பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]

<< மற்ற பகுதிகள் >>

தொடர்ச்சி…

அந்த வனத்தில் மரங்களின் மிகுதியால் உள்ளே இருப்பவர்கள் கதிரவனின் வெப்பத்தை உணரமாட்டார்கள். தும்பிகள் குழல் ஊதுவதுபோல ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க, சின்னஞ்சிறிய வண்டினங்கள் யாழ்போல இசைக்க, வெயில் நுழையமுடியாத பொழிலில் குயில் நுழைந்து பாடிக்கொண்டிருக்க, அந்த அரங்கத்தில் மயில் ஆடுவதை இரசிகர்களைப்போலக் குரங்குகள் மரங்களில் அமர்ந்து இரசித்துக்கொண்டிருந்தன.

மாசுமருவற்ற, தெளிந்த பளிங்குபோன்ற நீரோடையில், நெடிய தண்டினையுடைய தாமரை ஓங்கி விரிந்து ஒரு சிம்மாசனம் போலிருந்தது. அந்தத் தாமரைமலர்மீது ஓர் அன்னம் அரசன் அமர்ந்திருப்பதுபோல் வீற்றிருந்தது. ஆடுபவர்களின் தாளத்திற்கு ஏற்ப இசைக்கப்படும் முழவினைப்போல, சம்பங்கோழி குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த ஒலிக்கு ஏற்ப ஆடும் மயிலின் ஆட்டம், அரசசபையில் அரசன்முன்பு ஆடும் நாட்டியப் பெண்ணின் நடனத்தை ஒத்திருந்தது. கிளைகளில் அமர்ந்து குயில்கள் பாடிக்கொண்டிருந்தன.

பொய்கையில் ஒரு தாமரை பூத்திருந்தது. அதன் அருகில் பெரிய மடல்களை உடைய தாழைமலர் தன் மடலவிழ்ந்து மகரந்தத் துகள்களைத் தாமரை மலர்மீது பொழிந்தது. தேர்வீதியின் வழியில் வரும்போது வாகனங்களின் போக்குவரத்தால் வீதியிலிருந்த தூசித்துகள்கள் மேலெழுந்து மணிமேகலையின் அழகிய முகத்தில் படர்ந்தது போலிருந்ததைப்போல அந்தத் தாமரை தோன்றியது.

“அதோ பார், மணிமேகலை.  உன் அழகிய நீள் விழிகளை நீலமலர்கள் என்று நினைத்து மொய்க்கவரும் வண்டுகளை உன் கரங்கள் தட்டிவிடுவதைப்போல, தாமரைமலரின் மீதிருந்து கயல்மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அவற்றைக் கவ்வி எடுக்கப் பாய்ந்துவந்து நழுவவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் நீலநிறமுடைய சிரல் (மீன்கொத்தி) பறவையினைப் பாராய்.,” என்று சுதமதி காட்டிய பொழிலையும், பொய்கையையும் கண்டு மணிமேகலை வியப்புற்றாள்.

அதேநேரம் வெண்ணிலவு நாணமுறும் அளவிற்கு வெண்கொற்றக் குடையினைக்கொண்ட — அந்த நகர மன்னனின் இளையகுமாரனான — உதயகுமாரன் என்பவன் வீதிப்புறப்பாட்டிற்குக் கிளம்பினான்.

புயலில்சிக்கிய ஒரு கப்பல். பெரும்காற்று வீசியடிக்க, அங்கும் இங்கும் அலைபாயும் களத்தின்மீது மாலுமி நடுங்கியபடி நிற்கும் நேரம் பாய்மரத்தைத் தாங்கிபிடித்த நீண்ட கழியானது காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விட, பாய்மரத்தை முறுக்கிக் கட்டிய கயிறு அறுந்து தொங்க, கப்பலின் நடுப்பகுதி முற்றிலும் சிதைந்து விட, செல்லும் திசை எதுவென்பது தெரியாமல் தடுமாறுவதுபோல, இங்கே நகரில்  மதம் பிடித்த யானை ஒன்று அப்படித் தடுமாறி ஓடியது.

குத்துகோல்காரர் கோல் கட்டுப்பாட்டை இழந்தது. பாகன் ஓடிப்போய்விட்டான். ஓங்கி ஓங்கி தனது துதிக்கையால் தனது பெரிய முகத்தைத் துடைத்துக்கொண்டே இருந்தது. ராஜவீதியையும், தேரோடும் வீதியையும், அங்காடி வீதியையும் பெரும் கலக்கலாகக் கலக்கிக்கொண்டிருந்தது. சம்பாபதி, காவிரிபூம்பட்டிணம் என்று இரண்டு பெயர்களைத் தாங்கிய பழமையான ஊரின்கண் ஒருவகையிலும் கட்டுப்படாது அந்த மதம்கொண்ட யானை பாகனையும், பறையடிப்பவனையும், உயரத்தில் அமர்ந்திருந்த பருந்துகளையும் ஒருசேர கதிகலங்க அடித்தபடித் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது.

வீதியில் ஏற்பட்ட கலக்கத்தையும் அதன் காரணத்தையும் நன்கு அறிந்த உதயகுமாரன் சடுதியில் தனது தேரில் கட்டியிருந்த  புரவிகளைக் காற்றின் வேகத்தில் செலுத்தி யானையின் அருகில் துணிவுடன் சென்றான் யானையின் மீதேறி யானையின் மதத்தை அடக்கினான். என்ன நடந்தது என்பதனைக் கூட ஊகிக்க இயலாத அளவிற்குச் சம்பவங்கள் நடந்தேற மக்கள் வியப்பில் தேரில் கடிது வந்தது யாரென்று பார்த்தனர். தனது தேரில் ஏறி அதன் முன்பகுதியில் தாமரை மொட்டின் வடிவத்தைப்போன்ற கொடிஞ்சியைக் கைகளால் பற்றி எழுந்து நின்று, தான் அணிந்திருந்த சோழகுலத்திற்கு உரித்தான ஆத்திமாலையின்மூலம்,  தான் மக்களுக்கு அருள்பாலிக்கும் கடம்பமாலை அணிந்த முருகவேள் அல்லன் என்பதைக் கூறாமல் நின்றான்.

யானையை அடக்கியபின்பு உதயகுமாரன் தனது தேரினை நாடக அரங்கில் நடனமாடும் கணிகையர் இருந்த வீதிக்குச் செலுத்தினான். ஆடகப் பொன்னால் வேயப்பட்டிருந்த ஒரு மாளிகையின் முன்பு தேரை நிறுத்தினான். அந்த மாளிகையின் முன்புறத்தில் இருந்த அறையில் வீதியைப் பார்த்திருந்த திறந்திருந்த சாளரத்தின் உள்ளே தெரிந்த காட்சி இளவரசன் உதயகுமாரனை வியப்பில் ஆழ்த்தியது. மயிர்ச்சாந்து பூசப்பட்ட கூந்தலையுடைய கணிகை ஒருத்தியின் அணைப்பில் மயங்கியபடி, கைகளில் மகர யாழினைத் தழுவி, எழுதுகோலினால் புனையப்பட்ட சித்திரம்போல அவனது நண்பன் எட்டிகுமரன் என்ற வணிகன் இருந்ததைப் பார்த்தான்.

உதயகுமாரன் உள்ளே நுழைந்தான். அறையின் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே புகுந்தான். அறைக்காவலனை விலக்கி உள்ளே நுழைந்தான்.

மயங்கிக் கிடந்தவனை எழுப்பி “இப்படி ஒரு பெண்ணுடன் மயங்கிக் கிடக்கும் நீ அடைந்த துயரம் என்ன?” என்றான்.

வந்திருப்பது இளவரசன் என்பதை அறிந்ததும், எடுப்பான பெரிய முலைகளுடன்கூடிய தனது காமக்கிழத்தியைப் பற்றியிழுத்து உதயகுமாரன் கால்களில்விழுந்து, பணிந்து, தனது துயரத்தின் காரணத்தை எட்டிகுமரன் கூறத்தொடங்கினான்.

“ ழகான வரிகளையுடைய பூஞ்சாடியில் வைக்கப்பட்ட மலரினைப்போல அழகான சாயலையுடைய மணிமேகலையை இங்கு வரும்வழியில் பார்த்தேன். அவள் தனது தோழியுடன் உவவனம் சென்றுகொண்டிருந்தாள். தனது தந்தை கோவலனுக்கும் தாய் கண்ணகிக்கும் நிகழ்ந்த கொடுமைகளை எண்ணி நெஞ்சுபொறுக்காமல் உள்ளம்கலங்கி அவள் உடல் சோர்வுற்று இருந்ததைக்  காணச் சகியாமல் நான் கலக்கமுற்றேன்,”” என்றான்.

எந்தச் சேதியை எவரிடத்தில் எப்போது சொல்லவேண்டும் என்பதில் அந்தச் செட்டி நண்பன் கெட்டிக்காரனாக இருக்கவேண்டும்.

உதயகுமாரன் முகத்தில் ஒளிமின்னியது.

“நல்லது நண்பனே! எனக்கு உவப்பளிக்கும் சேதிகூறியதற்கு மிக்க நன்றி. இதோ ஒரு கணத்தில் நான் என் தேரின் மீதேறி உவவனம் சென்று அங்கிருக்கும் மணிமேகலையைப் பற்றி என் தேரில் அமர்த்தி மீண்டும் இந்தக் கணிகையர் வீதி வருவேன். எங்கும் போய்விடாதே!“ என்று கூறிவிட்டு, அவசர அவசரமாகத் தனது தேரின்மீது ஏறி, நண்பகலில் வானில் ஓடும் மேகங்களைச் சூரிய மண்டலம் விரைந்து விலக்குவதுபோலத் தேரோடும் வீதியில் தனது தேரினை வேகமாக ஓட்டிச்சென்றான்.

உவவனத்தின் நுழைவுவாயிலின் அருகில் தேரை நிறுத்திவிட்டு உவவனதிற்குள் நுழைந்தான்.

மலர்கள் பறித்துக்கொண்டிருந்த மணிமேகலையின் காதுகளில் நல்ல மணிகளையுடைய தேரின் மணியோசை விழுந்தது. இவ்வளவு இனிமையான மணிகள் உதயகுமாரனின் தேருக்கல்லவா இருந்தது? அன்று வசந்தமாலையிடம் தனது தாய் மாதவி உதயகுமாரனுக்கு மணிமேகலையின்மீது ஒரு கண் என்று கூறிக்கொண்டிருந்தது இன்று நினைவிற்குவந்தது. பதறிவிட்டாள்.

சுதமதியைப் பார்த்து “சுதா! அது நிச்சயம் உதயகுமாரனின் தேர்தான். இப்போது என்னடி செய்வது?” என்றாள்.

இனி சிந்திப்பதில் பயனில்லை. இவளை எப்படியும் அந்தக் காமுகன் கண்களிலிருந்து காப்பாற்றியாகவேண்டும். சுதமதி சுற்றும் முற்றும் பார்த்தாள். உவவனத்தில் இருந்த பளிங்கு மண்டபம் கண்ணில்பட்டது.

“வா!“ என்று மணிமேகலையை இழுத்துக்கொண்டு சுதமதி பளிக்கறையை நோக்கி ஓடினாள்.

மணிமேகலையைப் பளிங்குமண்டபத்திற்குள்கொண்டு போனாள். பளிங்கு மண்டபத்தின் கதவிற்கு உட்புறம் தாழிட வசதியிருந்தது.

“நீ உள்ளேயிருந்தபடி கதவைத் தாழிட்டுக்கொள். நான் வெளியில் நீ கூப்பிடும் தூரத்தில்தான் இருப்பேன். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீ பேசுவது வெளியில் நிற்கும் எனக்குக் கேட்காது. அவன் போனபின்பு நான் உனக்குச் சாடைசெய்கிறேன். வெளியில் வா. பிறகு இருவரும் இங்கிருந்து போய்விடலாம். “ என்றாள்.

ஒலியெழுப்பும் தேரினை நிறுத்திவிட்டு, ஆதவன் நுழையமுடியாத அந்த உவவனதிற்குள் தகதகவென்று மின்னும் கதிரவனைப்போல உதயகுமாரன் மணிமேகலையைத் தேடிச்சென்றான். பளிக்கறையின் அருகில் மணிமேகலையின் தோழி சுதமதி தனியாக நின்றிருப்பதைக் கண்டான். தாமரை மலர்போன்ற் சிவந்த அழகிய விழிகளால் அரசிளங்குமரன் சுதமதியை அளந்தான்.

“மணிமேகலையைப்பற்றி நினைத்தாலே சிந்தை கலங்குகிறது என்ன ஓர் எடுப்பான வளரிள முலைகள் அவளுக்கு! மென்மையான இயல்பை உடையவள். ஆடவர்கள் தளர்ச்சியை அறிந்துகொள்ளும் அறிவு உடையவள். மழலைமொழி பேசும்போது அவளுடைய மெல்லிய பற்கள் முத்துக்களைக் கொட்டி வரிசைபடுத்தியது போலிருக்கும். அவளுடைய நெடிய சிவந்த கண்கள் அங்கும் இங்கும் ஓடி காமனின் கணைகளுக்குச் சவால் விடுவது போலிருக்கும். அவள் பௌத்த முனிவர்கள் இருக்கும் இடத்தில் தாயுடன் வசிப்பதாக அன்றோ ஊரில் பேசிக்கொண்டார்கள். பெண்ணே அவள் இங்கே எதற்குத் தனியாக வந்தாள்?”” என்று கேட்டான்.

சுதமதிக்கு படவென்றுவந்தது. பொதிகளைப் போட்டுவைக்கும் காற்று புகமுடியாத பொதியறையில் மாட்டிக்கொண்டதைப்போல மூச்சுத்திணறியது. இந்தக் காமுகனுக்கு என்ன விடைகூறுவது? இவனை நிந்திக்கவும் இயலாது. அரசன். சிறைபிடித்தால் அவமானமாகப் போய்விடும். அதேபொழுது மணிமேகலையையும் இவன் கைகளில் சிக்காமல் காக்கவேண்டும்.

“தனது இளைமையான தோற்றம் கண்டு வழக்கு தொடுத்தவர்கள் தயங்கிநிற்க, அவர்களது வாட்டம் நீக்க முதியவரைப்போல வேடமணிந்துவந்து நீதி கூறிய கரிகால் பெருவளத்தானின் வழியில்வந்த அரசிளங்குமரனே!  உங்களுக்கு அறிவும், பண்பும், அரச நீதியும் ஒரு பேதைப்பெண்ணால் கூறமுடியுமா?””

“அறிவும் ஆற்றலும் இருந்தால் முதியவர் இளையவர், உள்ளோர், இல்லார், ஆண், பெண் பேதம் தேவையில்லை பெண்ணே! சொல்லு“

“அப்படியென்றால் நல்ல திண்மையான தோள்கொண்டு விளங்குபவனே,  நான் கூறுவதைக் கேள். இந்த உடல் இருக்கிறதே, மிகவும் ஆச்சரியமான விடயங்களை உள்ளடக்கியது. செய்யும் செயலுக்கான பலனை இந்த உடலானது அனுபவிப்பது. அணிபுனையும் வாசனைத் தைலங்களை எடுத்துவிட்டால் பிணநாற்றமடிப்பது. முதுமைப்பருவம் எய்தி அழியும் தன்மையை உடையது. கொடிய நோய்கள்வந்து தாக்கும் இடமாகும். ஆசைகள் பற்றிக்கொள்ளும் கலமாகும். குற்றங்கள்நிகழும் களமாகும்  கொடிய அரவம் உள்நுழையும் புற்றைப்போல குரோதம் உள்நுழையும் புற்று, இந்த உடலாகும். அவலம், கவலை, கையாறு, அழுங்கல் போன்றவற்றில் தள்ளாடும் உள்ளத்தையுடையது.  இந்த உடலைத்தான் மக்கள், ‘மேலானது இதற்கு நிகர் எதுவுமில்லை,’ என்று கொண்டாடுகின்றனர், இளவரசே!””

உதயகுமாரனின் கவனம் முழுவதும் சுதமதி கூறியவற்றில் இல்லாமல், அங்கும் இங்கும் அலைந்து மணிமேகலை இருந்த இடத்தைத் தேடிக்கொண்டிருந்தது. இளவரசன் முகம் சட்டென்று மலர்ந்தது. பளிங்கு அறையில் ஒரு பவளத்தால் செய்த சிற்பத்தைப்போல மணிமேகலை இருப்பதையறிந்த உதயகுமாரன் மெல்ல அடியெடுத்து மணிமேகலையை நோக்கி நகர்ந்தான்.

பின் குறிப்பு: இந்தக் காதையில் ஒரு மலர்வனத்தைச் சாத்தனார் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இன்று பல்வேறு திரைப்படங்களிலும் கதாநாயகனை அறிமுகம்செய்யும்போது அவனுடைய வீரபிரதாபத்துடன் அறிமுகப்படுத்துவதுபோல, உதயகுமாரனை ஒரு யானையை அடக்கும் நிகழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் தாமரைமீது  துள்ளிய கயல்மீன் மீன்கொத்திப் பறவையிடம் சிக்காமல் தப்பியதைக் கூறுவதன்மூலம் மணிமேகலை உதயகுமாரன் கைகளுக்குச் சிக்காமல் தப்பிக்கப் போவதை குறிப்பால் உணர்த்துகிறார். மனிதர்களின் காரியச் சமத்து எட்டிகுமரன் பாத்திரம்மூலம் வெளிப்படுகிறது. ஒரு வாரபத்திரிகையின் தொடர்கதையைப்போல மணிமேகலைக்கு என்ன நேருமோ என்று படிப்பவர்கள் பதறும் இடத்தில் இந்தக் காதையை முடிக்கிறார்.

(தொடரும்)

One Reply to “பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]”

  1. இதுவரை நீங்கள் காட்டிவரும் ஆதரவுக்கு நன்றி. இந்தத் தொடரைப் பலரும் பரவலாக படிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். தமிழ் அச்சு வடிவில் அடிக்கும்போது நான் தேர்வு செய்யும் தமிழ் அச்சு வடிவம் நான்கு விருப்பத் தேர்வுகளைக் கொடுக்கிறது. எனவே kalam என்று விசைப்பலகையில் அடிக்கும்போது எனது பயன்பாட்டில் களம்,காலம்,கலம் என்று வருகின்றது. என்னதான் கூடுதல் அக்கறையுடன் நான் பிழை திருத்தி அனுப்பினாலும் ஓரிரு வார்த்தைகள் தவறாக வந்துவிடுகின்றன. எனவே நீங்கள் படிக்கும்போது எழுத்து பிழை கண்ணில்பட்டால்வ இது தவறு என சுட்டிக் காட்டுங்கள். நூலாக வெளிவருவதற்கு நீங்கள் சுட்டிக் காட்டும் பிழைகளை நான் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *