்லா இடங்களிலும் ஓடித்திரிபவன். இது சுடுகாடு என்பது தெரியாமல் நுழைந்துவிட்டான். பயமுறுத்தி அனுப்பியிருந்தால் ஓடிப்போயிருப்பான். அப்படிப்பட்ட பச்சிளம்பாலகனை இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டார்களே? யார் கொன்றது என்பதுகூடத் தெரியவில்லையே?’ என்று புலம்பினாள்.

“ ‘பெண்பிசாசும், பேய்களும் மானிடர் உயிரை மாய்ப்பதில்லை. உன் மகனுக்கு ஆயுள்முடிந்ததால் இறந்தான். இதற்குப் பேய்களைக் குறை கூறாதே. அவனுடைய அச்சத்தைக் காரணமாகக்கொண்டு ஊழ்வினை அவனுடைய உயிரைப் பறித்தது. வருந்தாமல் உன் பெரிய துன்பத்தை விட்டு விடு‘ என்றாள் சம்பாபதி.

“அந்தணப் பெண் விடவில்லை.  ‘என் உயிரைப் பெற்றுக்கொண்டு என் மகன் உயிரைக் கொடு. கண்ணில்லாத என் கணவனுக்கு இவன் காலமெல்லாம் உற்றதுணையாக இருக்கவேண்டும். என் உயிரைப்பெற்று இவன் உயிரைத் திருப்பித் தா’ என்று கதறினாள்.

“சம்பாபதி மகனின் சாவிற்காக வருந்தியழும் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘இறந்தபிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ? பின் எதற்குக் கலங்குகிறாய்?  உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள். தெய்வம் சென்றஉயிரை மீட்டுத் தரும் திறமை உள்ளது என்பது பலி கொடுப்பதைத் தொழிலாகச்செய்யும் வைதீக அந்தணர்கள் கூறும் பொய்யாகும். உயிருக்குப் பதில் உயிரைக் கொடுப்பதென்றால் அரசர்கள் இதுவரை சாகாவரம் பெற்றவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? இல்லையே! இந்தக் கோட்டத்தில் அரசர்களுக்கு எழுப்பப்பட்ட பல மாடங்கள் இருக்கின்றனவே? நிந்திப்பதை விடு. உன் துன்பத்தை மாற்றிக்கொள்.’ என்றது”

“ ‘வேதப் பிராமணர்களின் சாத்திரங்கள் எல்லாம் கடவுள் வரமளிக்க வல்லவர் என்கின்றன. பெரிய சாமியாகிய நீ எனக்கு அருளவில்லை என்றால் நான் எங்கு போவேன்?’ என்று அந்த அந்தணமாது விடாமல் கேட்டாள்.”

“அதற்குச் சம்பாபதி, ‘ஊழிமுதல்வன் என்று போற்றப்படும் கடவுளுக்கு இறந்த உயிரைத் திருப்பித்தரும் வல்லமை இருந்தால், இந்தச் சக்கரவாளக் கோட்டத்தைச் சுற்றித்திரியும் தேவர்களுக்கு அந்த வல்லமை இருந்தால், நானும் உன் மகனின் உயிரைத் திருப்பித்தருவேன், பெண்ணே,’ என்று கூறியது

“அருவமற்ற நால்வகைப் பிரமர்களும், உருவமுடைய பதினாறுவகையான பிரமர்களும், சந்திர-சூரியன் என்ற இரண்டு ஒளிச்சுடர்களும், ஆறுவகையான தேவகணங்களும், பலதரப்பட்ட அசுரர்கள், துன்பங்களை அனுபவிக்கும் எட்டுவிதமான நரகலோகத்தைச்சேர்ந்த நரகர்களும், நெடிய ஆகாயத்தின்மேல் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களும், ஒன்பது கிரகங்களும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் இந்தச் சக்கரவாளக் கோட்டத்தற்கு வரம்தரும் தேவர்களைச் சம்பாபதி தெய்வம் வரவழைத்து, ‘இந்தப் பெண்ணின் துயரத்தைப் போக்குங்கள்,’ என்றுவேண்டியது.”

“சம்பாபதியின் அழைப்பை ஏற்றுத் தேவர்கள் அங்கு தோன்றினர். அவர்களும் சம்பாதி என்ன கூறியதோ அதையே கூறினார்கள். அதன்பிறகுதான் வருத்தமுற்ற அந்தணப்பெண் தனது துயரம் நீங்கினாள். பிறகு தனது மகனின் உடலுக்குரிய அந்திமக்கடன்களைக் கழித்துவிட்டு, தானும் தன் உயிரை அங்கயே மாய்த்துக்கொண்டாள்.

“சம்பாபதி அந்தச் சக்கரவாளக் கோட்டத்தின் மிகப் பெரிய தெய்வமாக விளங்கினாள். இந்தச் சக்கரவாளக் கோட்டமானது எங்கும் வாழும் தேவர்கள் கூடும் இடமாகும்; இது இருக்கும் பெரிய நிலப்பரப்பில் உயர்ந்த மலை ஒன்று கடல்சூழ விளங்குகிறது. நடுவில் மேருமலை உள்ளது. அந்த மேருமலையைச் சுற்றி ஏழுவகை மலைகள் உள்ளன. இரண்டாயிரம் சின்னச்சின்ன தீவுகள் உள்ளன; இவையனைத்தும் உரியமுறையில் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன; அந்த உயிர்கள் வாழ்வதற்குரிய இடங்களை மயன் எனப்படும் தேவதச்சன் கட்டிடமுறை மாறாமல் அமைத்துக் கொடுத்துள்ளான். அதே மயன்தான் கட்டிடக்கலையின் இலக்கணம் சிறிதும் மாறாமல், மண்ணால் செய்யப்பட்ட சுதைச்சிற்பங்கள் அமைத்து, இந்தச் சக்கரவாளக் கோட்டத்தைக் கட்டிக்கொடுத்தான். அத்தனை சிறப்புமிக்க இந்தச் சக்கரவாளக் கோட்டத்தைக் காண். இந்தக் கோவில் சுடுகாட்டினுடைய சுவரை ஓட்டியே கட்டப்பட்டிருப்பதால் இதனைச் சுடுகாட்டுக் கோவில் என்றே மக்கள் அழைகின்றனர். இதுதான் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறு,“என்று மணிமேகலா தெய்வம் உரைத்தது.

அப்பெண்தெய்வம் அகன்றதும் மணிமேகலை ஓர் இருக்கையில் அமர்ந்தாள். படுப்பதற்கு ஏதுவான நீண்ட இருக்கை. சுதமதி அவள்  மடிமீது சாய்ந்துகொண்டாள். நீண்ட வாழ்வின் துயரம் அவள் முன்னே ஊசலாடியது. அதைத் தாங்கும் வலிமை தனக்கு இல்லை என்பதை அறிந்து பேதைப்பெண் மணிமேகலை பெருமூச்சு விட்டாள். “இது என்ன வாழ்க்கையடி, சுதமதி? இதன் வேதனைகள் கொஞ்சமா நஞ்சமா?  வாழ்வின் துயர் பெண்களுக்கு இன்னும் அதிகம். அது ஆகாயம்போன்றது,” என்று வாழ்வு குறித்துத் தன் அறிவுக்கு எட்டிய கருத்துகளைக் கூறத்தொடங்கினாள்.

பின்னிரவு வேளை நெருங்கி விட்டதால் கதை கேட்டுக்கொண்டிருந்த சுதமதி அப்படியே உறங்கிவிட்டாள்.  மணிமேகலை மெதுவாகச் சுதமதியின் உறக்கம் கெடாமல் அவளை அந்த இருக்கையில் படுக்கச்செய்தாள். பிறகு அங்கிருந்து எழுந்தாள். தன்னை எவரோ தொடுவதுபோலத் தோன்றவே, மணிமேகலை திடுக்கிட்டுத் திரும்பினாள்.

மணிமேகலா தெய்வம் நின்றுகொண்டிருந்தது. அத்தெய்வத்தைத் தனது தாயைப்போல உணர்ந்த மணிமேகலை, துக்கம் மேலிட, ஆறுதல் பெறவேண்டி அந்தத் தெய்வத்தின் மேலே சாய்ந்தாள். மணீமேகலையைத் அன்புடன் தனது மார்போடு ஆரத்தழுவிய மணிமேகலா தெய்வம், அவளது கூந்தலை தடவிக்கொடுத்தது. உணர்ச்சிபொங்கிய நிலையில் மணிமேகலை அப்படியே கண்மயங்கினாள். அதன்பிறகு நடந்தது என்னவென்று மாதவியின் மகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

மணிமேகலா தெய்வம் அவளைத் தன்னுடன் அந்தரத்தில் எழுப்பிக்கொண்டு, ஆகாயமார்க்கமாகத் தென்திசையில் கடலிலிருந்து முப்பது யோசனைதூரம் பயணித்தது. இறுதியில் மணிபல்லவம் என்ற தீவில் இறங்கி அங்கே மாதவி மகளை ஒரு பாதுகாப்பான இடத்தில் கிடத்திவிட்டு அகன்றது.

பின்குறிப்பு: மரணம் குறித்தும், யாக்கை  நிலையாமை  குறித்தும் மணிமேகலையைத் தவிர அழகாக கவித்துவத்துடன்  இன்னொரு  நூல்  கூறியிருக்கின்றதா என்பது தெரியவில்லை. ஒரு சுடுகாட்டு  வளாகம் எப்படி  இருந்தது என்பதனை தத்ரூபமாகச் சீத்தலைச்சாத்தனார் படம்பிடித்துக் காட்டுகிறார். மரணம்  நேர்ந்தால் என்னவெல்லாம் காரியங்கள் செய்வார்களோ அவை அனைத்தும் இரண்டாயிரம்  வருடப்பழமையின்  தொடர்ச்சி  என்பதனை நாம் அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி  ஏற்படுகிறது. நான்கு வருணத்தாருக்கும்  ஒரே சுடுகாட்டு  வளாகம் என்பது இங்கே நோக்கத்தக்கது. மணிமேகலை  எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் சாத்தனாருக்கு இருந்திருக்கவேண்டும். ஒன்று ஒர் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின்  நிலை; மற்றொன்று புத்தமதக் கொள்கைகள். முதல் நோக்கத்தை ஒரு பெண்ணின் பிணத்தின்மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பாபதி  என்ற தெய்வம்பற்றிய குறிப்புகளும் இந்தக் காதையில்  வருகிறது. மரத்தில் தலைமுடியைக் கட்டித் தற்கொலை செய்துகொள்பவர்கள் குறித்த செய்தியும் காணப்படுகிறது. எரித்தல், குழியில் இடுதல், தாழியில் அடைத்துப் புதைத்தல்போன்ற அனைத்துவிதமான ஈமக்காரியங்களும்  அக்காலத்தில் நடைபெற்றுள்ளன.

***   ***   ***

(தொடரும்)

3 Replies to “சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]”

  1. படிப்பதற்கு சங்கடமாக உள்ளது. இவற்றையெல்லாம் எழுத வேண்டுமா ?

  2. மிகவூம் அருமை. வாழ்வின் நிலையாமையை அருமையான முறையில் சாத்தனார் கூறியூள்ளார். அந்த பெண் பிணத்தின் அழகை வருணித்தபடியே அதன் அப்போதைய நிலையை எடுத்துக்கூறியூள்ளமை உடல் மீது கொண்ட மோகத்தை குறைக்கவல்லது. என்னதான் அலங்கரித்துக் கொண்டிருந்தாலும் இந்த உடலுக்கு எவ்வளவூ பணிவிடைகள் செய்தாலும் ஒருநாள் இந்த உடல் மண்ணோடு மண்ணாகிவிடும். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும்போது அகம்பாவமும் ஆணவமுமே குறையூம். மிகவூம் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *